யுத்தம் முடிந்துவிட்டது ?

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

சித்தரஞ்சன்


இராக் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தொடுத்த யுத்தம் ஏறத்தாழ முடிந்து விட்டது.

எதற்காக இந்த யுத்தம் என்று அமெரிக்கா சொன்ன காரனங்கள் ஒன்று கூட நிரூபிக்கப்படாமலே யுத்தம் முடிகிறது. இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருந்ததாக இதுவரை எந்த சாட்சியமும் இல்லை. சதாம் ஹுசேன் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக எந்த சாட்சியமும் இல்லை.

இராக்கில் ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சி நடந்தது. அதை முடித்துவைக்க யுத்தம் என்று இப்போது அமெரிக்கா சொல்கிறது. இந்த தர்க்கத்தின்படி அமெரிக்காவை இந்த யுத்தத்தில் ஆதரித்த பாகிஸ்தான் முதல் சவுதி அரேபியா வரை சர்வாதிகார, ராணுவ, மன்னர் ஆட்சிகள்தான் நடந்து வருகின்றன.வாஇ எல்லாவற்றையும் அடுத்து அமெரிக்கா மாற்ற யுத்தம் நடத்தப் போகிறதா ? இன்னொரு நாட்டு அரசியலில் நுழிஅய முதலில் அமெரிக்காவுக்கு அதிகாரம் தந்தது யார் ? இந்தக் கேள்வியைக் கேட்கக்கூட உலக அமைப்பான ஐ.நாவால் முடியவில்லை என்பது உலக அரசியல் 60 வருடங்கள் பின்னோக்கிப் போய் விட்ட சோகத்தை உணர்த்துகிறது.

அடுத்தபடி சிரியாவையும் கியூபாவையும் எச்சரிக்கிறது அமெரிக்கா.

இராக்கில் சதாம் வீழ்ச்சியை மக்கள் கொண்டாடினாலும் அமெரிக்காவை அவர்கள் வரவேற்கவில்லை. பொம்மை அரசையும் அவர்கள் சகித்துக் கொள்லப்போவதில்லை. இந்த வெற்றிடம் ஆபத்தானது. இதை நிரப்பபோகிறவர்கள் மத அடிப்படைவாதிகளான சில முல்லாக்கள்தான்.

சதாம் ஆட்சியில் மத வெறியற்ற நவீன சமூகமாக இருந்த இராக்கும் இனி மத தீவிரவாத உணர்ச்சியுள்ள சமூகமாக மாற்றப்படும் ஆபத்தில் இருக்கிறது. யுத்தத்தில் அமெரிக்கா சாதித்தது என்ன ? தான் விரும்பியபடி எண்ணேய் வளத்தின் மீது முழுக் கட்டுப்பாடு . இராக் சீரமைப்பில் அமெரிக்க வியாபாரிகளுக்கு வேட்டை. இன்னும் பல நூறு பின் லேடன்களை உருவாக்குவதற்கான விதைகளைவிதைத்தது. இவைதான்.

சதாம் வீழ்ச்சியினால் உலகம் முன்பை விட பத்திரமாக இருப்பதாக புஷ் அறிவித்திருக்கிறார். யாருடைய உலகம் ? புஷ்களின் வீழ்ச்சி மட்டுமே உலகத்தை பத்திரமானதாக்க முடியும் என்பதுதான் நிஜம். யுத்த எதிர்ப்பு உணர்ச்சி அமெரிக்கா முதல் ஐரோப்பா வரை இந்தியா உட்பட பரவலாக எழுச்சியுடன் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது என்பதுதான் இந்த பேரழிவுக்கு நடுவே ஒரு சின்ன ஆறுதல்.

சித்தரஞ்சன்

dheemtharikida@hotmail.com

Series Navigation