மீண்டும் அலைமோதும் அண்ணா நினைவுகள்

This entry is part [part not set] of 29 in the series 20060915_Issue

மலர் மன்னன்


செப்டம்பர் 15 நெருங்கி வருவதால் ஒரு சம்பிரதாயம் போல அண்ணாவின் பிறந்த நாளைக் கொண்டாடுபவர்களின் முஸ்தீபுச் சடங்குகள் ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் முன்பு அண்ணாவைப் பற்றி நான் எழுதியதைப் படித்துவிட்டு மேலும் மேலும் அவரைப் பற்றி எழுதுமாறு வந்த மின்னஞ்சல்களின் விருப்பத்தை இப்போது பூர்த்தி செய்ய விழைகிறேன். ஏனெனில் அண்ணாவைப் பற்றிச் சொல்வதற்கு என்னிடம் நிறையவே விஷயங்கள் உள்ளன.

அண்ணா மறைந்தபோது கண்ணதாசன் கதறி அழுதார். சம்பத் கண் கலங்கினார். ஏனெனில் அவர்கள் அண்ணாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றிருந்தனர். அண்ணா
வுடன் எவ்வளவுதான் கருத்து வேறுபட்டிருந்தாலும் அவரோடு சிறிதேனும் பழகியிருந்தால் அவரை நினைத்து மனம் நெகிழாமல் இருப்பது சாத்தியமேயில்லை. ஜயகாந்தனுக்கு அப்படியொரு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. வாய்த்திருந்தால் அவரும் கண்ணதாசன்போல் கதறியழுதிராவிடினும் சம்பத் போல் கண் கலங்கியிருப்பார். இரங்கல் கூட்டத்தில் வறட்டு அறிவுஜீவி நெஞ்சுடன் அண்ணாவை விமர்சனம் செய்திருக்க மாட்டார். தமிழ் நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கம் தலையெடுக்காமல் போனதற்குக் காரணமாக இருந்தவர் அண்ணா. அந்தக் கோப தாபம் ஜயகாந்தனுக்கு ஏற்பட்டிருக்குமாயின் அது இயற்கையே. என்னதான் ஒதுங்கி வந்தாலும் கம்யூனிஸ்டுகள்பால் அவருக்கு ஒரு பலவீனம் இருப்பதும் நியாயமே. அதனால் அண்ணாவின் மீது அவருக்கு மிகக் கடுமையான விமர்சனம் இருப்பதும் நியாயந்தான். எனக்குந்தான் அண்ணா மீது விமர்சனங்கள் உண்டு. தமிழர்களின் சில தலைமுறைகள் ரசனை கெட்டொழிந்தமைக்கு அண்ணாவும் பொறுப்பாளி என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அதன் பின் விளைவுகள் இன்றளவும் தொடர்வதும் எனக்குத் தெரியும். ஆனால் அண்ணாவுக்கு துவேஷம் என்பதே இருந்ததில்லை என்பதை அறிந்துள்ளேன். அதேபோல் அவரை அறிந்தோர் அவரை துவேஷிக்க மாட்டார்.

கண்ணதாசன், எம் ஜி ஆர் போன்றவர்கள் தி மு கவில் இருந்தமைக்கு அண்ணாவின் இந்த அன்பே உருவான சுபாவந்தான் காரணம். ஒருவேளை ஜயகாந்தனும் தற்செயலாக அண்ணாவைச் சந்தித்துச் சிறிது நேரம் அண்ணாவோடு பழக நேரிட்டிருப்பின் அவரும் சொற்ப காலமேனும் தி மு கவில் இருந்துவிட்டிருக்கக் கூடும். அப்படியொரு ஆகர்ஷணம் அண்ணாவின் பாச உணர்வில் இருக்கத்தான் செய்தது.

ஒருவரிடம் இறுதியாக இருந்த எண்ணப் போக்கை வைத்துத்தான் அவரைப் பற்றிய முடிவுக்கு வருவது சரியாக இருக்கும். ஆரிய மாயையையும் கம்ப ரசத்øயும் தீ பரவட்டுமையும் ரோமாபுரி ராணிகளையும் வைத்து அண்ணாவை மதிப்பீடு செய்வதில் பயனில்லை. அவர் அவற்றையெல்லாம் கடந்து நெடுந்தூரம் வந்துவிட்டிருந்தார் என்பதை அறிந்திருக்கிறேன். வாஸ்தவந்தான், அவர் அவற்றைத் திரஸ்கரித்திருக்க வேண்டும்தான். அவருக்கு அது தோன்றாமற் போயிற்றென்றே எனக்குத் தோன்றுகிறது. எவரேனும் கோரியிருப்பின் அவர் சிறிதும் தயக்கமின்றி அவற்றை டிஸ் ஓன் செய்திருக்கக் கூடும். எவருக்கும் அப்படிக் கோரவும் தோன்றவில்லைதானே.

அண்ணா அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சமயத்தில்தான் குமரி முனையில் விவேகானந்தர் தியானம் செய்த பாறையின் மீது அவருக்கு நினைவாலயம் அமைக்கும் முயற்சியினை ஆர் எஸ் எஸ் பேரியக்கம் மேற்கொண்டது. குருஜி கோல்வால்கர் அவர்கள் அப்படியொரு தேவையின் அவசரத்தை உணர்ந்து விவேகானந்த கேந்திரம் என்ற பெயரில் ஓர் அமைப்பினைத் தோற்றுவித்துப் பொறுப்பினை ஏகநாத் ரானடே என்ற செயல் வீரரிடம் ஒப்படைத்தார்கள். ஏனெனில் விவேகானந்தர் தியானித்த பாறையினை செல்வாக்கு மிக்க கிறிஸ்தவ லாபி ஆக்ரமித்து கிறிஸ்தவ நினைவுச் சின்னமாக அதனை உருமாற்றத் திட்டமிட்டு அதில் வெற்றி காணும் அளவுக்கு முன்னேறத் தொடங்கியிருந்தது! நினைத்துப் பாருங்கள், குமரியன்னை நித்தம் தவம் செய்யும் முனையில் கிறிஸ்தவ நினைவுச் சின்னம். காலப் போக்கில் குமரியன்னையே கன்னி மேரியாகவும் சித்தரிக்கப்படக்கூடிய நிலைமை உருவாவதற்கான வாய்ப்பு! பாரத கலாசாரத்திற்கு இப்படியொரு அறைகூவல் எழுந்த காரணத்தால்தான் ஆர் எஸ் எஸ் பேரியக்கம் விவேகானந்தர் தியானம் செய்து தனது நோக்கம் இன்னதென அறிந்துகொண்ட பாறையில் அவருக்கு நினைவாலயம் அமைப்பதன் மூலம் கன்னியாகுமரி கலாசார உருமாற்றம் பெறும் நிலையினைத் தவிர்க்க முற்பட்டது. இவ்வாறாக பாரதத்தின் வடக்கு மூலையிலிருக்கும் காஷ்மீரை பாரதத்திற்கு மீட்டுத் தந்த குருஜி கோல்வால்கர்தான் பாரதத்தின் தென்கோடி
யையும் பாரதக் கலாசாரத்திற்கு மீட்டுத் தந்தார்கள்.

தேசியம் பேசும் காங்கிரஸ்தான் அப்போது தமிழ் நாட்டை ஆண்டு வந்தது. ஆனால் குமரி முனைப் பிரச்சினையின் தீவிரத்தை உணராமல், விவேகானந்தர் நினைவாலயம் அமைய அனுமதித்தால் விவேகானந்த கேந்திரம் குமரி முனையில் செயல்படத் தொடங்கி, அதன் வழியாக ஆர் எஸ் எஸ்ஸின் செல்வாக்குப் பெருகிவிடும்; அதற்கு இடந்தரலாகாது என்கிற குறுகிய மனப்பான்மையுடன் பக்தவத்சலம் தலைமையில் இயங்கி வந்த காங்கிரஸ் அரசு விவேகானந்தர் நினைவாலயம் அமைவதற்கு முட்டுக் கட்டை போடத் தொடங்கியது. ஒருவேளை கிறிஸ்தவ வாக்கு வங்கியை இழக்கலாகாது என்பதற்காகவும் காங்கிரஸ் அரசு அவ்வாறு தடங்கல் செய்திருக்கக் கூடும்.

செயல் திறம் மிக்க ஏகநாத்ஜி, குருஜியிடம் ஆலோசனை கலந்து தமிழ் மாநில காங்கிரஸ் அரசு போட்ட முட்டுக் கட்டையை அகற்றும் பணியை மேற்கொண்டார். குருஜி வகுத்துத் தந்த திட்டத்தின் பிரகாரம் குமரி முனையின் விவேகானந்தர் பாறையில் விவேகானந்தர் நினைவாலயம் அமைக்கக் கோரும் மனு ஒன்றை ஏராளமான பாராளுமன்ற உறுப்பினர்
களைக் கொண்டே மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கும் முயற்சியில் ஏகநாத்ஜி இறங்கினார்.

அந்தச் சமயத்தில் அண்ணா அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்ததால் கையொப்பத்திற்காக ஏகநாத்ஜி அவரை அணுகியபோது, அண்ணா அவர்கள் சிறிதும் தாமதியாமல், விவேகானந்தருக்குத் தமிழ் நாட்டின் குமரி முனையில் நினைவாலயம் அமைவது மிக மிகப் பொருத்தம்; அது தமிழருக்குப் பெருமை தருவதாகும் எனக் குறிப்பிட்டு மனுவில் உடனே கையொப்பமிட்டார்கள். நினைவாலயம் அமையத் தமது கட்சியின் ஆதரவையும் தெரிவித்தார்கள். மேலும், ஏகநாத்ஜி கேட்பதற்கு முன்னதாகவே தமது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும்அந்த மனுவில் கையொப்பமிடுமாறு பணித்தார்கள். மட்டுமல்ல, இன்னும் நான் என்ன செய்ய வேண்டும் என்றும் ஏகநாத்ஜியிடம் கேட்டார்கள். நெகிழ்ந்துபோன ஏகநாத்ஜி, விழாக் குழுவில் அண்ணா இடம் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதற்கு எம் அண்ணா அவர்கள் தமிழக சட்டசபையில் தற்பொழுது எதிர்க் கட்சித் தலைவராக இருப்பது எமது கட்சியைச் சேர்ந்தவர்தான். அவரே இடம் பெறட்டும்; அது மேலும் பொருத்தமாகவும் எமது கட்சியின் அதிகாரப் பூர்வ ஆதரவாகவும் இருக்குமென்று சொல்லி விழாக்குழுவில் சேருமாறு நெடுஞ்செழியனைப் பணித்தார்கள்.

திருவல்லிக்கேணியில் விவேகானந்த கேந்திரம் அமைந்துள்ள சிங்கராசாரி தெருவிற்கு வெகு அருகாமையில் வசிக்கும் வாய்ப்பு பிற்காலத்தில் எனக்குக் கிடைத்தபோது கேந்திரத்திற்குச் செல்வதும் அவ்வப்போது ஏகநாத்ஜி அவர்களைச் சந்திப்பதும் உண்டு.
1982ல் ஏகநாத்ஜி திடீரென மாரடைப்பால் மறையும் வரை எனக்கு அவருடன் தொடர்பு இருந்தது. ஒரு சமயம் அண்ணாவைப் பற்றிப் பேச்சு வந்தபோது இத்தகவலைச் சொல்லி அண்ணாவின் பண்பையும் உணர்வினையும் வெகு நேரம் பாராட்டிக் கொண்டிருந்தார், ஏகநாத்ஜி.

அண்ணா அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறேன்:

1965ல் பாகிஸ்தான் படையெடுத்தபோது, பிரதமரக இருந்த லால் பஹதூர் சாஸ்த்ரி அவர்கள் ஒரு சர்வ கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் ஏராளமான மக்களின் மரியாதைக்கும் நம்பிக்கைக்கும் உரிய தலைவர்களையும் கூட்டத்தில் பங்கேற்குமாறு சாஸ்த்ரிஜி வேண்டினார்கள். அவரது அழைப்பினை ஏற்று ஆர் எஸ் எஸ் பேரியக்கத்தின் சர்சங்க சாலக் குருஜி அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

கூட்டத்தில் அண்ணா அவர்களும் குருஜியவர்களும் அருகருகே அமர்ந்திருந்தார்கள். பேச்சாற்றல் மிக்க அண்ணா அவர்கள் கூட்டத்தில் எழுச்சி மிக்க உரையாற்றினார்கள். உரையை முடித்துக் கொண்டு திரும்பி வந்து அமர்ந்த அண்ணாவை, இத்தனை உத்வேகமிக்க ஒரு தேசியவாதியை இதுவரை நான் காணவில்லை என்று குருஜி பாராட்டினாராம். வெறும் இரும்புத் துண்டு கூடக் காந்தம் அருகில் இருந்தால் தானும் காந்த சக்தியைப் பெற்று விடுவதில்லையா, நான் உங்கள் அருகில் அல்லவா இருக்கிறேன் என்று எம் அண்ணா அவர்கள் தமக்கே உரிய குறும்புச் சிரிப்புடன் அதற்குப் பதில் சொன்னாராம்.

நாஞ்சில் மனோகரன் ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் தெரிவித்த தகவல் இது. 1972 ல் நான் அடிக்கடி சந்திக்க நேர்ந்த அரசியல்வாதிகளில் மனோகரனும் ஒருவர். 1962 லிருந்தும் அதன் பிறகும் மக்களவை உறுப்பினராகத் தொடர்ந்த மனோகரன், திராவிட இயக்க வழமை
களுக்குப் பொருந்தாதவர். ஆனால் அதிலேயே தொடர்ந்து நீடித்துப் பல பதவி
களையும் பெற்று வந்தவர்.

இனி அண்ணா அவர்கள் தமிழக முதலமைச்சராக இருந்த போது நிகழ்ந்த ஒரு சிறு சம்பவத்தைச் சொல்கிறேன்:

அப்போதெல்லாம் சட்டப் பேரவைக்கு மேலே மாடியில் சிறிய அறையில்தான் மேலவை செயல்பட்டு வந்தது. கூட்டம் பிற்பகலில்தான் நடைபெறுவது வழக்கம். இப்போதுள்ளது போன்ற காவலர் கெடுபிடிகள் எல்லாம் அன்று கிடையாது. மேலவை வாயிலில் ஒரேயொரு சப் இன்ஸ்பெக்டர் நிலையில் உள்ள காவல் துறை அதிகாரி சம்பிரதாயத்திற்குக் காவல் செய்வார்.

அண்ணா அவர்கள் தமக்கே உரிய வழக்கப்படி மேலவைக் கூட்டத்திற்கும் சிறிது தாமத
மாகத்தான் வருவார்கள். எம் அண்ணா குள்ள வடிவினர். கட்டை குட்டையாக இருப்பார். அவர் அவசரமாக வரும்போது பார்த்தால் உருண்டுருண்டு வருகிற மாதிரிதான் இருக்கும். அந்த அழகைப் பார்த்து ரசிப்பதற்காகவே அவர் வரும் வரை நிருபர்கள் வாசலில் நிற்போம்.

ஒருமுறை முதல்வர் அண்ணா அவர்கள் மேலவைக்கு அவசர அவசரமாக வந்தபோது வாசலில் காவல் காத்து நிற்க வேண்டிய சப் இன்ஸ்பெக்டர், முதலமைச்சர் வருகையில் எச்சரிக்கையுடன் விறைப்பாக நின்று சல்யூட் அடிக்க வேண்டிய அந்தக் காவல் துறை அதிகாரி, வேறெங்கோ பராக்குப் பார்த்தவாறு, வாயிலை மறித்துக்கொண்டும் நின்றிருந்தார். வாயிலை அடைந்த முதலமைச்சர் அண்ணாவோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வழி மறித்து நின்ற காவல் துறை அதிகரியைச் சற்றே ஒதுக்கிவிட்டு, அவர்பாட்டுக்கு விடுவிடுவென மேலவைக்குள் நுழைந்துவிட்டார்கள்.

தன்னை விலக்கிக் கொண்டு உள்ளே பிரவேசித்தவர் மாண்புமிகு முதலமைச்சரேதான் என்று கண்டுகொண்ட அந்த காவல் துறை அதிகாரி, வெலவெலத்துப் போனார். ஐயோ, தப்பாகிப் போச்சே சார், இப்ப என்ன சார் பண்றது, என்ன ஆகப்போகுதோ என் கதி என்றெல்லாம் பத்திரிகை நிருபர்களான எங்களிடம் புலம்பத் தொடங்கினார், அந்த அதிகாரி.
கவலைப் படாதீர்கள், அண்ணா அவர்கள் இதையெல்லாம் பெரிதுபடுத்தக் கூடியவர் அல்ல என்று அவருக்கு ஆறுதல் சொன்னோம். நாங்கள் சொன்னது போலவே அப்படியொரு நிகழ்ச்சி நடந்ததாகவே அண்ணா காண்பித்துக் கொள்ளவில்லை. தனக்கு ஓலை வரப்போகிறது என மறுநாள் வரை தவித்துக் கொண்டிருந்த அதிகாரி அதன் பிறகுதான் நிம்மதியடைந்தார்.

அண்ணா முதல்வராக இருந்த சமயம் கண்ணதாசன் ஒரு பெரும் தொண்டர் படையுடன் கறுப்புத் துணியேந்தி கண்டனப் பேரணி நடத்தினார். அச்சமயம் மவுண்ட் ரோடு
ரவுண்டாணாவில் அண்ணாவின் சிலை திறக்கப்பட்டுவிட்டிருந்தது. பேரணி நடத்திய கண்ணதாசன் அண்ணா சிலையினைக் கடக்கையில் கையிலிருந்த கருப்புத் துணியை சிலையின் காலடியில் வீசியெறிந்துவிட்டு முன்னேறினார். மற்றவர்களும் அவ்வாறே செய்தனர். இதுபற்றி விவரம் அறிந்த எம் அண்ணா, பரவாயில்லை, நான் இறக்கும்போது கண்ணதாசன் எவ்வளவு தூரம் துக்கம் அனுசரிப்பார் என்பதை இப்போதே தெரிந்துகொள்ள முடிந்தது என்று சொன்னார். அண்ணா இவ்வாறு சொன்னதைக் கேள்வியுற்ற கண்ணதாசன் அப்போதே கதறியழுதவர்தான்.

என் தந்தையும் தாயும் மறைந்தபோது ஏன் இப்படிச் செய்தீர்கள் எனக் கண் கலங்கினேன். ஆனால் அண்ணா அவர்கள் மறைந்தபோது கதறியழுதவர்களில் நானும் ஒருவன் என்பதை பகிரங்கப் படுத்துவதில் எனக்கு ஒருசிறிதும் தயக்கமோ வெட்கமோ இல்லை.


Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்