மானுடம் போற்றுவோம்…

This entry is part [part not set] of 23 in the series 20050805_Issue

பத்ரிநாத்


‘ ‘அவதி அவதி என்று அரிசிக்யூவில் போய் நின்றால்,

அய்ந்தாயிரம் சம்பளம் உனக்கு அதனால் அருகே வராதே என்றார் – அட

சிரமமேயில்லாமல் செல்வந்தன் ஆனேன் இன்று.. ‘ ‘

இது கண்ணப்பனார் என்றோ எழுதி அந்தப் பிரபல பத்திரிகைக்கு அனுப்பிய கவிதை. இப்போதுதான் பரிசீலிக்கப் படுவதாக பதில் வந்துள்ளது. கண்ணப்பனாரின் இயற்பெயர் கண்ணப்பன். வயது 54.. அந்தப் பிரபல தொழில் ஸ்தாபனத்தில் உத்யோகம்.. தற்போது யோகமில்லை.. காரணம்.. பணியிடை நீக்கத்தில் உள்ளார்..

‘நானும் ஒரு கடவுள்தான்.. ‘ என்று நினைத்தார் கண்ணப்பன்.. ‘காரணம் கடவுள் மட்டுமா பல அவதாரங்கள் எடுக்கிறார்.. நானும்தான்.. ‘ இலக்கிய நண்பர்களுக்கு கவிஞர் கண்ணப்பனார்.. மருமகப் பிள்ளைக்கு கற்பக விருட்சம் கண்ணப்பன்.. , ‘ ‘மாமா.. இந்த மாசம் உங்க ஆபீசுல லோன் அரேஞ் பண்ண முடியுமா.. யமாஹா சல்லிசாகிட்டு வருது.. ‘ ‘.. தொழிற்சங்கத் தோழர்களுக்கு தோழர் கண்ணப்பன்.. பையனுக்கு கிராஜீவிட்டி கண்ணப்பன்.., ‘ ‘அப்பா சீக்கிரம் வி ஆர் எஸ் வாங்கிடுங்க.. கிராஜீவிட்டி பணத்தில ஒரு செராக்ஸ் கட போட்றப் போறேன்.. ‘ ‘, மனைவிக்கோ, கடன்காரன் கண்ணப்பன், ‘ ‘ஆமாடா.. வேலயே போயிருச்சு.. இருக்குற கடன அடக்கவே அந்தப் பணம் பத்தாது.. இதுல நீ வேற.. ஒளுங்கா, வேல வெட்டி தேடிக்கிற வளியப்பாரு.. சொந்தத் தொழில் நமக்குச் சரிவராது.. நீ வேற எப்படி இருப்ப.. அவரு புள்ள அவராட்டம்தான இருப்ப.. நாதான் கெடந்து கத்திக்கிட்டுக் கெடக்கணும்.. ‘ ‘,

மனைவியின் குத்தல்கள் மனதைக் கிழிக்கும்.. அவளிடம் எப்படி விளக்குவது.. வாழ்க்கை, மனிதர்கள், பிரச்சனைகள் இவற்றைப் பற்றி அளவுகோல்கள் அவளைப் பொருத்தவரை வேறாக இருந்தது.. அது கண்ணப்பனுக்குப் புரிந்த போது தன்னை மாற்றிக் கொள்ள முயன்றார். அனாவசியமாக அவளுடன் மல்லுக்கு நிற்பதை வெகுவாகக் குறைத்துவிட்டார்.. இருப்பினும், யதார்த்தங்கள் அவர்களை எதிர்கொள்ளச் சொன்ன போது…மனைவி மீண்டும், ‘ ‘ சொன்னா கேட்டாத்தான.. ஏதோ உலகமே இவரு தலையில ஒடற மாதிரி நெனப்பு.. ‘ ‘, என்று ஆரம்பித்துவிடுவாள்..

தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு

சம்பாத்தியம் இவையுண்டு நானுண் டென்போன்

சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்

தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்..

கண்ணப்பனுக்கு பாரதிதாசன் வரிகள் நினைவுக்கு வந்தன.. அவர் சோர்ந்த போது மாமருந்தாகப் பயன்பட்ட பாரதிதாசன்.. என் மனப் பாரத்தைக் குறைக்க வந்தவர்.. ‘ ‘பாரதிதாசனுக்குத் துன்பம் நேர்கையில் யாழ்.. ஆனால் எனக்கோ அவர்தம் பாட்டுக்கள்.. ‘ ‘, என்று கூறுவார்.. அவர் மகளைத் தவிர வேறு யாருக்கும் அவர் பேச்சுக்கள் பிடித்ததில்லை.. மகள்.. அவலத்தின் நடுவே வந்துதித்த அதிசயப் பிறவி.. நிறைமாதமாக இருக்கும் அன்பு மகள்.. சோலை மலர்.. சுவர்ணத்தின் வார்ப்படம்.. காலை இளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவு.. மகள் கண்ணகி..

ஆழ்ந்த நித்திரையில் மகள்.. நீயே ஒரு குழந்தை.. உனக்கு ஒரு குழந்தையா.. மனதிற்குள் சிரித்துக் கொண்டார்..

‘ ‘என்னங்க.. பொண்ணையே பாத்துட்டு இருக்கிங்க.. ‘ ‘, மனைவி விசனத்துடன் கேட்டாள்..

‘ ‘ம்ம்..சும்மா.. சுரம் மாதிரி இருந்துச்சி.. ‘ ‘, என்றார்..

பதறிப் போய், மகளைத் தொட்டுப் பார்த்தாள், ‘ ‘ சேச்சே.. அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. நீங்க வேற.. இப்ப நம்ம நிலைமையில உடம்புக்கு வேற வந்தா..அவ்வளவுதான்.. கொஞ்சம் வாய மூடிக்கிட்டு இருங்க.. பலிச்சுடப் போவுது.. ‘ ‘, என்று சிடுசிடுத்தவள், ‘ ‘ம்ம்.. அப்பறம் என்ன முடிவு பண்றதா உத்தேசம்.. ‘ ‘, என்று கேட்டாள்.

‘ ‘என்னது.. பணத்துக்கா.. ‘ ‘,

‘ ‘ஆமா.. வேற என்னத்த கேட்டுட்டு இருக்கேன்னு நெனக்கிறிங்க.. ‘ ‘,

‘ ‘செண்பகநாதன்கிட்ட சொல்லியிருக்கேன்.. ‘ ‘,

‘ ‘எவ்வளதுன்னு அவருகிட்ட கேப்பிங்க.. இந்த முறை கைய விரிச்சுட்டார்னா.. ‘ ‘,

‘ ‘வேற எடம் பாக்க வேண்டியதுதான்.. வட்டிக்குக் கெடைக்காதா.. ‘ ‘,

‘ ‘எங்கப் போயி முடியப் போவுதோ.. ‘ ‘, பெருமூச்செறிந்து விட்டுச் சென்ற மனைவியைக் கவலையுடன் பார்த்தார், கண்ணப்பன்..

வரும்படியை நினைக்கியிலே உள்ளமெலாம் நோகும்

வாராத நினை வெல்லாம் வந்து வந்து தோன்றும்..

துன்ப சாகரம்தான் இந்த உலகம்.. புத்தபிரான் கூறியதைப் போல.. எதற்கென்று கவலைப் படுவது.. என் வேலக்கா.. ? படிப்பேறாமல் ஊர் சுற்றியலையும் மகனைப் பற்றியா.. கண்ணாக வைத்திருப்பேன் என்று கூறி மகள் கண்ணகியைக் கைத்தலம் பற்றிய மருமகனைப் பற்றியா.. இப்போது வேறு சகவாசம் வைத்திருப்பதாக காதில் விழும் அவலத்தைப் பற்றியா.. மகளே.. என் கண்ணே.. உனக்கா.. உனக்கா.. இப்படியொரு நிலை என்று விம்மியழாத நாள்களே இல்லையே..

அன்று இப்படித்தான்.. யாரோ ஒருவருக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டுவிட்டு ஏமாந்து போய் வந்து அழுதான், மருமகன்.. விட்டுவிட முடியுமா.. ? பெண்ணைக் கொடுத்திருக்கிறோம் என்று பணத்தை எங்கோ எப்படியோ புரட்டி எடுதது கைதாகாமல் தப்பிக்க வைத்தார்.. ஆனால் அதன் பொருட்டு எதிரிகளிடம் சண்டையிட்டதால், காவல்துறையினர் கைதுசெய்துவிட்டார்கள்..

அவசர அவசரமாக காவல் நிலையம் சென்றார்.. அவருடன் மகளும் வந்திருந்தாள்.. எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.. ‘அவரப் பாக்கணும்.. அவர பாக்கணும்.. ‘ என்று வந்துவிட்டாள்.. தடுக்க முடியவில்லை.. காவல் நிலையத்தில் மருமகனை, அவன் உடைகளைக் களைந்துவிட்டு உள்ளாடையுடன் நிற்க வைத்து ஒரு காவலர் அடித்துக் கொண்டருந்ததைப் பார்த்த மகள் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்துவிட்டாள்.. மகளை மருத்துவமனையில் சேர்த்து, மருமகனை ஜாமீனில் விடுவித்து, பணக் கஷ்டம், மனக்கஷ்டம் என்று எட்டு திக்கும் கோரப் பற்களைக் காட்டியபடி வரும் பூதங்கள்.. அதிர்ச்சி மகளை ஒன்றும் செய்யாமல் இருக்க வேண்டும்.. ‘நான் நம்பும் அறம் என்னைக் கைவிடாது.. என்னைக் காக்கும்.. நம்பிக்கை.. அது ஒன்றே எனது கொழுக் கொம்பு.. ‘ நிறைமாதக்காரிக்கு நல்ல வேளையாக ஒன்றும் ஆகவில்லை என்ற ஆறுதல் ஒன்றே அன்று அவர் காதில் விழுந்த நற்செய்தி…

இதோ மகள் பிரசவத்திற்காக மருத்துவமனையில்.. மருத்துவர் எந்த நேரத்திலும் பிரசவம் ஆகும் என்கிறார்.. அனைவரும் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டோம்.. எனது மூன்றாம் தலைமுறையைக் காணக் காத்திருக்கிறேன்.. ஒரு புறம் மனம் ஆவலாய் இருக்க, மறுபுறம் ஆயிரங்கால் பூதமாய் அச்சுறுத்தும் பிரச்சனைகள் அல்லாட வைத்தது.. கடன்கள் ஏறிக் கொண்டே போகிறது.. இந்த ஒரு விசயத்தில் நான் பாரதிதாசன் சொல்லைக் கேட்கவில்லை..

உள்ளம் கடன் வாங்குகையில் உவப்புறும்

கொடுத்தவன் வட்டியோடு கேட்கையில் கொலைப்படும்

ஆதலின் அருமைத் தமிழரே கேட்பீர்

கடன்படும் நிலைக்கு உடன் பட வேண்டாம்

சொன்னார்.. நன்றாகச் சொன்னார்.. உறைக்கும்படிச் சொன்னார்.. என்ன செய்ய.. ? ‘கொடுத்தவன் திருப்பிக் கேட்கும் போது என்ன செய்யப் போகிறேன் என்றே தெரியவில்லை… ‘ வேலை வேறு சிக்கலில்.. எண்ண அலைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு கண் மூடிக் கொண்டார்.. மருத்துவமனை வரவேற்பறையில் எத்தனை முகங்கள்.. அத்தனை முகங்களிலும் என்னவொர் ஆர்வம், கவலை, எதிர்ப்பார்ப்பு என்று கலவையாய் தென்படுகின்றன.. மனைவி வருகிறாளா என்று பிரசவ அறையை நோக்கினார்.. என்ன ஒர் இறுக்கமான நிமிடங்கள்..

‘ ‘அப்பா.. நீங்க தாத்தா ஆயிட்டிங்க.. பையன் பொறந்திருக்கிறான்.. ‘ ‘, மகன் வந்து சொன்னான்.. ஆயிரம் மலர்கள் மலர்வதைப் போல சந்தோச உணர்வு பொங்கிற்று.. அவசர அவசரமாக எழுந்தார்.. மனைவி ஒரு பூக்கூடையைப் போல் பேரனை ஏந்தி வந்தாள்.. அவர் மடியில் கிடத்தினாள்.. ரோஜாவைப் போல எத்தனை மிருது.. டேய்.. தாத்தாடா நானு.. கண்ணுக்குட்டி..

உள்ளம் எதிர்ப்பாத்த ஓவியமே என் மடியில்

பிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே..!

குதூகலத்துடன் எழுந்துகொண்டார்.. ‘ ‘ஏம்மா.. கண்ணகி எப்படி இருக்கா.. ‘ ‘, படபடப்பாகக் கேட்டார்… ‘ ‘நல்லா இருக்கு.. வாங்க வந்து பாருங்க.. ‘ ‘, மனைவி அழைத்தாள்..

தந்தையைப் பார்த்த கண்ணகி முறுவலித்தாள், ‘ ‘ பய உன்னய மாதிரி இருக்காம்மா.. ‘ ‘, என்று தலையைக் கோதிவிட்டார்.. அனைவரும் மாறி மாறிக் குழந்தையை இவரிடமிருந்து எடுத்துக் கொண்டு கொஞ்சுகிறார்கள்..

‘ ‘அப்பா.. ஒங்க கவிதையை சில திருத்தங்களோட அந்தப் பத்திரிகையில பிரசுரம் பண்ணியிருக்காங்க.. ‘ ‘, என்றான் மகன்.. ‘ ‘அப்படியா.. ‘ ‘, என்ன இன்று யாரையும் பார்க்க விடாமல் கண்கள் பனித்துக் கொண்டேயிருக்கிறது.. இன்று ஏதோ புதிய சக்தி பிறந்ததைப் போல தோன்றுகிறதே.. சற்று முன்னர் பெரும் பாரமாக நினைத்த அனைத்துப் பிரச்சனையும் தூசாகத் தோன்றுகிறது… எதுவும் பாரமில்லை.. ‘ ‘தனம்.. பொண்ண பாத்துக்க.. நா போயி சிநேகிதங்க, சொந்த பந்தங்களைப் பாத்து தகவல் சொல்லிட்டு வந்துடறேன்.. ‘ ‘,

படு உற்சாகமாக ஒரு சின்னக் குழந்தையைப் போல துள்ளி நடந்து செல்லும் தன் கணவனைப் புதிதாகப் பார்ப்பதைப் போல இருந்தது, அவர் மனைவி தனத்திற்கு..

(2003)

prabhabadri@yahoo.com

Series Navigation

பத்ரிநாத்

பத்ரிநாத்