This entry is in the series 20090709_Issue

சக்தி


செந்நிற மலரிதழில்
வெண்ணிற கோடிட்டு
பொன்னிற மாலைதனில்
மின்னிட வைத்தவன் யாரோ

பட்டெனும் சிறகினிலே
பட்டிடும் இடமெல்லாம்
விட்டிடும் வர்ணங்களை
இட்டவன் அவன் யாரோ

பச்சிளம் குருத்துக்களில்
மெச்சிடும் வகைதனிலே
சிற்சிறு ரேகைகளை
முத்திரை பதித்தவன் யாரோ

வித்தகன் அவன் தான்
வியந்திடும் வகைதனில்
வனப்புகள் பல வைத்து
வாழ்க்கையைப் படைத்தானோ ?

கற்பனையோ ? கல்லோ ?
சொற்பமெனும் மனதினில்
நிற்குமொரு அமைதி வருமெனில்
சற்றுமொரு குழப்பமுமின்றி

இத்தரை மீதினில் வாழ்ந்திடும்
அத்தனை மாந்தர்க்கும் பொதுவாய்
சித்தம் நிறைந்தொரு சக்தியை
நித்தமும் நெஞ்சினில் வைத்திடுவோம்

அன்புடன்

Series Navigation