யாத்ரா பிறந்த கதை

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

வெங்கட் சாமிநாதன்யாத்ரா பத்திரிகை தோன்றியதன் கதையைச் சொல்வதென்றால் அது, அதற்கும் சில வருடங்களுக்கு முன்னிருந்த ஒரு முனைப்பின் தொடர்ச்சி என்று சொல்லவேண்டும். எழுபத்து நான்கோ ஐந்தோ ஞாபகமில்லை சரியாக. ஒன்றிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை விடுமுறையில் தெற்கே வரும்போதெல்லாம் சென்னையில் தங்கும் நாட்களில் செல்லப்பாவைச் சந்தித்துப் பேசுவது வழக்கம். இந்த வழக்கம் தவறியதில்லை அனேகமாக. தவறினால், அது அவருக்குத் தெரியவந்தால், அவர் போடும் சத்தத்தைச் சமாளித்து சமாதானம் சொல்வது சிரமமான காரியம். ஒரு முறை, 75-76 களில் சந்தித்த போது, “டேவிட் சந்திர சேகர் ராஜபாளையத்திலிருந்து வந்த இரண்டு நண்பர்களுடன் வந்திருந்தார். அவர்கள் உங்கள் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகம் போட விரும்புகிறார்கள். அதற்கு உங்கள் சம்மதம் வேண்டும். அத்தோடு அவர்கள் அரசு ஊழியத்தில் இருப்பவர்கள், புத்தக பிரசுரம் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது. அதனால் பிரசுரத்திற்கும் நான் உதவ வேண்டும் என்றார்கள். நீங்கள் டெல்லியிலிருந்து இப்போது வரவிருக்கிறீர்கள், வந்ததும் சொல்கிறேன், நீங்களும் சந்திக்கலாம், என்று அவர்களிடம் சொல்லியிருக்கிறேன்” என்று சொன்னார். அவர்களுடன் அந்த சந்திப்பு நிகழவில்லை, செல்லப்பாவைப் பார்த்துப் பேசிவிட்டுத் திரும்பி விட்டார்கள். சென்னையில் வங்கி ஊழியராக இருந்த டேவிட் சந்திரசேகர் தான் சந்தித்துப் பேசினார். பின்னர் நான் டெல்லி திரும்பியதும்,ராஜபாளையத்திலிருந்து மணி என்பவரிடமிருந்து வந்த இரண்டு மூன்று கடிதங்கள் எனக்காகக் காத்திருந்தன. அவர்கள் மூன்று பேரும் வேளாண் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலிருந்து நண்பர்கள். நாங்கள் எல்லோரும் ஒவ்வொரு மூலையில் இருப்பதாலும், எல்லாவற்றிகும் செல்லப்பாவையே பொறுப்பாக்கி நிம்மதியுடன் இருப்பதே எங்களுக்கு சாத்தியமானதும், செளகரியாமானதும், செல்லப்பாவுக்குப் பிரியமானதுமான காரியமாக இருந்தது. கட்டுரைகளை நான் அனுப்பி வைத்தேனே ஒழிய, தேர்வு செல்லப்பாவினதாகவே இருந்தது. இப்படித்தான் ‘பாலையும் வாழையும்’ புத்தகமும், ராஜபாளையம் ஸ்ரீ மணி பதிப்பகமும் பிறந்தன. ‘புத்தகம் போடறது தான் போடுகிறீர்கள். சிவராமுவின் கவிதைத் தொகுப்பும் ஒன்று போடுங்களேன்’ என்று செல்லப்பா சொல்ல, அவர்கள் அதற்கும் சம்மதித்தார்கள். சிவராமுவை அண்டி காரியமாற்றவேண்டியது, டேவிட் சந்திர சேகரின் பொறுப்பாயிற்று. “கைப்பிடியளவு கடல்”- வெளி வந்தது. இதைத் தொடர்ந்து பின் வருடங்களில், ‘அக்கிரகாரத்தில் கழுதை’ திரைப் பிரதியும், ‘எதிர்ப்புக் குரல்” என்னும் இன்னொரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்தன, ஸ்ரீ மணி பதிப்பகத்தின் வெளியீடுகளாக. ‘இப்படி ஒவ்வொன்றாக எல்லாத்தையும் கொண்டு வந்துடலாங்க” என்று சொல்வார் மணி சந்திக்கும் போதெல்லாம்.

இவ்வருடங்களில், நான் தெற்கே விடுமுறைக்கு வரும்போதெல்லாம் நாங்கள் சந்தித்துக் கொள்வோம், ராஜபாளையமோ, சென்னையோ, மதுரையோ, அல்லது தஞ்சையோ, எங்கு சாத்தியமோ அங்கு, மணி, ஜெயபாலன், இன்னொரு நண்பர், அவர் பெயர் மறந்து விட்டது, இப்படி மதுரையில் நாங்கள் சந்தித்தபோது வைகை பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. அதன் பொறுப்பில் இருந்தவர்கள் மோகனும், சிவராமனும். திரு வல்லிக்கண்ணன் சிறுபத்திரிகைகள் பற்றி எழுதியுள்ள புத்தகத்தில், வைகை பற்றி, சாமினாதனின் செல்வாக்கே அதில் அதிகம் காணப்பட்டது என்ற அர்த்தத்தில் எழுதியுள்ளார். ஆனால் அதில் என் ஒரு வரி கூட பிரசுரமானதில்லை. உண்மையில் அவர்கள் கேட்டு நான் எழுதிய கட்டுரையை வைகை திருப்பி அனுப்பியது. இது மணிக்குத் தெரிய வந்தது. “இனி நாம் உங்களுக்காக ஒரு பத்திரிகை தொடங்கவேண்டியது தான் என்று நாங்கள் தீர்மானித்தோம். என்ன ஆகப்போகிறது. இருநூறு முன்னூறு ஒரு மாத்த்திற்கு நாம புரட்ட முடியாதா என்ன? பார்த்துக்கலாம்” என்று அவர்கள் கூடிப்பேசியதாக பின்னர் எனக்கு மணி தெரிவித்தார். “சிவராமூ இங்கிருக்கிறார். அவரை ஆசிரியராகப் போட்டு நடத்திவிடலாம், நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு தில்லியிலிருந்து எழுதி அனுப்புங்கள். மீராவின் அச்சகம் பக்கத்திலிருக்கிறது. அவர் எல்லா வேலைகளையும் அவரே பார்த்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்” என்றார். ஆனால், “சாமிநாதனது எது வந்தாலும் நான் எடிட் பண்ணித்தான் போடுவேன்” என்று எந்த முகாந்திரமுமில்லாமல் யாரும் எதுவும் கேட்காமலே, தானே சிவராமூ சொல்லவே,இது சரிப்படாது போலிருக்கிறதே என்று சிவராமூவின் ஆசிரியத்வத்தை அவர்கள் கைவிட்டதாகவும் நான் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சொன்னார்கள். ‘என் அரசு ஊழியம் தடை நிற்குமே என்று சொன்னேன். ஜெயபாலனின் தம்பி ஒரு வக்கீல், அவர் பெயரைப் போட்டு நடத்தலாம், ஒரு வம்பும் வராது,” என்றார்கள்.

யாத்ரா பிறந்தது. 1978-ல். சுமார் ஆறு வருட காலம் 54 இதழ்கள் வெளிவந்துள்ளன. எளிமையும் வறுமையும், சுவடற்ற பாதைளில் தன்னிச்சையாகப் பயணம் செய்வதும் அதன் அடையாளங்களாக இருந்தன. இன்று அவை அத்தனையையும் ஒரு சேர, தொகுப்பின் நிமித்தம் பார்க்கும்போது, அக்கால கட்டத்தில், அதன் பரப்பும் வீச்சும் வேறு எந்த பத்திரிகையும் சாதித்திராத அளவில் குணத்தில் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. கட்டாயம் எழுத்து பத்திரிகை போன்று ஒரு சக்தியாக அது பரிணமிக்கவில்லை தான். ஆனால், தனக்கிருந்த குறைந்த பலத்திற்கு, ஒரு சில பொறாமைக்காரர்களின் பகைமையை மீறி, அது தமிழ் சமூகத்திற்கு அது பழக்கப்படாத, இருந்தும் பார்க்க விரும்பாத பார்த்துப் பழக்கப்பட்டிராத பல தளங்களை, பாதைகளை, உலகங்களை முன் வைத்துள்ளது என்று சொல்லவேண்டும். அதனால் ஏதும் பயன் இருந்ததா, ப’திப்பு இருந்ததா என்றால், தன் சிறுமைத் தனத்தால், உதாசீனத்தால் கொடுத்ததைப் பெற இயலாது, விரும்பாது போனவர்களைத் தான் குற்றம் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். ‘பின்னோக்கிய மறு பார்வையில்’ என பலரின் ஆளுமை பற்றிய பார்க்கப்படாத பரிமாணங்களை, பார்க்கப்பட்டதன் மறு பரிசீலனையை முன் வைத்தது யாத்ரா. அது காறும் செய்யப்படாத வகையில், ஓவியர்களின் படைப்புகளைப் பற்றி முடிந்த அளவு முழுமையாகவும், ஆழமாகவும் பார்க்கத் தொடங்கியது யாத்ரா. தங்கள் மேடையில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் கொடுக்க மனம் இல்லாத, ஆனால் கருத்து சுதந்திரம் பற்றி உரக்க உபதேசம் செய்தவர்களுக்குக் கூட இடம் கொடுத்தது யாத்ரா. எனக்கு முன் ஆண்டி ராம சுப்பிரமணியம் பற்றி, ஹெக்கோடு சுப்பண்ணா பற்றியும், தெரிந்தவர்கள் உண்டு. ஆனால், அவர்களின் வியக்தித்வத்தின் பெருமை பற்றி, தனித்த குணம் பற்றி அறிந்தவர்கள் இல்லை அவர்கள். அது பற்றி பேசவேண்டும் என்று கூட தோன்றியதில்லை அவர்களுக்கு. ஆனால், யாத்ரா இத்தகைய ஆளுமைகளின் தனித்வம் பற்றி நிறைய பேசியது. பின்னரும் கூட எந்த பாதிப்பும் நிகழாதது யாத்ராவின் குற்றமில்லை. பாரதி தாஸ்ன் பற்றி, உ.வே.சா. பற்றி, வையாபுரிப் பிள்ளை பற்றி, தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பற்றியெல்லாம், யாத்ரா பார்த்த பார்வை யாரும் பார்த்ததில்லை. ராமச்சந்திரன், சிவராம மூர்த்தி, ருக்மிணி அருண்டேல், நா ரகுநாதன் (ரசிகன்) என்றெல்லாம் யாத்ரா வெற்றுப் பெயர் உதிர்த்துச் செல்லவில்லை. சோஷலிஸ்ட் யதார்த்த இலக்கியம் பிறந்த வரலாற்றையும், லெனின் இலக்கியத்துடன் கொண்டிருந்த பார்வையைப் பற்றியும், முற்போக்குப் பத்திரிகைகள் கூட தமிழ் நாட்டில் அக்கறை கொண்டதில்லை. அவர்களுக்குத் தெரிந்தது கோஷங்களே. ஆனால் யாத்ரா முன் வைத்தது. ஆனால் சிகப்புக் கொடிகாரர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. தி.ஜானகி ராமனுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக வெளியிட்ட சிறப்பு மலர், அவரை நெருங்கி அறிந்தவர்களால் மட்டுமே எழுதப்பட்டது. தி.ஜானகி ராமன் என்ற வாழ்க்கை ரசனை கொண்ட மனிதரை அது முன் வைத்தது. குறிப்பாக கரிச்சான் குஞ்சு எழுதிய நினைவுகள். எது பற்றியும் யாத்ரா வித்யாசமாக சிந்தித்தது, செயலாற்றியது. நாடகம், தெருக்கூத்து, பாவைக்கூத்து, மெலட்டூர் பாகவத மேளா, கணியான் ஆட்டம் என்றெல்லாம் யாத்ரா தன் தளம் விரித்துள்ளது. யாத்ராவின் செயலாற்றலின் பரப்பும், ஆழமும், அன்று வேறு எந்த பத்திரிகைக்கும் இருந்ததில்லை. ஆண்டி ராமசுப்பிரமணியம் பற்றிய சிறப்பிதழைப் பார்த்து, அன்னம் பதிப்பக மீரா சொன்னார், “இதை நீங்கள் புத்தகமாக வெளியிட்டிருக்கவேண்டும், பத்திரிகை இதழாக்கியது, அதன் ஆயுளையும் குறைக்கிறது. புத்தகம் என்றால் கொஞ்சம் பணமும் திரும்பப் பார்க்கலாம்” என்று. என்னோடு சம்பந்தப்பட்ட எதையும் கண்டு கொள்ளாது விடுவது அல்லது உதாசீனமாக எழுதுவது என்றே கொள்கை கொண்ட திரு வல்லிக் கண்ணன் கூட யாத்ரா பற்றி எழுதும் போது அதன் தனித்வத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று கடந்ததை எல்லாம் தொகுத்துப் பார்க்கும் போது, யாத்ராவின் முயற்சிகள் மனதுக்கு நிறைவாகத்தான் இருக்கின்றன. ஆனால் அது தமிழ் சமூகத்தில் உரிய பாதிப்பை நிகழ்த்தவில்லை என்பது வருத்தத்திற்கு உரிய விஷயம். குளத்தில் எறிந்த கல் அலை எழுப்பாதே நீரில் மூழ்கியது என்றால் அதை என்னென்பது. ஆனால் மாற்சிரியம் இல்லாத ஒரு தலை முறை யாத்ராவின் குணத்தை அறிந்து கொள்ளும். யாத்ராவின் பக்கங்கள் அதற்கு ஆச்சரியம் தரும். அட! இதெல்லாம் கூடப் பேசப்பட்டிருக்கின்றனவா! என்று.

இன்னும் ஒரு அரிய நிகழ்வைப் பற்றிச் சொல்லவேண்டும். அந்த உத்வேகத்தின் இன்னொரு இணைப்புச் சங்கிலியாக, ஸ்ரீ மணி பதிப்பகம் எப்படி என் எழுத்துக்காக என்றே எழுத்துலகில் இல்லாத உற்சாகிகளால் தொடங்கப்பட்டதோ, அது போல என் எழுத்துக்களும், என் பார்வைகளும் அக்கறைகளும் எந்த தடையும் இல்லாது வெளிப்படவேண்டும், யாருடைய உதாசீனத்திற்கும் இரையாகாது, என்று அன்றைய இளைய தலைமுறையினர் சிலருக்கு தோன்றியதே, எந்த பிரதி பலனும் இன்றி செயல் பட்டார்களே, அது எனக்கு கர்வத்தை அளிக்கிறது. அதே போல, ‘நான் பதிப்பாளனாகக் கூட ஒரு வரி எழுத மாட்டேன். வெ.சா.எ. முழுதும் உங்கள் எழுத்துக்களுக்காகவே வெளிவரும்” என்று என் மறுப்பையும் மீறி இரண்டு மூன்று வருடங்கள் பிடிவாதம் பிடித்து, தன் அந்திம காலத்தில் கூட மரணத்தின் வாயிலில் நின்று கொண்டு தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டாரே, தஞ்சை பிரகாஷ், இதெல்லாம் வேறு யாருக்குக் கிடைத்தது? தஞ்சையிலிருந்து தொலை பேசியில் வற்புறுத்துவார். ‘என் உடம்பு அது பாட்டிலே அது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் அடுத்த வெசாஎ -க்கு எழுதி அனுப்புங்க”

இப்போது இவ்வளவு ஆண்டுகள் கழிந்த பின், யாத்ரா இதழ்களைத் தொகுத்து வெளியிட பல விதங்களில் எனக்கு உதவி வரும் நண்பர் சந்தியா நடராஜன் முன் வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. அவருக்கு நான் நன்றி சொல்வது சம்பிரதாயத்தின் பாற்பட்டதில்லை.

———————————————————————————————————————————————————————————————
யாத்ரா: இதழ்த் தொகுப்பு: முதல் @ இரண்டாம் பாகங்கள்: தொகுப்பு: வெங்கட் சாமிநாதன்: சந்தியா பதிப்பகம்: அசோக் நகர், சென்னை-83

Series Navigation