ம ந் தி ர ம்

This entry is part [part not set] of 32 in the series 20061207_Issue

ம. ந. ராமசாமி


>>>
மெஸ் என்று பெயர்பெற்றிருந்தாலும் அது வீடு. அம்பதுகளிலான வயதில் சங்கரன், ரங்கநாயகி தம்பதியரின் மெஸ். இலையெடுக்க, சுத்தம் செய்ய, பாத்திரம் விளக்க என்று ஒரு மாது இருக்கிறாள். தரையில் இலைபோட்டுச் சாப்பாடு.

வஸந்தம் மெஸ்சில் ஞாயிற்றுக்கிழமை உணவில் வெங்காய சாம்பார், உருளைக்கிழங்கு கறி என்பது நியதி. சுற்றுப்புறமே தனியா, வெங்காயத்துடன் மணப்பதான சாம்பார். மொறுமொறு என்று இருக்கும் உருளைக்கிழங்கு கறி. ஞாயிற்றுக்கிழமை அமாவாசை ஆகிவிட்டால், மிளகுக்குழம்பு, புடலங்காய்க்கறி என்று இந்த நியதி மாறிவிடும்.

இந்த மிளகுக்குழம்புக்கும் நாக்கைத் தீட்டியபடி, என்றைக்குப் போடப்படும் என்று காத்திருப்பவர்கள் உண்டு. என்னதான் காய்களின் விலைவாசி ஏறட்டுமே, திங்கள்க்கிழமை இரவு நிச்சயமாகக் கத்திரிக்காய் எண்ணெய்க் கறி. வாரம் ஒருநாள் எலுமிச்சம்பழ ரஸம் என்பது அனுஷ்டானம். சம்பிரதாயம். உண்பவர் கையைக் குவித்து ரஸத்தை வாங்கி உறிஞ்சும்போது விடும் சர் சர் ஒலி தாளம் தப்பாத மோர்ஸிங்.

இன்னிக்குப் பிட்ளை, இன்னிக்கி ரஸவாங்கி, என்று மாமி சொல்லும் குரல் அழகு. சங்கீதம். அமாவாசை அன்று வடை, பாயசம் உண்டு. விசேஷநாள், பண்டிகை என்றால் தேங்காய்சாதம், எலுமிச்சம்பழச் சாதம் அல்லது புளியோதரை, பச்சைமிளகாய் – இஞ்சியோடு கூடிய தயிர்சாதம், அன்று வத்தல், வடகம், மோர்மிளகாய். கோவில் மண்டகப்படிக்குப் பணம் தருவதுபோல, ”நாளைக்கு எனக்குப் பிறந்தநாள். எல்லாருக்கும் ஸ்பெஷல் சாப்பாடு போடுங்கோ” என்று சங்கரனிடம் எக்ஸ்ட்ரா பணம் தருபவரும் உண்டு.

சாதிமத வேறுபாடு பார்ப்பதில்லை. இருந்தாலும், வாடிக்கையாளர்களிடையே கிருஸ்துவரோ முஸ்லீமோ இல்லை.

>>>
கடந்த ஐந்தாண்டு காலமாக மாதவன் இந்த மெஸ்ஸில் இருவேளையும் சாப்பிட்டு வருகிறான். ஆச்சர்யம் என்னவென்றால் இந்த ஐந்தாண்டு காலத்தில் மாதவன் ஒருநாள்க் கூட அஜீர்ணம், வயிற்றுக்கோளாறு என்று அவஸ்தைப் பட்டதில்லை. அதுவரை சளி, இருமல் என்று தொந்தரவுகள் இருந்தன. மெஸ் உணவே மருந்தாகி விட்டது.

அரசாங்கத்துறை அலுவலகம் ஒன்றில் மாதவன் பணியில் இருக்கிறான். வயசு இருபத்தெட்டு ஆகிறது. பார்க்க லெட்சணமாக இருப்பான். ஆசாரம், நித்தியப்படி அனுஷ்டானம் என்பதான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். நெற்றியை நிறைவிப்பதான பட்டை விபூதி. அதன் நடுவே சிவந்த குங்குமத் தீற்றும், நாள் பதினாறு மணிநேரமும் இருந்து கொண்டிருக்கும். காலை மாலை இருவேளை சந்தியாவந்தனத்தைத் தவறாது செய்கிறான்.

நாற்பது பேர் இருப்பதான ஒரு மேன்ஷனில் தனி அறை. நாடா கட்டில், மடக்கு நாற்காலி, ஒரு ஸ்டூல் – இவை அவனுடைய அறைத் தோழர்கள். சோப்பு, சீப்பு, கண்ணாடி, விபூதி மரவை, குங்குமச்சிமிழ், தேங்காயெண்ணெய், அலாரம் கடிகாரம், சவர சாதனங்கள் வைத்துக்கொள்ள, சுவரோடு சேர்ந்த சின்ன அலமாரி. மேல் மின்விசிறி கிடையாது. சொந்தமாக சிறிய ·பேன் வாங்கி, ஸ்டூல்மேல் வைத்துக் கொண்டிருக்கிறான். அதற்கு மின்சாரச் செலவு என அதிகப்பணம் பெற்றுக் கொள்கிறார் அறைஉரிமையாளர்.

>>>
வடிவேலு என்ற இளைஞன் இவனது அலுவலகத்துக்கு மதுரையில் இருந்து மாற்றலாகி வந்து சேர்ந்தான். இருபத்தியிரண்டு வயது இளைஞன். கட்டைகுட்டையான தேகம். அட்டைக்கருப்பு இல்லாத ஒரு நிறம். மாதவனையும் அவனையும் ஒருசேரப் பார்த்தால் உருவ வேறுபாடுகள் வெகுவாகத் தெரியவரும்.

வடிவேலு தங்குவதற்கு அறை தேடினான். ”அறையா? அது கஷ்டம் ஆச்சே!” என்று மாதவன் சொன்னபோது, அவன்முகம் காற்றுபோன பந்தாகச் சுருங்கியது.

”ஒண்ணு பண்ணுங்க வடிவ§லு. என் அறையிலே இப்போதைக்கு என்னுடன் தங்குங்க. எங்க மேன்ஷன்ல எதாவது அறை காலியாகுதா பார்க்கலாம்…”

வஸந்தம் மெஸ்சுக்கு அழைத்துவந்து அட்வான்ஸ் தரச்சொன்னான். ”இங்க சாப்பாடு நன்னா இருக்கும். உடம்புக்கு ஒத்துக்கும். நீங்க வெஜிடேரியனா, நான்வெஜிடேரியனா?”

”அசைவம் சாப்பிடறதுதான். ஆனா அப்பிடியண்ணும் தேவைங்கறதில்லை…”

”நல்லதாப் போச்சு. வஸந்தம் மெஸ்சிலே சாப்பிட்டீங்கன்னா இறைச்சி, மீன்பக்கம் திரும்பிப் பார்க்க மாட்டேள்!”

அன்றிரவு மெஸ்சில், சாதம் பரிமாறியபின், கையைக் குழித்து நீர்ஏந்தி, இலையைச் சுற்றி மாதவன் வார்ப்பதை வடிவேலு கவனித்தான். இப்படியரு செயலை அவன் யார்செய்தும் பார்த்தது இல்லை. எதுக்காக இவர் இப்படிச் செய்கிறார் என்பது புரியவில்லை. கேட்க கூச்சமாக இருந்தது. ஏதோ வழிபாடு, அன்றாடச் சடங்கு என்பதுமட்டும் தெரிந்தது.

மந்திரம் ஏதோ முணுமுணுத்தான் மாதவன். ஓர் இரு பருக்கைகளாக சாதத்தை எடுத்து ஐந்தாறு தடவை வாயில் போட்டுக் கொண்டான். இடதுகை நடுவிரல் அருகே இலையைத் தொட்டபடி இருந்தது. அந்த விரலால் சிந்திய நீரைத் தொட்டுவிட்டு, மார்பில் வைத்துக் கொண்டான்.

மாதவனின் அறை சிறியது. இருவருக்குப் போதாதுதான். மாதவன் கட்டிலில் படுக்க, எடுத்து வந்திருந்த ஹோல்டாலைப் பிரித்து, படுக்கையைத் தரையில் கட்டிலருகே விரித்துக்கொண்டான் வடிவேலு. மாதவன் கட்டிலில் இருந்து இறங்கினால் பாதம் பதிக்க இடம் இருந்தது. ஸ்டூல்மின்விசிறி முக்கால்வட்டம் சுழன்றது.

”இங்க திருட்டுபயம் உண்டு. அறைக்கதவைச் சாத்திதான் வைக்கணும்…” என்றான் மாதவன். ஏற்கனவே அறைக்கதவைத் தாளிட்டுவிட்டுத்தான் படுத்தான்.

”ஆமாங்க. திருட்டு எங்கதான் இல்லை. நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும். எனக்காக நீங்க பாக்கவேண்டாம். உங்க வசதிப்படி செய்யுங்க…”

து¡ங்கவில்லை என்றாலும் சற்று நேரம் இருவரும் பேசாதிருந்தனர். எங்கிருந்தோ சுவர்க்கோழி ஒன்று ஒலிகொடுத்தது. தோளுக்குமேலான உயரஜன்னல் மூலம் வெளிவெளிச்சம் வந்து விநோதமான கோலம் போட்டிருந்தது.

”வடிவேலு?”

”பேசுங்க.”

மாதவனுக்கு அந்தப் பிரயோகம் புதுசாய் இருந்தது… அவன் சொல்லுங்க, என்று சொல்லாமல், பேசுங்க, என்பது.

”நான் கேட்கிறேன் என்று தப்பா நினைக்கக் கூடாது. சாதிபத்தி எனக்குத் தனிப்பட்ட அபிப்ராயம் உண்டு…”

”நான் என்ன சாதின்னு கேட்கறீங்க? அதானே?”

”ம்”

”என்ன சாதின்னு சொல்றது? கலப்புசாதி. என் தாத்தா ஆதிதிராவிடர். பள்ளியிறுதி படிச்சுத் தேறி அரசாங்கத்திலே வேலைக்குச் சேர்ந்தாரு. மின்சாரத்துறை. ஆதிதிராவிடர்னு சொல்லிக்கிட வெட்கம். முதலியார்னு சொல்லிக்கிட்டாரு. உடனே ஒரு முதலியார்ப் பொண்ணு இவரைக் காதலிக்க ஆரம்பிச்சிட்டது! காதல்கூட சாதிபார்த்துத்தான் காதலிக்கும் போலிருக்குது… அப்பறம் என் தகப்பன், நான், எல்லாரும் முதலியார் ஆயிட்டோம்!”

”சரித்தான்” என்றான் மாதவன்.

”நீங்க ஐயரா, ஐயங்காரா?”

”ஐயர்.”

”ஐயர் ஐயங்காருக்கு என்ன வித்தியாசம்?”

”விபூதி நாமம்தான் வித்தியாசம். மத்தபடி பெரிசா வித்தியாசம் இல்லே. ஐயங்கார் சிவனைக் கும்பிட மாட்டாங்க. ஐயர்கள் சிவனையும் விஷ்ணுவையும் கும்பிடுவாங்க. என் பேர் மாதவன். நான் ஐயர். விஷ்ணு பேர்களில் இதுவும் ஒண்ணு. ஐயர்லேர்ந்து பிரிஞ்சு போனவங்க ஐயங்கார். நாங்க ஸ்மார்த்தர். அவங்க வைஷ்ணவர்கள். வீடுகள்லே சில பழக்க வழக்கங்கள்லே ஐயர் ஐயங்காருக்கு வேறுபாடு உண்டு… ஐயர்மாமி மடிசார் கட்டுவார். ஐயங்கார்கட்டுன்னு அவர்கள் கட்டு வேற மாதிரியிருக்கும். சமையல் பாத்திரங்களைத் தொட நேர்ந்தால் பற்று என்று கையலம்பிக் கொள்வார்கள் ஐயர் வீடுகளில். ஐயங்கார்களுக்கு இந்தப் பற்று சமாச்சாரம் வழக்கம் கிடையாது. ஐயர்மாமிகளை அம்மாள் என்போம். ஐயங்கார் மாமியை அம்மங்கார் என்பார்கள்…”

கேட்டுக்கொண்டிருந்தானோ இல்லையோ, வடிவேலுவிடமிருந்து குரல் எழவில்லை. மாதவன் பேச்சை நிறுத்திப் புரண்டு படுத்துக் கண்ணைமூடிக் கொண்டான்.

ஒருவார காலம் ஆகியும் அறை எதுவும் காலியாவதாய்த் தெரியவில்லை. வேறு இடங்களில் சொல்லி வைத்தார்கள். அறை உரிமையாளர், நீர் அதிகம் செலவாகிறது, மின்சார-பில் கூடுகிறது, வாடகை உயர்த்தவேண்டி யிருக்கும், என சொல்லிப் போனார்.

>>>
ஓர் இரவு உணவின்போது வடிவேலு கேட்டுவிட்டான். ”எதுக்காக இப்படி இலையைச் சுற்றித் தண்ணீர் தெளிக்கறீங்க?” முட்டைக்கோஸ் கறி, சாதம் இலையில் வைக்கப் பட்டிருந்தன. அன்னசுத்தி என்று சொன்னபடி ஒவ்வொரு இலையிலும் சாதத்தின் மீது ஒருதுளி நெய்யை வார்த்தார் ரங்கநாயகி மாமி. ஸ்பூன்காம்பால் நெய்யூற்றுவதாகப் பட்டது.

லேசாகச் சிரித்தான் மாதவன். ”சொல்றேன்” என்றான். ”இதுக்கு பரிசேஷணம்னு பேர். சாப்பிடுவதற்கு முன்னால் மந்திரம் சொல்லி இப்படிப் பண்ணிவிட்டு, சாப்பிட வேணுங்கறது சம்பிரதாயம்.”

”அது என்ன மந்திரம்?”

”சொல்றேன். பரிசேஷணம் பண்றப்ப, இலையை என் நடுவிரல் தொட்டுக்கொண்டு இருக்கு பாருங்க. சாதத்தைப் பார்த்தபடி இந்த மந்திரம் சொல்றேன்…

அன்னபூர்ணே ஸதாபூர்ணே,
ஸங்கர ப்ராண வல்லபே.
ஞானவைராக்ய ஸித்யர்த்தம்,
பிக்ஷாம் தேஹிச பார்வதீ.

அன்னபூரணி என்பவளான பார்வதி தேவியைத் துதிப்பதான ஸ்லோகம் இது. அறிவையும், மன உறுதியையும் தருவதான உணவுப் பிச்சையைக் கொடு, என்பதாக அர்த்தம்.”

வடிவேலு கேட்டுக் கொண்டிருந்தான். வெண்டைக்காய் சாம்பாரை ஊற்றினார் சங்கர மாமா.

தொடர்ந்து மாதவன் சொன்னான். ”இப்ப ‘பூர்புவஸ்ஸ¤வஹ’ன்னு சொல்லி, திரும்பவும் பரிசேஷணம் பண்றேன். அப்பறம் காயத்ரீ மந்திரம்.” மனசுள் மந்திரத்தை மாதவன் சொல்லிக் கொண்டான். ”சாதத்தின் மீது நீரை லேசாகத் தெளித்துவிட்டு, திரும்பவும் பரிசேஷணம்னு இலையைச் சுற்றி நீரை வார்க்கிறேன். ‘தேவ சவிதப்ரஸ¤வ’ன்னு மந்திரம் சொல்றேன். குழித்த நீரைவிட்டு, ‘அமிர்த உபஸ்தரணம் அஸி’ன்னு சொல்லி உணவை, அமிர்ம் என்முன் எழுந்ததாக பாவிக்கிறேன். கைநீரை அருந்துகிறேன். அப்பறம் அஞ்சு விரலாலும் ரெண்டு ரெண்டு பருக்கை எடுத்து, ‘ப்ராணய ஸ்வாஹா, அபாணய ஸ்வாஹா, வ்யானாய ஸ்வாஹா, உதானாய ஸ்வாஹா, ஸமானாய ஸ்வாஹா, ப்ராஹ்மணே ஸ்வாஹா’ன்னு மந்திரம் சொல்லிச் சொல்லி, வாயிலிட்டுக் கொள்கிறேன். இன்றுவரை சோறுபோட்டு என்னைக் காப்பாற்றுகிறாயே, இறைவா நன்றி, என்கிறது இந்த மந்திரம் எல்லாம்…”

கேட்டுக்கொண்டிருந்துவிட்டு உணவில் கவனம் செலுத்தலானான் வடிவேலு.

எதிரில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மூவர், மாதவனைப் பார்த்துப் புன்னகை செய்தார்கள்.

ரஸம் ஊற்றப்பட்ட போது அறையில் பெருங்காயம் மணத்தது.

>>>
அடுத்தநாள் காலை மணி ஒன்பது அளவில் வடிவேலுவும் மாதவனும் மெஸ்ஸில் இலைமுன் உட்கார்ந்தனர்.

கையில் சிறிதளவு சாதத்தை எடுத்த வடிவேலு, நான்கு விரல்கள்மீது சாதத்தை வைத்துக்கொண்டு, கண்களை மூடி முணுமுணுத்தான்.

முகம்திருப்பி, புன்னகையுடன் மாதவன் அவனைப் பார்த்தான். ”நீங்களும் மந்திரம் சொல்லி சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா?”

”ஆமாங்க!”

”என்ன மந்திரம்?”

”ம். சொல்றேன்.” வடிவேலு முகத்தில் புன்னகை. எடுத்த கையில் சாதம். சொன்னான் – ”எந்த உழவர்கள் இந்த சாதத்துக்கான நெல்லையும், நான் உண்பதற்காக பருப்பு, காய்கறி வகைகளையும் விளைவித்துத் தந்தார்களோ, அந்த உழவர்பெருங்குடி மக்களுக்கு என் நன்றி. அனைத்துவித வசதிகளுடன் அவர்கள் பல்லாண்டு வாழ்வார்களாக – என்கிற மந்திரம் இது.”

வாய்விட்டு சந்தோஷமாக ஆனந்தமாகச் சிரித்தான் மாதவன். ”செய்ங்க. தினம் இந்த மந்திரத்தைச் சொல்லி சாப்பிடுங்க. வடிவேலு, நீங்க ரொம்ப உசந்துட்டீங்க!” என்றான்.

>>>

ramanasamy_mn@gmail.com

Series Navigation