மேலும் சில விடை தெரியாத கேள்விகள்

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

பத்ரிநாத்



திருகே ஆர் மணி அவர்கள் நீண்ட கேள்வி பதில் பகுதியில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கும் சேர்த்து பதில் அளித்தால் நன்றாக இருக்கும்.

1) ராமர் பாலம் என்பது மனிதனால் உருவாக்கப் பட்டதா இல்லை என்ற விவாதமே இன்னமும் ஓயாத போது, அது ஒரு புனித சின்னம், மதச் சின்னம், பராம்பரிய கலை என்றெல்லாம் குதிக்கும் அத்வானிகள், பாபர் மசூதியை இடிக்கும் போது ஏன் இந்த எண்ணம் அவர்களுக்கு தோன்றவில்லை.? சேது பாலம் புனித சின்னம், புராதனச் சின்னம் என்றால், பாபர் என்ற மன்னர் கட்டிய அந்த மசூதி மட்டும் புடலங்காய்ச் சின்னமா..?

2) சேதுக் கால்வாய் திட்டம் என்பது, பிஜேபி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இசைவோடு சட்டப் படி ஆரம்பிக்கப் பட்ட ஒரு திட்டம். ஏந்த சட்டப்படி (?) பாபர் மசூதி இடிக்கப்பட்டது?

3) இந்திய சட்டவழி முறைகளுக்கு உட்பட்டு ஒரு திட்டமாக நடப்பதையே எங்கள் மனம் புண் படுகிறது என்று கூவினால், அக்கிரமமாக ஒரு வழிபாட்டு இடத்தை இடித்துத் தரை மட்டமாக்கினால் அவர்கள் மனம் புண் படாதா..? அல்லது அவர்கள் மனம் உங்களுக்குக் கிள்ளுக்கீரையா..? எந்த நாத்திகர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள்..?

3) மனிதப் படுகொலைகள், பாலியல் வன்முறைகள் ஆகியவற்றிற்கு காரணம் திராவிட இயக்கமா, தந்தைப் பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையா அல்லது இந்தப் பரஸ்பர மதவெறியா ? (மனசாட்சியைக் கேட்டால் தெரியும்.) சிந்தனையைத் தூண்டுவது பெரியாரின் பகுத்தறிவா அல்லது பரிவாரங்களின் மதவெறியா..?

4) ராமன் என்பவன் உண்மையா அல்லது கற்பனையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அப்படி ஒரு வாதத்திற்காக உண்மை என்றே வைத்துக் கொண்டால், அவன் “சம்புகன் என்ற சூத்திரன் தவம் செய்தான்” என்று கூறி அவனவன் குலத் தொழிலை அவனவன் செய்ய வேண்டும் என்று சட்டம் போட்டு சம்புகன் தலையை ராமன் வெட்டினான் என்ற செய்தியும் அதில் சொல்லப் பட்டுள்ளதே.. அதுவும் உண்மைதானே..?

5) ராமனின் வாரிசாக தன்னை பாவித்துக் கொண்டிருக்கும் வேதாந்திகள் நிறைந்ததுதானே அனைத்து மதவெறி ஸ்தாபனங்கள்? “எதைச் சொன்னாலும் நம்பிவிடாதே.. நான் சொன்னாலும் உன் அறிவைக் கொண்டு யோசி.. என்னையும் விமர்சனத்துக்கு உள்ளாக்கு” என்ற பெரியாரிசம் ஜனநாயகமானதா..? பேசினாலே தலையை வெட்டுவேன்.. நாக்கை அறுப்பேன் என்ற மதவெறி ஜனநாயகமானதா..?

6) மற்றவர்களை புண் படுத்துவது போல பேசுவது, ஆக்கிரோசமாய் பேசுவது, நாராசமாய்ப் பேசுவது திராவிடக் கட்சிகள் என்கிறீர்கள். சரி என்று அவர்களைக் கேட்டால், வால்மீகி ராமாயணத்திலிருந்து (சமஸ்க்ருத மொழி பெயர்ப்பு மதிப்பிற்குரிய சீனுவாச அய்யங்கார்) எடுத்துச் சொல்வதுதானே தவிர சொந்தக் கற்பனை அல்ல என்கிறார்கள். ஆனால் இந்து அமைப்புகள் தங்கள் கூட்டத்தில் பிற மதத்தினரை குறிப்பாக முஸ்லிம் மதத்தினரை எப்படிப் பேசுவார்கள் என்று பார்த்திருக்கிறீர்களா..?

7) கண்ணகிக் கதையை மறுபடியும் கையில் எடுத்துள்ளீர்கள். உங்கள் ராமன் மாபெரும் அரசன். சகல வசதி வாய்ப்புக்கள் கொண்டவன். கண் அசைத்தால் பணிவிடை செய்ய பலர் தயாராக உள்ளவன். ஆள் அம்பு சேனை கொண்டு, வர்ணாஸ்ரமத்தைக் காத்தவன். ராவண வதம், சம்புக வதம், வாலி வதம் ஆகியவை புரிந்தவன்.. ஆலோசனைகள் சொல்ல பல ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்களால் சூழப்பட்டவன்.. ஆனால் எங்கள் கண்ணகி சாதாரணமானவள். எந்த செல்வாக்கும், ஆள் பலமும், பின் புலமும் இல்லாத ஒரு சமானிய, சராசரிக் குடும்பப் பெண். ஆனால் ஒரு அரசனையே நீதி கேட்டு சங்கநாதம் செய்தவள். இப்போது சொல்லுங்கள் நாங்கள் யாரை போற்றுவோம். ? ( குறைந்த பட்சம் women empowerment என்று பேசுபவர்கள் கூட இதில் மயங்கலாமா?)

8) ஒரு பாகிஸ்தானில் முஸ்லிம் மதத்தைப் பற்றிப் பேச முடியுமா..? என்று கேட்டால், உண்மை.. முடியாதுதான். நம்நாடு எதைப் போல ஆக ஆசைப் படுகிறோம்.. இன்னொரு பாகிஸ்தானைப் போலவா.. அல்லது அமெரிக்க வல்லரசைப் போலவா..? பாகிஸ்தானில் அதன் அதிபராக இருந்த நவாஸ் செரீப்புக்கே ஜனநாயகம் இல்லையே.. அதைப் போலவா நம் நாடு ஆக ஆசைப் பட வேண்டும்..?

9) நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஒவ்வொரு குடிமகனும் “Scientific Temperament” வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. அப்படியென்றால் அது பகுத்தறிவு சம்பந்தப் பட்டதா ? அல்லது மதவெறி உணர்வா..?

பத்ரிநாத்


prabhabadri@rediffmail.com

Series Navigation

பத்ரிநாத்

பத்ரிநாத்