மிராண்டாவைப் பார்த்து மிரண்டவர்கள்

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

அசுரன்


நம் நாட்டில் அவ்வப்போது செய்தித்தாள்களில் மக்களுக்குப் பலனுள்ளதான அதேவேளை சுவாரசியமானதான செய்திகள் இடம்பெறும். கடந்த சூன் 12ஆம் நாள் இத்தகைய செய்தியொன்றைப் படிக்க நேர்ந்தது.

சென்னை புரசைவாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சேதுராமன். இவரும் இவரது நண்பர் கண்ணனும் கடந்த இரண்டாம் தேதி புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மருந்துக்கடையில் ( ?!) இரண்டு மிராண்டா குளிர்பானமும் கிராக்ஜாக் பிஸ்கட் பாக்கெட் ஒன்றும் வாங்கினார்களாம். ஒரு குப்பியைத் திறந்து கண்ணன் குடித்ததும் நாக்கில் எரிச்சல் ஏற்பட்டதாம். அப்போதுதான் திறக்காமல் இருந்த மற்றொரு குளிர்பானக் குப்பியைப் பார்த்தபோது அதற்குள் ஒரு கரப்பான்பூச்சி செத்துக்கிடந்ததாம். அதைப் பார்த்து மிரண்ட சேதுராமன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இவ்வழக்கில் மிராண்டா குளிர்பானத்தை தயாரித்து விற்பனை செய்ததற்காக பெப்சி நிறுவன துணைத்தலைவர் பிரகாஷ் ஐயர், அதை மருந்து கடைக்கு விநியோகம் செய்ததற்காக புரசைவாக்கம் நியூ மாணிக்கம் சாலையில் உள்ள ஏ.வி.ஆர். ஏஜென்சி உரிமையாள˜களும் மிராண்டா குளிர்பானம் உடலுக்கு நல்லது என்று விளஹ்பரப்படுத்துவதற்காக நடிகர் விவேக்கும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் குளிர்பானம் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக சென்னை மாநகராட்சி ஆணையரும் தலைமை சுகாதார அதிகாரியும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர் என்று செய்தி தெரிவித்தது.

சின்னக்கலைவாணர் என்று பட்டம் சூட்டிக்கொண்டுள்ள விவேக், திராவிடர்கழக மேடைகளில் பேசப்படும் செய்திகளைக்கூட தமிழ்த் திரைப்படங்களில் கலைவாணரைப் போலவே வெளியிட்டார். ஆனால், மிராண்டா போன்றவற்றுக்கு அவர் அளிக்கும் விளம்பரம் சரியானதுதானா என்பதை அவருடைய மனசாட்சியைக் கேட்டுச் சொல்லட்டும். மனச்சாட்சி இருந்தால் அவர் இவ்விளம்பரத்தைத் திரும்பப்பெறவேண்டும்.

ஆனால் இதற்குப் பதிலாக, குளிர்பானத்தில் கரப்பான் பூச்ிசி இருந்ததா என்று கேட்டதற்கு நடிகர் விவேக், ‘எனக்கும் இதற்கும் நேரடியாக சம்பந்தம் எதுவும் கிடையாது. நான் அந்த குளிர்பானத்தில் மாடல்தான். இதற்கென்று பெப்சி நிறுவனத்தினர் வழக்கறிஞர் குழு செயல்படுகிறது. அவர்கள் இதற்கு பதில் அளிப்பார்கள். குளிர்பானங்களில் போலிகளும் வருகின்றன. ஒாிஜினல் மிராண்டாவில் கரப்பான் பூச்சி இருக்காது. போலியில் இருந்திருக்கலாம். கரப்பான்பூச்ிசி இரண்டாம் உலகப்போாில் அணுகுண்டு போட்டே அழியவில்லை. அதற்கு விசத்தன்மை எதுவும் கிடையாது என்று அறிகிறேன் ‘ என்று பதிலளித்துள்ளார். ஆனால், விவேக் சான்றிதழ் வழங்கியதைப் போல ‘ஒரிஜினல் ‘ சரக்கு நல்ல சரக்கு என்ற கதையை கடந்த ஆண்டே சுற்றுச்சூழல்வாதிகள் முறியடித்துவிட்டார்கள். விவேக் தான் வாங்கிய காசுக்கு வாயாட்டுகிறார் (உடலையும்தான்) என்பதே உண்மை.

அதாவது, கடந்த ஆண்டு குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி இருந்தது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வு நடத்தி கோக், பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்களை அம்பலப்படுத்தியது. நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினை எழுப்பப்பப்பட்டபோது சுகாதாரத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் இக்குளிர்பான நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் தொனியில் பேசியபோது, பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களுக்கு நற்சான்றிதழ் வழங்க எவ்வளவு நன்கொடை பெற்றீர்கள் என்று காங்கிரஸ் உறுப்பினர் சதுர்வேதி கேள்வி விடுத்தார்.

ஆனால் அதன் பின்னர் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவும் சரி, அரசின் சோதனைசாலைகளும் சரி பெப்சி, கோக் என இரு நிறுவனங்களின் தயாரிப்பிலும் பூச்சிக்கொல்லிகள் இருப்பதை வெளிப்படுத்தி உண்மையை அம்பலப்படுத்தின. ஆனால், அரசோ இந்த நச்சு வணிகர்களுக்கு எதிராகத் துரும்பையும் அசைக்கவில்லை.

இப்போதோ காங்கிரஸ் கூட்டணி அரசுதானே!. நடவடிக்கை எடுப்பார்களா ?. (சந்தேகம்தான்).

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை நான் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டபோது, அலுவலகத்தில் வெந்நீர் கிடைக்காத சூழலில் அச்சம் காரணமாக ராஜ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பான 25 லிட்டர் கேன் குப்பிக்குடிநீரை வாங்கிப் பயன்படுத்தினேன். ஒரு வாரத்தின் பின் நான் வீடு திரும்பியபின்னர் எஞ்சியிருந்த ஒரு லிட்டர் அளவு தண்ணீரை அலுவலகத்தின் முன்பு தொட்டியில் இருந்த டேபிள்ரோஸ் (காலை 10 மணிக்கு மலர்வதால் இதனை 10 மணிப்பூ என்றும் சொல்வார்கள்) செடிக்கு ஊற்றியுள்ளார் அலுவலகப் பணியாளர். அடுத்தநாளே அந்தச்செடி பட்டுப்போய்விட்டதாம். குப்பிக்குடிநீரின் சக்தியைப் பாருங்கள்!

நாகரீகம், ஸ்டைல், தூய்மை என்றெல்லாம் ‘கருதி ‘ நாம் இக்குளிர்பானங்கள், தண்ணீரையெல்லாம் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதுதான் சரியானது.

இளநீர், பதனீர்,… இவை கிடைக்காவிட்டால் வெந்நீர்… இது போதும் நம் தாகத்திற்கு.

மின்னஞ்சல்: asuran98@rediffmail.com

Series Navigation

அசுரன்

அசுரன்