மெல்லக் கொல்லும் விஷங்கள் …

This entry is part [part not set] of 29 in the series 20050422_Issue

தஞ்சாவூரான்


குடிக்கத் தண்ணீரில்லாத நமது நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து எழுப்பப்படும் தொழிற்சாலைகள். பணம் பார்ப்பதே லட்சியம் என்று ஆலாய்ப்பறக்கும் கனவுத் தொழிற்சாலையின் உருப்படியில்லாப் பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படும் மூலப்பொருட்களான நடிகர், நடிகையரை வைத்துத் தயாரிக்கப்படும் விளம்பரங்கள். கண்மூடித்தனமான மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் இளையர்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து எதை முன்னிருத்துகிறார்கள் ? ஒரு பைசாவுக்கும் புண்ணியமில்லாத,

நம் உடலுக்கு கெடுதலன்றி வேறு எதுவும் அளிக்கமுடியாத, விதவிதமான அளவுகளில் வரும் மேற்கத்திய குளிர்பானங்களை!

இளநீர், கோடையின் கொடுமையைத் தணிக்க இயற்கை நமக்கு அளித்த உலகின் மிகச்சிறந்த குளிர்பானம். பனைமர நுங்கு, பதனீர், வெள்ளரிக்காய், தர்பூசணி என நமக்கு இயற்கை அளித்த கொடை ஏராளம்! ஆனால், அன்புகூட செயற்கையாகிவிட்ட தற்காலத்தில், இயற்கையை இயற்கை எய்த வைத்துவிட்டு, செயற்கையான பல விஷயங்களை நோக்கி நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். செயற்கைக்கோள், செயற்கைப் பட்டு, செயற்கை முடி, செயற்கைப் பூக்கள் என வாழ்வில் பல செயற்கையாகிவிட்டன. ஆக, செயற்கையான விஷயங்கள் நமக்குப் புதிதில்லை. ஆனால், செயற்கை குளிர்பானங்களை அவ்வாறு எடுத்துக்கொள்ளமுடியாது. ஏனென்றால் இது உடம்பு மற்றும் உயிர்

சம்பந்தப்பட்டது. செயற்கைக் குளிர்பானங்களுக்கும், உயிருக்கும் என்ன தொடர்பு ?

http://www.mercola.com/2004/jun/26/soda_diabetes.htm என்ற தளத்திற்கு சென்று பாருங்கள். இந்த வலைதளத்தில் உள்ள சில தகவல்கள் உங்களை அதிர்ச்சியடைய செய்யும்! சில வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு ஈமெயில் வந்தது. உங்களில் சில பேருக்குகூட வந்திருக்கும். டெல்லியில் ஒரு மாணவன் ஒரு போட்டிக்காக தொடர்ந்து ஒருவகை குளிர்பானத்தை அருந்திவிட்டு, முடிவில் இறந்தேபோனான் என்று! அது உண்மையா பொய்யா நமக்குத் தெரியாது. ஆனால் மெதுவாக உயிரை எடுக்கும் அளவுக்கு அதில் சமாச்சாரம் உண்டு என்பது உண்மைதான். அதனால்தானோ என்னவோ சில மாநிலங்களில் சிலவகை குளிர்பானங்களை பூச்சிமருந்தாக விவசாயிகள் வெற்றிகரமாக பயன்படுத்திவருகின்றனர்! இதுபற்றியும் மேலும் இந்த குளிர்பானங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கும் விபரங்கள் அறிய: http://www.indiaresource.org என்ற வலைதளத்தைப் பாருங்கள்.

சிலமாதங்களுக்கு முன், இந்த வகை குளிர்பானங்களில் அங்கீகரிக்கப்பட்ட( ?!) அளவுக்கு மேல் பூச்சிமருந்து கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் குளிர்பான அழிப்பு, எதிர்ப்பு, கழுதைக்கு குளிர்பானம் புகட்டுதல், சாக்கடையில் வீசுதல் போன்ற போராட்டங்கள் நடந்தன. கொஞ்ச நாட்களில் அவை அனைத்தும் காணாமல் போய்விட்டன. மக்கள் வழக்கம்போல் அடுத்த பரபரப்புக்குத் தாவி விட்டனர். எந்த பரபரப்பும் பத்திரிகைகளின் உதவியால் சில நாட்கள்தான் தாக்குப் பிடிக்கின்றன. பிழைப்பு நடத்த அவர்களுக்கும் புதுப்புது

பரபரப்புகள் வேண்டியிருக்கிறது.

இந்த மாதிரி விஷ(ய)ங்களை உலகத்திற்கு ‘அர்ப்பணிப்பு ‘ செய்த அமெரிக்காவோ இப்போது, குளிர்பானங்களை பள்ளிகளில் விற்கக் கூடாது என்று மாநிலத்திற்கு மாநிலம் சட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. காரணம், பள்ளி மாணவ மாணவியர் அதிக அளவு குளிர்பானங்களைக் குடித்துவிட்டு பருமனாகிவிட்டனராம். சமீபத்தில் மார்கன் ஸ்பர்லாக் (Morgan Spurlock) என்பவர் எடுத்த Supersize Me என்ற ஒரு விவரண படம் ஒரு பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தியது. அப்படத்திற்குப் பிறகு McDonalds உணவு நிறுவனம் Supersize (பெரிய பெரிய அளவுகளில் உணவு மற்றும் குளிர்பானங்கள் வழங்குவது. இது நம் உடலுக்குத் தேவைப்படும் அளவை விட பல மடங்கு அதிகமாக calories கொண்டது)என்ற முறையையே கைவிட்டுவிட்டது. அவர்களுக்கு உள்ள அரசியல் மற்றும் பண பலம் காரணமாக எதிர் நடவடிக்கை எதுவும் சாத்தியப்படவில்லை. இருந்தாலும், McDonalds – க்கு எதிராக பலர் வழக்குப் போடுவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காவிற்கு எல்லா விஷயத்திலும் பட்டால்தான் புத்தி வருகிறது!

உள்ளூர் நெருக்கடி மற்றும் உலகமயமாக்கல் காரணமாக இந்த குளிர்பான நிறுவனங்கள் இந்தியா போன்ற ஏமாளி நாடுகள் பக்கம் வருகின்றன. பழய சாதத்தை அழகாக பொட்டலம் போட்டு அதில் அமெரிக்க கொடி மற்றும் ‘Made in the USA ‘ என்று பொறித்தால், போட்டி போட்டுக்கொண்டு பெருமையுடன் வாங்கும் நமது இந்தியர்கள்தான் அவர்களின் இலக்கு.

இந்நிலையில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. கேரளாவில் உள்ள பளாச்சிமடா என்ற கிராம பஞ்சாயத்து, ஒரு மிகப்பெரிய குளிர்பான நிறுவனத்துக்கு உரிமம் புதுப்பிக்க மறுத்துவிட்டது! அதற்க்குக் காரணம், அளவுக்கு மீறி அந்த நிறுவனம் அந்த கிராமப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சியதுதான். என்ன ஒரு கொடுமை, நீரை உறிஞ்சி விஷம் தயாரிக்கிறார்கள்! ஆனால். அந்த நிறுவனமோ தன் பணபலத்தாலோ வேறு எதுவாலோ தமக்கு சாதகமான தீர்ப்பைப் பெற முயற்சி செய்துகொண்டிருக்கிறது. அதே சமயத்தில் தமிழக சிவகங்கை போன்ற இடங்களில் மேலும் தனது தொழிற்சாலைகளைக் கட்ட திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது! மேலும் சகாய விலையில் சாகும் மருந்து அளிக்கும் திட்டமோ என்னவோ!

கண்மூடித்தனமாக மேலை நாட்டு உணவு மற்றும் குளிர்பான வகைகளை வாங்கும் நாம், சற்று சிந்திப்போம். வருங்கால சந்ததியினர் வளமான வாழ்வு வாழ முடிந்தவரை இயற்கை

உணவு முறையை பின்பற்றுவோம்.

தஞ்சாவூரான்.

—-

thanjai_raja2004@yahoo.com

Series Navigation

தஞ்சாவூரான்

தஞ்சாவூரான்