முள்பாதை 22

This entry is part [part not set] of 24 in the series 20100326_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

ராஜேஸ்வரி மீது கோபம் கொண்டவள் போல் வேண்டுமென்றே நிஷ்டூரமாக சொன்னேன். “ஏதேதோ சொல்கிறாயே தவிர நான் கேட்டதை மட்டும் சொல்ல மாட்டேங்கிறாய். நீ ரொம்ப சாமர்த்தியம் மிகுந்தவள் என்று இப்போ எனக்குப் புரிகிறது. என்ன இருந்தாலும் நான் வேற்று மனுஷிதானே. நீ சொன்னதும் உண்மைதான். நான்கு நாட்கள் இருந்துவிட்டுப் போவதற்காக வந்தவள் நான். என்னிடம் எதற்காக சொல்லணும்? சொன்னால் மட்டும் என்ன நடந்துவிடும்? உன் அபிப்பிராயம் கேட்டது என்னுடைய முட்டாள்தனம்தான். என்னை மன்னித்துவிடு.”
ராஜேஸ்வரி சட்டென்று என் கையைப் பற்றிக் கொண்டாள். அன்பு ததும்பும் குரலில் சொன்னாள். “அண்ணி! அப்படிச் சொல்லாதே. ஒரு விஷயம் சொல்லட்டுமா? நீயும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட முகூர்த்தம் எப்படிப் பட்டதோ எனக்குத் தெரியாது. உன்னை விட்டு என்னால் இருக்க முடியாது என்று தோன்றுகிறது. நீ கிளம்பிப் போனால் எவ்வளவு சூனியமாக இருக்குமோ உன்னால் ஊகிக்கவும் முடியாது. நீ இங்கிருந்து போனதும் உன் சிநேகிதிகளுடன் பிசியாகி எங்களை எல்லாம் மறந்து போய் விடுவாய்.”
“ராஜி! உன்னிடம் ஆயிரம் தடவை சொல்லியிருக்கிறேன். எனக்கு நெருக்கமான சிநேகிதிகள் யாரும் கிடையாது என்று.”
ராஜி என் பேச்சைக் காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. “நாம் இருவரும் மறுபடியும் சந்தித்துக் கொள்வோமோ இல்லையோ தெரியாது. ஆனால் என் மனம் எப்போதம் உனக்காக ஏங்கிக் கொண்டே இருக்கும். ஒரு இனிமையான கனவுபோல் வாழ்நாள் முழுவதும் என் நினைவுகளில் உன் ஞாபகம் தங்கியிருக்கும். நீ வேற்று மனுஷி இல்லவே இல்லை.”
ராஜேஸ்வரியின் கையை பலமாக அழுத்தினேன். “ராஜி! என்னை உனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று சொல்கிறாய். அப்படி இருக்கும்போது என்னிடம் உன் மனதில் இருப்பதைச் சொல்வதற்குத் தயங்குவானேன்?”
ராஜேஸ்வரி தலையைக் குனிந்துகொண்டாள். “தெரிந்து கொள்வதால் உனக்கு என்ன பிரயோஜனம்?”
“எல்லாவற்றுக்கும் பிரயோஜனம் இருந்துதான் ஆகணுமா?”
“இருக்கணும் என்று எப்போது அண்ணன் சொல்லிக் கொண்டு இருப்பான்.”
“உங்க அணணன் போன்ற முட்டாளும், கொடுமைக்காரனும் இந்த உலகத்திலேயே யாரும் இருக்க மாட்டார்கள்.”
“எங்க அண்ணன் போன்ற நல்லவன், திறமை மிகுந்தவன் இந்த உலகில் யாருமே இருக்க மாட்டார்கள்.” ராஜியின் தலை பெருமையுடன் நிமிர்ந்தது. நிலா வெளிச்சத்தில் அவள் கண்களில் அண்ணனிடம் அவளுக்கு இருந்த பிரியத்தை, பாசத்தை என்னால் உணர முடிந்தது.
“ஆமாம். அதான் தங்கையின் மனதைப் புரிந்து கொளளாமல் குரங்கு போன்ற அந்த மாப்பிள்ளைக்கு தங்கப்பதுமை போன்ற உன்னை கட்டிக்கொடுக்க ஏற்பாடு செய்கிறான். உங்க அண்ணன் முட்டாள் மட்டுமே இல்லை. குருடனும்கூட.”
“குடித்தனம் நல்லபடியாக நடப்பதற்கு அழகைவிட குணம்தான் முக்கியம் என்று அண்ணாவுக்குத் தெரியும்.”
“இனி உன்னை யாராலும் காப்பாற்ற முடியாது. உன் தலையெழுத்துப்படி நடக்கட்டும்”
“மிக்க நன்றி.”
தோற்றுப் போனவள் போல் முகத்தைத் திருப்பிக்கொண்டேன். அவளுடன் மேற்கொண்டு வாதம் புரிவதில் பிரயோஜனம் இருக்காது என்று தோன்றியது.
ராஜி என்னைச் சாமதானப்படுத்துவதுபோல் சொன்னாள். “அண்ணி! கூடப் பிறந்தவர்கள் இருக்கும்போது நம் ஆசைகளுக்கும், சுகங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதைவிட குடும்ப §க்ஷமத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கணும். சுயநலம் கொண்ட நபர்கள் இருக்கும் எந்த குடுப்பத்திலேயும் அமைதி இருக்காது.”
“என்னமோன்னு நினைத்தேன். உங்க அண்ணன் உனக்கு வாழ்க்கையைப் பற்றி நிறையவே கற்றுக் கொடுத்துள்ளான். இன்னும் எத்தனை பாடங்களை கரைத்து புகட்டி இருக்கிறானோ சொல்லுங்கள் அருமை தங்கை அவர்களே.”
ராஜேஸ்வரி என்னுடைய கிண்டலைக் கேட்டு வருத்தப்பட வில்லை. முறுவலுடன் பதில் சொன்னாள்.
“எட்டாத கனிக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை அமைதியற்றதாக ஆக்கிக்கொள்ளக் கூடாது. கிடைத்ததை வைத்துக் கொண்டு திருப்தி அடைய கற்றுக் கொள்ளணும். நம்மால் முடிந்த வரையில் அடுத்தவர்களுக்கு உதவி செய்யணும். மற்றவர்களுக்கு நம் வாழ்க்கை பயனுள்ளதாக இருக்கணும். இதுதான் பாலபாடம். நீயும் கற்றுக்கொள்.”
“எந்தப் பாடமும் எனக்குத் தேவையில்லை. ஆனால் இந்தத் திருமணம் நடப்பதால் என்ன லாபம்?”
“வீட்டில் என் சுமை குறையும்.”
அதுதான் அசல் விஷயம். நான் சந்தேகபப்பட்டது உண்மையாகிவிடது. அவளுக்கு இந்த வரனைப் பிடிக்கவில்லை. இருந்தாலும் குடும்பத்தின் நன்மையைக் கருதி சம்மதித்து இருக்கிறாள். ராஜேஸ்வரியின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை.
அவளை பயமுறுத்துவதுபோல் சொன்னேன். “சுமை குறையும் என்று நீ நினைக்கிறாய். அது ரொம்ப தவறு. பொருளாதார நிலைமை சரியாக இல்லை என்றால் திருமணம் செய்து கொள்வதை நிறுத்திவிடு அல்லது தள்ளிப் போடு. திருமணத்திற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்று தெரியுமா? அத்துடன் முடிந்து விடதா? திருமணம் ஆன பிறகு தீபாவளி, பொங்கல் என்று ஒவ்வொரு பண்டிகைக்கும் மாப்பிள்ளையை அழைக்கணும். சீர்வரிசை செய்யணும். புத்தாடைகள் வழங்கணும். அதற்குப் பிறகு உனக்கு வளைகாப்பு, சீமந்தம், பிரசவம் என்று எவ்வளவு செலவுகள் இருக்கும் தெரியுமா?”
“அதெல்லாம் நடக்காது. திருமணம் ஆனபிறகு ஒற்றை ரூபாய்கூட எனக்காக செலவழிக்க விடமாட்டேன்.” ராஜேஸ்வரியின் குரல் ரோஷத்துடன் ஒலித்தது.
“மாட்டேன் என்று சொல்வதற்கு நீ யார்? மாமியார் வீட்டில் கேட்பார்கள். உங்க அம்மாவும் ஒப்புக்கொள்வாள். தலையை அடகு வைத்தாவது உங்க அண்ணன் அவற்றை தீர்த்து வைப்பான். அதாவது உன் ஒருத்திக்காக ஆகும் செலவு இனி இரட்டிப்பு ஆகும் என்று அர்த்தம்.”
என்னுடைய சொற்பொழிவு ராஜேஸ்வரியின் மீது லேசான பாதிப்பு ஏற்படுத்தியது பொலும். யோசனையில் ஆழ்ந்து போனவளாக முழங்காலில் முகத்தை பதித்து தொலைவில் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உன் இடத்தில் நான் இருந்தால், எங்க அண்ணன் மீது உண்மையான அன்பு இருந்தால், இப்படி சீர்வரிசை என்ற பெயரில் எங்க வீட்டாரை கொள்ளையடிக்க அனுமதிக்க மாட்டேன். மதியம் ஆசாரிமாமா வந்தபோது மாப்பிள்ளை வீட்டார் கொடுத்த பட்டியலை ஒப்புவித்தாரே, நீயும் கேட்டாய் இல்¡லயா?”
கேட்டேன் என்பதுபோல் தலையை அசைத்தாள்.
“இதிலிருந்தே அவர்கள் எப்படிப்பட்ட மனிதர்கள் என்று நீயே யோசித்துப் பார்.”
“தெரியும் அண்ணி. அதுதான் என் மனதில் உறுத்தலாக இருக்கு.”
“உறுத்தலாக இருக்கு என்று வாயை மூடிக் கொண்டிருந்தால் என்ன பிரயோஜனம்? கல்யாணம் ஆகவில்லையே என்று இப்போ நீ ஒன்றும் ஏங்கவில்லையே? இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்ல தயங்குவானேன்? உன்னால் சொல்ல முடியவில்லை என்றால் உன் சார்பில் நான் சொல்கிறேன். மகளுடைய கல்யாணத்தை சீக்கிரமாக முடிக்கணும் என்று தவிக்கும் அத்தையைக்கூட என்னால் பேசி சமாளிக்க முடியும். ராஜி! எது எப்படி போனாலும் நீ அந்த பட்டிக்காட்டு மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது. அவனைவிட நல்ல கணவன் உனக்குக் கிடைப்பான் என்பது என் நம்பிக்கை. நீ சொன்னது உண்மைதான். நாம் இருவரும் சந்தித்துக் கொண்ட வேளை எப்படிப்பட்டதோ தெரியாது. ஆனால் இந்த உலகில் உன்னைவிட நெருக்கமானவர்கள் எனக்கு வேறு யாருமே இல்லை. உன் பக்கத்தில் அந்த கருங்குரங்கைக் கணவனாக ஊகிக்கவே என் மனம் ஒப்பவில்லை.”
ராஜேஸ்வரி இன்னும் யோசனையில் மூழ்கியிருந்தாள். என் போதனை பலித்திருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மேலும் சொன்னேன். “நீ இந்தக் கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும், உனக்கு விருப்பம் இல்லை என்றும் அத்தையிடம் சொல்லட்டுமா?”
ராஜேஸ்வரி திடீரென்று இந்த உலகிற்கு வந்தவள்போல் தலையைக் குறுக்காக அசைத்தாள். “வேண்டாம்… வேண்டாம்” என்றாள்.
“வேண்டாமா!” வியப்புடன் பார்த்தேன். ஒரு மணி நேரமாக நான் ஆற்றிய சொற்பொழிவு, வாக்குவாதம் எல்லாமே வியர்த்தம்தானா? சோர்வு என்னை ஆட்கொண்டது.
வாடிப்போன முகத்துடன், வருத்தம் கலந்த குரலில் ராஜி சொன்னாள். “உனக்குத் தெரியாது அண்ணி! அண்ணாவுக்குக் கொஞ்சம் வசதியிருந்தாலும் இந்த வரனுக்குச் சம்மதம் சொல்லியிருக்க மாட்டான். அந்த விஷயம் எனக்குத் தெரியும்.”
எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. என்ன மனுஷி இவள்? தன்னைப் பற்றி யோசிக்கவே தெரியாதா? கடுமையான குரலில் “சும்மா இரு ராஜி! உங்க அண்ணனிடம் உனக்கு இருக்கும் அன்பில் ஆயிரத்தில் ஒரு பங்காவது உங்க அண்ணனுக்கு உன் மீது இருந்திருந்தால் இந்த வரனுக்கு சம்மதித்து இருக்க மாட்டான். அண்ணாவாம் அண்ணா! முதல் முதலில் உங்க இருவரையும் பார்த்தபோது பாசமலர் சிவாஜியைப் போல் தங்கையிடம் எவ்வளவு அன்பு என்று வியந்தேன். நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி என்றும் நினைத்தேன். இப்போ எனக்கு நன்றாகப் புரிந்து விட்டது. இதெல்லாம் என்னைப் போன்றவர்களை ஏமாற்றுவதற்காக போடும் வேஷம்.”
“அண்ணீ!”
“உன் விருப்பு வெறுப்புகளை அவனால் உணர முடியவில்லையா? இல்லை, உணர்ந்து கொண்டாலும் மதிப்பு தர வேண்டியதில்லை என்ற எண்ணமா? உணர முடியவில்லை என்றால் அது ரொம்ப அநியாயம். உணர்ந்தும் மதிப்பு தரவில்லை என்றால் அதைவிடக் கொடுமை வேறு இல்லை.”
ராஜேஸ்வரி என் தோள்களைப் பற்றி வேண்டிக்கொள்வதுபோல் சொன்னாள். “அண்ணீ! தயவுசெய்து அண்ணாவைப் பற்றி எதுவும் சொல்லாதே. அவனைப் பற்றி உனக்கு அதிகம் தெரியாது. அவன் எங்களுக்காக எவ்வளவு தியாகம் செய்கிறானோ தெரிந்தால் நீ இப்படி எல்லாம் பேசமாட்டாய்.”
“பெரிதாக என்ன செய்து விட்டான்? வீட்டுக்கு மூத்தவன் என்ற பிறகு அதுகூட செய்யாவிட்டால் எப்படி? அது ஒரு பெரிய விஷயமா என்ன?”
“மூத்தவன்! அப்பா போன அடுத்த நிமிடமே மாற்றாந்தாய்க்காகவும், அவளுக்குப் பிறந்த குழந்தைகளுக்காகவும் பதினாறு வயதிலேயே அவன் இந்த வீட்டுக்கு தலைவனாக பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டான். சின்னவனாக இருந்தாலும் அந்த இருண்ட நாட்களில் அம்மாவுக்குப் பக்கபலமாக இருந்தான். அப்பா போனதும் அண்ணாவின் தாய்மாமன் வந்து சொத்தை பிரித்துத் தரச் சொல்லியும், பையனை தங்களுடன் அழைத்துப்போய் படிப்பு சொல்லித் தருவோம் என்றும் ரகளை செய்தார். அம்மா எந்த பதிலும் சொல்ல முடியாமல் அழுது கொண்டிருந்தாள். அந்த நாள் இன்னும் என் மனதில் பசுமையாக நினைவில் இருக்கிறது. வீட்டில் ஒரே ரகளை. அக்கம் பக்கத்தார் வந்து சமாதானப்படுத்த முயன்றார்கள். குழந்தைகள் எல்லோரும் மிரண்டு போய் ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்திருந்தோம்.
அண்ணன் அப்பொழுதுதான் கர்ணம் மாமா வீட்டிலிருந்து திரும்பி வந்தான். அழுகையும், கவலையுமாக வாசற்படியில் உட்கார்ந்திருந்த அம்மாவைப் பார்த்து, “அம்மா! எதற்காக அழுது கொண்டிருக்கீங்க? மாமாவுடன் நான் போய் விடுவேன் என்று நினைத்தீங்களா? நீங்க கவலைப்பட வேண்டியதில்லை. என் தம்பி தங்கைகள் வளர்ந்து பெரியவர்களாகும் வரையில் உங்களிடமிருந்து என்னை அந்தக் கடவுளே வந்தால்கூட அழைத்துப் போக முடியாது” என்றான். அம்மா அவன் கையைப் பற்றி அருகில் இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள். பைத்தியம் பிடித்தவள்போல் அவன் உச்சியில் பலமுறை முத்தம் பதித்தாள். சொன்னது போலவே அண்ணன் தாய் மாமாவுடன் போகவில்லை. “எங்க அம்மாவை, தம்பி தங்கைகளை விட்டுவிட்டு நான் எங்கேயும் வரமாட்டேன்” என்று கச்சிதமாகச் சொல்லிவிட்டான்.”
என்றும் இல்லாதவிதமாக ராஜேஸ்வரி ஆவேசமாக பேசியதைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பேச்சு ஒரு விஷயத்திலிருந்து மற்றொரு விஷயத்திற்குத் தாவிவிட்டது. கிருஷ்ணனைப் பற்றி ராஜேஸ்வரி சொல்லிக் கொண்டிருந்த விஷயங்கள் சுவாரசியமாக இருந்ததால் ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கினேன். மடைத் திறந்த வெள்ளம்போல் ராஜேஸ்வரி சொல்லிக் கொண்டே போனாள்.
“ஹைஸ்கூலில் படிக்கும் போது விளையாட்டு மற்றும் படிப்பு இரண்டிலும் அண்ணன் முதலாவதாக இருந்தான். சிறு வயது முதல் அவனுக்கு செடி கொடிகளிடம் ஆர்வம் அதிகம். பட்டப் படிப்பு படித்துவிட்டு எம்.எஸ்.ஸி. முடித்து விட்டு ஆராய்ச்சி செய்யப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் என்ன பிரயோஜனம்? அவன் பிளஸ் டூ முடிப்பதற்குள் வீட்டின் நிலைமை ரொம்ப மோசமாகிவிட்டது.
அம்மாவால் சமாளிக்க முடியவில்லை. பிள்ஸ் டூவில் ஸ்டேட் •பஸ்ட் ரேங்க் வாங்கியிருந்தான். பி.எஸ்.ஸியில் சேருவதற்கு ஸ்காலர்ஷிப்கூட கிடைத்தது. கோடை விடுமுறையில் வீட்டுக்கு வந்தவன், வீட்டின் நிலைமையை உணர்ந்து கொண்டு கல்லூரியில் சேரப் போவதில்லை என்று மறுத்து விட்டான். அம்மாவும், கர்ணம் மாமவும் எத்தைனேயோ சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அவன் கேட்கவில்லை. “நான் வெளியூருக்குப் படிக்கப் போனால் அம்மாவால் சமாளிக்க முடியாது. உடலளவிலும், மனதளவிலும் ரொம்ப தளர்ந்து போய்விட்டாள். ஏற்கனவே தந்தை இல்லாதவர்களாக இருக்கிறோம். தாயையும் இழக்க விரும்பவில்லை.” பிடிவாதமாக மறுத்து விட்டான்.
அண்ணாவுக்கு வைட்காலர் ஜாப் என்றால் என்றுமே மதிப்பு கிடையாது. சிறுவயது முதல் சுதந்திரமாக செயல்படுவதுதான் அவன் வழக்கம். கர்ணம் மாமா சொன்ன அறிவுரையின்படி நிலத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டான். அந்த நிலம் ரங்கசாமி என்பவருக்குச் சொந்தம். அந்த ஆளும் இந்த ஊரைச் சேர்ந்தவர்தான். கல்யாணம் செய்துகொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாக போய்விட்டார். அவர் எதிர்பார்த்ததுபோல் மாமியார் வீட்டிலிருந்து சொத்து அதிகமாகக் கிடைக்கவில்¡ல. இங்கே இருந்த வீட்டையும், மற்ற நிலத்தையும் விற்றுவிட்டார். அண்ணன் பத்து வருடங்களுக்குச் சேர்ந்தாற்போல் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு விட்டதால் அந்த நிலத்தை விற்க முடியவில்லை. அப்படியும் சில சமயம் பணம் தேவையாக இருக்கும் போது நிலத்தை வாங்குவதற்காக நல்ல பார்ட்டீ வந்திருப்பதாகவும், விற்று விடப் போவதாகவும் கடிதம் எழுதுவார். அந்தக் கடிதம் வந்தால் போதும். அம்மா சாப்பிட மாட்டாள். தூங்கவும்மாட்டாள். அண்ணன் தலையை அடகு வைத்தாவது பணத்தை ஏற்பாடு செய்து குத்தகை பணத்தை முன்னாடியே அனுப்பி வைப்பான்.”
“அதனுடைய மொத்த விலை எவ்வளவு இருக்கும்?”
“நாலைந்து ஏக்கர் நிலம். ஏக்கருக்கு இருபதாயிரம் வைத்துக் கொண்டால் ஒரு லட்சமாவது இருக்கும். அதற்கு மேலேயும் இருக்கும். சமீபத்தில் கூட கடிதம் வந்தது, நீ வந்த பிறகு.”
“நான் வந்த பிறகா? என்றைக்கு?” என்றேன்.
ராஜேஸ்வரி ஒரு வினாடி யோசித்துவிடு “நாம் கர்ணம் மாமா வளைக்காப்புக்குப் போய் விட்டு வந்தோமே? அன்றைக்கு” என்றாள்.
எனக்கு நினைவு வந்து விட்டது. அத்தை ராஜேஸ்வரிக்கும், எனக்கும் திருஷ்டி கழிக்கும் போது துக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டது, சாப்பிடும்போது கிருஷ்ணன் “கவலைப்படாதேம்மா. நான்தான் இருக்கிறேனே” என்று தைரியம் சொன்னது, விஷயம் என்னவாக இருக்கும் என்று நான் யோசித்தது எல்லாம் வரிசையாக நினைவுக்கு வந்தன.
“பணம் அனுப்பிவிட்டானா?” என்றேன்.
அனுப்பிவிட்டான் என்பதுபோல் தலையை அசைத்தாள்.
“எத்தனை நாட்களுக்கு இப்படி நடக்கும்? அதைவிட எங்கேயிருந்தாவது கடன் வாங்கி அந்த நிலத்தை உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வது நல்லது இல்லையா.”
“அண்ணாவின் எண்ணமும் அதுதான். ஆனால் ஒரு லட்சம் ரூபாய் எங்கேயிருந்து கிடைக்கும்? அவ்வளவு பெரிய ரொக்கத்தை எங்களுக்கு யார் தருவார்கள்? அப்படியே கொடுத்தாலும் எப்படி தீர்க்க முடியும்? அதோடு நான் ஒருத்தி கல்யாண வயதை எட்டிவிட்டேன். எனக்குக் கல்யாண வயது வந்து விட்ட விஷயம் எனக்கும் அம்மாவுக்கும் அவ்வளவாக நினைவு இல்லாவிட்டாலும் ஊர் மக்கள் சதா சர்வகாலமும் நினைவுப் படுத்திக் கொண்டே இருக்கிறாகள். இந்த இரண்டு பிரச்னைகளையும் தீர்ப்பதற்காகத்தான் அண்ணா சுந்தரி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தான்.”
“சுந்தரியா? அது யாரு?”
“சுந்தரிக்கு ஏறத்தாழ நம் வயதுதான் இருக்கும். இங்கிருந்து நாலைந்து கி.மீ. தொலைவில் திருக்கருகாவூர் என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊரில் பெரிய நில்ச்சுவான்தார் புருஷோத்தமன். சுற்று வட்டாரத்தில் நிறைய செல்வாக்கு இருப்பவர். பணவசதியும் இருக்கிறது. அவருடைய ஒரே மகள்தான் சுந்தரி. அவருக்கும் எங்களுக்கு சுற்றி வளைத்து ஏதோ உறவும் இருக்கிறதாம். அண்ணாவைப் பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். அண்ணா அவருடைய மகளைத் திருமணம் செய்து கொண்டால் வரதட்சணையும் கொடுத்து இந்தத் தோட்டத்தையும் வாங்கி மகளுடைய பெயரில் ரிஜிஸ்டர் செய்து தருவதாகச் சொன்னார். அண்ணாவுக்கு இதற்கு முன்னால் இரண்டு வரன்கள் வந்தன. வசதி படைத்தவர்கள்தான். அதில் ஒருத்தர் மாயவரத்தில் வக்கீலாக இருப்பவர். அவருக்கு ஒரே மகள். அண்ணாவின் படிப்பிற்கான செலவுகளை ஏற்றுக் கொண்டு வெளிநாட்டுக்கும் அனுப்பி வைப்பதாகச் சொன்னார். பெண்ணை நாங்களும் பார்த்தோம். அழகாக இருந்தாள். ஆனால் வீட்டோடு மாப்பிள்ளையாக வரணும் என்று அவர்கள் கண்டிஷன் போட்டதால் அண்ணன் சம்மதிக்கவில்லை. அவ்வளவு நல்ல இடத்தை எங்களுக்காக மறுத்துவிட்டான் என்று அம்மாகூட வருத்தப்பட்டாள். ஆனால் என்ன செய்வது? கண்ணுக்குத் தெரியாத விலங்கை போல் நாங்கள் அவனுக்கு பாரமாக இருக்கிறோம். எங்களாலேயும் விலக முடியாது. அவனாகவும் விலங்குகளை அறுத்துக் கொண்டு போக மாட்டான்.”
“சுந்தரி பார்க்க எப்படி இருப்பாள்? அழகாக இருப்பாளா?” ஆர்வத்துடன் கேட்டேன்.
“பார்க்க நன்றாகத்தான் இருப்பாள். நிறமும் சிவப்புதான். ஆனால் முக லட்சணம் குறைவு. பிடித்து வைத்த மாவு பொம்மையைப் போல் வெளிறிய தோற்றம். அண்ணன் நல்ல உயரம். அந்தப் பெண் அவனுடைய தோள் அளவுக்குக்கூட வரமாட்டாள். இருவரையும் ஒன்றாக நிற்க வைத்துப் பார்த்தால் ஜோடிப்பொருத்தம் இல்லை என்று யாருக்குமே தோன்றும். அதிலும் ஒரே குழந்தை என்பதால் செல்லம் அதிகம். பிடிவாத குணம். யார் சொன்னாலும் கேட்க மாட்டாள். அவளுடைய சுபாவம் தெரிந்திருப்பதால் அம்மா ரொம்பவும் தயங்கினாள். “பரவாயில்லை யாராவது ஒருவர் பொறுத்துக் கொண்டு போனால் பிரச்னை இருக்காது. நான் அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறேன்” அண்ணன் அம்மாவைச் சமாதானப்படுத்தினான்.
அவர்களுக்கு வாக்குக் கொடுத்து ரொம்ப நாளாகிவிடது. எனக்கு வரன் திகைய வேண்டும் என்று காத்திருந்தார்கள். இரண்டு கல்யாணங்களையும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் நடத்தி விடவேண்டும் என்று நினைக்கிறார்கள்.”
கேட்டுக் கொண்டிருந்த எனக்கு எப்படியோ இருந்தது. கிருஷ்ணனுக்கும் வேறு பெண்ணுக்கும் நிச்சயமாகிவிட்டது என்று தெரிந்த போது மனதில் வித்தியாசமான உணர்வு பரவியது.
“சுந்தரியைப் பார்த்தால் அண்ணனின் தியாகத்திற்கு முன்னால் நான் இந்த வரனுக்கு ஒப்புக்கொள்வது பெரிய விஷயமே இல்லை என்று உனக்கே புரியும். அண்ணண் குத்தகைக்கு எடுத்துக் கொண்டபோது அந்த இடம் கல்லும் முள்ளுமாக தரிசல் நிலமாக இருந்தது. ஊரில் எல்லோரும் கேலி செய்தார்கள். அண்ணன் கடினமாக உழைத்து அந்த நிலத்தை சரி செய்து தோட்டமாக உருவாக்கினான். இன்று அந்த தோட்டத்திண் மூலம் எங்களுக்கு லாபம் கிடைப்பது உண்மைதான். ஆனால் அந்த லாபத்திற்கு பின்னால் எத்தனை உழைப்பு இருக்கிறதோ யாரும் யோசிக்க மாட்டார்கள். இப்போ ஊரில் எல்லோரின் கண்களும் அந்த தோட்டத்தின் மீதுதான். இந்த விலைக்கு வாங்கிக் கொள்கிறோம் அந்த விலைக்கு வாங்கிக்கொள்கிறோம் என்று நிலத்தின் சொந்தக்காரருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இப்போ நிலத்தின் மதிப்பும் கூடியிருப்பது உண்மைதான். ஆனால் எனக்கு அந்தத் தோட்டத்தில் எந்தச் செடியைப் பார்த்தாலும் இரவும் பகலுமாக அண்ணன் உழைத்த உழைப்புதான் தென்படும். இப்போ சொல்லு அண்ணீ! இந்த உலகில் எத்தனை வீடுகளில் மூத்த மகன்கள் தங்கள் குடும்பத்திற்காக இப்படி உழைக்கிறார்கள்? எத்தனைபேர் தங்களுடைய கடமைகளை சிரத்தையாக செய்கிறார்கள்? நான் பார்த்த வரையிலும் எங்க அண்ணனைப் போல் நூற்றுக்கு ஒருத்தர்கூட இல்லை. இப்படிப்பட்ட அண்ணன் இருப்பது எனக்கு ரொம்ப பெருமைதான். ஆனால் … ஆனால்…”
ராஜேஸ்வரி முழங்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்ட சொன்னாள். “எங்களுக்காகவே அவன் உழைத்துக் கொண்டிருக்கிறான். தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றிக் கொஞ்சம்கூடட லட்சியம் செய்யவில்லை. நன்றாகப் படித்து ரிசெர்ச் செய்ய வேண்டும் என்ற கனவுகளைக் குழிதோண்டி புதைத்து விட்டான். அவன் ஒருத்தன் மட்டுமே இருந்திருந்தால் அந்த உழைப்புக்கு வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருந்திருப்பான். என்னுடைய வருத்தம் என்னவென்றால் எங்களுக்காக அவன் தன்னுடைய தாம்பத்திய வாழ்க்கையையும் பணயமாக வைப்பதற்கு தயாராக இருக்கிறான். அதை என்னால் தாங்க முடியவில்லை. சுந்தரியின் சுபாவத்தைப் பற்றிப் பலபேர் வாயிலாக கேள்விப்பட்டிருக்கிறோம். பொறுத்துக் கொண்டு போகிறேன் என்று அண்ணன் சொல்லிவிட்டான். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவான் என்பதால் சகித்துக் கொண்டும் போவான். ஆனால் அப்படி சகித்துக்கொள்வதற்கு வாழ்நாள் முழுவதும் அவன் எவ்வளவு பொறுமையுடன் இருக்கணுமோ, எந்த அளவுக்கு சந்தோஷத்தை, மன அமைதியை இழக்க வேண்டியிருக்குமோ எனக்கு நன்றாகவே தெரியும். எங்களுக்காகவே பாடுபட்டுக் கொண்டு இருப்பவனுக்குக் கிடைக்கும் பிரதிபலன் இதுதான். என்னுடைய சுபாவம் வேறு. எப்படிப் பட்டவர்களுடனும் என்னால் பொறுத்துக் கொண்டு போக முடியும். ஆனால் அவன் அதற்கு நேர் எதிர். அவன் மனம் எவ்வளவு மென்மையானதோ அவ்வளவு கடினமானதும்கூட. கடவுளிடம் நான் வேண்டுவதெல்லாம் ஒன்றுதான். அண்ணாவுக்கு இந்த சுந்தரி இல்லாமல் வேறு எந்தப் பெண்ணாவது, அவன் மனதிற்குப் பிடித்தவள், அவன் மனதைப் புரிந்து கொண்டவள் வாழ்க்கைத் துணையாக வரணும். அவன் வாழ்க்கை நாசமாகி விடக்கூடாது. நாங்கள் பெரியவர்கள் ஆன பிறகாவது அவன் தன் மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும். இப்போ சொல்லு அண்ணீ! எங்க அண்ணன் முட்டாளா? கையால் ஆகாதவனா?”
பதில் சொல்ல முடியாதவள் போல் பார்த்து கொண்டிருந்தேன். ராஜேஸ்வரி கவலை தோய்ந்த குரலில் மேலும் சொண்ணாள். “அண்ணாவுக்காக, அவன் எதிர்காலத்தை பலி கேட்கும் அந்த தோட்டத்தின் விலை ஒரு லட்சத்திற்காக எதைச் செய்யவும் நான் தயாராக இருக்கிறேன். நொண்டியோ முடமோ, கூனோ குருடோ யாராக இருந்தாலும் சரி கழுத்தை நீட்டா தயாராக இருக்கிறேன். கடவுள் ஏன் என்னை பெண்ணாக படைக்கணும்? ஆணாகப் பிறந்திருந்தால் பொறுப்புகளை அண்ணனுடன் பகிர்ந்து கொண்டிருப்பேன் இல்லையா? இருவரும் சேர்ந்து குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வந்திருப்போம். எதுவுமே செய்ய முடியாதவளாகி விட்டேன்.” ராஜேஸ்வரி தனக்குத்தானே பேசிக்கொள்வது போல் சொல்லி முடித்தாள்.
அந்த நிமிடம் கிருஷ்ணனிடம் ஏற்பட்ட இரக்கத்தால் என் இதயம் கரைந்து விட்டது. இருவரும் மௌனமாக, பதுமைகள் போல் யோசனையில் ஆழ்ந்தபடி உட்கார்ந்து விட்டோம்.
கொஞ்ச நேரம் கழித்து ராஜேஸ்வரியின் கையைப் பிடித்து அழுத்தியபடி சொன்னேன். “ராஜீ! இந்த உலகில் பணத்திற்கு இவ்வளவு மதிப்பு இருக்கிறது என்றோ, பொருளாதார பிரச்னைகள் இவ்வளவு கொடூரமாக வாழ்க்கையை பாதிக்கும் என்றோ எனக்குத் தெரியவே தெரியாது. அதான் அம்மா பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ரொம்ப கண்டிப்பாக இருக்கிறாள். இந்த விஷயத்தில் அம்மாவை நான் ரொம்ப தவறாக புரிந்து கொண்டிருக்கிறேன்.”
ராஜேஸ்வரி கண்களைத் துடைத்துக் கொண்டு சரியாக உட்கார்ந்து கொண்டாள். “ஏனோ தெரியவில்லை. மனதில் இருப்பது ஒரேயடியாக பொங்கி வெளியயே வந்து விட்டது. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. தேவையில்லாத விஷயங்களைச் சொல்லி உனக்கு சலிப்பு ஏற்படுத்தி விட்டேனோ என்னவோ.”
“அப்படி எல்லாம் சொல்லாதே ராஜீ! இதில் தேவையில்லாதது என்ன இருக்கு? இன்னிக்கு நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். நான்தான் உனக்கு நன்றி சொல்லணும்.”
ராஜேஸ்வரி சுற்றிலும் பார்த்துவிட்டு திடுக்கிட்டவள்போல் “ரொம்ப நேரமாகிவிட்டது. அம்மா கவலைப்படுவாளோ என்னவோ. இனி கிளம்புவோமா?” என்றாள்.
“வா… போகலாம்” நானும் எழுந்து கொண்டேன்.
கோவில் வாசலைத் தாண்டும்போது ஒரு தடவை பின்னால் திரும்பி நாங்கள் உட்கார்ந்திருந்த மண்டபத்தைப் பார்த்தேன். நிலா வெளிச்சத்தில் ஒரு பக்கமாக லேசாக சாய்ந்திருந்த அந்த கருங்கல் மண்டபம், நாங்க இருவரும் அமர்ந்திருந்த அந்த படிக்கட்டு, ராஜேஸ்வரி என்னிடம் சொன்ன விஷயங்கள் எல்லாமாக சேர்ந்து என் மனதில் ஆழமாக முத்திரையைப் பதித்து விட்டன.
இருவரும் மௌனமாக வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தோம். ராஜியின் விரல்களை என் விரல்களால் பிணைத்துக் கொண்டே “ராஜீ! என்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை. அதை நினைக்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்றேன்.
“ச்ச… ச்ச… நீ அப்படி ஏன் நினைக்கணும்? நீ என்னிடம் காட்டும் இந்த அன்பு எவ்வளவு மதிப்பு வாய்ந்ததோ உனக்குத் தெரியாது. அது போதும் எனக்கு. இதுநாள் வரையில் நான் இதுபோல் மணம் திறந்து யாரிடமும் பேசியதில்லை என்று சொன்னால் நீ நம்புவாயோ மாட்டாயோ?” என்றாள் ராஜேஸ்வரி.
“நம்புகிறேன்” என்றேன் நான். இருவரும் கைகளை கோர்த்தபடி நடந்து கொண்டிருந்தோம். நானும் ராஜேஸ்வரியைப் போல் பெண்ணாகப் பிறந்தாலும் அவளைப் போன்ற நிலைமை எனக்கு இல்லை. அவர்களுக்கு என்னால் எப்படி உதவி செய்ய முடியும்?
இருவரும் வீட்டிற்கு வந்து சேரும்போது கிருஷ்ணன் ஹாலுக்கு வெளியில் நாடாக் கட்டில்மீது படுத்திருந்தான். அவன் யோசனையில் ஆழ்ந்திருந்தான் என்பதற்கு எடுத்துக்காட்டாக தலைக்கு அடியில் கைகளை வைத்திருந்தான். என் ஊகம் சரி என்று நிரூபிப்பதுபோல் ராஜேஸ்வரி அருகில் சென்று “அண்ணா!” என்று அழைக்கும் வரையில் அவன் எங்கள் வருகையை கவனிக்கவில்லை.
தங்கையின் குரலைக் கேட்டதும் திடுக்கிட்டவன் போல் திரும்பிப் பார்த்தான்.
“கோவிலுக்குப் போய்விட்டு வருகிறோம். பிரசாதம் எடுத்துக்கொள்” என்றாள் அர்ச்சனை கூடையை நீட்டிக் கொண்டே.
கிருஷ்ணன் சந்தனத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு துளசிதளத்தை காதில் சொருகிக் கொண்டான். அவன் கண்கள் ராஜேஸ்வரியை ஒரு வினாடி கூர்ந்து பார்ப்பதை, பிறகு லேசாக பெருமூச்சு விட்டதை நான் கவனித்துக்கொண்டுதான் இருந்தேன். எனக்குத் தெரியும். அந்த நிமிடம் அவன் ராஜேஸ்வரியைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தான்.
உடைகளை மாற்றிக்கொள்வதற்காக உள்ளே வந்து விட்டேன். ராஜேஸ்வரியின் திருமண விஷயத்தில் நான் அதிருப்தியாக இருப்பதுபோல் ராஜேஸ்வரி தன் அண்ணனைப் பற்றி அதேபோல் நினைக்கிறாள். ராஜேஸ்வரியின் இந்த திருமணம் நடைபெறாமல் இருக்கணும் என்றால் முதலில் கிருஷ்ணன் பந்தங்களிலிருந்து விடுதலை பெறவேண்டும். சுந்தரி என்ற பெண்ணுடன் கிருஷ்ணனுக்கு நிச்சயமாகி விட்டது என்று தெரிந்த பிறகு இதுநாள் வரையில் அவனிடம் எனக்கு இருந்த கூச்சம் விலகிவிட்டது. அந்த இடத்தை பிரியமும், அபிமானமும் ஆக்கிரமித்துக் கொண்டன. மனதில் ஏதோ ஒரு மூலையில் சுந்தரியைப் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழும்பி வேட்கையாக மாறியது.

(தொடரும்)

Series Navigation