முள்

This entry is part [part not set] of 8 in the series 20000716_Issue

பாவண்ணன்


கணேசன் அண்ணன் வீட்டுக்குப் போவது என்றாலே எப்போதும் பிரியம்தான் இவனுக்கு.

கணேசன் ஒன்றும் கூடப்பிறந்த அண்ணனோ உறவு ஜனமோ இல்லை அவனுக்கு. எக்ஸ்சேஞ்சில் கூட வேலை செய்பவர். சீனியர். திருவண்ணாமலையிலிருந்து வந்து தங்கிய புதுசில் அண்ணன் அண்ணன் என்று கூப்பிட்டுப் பழக்கம். அதே உறவு முறையில்தான் கணேசன் மனைவி லீலா இவனுக்கு அண்ணியானதும்; குழந்தைகளுக்கு இவன் சித்தப்பாவானதும்.

வாசலில் இறங்கும்போதே இவனைத் தேன்மொழிதான் முதலில் அடையாளம் கண்டு கொள்ளும். ‘அய்…சித்தப்பா வந்தாச்சி ‘ என்று சந்தோஷம் புரள கை நீட்டி ஓடி வரும் போது இவனுக்குள் சந்தோஷமாய் இருக்கும்.

இவனைப் பிடித்த கையோடு விரல் கோர்த்துக் கொண்டு பெரிய மனுஷி ரீதியில் தானே எங்கிருந்தோ கஷ்டப்பட்டு அழைத்து வந்து காண்பிக்கிற தோரணையில் முகத்தில் பெருமிதமும் குதூகலமும் கூத்தாட உள்ளே நுழையும். முதல் கட்டில் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிற அப்பாவைப் பார்த்து ‘அப்பா…சித்தப்பா வந்திருக்கு ‘ என்று இதுதான் அறிமுகப்படுத்தும். அங்கே அம்மா இருந்தால் அம்மாவுக்கும், அப்புறம்தான் கார்த்திக், மாலா, சங்கர் எல்லோரும் இவன் குரலைக் கேட்டதும் மூன்றாம் கட்டிலிருந்து, தோட்டத்திலிருந்து, பக்கத்து வீட்டிலிருந்து என்று ஓடி வருவார்கள். அப்படி வருகிறவர்களிடத்தில் எல்லாம் ‘நான்தான் சித்தப்பாவை மொதல்ல பார்த்தனே ‘ என்று மார்தட்டிக் கொள்வதில் எப்போதும் பெருமைப்படும்.

இந்தச் சமயத்தில் பெரும்பாலும் அண்ணி சம்பாஷணையுள் நுழையும். ‘வா தம்பி ‘ என்று முகம் மலரக் கூப்பிடும். பெரும்பாலும் கையில் ஈரம் துடைத்தபடி அம்பாரமாய்த் துவைத்த துணிகளை முன்னால் குவித்துக் கொண்டு சுருக்கம் நீவி மடித்தபடி, குழம்புக்கு காய்கறி அரிந்தபடிதான் அண்ணியின் இந்த வார்த்தை உதிரும். எந்த நேரமும் அண்ணியைச் சும்மா பார்த்ததில்லை இவன். ஏதாவது வேலை செய்தபடிதான். உடம்பு கொஞ்சம் தாட்டிகமாக லேசாய்க் கருப்பாக இருக்கும். அண்ணியின் உருவம் ஒவ்வொரு சமயமும் இவனுக்குத் தன் அக்காவைத்தான் ஞாபகப்படுத்தும். அக்காவும் தாட்டிகமாய்த்தான் இருப்பாள். ஆனால் அக்கா பெரிய பெண் ஆன கையோடேயே தாட்டிகமாய் இருந்தாள். அண்ணி அப்படி இல்லை என்பதைச் சுவரில் பட்டையாய்க் கருப்பு பிரேம் போட்டு மாட்டியிருந்த அண்ணியின் உருவம் தெரியப்படுத்தும்.

‘இன்னா ஒழுங்கா படிக்கறியா ‘ என்று யாரிடமிருந்தாவது ஆரம்பித்தால் போதும் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லத் தொடங்கும். டிக்டேஷனில் சங்கர் பத்துக்கு நாலு மட்டுமே வாங்கிய கதை. தேன்மொழியின் ‘தாயின் மணிக்கொடி பாரீர் ‘ பாட்டைக் கேட்டு பாட்டு டாச்சர் ப்ரைஸ் கொடுத்தது, கார்த்திக் ஓட்டப் பந்தயத்தில் தோற்றுப் போனது, தண்ணீர் மொண்டு வரும்போது பானையை உடைத்துவிட்டு ஒரு வகுப்பு முழுதும் மாலா வெயிலில் நின்றது-என்று ஒருவர் கதையை ஒருவர் புகார் ரீதியில் சொல்வார்கள். அனைத்தையும் பொறுமையாய்க் கேட்பதில் இவனுக்கு எப்பவும் சந்தோஷம். இவனின் சந்தோஷ ‘உம் ‘ கொட்டுதலே மேலும் மேலும் கதை சொல்ல அவர்களுக்கு உற்சாகத்தைத் தரும்.

இந்த உற்சாகத்தோடேயே இவன் எடுத்துப் போகிற சாக்லெட்டுகள் எல்லோருக்கும் தரப்படும். சாக்லெட் தாள்களில் பொம்மை செய்வதில் இவனுக்கு எப்போதும் தனி இஷ்டம் உண்டு. ஏதோ ஒரு தருணத்தில் செய்து காட்டிய பிடிப்பில் தேன்மொழியும், மாலாவும் எப்போதும் இவனிடத்தில் பொம்மை செய்யச் சொல்வார்கள். கார்த்திக் ஒரு தடவை இவன் செய்கிற விதத்தை உன்னிப்பாய் கவனித்திருந்துவிட்டு அப்புறம் தானே செய்ய ஆரம்பித்து விட்டான். சங்கருக்கு பொம்மை செய்வதில் இஷ்டம் இல்லை. தாள்களை சுருக்கம் நீவிச் சேகரிப்பதில்தான் ஆர்வம் உண்டு. ‘நூறு வரைக்கும் சேகரிக்கப் போகிறேன் ‘ என்று ஒவ்வொரு தரமும் சொல்வான். நூறு சேர்த்து என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியாது. கேட்டால் சிரிப்பான்.

படம்படமாய் சந்தோஷத்தை மனசுள் எழுதி அசைபோட்டுக் கொண்டே கடைத் தெருவைத் தாண்டியாகி விட்டது. இறங்கி சுந்தரம் கடையில் கால் கிலோ சாக்லெட் வாங்கி மடித்துக் கொண்டான். மறுபடியும் சைக்கிளில் ஏறி உட்காரும்போது தெரிந்த ஸ்நேகிதர் ஒருத்தர் வந்தார். ஷேமலாபம் விசாரித்தார். நின்று கொஞ்ச நேரம் பேசிவிட்டு மீண்டும் புறப்பட்டான் இவன். ஆயிற்று, இன்னும் மூண்று தாண்டிச் சந்தில் நுழைந்தால் கணேசன் அண்ணன் வீடு வந்துவிடும்.

இவன் இந்த ஊருக்கு வேலைக்கு வந்து சேருவதற்கு முன்பிருந்தே கணேசன் அண்ணன் இந்த வீட்டில் தான் இருக்கிறார். வாடகை வீடுதான். இவன் இருக்கிற தெருவிலேயே இதைவிட வசதியாய்ப் பெரிசாய் ஒரு வீடு வாடகைக்கு வந்தபோது சொன்னதும் மறுத்துவிட்டார் கணேசன் அண்ணன். அவருக்கு அந்தச் சந்து வீட்டை விட்டு வருவதற்குக் கொஞ்சம் கூட இஷ்டம் இருப்பதில்லை. இந்த வீடுதான் ஆகி வருகிறது என்று தட்டிக் கழித்து விடுவார். ஆனால் அண்ணிக்கு வசதியாய் வேறு வீடு பார்க்க ஆசை உண்டு. ஒருமுறை அண்ணி கேலியாய்ச் சொன்ன ஞாபகம் ‘கல்யாணம் ஆன புதுசுல, நீ எதுக்கும் கவலைப்படாத லீலா, நா ஒரு மாளிகையே ஒனக்காகப் புடிச்சிவச்சிருக்கேன்னு இட்டாந்தாரு. நானும் ஆகான்னு சந்தோஷத்தோட இங்க வந்து பார்த்தா எலி வளை தா புடிச்சி வச்சிருக்காரு. ‘

இதைச் சொல்லி முடித்து விழுந்து விழுந்து சிரித்த அண்ணியின் முகம் இன்னும் ஞாபகம் உள்ளது. கன்னச் சதை மேலேறி கண் உள்ளே இருக்கிற மாதிரி செருகி சாப்பாடு புரையேறி சிரிப்பு நிற்கவே ஐந்து நிமிஷம் ஆயிற்று அன்று. இந்தத் தமாஷையெல்லாம் கணேசன் அண்ணன் பெரிசாய் எடுத்துக் கொள்வதில்லை. ‘இதுதான் வசதியா இருக்கு ‘ என்ற சிரிப்போடு முடித்துவிடுவார். ஸ்கூல், கடைத்தெரு, டாக்டர் வீடு எல்லாம் இந்த எலி வளைக்குத்தான் சமீபம் என்பது அவர் அபிப்பிராயம்.

தெருவில் சின்னப் பிள்ளைகள் ‘பேபே ‘ பந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். பந்துவீசி ஒருத்தரை இன்னொருத்தர் அடிப்பதில் ஒவ்வொருவருக்கும் சந்தோஷமும் இருந்தது. எவனோ ஒரு பையன் வைத்தகுறி தப்பி இவன் சைக்கிள் ஹேண்ட்பாரில் பட்டு எகிறியது பந்து. பந்து பொறுக்க வந்த பையன் இவனைக் கொஞ்ச நேரம் துயரத்தோடு பார்த்து நின்று தயங்கினான். பந்து சைக்கிளில் பட்டது அப்படி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்கிற மாதிரியும் தனக்கு அதில் எந்தக் கோபமும் எரிச்சலும் இல்லை என்கிற மாதிரியும் சிரித்தான். இவன் சுபாவம் அந்தப் பையனுக்கு வினோதமாய்ப் பட்டிருக்க வேண்டும். முதல் நிமிஷம் தயங்கி அப்புறம் கலவரம் நீங்கியதும் சட்டென்று சிரித்து அன்னியோன்யமானான்.

கணேசன் அண்ணன் மூண்று நாள்களுக்கு முன்பே சொல்லியிருந்தார், நைஜீரியாவிலிருந்து அவர் தம்பி குடும்பம் சகிதம் வந்திருப்பதாக. இவன் அவரைப் பார்த்ததில்லை. அந்தப் புதிய முகங்களை எதிர்கொள்ளப் போகிற கூச்சமும் குறுகுறுப்பும் மனசுக்குள் வீடு நெருங்க நெருங்க ஜாஸ்தியாகிக் கொண்டு இருந்தது. நைஜீரியாவில் ஏதோ ஒரு ஆபீஸராக இருக்கும் அவரும், அவர் மனைவியும் எப்படி இருப்பார்கள் ? இவனை எப்படி எதிர் கொள்வார்கள் ? இவனால் கற்பனை பண்ணிப் பார்க்க முடியவில்லை. கணேசன் அண்ணன் மாதிரியே மெலிதாய் உயரமாய் அவரும் இருப்பாரோ என்னமோ என்று நினைத்தான். அடுத்த க்ஷணமே தனக்குத் தெரிந்து வெளிநாட்டுக்குப்போய் வந்தவர்களில் யாரும் ஒல்லி இல்லை என்பது ஞாபகம் வந்தது. மச்சு வீட்டு கல்யாணி, முறுக்குக்கார சுந்தரம், தனசேகரன், ஷைலஜா, கூடப் படித்த ஸ்டெல்லா யாரும் ஒல்லியாகவே இல்லை. எல்லோரும் அளவுக்கு மீறிய சதையோடுதான். இங்கிருந்து போகும்போது ஒல்லியாய்ப்போன ராஜன்கூட வரும்போது தடியாகத்தான் வந்தான். வெளிநாட்டு வாழ்க்கை, தண்ணீர், சாப்பாட்டு வசதி, சுகம், மனோபாவனையே மனுஷனைத் தடியாக்கி விடுகிறது என்று நினைத்தான் இவன். ஆதலால் கணேசனின் தம்பி எந்த விதத்திலும் மெல்லிசாய் இருக்க வாய்ப்பில்லை என்று திட்டமாய் நம்பினான்.

கணேசன் அண்ணன் குழந்தைகளுக்கு முறையான் உறவு சித்தப்பா அந்த நைஜீரியாக்காரர்தான். ஒரே நேரத்தில் குழந்தைகள் தன்னையும் அவரையும் எப்படி நோக்கும் என்கிற நினைப்புக்கும் இவனிடத்தில் விடை சற்று தயக்கமாய்த்தான் இருந்தது. ரொம்ப நாள் கழித்து வந்திருக்கும் அவரிடத்தில் பிள்ளைகள் பிரியத்தோடு ஒட்டி இவனிடமிருந்து சற்று விலகியிருந்தால் அதைத் தன்னால் எவ்வளவு தூரத்துக்குத் தாங்கிக் கொள்ள முடியும் என்ற யோசனை மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாய்த்தான் இருந்தது.

சற்று நெருக்கத்தில் சைக்கிளை விட்டு இறங்கி நடக்கும்போது வழக்கம் போலவே தேன்மொழிதான் முதலில் பார்த்தது ‘அய்….சித்தப்பா ‘ என்று ஓடோடி வந்தது. அதன் குரலும் முகத்தில் கலப்பில்லாமல் எழுதியிருந்த சந்தோஷமும் இவனுக்குச் சட்டென்று இஷ்டமாயிற்று. தனது கலவரம் வீண் என்கிற யோசனை பலமாகி அந்த க்ஷணமே மனசுக்குள் சந்தோஷம் புரண்டது. அதைப் பார்த்துச் சிரித்தான். இவன் ‘ரீரீரீரீ… ‘ என்று வழக்கமாய் இழுக்கும் குரலோடு அதை அணைத்துக் கொண்டான்.

‘நல்லா இருக்கியா ‘ என்று கேட்ட இவன் கேள்விக்கு ‘ம் ‘ என்று கண்ணை அகட்டி பெரியமனுஷி ரீதியில் சிரித்துத் தலையாட்டியது. சைக்கிளைச் சுவரோரமாய் நிறுத்திப் பூட்டிய இவன் கையை விடுவித்த தென்மொழி மறுபடியும் பிடித்து நடக்கத் தொடங்கியது. ‘நைஜீரியா சித்தப்பா வந்திருக்காரு சித்தப்பா ‘ என்று விஷயம் தெரிவிக்கும் தொனியில் வழக்கமான உற்சாகத்தில் சொன்னது. இவனும் ‘எப்ப வந்தாரு ‘ என்று, குரலை நீட்டி உற்சாகமாய்க் கேட்க ‘முந்தாநேத்து ‘ என்று பதில் சொன்னது அது.

நடையிலேயே பேப்பர் படித்துக் கொண்டிருந்த கணேசன் ‘வாப்பா ‘ என்று சிரிப்போடு கூப்பிட்டார். ‘நேத்தே வருவேண்ணு எதிர்பார்த்தன் ‘ என்ற அவர் கேள்விக்கு ‘கொஞ்சம் வேலயா போச்சி ‘ என்று மெலிசான சங்கடத்தோடு பதில் சொன்னான் இவன். அதற்குள் மற்ற பிள்ளைகள் ‘அய்…சித்தப்பா…சித்தப்பா ‘ என்று ஓடி வந்தன. மாலா அக்கறையோடு பாய் எடுத்துவந்து தர, போட்டு எல்லோருடணுமாக உட்கார்ந்தான் இவன். புதுப் பிரஜையின் வருகையில் தன்னை எதிர்கொள்ளும் பிரியத்தில் துளியும் குறையாத குழந்தைகளின் மனசு இவனுக்கு ரொம்பவும் சந்தோஷம் தருவதாய் இருந்தது. சங்கரைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு தலையைக் கோதி முத்தம் தந்தான். அவன் தலையில் சின்னத் சின்னத் துகள்களாய் மணல் இருந்தது, ‘இன்னாடா தலையில மண்ணு ‘ அவன் மோவாயைத் தூக்கிக் கேட்டான் இவன்.

சங்கரின் பதிலுக்கு முந்திக்கொண்டு மாலாவே ‘கோயிலு இல்ல கோயிலு அங்க மதிலு கட்றதுக்கோசரம் மண்ணு கொட்டி இருக்காங்கள்ல, அங்க போயி குட்டிக் கரணம் போடறாரு. அதான் மண்ணு ‘ என்று சொன்னாள். ‘ஏன்டா குட்டிக்கரணமா போட்ட ‘ என்று சுவாரஸ்யத்தோடு இவன் கேட்க, சங்கர் குதூகலத்தோடு தலையாட்டினான்.

‘ஒனக்கு குட்டிக்கரணம் போடத் தெரியுமா ? ‘

‘ம். ‘

‘நீயே ஜாண் ஒயரம் இல்ல. எப்டிடா போடுவ ? ‘

‘ஓ…ஓணும்னா போட்டுக்காட்டட்டா ? ‘

‘சரி. ‘

பாயிலேயே கொஞ்சம் இடம் பண்ணித்தர இவன் மடியில் இருந்து உற்சாகத்தோடு எழுந்த சங்கர் ‘ரெடி…ஒன் டூ த்ரி ‘ சொல்லி பாயில் தலையை யூன்றிக் குட்டிக் கரணம் போட்டான். பின்னங்கால் இவன் உதட்டில் இடித்தது. புழுதி படிந்த காலின் உரசல் உதட்டின் ஈரத்தில் உப்பு கரிப்பதுபோல இருந்தது.

‘வெரிகுட் பரவாயில்லியே ‘ என்று அவனை மீண்டும் இழுத்து மடியில் உட்கார்த்திக் கொண்டான் இவன், தொடர்ந்து தேன்மொழியும் கார்த்திக்கும் இவன் போன தரம் வந்து போனதற்கு மேல் இந்த முறை வரை கடந்த விஷயங்களையெல்லாம் சுவாரஸ்யத்தோடு ஒருவர் மாற்றி ஒருவர் சொன்னார்கள். அப்போதுதான் ‘வா தம்பி ‘ என்ற குரலோடு லீலா அண்ணி பாத்ரூமில் இருந்து வந்தது.

‘இன்னாங்கண்ணி செளக்கியமா ? ‘

‘ம் சாயங்காலமானா குளிக்கலன்னா ஒரே கசகசங்குது. அதான் குளிச்சிட்டு வரன் ‘ என்று இவனிடம் சொல்லிக் கொண்டே அடுப்படிப் பக்கம் போனாள் அண்ணி.

‘தம்பி இந்நேரம் இங்கதான் இருந்தான். இப்பதா வெளியே கெளம்பிப் போனான் ‘ கணேசன் அண்ணன் சொன்னார்.

‘பரவால்ல. அதுக்கென்ன ? ‘

ஏற்றுக் கொள்ளுதலுடன் கூடிய சின்னச் சிரிப்போடு பதில் சொல்லிவிட்டு மீண்டும் குழந்தைகள் பக்கம் திரும்பினான் இவன். அந்த நேரம்தான் இரண்டாம் கட்டில் கதவைப் பிடித்தபடி மூணு நாலு வயசு மதிக்கத்தக்க ஒரு பையன் நின்றிருப்பதைப் பார்த்தான். வரிவரியாய்க் கோடு போட்ட டா ஷர்ட்டும், கால் சட்டையும் ஷஉவுமே இவன்தான் நைஜீரியா தம்பதிகளின் பிள்ளை என்று சொல்லாமல் சொன்னது. வட்டமான முகத்தோடு சுருள் சுருளாய் அலைகிற தலைமுடியோடு குழந்தை அழகாய் இருந்தது. மெலிசாய்க் குழந்தையைப் பார்த்துச் சிரித்தான் இவன். எவ்வளவு நேரமாய் அது அங்கே நின்று தனது பக்கம் பார்க்கிறதோ என்று நினைத்தபோது இவனுக்கு மனசுக்குள், தப்புச் செய்த பாவனை ஏற்பட்டது. ‘வா…வா ‘ என்று தலையாட்டிக் கூப்பிட்டான். ‘வா ராஜி ‘ என்று தேன்மொழியும் கூப்பிட்டது. கொஞ்சம் தயங்கிய மாதிரி இருந்தது அது. ‘வாடா…சித்தப்பாடா ‘ என்று தேன்மொழியின் இரண்டாம் அழைப்புக்குத் தடையில்லாமல் பிரியத்தோடு இவனைப் பார்த்து நடந்து வந்தது. சிநேகப்பட வைக்கிற அதன் குறுகுறுப் பார்வையும் சிவந்த கன்னங்களும் இவனுக்கு ரொம்பவும் இஷ்டமாய் இருந்தது. அருகில் வந்தவனை அணைத்து முத்தம் தந்து சங்கரோடு ஜோடியாய் மடியிலேயே உட்கார வைத்துக் கொண்டான்.

‘ஒன் பேரின்னா ? ‘

‘ராஜி. ‘

‘வெரிகுட். படிக்கறியா ? ‘

‘ம். ‘

‘இன்னா படிக்கறா ? ‘

‘எல்கேஜி. ‘

‘சாக்லெட் சாப்பிட்றியா ? ‘

‘ம். ‘

கொண்டு வந்த பாக்கெட்டைப் பிரித்துக் கொடுத்தான் இவன். ராஜிக்கு இவனே பிரித்து வாயில் ஊட்டினான். வழக்கம் போலவே மாலா சாக்லெட் தாளில் பொம்மை கேட்க இவன் சங்கரையும், ராஜியையும் கீழே உட்கார வைத்துவிட்டுப் பொம்மை செய்தான்.

‘அம்மா எங்கடா ராஜி ? ‘

‘தூங்கறாங்க ‘

கணேசன் அண்ணன் கேட்டு ராஜி பதில் சொன்ன ஒரு நிமிஷத்துக்கெல்லாம் அறையில் இருந்து ‘ராஜி ‘ என்ற ஒரு குரல் வந்தது. நிச்சயம் அது அண்ணியின் குரல் இல்லை.

கொஞ்சம் ஆண்மை ஏறிய குரல். இந்தக் குரலுக்குச் சொந்தமானவர்தான் ராஜியின் தாயாராக இருக்க வேண்டும் என்று ஊகம் செய்தான் இவன். ஊகம் செய்தது சரி என்கிற மாதிரி தேன்மொழி அவனைப் பார்த்து ‘அம்மா…அம்மாடா ‘ என்று அறையைக் காட்டிச் சைகை செய்தது. சாக்லெட் விழுங்கிய வாய் ஒரு பக்கம் உப்பி இருக்கப் பாயிலிருந்து எழுந்து போனான் ராஜி.

‘ம்…அப்புறம் ‘ என்று சந்தோஷத்தோடு ஏதோ ஒரு விளையாட்டைப் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர ஆசையோடு பேச ஆரம்பித்தவன் அறைக்குள் ராஜியின் அம்மாவுடைய குரலால் தாக்கப்பட்டு நின்றான்.

‘ராஸ்கல்…ஒனக்கு எத்தினி தரம் சொல்றது. இதயெல்லாம் தின்னக்கூடாதுன்னு. புத்தி இல்ல ? மட்டமானதயெல்லாம் தின்னு ஒடம்புக்கு ஏதாச்சும் வந்தா யாரு அவஸ்தைப்படறது. ஒரு தரம் சொன்னா தலையில ஏறரது இல்ல. கழுதக்கு வயசாற மாதிரி நாலு வயசாவுது… ‘

தொடர்ந்து எச்சில் தோய்ந்த சாக்லெட் கதவோரம் விழ ராஜியின் அழுகை கேட்டது. அழுகிறவனை வெளியில் தரதரவென்று இழுத்து வந்த அந்தப் பெண்மணி பாயில் இவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துச் சற்றே கலவரமுற்ற தோரணையில் நின்றாள். தூக்கக் கலக்கமும் எரிச்சலும் அவள் கண்களில் அடர்ந்து இருந்தன. ஏறத்தாழ லீலா அண்ணியைவிடச் சற்றே கூடுதலாய்த் தாட்டிகமான அந்தப் பெண்மணியை இவனால் ஒரு க்ஷணத்துக்கு மேல் பார்க்க முடியாமல் குனிந்து கொண்டான். மனசுக்குள் நினைத்து வந்த சந்தோஷம் எல்லாம் சடசடவென்று முறிகிற மாதிரி இருந்தது.

வலிய வரவழைத்துக் கொண்ட ஒரு சிரிப்போடு சங்கருடன் சுபாவமாய் இருக்க முயற்சி செய்தான். முடியவில்லை. மனசில் துக்கமே புரண்டது. தன் துக்கம் குழந்தைகளுக்கு தோன்றாதபடி மீண்டும் பிரயத்தனப்பட்ட ஒரு புன்னகையோடு ‘சரி…நா வரன் ‘ என்ற உடைந்த குரலில் சொல்லி ஒவ்வொரு குழந்தைக்கும் முத்தமிட்டு எழுந்தான்.

‘யேன் சித்தப்பா…அதுக்குள்ளாற ? ‘ தேன்மொழி கேட்டது.

‘இல்ல கண்ணு. வேல இருக்குது. ‘

திரும்பி கணேசன் அண்ணனைப் பார்த்தான் இவன். ஒன்றும் சொல்ல முடியாத முகபாவனைகளுடன் சங்கடத்துடன் உட்கார்ந்திருந்தார் அவர். இவன் அவரையும் பார்த்து ‘நா வரண்ணே; நாளக்கி எக்ஸேஞ்ல பாப்பம் ‘ என்றான். அவரால் ‘ஏம்பா ‘ என்று சின்னதாய் முணுமுணுக்கத்தான் முடிந்தது. இதற்குள் காப்பித் தம்ளரோடு அண்ணி வெளியே வந்தது. அண்ணிக்கும் சொல்லிக் கொண்டு வாசலுக்குத் திரும்பினான் இவன்.

‘காப்பியாச்சும் குடிச்சிட்டுப் போப்பா. ‘

‘பரவாயில்லங்கண்ணி ‘

சங்கடமான குரலில் சொல்லி வெளியே வந்தபோது தேன்மொழியும் கூட வந்தது. வழக்கமாய்ப் புறப்படும்போது அதைத் தூக்கியபடி சைக்கிள் வரை வருகிற உற்சாகம் இவனிடத்தில் இல்லை.

‘அப்புறம் எப்ப வருவ சித்தப்பா ? ‘

‘நேரம் கிடைக்கும்போது வரண் கண்ணு. ‘

மெல்லக் கன்னத்தை அழுத்தித் தொட்டுப் புறப்பட்டான் இவன். சுருங்கிய சாக்லெட் தாளை கீழே போட்டுவிட்டு இவனுக்கு டாட்டா காட்டியது தேன்மொழி.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்