முள்பாதை 11

This entry is part [part not set] of 26 in the series 20100101_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

மறுநாள் காலையில் குழந்தைகள் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கூடத்திற்குப் போய்விட்டார்கள். நானும் ராஜேஸ்வரியும் சாப்பிட்டு விட்டோம். ராஜேஸ்வரி சமையல் அறையில் அத்தைக்கு உதவியாக வேலை செய்து கொண்டிருந்தாள். நான் அறையில் உட்கார்ந்துகொண்டு அப்பாவுக்குக் கடிதம் எழுதத் தொடங்கினேன்.
அன்புள்ள அப்பாவுக்கு,
மெலட்டூருக்கு வந்து சேர்ந்துவிட்டேன். இந்த ஊரும், சூழ்நிலையும் எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. அத்தையை ரொம்பவே பிடித்துவிட்டது.
ராஜேஸ்வரியும், நானும் ஓருயிர் ஈருடல் என்பதுபோல் ஐக்கியமாகிவிட்டோம். குழந்தைகள் எல்லோரும் ரொம்ப அன்பாகப் பழகுகிறார்கள். நீங்க ஒரு நாளும் பேச்சு வாக்கில்கூட அத்தையின் வீட்டில் கிருஷ்ணன் என்று ஒருத்தன் இருக்கிறான் என்றோ, அவன்மீது இந்தக் குடும்பம் ஆதாரப்பட்டிருப்பதைப் பற்றியோ சொன்னதே இல்லை. அப்படிப்பட்ட நபரைப் பற்றி இந்தக் கடிதத்தில் நான் பிரஸ்தாபிக்கப் போவதும் இல்லை.
இத்தனை வருடங்களாக இவ்வளவு நெருக்கமானவர்களிடமிருந்து என்னைப் பிரித்து வைத்ததற்கு உங்கள் மீது கோபம் வந்தாலும், இன்றைக்காவது அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு சந்தோஷமாக இருக்கிறது. அம்மா வந்ததும் எனக்கு டெலிகிராம் கொடுக்க மறந்தபோய் விடாதீங்க. எப்போதும் உங்களுடைய ஆசிகளை விரும்பும்,
உங்கள் மகள் மீனா
கடிதத்தைக் கவரில் வைத்துக் கொண்டிருந்தபோது ராஜேஸ்வரி உள்ளே வந்தாள்.
“அண்ணீ! அண்ணனுக்கு சாப்பாடு எடுத்துப் போகிறேன். நீயும் என்னுடன் வருகிறாயா?” என்று கேட்டாள்.
கவரின் மீது முகவரியை எழுதப் போனவள் நிமிர்ந்து பார்த்தேன். எதிரே ராஜேஸ்வரி கையில் ஜெர்மன் சில்வர் கேரியருடன் நின்று கொண்டிருந்தாள்.
“ஏன்? உங்க அண்ணா மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வர மாட்டானா?” என்று கேட்டேன்.
“வேலை அதிகமாக இருந்தால் வரமாட்டான். நீயும் வந்தால் சேர்ந்து போகலாம். ரொம்ப தொலைவும் இல்லை. ஒற்றையடி பாதையில் நடக்கும் போது ஜாலியாக இருக்கும். நீயும் எங்க தோட்டத்தைப் பார்த்த மாதிரி இருக்கும்” என்றாள்.
“பூந்தோட்டமா? என்ன என்ன பூக்கள் இருக்கு?” ஆர்வத்துடன் கேட்டேன்.
ராஜேஸ்வரியின் முகம் வாடிவிட்டது. “பூந்தோட்டமில்லை. காய்கறி தோட்டம்” என்றாள் தலையைக் குனிந்துகொண்டே.
‘காய்கறி தோட்டம்தானா’ என்று சொல்ல வந்ததை நாக்கின் நுனியிலேயே தடுத்துவிட்டு “சரி, போகலாம் வா” என்றேன்.
நான் செருப்பை அணிந்து கொள்ள முயன்றபோது ராஜேஸ்வரி சங்கடத்துடன் பார்த்தாள். “செருப்பு போட்டுக் கொள்ளாமல் இருந்தால் நல்லது. போகும் வழியில் சேறும் சகதியுமாக இருக்கும். விலை உயர்ந்த செருப்பு … வீணாகிவிடுமோ என்னவோ” என்றாள்.
செருப்புப் போடாமல் நான் வீட்டில்கூட நடமாட மாட்டேன். வெறும் காலுடன் சிமெண்ட் தரையில் நடப்பது என்றாலே எனக்கு எப்படியோ இருக்கும். அப்படி இருக்கும் போது மண்பாதையில் வெறும் காலுடன் நடப்பதாவது? சகதியில் நடந்தால் விலை உயர்ந்த செருப்புகள் பாழாகிவிடுமோ என்று ராஜேஸ்வரி பயப்படுவது எனக்குப் புரிந்தது. செருப்பு அறுந்து போனால் வேறு வாங்கிக் கொள்கிறேன். அவ்வளவுதானே தவிர செருப்பு இல்லாமல் என்னால் நடக்க முடியாது. ராஜேஸ்வரியின் பயத்திற்கு சமாதானம் சொல்வது போல் முறுவலித்துவிட்டு அவளுடன் கிளம்பினேன்.
வெளியில் சூழ்நிலை ரம்மியமாக இருந்தது. மழை பெய்யவில்லையே தவிர வானம் மேக மூட்டமாக இருந்தது. காற்று வேகமாக வீசிக் கொண்டிருந்தது.
நாங்கள் போகும் வழியில் சின்னச் சின்ன வாய்க்கால்கள் இருந்தன. அவற்றில் தண்ணீர் வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. ராஜேஸ்வரி எச்சரித்தபடி நான் வாய்க்கால் வந்தபோது செருப்பை ஒரு கையிலும், புடவைக் கொசுவங்களை ஒரு கையாலும் தூக்கிப் பிடித்துக்கொண்டு தாண்டினேன். வெண்டாமென்று மறுத்தாலும் ராஜேஸ்வரி நான் கீழே விழுந்து விடுவேனோ என்பதுபோல் என் கையை பலமாக பற்றிக் கொண்டாள். வாய்க்கால்களைத் தாண்டிய பிறகு ஒற்றையடிப் பாதை பயணம் ரொம்ப ஜாலியாக இருந்தது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கண்ணுக்கு விருந்தளிப்பது போல் பசுமை தென்பட்டது.
தோட்டத்தை நெருங்கும்போது எனக்கு திடீரென்று நினைவு வந்தது. அன்று வரும்போது கிருஷ்ணன் வண்டியை விட்டு இறங்கி திரும்பிக்கூடப் பார்க்காமல் வேகமாக நடந்து போனது இந்த தொட்டத்திற்குத்தானோ.
“பூக்கள் இல்லை என்றாயே? இவ்வளவு நறுமணம் எங்கிருருந்து வருகிறதாம்?” என்றேன். தோட்டத்திற்குள் நுழையும்போது பலவிதமான நறுமணம் காற்றில் பரவியிருப்பதை உணர முடிந்தது. என்னையும் அறியாமல் மூச்சை பலமாக உள்ளே இழுத்துக் கொண்டேன். “ஏதோ சில வகை பூஞ்செடிகள் இருக்கு. அசலுக்கே இல்லை என்று சொல்ல முடியாது” என்¡ள் ராஜேஸ்வரி.
இருவரும் தோட்டதிற்குள் நுழைந்தோம். ரொம்ப பெரிய தோட்டமாக இருக்க வேண்டும். கண்ணுக்கு எட்டிய வரையில் எல்லாவிதமான மரங்களும் இருந்தன. மா, பலா, கொய்யா, எலுமிச்சை முதற்கொண்டு சீதாப்பழம், முருங்கை மரம் எல்லாமே இருந்தன. தோட்டத்தைச் சுற்றிலும் இரும்புக் கம்பியால் முள்வேலி போடப்பட்டிருந்தது. எதிரே பெரிய வேப்பமரம் ஒன்று இருந்தது. அதைச் சுற்றிலும் சிமெண்டில் திண்ணை போடப்பட்டிருந்தது.
வேப்ப மரத்திற்குப் பின்னால் கீற்றுக் கொட்டகை இருந்தது. கொட்டகையின் கூரைமீது பீர்க்கை, பூசணி போன்ற கொடிகள் படர்ந்திருந்தன. ராஜேஸ்வரி கேரியரை கொண்டு போய் வேப்பமரத் திண்ணையின் மீது வைத்தாள். சுற்று வட்டாரத்தில் யாருமே தென்படவில்லை.
“அந்தப் பக்கம் இருப்பாங்க போலிருக்கு. வா போவோம்” என்று சொல்லிக்கொண்டே ராஜி கீற்றுக் கொட்டகையின் வலது பக்கம் நடந்தாள். நானும் அவள் பின்னாலேயே நடந்தேன். அந்தப் பக்கம் விதவிதமான காய்கறிச் செடிகள் இருந்தன. முளைக்கீரை, காலி•பிளவர், முட்டை கோஸ் எல்லாமே இருந்தன. ஒரு பக்கம் பதப்பட்ட நிலத்தில் கிருஷ்ணனும் இரண்டு ஆட்களும் சேர்ந்து வரிசையாக நாற்றை நட்டுக் கொண்டிருந்தார்கள்.
“அவை என்ன?” ராஜேஸ்வரியிடம் கேட்டேன்.
“கத்தரியும், தக்காளியும்” என்றாள் ராஜேஸ்வரி.
குனிந்து வேலை செய்து கொண்டிருந்ததால் பின்னால் வந்து நின்று கொண்டிருந்த எங்க இருவரையும் அவர்கள் பார்க்கவில்லை.
“அண்ணா! சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்.” ராஜேஸ்வரி குரல் கொடுத்தாள்.
ராஜேஸ்வரியின் குரல் ஏற்கனவே மென்மையாக இருக்கும். அண்ணனிடம் பேசம்போது பணிவும், அன்பும் சேர்ந்து அக்குரல் இன்னும் இனிமையாக ஒலிக்கச் செய்யும். அண்ணனிடம் பேசும்போது சிலசமயம் அவள் குரலில் ஒரு விதமான உரிமை வெளிப்படுவதை கவனித்திருக்கிறேன்.
இரண்டு கைகளிலும் மண் படிந்த நிலையில் கிருஷ்ணன்ன அப்படியே திரும்பிப் பார்த்தான். அன்பு ததும்பும் பார்வையால் தங்கையின் பக்கம் அவன் கண்கள் பக்கத்திலேயே நின்றிருந்த என்னைப் பார்த்ததும் சுருங்கியதோடு உடனே வேறு பக்கம் திரும்பி விட்டன.
“இதோ வருகிறேன்” என்றவன் மறுபடியும் வேலையில் மூழ்கிவிட்டான்.
ராஜேஸ்வரியும் நானும் மறுபடியும் வேப்பமரத்திற்கு அருகில் வந்தோம். நான் திண்ணையின் மீது அமர்ந்துகொண்டேன். ராஜேஸ்வரி வாழையிலையை எடுத்து வந்து சுத்தம் செய்து கேரியருக்கு பக்கத்தில் வைத்தாள். கீற்றுக் கொட்டகையிலிருந்து டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்தாள். அதற்குள் கிருஷ்ணன் கைகால்களை அலம்பிக்கொண்டு அங்கே வந்தான். அலட்சியமாக அங்கேயே உட்கார்ந்து கொள்வோம் என்று நினைத்தாலும் என்னால் முடியவில்லை. எழுந்து போய் ராஜேஸ்வரியின் பக்கத்தில் நின்று கொண்டேன். அண்ணன் சாபிட உட்கார்ந்து கொண்டதும் ராஜேஸ்வரி கேரியரை திறந்து உணவைப் பரிமாறினாள். அவன் சாப்பிட்டு முடிக்கும் வரையில் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தாள்.
கிருஷ்னனுக்கு பின்னால் சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த நான் அவனையே கவனமாக பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னாலிருந்து பார்க்கும்போது அந்தத் தோள்களும், அகலமான முதுகும் வலிமை மிகுந்தவைப்போல் தோன்றின. எவ்வளவு வேகமாக, அலட்சியமாக சாப்பிடுகிறான்?
அவனுக்கு வேண்டியது உணவு. அதை எதில் சாப்பிடுகிறோம், எங்கே உட்கார்ந்து சாப்பிடுகிறோம் என்ற நினைப்பே இருப்பதுபோல தெரியவில்லை. இங்கே டைனிங் டேபிள் இல்லை. பளபளவென்று மின்னும் கண்ணாடி பாத்திரங்கள் இல்¡ல. எங்களுக்கு அவை உணவில் ஒரு பகுதியாகத் தோன்றும். உணவு மேஜையின் விரிப்பை மாற்றாமல் எங்களுக்கு உணவு பரிமாறினான் என்பதற்காக சமையல்காரனை அம்மா வேலையை விட்டு நீக்கிய சம்பவம் என் நினைவுக்கு வந்தது.
“இனி கிளம்புவோமா?”
ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த என் அருகில் வந்துகொண்டே ராஜேஸ்வரி கேட்டாள்.
திடுக்கிட்டு சுற்றிலும் பார்த்தேன். கிருஷ்ணன் சாப்பிட்டு முடித்துவிட்டான் போலும். மறுபடியும் வேலையைப் பார்க்க போய்க் கொண்டிருந்தான். இங்கே நான் வந்து இத்தனை நேரம் ஆகிவிட்டது. அவன் என்னை ஏறெடுத்துப் பார்க்கவும் இல்லை. வாய் திறந்து ஒரு வார்த்தை என்னிடம் பேசவும் இல்லை. நான் இருப்பதையே கண்டு கொள்ளாதவன் போல் போய் விட்டான். வேறு யாராவதாக இருந்தால் தோட்டத்தைச் சுற்றிக் காட்டியிருப்பார்களாக இருந்திருக்கும்.
ராஜேஸ்வரி திடீரென்று “அட! மறந்துபோய் விட்டென். இப்பவே வந்து விடுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே கிருஷ்ணன் போன திசையில் வேகமாகச் சென்றாள். பத்து நிமிடங்கள் கழித்து புடவைத் தலைப்பில் எதையோ மூட்டைக் கட்டிக் கொண்டு வந்தாள்.
“என்னது?” என்றேன்.
“மல்லிகை மொட்டுகள்” என்றாள்.
இருவரும் சேர்ந்து வெளியே வந்தோம். ராஜேஸ்வரி வழியில் ஏதேதோ கேட்டுக்கொண்டே வந்தாள். நான் வரும் போது சொன்ன அளவுக்கு உற்சாகமாக பதில் சொல்லவில்லை.
“அதோ… வாய்க்கால் வருகிறது. உன் செருப்பைக் கழற்றி கையில் பிடித்துக்கொள்.” ராஜேஸ்வரி முறுவலித்தாள்.
நான் சிரிக்கவில்லை. செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டு புடவையை லேசாக தூக்கிப் பிடித்தபடி வாய்காலைத் தாண்டும்போது கேட்டேன். “ராஜீ! உங்க அண்ணாவுக்கு நான் இங்கே வருவதில் விருப்பம் இல்லையா? உண்மையைச் சொல்லு.”
முன்னால் நடந்து கொண்டிருந்த ராஜேஸ்வரி சட்டென்று நின்றுவிட்டாள். “ஏன் அப்படி கேட்கிறாய்?” என்று கேட்டாள்.
“நானும் வந்தது முதல் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். நீங்கள் எல்லோரும் இவ்வளவு அன்போடு பழகுறீங்க. நான் உங்களுக்குப் புதியவள் என்றோ, நீங்க எனக்குப் புதுசு என்ற நினைப்போ வரவே இல்லை. இன்று நான் உங்களுடைய தோட்டத்திற்கு வந்திருக்கிறேன். மரியாதைக்காகக் கூட ஒரு வார்த்தை உன் அண்ணன் பேசவில்லை. யார் மீதாவது கோபமோ, துவேஷமோ இருந்தால் தவிர இப்படிப் பேசாமல் இருக்க மாட்டார்கள்.”
“அண்ணீ!” ராஜேஸ்வரி என் கையைப் பிடித்துக் கொண்டாள். அவள் முகம் சிவந்து கன்றிருந்தது. “அப்படி எதுவும் இல்லை. அண்ணனுக்கு கொஞ்சம் சங்கோஜம் அதிகம். அதைத் தவிர வேறொன்றும் இல்லை” என்றாள்.
“சங்கோஜப் பேர்வழியா இல்லை திமிர் பிடித்த ஆசாமியா?” என்றேன் இடைமறிப்பது போல்.
“நீதான் இங்கே இருக்கப் போகிறாயே. எங்க எல்லோரையும்விட அவன்தான் நன்றாகப் பேசுகிறான் என்று நீயே ஒப்புக்கொள்வாய்.” அவசர அவசரமாகச் சொன்னாள்.
“தேவையில்லை. ஒருமுறை அலட்சியம் செய்தவர்களை நான் மறுபடியும் வாழ்க்கையில் ஏறெடுத்தும் கூடப் பார்க்க மாட்டேன். ராஜீ! இதை என்னுடைய பலவீனம் என்று நினைத்துக் கொண்டாலும் சரி. பெரும்பாலும் முதல் பார்வையிலேயே எனக்கு ஒரு ஸ்திரமான அபிப்பிராயம் ஏற்பட்டு விடும். அது லேசில் மாறிவிடாது. உண்மையைச் சொல்லணும் என்றால் உங்க அண்ணாவை எனக்குப் பிடிக்கவில்லை. வா போகலாம். இனி இந்தப் பேச்சை நாம் எடுக்க வேண்டாம்.” திடமான குரலில் சொன்னேன்.

(தொடரும்)

Series Navigation