முனைவர் கோவூர் பகுத்தறிவூட்டிய இலங்கையின் மூடநம்பிக்கை ஆட்சியாளர்கள்!

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

தமிழநம்பி


உலகப்புகழ் பெற்ற பகுத்தறிவாளரும் மாந்தநேய மன மருத்துவருமாகிய முனைவர் ஆபிரகாம் தொ. கோவூர் இந்தியாவிலுள்ள கேரளமாநிலத்தில் 1898இல் பிறந்தவர். கேரளாவில் பள்ளிப்படிப்பை முடித்தபின், கல்கத்தாவில் கல்லூரிப் படிப்பை முடித்தார். அதன்பின் கோட்டயம் கல்லூரியில் இரண்டாண்டுகள் உதவி விரிவுரையாளராகப் பணிபுரிந்தபின், 1928இல் அருள்திரு பி.டி. கேசு அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்குச்சென்றார்.

1928இல் யாழ்ப்பாணம் நடுவண் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். 1943இல் இக் கல்லூரியினின்றும் விலகி கல்லியிலுள்ள இரிச்மான்டு கல்லூரியிலும் பின்னர் மவுண்டு வினியாவிலுள்ள தூய தாமசு கல்லூரியிலும் பணியாற்றினார். அதன்புறகு, கொழும்பு தர்சுட்டன் கல்லூரியில் அறிவியல் துறைத் தலைவராகப் பணியாற்றி 1959இல் பணி நிறைவு செய்தார்.

கல்லூரிப் பணி முடித்த பின்னர், ஆவிகள் ஆதன்களின் தொடர்பான விந்தை நிகழ்வுகள் பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொண்டு எழுதியும் பேசியும் வெளிப்படுத்தித் தெளிவுறுத்தி வந்தார். எஞ்சிய வாழ்நாள் மழுவதும், பகுத்தறிவூட்டும் பணிகளிலும் மாந்தநேய மன மருத்துவப்பணிகளிலும் ஈடுபட்டார்.

இயல்பிகந்த(வியக்கத்தக்க) ஆற்றல் உடையவராகக் கூறிக் கொள்பவர்கள் ஏமாற்றுக் காரர்களாகவோ மன நோயர்களாகவோ இருப்பர் எனபதை, அறியாமையில் உழலும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென கோவூர் விரும்பினார்.

அதற்காகவே, இயற்கையிகந்த வியக்கத்தக்க ஆற்றல்களைப் பெற்றுள்ளதாகக் கூறும், உலகின் எந்தப் பகுதியிலுள்ள எவரும், மோசடியின்றி செய்ம்முறைகள் மூலம் மெய்ப்பித்துக் காட்ட முடியுமானால், அவருக்கு ஓரிலக்க உருவா பரிசளிக்க அவர் அணியமாய் இருக்கிறார் என்ற அறிவிப்பை வெல்விளி(challenge)யாகக் கூறினார். தான் இறக்கும் வரையில், அல்லது இதன் தொடர்பான முதல் வெற்றியாளரைக் காணும் வரையில், இந்த அறிவிப்பு செயற்பாட்டிலிருக்கும் என்றும் அறிவித்தார்.

ஏறத்தாழ 50ஆண்டுகள் இலங்கையில் வாழ்ந்து மூடநம்பிக்கையை ஒழிக்கப் பாடுபட்டார். இறுதியில், 1978 செப்டம்பர் 18ஆம் நாள் தம் 80ஆவது அகவையில், கொழும்பில் காலமானார்.

முனைவர் கோவூர், மக்களுக்குத் தெளிவூட்டியும் மூடநம்பிக்கைகளை எதிர்த்தும் இலங்கை மண்ணில் இருந்து, அயராது போரிட்டார். அந்த “இலங்கையை இன்று ஆளுகின்றவரும் இதற்குமுன்பு ஆட்சி செய்தவரும் போட்டி போட்டுக் கொண்டு இன்று பகுத்தறிவைப் புறக்கணித்து விட்டு, கணியர்களிடம் கருத்தறிந்து நடப்பதை இயல்பான வழக்க மாக்கிக் கொண்டிருக் கிறார்கள்.

மலையாளத் தந்திரிகளான கணியர்களிடம் நம்பிக்கை தரும் சொற்களைக் கேட்டுப் பகற்கனா காண்பதையும், கழுவாய் தேட கோயில்களுக்கும் கடவுளராகக் கூறப்படுவாரின் இருப்பிடங்களுக்கும் துய்தச்செலவு மேற்கொள்வதையும் இவர்கள் இப்போது வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். சோனியா காந்தியையும் மன்மோகன் சிங்கையும் எம்.கே.நாராயணனையும் சந்திப்பதைப் போலவே இவற்றையும் இவர்கள் செய்து வருகிறார்கள். தமிழர்களுக்கு எதிரான போரில் வெற்றி அடைவதற்கான எந்த ஒரு வழியையும் விட்டுவைக்கவில்லை” – என்று கருத்துரை(Opinion) இதழின் எழுத்தாளர் அம்பலம் எழு்துகிறார்.

இந்த வகையில், இப்போது, இலங்கை அரசுத் தலைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது. இரனில் விக்கிரமசிங்கே கேரளாவிலுள்ள குருவாயூர் கோயிலின் நெடுநாளைய ஆர்வம் மிகுந்த பத்தராம்! அரசுத் தலைவர் தேர்தலில் இரனிலை எதிர்த்து வெற்றிபெற்ற பின், மகிந்தா இராசபக்சே 2006 சனவரியில் குருவாயூர் வந்து நெய்யளித்துத் ‘துலாபாரம்’ சடங்கு நடத்துவதை ஒரு நேர்த்திக்கடனாகவே செய்தார்.

அண்மையில் இந்தியாவந்த இரனில், தில்லியில் அரசியற்காரர்களையும் அதிகாரிகளையும் பார்த்துப் பேசிய பிறகு, காரி(சனி)யி்னால் (!) ஏற்படும் இடர்களிலிருந்து விடுபடத் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டி வட்டத்தில் தொலைவிலுள்ள இடமான திருக்கோலிக்காட்டில் உள்ள கோயிலுக்கு துய்தச்செலவு மேற்கொண்டார்.

கவனிக்கப்படாதிருந்த அந்தக் கோயிலும் அதிலுள்ள காரி(சனிபகவான்) திருமுன்னும் புதியதாக தொன்ம(புராண) காரணங்கள் கண்டுகாட்டிப் பலரும் அறியுமாறு செய்யப்பட்டிருந்தன. யாரோ கணியம் பார்ப்போரின் (சோசியர்) அறிவுறுத்தலின் பேரில் இரனில் இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறார். இரனிலின் வருகை தமிழ்நாட்டுக் காவல், உளவுத்துறையினரால் மிகக் கமுக்கமாக வைக்கப்பட்டிருந்த போதிலும், ஊர் மக்களுக்கு எப்படியோ செய்தி தெரிந்து, அவர்கள் ஏழு இடங்களில் அவரை வழிமறித்துக் கொந்தளிப்பான கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.

கொரடாச்சேரி என்னுமிடத்தில் வண்டி மாடுகளைச் சாலையின் குறுக்கே நிறுத்திக் கிளர்ச்சி செய்தார்கள். இரனில் கோயிலை அடைந்த போது, அவர் ஐந்நூறு பேர்கொண்ட கும்பலை நேர்கொள்ள வேண்டியிருந்தது; அவர்களில் பெண்கள் பேரெண்ணிக்கையினராய் இருந்தனர். கும்பலைக் கட்டுப்படுத்தக் காவலர்கள் போதவில்லை.

கோயிலிலிருந்து திரும்புகையில், தமிழர்கள் உரிமைபெற உதவுவதாகக் கூறிக்கொண்டே பதற்றத்துடன் தப்பிச்செல்ல வேண்டியதாயிற்று.

அரசியல்காரர்களை எல்லாநேரங்களிலும் ஏமாளிகள் ஆக்குவது கணியர்கள் மட்டுமே, அல்லர். மக்கள் ஏமாளிகளாக இருப்பதால், உளவுத் துறையினரும் கொளகையற்ற அரசியல் காரரரும் கணியர்களைப் பயன்படுத்தித் தம்முடைய அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, கணியத்தின் வழி உளத்தியல் தாக்கம் உண்டாக்கு கின்றனர்.

தேர்தல் நேரங்களில் எழுதப்படும் கணியப் பலன்கள் அரசியல் நோக்கம் உடையவையே.

————————

நன்றியுரைப்பு:

Tamilnet.com இணையதளத்திற்கு!


thamizhanambi44@gmail.com

Series Navigation

தமிழநம்பி

தமிழநம்பி