முற்றும் இழத்தல்

This entry is part [part not set] of 32 in the series 20060210_Issue

ஏ.எம். குர்சித்


வாசலில் புழுதி அடங்க தண்ணீர் தெளித்தபோது
எதிர்வீட்டு தடித்த பையன்
தலை தெறிக்க வந்து சொன்னான்
நீ விபத்துபட்ட செய்தியை.

கை-கால்-மார்பு-வயிறு எங்கெனும் ரெக்கை பிறக்க
தறிகெட்டு உன்புறம் ஏகினேன்
நீ ஆஸ்பத்திாிக் கட்டில் நெடுகிலும் பரவயிருந்தாய்
உன் மண்டை பிளந்த தடத்தில் ஈக்கள் மொய்த்தன
உனக்கான உயிர்காப்பு போராட்டமும் தொடங்கியிருந்தது.

உடம்பில் எல்லா அணுக்களும் உறைந்து நிற்க
கடிகாரத்தின் முள் நெஞ்சில் உதைப்பதாக
சுரத்தற்று அங்குமிங்கும் அலைவுற்றேன்.

சொட்டு சொட்டாய் உள்ளிறங்கும் சேலைன்
உட்சுவாசம் சீர்பெற பொருத்திய சிலிண்டர்
வெள்ளைகோட் மருத்துவர்களின் முயற்சிஸ
வியர்வை கசியும் நோ;ஸ்களின் பரபரப்புஸ
சாந்தம் பெற்ற கடவுளிடம் சேவித்த
என் ஆயிரம் ஜெபங்கள்..
எல்லாவற்றையும் புறக்கணித்து
வாயைப் பிளந்தபடி இறந்துதான் போனாய்.

நெருப்பு வாகைப்பூ நிறத்தில் சூாியன் கிடந்த மாலை
உனைப் புதைத்து கைமண் தட்டினர்
கிாியைகள் முடித்து பல திசை பெயர்ந்தனர்

இனி என்ன தொடங்கிற்று என்பாடு
கறையான் கரைத்து பரணில் கிடந்த
தூசு நிறைந்த சம்பிரதாய வழிநின்று
பசுமை குழைத்து செப்பனிட்ட என் சந்தோசமும்
பூக்கள் தலைநீட்டும் கனவு
பனிக்கட்டிகள் தளம்பும் என் எதிர்பார்ப்பு
அத்தனையையும் ஒரு கோணிப்பையில் அடைத்து
கண்ணுக்கு புலப்படா தூரம் விசைகூட்டி விசுக்கினர்
உணர்வுகளின் தலைசிரைத்து உடலை மட்டும்
ஒளியின் சிறுகூறையேனும் அனுமதியா அறையில் இட்டனர்

உனக்கென்ன
நீ ஆழப் பெருங்குழியில்
நித்திய சொரூபியாகியிருப்பாய்
நான் இங்கு செத்துச் செத்து பிழைக்கிறேன்.

ஏ.எம். குர்சித், இலங்கை

Series Navigation