மாத்தாஹரி – அத்தியாயம் -5

This entry is part [part not set] of 24 in the series 20070412_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


அவனது பெரிய முகம் ஒடுங்கிப்போனது. கண்கள் சுருங்கிக்கொண்டன. பார்வையில் கவலை வெளிப்பட்டது. இவள் தொடர்ந்து பேசினாள்

– தேவா என்னைக் கடந்த ஆறுமாதங்களாக அறிந்தவர் நீங்கள். எனினும் தங்கள் விருப்பத்தை என்னிடத்திற் சொல்ல இப்போதுதான் முடிந்திருக்கிறது. எனக்கும் அப்படித்தான் நிறைய யோசிக்கணும். இப்போதைக்கு உங்களுக்கும் எனக்குமான எதிர்மறையான விஷயங்களே என்னிடத்தில் உங்கள் விருப்பத்தை வளர்த்துக்கொண்டற்கானக் காரணங்களென்று நினைக்கிறேன். உடன்பாட்டுக்குரிய காரணிகளைக் காட்டிலும் எதிர்மறையான காரணிகளுக்குக் கவர்ச்சி அதிகம். எனது நினைப்புச் சரியா தவறா? என்றுகூடக் குழப்பம் இருக்கிறது. அவற்றைக் குறித்து நிதானமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. ‘அம்மா அடுப்பைப் பற்றவை குளிராவது காயலாம்’ என்ற கவிஞர் இளம்பிறையின் ஏக்கங்களோடுதான் நானும் இருக்கிறேன். அதிலும் உடனடியாகப் பங்குக்கு வந்து விடாதீர்கள்.

தேவசகாயத்திற்கு ஒரு வகையில் அப்பதில் நிறைவை அளித்தது. அவனது கேள்விக்கான மேம்போக்கான பதில் அல்ல. அக்கறை எடுத்து அளித்த பதில். பத்மாவிடம், இதுபற்றி நேற்று பேசியபொழுது அவளது பேச்சு இவனை உற்சாகப் படுத்தும் அளவில் இல்லை. பவானி இவன் விருப்பத்தை மறுத்துவிடுவாள் என்றாள். உனக்கு அவள் ஒத்து வராது என்றாள். அவள் சொன்னதிலும் உண்மை இல்லாமல் இல்லை. இவனுக்கென்று சில கனவுகள் இருக்கின்றன. புதுச்சேரியில் இருக்கும் பெரும்பாலான இளைஞர்களுக்கு உள்ள கனவு. அதைக் கனவென்றும் சொல்லிவிடமுடியாது. சில கதவுகள் திறந்திருக்கிறபொழுது, உள்ளே என்ன இருக்கிறது எனப் பார்க்க விழையும் மனதின் யதார்த்தம். இவனது பள்ளி இறுதிவகுப்புப் புத்தகத்திலும், பிற சான்றிதழ்களிலும் பார்த்தீர்களென்றால் குடியுரிமை என்ற இடத்தில் பிரெஞ்சுக்காரன் என எழுதியிருக்கிறது. அப்பா பிரான்சில் இருந்தார். அண்ணன்கள் பிரான்சில் இருக்கிறார்கள், தமக்கை ஒருத்தியும் தங்கை ஒருத்தியுங்கூட அவரவர் கணவர்களுடன் பிரான்சில் இருக்கிறார்கள், இவனோடு சினிமாவுக்கும் பாருக்கும் வந்த நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராகப் பிரான்சுக்குப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவனைமட்டும் அவனது அம்மா தனது இறுதிக் காலத்திற்கு துணைக்கு வேண்டுமே என்று நினைத்து, பிரெஞ்சுக் கல்வி நிறுவனங்களை ஒதுக்கிவிட்டு, புதுச்சேரியில் இருந்த தனியார் கல்வி நிறுவனமொன்றில் சேர்த்தாள். மேல்நிலைக் கல்வியை முடித்ததும், தனியார் பொறிஇயல் கல்லூரி ஒன்றில் படித்தான். கல்லூரியிலேயே ஒரு சில நண்பர்கள் எப்போது பிரான்சுக்குப் போகப்போகிறாய் எனக்கேட்டு மறந்திருந்த பிரான்ஸை ஞாபகப் படுத்தினார்கள். இவன் மறுத்தான். அப்படி எதுவும் எண்ணமில்லை என்றான். அவர்கள் நம்பவில்லை. பிரான்சிலிருந்து வந்த தமக்கையும், அண்ணன்களும் சும்மா இருக்கும் நேரங்களில் பிரெஞ்சு படியேன் என்றார்கள். அம்மாவும் போய்வாடா என்றாள். புதுச்சேரிக் கடற்கரை அருகில், பிரெஞ்சு அரசாங்கத்தின் தயவில் இயங்கிவந்த மொழிபயிலும் நிறுவனத்தில் ஒருநாள் மாலை பதிவு செய்துகொண்டான். அது வேறு உலகமென்று புரிந்தது. இவன் இளமைக்கு உற்சாகமளிக்கும் கிரியா ஊக்கிகள் பல பெயர்களில் இருந்தன. சமீபகாலமாகப் பிரான்சுக்குப் போவதென்று உறுதியாக இருக்கிறான்.

பவானிக்குத் தெரிந்த தேவசகாயம் பரவாயில்லை ரகம். பிரெஞ்சுக் குடியுரிமையுடன் இருக்கிற பிற இளைஞர்களோடு அவனை ஒப்பிட முடியவில்லை. அவர்களில் அநேகர், பள்ளி இறுதிவகுப்பைக்கூடத் தாண்டி இருக்கமாட்டார்கள். பலர் வேற்றுலகத்தில் பிறந்து தவறிப்போய் புதுச்சேரிக்குள் கால்வைத்துவிட்டதுபோல நடந்துகொள்பவர்கள். புதுச்சேரியில் பல இடங்களில் அக் கூட்டத்தைக் கண்டு அருவருப்புடன் ஒதுங்கி இருக்கிறாள். இவன் வேறாகத் தெரிந்தான். இவள் அறிந்த இளைஞர்களில், இவன் முகம் வேறாக இருக்கிறது, கண்கள் வேறாக இருக்கின்றன, பார்வை வேறாக இருக்கிறது, சிந்தனை வேறாக இருக்கிறது. இக்கேள்வியையே கூட பலமுறை சிந்தித்தேபிறகே அவளிடம் கேட்டிருக்கக்கூடும்.

– பவானி..

– ம்..

– எங்கே இருக்கிறீர்கள்? நீங்கள் நேரம் எடுத்துக்கொண்டு, தீர யோசித்தே முடிவைச் சொல்லலாம். ஆனால் எதற்காக மறுபடிமறுபடி, நம் இருவருக்கும் இடையேயான சந்திப்பு காலத்தை நினைவூட்டுகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை. காலத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும். ‘தேவைகளும் விருப்பங்களும் காலம் சார்ந்தது அல்ல, அவை மனம் சார்ந்தது, உணர்வு சார்ந்தது’ என்று நீங்களே பலமுறை சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் பதிலுக்காக நானும் ஆறுமாதம் காத்திருக்கவேண்டும் என்பதுபோல யோசிக்கும் காலத்தை நிர்ணயிப்பது சரி அல்ல. இன்றைய எனது உணர்வு வேறு. இந்தவேளை எனக்குப் பசிக்கிறது. அம்மா.. பசிக்கிறது என்கிறேன். நீங்கள் நாளை வா என்கிறீர்கள்.

– வேறு இடங்களிலும் பசிக்கிறதென்று சொல்ல உங்களால் முடியாதா? உங்கள் கூட்டத்திற்கு அதுகூடச் சாத்தியம்தானே?

– எப்படி? எனக்குப் புரியவில்லை. என்ன சொல்கிறீர்கள். பையன்கள் அனைவரும் அப்படித்தான் என்கிறீர்களா அல்லது புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமையுடன் திரிகிற இளைஞர்களைப் பார்த்த அனுபவத்தில் சொல்கிறீர்களா?

– இந்த விஷயத்தில் இன்றைக்கு எல்லாப் பையன்களும் அப்படித்தான். பெண்கள் செய்தால் ‘தினவெடுத்து அலைகிறாள்’ என்பீர்கள். உங்களுக்கு விதிகள்வேறு.

– இருக்கலாம். நானும் தவறுகள் செய்திருக்கிறேன். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இந்தக் கணத்திலிருந்து உங்களுக்கென்று வாழ முடியும். உண்மையாக நடந்து கொள்ள முடியும். எனது எதிர்காலம் உங்களுக்கானது. நான் களைத்திருக்கிறேன். நீங்கள் அனுமதித்தால், உங்கள் நிழலில் இளைப்பாறமுடியும். உங்கள் மனதை ஓரளவு புரிந்துகொண்டவன் என்ற நம்பிக்கையில், உங்களைக் கேட்கத் துணிந்தேன்.

அவனுடைய கண்களை ஏறிட்டுப் பார்த்தாள். அவை இரண்டும் மெல்ல அவளது உடலைச் சுற்றிக்கொண்டன. அவற்றை விலக்க முயன்று தோல்விகண்டாள். அவன் உதிர்த்த வார்த்தைகள், தம் பங்கிற்கு அவள் இதயத்தை இளக்கின. அவளுக்குப் பயமாக இருந்தது. தன்னை நிராயுதபாணியாக நிறுத்த விழையும் அவனது தந்திரத்திற்கு இவளே துணைபோய்விடுவாள் என்பதை நினைக்க அச்சம். தனக்குள் சுரக்கும் பயத்தை அவன் கண்டுவிடக்கூடாது. குரலில் கொஞ்சம் கடுமையைச் சேர்த்துக்கொண்டாள்.

– தேவா என்னைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும். நான் உங்களை அறிந்திருக்கும் அளவிற்கு நீங்கள் என்னை அறிந்தவரா?

– மன்னிக்கவேண்டும். நான் பெரிய கவிஞன் இல்லைங்க. பெரிய பெரிய சொற்களில் உங்களைக் குழப்பும் எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. அநேகமாக என்னைப் பற்றிய உங்கள் புரிதலோடு ஒப்பிடுகிறபொழுது பொருள் அற்றதாகவும் இருக்கலாம். எனது காதலை ஏற்பதும், எனது மனைவியாக வருவதும் இருக்கட்டும்…உங்களுக்கு உண்மையில் என்மீது அன்பிருக்கிறதா? நல்ல எண்ணங்கள் உண்டா? கூடுதலாகத் தகவல்கள் வேண்டுமென்றால் இருக்கவே இருக்கிறாள் உங்கள் சினேகிதி பத்மா.

– நல்ல ஆளைப் பிடித்தீர்கள். வேலிக்கு ஓணான் சாட்சியா? அபிப்ராயங்களை வளர்த்துக்கொள்ள சிபாரிசு உதவலாம். ஆனால் ஒருவர்மேல் அன்பினை வைக்க சிபாரிசுகள் உதவுமென்று நான் நினைக்க இல்லை.

– நன்றி பவானி, பிறர் சிபாரிசு இன்றி உங்களால் என்மீது அன்புசெலுத்த முடியுமென்றால் நான் கொடுத்துவைத்தவன். நல்ல முடிவை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

– நம்பிக்கை வையுங்கள், வேண்டாமென்று சொல்ல நான் யார். ஆனால் நமது நம்பிக்கைகள் பொய்க்கவும் கூடும் என்பதுதான் வாழ்க்கை நமக்கு போதிக்கும் உண்மை.

– அய்யோ பாவனி! என்ன நீங்கள். ஒரு சமயம் குளிர்நீரைக் கொட்டுகிறீர்கள், மறுசமயம் வெந்நீரைக் கொட்டுகிறீர்கள்.

– கடந்த சில நிமிடங்களாகவே நான் சொன்னது அனைத்திற்கும் ஒரே பொருள்தான். அவ்வப்போது சொற்கள்தான் வேறுபடுகின்றன. எனது பதில் உங்களை குழப்புகிறதென்று நினைக்கிறேன். நான் யோசித்துதான் பதில் சொல்லவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னால் திடுமென்று ஒரு முடிவுக்கு வரமுடியாது.

– நீங்கள் சொல்லும் பதில் எனக்குச் சாதகமாக இருக்கவேண்டும். நல்ல பதில் என்றால் எத்தனை வருடங்களென்றாலும் உங்களுக்காகக் காத்திருப்பேன்.

– இப்படி, தோராயமாக எத்தனை பெண்களிடம் சொல்லி இருப்பீர்கள்- சிரிக்கிறாள்

– இல்லை பவானி உண்மை.. உண்மை. உங்கள் தலையில் அடித்துச் சத்தியம் செய்யவா? என்மீது நல்ல கருத்து இருக்கிறது. அன்பாகவும் பழகிவந்திருக்கிறீர்கள். என்னைக் காதலிக்கவும் திருமணம் செய்துகொள்ளவும், எதற்காக யோசனை? நான் உங்களுக்குப் பொருத்தமானவனாக இருக்கமாட்டேன் என்று நினைக்கிறீர்களா? ஒருவேளை என்னோடு பிரான்சுக்குப் போகவேண்டி இருக்குமே என்கிற அச்சமா? உங்களுக்குப் பிரான்சுக்கு வர விருப்பமில்லை என்றால், இருவரும் இங்கேயே இருக்கலாம். உங்கள் வழக்கறிஞர் பணியையும் இடையூறின்றிச் செய்யலாம். அதற்கான உத்தரவாதங்களை என்னால் அளிக்க முடியும்.

– இத்தனை பரிவுடன் உத்தரவாதங்களை எனக்காகத் தயாரிப்பதற்கு நன்றி. அவைகள் உண்மையாகவே இருக்கலாம். என்னை நம்பி வயதான ஒரு பாட்டி இருக்கிறாள். நீங்கள் குறிப்பிட்டதுபோல பிரான்சுபற்றிய பயமும் இருக்கிறது. உங்களிடத்தில் சொல்லத் தயங்குகிற வேறு காரணங்களும் இருக்கலாம். இப்போதுள்ள மனநிலையில் உடனடியாக எந்தப் பதிலையும் என்னிடம் எதிர்பார்க்காதீர்கள். எடுக்கும் முடிவு உங்களுக்குச் சாதகமாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்க உங்களுக்கு என்ன உரிமை உண்டோ, அந்த உரிமை எனக்கும் இருக்கிறது. எல்லாவற்றையும் விளக்கமாய்ச் சொல்லிக்கொண்டிருக்க எனக்கு முடியாது.

– இல்லை சிறிது நேரம் கூடுதலாக ஒதுக்கிப் பேசவேண்டுமென்றாற் கூட நான் தயார். நீங்கள்தான் சம்மதிக்கவேண்டும். கெஞ்சுவதுபோலப் பேசினான். அவன் கண்கள் கலங்கி இருந்தன.

– இல்லை தேவா. தொடர்ந்து பேசுவதால்மட்டும் என்ன நடந்துவிடும் என எதிர்பார்க்கிறீர்கள். ஒரு சில நாட்களிலேகூட என் முடிவைத் தெரிவிக்க முடியுமென்று நினைக்கிறேன். முடிந்தால் நானே உங்களை நேரில் சந்திக்கிறேன். தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை. நாம் புறப்படுவோம், அதுதான் இருவருக்கும் நல்லது.

– நல்ல முடிவாகச் சொல்லுங்கள்.

இவள் புறவாசற்கதவுக்காய்த் திரும்பி நடந்தாள். தேவசகாயம் அசையாமல் நின்று கொண்டிருந்தான். அவன் கண்கள் இரண்டும் அவள் நடந்து செல்வதைப் பார்த்தபடி இருந்தன. அவளும் பவானியாக இல்லாதிருந்து, இவனும் வழக்கமான தேவசகாயமாக இருந்திருந்தால் அவளை, பின்புறமாய்ச் சென்று கட்டிக்கொண்டிருப்பான். மனம் ‘அவசரப்படாதே’, என்றது. திடுமென்று தாவிக் குதித்தான், எட்டிக் காய்த்திருந்த எலுமிச்சையைப் பறித்தான். மனதிற்குச் சந்தோஷமாக இருக்க, பிடித்த சினிமாப் பாடலை முனகியபடி அவளைப் பின் தொடர்ந்தான்.
(தொடரும்)


nakrish2003@yahoo.fr

Series Navigation