மெய்மையின் மயக்கம்-29

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

சோதிப் பிரகாசம்


(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து…)

மனத்தின் விடுதலை: அதிகாரம்-11:

(1) மனத்தின் ஆன்மிக நிலை

தனி மனிதர்கள் என்றாலும் சரி அல்லது குடும்பங்கள் என்றாலும் சரி, ‘வருமானம் ‘ எதுவும் இல்லாமல் யாராலும் இன்று உயிர் வாழ்ந்திட முடியாது என்பது அனைவரும் அறிந்தது.

கூலியாகவோ, ஆதாயமாகவோ, ஊதியமாகவோ, அல்லது வேறு ஏதேனும் ஒரு வரும்படியாகவோ மட்டும்தான் இந்த வருமானம் என்பது இருந்திடவும் முடியும்.

இந்த வருமானத்தைச் செலவிட்டு உயிர் வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை, உறையுள் மற்றும் பிற வசதிகளை மனிதர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.

எனவே, இந்த வருமானத்தை ஈட்டுவதற்கு மனிதர்கள் மேற்கொள்ளுகின்ற ‘நடவடிக்கைகளிலும் ‘ அந்த வருமானத்தைச் செலவிட்டு மனிதர்கள் நடத்துகின்ற ‘வாழ்க்கை விதங்களிலும் ‘ மனிதர்களின் திண்மையான உணர்மை மற்றும் நோக்கங்களை, அதாவது, திண்மையான மனித இயல்பினை, நேரடியாக அவர்கள் அனுபவித்துத் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஏனென்றால், தனக்கு என்றும் தமக்கு என்றும் வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்காகத் தங்களுக்குள் மனிதர்கள் போட்டுக் கொள்ளுகின்ற போட்டிகளும் சண்டைகளும்—-வளர்த்துக் கொள்ளுகின்ற பகைமைகளும் பொறாமைகளும்—-ஏற்படுத்திக் கொள்கின்ற கூட்டணிகளும் தீட்டிக் கொள்கின்ற திட்டங்களும்—-மனிதர்களின் அனுபவத்தில் நேரடியாகத் தட்டுப் பட்டுக் கிடக்கின்ற மெய்மைகள் ஆகும்.

ஆனால், இந்த நுண்மையான மனித உணர்மை மற்றும் நோக்கத்தை, அதாவது, ‘நுண்மையான மனித இயல்பினை ‘, தங்கள் அனுபவ வாழ்க்கையில் நேரடியாக மனிதர்கள் கண்டு கொள்ள முடிவது இல்லை.

ஏனென்றால், நுண்மையான மனித இயல்பு என்பது உள் வயமாக ஒடுங்கிப் போன நோக்கம் மற்றும் உணர்மையே அன்றி, வெளி வயமான செயற்பாடுகளின் மூலம் மெய்மைப் படுத்திக் கொள்ளக் கூடிய நோக்கம் மற்றும் உணர்மை அல்ல.

சொல்லப் போனால், நேரடியாக மெய்மைப் படுத்தப் பட முடியாத மனித இயல்புதான்

—-திண்மை நிலையில் ‘அயன்மையாக ‘ மட்டும் ‘மெய்மைப் படுத்தப் பட்டு ‘க் கிடக்கின்ற மனித இயல்பின் ‘மிச்சமான ‘ ஓர் உள்-உணர்மைதான்—-நுண்மையான மனித இயல்பு என்பதும் ஆகும்.

எனவே, நுண்மையான மனித இயல்பு என்பது, திண்மையான செயற்பாடுகளின் மூலம் அனுபவ முறையாக வெளிப் படுத்தப் படுவதற்கு இந்த முதலாண்மைச் சமுதாயத்தில் வாய்ப்பு எதுவும் இல்லை.

அதாவது, ஓர் உள்-உணர்மையாக மட்டும்தான் மனிதர்களின் உள்ளங்களில் நுண்மையான மனித இயல்பினால் இன்று ஊடாடி நின்றிட முடிகிறது.

இந்த ‘நுண்மையான மனித உணர்மை ‘யின் ஒரு கூறுதான் ‘ஆன்மிக உணர்மை ‘ என்பது ஆகும்.

முதலாவதாக, மனிதர்கள் ‘உணர்மையான உயிரிகள் ‘; எதனையும் அறிந்து கொள்ளாமல் எந்தச் செயலிலும் அவர்கள் ஈடு படுவது இல்லை.

இரண்டாவதாக, மனிதர்கள் ‘உழைக்கின்ற உயிரிகள் ‘; இயற்கைக்கும் தங்களுக்கும் இடையே உள்ள உறவில் உழைப்பினை இடைப் படுத்தி உற்பத்தியில் அவர்கள் ஈடு படுகிறார்கள்.

மூன்றாவதாக, மனிதர்கள் ‘சமுதாய உயிரிகள் ‘; தனி ஒரு மனிதனாக நின்று—-தன்னம் தனியாக நின்று—-அவர்களால் உயிர் வாழ்ந்திட முடியாது என்பதால், பிற மனிதர்களுடன் அவர்கள் உறவு வைத்துக் கொள்கிறார்கள்.

அப்படி என்றால், ஒருவரை ஒருவர் ‘அறிந்து ‘ வைத்துக் கொண்டுதான்—-தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுகின்ற வகையில்தான்—-ஒருவரோடு ஒருவர் ‘உறவு ‘ கொண்டு மனிதர்கள் ‘உழைத்து ‘க் கொண்டு வருகிறார்கள் என்பது தெளிவு.

எனவே, ஒரு மனிதனின் தேவையை இன்னொரு மனிதன் நிறைவேற்றி வைக்கின்ற—-ஒருவருக்கு ஒருவர் தங்கள் தேவைகளை மனிதர்கள் பரிமாறிக் கொள்கின்ற—-ஒரு நிகழ்வுதான்—- ‘தேவைகளின் பரிமாற்றம் ‘தான்—- ‘உறவு ‘ என்பது ஆகும்.

இப்படி, மற்றவர்களை அறிவதன் மூலம் தன்னை மனிதன் அறிந்து கொள்ளுகிறான்; மற்றவர்களுக்காக உழைப்பதன் மூலம் தனக்காக அவன் உழைத்துக் கொள்ளுகிறான்; மற்றவர்களுடன் உறவு கொள்வதன் மூலம் தனக்கான உறவுகளை அவன் தேடியும் கொள்ளுகிறான்.

அதாவது, மற்றவர்களைப் புரிந்து கொள்வதும் மற்றவர்களை வாழ வைப்பதும் மற்றவர்களுடன் உறவு கொள்வதும், தன்னை மனிதன் புரிந்து கொள்வதற்கும் தான் வாழ்வதற்கும் தான் உறவாடிக் கொள்வதற்கும் அவசியமான முன்-நிலவரங்கள் என்பது தெளிவு.

இப்படித்தான், ஒருவர் மேல் ஒருவர் மனிதர்கள் அக்கறை காட்டுகிறார்கள்; அன்பு

செலுத்துகிறார்கள்; ஒருவருடன் ஒருவர் பின்னிப் பிணைக்கப் படுகிறார்கள்.

எனவே, ஒருவர் மீது ஒருவர் மனிதர்கள் அக்கறை காட்டுவதும் ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்துவதும் ஒருவர் நன்மைக்காக ஒருவர் உழைப்பதும் ஒருவர் இன்பத்தில் ஒருவர் மகிழ்வதும் ஒருவர் துன்பத்தில் ஒருவர் கவல்வதும் மனித இயல்பான பான்மைகள் என்பது தெளிவு.

இந்தப் பான்மைகளின்—-பாங்குகளின்—-மொத்தத்தைதான் ‘மனித நேயம் ‘ என்று நாம் அழைக்கிறோம்.

ஆக, ‘மனித இயல்பு ‘ என்பது ‘மனித நேயமான இயல்பு ‘ என்பது தெளிவு.

மனிதர்களின் அனைத்துச் சமுதாய உறவுகளிலும், ‘மனித நேயமான இந்த இயல்பு ‘ வெளிப் படுத்தப் பட்டு ‘மெய்மை ‘ப் படுத்தப் பட வேண்டும் என்பதுதான் மனித இனத்தின் பொதுப் படையான ‘எதிர் பார்ப்பு ‘ம் ஆகும்.

ஆனால், இந்த முதலாண்மைச் சமுதாயத்திலோ மனித இயல்பான சமுதாய வாழ்க்கை என்பது முரண் பட்டுக் கிடக்கின்ற தனி மனிதர்களின் வாழ்க்கையாக—-தனித் தனிக் குடும்பங்களின் வாழ்க்கையாக—-இன்று தனிமைப் பட்டுக் கிடக்கிறது.

அதாவது, ஒருவரின் உயர்ச்சி இன்னொருவரின் தாழ்ச்சி என—-ஒருவரின் இன்பம் இன்னொருவரின் துன்பம் என—-ஒருவரின் நட்பு இன்னொருவரின் பகைமை என—-பலவாறாக முரண் பட்டுக் கிடக்கின்ற சூழ் நிலைகளின் இடையேதான் மனிதர்களின் சமுதாய வாழ்க்கை இன்று நடை பெற்றுக் கொண்டு வருகிறது.

இப்படி, மனித நேயம் நிறைந்த இயல்பான மனிதர்கள், உண்மத்தில், பகைவர்களாக அல்லது அக்கறை இல்லாதவர்களாக அல்லது அறிந்து கொள்ள விரும்பாதவர்களாக

ஒருவரை ஒருவர் இன்று எதிர் கொள்ளுகிறார்கள்.

ஓர் எடுத்துக் காட்டாக, ‘பெற்றால்தான் பிள்ளையா ? ‘ என்று எதிர்க் கேள்வி கேட்கின்ற மனித நேயமான மனிதர்கள், ‘பெற்றால்தான் பிள்ளை! ‘ என்று சொந்தப் பிள்ளைகளின் மேல் மட்டும்தான் பாசம் காட்டுகிறார்கள்.

ஆக, ‘மனித நேயம் ‘ என்பது ஒருவரை ஒருவர் பகைவர்களாகவும் அக்கறை இல்லாதவர்களாகவும் அயலவர்களாகவும் மனிதர்கள் எதிர் கொள்ளுகின்ற சூழ் நிலைகளின் இடையே இன்று ‘ஒடுங்கிக் கிடக்கிறது ‘ என்பது தெளிவு.

எனினும், மனிதர்கள் அன்பானவர்கள்; அன்பினில் அழகையும் இனிமையையும் காண்பவர்கள்; எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள். ஆனால், உண்மமான மெய்மை வாழ்க்கையில் இது முடிவது இல்லை.

அப்படி என்றால், மனித நேயம் இல்லாதவர்கள் என்று மனிதர்களை நாம் கூறி விட முடியுமா ? என்றால் முடியாது. அதே நேரத்தில், மனித நேயத்தை அவர்களிடம் திண்மையாக இன்று நாம் காண முடிகிறதா ? என்றால் இல்லை.

ஏனென்றால், மனித இயல்பான ஒரு வாழ்க்கையினை மனிதர்கள் இன்று வாழ்ந்து கொண்டு வர வில்லை; மனித இயல்பிற்கு அயன்மையான ஒரு வாழ்க்கையினைத்தான் மனிதர்கள் இன்று வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.

இப்படி, ‘மனித இயல்பு ‘ என்பது இன்று இல்லாமல் போய் விட வில்லை என்ற போதிலும், திண்மையாக அது வெளிப் படுத்தப் படுவது இல்லை என்பதால், உள்ளடங்கிப் போய் உள்முகமாக ‘நுண்மைப் பட்டு விட்ட ஓர் இயல்பு ‘ என்று அதனை நாம் கொள்கிறோம். இந்த ‘நுண்மையான மனித இயல்பின் தனி மனித உணர்மை ‘தான் ‘ஆன்மா ‘ என்பது ஆகும்.

எனவே, ஆன்மா என்பது மனிதனின் சொந்த இயல்பே ஒழிய விண்ணில் இருந்து வந்து மனிதனைப் பற்றிக் கொண்டு இருக்கின்ற ஒரு கற்பனைக் கடவுளின் இயல்பு அல்ல.

திண்மை நிலையில், ‘தான் உண்டு, தன் குடும்பம் உண்டு ‘, என்று தன்னலக் காரனாக வாழ்ந்து கொண்டு வருகின்ற மனிதன், நுண்மை நிலையில் எல்லோரையும் நேசிக்கிறான்; எல்லோருக்காகவும் வாழுகிறான்; எல்லோருக்காகவும் அழுகிறான். இதுதான் ஆன்மிகம் என்பதும் ஆகும்.

அப்படி என்றால், ஆன்மிக நிலையில் மனிதன் நல்லவன்; அன்பானவன்; கருணை நிறைந்தவன்; மனித நேயம் மிக்கவன்! ஆனால், உண்மமான திண்மை நிலையிலோ, அவன் தன் நலக் காரன்; ஈவிரக்கம் இல்லாதவன்; என்பதுதான் உண்மை!

ஏனென்றால், திண்மையான வாழ்க்கையில் தனது இயல்புக்கு அயன்மையான—-அதற்கு நேர் எதிரான—-ஒரு வாழ்க்கையினைத்தான் மனிதன் இன்று வாழ்ந்து கொண்டு வருகிறான்.

அப்படி என்றால், ‘நுண்மைப் பட்டுப் போன மனித இயல்பான சமுதாய உணர்மைதான்

—-தனி மனித உணர்மைதான்—- ‘ஆன்மிக உணர்மை ‘ என்பது தெளிவு. ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளும் இது அடங்கிக் கிடக்கிறது—- ‘நுண்மையான மனித இயல்பின் தனி மனித உணர்மை ‘யாக!

இந்தத் தனி மனித ஆன்மாக்களின் மொத்தத்தைதான் ஒரு பேரான்மாவாக—-இறைமையாக—-அவன் கருத்தில் கொள்கிறான்.

(2) மனத்தின் இறைமை நிலை

முதலாண்மை உற்பத்தி என்பது ஆதாயம் மற்றும் கூலி ஆகிய இரு வேறு நோக்கங்களின் ஒன்றிப்பில் நடை பெறுகின்ற ஓர் உற்பத்தி என்பதை நாம் பார்த்தோம்.

அப்படி என்றால், மனித இயல்பான ஒன்று, தனது இயல்பினில் நின்று திரிந்து, அயன்மைப் பட்டுக் கிடக்கிறது என்று பொருள்; எனவே, நுண்மை என்றும் திண்மை என்றும் வேறு பட்டு அது கிடக்கிறது என்று பொருள்! அதே நேரத்தில், கூலி என்றும் ஆதாயம் என்றும் திண்மை நிலையில் இரண்டாகப் பிளவு பட்டும் அது கிடக்கிறது.

இப்படி, திண்மை நிலையில் இரண்டாகப் பிளவு பட்டுக் கிடக்கின்ற மனித மனம், அதன் நுண்மை நிலையில் மட்டும் பிளவு படாமல் இருந்திட முடியுமா ?

நுண்மை நிலையில் இப்படிப் பிளவு பட்டுக் கிடக்கின்ற மனித மனத்தின்—-நுண்மையான மனித மனத்தின்—-ஒரு கூறு ‘ஆன்மம் ‘, அல்லது ஆன்மா என்றால், அதன் மற்றும் ஒரு கூறுதான் ‘இறைமை ‘ என்பது ஆகும்.

கூலி என்பதும் ஆதாயம் என்பதும் முரண் பட்ட இரு வேறு ‘நலன்கள் ‘ என்பது நமக்குத் தெரியும்.

சமுதாயச் செல்வத்தின் ஒரு பகுதிதான் கூலி என்ற போதிலும், அது வழங்கப் பட்ட உடன் வாழ்க்கைச் சாதனங்களாக அது மாற்றம் அடைந்து விடுகிறது. எனவே, கூலி என்பது முற்றிலும் தனி மனிதர்களின் நலன் பற்றியது—-தனி மனிதத் தன்மை வாய்ந்தது

—-என்பது தெளிவு.

ஆனால் ஆதாயம் என்பதோ, முற்றிலும் தனி மனிதத் தன்மை வாய்ந்தது அல்ல. ஏனென்றால், ஆதாயம் முழுவதும் அப்படியே வாழ்க்கைச் சாதனங்களாக மாற்றம் அடைந்து விடுவது இல்லை. தமது வாழ்க்கைச் சாதனங்களுக்காக முதலாளிகள் பயன் படுத்திக் கொள்கின்ற ஒரு சிறிய பகுதியைத் தவிர, பிற அனைத்து ஆதாயமும் அப்படியே முதலுடன் சேர்த்துக் கொள்ளப் பட்டு விடுகிறது. இதனால்தான், தொடர்ந்தால் போல் முதல் குவிக்கப் பட்டும் வருகிறது.

அதாவது, ‘முதல்—-ஆதாயம்—-அதிக முதல் ‘ என்பதுதான் முதலின் நிலைநிற்பு விதம் ஆகும். தொடர்ந்தால் போல் அளவில் அதிகப் பட்டு வராத முதல், ஒரு முதலாகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்வது முடியாது. எனவே, ஆதாயத்தின் மூலம், ‘தனக்காக-தான் ‘ என்கின்ற நிலையில்—- ‘முதலுக்காக முதல் ‘ என்கின்ற நிலையில்—-முதல் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது எனலாம்.

இப்படி, தொடர்ந்து முதல் குவிக்கப் பட்டு வருகின்ற காரணத்தினால்தான், தொழிலைத் தொடர்ந்து விரிவு படுத்தி, உற்பத்தித் திறல்களைத் தொடர்ந்து முதலாளிகளால் வளர்த்துக் கொண்டு வந்திடவும் முடிகிறது. எனவே, ஆதாயம் என்பது வெறுமனே ‘தனி மனித நலன் ‘ பற்றியது மட்டும் அல்ல; ‘சமுதாய நலன் ‘ பற்றியதும் ஆகும்.

ஆக, கூலி என்பது தனி மனிதர்களின் நலனை மட்டும் மறு நிகர்க்கிறது என்றால், ஆதாயம் என்பது சமுதாய நலனை மறு நிகர்க்கிறது என்பது தெளிவு.

இதனால்தான், ஆதாயக் குட்டி போடுகின்ற முதலின் சமுதாயமாக—-முதலாண்மைச் சமுதாயமாக—-இந்தச் சமுதாயம் கருதவும் படுகிறது.

இப்படி, ‘தனி மனிதர் நலன் ‘ எனவும் ‘சமுதாய நலன் ‘ எனவும், ‘உற்பத்தி நலன் ‘ என்பது திண்மை நிலையில் பிளவு பட்டுக் கிடப்பதைப் போல, ‘தனி மனித மனம் ‘ எனவும் ‘சமுதாய மனம் ‘ எனவும், மனித மனமும் நுண்மை நிலையில் இன்று பிளவு பட்டுக் கிடக்கிறது.

இந்த ‘நுண்மையான தனி மனித மனம் ‘தான் ஆன்மா என்றால், ‘நுண்மையான சமுதாய மனம் ‘தான் இறைமை ஆகும்.

சரியாகச் சொல்வது என்றால், ‘தனி மனிதர்களின் சமுதாய உணர்மை ‘தான் ‘ஆன்மிக உணர்மை ‘ என்றால், மனிதத்தின்—-மனித இனத்தின்—-அனைத்து மனிதர்களினதும்—-தனி மனிதர் பற்றிய சமுதாயத்தின் உணர்மைதான் ‘இறைமை உணர்மை ‘ ஆகும்; அதாவது, ‘சமுதாயத்தின் தனி மனித உணர்மை ‘!

தனி மனிதர்களின் உறவுதான்—-உறவுகளின் தொகுப்புதான்—-சமுதாயம் என்பது உண்மைதான். அதே நேரத்தில், தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையே ஒரு முரண்பாடு உருவாகி நிற்கிறது என்பதும் உண்மை.

இதனால்தான், தனி மனிதர்களின் உறவுகளால் ஆன சமுதாயம், மனிதர்களுக்கும் அப்பால் பட்டுப் போய் விட்ட ஒரு திறலாக அவர்களுக்குத் தோற்றம் அளிக்கிறது.

அதாவது, தனி மனிதர்கள்தாம் சமுதாயம் என்ற போதிலும், அவர்களின் ‘சமுதாயத் தன்மை ‘ என்பது, அவர்களை எல்லாம் விட்டு விலகி நிற்கின்ற தனி ஒரு திறலாக அவர்களுக்குத் தோற்றம் அளிக்கிறது.

எனினும், தனி மனிதர்கள் இல்லாமல் சமுதாயம் இல்லை; சமுதாயம் இல்லாமல் தனி மனிதர்களின் உறவுகளும் இல்லை.

மற்றவர்களை அறிவதன் மூலம் தன்னை மனிதன் அறிந்து கொள்கிறான்; மற்றவர்களுக்காக உழைப்பதன் மூலம் தனக்காக அவன் உழைத்துக் கொள்கிறான்; மற்றவர்களுடன் உறவு கொள்வதன் மூலம் தனக்கான உறவுகளை அவன் தேடிக் கொள்கிறான்; என்று எல்லாம் முன்னர் நாம் கூறியது உண்மைதான்.

கூடவே, மற்றவர்களைத் தான் அறிகின்ற அதே நேரத்தில், மற்றவர்களும் தன்னை அறிந்திட வேண்டும் என்றும் மற்றவர்களுக்காகத் தான் உழைக்கின்ற அதே நேரத்தில், மற்றவர்களும் தனக்காக உழைத்திட வேண்டும் என்றும் மற்றவர்களுடன் தான் உறவாடுகின்ற அதே நேரத்தில், மற்றவர்களும் தன்னுடன் உறவாட வேண்டும் என்றும் மனிதன் எதிர் பார்க்கிறான், அதாவது, இறைஞ்சுகிறான்.

இந்த இறைஞ்சுதல் என்பது, ஒவ்வொரு மனிதனையும் பற்றிய மற்றவர்களின் சமுதாய உணர்மையாக—-தனி மனிதர்களைப் பற்றிய ‘சமுதாயத்தின் உணர்மை ‘யாக—-மனித இனத்தின் சமுதாய உணர்மையாக—-ஒவ்வொரு மனிதனும் ‘எதிர் பார்க்கின்ற ‘ ஓர் உணர்மையின் ‘விளைவு ‘ ஆகும். இதுதான் ‘இறைமை உணர்மை ‘ என்பது.

அதாவது, ஆன்மிக நிலை என்பது ‘தனி மனிதனின் சமுதாய உணர்மை ‘ என்றால், இறைமை நிலை என்பது ‘சமுதாயத்தின் தனி மனித உணர்மை ‘ ஆகும்.

ஆக, ஆன்மிக நிலையும் இறைமை நிலையும் இரண்டறக் கலந்த ஒரு நிலைதான் மனத்தின் நுண்மை நிலை என்பதும் ஆன்மிக உணர்மையும் இறைமை உணர்மையும் இரண்டறக் கலந்த ஓர் உணர்மைதான் நுண்மையான மனித உணர்மை என்பதும் தெளிவு.

‘தூய ஞான நாட்டம் பெற்ற பின் யானும்,

நின் பெருந் தன்மையும் கண்டேன், காண்டலும்,

‘என்னை ‘யும் கண்டேன்; ‘பிறரை ‘யும் கண்டேன்; ‘

என்று பட்டினத்து அடிகள் கூறியதற்கு, நுண்மையான மனித உணர்மையில், அதன் ஆன்மிக நிலையையும் இறைமை நிலையையும் தமது ‘ஞானக் கண் ‘ணால் ஒரு-சேர அவர் கண்டதுதான் காரணம்.

ஆன்மிக நிலையில் ‘மற்றவர்களை ‘ நேசிக்கின்ற மனிதன், மற்றவர்களும் இறைமை நிலையில் ‘தன்னை ‘ நேசிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறான்.

ஆன்மிக நிலையில் ‘மற்றவர்களுக்காக ‘ இரங்குகின்ற மனிதன், மற்றவர் அனைவரும் இறைமை நிலையில் ‘தனக்காக ‘ இரங்கிட வேண்டும் என்று இறைஞ்சுகிறான்.

ஆன்மிக நிலையில் ‘மற்றவர்களுக்காக ‘ அழுகின்ற மனிதன், மற்றவர்களும் இறைமை நிலையில் ‘தனக்காக ‘ அழுதிட வேண்டும் என்று எண்ணுகிறான்.

ஆன்மிக நிலையில் ‘மற்றவர்களுக்கு ‘ உதவிடத் துடிக்கின்ற மனிதன், மற்றவர்களும் இறைமை நிலையில் ‘தனக்கு ‘ உதவிட முன் வந்திட வேண்டும் என்று ஏங்குகிறான்.

ஏனென்றால், தன்னில் பிறரையும் பிறரில் தன்னையும், ஒவ்வொருவரும் கொண்டு வாழ்கின்ற ஒரு சமுதாய வாழ்க்கைதான் தனி மனிதனின் வாழ்க்கை.

அதாவது, தன்னையும் பிறரையும், ஒவ்வொரு மனிதனும், தனக்கு உள்ளே கொண்டு இருக்கின்ற ஒரு சமுதாய வாழ்க்கைதான் தனி மனிதர்களின் வாழ்க்கை ஆகும்.

எனவேதான், ஆன்மிக நிலையில் இறைமை நிலையும் இறைமை நிலையில் ஆன்மிக நிலையும் இரண்டறக் கலந்து மயங்கிக் கிடக்கின்றன.

மனிதனுக்கு வெளியே கோவிலில் அல்ல, மனிதனுக்கு உள்ளேயே இறைமை இருக்கிறது என்று ஞானியர் கூறி வந்ததற்கு இதுதான் காரணம் போலும்!

எனினும், எல்லா மனிதர்களாலும் இந்த ‘இறைமை உணர்மை ‘யினை ‘எளிதில் ‘ வளர்த்துக் கொண்டு விட முடிவது இல்லை.

ஏனென்றால், ஆன்மிக உணர்மை என்பது ஒவ்வொரு மனிதனும் மற்றவர் மீது கொண்டு ‘இருக்கின்ற ‘ ஒரு ‘தனி மனித உணர்மை ‘ என்றால், இறைமை உணர்மை என்பதோ ஒவ்வொரு தனி மனிதனையும் பற்றிச் சமுதாயம் முழுமையும் கொண்டு ‘இருக்க வேண்டிய ‘ ஒரு ‘கூட்டு மனித உணர்மை ‘ ஆகும்.

இதனால்தான், புரிந்து கொள்ள முடியாத ஒரு மாயப் பொருளாகவும் விடை காண முடியாத ஒரு பரமக் கரசியமாகவும் ஞானக் கண்ணால் மட்டும் காண முடிகின்ற ஒரு பரம் பொருளாகவும், ஏன், ஓர் அப்பாலைப் பொருளாகவும் கூட, இது கருதப் பட்டு வருகிறது.

ஆனால், நுண்மையான மனித இயல்பின் இறைமை உணர்மையாக ஒவ்வொரு மனிதர் இடத்தும் உள்ளடங்கிக் கிடக்கின்ற ஓர் ‘இப்பாலைப் பொருள் ‘தான் இது.

பெற்றால்தான் பிள்ளையா ? என்று, இந்த இறைமை உணர்மை ஒவ்வொரு பிள்ளையின் மீதும் பாசம் காட்டுகிறது; ஒவ்வொருவர் மீதும் அன்பைப் பொழிகிறது; சமுதாயத்தின் சார்பாக நின்று, பிற ஒவ்வொரு மனிதனையும் தன்னைப் போல் நேசிக்கிறது.

சமுதாயப் பணியாளர்களாக, மற்றவர்களுக்காக உழைப்பவர்களாக, தங்களை வளர்த்துக் கொள்ள முயல்கின்ற மனிதர்கள் எல்லாம், இந்த இறைமை உணர்மை மேவி நிற்கின்ற மனிதர்கள்தாம் ஆவர். இதனால்தான், ‘மா பெரும் மனிதர்கள் ‘ என்று இவர்களைச் சமுதாயம் கொண்டாடவும் செய்கிறது.

ஆக, உளதாயும் இலதாயும்—-உண்மையுமாய் இன்மையுமாய்—-இருந்தும் இல்லாமல்—-இருக்கின்ற நுண்மையான மனித இயல்பின், தனி மனித உணர்மை ‘ஆன்மா ‘ என்றால், அதன் சமுதாய உணர்மைதான் ‘இறைமை ‘ என்பது முடிபு.

எனவே, இறைமை உணர்மை என்பது மனிதனின் சொந்த உணர்மையே அன்றி—-மனிதனின் நுண்மையான பண்பே அன்றி—-கற்பனையான ஒரு கடவுளின் குணப் பண்பு அன்று!

(3) கடவுள்

ஆன்மிக உணர்மையும் இறைமை உணர்மையும் ‘கையாலாகாத ‘ உணர்மை நிலைகள் என்பதை அதிகம் நாம் விளக்கிடத் தேவை இல்லை.

ஆன்மிக உணர்மை என்பது தனி ஒரு மனிதன் தனது மனித நேயத்தை மற்றவர் மீது பொழிந்திடத் ‘துடிக்கின்ற ஓர் உணர்மை நிலை ‘யே ஒழிய, மற்றவர் மீது மனித நேயத்தை அவன் ‘உண்மமாக ‘ப் பொழிந்து விடுகின்ற ஒரு ‘மெய்மை நிலை ‘ அல்ல.

இது போல, இறைமை உணர்மை என்பது சமுதாயம் முழுவதுமாகச் சேர்ந்து மனித நேயத்தைத் தன் மீது பொழிந்திட வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனும் இறைஞ்சுகின்ற ஓர் உணர்மை நிலையே ஒழிய, ஒவ்வொரு மனிதன் மீதும் மனித நேயத்தை உண்மமாகச் சமுதாயம் பொழிந்து விடுகின்ற ஒரு மெய்மை நிலை அல்ல.

ஏனென்றால், திண்மை நிலையில் அயன்மையாகிக் கிடக்கின்ற மனித இயல்பின் வெறும் நுண்மையான உணர்மை நிலைகள்தாம் இவை ஆகும்.

தேவைகளின் பரிமாற்றம்தான் உறவு என்பதை முன்னர் நாம் பார்த்தோம்.

இந்த உறவினில் ஊடாடி நிற்கின்ற மனித நேயம் என்பது, ஒருவர் தேவையை மற்றவர் நிறைவேற்றி வைக்கின்ற செயல்களின் மூலமாக மட்டும்தான் வெளிப் படுத்தப் பட முடியும். இப்படிச் செயல்களாக வெளிப் படுத்தப் படாத மனித நேயம், வெறும் ஆசை, அல்லது ‘ஆசி ‘யாக—-வெறும் உள்ளக் கிடக்கையாக—-மட்டும்தான் இருந்திடவும் முடியும்.

உண்மமாக வெளிப் படுத்தப் படாத—-வெறும் ஆசியாக மட்டும் அடங்கிக் கிடக்கின்ற

—-ஒரு நுண்மையான மனித நேயத்தினால் யாருக்காவது எந்தப் பயனாவது ஏற்பட்டு விட முடியுமா ?

அதாவது, இன்றைய முதலாண்மைச் சமுதாயத்தில், முதலாளி வருக்க நலன் என்றும் உழைப்பாளி வருக்க நலன் என்றும் மற்றும் பிற ஊழியர்களின் நலன் என்றும், மனித இயல்பான நலன் என்பது திண்மை நிலையில் அயன்மைப் பட்டுக் கிடக்கிறது.

எனவே,

மனித இயல்பான எந்த ஒரு நலனும்—-

மனித இயல்பான எந்த ஒரு நேயமும்—-

மனித இயல்பான எந்த ஒரு நடவடிக்கையும்—-

அதன் திண்மை நிலையில்,

தனித் தனி நலன்களையும் மீறி—-

குழுக்களின் நேயத்தையும் மீறி—-

வருக்க நடவடிக்கைகளையும் மீறி—-

வெளிப் படுத்தப் பட்டு விட முடியாது.

அப்படி என்றால், நுண்மைப் பட்டு ஒடுங்கிக் கிடப்பதைத் தவிர, மனித இயல்பு அயன்மை இல்லாமல் வெளிப் படுத்தப் படுவதற்கு உரிய எந்த ஒரு வாய்ப்பும் இந்தச் சமுதாயத்தில் இல்லை என்று பொருள்.

இப்படி, அயன்மைப்பாடு ஏதும் இன்றி உண்மமாக வெளிப் படுத்தப் பட முடியாத இந்த மனித இயல்பினைக் கற்பனையாகவேனும் வெளிப் படுத்திக் கொள்ளுகின்ற வகையில், மனிதர்கள் படைத்துக் கொண்டு இருக்கின்ற ஒரு கற்பனையான உருவம்தான் ‘கடவுள் ‘ என்பது.

அதாவது, ‘மனித இயல்பின் ‘ கற்பனையான வடிவம்தான்—- ‘உருவப்பாடு ‘தான்—- ‘கடவுள் ‘ என்பது.

திண்மை நிலையில் அயன்மைப் பட்டுப் போன மனித இயல்பின் மெய்மையான வடிவம் ‘வருக்கம் ‘ என்றால், நுண்மை நிலையில் ஒடுங்கிப் போன மனித இயல்பின் கருத்து வயமான தனி மனித வடிவம் ‘ஆன்மா ‘ என்றால், இந்த நுண்மையான மனித இயல்பின் சமுதாய வடிவம் ‘இறைமை ‘ என்றால், ‘முழுமையான மனித இயல்பின் ‘ அயன்மை இல்லாத ‘கற்பனை வடிவம் ‘தான் ‘கடவுள் ‘ ஆகும்.

எனவேதான், மனித இயல்பின்—-மனித நேயத்தின்—-அனைத்துக் குண நலன்களும் இந்தக் கடவுளுக்குக் கற்பிக்கப் பட்டு வருகின்றன. அன்பானவராகவும் கருணை நிறைந்தவராகவும் ‘உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் ‘ களைபவராகவும் கடவுள் கருதப் பட்டும் வருகிறார்.

ஆக, ‘முழுமையான ‘ மனித இயல்பின் ‘கற்பனையான ‘ உருவப்பாடுதான் கடவுளே ஒழிய, ஆதாரம் எதுவும் இல்லாமல் விண்ணிலே ஊடாடி நிற்கின்ற வெறும் கற்பனையின் விளைவு அல்ல. அயன்மையான சமுதாய நிலவரங்களின் இடையே இருந்து ‘அவசியமானதாக ‘ எழுந்து வந்து இருக்கின்ற ஓர் உருவப்பாடு இது!

இதனால்தான், இந்தச் சமுதாயத்தில் காண முடியாத மனித நேயத்தைக் கடவுளில் மனிதர்களால் காண முடிகிறது; இந்தச் சமுதாயத்தில் கிடைத்திட முடியாத உதவிகளைக் கடவுளிடம் அவர்களால் வேண்டிட முடிகிறது; இந்தச் சமுதாயத்தில் பெற்றிட முடியாத ஆறுதலைக் கடவுளிடம் அவர்களால் பெற்றிடவும் முடிகிறது.

ஏனென்றால், மனிதர்களின் சமுதாய உறவுகளில் ஊடாடி நிற்கின்ற வெறுமையை—-வெட்ட வெளியை—-பாழை—-கற்பனையாக நிரப்பிக் கொள்வதற்காக, மனிதர்கள் படைத்துக் கொண்டு இருக்கின்ற ஒரு கற்பனையான உருவப்பாடுதான் கடவுள், அல்லது, இறைவன் ஆகும்.

அனுபவ அறிவு, முரண் இயக்க அறிவு, காரண அறிவு, என அவரவர் அறிவின் வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மனிதரும் இந்தக் கடவுளைக் கருத்துப் படுத்திக் கொள்கிறார்கள், அவ்வளவுதான்!

அதாவது, முழுமையான மனித இயல்பின் வடிவத்தில் கடவுளைக் காண்கின்ற அனுபவ அறிவு, ஒரு தந்தையாக—-ஒரு மனித உருவமாக—-கடவுளைக் கருத்துப் படுத்திக் கொள்கிறது; நுண்மையான மனித இயல்பின் வடிவத்தில் கடவுளைக் காண்கின்ற காரண அறிவு, ஒரு பரம் பொருளாக—-ஓர் அருவமாக—-கடவுளைக் கருத்தில் கொள்கிறது; திண்மையான மனித இயல்பிற்கும் நுண்மையான மனித இயல்பிற்கும் இடையில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கின்ற மனித இயல்பின் வடிவத்தில் கடவுளைக் காண்கின்ற முரணியக்க அறிவோ, உண்டு என்றால் உண்டு; இல்லை என்றால் இல்லை; என்று கடவுளைக் கருதுகிறது.

எனினும், அயன்மைப் பாட்டிற்கு அவசியம் இல்லாத சமுதாயச் சூழ் நிலைகள் உருவாகின்ற பொழுது, ஆன்மா, இறைமை, கடவுள், முதலிய அனைத்தும் மனித மனங்களில் இருந்து முற்றிலும் மறைந்து ஒழிந்து விடும் என்பது மட்டும் உறுதி.

ஆக, மனிதனின் படைப்புதான் கடவுளே அன்றி, கடவுளின் படைப்பு மனிதன் அல்ல என்பதும் மத உலகம் என்பது மனிதனின் உலகமே அன்றிக் கடவுளின் உலகம் அன்று என்பதும் தெளிவு.

மேலும், ஆன்மா என்பதும் இறைமை என்பதும் மனிதனின் சொந்த இயல்பான பண்புகளே ஒழிய, கடவுளின் குணப் பண்புகள் அல்ல என்பதும் தெளிவு.

இனி, கதை-கவிதைகளின் சுவனிப்பிற்கு நாம் வருவோம்.

4-11-2004

(தொடரும்)

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்