மெய்மையின் மயக்கம் – 1

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

சோதிப் பிரகாசம்


(ஜெயமோகனின் கடிதம் பற்றிய ஒரு விமர்சனத் தொடர்)

‘சிந்து நதியின் மிசை நிலவினிலே

சேர நல் நாட்டு இளம் பெண்களுடனே

சுந்தரத் தெலுங்கினில் பாட்டு இசைத்தே

தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம் ‘

என்று கவிதை பாடுகிறார் பாரதியார்!

ஒரியா நாட்டுப் பெண்களுடனோ அல்லது வங்காள நாட்டுப் பெண்களுடனோ, ஹிந்தி மொழியிலோ அல்லது மார்வாரி மொழியிலோ பாட்டினை இசைத்துக் கொண்டு விளையாடி வந்திடாமல், மலையாள நாட்டுப் பெண்களுடன் தெலுங்கு மொழியில், அதுவும் சுந்தரத் தெலுங்கு மொழியில் பாட்டுப் பாடிக் கொண்டு, காவேரி நதியில் அல்லாமல் சிந்து நதியில் நாம் விளையாடி வந்திட வேண்டும் என்று எதற்காகப் பாரதியார் கனவு கண்டார் என்று ஒரு கேள்வியை மட்டும் நாம் கேட்டு வைப்போம் என்றால், பல் வேறு தரப்பினரிடம் இருந்தும் பல் வேறு வகையான பதில்கள் புறப்பட்டு வந்து நமது அறியாமையை அகற்றி அறிவு ஒளியினை நமது மூளைகளில் ஏற்றி வைத்து விடும் என்பதில் அணு அளவும் நமக்கு ஐயம் இல்லை.

வடக்கும் தெற்கும் இணைந்து ஒருமைப் பட்டு விட்ட ஓர் இந்திய ஒன்றியத்தினை அன்றே பாரதியார் கனவு கண்டு கொண்டு வந்து இருந்தார் என்று ஒரு தரப்பினர் வாதிடலாம்; தென் நாட்டுத் திரவிடர்தம் நாகரிகம்தான் சிந்து வெளி நாகரிகம் என்பதைத்தான் தென் திரவிடத்துப் பெண்களின் மூலமும் மொழிகளின் மூலமும் நமக்கு விளக்கிடற்குப் பாரதியார் முற்படுகிறார் என்று வேறு ஒரு தரப்பினர் வாதிடலாம்.

ஜெய மோகனின் அளவு கோல்கள்

இம் மாதிரியான கேள்வி-பதில்களால் தெளிவு பெற்று விடுகின்ற ஒரு சிலர், பல் வேறு வகையான நேருரைகளை (தீசிஸ்) எழுதி, ஆய்வுப் பட்டங்களைப் பெற்று, ‘முனைவர்கள் ‘ என்று தங்களைப் பெருமைப் படுத்திக் கொள்ளலாம்; அவர்களைச் சுட்டிக் காட்டி, கவிதையின் பெருமிதத்தினைப் பாரீர்! என்று ஜெய மோகனும் மகிழ்ந்து கொள்ளலாம்!

ஒரு வேளை, ‘கோடிக் கணக்கில் ‘ பணம் வைத்து இருப்பவர்களும் ‘உச்சிப் பதவிகளில் ‘ அமர்ந்து இருப்பவர்களும் (அன்றாடம் காய்ச்சிகள் ஜெய மோகனை மன்னிப்பார்களாக!) இவரது பெருமிதத்தினைக் கவனித்திட நேர்ந்து விடும் என்றால், இமய மலையின் உச்சிக்கு ஓடிச் சென்று, ரஜனி காந்தின் பாறையினை விடவும் உயரமான ஒரு பாறையில் ஏறி அமர்ந்து கொண்டு, நடிப்புத் தனமான ரஜனி காந்தின் தவத்தினை விடவும் மேலான ஒரு கதைத் தனமான கலைத் தவத்தில் ஜெய மோகன் ஈடு பட்டும் விடலாம்!

சில ஆண்டுகளுக்கு முன்னர் கருணா நிதியார் பறை சாற்றிட வில்லையா— ‘புகழின் உச்சியினை ‘ வைர முத்து எய்தி விட்டார் என்று ?

புகழின் உச்சியினை ஏற்கனவே சென்று அடைந்து, அங்கே ஒரு கொட்டகையினை போட்டுக் கொண்டு (சாமானியர் என்பதால்), முத் தமிழ் முதல் ஐந் தமிழ் வரையிலான அறிஞர் பெரு மக்கள் கை கட்டி நின்று கொண்டு இருக்க, எத் திசையும் புகழ் மணக்க, அவ் உச்சியில் ஏற்கனவே வாழ்ந்து கொண்டு வருகிறாராம் கருணா நிதியார்! எனவேதான், மார்புடன் ஆரத் தழுவி உச்சி மோந்து வைர முத்துவை அவர் வரவேற்கிறாராம்!

கதைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் இன்ன பிறருக்கும் உரிய இந்தப் பெருமிதம், ஓர் உச்சிக் கதைஞரான ஜெய மோகனுக்கு மட்டும் இல்லாமல் போய் விடுமா, என்ன ? கதை-கவிதைகளுக்காகக் கோடிக் கணக்கில் பணத்தினை அரசாங்கங்கள் செலவு அழிக்கின்றனவாம்! உச்சிப் பதவியில் அமர்ந்து இருக்கின்ற ‘கலாம் ‘ கூட ஜெய மோகனின் கதையினைப் படிக்கின்றாராம்!

இப்படி, கதை-கவிதைகளின் தரத்தினைத் தீர்மானிக்கின்ற ஜெய மோகனின் அளவு கோல், கேவலம், பணத்திலும் பதவியிலும் அல்லவா, ஒளிந்து கொண்டு கிடக்கிறது! எனினும், இது பணத் தனமா ? கலைத் தனமா ? கதை-கவிதைத் தனமா ? அல்லது துரைத் தனமா ? என்பதுதான் நமக்குப் புரிய வில்லை.

சரி, அது போகட்டும்! என்று எண்ணிப் பக்கத்து வீட்டுச் சிறுவனிடம் ‘உச்சியின் உயரம் ‘ பற்றிக் கேட்டால் விழுந்து விழுந்து அவன் சிரிக்கிறான்—உச்சிக்கு ஏது உயரம் என்று! ஓர் உயரத்திற்கு மேல் போய் விட்டால் அங்கே உச்சமும் இல்லை; நீச்சமும் இல்லை, நெட்டையும் இல்லை; குட்டையும் இல்லை, மேடும் இல்லை; பள்ளமும் இல்லை என்று விளக்கம் அளித்திடவும் அவன் முன் வருகிறான். பாரதியாருக்கு நாம் வருவோம்.

எதுகையும் மோனையும்

‘சிந்து நதியில் ‘ என்று இல்லாமல் ‘கங்கை நதியில் ‘ என்று தமது கவிதையினைப் பாரதியார் தொடங்கி இருந்தார் என்றால், எப்படி அந்தக் கவிதை வடிக்கப் பட்டு இருந்து இருக்கும் என்று நாம் எண்ணிப் பார்ப்பதில் ஈண்டு தவறு ஒன்றும் இல்லை; இப்படித்தான் அந்தக் கவிதை இருந்து இருக்கவும் கூடும்:

கங்கை நதியின் மிசை நிலவினிலே

கன்னட நாட்டு இளம் பெண்களுடனே

மங்கலத் தெலுங்கினில் பாட்டு இசைத்தே

மரக் கலம் ஓட்டி விளையாடி வருவோம்!

ஆனால் ஏன் ?

ஏனென்றால், ‘சி ‘ந்து என்னும் சீருக்குச் ‘சே ‘ர என்பது மோனை; ‘க ‘ங்கை என்னும் சீருக்கோ ‘க ‘ன்னட என்பது மோனை! இது போல, சி ‘ந் ‘து என்னும் சீருக்குச் சு ‘ந் ‘தர என்பது எதுகை; க ‘ங் ‘கை என்னும் சீருக்கோ ம ‘ங் ‘கல என்பது எதுகை!

இப்படி, எதுகை-மோனைகளின் சித்து விளையாட்டுகளினால் பின்னப் பட்டு வெளி வருபவைதாம் ‘யாப்பு ‘ முறையான கவிதைகள்! இத் தகு ‘தொழில் நுட்ப ‘க் கவிதைகளில் வெளிப் படுத்தப் படுகின்ற ‘கருத்து நுட்பங்களோ ‘ தற்செயல் ஆனவை!

இதனால்தான், மிகவும் வினயமாகக் கலைஞர்களை யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சாக்ரட்டிஸ் கூறி இருந்தார் போலும்—ப்ளேட்டோ கூறுகிறார்.

இனி, ஜெய மோகனது மடலின் தொடக்கத்திற்கு நாம் வருவோம்.

(தொடரும்)

sothipiragasam@lycos.com

Series Navigation