மெய்மையின் மயக்கம்-12 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

சோதிப் பிரகாசம்


அழகின் சுவனிப்பு

அழகினை யாரும் வெறுப்பது இல்லை; அதனைச் சுவனிக்காதவர்களும் உலகில் யாரும் இல்லை. ‘வயிறே வாழ்க்கை ‘ என்று வாழ்ந்து கொண்டு வருபவர்களாக ஜெய மோகன் கருதுகின்ற மனிதர்கள் கூட அழகினைச் சுவனித்துக் கொண்டுதான் வருகிறார்கள்.

ஜெய காந்தனின் கதை-வாசகர்களை விட ஜெய மோகனின் கதை-வாசகர்கள் எண்ணிக்கையில் குறைவு ஆனவர்களாக இருக்கலாம்; ஆனால், ஜெய காந்தனின் கதை வாசகர்களை விட பிற கதைஞர்களின் வாசகர்கள்தாம் நாட்டில் அதிகம். இனி, எந்தக் கதையையும் கவிதையையும் படிக்காதவர்கள் கூட திரைப் படங்களின் மூலமும் பாடல்களின் மூலமும் கதை-கவிதைகள் தருகின்ற போதைப் பயனை நுகர்ந்து கொண்டுதான் வருகிறார்கள்.

அன்றைய தெருக் கூத்துகளின் இன்றைய வளர்ச்சிதான் திரைக் கூத்து என்ற போதிலும், தெரு முனை நாடகங்களை நடத்திப் புரட்சி புரிந்து கொண்டு வருபவர்கள் இன்றும் நம் இடையே இல்லையா, என்ன! நண்பர் கோ. ராஜாராமிற்கு இது பற்றி மிகவும் நன்றாகத் தெரிந்து இருப்பதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது.

நாம் கேட்டால், தொன்மத்தைத் தேடுகிறோம் என்பார்கள்; நாட்டார் வழக்கு இயல் என்று புதுமை பேசுவார்கள்; எதற்காக என்றால், எதை எதையோ சொல்லி, ஏற்றுக் கொள்ளப் பட்ட உண்மைகளாக அவற்றை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள்; இப்படி ஏற்றுக் கொள்ளப் பட்டு வந்து இருக்கின்ற உண்மைகளுக்கோ நாட்டில் ஒரு கணக்கு-வழக்கு இல்லை!

எப்படியும், டாக்டர் தாயம்மாள் அறவாணனைப் போல் அவ்வையாரை ஆராய்ச்சி செய்து கொண்டு இருப்பதை விட, கவிஞர் இன்குலாப்பைப் போல் அவ்வையாரை நாடகம் ஆக்கிக் காட்டி விடுவது மூளை நோகாத ஒரு புரட்சிகர நடவடிக்கைதானே!

ஆக, கதை-கவிதைகளைச் சுவனித்துப் பார்த்திடாதவர்கள் யாரும் இல்லை என்பது போல, அழகினைச் சுவனித்துப் பார்த்திடாதவர்களும் யாரும் இல்லை என்பது தெளிவு.

அழகின் சிரிப்பு

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர்கள் ஒரு புறம் இருக்கட்டும்; ஏழைகளே இல்லாமல் போய் விடுகின்ற பொழுது வேறு யாரிடம் போய் இறைவனை இவர்கள் காண்பார்கள் என்னும் கேள்வியும் ஒரு புறம் இருக்கட்டும்! ஆனால், அழகின் சிரிப்பில் மயங்காமல் யாரும் இருப்பது இல்லை; அவரவர் வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ப இந்த மயக்கத்தின் தரமும் மாறு படுகிறது, அவ்வளவுதான்!

மாற்றிக் கொள்வதற்கு வேறு சேலை இல்லாதவர்கள் கூட சேலையின் கரைக் கட்டில் கவனம் செலுத்தாமல் இருப்பது இல்லை. தோட்டத்துப் பூவில் இல்லை என்ற போதிலும் காட்டுப் பூக்களில்—-மலர்க் காட்சிகளுக்குச் சென்றிட முடிய வில்லை என்ற போதிலும் தலையில் சூடிடக் கிடைக்கின்ற மலர்ச் சரங்களில்—-ஒவ்வொருவரும் அழகினைக் கண்டு கொண்டும் சுவனித்துக் கொண்டும்தான் வருகிறார்கள்.

இதில், வசதியானவர்களின் சுவனிப்புச் சற்று ஆடம்பரம் ஆனது; காசு-பணம் செலவு செய்து நுகர்ந்து பார்ப்பது! ஆனால், அறிவாளர்களாகவும் கதை-கவிதைகளில் அறிவாண்மை யாளர்களாகவும் திகழ்ந்து கொண்டு வருபவர்களின் சுவனிப்போ முற்றிலும் மாறுபாடு ஆனது; மாய்மை ஆனது! மண்ணில் தவழ்ந்து கொண்டு வந்து இவர்களைப் பார்த்து அழகு சிரிப்பது இல்லை; விடுதலையாக விண்ணில் பறந்து கொண்டு வந்த வண்ணம் இவர்களிடம் அது பேசுகிறது; இவர்களைப் பார்த்துச் சிரிக்கிறது; இவர்கள் பெருமைப் பட்டுக் கொள்கின்ற வகையில் இவர்களை ஆட் கொண்டும் விடுகிறது.

அழகும் பணமும்

பணத்தின் தோற்றம், நிலைநிற்பு, வளர்ச்சி, அழிவு, ஆகிய வற்றையும் பணத்தின் ஆழ-அகலங்களையும் மனிதர்கள் கண்டு பிடித்து இருப்பது பெருமைக்கு உரியது என்றால், அந்தப் பெருமை அனைத்தும் கார்ல் மார்க்சைத்தான் சேரும். அதுதான் அவரது முதலாவது சிறப்பு என்பது எனது கருத்து.

சரக்குகளது மதிப்பின் பொதுப்படையான வடிவம்தான் பணம் என்று கூறுகின்ற அவர், விடுதலை ஆனது என்றும் இந்த வடிவத்தினைச் சித்தரிக்கிறார். எனினும், பணம் என்பது ஒரு வடிவம் மட்டும்தான் ஆகும்; அதே நேரத்தில், விடுதலை ஆனதும் ஆகும்.

இந்த வடிவத்தின் விடுதலையினை லெனின் சித்தரிக்கின்ற விதமோ முற்றிலும் புதுமை ஆனது! ஏனென்றால், புரட்சிகரம் ஆனது என்று இதனை அவர் சித்தரிக்கிறார்; தனி மனித விடுதலையின் அடித் தளமாகவும் இதனை அவர் கருதுகிறார். காரண அறிவிற்கும் ஞானத்திற்கும் மட்டும் இன்றி, மாய்மையான சிந்தனைகளுக்கும் ஊற்றாக விளங்குவது பணம்தான் என்பது எனது கருத்து.

ஆக, மதிப்பின் வடிவம் மட்டும்தான் பணம் என்பது ஆகும்; ஆனால், அனுபவ அறிவிற்கோ முற்றிலும் அது விடுதலை ஆனது; தன்னில் பிறந்து, தன்னுள் உயிர்த்து, தானாக நிலைநின்று, மனிதர்களின் ஆராதனையைப் பெற்றுக் கொண்டு வருவது!

இந்த மாய்மையின் விளைவுதான் கடவுள்; மனிதர்களை விட்டு விலகி விண்ணில் நிலைத்து இருந்து, மனிதர்களைக் கண்காணித்துக் கொண்டு வருகின்ற ஒரு கடவுள்; மனிதர்களின் ஆராதனைக்கு உரிமை கோருகின்ற ஒரு கடவுள்! எனினும், ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு கடவுள்!

ஆனால், ஆதி சங்கரரோ கடவுளை நமது மனத்திற்குள் கொண்டு வந்து சேர்த்து விடுகிறார்; இதன் மூலம், மனிதர்களை விட்டு ஒதுங்கி நிற்கின்ற கடவுள்களை மறுத்தும் விடுகிறார். ஒரு வேளை, விடுதலை ஆனதாக நமக்குத் தெரிகின்ற பணம் என்பது சரக்குகளின் மதிப்பு மட்டுதான் ஆகும் என்னும் உண்மைதான் அவரது சிந்தனையினை இயக்கிக் கொண்டு வந்து இருக்க வேண்டுமோ ? இறைமை என்பதும் ஆன்மிகம் என்பதும் மனிதனின் சொந்தக் குணப் பண்புகள்தாமே! (இது பற்றித் தெரிந்து கொள்வதற்கு விரும்புபவர்கள் ‘மனத்தின் விடுதலை ‘யைப் படித்துப் பார்த்துக் கொள்ளலாம்.)

எப்படியும், பணம் இல்லாமல் முழு-முதல் கடவுள் இல்லை என்பது உறுதி. கடவுளைப் போலத்தான் அழகும் சில சமயங்களில் விடுதலை பெற்று விடுகிறது; ஆராதிக்கப் பட்டும் வருகிறது!

பாமரர்களைப் பொறுத்த வரை, அழகு என்பது பருப் பொருள்களினோடு ஒட்டிக் கொண்டு கிடப்பது; எனவே, அவற்றை உடைமை ஆக்கிக் கொள்வதற்கு அவர்கள் முயல்கிறார்கள். உடைமை ஆக்கிக் கொள்வதற்கு முடியாத பொருள்களைப் பற்றி அவர்கள் கவலைப் படுவது இல்லை; ‘கிட்டாதாயின் வெட்டென மற ‘ என்பது மிகவும் நன்றாகவே அவர்களுக்குத் தெரியும்.

ஆனால், இந்த அறிவாண்மை யாளர்கள் இருக்கிறார்களே, இவர்கள் வேற்றுமை ஆனவர்கள்; வேற்றுமை ஆனவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்வதற்கு இடை விடாமல் முயல்பவர்கள்; ஏனென்றால், தலையில் கொம்பு முளைத்து இருப்பவர்கள் இவர்கள்!

இந்த அறிவாளர்களைப் பொறுத்த வரை, அழகு என்பது இவர்களின் மனத்தில் இருப்பது; இவர்களின் பெருந்தன்மையினைப் பொறுத்தது; எல்லாப் பொருள்களிலும் இவர்களால் கண்டிடவும் முடிவது—-மலம் அள்ளுபவனைக் கூட கடவுளாகக் காண முடிகின்ற ஜெய காந்தனின் பான்மையைப் போல!

திண்ணியம் என்று ஒரு கிராமத்தில் ஆதித் திரவிடர் ஒருவரின் வாயில் திணிக்கப் பட்ட மலம், நம் அனைவரின் வாயிலும் திணிக்கப் பட்ட மலம்; ஜெய காந்தனின் வாயிலும் திணிக்கப் பட்ட மலம்; ஒவ்வொருவரது தொண்டைக் குழியிலும் ஒவ்வொரு கணமும் ஒட்டிக் கொண்டு இருக்கின்ற மலம்; கன்ம மலம், மாய மலம், ஆணவ மலம், ஆகிய மும் மலங்களுடன் சேர்ந்து விட்ட சாதி மலம்; என்று நான் பேசினால், ஜெய காந்தன் கூறுகிறார்—-மலம் அள்ளுபவனும் கடவுள்தான் என்று!

அப்படி என்றால், அவன் மனிதன் இல்லையா ? மனிதர்களின் பட்டியலில் இருந்து மலம் அள்ளுபவர்களை நீங்கள் அகற்றி விட்டார்களா ?

வளர்ச்சி அடைந்து உள்ள முதலாண்மை நாடுகளில்—-மனிதர்களை மனிதர்களாக மதிக்கின்ற வேற்று நாடுகளில்—-மலம் அள்ளுகின்ற வேலைகளை மிகவும் எளிதாக எந்திரங்கள் செய்து விடுகின்றனவே, ஆனால், இந்தியத் துணைக் கண்டத்தில் மட்டும் மலத்தை மனிதர்கள் அள்ளிட வேண்டிய அவலம் நீடித்துக் கொண்டு வருகிறதே, இந்தச் சாதி மலத்தினை உடனடியாக நாம் அகற்றி ஆக வேண்டும் என்று பேசுவதற்குத் தோன்றிட வில்லை ஜெய காந்தனுக்கு! இத்தனை ஆண்டுக் கால எழுத்துப் பணியில் அவர் அடைந்து கொண்டு வந்து இருக்கின்ற ஒரு தெளிவு போலும் இது!

எனவேதான், மலம் அள்ளுபவர்களைக் கடவுள்கள் ஆக்கி மனிதர்களின் பட்டியலில் இருந்து அவர்களை அவர் ஒதுக்கித் தள்ளி விடுகிறார்.

இப்படி, எங்கும் எதிலும் காண முடிகின்ற கடவுளைப் போல, எங்கும் எதிலும் அழகினை நமது அறிவாண்மை யாளர்கள் கண்டு விடுகிறார்கள்; ஏனென்றால், அழகிற்கு அடிப்படையே இவர்களின் பான்மைதான் என்று இவர்கள் முடிவு கட்டி வைத்து இருக்கிறார்கள்.

அழகின் ஆராதனை

மிகவும் தீவிரமாக ‘முற்போக்கு ‘க் கதைஞர்களும் ‘பிற்போக்கு ‘க் கதைஞர்களும் மோதிக் கொண்டு வந்து இருந்த காலத்தில்—-சுமாராக 1970களில்—- ‘கலைஞர் ‘ இளவேனில் எழுதினார்—- ‘பெண்ணே எச்சரிக்கையாக இரு; உன் குளியல் அறைக்கு வெளியே ஒரு ‘சவுந்தர்ய உபாசகன் ‘ ஒளிந்து கொண்டு இருக்கிறான் ‘ என்று!

குளித்து முடித்து விட்டு ஈரம் ததும்பக் குளியல் அறையில் இருந்து வெளியே வருகின்ற பெண்ணின் அழகினைச் சிறப்பித்தோ அல்லது ஆராதித்தோ யாரோ ஒரு கதைஞர் எதையோ குறிப்பிட்டு இருந்தாராம்; அவரைக் கிண்டல் செய்து இளவேனில் எழுதி இருந்த ஒரு துணுக்கு இது! அழகின் ஆராதனை என்பதும் இதுதான் போலும்!

நக்சல்பாரி இயக்கத்தின் எழுச்சிக் காலத்தில், 1971-இல் பல நாட்கள், கோவையில் நண்பர் அறிவன் அய்யா சாமியின் பாது காப்பில் தலை மறைவாக நான் அலைந்து கொண்டு இருந்தேன். அறிவனின் ஆசிரியர் என்கின்ற முறையிலும் நக்சல்பாரி இயக்கத்தின் ஆதரவாளர் என்கின்ற வகையிலும், கோவை ஞானி அவர்களைச் சந்திக்கின்ற வாய்ப்பு அப் பொழுது எனக்குக் கிட்டியது; ஒரு முறை என்னிடம் பத்து ரூபாயை அவர் தந்ததும் எனக்கு நினைவு இருக்கிறது.

கோவை ஞானியின் கையில் எப்பொழுதும் ஏதேனும் ஓர் ஆங்கிலப் புத்தகம் இருக்கும்; மார்க்சியம் பற்றியதாகவும் அது இருக்கும். ஆனால், ருஷ்யாக் காரர்கள் வெளியிட்டுக் கொண்டு வந்து இருந்த விலை-மலிவான நூல்களாக அவை இருந்தது இல்லை.

என்னைப் பற்றிப் பர-பரப்பாக அவர் கிசு-கிசுத்துக் கொண்டதை அறிவனிடம் கிண்டல் அடிப்பதற்கு நான் தவறியது இல்லை என்ற போதிலும்—- அதில் தெரிந்த :கார்க்கியின் ‘தாய் ‘ நாயகர்களது கதைத் தனம் (இது போன்ற ஒரு கதைத் தனத்தினை எனது நண்பர் சொ. கண்ணனிடமும் நான் கண்டது உண்டு.) எனக்கு வேடிக்கையாகத்தான் தெரிந்தது என்ற போதிலும்—-நன்றாக மார்க்சியம் தெரிந்தவராக அவர் இருந்திட வேண்டும் என்று அப் பொழுது நான் கருதினேன்.

எனக்கு மார்க்சியம் தெரியாது என்பது அப் பொழுது எனக்குத் தெரியாது என்பது வேறு ஒரு விசயம்! செயல் ‘வீரர் ‘களுக்கு ‘அறிவு ‘ தேவைப் படுவது இல்லையோ என்பது இன்னும் ஒரு விசயம்! தலைவரின் கட்டளைகளைத் தலை மேல் சுமந்து கொண்டு செயல் படுபவன்தான் புரட்சி வீரன் என்கின்ற பொழுது, தலைவரின் மண்டையில் மட்டும் அறிவு அடை பட்டுக் கிடந்து விட்டால் போதாதா, என்ன!

எனவே, மார்க்சியத்தை நான் கற்றிடத் தொடங்கிய காலத்தில், அதாவது, முதலாண்மைச் சமுதாயத்தைப் புரிந்து கொள்வதற்கு நான் தொடங்கி இருந்த காலத்தில்—-1976 வாக்கில்—-எனது புதிய புரிதல்களைக் கோவை ஞானியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வத்தில் கோவைக்குச் சென்று அறிவனை அழைத்துக் கொண்டு அவரை நான் சந்தித்தேன்.

காற்றோட்டமாக வெளியே எங்கேனும் அமர்ந்து பேசிடக் கருதி அவரது வீட்டை விட்டு நாங்கள் கிளம்பினோம். தனது ஒளி மழையினை எங்கள் மேல் மட்டும் வானத்து நிலவு பொழிந்து கொண்டு இருந்தது போல கோவை ஞானிக்குத் தோன்றியதோ என்னவோ, நிலவைப் பற்றி அவர் பேசிடத் தொடங்கினார்.

‘நிலவைப் பார்த்தீர்களா ? எவ்வளவு அழகு! ‘

‘ஆமாம், சார்! நன்றாக இருக்கிறது. ‘

‘என்ன, இப்படிச் சொல்லி விட்டார்கள்! எவ்…வளவு அழகு! ‘

‘நன்றாகத்தான் இருக்கிறது சார். ‘

என் காதில் முணு-முணுத்தார் அறிவன்—-அவர் ஒரு ‘சவுந்தர்ய உபாசகர் ‘ என்று!

கோவை ஞானியோ விடுவதாக இல்லை; அவரைப் போலவே நானும் நிலவை ஆராதித்தே தீர வேண்டும் என்று அவர் எதிர் பார்த்தார்.

நிலவைக் காட்டியே குழந்தைகளுக்குச் சோறு ஊட்டி விடுவது நம் ஊர்த் தாய்மார்களின் வழக்கம். குழந்தைகள் முதல் முதியவர் வரை நிலவைச் சுவனித்துப் பார்க்காதவர்கள் யாரும் இருந்திடவும் முடியாது.

21-22 வயதில் இந்த நிலவைப் பற்றிப் பல கவிதைகளை எழுதுவதற்கு நான் முயன்று இருக்கிறேன்—-பாரதியாரின் கண்ணன் பாட்டுப் பாணியில்! (எங்கள் தொழிற் சாலையில் என்னுடன் பணியாற்றிக் கொண்டு வந்த ப. நடராசன் அவர்களின் கவிதைகளை நான் படித்துப் பார்த்த பொழுதுதான் எனக்குத் தெரிந்தது—-நான் எழுதி இருந்தவை வெறும் கட-முடாக்கள் என்று! யாப்பு இலக்கணத்தையும் புணர்ப்பு இலக்கணத்தையும் நான் கற்றுக் கொள்வதற்குக் காரணமாக இருந்தவரும் அவர்தாம்!)

இந்த வாழ்க்கையின் மீதும் சமுதாயத்தின் மீதும் அவ் அப்போது எனக்குக் கோவம் வரும்; மக்கள் மடையர்கள் என்று துக்ளக் சோ-வைப் போல சில சமயங்களில் எனக்கு நினைக்கத் தோன்றும்—-நான் மட்டும்தான் அறிஞன் என்பது மாதிரி! மனிதர்களுக்கு அறிவே தேவை இல்லை என்று சில சமயங்களில் எனக்குத் தோன்றும்—-தீர்ப்புக் கூறுவதற்கு என்றே பிறந்து வந்து விட்ட ஒரு தீர்ப்பாளன் மாதிரி!

இப்படிக் குழப்பமும் கோவமும் வருகின்ற நேரங்களில் எல்லாம் நிலவைத் தேடி அடையாறு கடற்கரைக்கு நான் சென்று விடுவேன்—-இரவு பத்து மணிக்கு மேல்!

கடல் நீரில் நடந்து கொண்டே சத்தம் போட்டு இந்தச் சமுதாயத்தை நான் திட்டுவேன். கேட்பதற்கு யாரும் அங்கே இல்லை என்பது எனக்குத் தெரியும். இறுதியில், இடுப்பு அளவு தண்ணீருக்குள் இறங்கி நின்று கொண்டு நிலவையும் கடல் அலைகளையும் அந்த அலைகளின் மேல் நெளிந்து ஒளிர்கின்ற நிலவின் ஒளியையும் கண்டு நான் சுவனிப்பேன். கொஞ்சம் நாள் இந்தத் திருட்டுத் தனம் தொடர்ந்தது.

ஒரு நாள், கடலுக்குள் நான் நின்று கொண்டு இருந்ததை வழிப்போக்கர் ஒருவர் பார்த்து விட்டார்; தம்பீ, தம்பீ! என்று பதறிப் போய் என்னை அவர் அழைத்தார். எனக்குப் புரிந்து விட்டது. அவர் அருகே நான் சென்றதும் எனது கைகளைப் பற்றிக் கொண்டு அவர் கேட்டார்—-தற் கொலை செய்து கொள்கின்ற அளவுக்கு இந்த வயதில் உனக்கு அப்படி என்ன பிரச்சனை என்று!

நீரில் நின்று நிலவைப் பார்ப்பதற்காகக் கடலுக்குள் நான் சென்றேன் என்று அவரிடம் நான் கூறினேன். அவருக்குப் புரிய வில்லை. மிகவும் பெருமையுடன் அவருக்கு நான் விளக்கம் அளித்தேன்—-நான் கவிதை எழுதுவேன் என்று! என்னை அவர் அடிக்காததுதான் குறை! எனது கையைப் பற்றிக் கொண்டே நான் தங்கி இருந்த அறை வரைக்கும் வந்து என்னை விட்டு விட்டு அவர் சென்றார். விடை பெறும் போது அவருக்குப் புரிந்து விட்டது—-நான் பொய் சொல்ல வில்லை என்று!

அதன் பிறகு இரவு நேரங்களில் கடலுக்குள் நான் சென்றது இல்லை. இந்த நிகழ்ச்சியை அறிவனுடன் பின்னர் நான் பகிர்ந்து கொண்டேன் என்ற போதிலும், கோவை ஞானி அவர்களின் அழகுச் சுவனம் என்னை மலைத்திட வைத்தது.

இந்த நிலவைப் பார்த்ததும் எனக்குத் தோசைதான் நினைவுக்கு வருகிறது; ஒரு தோசை சாப்பிடலாமா ? என்று அவரிடம் நான் கூறினேன்.

கோவை ஞானி நொந்து போய் இருக்க வேண்டும்; தோசை வாங்கித் தருவதற்காக ஓர் உணவு விடுதிக்கு எங்களை அவர் அழைத்துச் சென்றார்.

அழகின் மாய்மை

பணம் என்பது சரக்குகளின் மதிப்பினது வடிவம்; அதன் இருப்பும் வெளிப்பாடும் நமது பான்மையைப் பொறுத்தது அல்ல! சுவை என்பது பருப் பொருள்களின் ஒரு பண்பு; அதன் இருப்பிற்கும் நமது பான்மைக்கும் இடையே தொடர்பு எதுவும் இல்லை.

ஆனால், அழகு என்பது நமது பான்மையினையும் பொறுத்தது! அப்பாலைப் பொருளான ஒரு காட்சியினைப் பற்றியதுதான் அழகு என்ற போதிலும், நமது பான்மை இல்லாமல் அழகு என்பது இல்லை. ஆனால், நமது அறிவாண்மை யாளர்களோ, முற்றிலும் பான்மை வயமான ஒரு பொருளாக அழகினைக் கருத்துப் படுத்திக் கொள்கிறார்கள்.

இதனால், விடுதலையான ஒரு பொருளாக அழகு இவர்களை ஆட் கொள்ளத் தொடங்கி விடுகிறது. இவர்களால் மட்டும் கைப் பற்றிட முடிகின்ற ஒரு மாய்மையான பொருளாக அதனை இவர்கள் கருதிடத் தொடங்குகிறார்கள்; தங்கள் ஆற்றல்களைப் பற்றிய மாய்மைகளையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.

ஜெய மோகனைப் பொறுத்த வரை—-உடைகளின் வண்ணங்களைப் பற்றிதான் அவர் பேசுகிறார் என்கின்ற வரை—-அழகு பற்றிய மாய்மைகளில் அவர் மூழ்கிக் கிடக்கிறார் என்று யாரும் கூறி விட முடியாது என்பது வெளிப்படை!

அதே நேரத்தில், அழகும் சுவனமும் ஒன்று என்றுதான் அவர் கருதிக் கொண்டு வருகிறார் என்கின்ற வகையில், சுவனம் பற்றிய ஒரு மாய்மைக்குள் அவர் மூழ்கிக் கொண்டு வருகிறார்—-நம்மையும் மூழ்கிட வைப்பதற்கு முயல்கிறார்—-என்பதில் நமக்கு ஐயம் எதுவும் இல்லை.

இங்கே, அழகியல் என்றால் என்ன ? மார்க்சியத்தின் அழகு இயல் பற்றிக் கோவை ஞானி பேசுகிறாரே, அது என்ன ? என்னும் கேள்விகள் எழுகின்றன.

19-07-2004

தொடரும்

Series Navigation