யாதும் ஊரே

This entry is part [part not set] of 36 in the series 20080717_Issue

எஸ். ஷங்கரநாராயணன்சிவாய நம. அது அவரது டிரேட் மார்க்.
சொந்தப்பேர் தனக்கே மறந்தாச்சி ஊரில்கூட எவன் அவரைப் பத்திப் பேசப்போறான். அவர் என்ன தாஜ் பீடி அண்ணாச்சியா, ஊரில் அத்தனை பேரையும் தெரியறதுக்கு. ஊர்தாண்டி ஊரணிக்கரையில் மண்டபத்துத் தூண் விழுந்துறாமல் சாய்ஞ்சிகிட்டிருப்பார். ஊருக்குள் தெருவில் உத்தேச எதிர்பார்ப்புடன், அதைக் காட்டிக் கொள்ளாத கௌரவத்துடன், காவிவேட்டி காவிதுண்டு, கழுத்தில் உத்திராட்சம் நெற்றியில் பட்டையாய்த் திருநீறு, ஆன்மிக பாவனை – கடவுளையா தேடிப் போகிறார், சோத்தைத் தேடிப் போகிறார்.. எந்த வீட்டிலாவது மிஞ்சியது கழிஞ்சது கிடந்தால் எட்டிப் பார்த்துவிட்டு… ”சாமி?” அல்லது நாலு அஞ்சி பேர் வரிசையில் நின்னால்… ”மொட்டச்சாமி…” பக்கத்து எதிர்வீடுகளுக்கு இவாளது கருணை கேட்கிறாப் போல ஒரு சத்த எடுப்பு. கரியழுக்கான ஒரு தோசை விள்ளல். நல்லபகுதி டெய்லர்வெட்டு வெட்டப்பட்டு கன்னங்கரேல் ஐட்டம் மாத்திரம் கிடைக்கும். நேற்றைச் சோற்றைத் தண்ணியைப் பிழிந்து போடுவார்கள். சக்கையாய் விசுவிசுவென்று அலுமினியத் தட்டத்தில் விழும். தொட்டுக்கொள்ள பழங்கொழம்பு கிடைச்சாலும் தாவலை, ஆனால் பழங்கொழம்பு இருந்தால் நேத்தே அவர்களே இந்தச் சோத்தைக் காலிபண்ணீர்க்காதா, அரிசி விக்கிற விலையில் இரக்கமாவது தர்மமாவது?
”குங்குமம் துலங்க மவராசி நல்லாருக்கணும்…” என்று ஐஸ் வைப்பார். நாளைப் பின்ன எதும் மிஞ்சிப் போனால் என்னையே கூப்பிடுக. சில சமயம் இவர் போனநேரம் வீட்டில் அந்தம்மாவுக்கும் வீட்டுக்காரருக்கும் கடுமையான சண்டை வாக்குவாதம் என்று கேட்கும். சோறு கிடைக்குமா? கிடைக்காது என்று சொல்லவும் முடியாது. என்னாடி சமையல் இது, இதை மனுசன் திம்பானா… என்று ஆத்திரத்தில் வாசலுக்கு வந்து அந்தச் சோத்தை என் தட்டத்தில் கவுத்தக் கூடும்.
சமாதானம் ஆனபின் திம்பான் போல.
எல்லாம் அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள். பொதுவாக ஆம்பிளைங்களுக்கு இந்த இரக்கமெல்லாம் கிடையாது. மிஞ்சியதைப் போட என்றே நாயை ஆடை வளர்க்கிறார்கள். சோறு திங்கும்போது உரிமையாய்ப் பூனைகள் மடியில் வந்து உட்கார்ந்துக்கும். மியாவ் எனக் கோரிக்கை வைக்கும். சாப்பிடுவது உப்புமாவாய் இருந்தால் சேமியாவ்… அவர்களும் சிரித்தபடி ஊட்டுவதும், அதைத் தூக்கிக் கொஞ்சுவதும், ”ஐயோ இதுக்கு எவ்ள அறிவுடீ?” (சோறுபோடு என்று சொல்ல என்ன அறிவு வேண்டிக் கிடக்கிறது.) – அவர்கள் பிச்சைக்காரர்களைக் கொஞ்சவும் வேணாம். ஊட்டி விடவும் வேணாம். வாசல்ல வந்து நீட்டிய கைக்கு ஒருபிடி சோறு, போடப்டாதா? மிருகங்களை விட மனுசாள் ஒசத்திதானே. இல்லைன்றீங்களா? சரி அடுத்த வீட்டைப் பார்ப்பம்… இதை எதிர்த்து இடஒதுக்கீடு கேட்டு பிச்சைக்காரர்கள் ஊர்வலமா போகமுடியும்? சிவாய நம.
சுத்துவட்ட எட்டுபட்டியும் அவரது ஊர். எங்கய்யா செத்துப்போகும் போது, இந்த வீட்டை எனக்கு விட்டுட்டுப் போனார்ன்னானாம் ஒருத்தன். அடுத்தவன் சொன்னான் – போடா எங்கய்யா இந்த உலகத்தை விட்டே போனார். அந்தக் கதை. உள்ளவனுக்கு உள்ளூர். இல்லாதவனுக்கு யாதும் ஊரே.
பஸ் ஸ்டாண்டில் எவனோ விசிறியடித்துவிட்டுப் போயிருந்த போத்தல், எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். குளக்கரையில் படுக்குமுன், காலையில் கிளம்புமுன் அதில் தண்ணீர் நிரப்பிக் கொள்வார். படுபாவிப் பய காலம், தண்ணிக்குமில்ல காசு வாங்க ஆரம்பிச்சாச்சி, காத்துக்கு எப்ப விலை வைக்கப் போறாகளோ தெரியல.
சனங்களின் இரக்கம் சீஸன் சார்ந்ததாய் இருக்கிறது. நல்லநாள் விசேஷம் என்றால் நல்ல உடை மாட்டிக் கோவிலுக்கு வந்து, திடீர் பக்தி சொருபமாகிப் போகிறார்கள். கோவில்வாசலில் பிச்சைக்காரர்களின் நீண்ட வரிசை. நல்ல நாட்கள் பிச்சைக்காரர்களுக்கு எப்படியோ தெரிந்து விடுகிறது. சனங்களே கோவில் குருக்களே காலண்டர் பார்த்துத் தெரிந்து கொள்கிறார்கள். எந்தப் பிச்சைக்காரன்ட்ட காலண்டர் இருக்கு?
அன்றியும் பள்ளிக்கூடப் பரிட்சை, எதும் அநியாய ஆசை (நியாய ஆசையின்னா தன்னைப்போல நிறைவேறிரும்.) என்று வரும்போது பக்தி தன்னைப்போலப் பெருக்கெடுத்து ஓவர்பிளீடிங் போல ஆகிவிடுகிறது. ஒன்பது பிரதட்சிணம், நூத்தியெட்டாகி விடுகிறது. அழுகிய தேங்காயை அல்ல, சிறப்பு பிரார்த்தனையில் நல்ல தேங்காயையே எறிகிறார்கள். விடலைப் பிள்ளைகளின் விடல் பிரார்த்தனைகள். பரிட்சைல பாஸ் பண்ண தேங்கா உடைச்சிட்டுப் போன ஒருத்தன், ஃபெயிலாயிப் போயி… பிள்ளையாரையே உடைச்சிட்டான்.
சீஸன் பக்தி. இதில் நமக்கென்ன சிரமம்?… இருக்கிறது. ஒரே சமயம் ஒரேநாளில் எல்லாவனும் பிச்சைபோட அலைகிறான்கள். சோறு, பானகம், நீர்மோர்… கோவிலில் திருவிழா என்றால் ஊர் நாய்களும், எட்டுபட்டியில் இருந்து திரண்டிருக்கும் பிச்சைக்காரர்களும் பரபரக்கிறார்கள். வயிறு வெடிச்சிரும் போலுக்கேய்யா. அவரே ஓர் அதிகார தோரணையுடன் நாயைச் சுண்டிக் கூப்பிட்டு மிஞ்சிய சோத்தைப் போடுவார். தனக்கு மீந்தால் தானம், உலகப் பொதுமொழி. அரிசி வெச்சிக்கலாம். துட்டு வெச்சிக்கலாம். சோறுன்னா காலிபண்ணியாவணும். அடியே… என நாயைப் பார்ப்பார். ஆணா பொட்டையா தெரியாது. எங்களுக்கு யாதும் ஊரே. உங்களுக்கு ரெண்டு தெரு, அவ்வளவுதான் ஊரே.
போனவாரம் சோத்துப் பங்குக்கு வந்தபோது கல்லெடுத்து அடித்தவன், என்கிற லஜ்ஜையின்றி வாலாட்டி நிற்கிறது நாய். நாய்வாலை நிமிர்த்த முடியாது என்பது பழமொழி. அதை எதுக்கு நிமிர்த்தணும் தெரியவில்லை. வேற வேலைக்கழுத இல்லையா மனுசனுக்கு?
சில நாட்கள் முங்க முங்க தின்னு தீர்க்கக் கிடைப்பதைப் போலவே, சில நாட்கள் ஙொம்மாள, எதுவுமே கிடைக்காமப் போயிரும். சேர்ந்தாப்போல ரெண்டு நாட்கள் பட்டினி கிடக்கிறாப் போல ஆகிப் போகும். ஊரணித் தண்ணியை போத்தலில் எடுத்து எடுத்துக் குடிப்பார். நாய் கூட வந்து வந்து நிற்கும். ஆத்திரத்தைத் தணித்துக் கொள்ள நாய் ரொம்ப உதவி. ஆசைதீர ஒரு எத்து. சிவாய நம.
மண்டபத்தில் பக்கத்துப் பிச்சைக்காரன் செரிக்காமல் கெடந்துருளுவான். ஏவ்.. நமக்கு உள்ள எலி ஓடுறாப்போல பிறாண்டும் சனி. ஏல என்னென்ன தின்னே? – என்று காதால் பசியை நிரப்பிக் கொள்ள முயல்வார்.
யாரோ ஒரு பக்தர் ஒருநாள் தலைமேல் தூக்கிய கையோடு கோவில் வாசலில் இருந்து ”சிவாய நம. ஓம் நம சிவாய…” என்று சொல்லியபடி கோவிலுள்ளே பரவசத்துடன் போனதைப் பார்த்தார். நல்லாருக்கே, என நினைத்துக் கொண்டார். ஏகப்பட்ட சொத்துக்காரன். தாஜ் பீடி ஓனர். அப்றம் ஏன் பரதேசி மாதிரி இந்த ‘சிவாய நம?’ தெரியவில்லை. அடுத்த முறை அவர் வீட்டு வாசலில் போய் நின்றார். சிப்பந்தி வந்து போ போ, என விரட்டப் பார்த்தான். முதலாளி பார்க்கிறார் என்றதும், கையைத் தலைக்குமேல் தூக்கி…
குளத்தங்கரை மரத்தடியில் இப்படித் தூக்கி நின்னா அக்குள் முடிய சிரைத்து விடுகிறார்கள்.
அஞ்சு ரூபாய் கிடைத்தது. எப்ப அந்தப் பக்கம் போனாலும் அஞ்சு ரூபாய் கேரண்டி என்றிருந்தது. துட்டு பெருத்ததும் ஆள் ஊரில் தங்குவதே அபூர்வம் என்றாகிப் போயிற்று.
கோவில் வாசலில் காத்திருக்கும்போது காவிவேட்டியுடன் வரும் பக்தர்களை, முருகா… அய்யப்பா… என்று சீஸனுக்குத் தக்கபடி விளித்துக் காசு தேத்தலாம். விசேசநாள் என்றால் பக்தி பெருத்து ஆண்கள் காவி கட்டுகிறார்கள் பெண்கள்? அப்பதான் நல்ல புடவை, பட்டுப் புடவை கட்டுகிறார்கள். தலையில் இருமுடி – உண்மையில் தலையில் மாத்திரம் அல்ல, முகம்முழுக்க அவர்களுக்கு முடி, இருமுடி என்கிறார்கள் – ஐயப்பா ஐயப்பா என்று வாய். மகாக்கோரமாய்ப் புருசன், இல்லறம் துறந்த பாவனை. கூட மகராசி, அப்பதான் பட்டுப்புடவையை பாச்சா உருண்டை மணக்க எடுத்துக் கட்டல். கொஞ்சம் அடக்கி வாசிக்கப்டாதா? புருசனின் துறவைக் கொண்டாடுறாப் போலிருந்தது. அவர்களை மகாலெக்ஷ்மி, என்று அழைக்க வேண்டும். அப்பகூட நம்மளை எங்க பார்க்கிறார்கள். இவள் அவளுடையைப் பார்க்கிறாள். அவள்… சிவாய நம.
சளி இன்ஹேலர் மாதிரி சிவலிங்கம். இதைப் பார்த்து உருகுகிறார்கள், சளிபோல. பஞ்சாமிர்தமும் பாலபிஷேகமும் சளி போலத்தான் இருக்கிறது.
தாஜ் பீடிக்கார அண்ணாச்சிக்கு இந்த சாமிமேல் ஒரு பக்தி. மேல்துண்டை எடுத்து பொம்பளையாள் குளிக்கிறாப் போல நெஞ்சுவரை மறைத்துக் கட்டி, ”சிவாய நம” என்று கன்னத்தில் அறைந்து கொள்வார். என்ன தப்பு பண்ணினாரோ. சாமி அறையுமுன் அவரே அறைந்து கொள்கிறாப் போல.
இவர் நெஞ்சுவரை துண்டு ஏத்திக் கட்ட, சாமிக்கு அபிஷேகம் நடக்கும்!
சாமியாருக்கு ஒரு வாரத்துக்கு மேல் எங்கும் தங்கக் கொள்ளாது. அடுத்த ஊருக்கு நடந்தே போவார். வெயிலில் நடக்க முடியாது. இராத்திரிதான் வசதி. கையில் அவரைவிட ஒல்லியாய் ஒரு குச்சி. தெரியாத தெருவில் நாய்கள் ஆட்சேபிக்கின்றன. நான் உங்கள் ஜாதி என்றால் அவை புரிந்து கொள்வதில்லை. அவருக்கு நாய் பாஷை தெரியாது. தன் ஜாதியில் இன்னொரு நாயைத் தன் வளாகத்தில் அவை அனுமதிப்பதில்லை தான். அந்நேரங்களில் கைக்கம்பே பாதுகாப்பு. கைக்கம்பை உயர்த்தினால் போதும். அதுவே புரிய வைத்து விடுகிறது… சரி சரி போங்க சாமிகளா. நமக்குள்ள என்ன?…
இருட்டுக்கசமான வீதி. தள்ளித் தள்ளி மரங்கள். வெளிச்சம் கிடையாது. இருமருங்கும் வயல். ஜிலுஜிலுவென்று வேட்டிக்குள் கெட்ட பொம்பளையாய்த் தொடையை வருடும் காற்று. தவளைகள் கொர் கொர் என்று ஏனோ ராத்திரி பேச ஆரம்பிக்கின்றன. பாம்புகளுக்கு அது சௌகரியமாய் இருக்கிறது. கரிந்த தோசைபோல் தார் ரோடு. ஓரங்களில் மண்ணும் கல்லும் குத்தும். ரெண்டு காலுக்கும் வெவ்வேறு ஜோடியில் எருக்க இலையாய்ச் செருப்புகள். சர்ரக் சர்ரக். சீரான நடைக்கு அந்தச் சத்தத்தில் ஒரு ஒழுங்கு. தவளைச் சத்தமாய்ச் செருப்பு பதில் சொல்லிக் கொண்டே வந்தது. காற்றசைப்பில் ஸ்திரீ தலைவாரிக் கொள்வதைப் போல மரங்கள் இலையை விரித்து காற்றை உள்ளனுப்பி சிலிர்த்துக் கொள்கின்றன.
பக்கத்தூர் கோவில் திருவிழா போன்ற காலங்களில் இதே சாலையில் பிச்சைக்காரர்கள் சாரி சாரியாகப் படையெடுப்பு நடத்துவார்கள். கையில் மண்டையோடாய்க் குடுக்கை. எல்லாரிடமும் கம்பு உண்டு. தலை மொட்டையாகவோ, மீசை தாடியுடனோ. பிச்சைக்கு காவிதான் சரியான உடை. பிரார்த்தனை முடிந்து காவி அவிழ்க்கிற சனங்கள் காவியைப் பிச்சைக்காரர்களுக்குக் கொடுக்கிறார்கள். வெள்ளை வேட்டி தரார்.
பிச்சைக்கார ஜோடிகளும் உண்டு. பெரும்பாலும் அவர்களில் ஒருவருக்கு, ஆணோ பொண்ணோ, குஷ்டரோகம் இருக்கிறது. அல்லது இருவருக்கும். புண்ணியம் பண்ணியதால் அவர்களுக்கு குஷ்டரோகத்தைக் கடவுள் தந்திருக்கிறார். அவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. நமக்குக் காசு போட என்று கையில் எடுத்தவர்கள் கூட, அடுத்து உட்கார்ந்திருக்கும் மொட்டைக் கைக்குக் காசை வீசிவிட்டுப் போய்விடுகிறார்கள். பெரும் ரகளையாகி, கட்டி உருளல் என்றெல்லாம் கூட கைகலப்பு ஆகிவிடுவதும் உண்டு. ரெண்டு பேருக்கும் நடுவே காசு விழுந்தால் தேங்காய் விடல் பொறுக்குவது போல ஒரு அவசரம், ஆவேசம்.
பட்டுப்புடவையுடன் வரும் மகாலெக்ஷ்மிகளைக் குஷ்டரோகப் பிச்சைக்காரர்கள் தொட்டுவிடுவது போல பயமுறுத்தி பிச்சை கேட்கிறார்கள்.
வாழ்க்கையை அதன் அடியாழம் வரை குச்சிஐஸ் உறிஞ்சுகிறாப் போல அனுபவிக்கிறதில் மனுசாளை விட பிச்சைக்காரர்கள் மேல். எந்தப் பிச்சைக்காரனும் எந்த சூழலிலும் சாக விரும்புகிறானில்லை. இழவு வீட்டில் கூட அவர்களுக்குத் தன்சாவு ஞாபகம் கிடையாது. அவர்கள் ஒரு ஓரமாய்க் காத்திருந்தால், பொறுமைக்குப் பலன் உண்டு. துட்டு காரண்டி. சில சமயம் வாய்விட்டுக் கேட்டு, பழைய வேட்டி – வெள்ளை – பெற்றுக் கொள்ளலாம். பத்து பதிமூணு என வீட்டுக்காரர்கள் மறந்தாலும் இவர்களுக்கு ஞாபகசக்தி அதிகம்.
அடிக்கடி ஷேவ் எடுக்க முடிவெட்ட என மயிரைப் பராமரிக்க அலுத்துத்தான் அவனவன் மீசை தாடியை அப்படியே விட்டு விடுகிறான். ரொம்ப அரிப்பாக் கெடக்கா, எல்லாமா வாரிப் போட்டாப்போல ஒரு மொட்டை. தலையைத் தடவுகையில் கைச் சொரசொரப்பு, அது ஒரு சுகம். ஆடுமாடுகள் நாய்கள் சுவரில் உரசி அந்த சொரசொரப்பை அனுபவிக்கின்றன.
என்னவோ எந்த ஊரிலும் தங்காமல் ஒரு சுத்தில் இந்தக் குளத்தங்கரை மண்டபம் திரும்புதல் என ஆகிப் போயிருந்தது. பிள்ளையாருக்குத் துணையாய் ஒரு சொந்தம். அர்ச்சனை கிடையாது. மரமே சருகுதிர்க்கும் தலையில். மழை வந்தால் அபிஷேகம். உம்மென்று உட்கார்ந்திருப்பார். எதாவது இலையில் வாங்கிவந்து சாப்பிடுகையில் வேணுமா, என்று வேடிக்கையாய் நீட்டிவிட்டுச் சாப்பிடுவார். அதற்குள் நாய் முன்வந்து வாலாட்டும். எனக்கு வேணும்.
டிஷ்யூம்.
சாயல்குடித் திருவிழா முடிந்து கால் சக்கரம்போலப் பின்னோக்கி இறங்கியது. ஆனால் ஆச்சர்யமாக அங்கிருந்து சனம் முழுசும் பரபரப்பில் கிளம்பிக் கொண்டிருந்தது. வரும் வழியெல்லாம் ராத்திரி ஜே ஜே என்று குட்டையும் நெட்டையும் மொட்டையும் சோடியும் நொண்டியும் குஷ்டமும் என்று பெரும் படை.
விசுக் விசுக் என்று கம்பை முன் அழுத்தி சப்பாணி ஒருத்தன். சடைமுடிக்காரி ஒருத்தி. முகக் குங்குமம் பயமுறுத்தியது. டரடரவென்று ஒரு குஷ்டரோக வண்டியைப் பின்னால் இருந்து தள்ளிவரும் ஒரு அசிஸ்டென்ட்… பத்திரிகை இல்லாமலேயே இவ்ள கும்பல்.
”என்னவே விசேசம்?”
”தாஜ் பீடி அண்ணாச்சி வீட்ல கல்யாணம்லா…”
”உமக்கு எப்படித் தெரியும்…”
”எட்டு பட்டியிலயும் பெரிசு பெரிசா போஸ்டர் அடிச்சிருக்கானுக, உம்ம கண்ணுல படல்லியாக்கும்?”
கையில் சக்கரம் சுத்த ஆரம்பித்ததும் அண்ணாச்சி ஊர்ப்பக்கம் வருவதில்லை. வந்தாலும் பிளஷர்லதான் வரவு. ஸ்வைங்கென்று ஊருக்குள் உருமி புழுதிகிளர்த்திப் போகையில் நம்மூர்ல இப்பிடியொரு மகராசனா என்றிருக்கும். வேப்பங்குச்சி தண்டி பீடியில் இத்தனை துட்டா… பீடிக்குச்சியாட்டம் இருந்த மனுசன் ஆளே பீப்பாயா ஆயிட்டாரு. நடையே போச்சு. சாமிக்கு சப்பரம். அண்ணாச்சிக்குக் கார்னு ஆயாச்சி.
பீடிக்கு தாஜ் பீடி கவர்னர் பீடி என்றெல்லாம் மகாப்பெயர் வைக்கிறார்கள். எந்த கவர்னர் பீடி குடிக்கிறார் தெரியவில்லை.
ஒருதரம் எலெக்ஷன்ல நின்னு தோத்துப் போனார். வெள்ளை முழுக்கைச் சட்டை. பளீர் பாலியெஸ்டர் வேஷ்டி. தங்கபிரேம் கண்ணாடி. கையில் தங்க வாச். குவிந்த விரல்களில் மோதிர வரிசை. சிரித்த ஒருபல் தங்கப்பல். அரைஞாண் கயிறைக் காட்டவில்லை. தங்கமாத்தான் இருக்கும். இந்த பவிஷோடு பீடி குடிக்கப் படுமா. நீள வெளிநாட்டு சிகெரெட் பிடிக்கலாம்.
என்னமோ ஒரு மனசு உள்ளூரில் கல்யாணம் வைக்கத் தோணியிருக்கிறது. நடையை எட்டிப்போட்டு நடக்கிறார்கள். அவனவனுக்கு விருந்துக் கனவு இப்பவே. பந்திக்கு முந்துறாப்ல அவசரம். பெரியாளுகள் சாப்பிட்ட இலைன்னா ஜாங்கிரி கிடக்கும். சக்கரை வியாதி வாழ்க. சின்னப்பிள்ளைகள் நொறுக்குத் தீனியெல்லாம் காலி பண்ணிவிட்டு சோத்தை அப்படியே மிச்சம் வைக்கும். அதுவும் நல்ல விசயந்தான். மோசமான விசயம் என்றால்…. சிலாட்கள் இலையை நக்கி கண்ணாடிபோல அனுப்புவான்.
தெருவில் நுழைகையிலேயே வெளிச்சத் திகட்டலாய்க் கிடந்தது. தெருவின் இந்தக் கோடி முதல் அந்தக் கோடி வரை குச்சி குச்சியாய்க் குழல் விளக்குகள். ஒவ்வொரு குச்சிக்கும் பேனர். நடந்தபடி வணக்கம் சொல்லும் அண்ணாச்சி. விளக்கும் கொசுவுமாய் ஒரு இரைச்சல். நாலைந்து வீடு அளவு தெருவடைத்துப் பந்தல். வாசலில் வெள்ளைக் குதிரை சாரட். குதிரைக்கு சிவப்பு வண்ணத்தில் முக்கிய கோழியிறகுக் குஞ்சலம். பித்தளைப் பூண் பொலியும் வண்டி.
கல்யாணம் அண்ணாச்சி பெண்ணுக்கா பையனுக்கா தெரியவில்லை. ரெண்டு பக்கமும் பிச்சைக்கார வரிசையைக் கடந்து சர்ர் சர்ரென்று கார்கள் பறந்தன. பந்தலுக்கு இருமருங்கிலும் டாக்சிஸ்டாண்டாட்டம் நிறைய வண்டிகள்.
பந்தல் மேல்ப்பக்கமாய் ஒரு தாமரைப்பூ டிசைன் சீரியல் பல்பு மினுக் மினுக்கென்று இதழ்களை வெவ்வேறு வண்ணத்தில் விரித்துக் கொண்டே இருந்தது. ஆளுயரத்தில் அண்ணாச்சி பேனர். வணக்கம் சொன்னபடி. நேரில் யாரையும் அவர் வணங்குவதில்லை. வர்றாளுகள்தான் அவரை வணங்க வேண்டும். ஊர்ப் பெரிய தலையில்லா.
பக்கத்து காலிமனையிடத்தில் சமையல். தட்டிக்கு மேலே குபுகுபுவென்று புகை. திகுதிகுவென்று நெருப்பு. அக்கன்னா அடுப்புகள்மேல் இடுப்பு உயர அண்டாக்கள் பாத்திரங்களில் வெஞ்சனமும் சாம்பாரும் பாயசமும் அரிசியும் வேகும் மணம். இழுத்த்து மூச்சுவிட வைத்தது. பொம்மைக்குதிரையில் சவாரி விளையாடும் குழந்தைபோல ஒருவன் தேங்காயை மலைபோல் துருவிக் கொண்டிருக்கிறான். பார்த்த ஒருத்தனுக்குத் தண்ணி கொட்டிவிட்டது நாவில் இருந்து. பெரிய பாரலில் தண்ணி. சமையலுக்கு வாளிவாளியாய் எடுத்துப் போனார்கள். பெரிய பந்தல் முழுக்க வெள்ளைச் சட்டைகள் கண்ணைப் பறித்தன. அவர்கள் எதாவது பேசியபடி மணி பார்த்தார்கள். மீசையை நீவி விட்டுக் கொண்டார்கள். பெண்கள் பட்டுப்புடவையும் தலைநிறையப் பூவுமாய் இடுப்பில் தாம்பாளங்களுடன் இங்குமங்கும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். எல்லாருக்கும் பரபரப்பு பாவனை. முகத்தில் பவுடரோடு சிரிப்பும் பூசியிருந்தார்கள். அழகான பெண்கள் அடக்கத்துடன் நடமாடினார்கள். ரெண்டுங் கெட்டான் கழுத்தையும் தலையையும் படுத்துகிற பாடு… கழுத்தில் முகத்தில் காதில் என்று வெளியே தெரியும் இடமெல்லாம் தகதக. கருப்பு உடம்புக்கு அந்த மஞ்சள் தூக்கிக் கொடுத்தது.
ஓரமாய் ஒதுங்கி நின்றார் அவர். வாயில் விரலைப் போட்டுக் குதப்பியபடி ஒரு குழந்தை அவரையே பார்த்தது. டொக்கு விழுந்த கன்னத்தைத் தடவியபடி ஒரு சிரிப்பு சிரித்தார். ”பூச்சாண்டி…” என்று கத்தியபடி உள்ளே ஓடியது. இதென்னடா சோதனை என்று பயந்து விட்டார். கொஞ்சம் பின்னால்தள்ளி நின்றுகொண்டார். நாய் ஒன்று சட்டென்று அவருக்கு முன்னால் வந்தது.
பிச்சைக்காரர்களை விரட்ட என்றே காவல் ஒருத்தனைப் போட்டிருந்தார்கள். வாழை மரத்துடன் அவனும் ஒரு குச்சியுடன் நின்று யாரும் வழியை மறைக்காமல் விரட்டி ஒதுக்கிக் கொண்டிருந்தான். அவர் பக்கம் கம்பை ஓங்கும்போதெல்லாம் புன்னகையுடன் ”சிவாய நம” என்றார். சமையல் வாசனை எட்டும் தூரத்தில் நின்று கொண்டார். நடந்து வந்ததுக்கும் அதுக்கும் வயிறு பசித்தது. கல்யாணச் சோறு என்று வயிறைத் தயார்ப்படுத்தி வைத்திருந்தார். அண்ணாச்சி பார்வையில் பட்டால் உள்ளே கூட அனுமதி கிடைக்கலாம். சிவாய நம.
காலையிலேயே கும்பல் மொத்தமும் அங்கே ஆஜர். மரத்தடிகளும் குளத்தங்கரை மண்டபங்களும் நிரம்பி வழிந்தன. சாயந்தரம் இருட்டுத் திரள மொத்தமும் கல்யாணப் பந்தல் வாசலில். ”ஏலேய் நாறப்பயல்வளா, சோத்துப் பறக்கா வெட்டிகளா, ஓரமா நில்லுங்கடா, அவுக சொல்றாகல்ல?…” என்றபடி காவல்காரனைப் பார்த்துப் புன்னகைத்தார். சிலசமயம் இப்படி உத்திகள் அதிக சலுகைகளைப் பெற்றுத்தரும்.
ஊருக்கே பெரிய மனுசன். பெரிய விருந்து. ஊரின் பெரிய தலைகள் நிறையப் பேர் வந்திருந்தார்கள். மாப்பிள்ளை அலங்காரம் முடிந்து உள்ளேயிருந்து வந்து ஏறியமர சாரட் காத்திருக்கிறது. தெருவெங்கும் ஊர்வலம் போவார்கள் போல. இப்பவே நேரம் நிறைய ஆயிட்டது. எப்ப பந்தி ஆரம்பிப்பார்கள் தெரியவில்லை. சொந்தக்காரனும் பிச்சைக்காரனும் எல்லாருமே சோத்தை எதிர்பார்த்து எதையோ பேசியபடி வாயில் வெறும் வார்த்தையைக் குதப்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
எதிர்பார்க்கவே முடியாமல்… திடீரென்று மாடியில் இருந்து பெருஞ்சத்தம். ஆலங்கட்டி மழைபோல. ஆளுக்காள் கோபத்தில் ஆத்திரத்தில் கத்திக் கொண்டார்கள். என்ன என்றே புரியவில்லை. நிலைமை உக்கிரமாகி கைமீறி அடிதடி வரை போய்விட்டிருந்தது. நாற்காலிகள் உட்பட சரசரவென்று இழுபடுகின்றன. எறிபடுகின்றன. கீழே உட்கார்ந்திருந்தவர்கள் சட்டென்று எழுந்துகொண்டு உள்ளே ஓடினார்கள்.
திபுதிபுவென்று கூட்டம் கீழே இறங்கியது. அண்ணாச்சியை, அவர் எகிற எறிற மாடியிறக்கிக் கொண்டு வந்தார்கள். தலை கலைந்து கண்ணாடி உடைந்து சட்டை மேல்பட்டன் எகிறி, உள்பனியன் தெரிய கிழிந்திருந்தது. சிவாய நம, வாயில் நாராசமாய் வசவுகள். பல்லைப் பல்லைக் கடித்தபடி வந்தார்.
அடக்க மாட்டாமல் இவர் சிரிக்க ஆரம்பித்தார். ஐய இது தப்பு. கடகடவென்று சிரித்தார். நிற்கமுடியவில்லை. பசித்தது. கல்யாணம் நடக்குமா தெரியாது. சோறு கிடைக்குமா தெரியாது. சிரிப்புதான் முந்திக்கொண்டு அவரில் இருந்து வெளியே சிதறியது. சம்பந்திக்காரன்… அவனைச் சும்மா விட்ருவாகளா, என்ன கதில அவன் இறங்கி வரப் போறானோ. மாப்பிள்ளை சாரட்டுல ஏறுவானா இல்லியா… பசித்தது. நின்று திரும்பிப் பார்த்தார். பந்தல் வாசலில் பேனர் – கைகூப்பி வணங்கியபடி அண்ணாச்சி. குபுகுபுவென்று சிரித்தபடி நடந்தார்
சிவாய நம… துணிமூட்டையைத் தொட்டுப் பார்த்தார். போத்தல் இருந்தது. தெருவோர அண்ணாச்சி பேனரில் ஒருநாய் காலைத் தூக்… ச்சீ, என்று விரட்டினார், சிரித்தபடி.

(நன்றி – சன்டே இந்தியன் வார இதழ்)


storysankar@rediffmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்