மாத்தா ஹரி – அத்தியாயம் 29

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


– மாத்தா ஹரியோட மண்டையோடு?

– பாரீஸ¤ல ஒரு மியூஸியத்துல பாதுகாப்பா வைத்திருந்த அவளுடைய மண்டையோடு காணாமப் போயிருக்கிறது. அதை ஒருவேளை மாத்தாஹரிங்கிற பேருல இயங்குற சமயக்குழு திருடியிருக்கலாமென்று ஒரு வதந்தி உண்டு. மாத்தா ஹரியோட விசுவாசிகளாகிய நாங்கள் அது திரும்பவும் மியூசியத்துக்குக் கொண்டுவரப்படவேண்டுமென்று நினைக்கிறோம்.

– தொலைந்துபோன மண்டையோட்டிற்கும் தேவசகாயத்திற்கும் என்ன சம்பந்தமிருக்கமுடியும்.

– அவரும் மாத்தாஹரியுடைய சமயக்குழுவுல சம்பந்தபட்டிருப்பானோ என்கிற சந்தேகமுண்டு?

– மாத்தாஹரியோட விசுவாசிகள் கூட்டத்தில, அந்தச் சமயக்கூட்டத்தை உங்களால ஒரு சிலரைக் கூட அடையாளப்படுத்த முடியாதா?

– முடியலை. என்னையே பல நேரங்களில் சந்தேகிக்கிறேன். எங்களுக்கும் அவர்களுக்கும் அதிக வித்தியாசமில்லை. நான் அறிந்த வகையில் அவர்கள் ரகசியமாக இயங்குகிறார்கள், நாங்கள் வெளிப்படையாக இயங்குகிறோம்.

– அவர்களுக்கு ஒருவேளை அமெரிக்காவில் இயங்குகிற ஸ்கல் அன் போன்ஸ் (Skull and Bones) இயக்கத்தோட சம்பந்தமிருக்குமா?

– உலகத்தின் தலைவிதியை தீர்மானிக்கிற, யேல் பல்கலைகழக ரகசிய அமைப்பான ஸ்கல் அன் போன்ஸ்க்கு இதில் சம்பந்தமிருக்கமுடியாது. அவர்கள் கிறிஸ்துவத்தில் தீவிர நம்பிக்கையுள்ளவர்கள், தவிர அவர்களுடைய இயங்கு தளம் அரசியலும், பொருளாதாரமும் என்பதால், மாத்தாஹரிங்கிற எல்லைக்குள் நுழைய வாய்ப்பே இல்லை. அது வேறு.

– மாத்தா ஹரி சமயக்குழுவைப்பற்றிக் உங்களுக்குத் தகவல்கள் ?

– தெளிவா சொல்ல முடியாது. முதலில் அதன் ஆரம்பம். மாத்தாஹரி 1917ம் ஆண்டு கொல்லப்பட்டவுடன், அவலது ரசிகர்கள் அவளைப் போற்றும் விசுவாசிகளாக மாறினார்கள். மாத்தா ஹரியின் தண்டனையை எதிர்த்து கொலைசிந்து எழுதப்பட்டது, பாடப்பட்டது. அவர்கள் பின்னாளில் பெண்ணியல் அபிமானிகளாகவும், மரணதண்டனைக்கு எதிரான இயக்கத்திற்கு காரணகர்த்தாக்களாகவும் மாறிப்போனார்கள். தவிர பிரெஞ்சு அரசால் கொலைசெய்யப்பட்டபிறகு, ஆய்வில் கிடைத்த தகவல்கள், எழுதப்பட்டப் புத்தகங்கள் அவ்வளவும் மாத்தா ஹரி எப்படி அசட்டுத்தனமாக வாழ்ந்து, பரிதாபமான முடிவினைத் தேடிக்கொண்டாள் என்பதைத் தெரிவித்தன. எனினும் அவளுடைய அழகு, துணிவு, சாதுரியம் எங்களில் பலரை இன்றைக்கும் அவளது பரம ரசிகர்களாக மாற்றி இருக்கிறது. ஒரு சிலர் அவள் தன்னை தேவதையாகக் கற்பிதம் செய்ததை நம்புகிறார்கள். அவள் வாழ்ந்த காலம் அப்படி. அந்த நேரத்தில், மனிதபுத்தி எளிதில் விளங்கிக் கொள்ளாத காரியத்தினை ஆற்றுவது, அதன்மூலம் தங்களை அசாதாரணப் பிறவியாக அடையாளப்படுத்துவதென்பது பலரின் ஆர்வமாக இருந்திருக்கிறது, மாத்தாஹரியும் அதற்கு விதிவிலக்கு அல்ல. எனவே அவளைத் தேவதையாக ஏற்றுக்கொண்ட அந்த ஒருசிலர் காலப்போக்கில் அவளைத் தெய்வமாக்கிவிட்டார்கள், வழிபடுகிறார்கள் எனவே அவர்களுக்கு மாத்தா ஹரி சம்பந்தப்பட்ட பொருள்களெல்லாம் புனிதமாகப் படுகிறது. ஹரிணி, நீ புத்திசாலி பெண். பாவானியைப் பற்றின பழைய தகவல்களைக் கிளறி என்ன ஆகப்போகிறது. எனக்கு நீயும் முக்கியம். உனது அம்மாவுக்குக் கொடுத்த வாக்கு அப்படி. எதற்காக தேவையில்லாமல் இதில் சிக்கிக்கொள்கிறாய். ஒதுங்கிக்கொள். உன்னுடய அம்மா தமிழில் கவிதைகளெல்லாம் எழுதியதாகச் சொல்லியிருக்கிறாள். வழக்கறிஞருக்குப் படித்துவிட்டு சிறிதுகாலம் உங்கள் ஊரில் குறிப்பாக குடும்பநல வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வாதாடியவள் தெரியுமா? மாத்தா ஹரியின் விசுவாசிகள் அவளிடத்தில் ஒருவித உண்மையும், கர்வமும் உண்டென்று பெருமையோடு சொல்லிக்கொள்வார்கள், அதை பவானியிடமும் பலமுறைக் கண்டிருக்கிறேன். இங்கே வருவதற்கு விருப்பமில்லாமல் ஆரம்பத்தில் தேவசகாயத்துடன் முரண்பட்டு அவள் சண்டைபிடித்திருக்கிறாள் தெரியுமா? கடைசில் உனது எதிர்காலத்தைக் கருதியே பிரான்சுக்கு வந்திருக்கிறாள். அதைப் பலமுறை என்னிடத்தில் சொல்லவும் செய்தாள். மாத்தா ஹரி பாரீஸ¤க்கு வர நேர்ந்து சோதனைகளைச் சந்தித்ததுபோலவே, உனது அம்மாவுக்கும் சோதனைகள் காத்திருக்குமென்று அப்போதைக்கு அவளுக்குத் தெரியாது. இத்தனைக்கும் காரணமான தேவசகாயத்தை திடீரென்று ஜெயிலில் சென்று பார்க்கணுமென்று துடிக்கிற. நமது முதல் சந்திப்பின் போது, தேவ சகாயம் என்ற பெயரைக் கூட நீ உச்சரிக்கவில்லை. இப்போது எதற்காக?

– நேற்றுவரை தேவசகாயம் என்ற மனிதர்மீது எனக்கு வெறுப்பும், கோபமும் இருந்தது உண்மை. அது இப்போதும் சிறிதளவுகூட குறையாமல் அப்படியேதானிருக்கிறது. ஆனால் ஏற்கனவே சொன்னதுபோல அம்மாவுடைய இறப்புக்கான உண்மையான காரணங்கள் தெரியவேண்டும். அதுக்காகவாவது அந்த ஆளை பார்க்கவேண்டும். அதுவும் தவிர, நீங்கள் அவருக்கும் மாத்தாஹரி சமயக்குழுவுடன் தொடர்பிருக்கலாமென்று வேறு சொல்கிறீர்கள்.

– தேவசகாயம் தனி ஆளில்லை. அவனோடு ஒரு கூட்டமே இருக்கிறது? எத்தனை பேரை சந்திக்கபோகிறாய். நாளைக்கு தேவசகாயத்திற்கே கூட ஆபத்தாக முடியும்.

– தேவசகாயத்திற்கும் மாத்தாஹரி சமயக்கூட்டத்திற்கும் தொடர்பு இருக்கிறதென்று உறுதியாக நம்புகிறீர்கள் அப்படித்தானே?

– அப்படி சொல்ல முடியாது. உனது அம்மா இருக்கிறபோது பல முறை தேவசகாயத்தினை சந்திக்க நேர்ந்திருக்கிறது. அப்போதெல்லாம் அவளுக்கு சிநேகிதி என்ற பேரிலே அவனைச் சந்திக்கவில்லை. பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு உதவி செய்கிற அரசாங்கத்தின் ஊழியராகப் பார்த்து பேசி இருக்கிறேன். அவனைப் பல நேரங்களில் பைத்தியக்காரனென்றே நினைத்திருக்கிறேன். நானாக இருந்தால் வெறுமனேகூட விலகிவந்திருக்கமாட்டேன். நடப்பது நடக்கட்டுமென சுட்டுக்கொன்றுவிட்டு வெளியே வந்திருப்பேன். என்ன படித்து என்ன புண்ணியம்?

– யாரைச் சொல்கிறீர்கள்

– வேறு யாரை? உங்கள் அம்மாவை..

– அப்போ அம்மா உங்களிடத்தில் எதையும் மறைப்பதில்லை, அந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தில் நடந்த அநேகச் சண்டைகள் உங்களுக்குச் தெரியும்.

– சண்டை, யுத்தம் என்றெல்லாம் சொல்வது தவறு.. அவை சம பலங்கொண்ட இருவருக்கும் இடையேயான சொற்கள். உங்கள் குடும்பத்தில் நடந்ததெல்லாம் பணியாத குதிரையை எஜமானன் நடத்துவதுபோல, இங்கே குதிரை என்ற சொல்கூட அதிகம். உண்மையில் உன்னுடைய அம்மாவின் சில வதைகளை நேரிலே பார்த்திருக்கிறேன்.

ஹரிணி கண்களை மூடி சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். தலையில் சட்டென்று யாரோ பாரத்தை இறக்கியதைப் போல உணர்ந்தாள். இப்போது அது மனதில் கனத்தது. உடல் நடுங்கியது. சுவாசம் தடை பட்டது. இயற்கை உபாதை உறுத்தத் தொடங்கியது. ‘ மன்னிக்கணும்’ என்று சொல்லிக்கொண்டு, வரவேற்பறையைக் கடந்து நாய்லெட்டிற்குள் நுழைந்தவள், இரண்டொரு நிமிடத்திற்குப் பிறகு மீண்டும் க்ரோ எதிரில் அமர்ந்தாள். மேசை மீதிருந்த ஐஸ் டீயைக் குடித்து, உலர்ந்திருந்த நெஞ்சை நனைத்துக்கொண்டாள்; ஈர உதடுகளை ஒருமுறை மென்மையாகத் துடைத்துக்கொண்டு மௌனம் சாதித்தாள்.

– வேறு ஏதாச்சும் பேசலாமே? – ஹரிணியைத் தேற்றுவதுபோல இருந்தது க்ரோவின் பேச்சு.

– பரவாயில்லை எதுவென்றாலும் சொல்லுங்கள்.

– வேண்டாம் ஹரிணி அதையெல்லாம் பேசுவதற்குரிய மனோதிடம் எனக்கிருந்தாலும், கேட்கிற உனக்கு வேண்டுமே என்ற கவலை.

– நிறைய இருக்கிறது. சொல்லுங்கள்.

– அன்றைக்கு மணி பதினொன்றரை இருக்கும்; அலுவலகத்திலிருக்கிறேன். அடுத்த கால்மணி நேரத்தில் எனது தலைமை அலுவலகத்திற்குப் புறப்படவேன்டும், அந்த நேரத்தில் தொலைபேசி ஒலிக்கிறது. ரிஸீவரை எடுத்து யாரென்கிறேன். ‘பெயர் முக்கியமல்ல, ஆனால் உங்களுக்குத் தெரிந்த இந்திய பெண் ஒருத்தி ஆபத்தில் இருக்கிறாள், அவளை உடனே சென்று பார்க்கவேண்டும்., என்று மறுமுனைக்குரிய குரல் தெரிவிக்கிறது. நான் உடனே, சம்பந்தப் பட்ட குரலிடம் இங்கே பாருங்கள், ஆபத்தென்றால் நீங்கள் கூப்பிடவேண்டியது போலீஸாரையே தவிர என்னை அல்ல, என்கிறேன். அதற்கு, “அப்படி போலீஸ¤க்குத் தகவல்போவதை பாதிக்கப்பட்ட பெண்ணே விரும்புவதில்லை அதுதான் பிரச்சினை, என்று பதில் வந்தது. நீங்கள் சொல்வது உண்மையென்றால், உங்கள் பெயரை ஒளிக்காமல் சொல்லவேண்டும், அப்போதுதான் என்னால் ஏதேனும் செய்ய முடியும், என்றேன். குரலுக்குடையவர் தன்னுடைய பெயரை ‘பிலிப் பர்தோ’ என்று தெரிவித்தார், பாதிக்கப் பட்ட பெண் பவானி யென்றும், அவளுடைய முகவரியையும் கொடுத்தார். உடனே, அட இது நமக்குத் தெரிந்த இந்தியப் பெண்ணாயிற்றே., என்று உதித்தது. தகவல் தெரிவித்தவரிடம், என்ன நடந்தது கூடுதலாகத் தகவல் தெரியுமா எனக் கேட்டேன். அந்த ஆள், உனது அம்மாவை கடந்த சில மாதங்களாக அறிந்தவரென்றும், ஒவ்வொரு நாளும் அவளைச் சந்திக்கின்றவர், கடந்த மூன்று நாட்களாக எந்தத் தகவலும் இல்லாமலிருந்ததால், ஏற்பட்ட பயமென்றார். நான் மேற்கொண்டு எதையும் விசாரிக்கவில்லை, முகவரியை எடுத்துக்கொண்டு உங்கள் வீட்டிற்கு சென்றேன். கதவைத் தட்டியபோது திறந்தது என்னவோ உங்கள் அம்மாதான். ஆனால் நான் கண்ட காட்சி அய்யய்யோ..

– ஏன் என்ன பார்த்தீர்கள்.

உங்கள் அம்மாவின் முகம் கோரமாக ஊதியிருந்தது.. கண்களையே தேடவேண்டியிருந்தது. உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவசர அவசரமாய் ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனையில் சேர்த்தோம். டாக்டர்களிடம் அதற்கான காரணத்தை பவானி சொல்லவில்லை. அவர்கள் சந்தேகித்து போலீஸாரை அழைத்தார்கள். அவர்களுக்கும் பதிலில்லை. எங்கள் அனைவருக்கும் அத்தனை கோபம், இருந்தும் வேறுவழியில்லை. பிறகு ஒரு மாதத்திற்கு மேலாகப் ஆஸ்பத்திரியில் வைத்திருந்துவிட்டு அனுப்பிவைத்தார்கள். இரண்டு மூன்று மாதங்கள் கழிந்திருக்கும், ஒரு நாள் குடுபத்தில் போதிய வருமானமில்லை, பண உதவிவேண்டுமென கேட்டு வந்தாள். நான் பவானியிடம், அன்றைக்கு உண்மையில் என்ன நடந்தது என்று கேட்டேன். தந்து கணவன் தேவசகாயத்திற்கு அதனால் எந்த பிரச்சினையும் வராதென்றால் உண்மையைச் சொல்லமுடியுமென்றாள். எனக்குக் கோபம் வந்தது. ஏதோ படித்தவள், கவிதையெல்லாம் எழுதுவேன் என்றெல்லாம் சொன்னாயே, இப்படி சொல்ல உனக்கு வெட்கமாய் இல்லை, எனக் கேட்டேன். அவள், இல்லை. எனக்கில்லை. அதெல்லாம் இந்திய மண்ணிலே இருந்தது, இங்கில்லை. என்றாள். அதுவும் தவிர எனக்கு என் குழந்தையின் எதிர்காலம் முக்கியம். இந்தியாவிலே, மணவிலக்குக் கேட்கும் பெற்றோர்க்கு குழந்தைகள் எதிர்காலத்தைக் குறித்து பாடமெடுத்திருக்கிறேன், எனகிறபொழுது, நான் எப்படி மாறாக நடந்துகொள்ளமுடியும், அதனால் தான் சிலதை பொறுத்துக்கொள்கிறேன், என்றாள். பிறகு, என்னதான் நடந்தது, சொல்லித் தொலை, நான் யாரிடமும் வாய் திறக்கமாட்டேன், என்று உறுதி அளித்ததின் பேரில், அன்றைக்கு நடந்தவற்றைச் சொன்னாள்.

(தொடரும்)


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா