மூன்று மணித்துளிகள் – பேரண்டத் துவக்கம்

This entry is part [part not set] of 27 in the series 20050930_Issue

இரா. நாகேஸ்வரன்


—-

வெளியென்று ஒன்றில்லை
வரையறையென்று இல்லைக் காலத்தினுக்கு…
வடிவழகைப் பாடுவோரும்
வானவரில்லையெனக் கூறுவோரும்
வரையறையிலா அண்டம் காண்க மனக்கண்ணுள்…

முக்கால முணர்ந்த முனிவரு மிலர்
முப்பத்து முக்கோடித் தேவரு மிலர்
‘முற்பிறப்பு, பிற்பிறப்பு ‘ சாடுவோரில்லை-இந்த
முழு உலகும் இல்லவே யில்லை..

ஆயினும்..
இருந்தனர், இருந்தன எல்லாமுமே
இருளகற்றும் ஒளிப்பிம்பமாய்!!
வெளியில்லா வெளியில்
ஒளிப்பந்து மட்டுமாய்…

பனிக்குடம் உடைந்ததே போல்
சடுதியில் தெறித்ததென்ன,
சிதறுபொருள், ஒளியினும் விரைவதென்ன..
சிந்தைதம் வேகத்தினும் அதிகமாய்!
சிறுமணித்துவியில் யோசனை தூரங்கள்!!

தெறித்த நொடிப்பொழுது,
தெளிவாக்கிய(து) காலவரையறை;
தெளிந்தோர் எவரோ ?! – ஆயினும்
தெந்திசை, வடதிசை போல்,
திசையொன்று வகுத்தோம் காலத்துக்கும்!!

சிதறிப் போயினவை
சூரியனிலும் பெரியன – அவற்றுள்
சூரியவாயு, நீர்வாயு, கரியுடன்
செம்பு, இரும்பு, காரீயம், தங்கம்
சின்னயிடைவெளியில் சீராக வந்தன!

சுழிகின்ற வழித்திரள்கள்
சுழன்றோடும் சூரியக்குடும்பங்கள்
சூரியத்தலைமையில் சிற்சிறுகோளங்கள்
சூழல் சீர்தொடக்கங்கள் அவ்வவற்றுள்!

மூன்றே நிமிடங்கள்தாம்,
முடியவேண்டும் எல்லாமும்…
-யாரிட்டக் கட்டளையோ ?!-
முனைந்து நடந்தன எல்லாமும்!-இறுதியில்
முக்கால் வீதம்மேல் வெளி,
மிச்சமுள்ள பொருள்தனில் ஒளி!!!

-இரா. நாகேஸ்வரன்
eswar.quanta@gmail.com

Series Navigation

இரா. நாகேஸ்வரன்

இரா. நாகேஸ்வரன்