மாத்தா-ஹரி அத்தியாயம் 18

This entry is part [part not set] of 27 in the series 20070712_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


– மிஸ் பவானி இன்றைக்கு உங்க ஆர்க்யுமெண்ட் பிரமாதம். இனிப் புதுச்சேரியில் ·பேமிலி கோர்ட்டென்றால் நீங்கதான் ஹீரோயின்”- புகழ்பவர் சுந்தரமூர்த்தி., பவானியின் சீனியர் வக்கிலின் குமாஸ்த்தா. குடும்ப நீதிமன்றத்தைவிட்டுப் பவானி வெளியேறி, படியில் இறங்கிக்கொண்டிருந்தாள். வழக்கம்போல இவளைப் புகழ்ந்தபடி வேகமாய் இறங்கிப் போன சுந்தரமூர்த்தி எதையோ ஞாபகப்படுத்திக்கொண்டவர்போல, சட்டென்று நின்றார், காத்திருந்தார். பவானி புரிந்தகொண்டவள்போல, அவர் அண்மையில் வந்ததும், மனதில் நினைத்ததைக் கேட்டுவிட்டாள்

– என்ன சுந்தரமூர்த்தி சார் எதையாச்சும் மறந்திட்டீங்களா? நானும் கேக்கணுமென்று நினைச்சேன். அம்மாவுக்கு இப்ப தேவலாமா?

– சட்டென்று பாயிண்ட்டைப் புடிச்சிட்டீங்களே- இதைத்தான் பவானிங்கிறது. ஆமாம்மா. நம்ம சீனியர் அய்யாவீட்டு அம்மாவை நினைச்சுத்தான் நிண்ணேன். என்ன பண்றது? மனம் சரியா இருந்தா, உடம்பு சரியா இருக்கும். மருமகன் கவலைதான் அவங்களை ரொம்ப வாட்டுது. ஒரே மகளென்று பார்த்துப்பார்த்து செஞ்சாங்க. சென்னையிலே சம்பந்தி குடும்பமும் தப்பில்லை. அவன் சகோதர்கள் அத்தனைபேரும் பொறுப்பாக உத்தியோகமும் பார்த்துக்கொண்டு மனைவி பிள்ளைகளோட நல்லா இருக்கிறாங்க. இவங்க மருமகனும் எதுலே இளப்பம், பாங்குலே நல்ல உத்தியோகம் ஒழுங்கா இருந்திருக்கலாம். என்ன செய்யறது? பணத்தைக் கையாடிட்டு, கைது வரைக்கும்போக, ஏதோ ஐயா தலையிட்டு பெரிய சிக்கலில் இருந்து மீட்டார். பிறகு டிராவல் ஏஜன்ஸிண்ணு ஒண்ணை ஆரம்பிச்சான். கலைவிழாங்கிறபேர்ல போலி பாஸ்போர்ட், போலி விசாவுல நிறைய ஆட்களை ஐரோப்பாவுக்கு அனுப்பிவச்சிருக்கான். அதுலேயும் மண் விழுந்தது. அங்கே இவன் அனுப்பிவைத்த ஆட்களை ஏர்போர்ட்லேயே பிடிச்சு, மறுவிமானத்திலேயே திருப்பி அனுப்பிட்டாங்க, நம்ம அரசாங்கத்து தெரிவிக்க, மீண்டும் கைது, ஜாமீன், வழக்கென்று நடந்துகொண்டிருக்கிறது. என்ன செய்வது விதி எப்படியோ மதி அப்படி..

– சுந்தரமூர்த்தி சார் இதெல்லாம் தெரிஞ்சதுதானே எத்தனை முறை சொல்லுவீங்க. அம்மா எப்படி இருக்காங்கண்ணு கேட்டேன்?

. எதையோ சொல்ல நினைச்சு எதையோ பேசிக்கொண்டிருக்கேன். இரண்டு நாளைக்கு முன்னே ஆபீஸ் வந்திருந்தீங்க, வழக்கமா உள்ளே போய் அம்மாவைப் பார்க்காம போகமாட்டீங்க, அன்றைக்கு ஏதோ கவனத்துல புறப்பட்டுப் போயிட்டீங்க. நீங்க போனபிறகு,” பவானி வந்திருந்தாளே போயாச்சாண்ணு” கேட்டாங்க.

– அய்யய்யோ.. அப்படியா! சாயந்திரம் அவசியம் வறேன்.

– இன்னொன்றையும் கேக்க மறந்துட்டேன். ஏம்பாக்கம் கேசுல வாய்தா வாங்கிட்டீங்களா?

– வாங்கியாச்சு. உங்க ஐயாகிட்டே சொல்லிடு அடுத்தமாதம் பதினைந்தாம் தேதி ஹியரிங் வருது.

படிகளில் தடதடவென்று இறங்கினாள். எதிர்பட்டவர்களிடமிருந்து இலாவகமாக விலகிக் கீழே வந்தாள். அவசரகதியில் நீதியின் பங்குதாரர்கள் பலரும் சிதறிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவளாக தகிக்கும் வெயிலில், சாலையைக் கடந்து தனது இருசக்கரவாகனத்தைத் தேடிக் கண்டுபிடித்தாள். ரெக்ஸின் இருக்கை கொதித்தது. பிறவாகனங்களைத் தள்ளிவிடாமல் தனது வாகனத்தைக் கவனமாகப் பின்னுக்கு இழுத்து, நீளவாட்டில் நிறுத்தினாள். சாலையை ஒட்டி, வேப்ப மரத்தின்கீழ் இவளை எதிர்பார்த்தபடி கோணியில் அமர்ந்திருந்த பெரியவர் ராமச்சந்திரனிடம் ஒரு ரூபாய் நாணயமொன்றை கொடுத்தாள். அவரை அந்த இடத்தில் வெகுகாலமாகப் பார்த்துவருகிறாள். மாலையில் மணக்குள வினாயகர் கோவிலுக்கு எதிரே பார்க்கலாம். கடந்த ஆறுமாதங்களாகக் கிட்டத்தட்ட அவர் வயதொத்த இன்னொரு பெண்மணியுடன் பார்க்க முடிகிறது. அப்பெண்மணி தலைமை அஞ்சலகத்தின் எதிரே இளநீர் விற்பவள். ஒருமுறை, நீதிமன்றத்திலிருந்து, அஞ்சலகத்திற்குப் போகவேண்டியிருந்தது. நேருபூங்காவிலிருந்த குழாயில் தண்ணீர் பிடித்து, துணிகளை அலசிக்கொண்டிருக்க, இவர் ஈரக்கோவணத்துடன வெயில் காய்ந்து கொண்டிருந்தார். மறுநாள் பவானி, தனது இரு சக்கர வாகனத்தை நீதிமன்றத்திற்கு எதிரே கிழவருடைய பாதுகாப்பில் நிறுத்தச்சென்றபோது, இவளுக்காகவே நேற்றிலிருந்து தனது மனதில் பத்திரமாக வைத்திருந்ததுபோல, வாய் திறந்து பேசினார்.

– அது வேறு யாருமில்லைம்மா. எனக்கு வேண்டியவங்கதான். உப்பளத்துல இருக்கு. இளநீ வியாபாரம். நீங்க கூட நம்ம போஸ்ட் ஆபீஸ் எதிரே பார்த்திருக்கலாம். புருஷனில்லை. ரெண்டு புள்ளைங்க, வளர்ந்ததுகப்புறம் அதது அதன் ஜோலியைப் பார்த்துக்கிறேனென்று சொல்லி இந்த அம்மாவை அநாதையாக்கிட்டுதுங்க. ஒரு நாள் கையைப்பிடிச்சுகிட்டு அழுதுச்சி.. தனியா என்னைய்யா பண்ற, எங்கூட வந்திடு, ஒண்ணா இருந்துக்கலாம்ணு சொல்லுச்சி. எங்களுக்கெல்லாம் உடமைண்ணு என்ன பெருசா இருக்கு, வயிற்றைத் தவிர. பட்டினிக் கிடக்காமல் காலந்தள்ளணும், ‘நாளை’ பற்றிய கவலைண்ணுகூட இல்லை, அது ‘வேளை’ பற்றிய கவலை. நானும் புறப்பட்டுபோயிட்டேன். இப்ப ஒண்ணாதான் இருக்கோம்.

சொற்கள் எளிதாக வந்தன. தாங்கள் எடுத்த முடிவின் நல்லது கெட்டது குறித்த பிரக்ஞையோ, சமூகம் என்று நான்கு பேர்குறித்த கவலையோ, அந்த நான்குபேர்களுடைய நாக்குக்கான வலிமையையோ, சட்டதிட்டங்கள் குறித்த பயங்களோ, அவரிடம் இருப்பதாக பவானி உணரவில்லை. ஒரு பக்கம் பொறாமையாகவும் இருந்தது. இந்திய மக்கள்தொகையில் இப்படி வாழ்பவர்கள் எத்தனை சதவீதம். சமூகத்தின் நியதிகளை, கோட்பாடுகளை எத்தனை சுலபமாக “ச்சீ போங்கடா” என்று அலட்சியபடுத்தமுடிகிறது. அந்தத் துணிச்சலை எங்கிருந்து பெற்றார்கள். இவர்களுக்கென்று எந்தத் துரும்பையும் இச் சமூகமோ, அரசோ, அதன் பிரநிதிகளோ கிள்ளிப்போடாதபோது, ‘இந்த கவர்மெண்ட்டும், கோர்ட்டும் ‘என்…… மசுருக்குச் சமானம்’ என்று நீதிமன்றத்தில் கூச்சலிட்ட ரிக்ஷா வண்டிக்காரர் மாணிக்கத்தின் குரலில் ஒலித்த நியாயத்தையே அவருடைய குரலிலும் கண்டாள். விட்டு விடுதலையாகித்தான் வாழ்கிறோமா? சுதந்திர நாடு, சுதந்திர வாழ்க்கை என்று பேரு, ஆனால், விரும்பியதிசையிற் பறக்கவும், எண்ணம்போல செயல்படவும் எத்தனை பேருக்கு முடியும்? அவளுடைய அப்பா, அடிக்கடி எழுப்பும் கேள்வியையும் அவள் ஞாபகபடுத்திக்கொள்ள, தகிக்கின்ற வெயிலையும் மீறி உடல் சிலிர்க்கிறது. அனற்காற்றில் நெஞ்சு வறண்டது. வீட்டுக்குப்போனதும் செம்புசெம்பாய்ப் பச்சைத் தண்ணீரைக் குடித்தாகணும், என நினைத்து வண்டியைக் கிளப்பினாள். கீழே கொதிக்கும் தார்ச் சாலை, வெயில் வலைபோல படர்ந்து கிடைத்த மனிதர்களையெல்லாம் சிறைவைத்திருக்கிறது, சுரணையுள்ள மனிதர்களுக்கு இந்த வெயில் கொஞ்சம் கடுமைதான். மரங்களில் அசைவில்லை. மரத்தடிகளில் ஈ மொய்க்க தூங்கும் ரிக்ஷா ஓட்டுனர்கள். பிரெஞ்சு குடிமகன்கள், பீர் குடிக்கவென்று, பாருக்குள் நுழையும் நேரம், குளிர்பான கடைகளை மொய்த்துக்கொண்டு ஈக்களும், மனிதர்களும். கசகசவென்று உடல் எரிந்தது. முழுக்க வியர்வை. இரவிக்கை முதுகில் ஒட்டிக்கொண்டது. மீன்கூடைகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு, வயிற்றுப்பாட்டுக்காக பெடலில் குதித்து வலமும் இடமும் ஆட்டமிடும் நோஞ்சாண் ஆசாமி, சட்டென்று ஒரு வெறி.. வண்டி வேகம் பிடித்தது.

வீட்டின் முன்னே வண்டியை நிறுத்திக் கொறட்டில் ஏற்ற, இவளைப்போலவே கவிதையில் ஆர்வம்கொண்ட சிநேகிதி வந்திருந்தாள். நெஞ்சத்தில் ஆனந்தம் களுக்கென்று நிரம்பி வழிந்தது. கண்கள் அகலவிரிந்தன, எதிர்பார்த்தவள்போல சிநேகிதி புன்முறுவல் செய்தாள். தேவகிக்கு, புதுச்சேரியை ஒட்டிய தமிழ்நாடு கிராமம் ஒன்றில் தொடக்கப் பள்ளி ஆசிரியை பணி. பவானியைப் போலவே சிற்றிதழ்களுக்கு கவிதை எழுதி, ஒருசில அசல் சிங்கம் மார்க் பட்டாசுரக ஆண் எழுத்தாளர்களால், கொழுப்பெடுத்ததுகள் என வருணிக்கப்படும் இனம். எப்போது புதுச்சேரி வந்தாலும் பவானியைப் பார்க்காமல் போகமாட்டாள்.

– வாடி.. எப்போ வந்தே? இரண்டு வாரமா உன்னை காணலியேண்ணு பார்த்தேன்.

– எனக்குத் திடீர்னு செஞ்சிப் பக்கத்திலே மாற்றல்னு உத்தரவு வந்திட்டுது. என்ன செய்யறதுண்ணு புரியலை. சென்னையிலே போயிட்டு அலை அலையென்று அலைஞ்சி, முடியாம, தொகுதி எம்.எல்.ஏவைப் புடிச்சு கொடுக்க வேண்டியதைக்கொடுத்து, இப்போதான் மூச்சுவிடறேன்.

– உள்ளே வா..

– ஒருவாய் சாப்பிடும்மா, பவானிவந்திடுவாண்ணு சொன்னேன். கேக்கலை- நடையிலிருந்தபடி. பாட்டியின் குரல் ஒலித்தது.

– கூடத்துலேயே இலையைப் போடு பாட்டி. நான் கால்கைகளக் கழுவிக்கொண்டு வந்திடறேன்.

பவானி வாசலில் இருந்த குழாயைத்திறந்து நீரைக் கைகொள்ள வாங்கி முகத்திலடித்து அலம்பியவள், கைகால்களையும் தாராளாமாகத் தண்ணிர் எடுத்துக் கழுவிக்கொண்டு ஏறிவந்தாள். பாட்டி துண்டை எடுத்துக்கொடுக்க முகத்தைத்துடைத்துக்கொண்டு, மின்விசிறியைச் சுழலவிட்டவள், தேவகிக்கு அருகில் அமர்ந்தாள்.

– பாட்டி இன்றைக்கு என்ன ஸ்பெஷல்? – தேவகி.

– ஏண்டிம்மா, காலமேயே வந்திருந்தால் உனக்குபிடிச்ச சுண்டைக்காய்க் காரக்குழம்பும், உருளைக்கிழக்கு மசியலும் பண்ணியிருப்பேன். பவானிக்கு வெயிற்காலத்துலே காரக்குழம்பை கண்ணிலேயே காட்டக்கூடாது. வெங்காய சாம்பார் வச்சு, உருளைகிழங்கு வறுவல். வழக்கம்போல சோற்றுவத்தல். ரசம் மட்டும் செய்யலை. மோர் தாளிச்சுவச்சிருக்கேன், புதியனா துவையல் இருக்கு. போதுமா? வேறெதாச்சும் வேண்டுமா?.

– பாட்டி நீ எது செஞ்சாலும், அமுதந்தான். இப்படி பக்கத்திலே கொஞ்ச நேரம் உட்கார்.

– பக்கத்திலே வந்து உக்காந்திட்டா, உங்களுக்கு பரிமாறறது யார்? – பாட்டி

– வேண்டுமானா, எல்லாத்தையும் இங்கே கொண்டு வச்சுக்குக்குவோம். நீயும் இலையைப் போட்டுக்கொண்டு பக்கத்திலே உட்கார். மூன்று பேருமா இப்படி சாப்பிட்டு எத்தனை நாளாச்சு?

– இல்லை சிநேகிதிகள் ரெண்டுபேருக்கும் பேசறதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கும், நான் சமையற்கட்டுக்குப் போறேன்.

– என்ன வழக்கம்போல தேவகிகிட்ட என் கல்யாணத்தைப்பத்திப் பேசினாயா? அவள் அதை பத்திப் பேசணுமெண்று எதிர்பார்த்துத்தானே எங்களைத் தனியா விட்டுட்டுப் போகணுங்கிற?

– ஆமாம் அப்படித்தான் வச்சுக்கோயேன். ஏதோ எங்கட்டை சாயறதுக்குள்ளே உனக்கு நல்லது நடந்து பார்க்கணும்னு ஆசைப் படறேன் அது தப்பா? – கடைசி வார்த்தை தழுதழுத்து அடங்கியது. பொருமலுடன் பேசியதால் ஏற்பட்ட படபடப்பில், அயர்வு கண்டது. தரையில் உட்கார்ந்துவிட்டாள்.

மறுகணம், பவானியின் கண்களில் நீர் தளும்பியது. பேசமுற்பட்டவள், நா வராமல் தடுமாறினாள். தொண்டை அடைத்தது. பாட்டிக்கும் அதுதான் நிலைமை. பவானியின் தலையை வாங்கி தனது மடியில் இறுத்திக்கொண்டாள். பாட்டியின் மார்புக்கூட்டுக்குள்ளிருந்து இவளறி,ந்த மெல்லிய சுகந்தம் – நாசி- நெஞ்சம்- உயிரென்று உறவாடும் மணம் – பவானிக்குச் சுகமாக இருந்தது.

– பவானியைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா. நீங்க அவளைப் பற்றிய கவலையிலே இருப்பதுபோலவே அவளுக்கு உங்களைப் பற்றிய கவலைகள். நீங்கள் சொன்னது எல்லாத்தையும் விளக்கமா அவளுக்கு எடுத்துச் சொல்றேன். நீங்கள் முதலில் இப்படி உட்காருங்கள். பவானி சொன்னதுபோல இன்றைக்கு மூன்றுபேரும் ஒன்றாகச் சாப்பிடுவோம். மாலை வெளியிற் சென்றுவருவோம்.

சற்று முன்புவரை அங்கே நிலவிய கலகலப்பு நொடியில் மறைந்துபோனது. மூவரும் அமைதியாக சாப்பிட்டு முடித்தார்கள். பாட்டி வெற்றிலை செல்லத்தை எடுத்துக்கொண்டு சமையலறை பக்கம் ஒதுங்கினாள். தோழியர்கள் இருவரும் தாங்கள் வழக்கமாய் உட்கார்ந்து பேசுகிற பவானியின் அறைக்கு வந்தார்கள். பவானி சன்னலைத் திறந்தாள். வெயிலின் கடுமை தணிந்திருந்தது.

– மின் விசிறியைப் போடட்டுமா? புடவை மாத்திக்கிறயா?

– போடு. மாற்றுப் புடவை கொண்டுவந்திருக்கேன். ஒரு தலையணைமட்டும் கொடு, தரை சுத்தமாகத்தானே இருக்கிறது, கீழேயே படுத்துக்கிறேன்.

– பாட்டிக்கு உன்னைப்பற்றிய கவலைகள். அவளைக் குற்றம் சொல்ல முடியாது. பெண் என்பவள் ஆண் சார்ந்து வாழ்ந்தாகவேண்டும் என்ற இந்த சமூகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி ஆகணுங்கிற நெருக்கடியில் அவள் இருக்கிறாள். அவள் வயசு அப்படி. நாமென்ன மேலை நாடுகளிலா இருக்கிறோம். நம் நினைக்கிற மாதிரி வாழறதுக்குப் பலகாலம் பிடிக்கும். அதற்காக நம்மைச் சார்ந்தவங்களை வேதனைப்படுத்தறது என்ன நியாயம்.

– என்ன தேவகி நீயும் அப்படிப் பேசற? நினைக்கிற மாதிரி வாழ்ந்தாகணுமென்றா நாம நினைக்கிறோம். நாம் நாமா வாழ்ந்தாற்கூட போதும். எனக்குச் சில சமயம் திருமண என்கிற பந்தமெல்லாம் அவசியமாண்ணு தோணுது. வருகிறவன் என் முதுகில் உட்கார்ந்து கொள்வான் என்கிற பயம்.

– சவாரிசெய்ய வேற இடம் இருக்கிறதென்றுசொல்..

– ச்சீ..

– என்ன ச்சீ. உண்மை அதுதானே. சலவைத் துணியாகவே உடுத்தி நாம பழக்கப்படுத்திகிட்டோம். சில நேரங்களில் வீட்டிலிருக்கும்பொழுதாவது அழுக்குத் துணிகளை உடலிற்சுற்றி பழகணும், அவசியமென்றால் சாக்கடைகளையும் தாண்டிப் பழகணும், அதாவது காலை வைத்திடாமல். அப்படியெல்லாம் பழகியிருந்தால், உன்னைச் சுற்றி ஓர் காற்று வெளியை உண்டாக்கிக்கொண்டு அதைத்தான் சுவாசிப்பேனென்று அடம் பிடிக்க மாட்டாய். அடுத்தவர்களைப் பார்க்கிறபோதே, நாம பெரியவங்க என்கிற நினைப்பு நமக்குள் வந்திடுது, முரண்படணுமென்று அடம் பிடிக்கிறோம். அவங்களைத் தள்ளிவச்சு குறைகளைத் தேடறோம். தேவசகாயத்திடம் குறைகள்னு என்ன பார்க்கிற? அவனாக உன்னிடத்தில் தனது விருப்பத்தை தெரிவிச்சது ஒரு குற்றமா எனக்குப் படலை.

– நல்ல அபிப்ராயம் அவன்மேல இருப்பது உண்மை அதற்காகல்லாம் காதல், கல்யாணமென்று அவனோட கை கோர்த்துக்க முடியாது. பிறகு என்னோட பாட்டி இருக்காங்க. அவங்களைப் பத்தியும் யோசிக்கணும். எங்க சுதா இராமலிங்கம் சொல்வதுபோல, ஆண்களை திருமணத்திற்கு முன், பின் என்று பார்க்கணும். அதிலும் எனது வழக்கறிஞர் தொழிலில் காதல் திருமணம் செய்துகொள்கிற தம்பதிகளில் பலருக்குத் திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கையில் நிம்மதி இல்லை. குறிப்பாகப் பெண்களுக்கு. அதிலும் எவன் காதலில் மிக அதிகமாகப் பிதற்றியவனோ, அவனே திருமணத்திற்குப் பிறகு ஒரு மோசமான கணவனாகவும் இருக்கிறான். காதலிக்கும்போது, அவனைக் கவர்ந்த விஷயங்களென்று பட்டியலிட்டதை எல்லாம், திருமணத்திற்குப் பிறகு மற்றவர்களுக்கானதென்று நினைத்து சந்தேகப்படுகிறான். பெண் கொடி, ஆண் கொம்பு என்ற உதாவாக்கரை உவமைகள் மறக்கப்படணும். சார்ந்து வாழ்வது இரண்டு இனத்திற்குமான தேவை என்பது உணரப்படணும். தேவையெனில் தனித்துவாழவும் முடியனும். இப்போது என்னால முடிவுக்கு வரமுடியலை. இப்படி வாதிடும் நான் பக்கத்துலே எவன் இருந்தாலும் பரவாயில்லை, தோள்கிடைச்சா சாஞ்சிக்கலாம் என்கிற சராசரிப் பெண்ணின் மனநிலையிலும் சிலநேரங்களில் இருக்கிறேன்.

– ம்ம்.. பார்ப்போம். உன்னை புரிஞ்சுக்க இத்தனை நாள் பழகிய என்னாலேயே முடியலை. முன்னெல்லாம் அடிக்கடி சொல்வாய். இப்ப மறந்துட்டண்ணு நினைக்கிறேன்.

– என்னது?

– “நாம விரும்பினால், உலகத்தில் ஒருத்தரும் கெட்டவங்க இல்லைண்ணு” என்ன ஞாபகம் இருக்கா? உன்னைத் தேடி வருகிறவனையெல்லாம் தட்டி கழிச்சா, நாளைக்கு உன்னையே சந்தேகப்படுவார்கள். அதிலும் குடும்ப வக்கிலாக இருக்கிறாய். தொழிலில் ஜெயிக்கணுமென்றால் குடும்பம் என்ற தகுதி உனக்கும் வேண்டுமென்று இந்த சமுதாயம் எதிர்பார்க்கும். நொடிக்கு நூறுதரம் புகழ்கிற சுதா இராமலிங்கமும் கணவர், பிள்ளைகள்னு இருக்கிறவங்கதானே? உன்னு¨டைய கவிதை ஒன்றை, இந்த மாத ‘மொழி’ இதழில் வாசிச்சேன். ரொம்ப நல்லா இருந்தது.

– எந்தக் கவிதை, யார், எப்போது எதைப் பிரசுரிக்கிறாங்கண்ணு தெரியவில்லை. இவங்கக்கிட்டே காசை எதிர்பார்க்கவில்லை. குறைஞ்சபட்சம் ஒரு இதழையாவது அனுப்பிவைக்கலாம், தலையங்கம் எழுதும்போது மாத்திரம், உபதேசத்துக்குக் குறைச்சலில்லை, நேர்மைக்குப் பஞ்சமில்லை. இதுதான் நம்ம நாட்டோட சாபக்கேடு. அரசியல்வாதி சினிமாவை குறை சொல்வான், சினிமாக்காரன் அரசியல்வாதியைக் குறைசொல்வான். தங்கள் முதுகை எவனும் பார்த்துக்கமாட்டான். அரசியல்வாதியாகட்டும், நடிகனாகட்டும், எழுத்தாளனாகட்டும் எல்லாரையும் அனுசரித்து தன்னை வளர்த்துக்கொள்கிற சாமர்த்தியசாலியும் இருக்கத்தான் செய்கிறான். நமக்குத்தான் வீம்பு, சுரணையென்று மனதில் ஒட்டிக்கொண்டு அடம்பிடிக்கிறது. இந்த மண்ணே வேண்டாமென்று எங்கேயாவது தொலைந்துபோகக்கூட ஆசை. அது என்ன கவிதை சொல்லேன். ‘மொழி’ இதழை வாங்கி வந்திருக்கிறாயா?

– ம்.. எனது பையில் இருக்கிறது. கவிதையை மனப்பாடமாக என்னால் சொல்ல முடியும். ‘பல்ப்ப புழுக்கைக்கள்’ என்ற தலைப்பில் வந்திருக்கிறது.

“பாட்டி வைத்தியத்திலும்
அம்மா அடுக்களையிலும்- நான்
அலுவலகத்திலுமாக
வேர்பிடித்தும்
போன்சாய் வாழ்க்கை
வெட்டப்படும் கணுக்களில்
பச்சை துளிர்க்குமென
தடவிச் சோர்வதுமுண்டு
சத்தியம் பண்ணுவேன்
கோளாறு எங்கள்
வேர்களில் இல்லை. ”

தேவகி முடிக்கவில்லை. குளியலறையிலிருந்து ‘மடார்” என்று சத்தம். அடுத்தடுத்து விநோதமான சத்தங்களின் கலவை

– என்னவோ எனக்குப் பயமா இருக்குடீ. பாட்டிதான் விழுந்துட்டாங்களென்று நினைக்கிறேன்.. பவானி பதைபதைத்தபடி எழுந்தோடினாள். தேவகியும் அவள் பின்னே ஓடினாள்.

பெண்கள் இருவரும் குளியலறையை அடைந்தபோது, பாட்டி மூர்ச்சையாகிக்கிடந்தாள். தலையிலிருந்து இரத்தம் பரவிக்கொண்டிருந்தது. பார்த்தக்காட்சியை தாங்கிக்கொள்ளூம் திடம் பவானிக்கு இல்லை, சரிந்து விழும் நிலையில் இருந்தவளை, தேவகிப் பிடித்து உட்கார வைத்தாள். குவளை ஒன்றில் தண்ணீர் எடுத்துவந்து முகத்தில் தெளித்தாள். தாமதிக்கும் ஒவ்வொரு நேரமும் ஆபத்தென்று தேவகிக்குப் புரிந்தது. பத்மாவை துணைக்கு அழைக்கலாம் என்று தோன்றியது. பவானியின் அறைக்குத் திரும்பினாள். தொலைபேசி எதிரே இருந்த சிறிய குறிப்பேடு ஒன்றில் பத்மாவுடைய தொலைபேசி எண் கிடைத்தது. தொலைபேசியில் விரல்களைப் பதிக்கும்போது, தேவகியின் விரல்கள் வேர்வையில் நனைந்திருந்தன. அடுத்த முனையில் மணி ஒலித்தது.

– “ஹலோ”

– “வனக்கங்க, நான் பவானியின் சிநேகிதி. அவள் வீட்டிலிருந்துதான் பேசறேன். கொஞ்சம் பத்மாவை கூப்பிட முடியுமா? மிகவும் அவசரம்”.

மறு முனையில் மௌனம்.. யாரோ நடந்துவரும் ஓசை. பத்மாவாக இருக்கவேண்டுமே என வேண்டிக்கொண்டாள்.

– “ஹலோ”.. மறுமுனையில் பத்மாவின் குரல். “இங்கே பத்மாதான் பேசறேன். சொல்லுங்க என்ன விஷயம்?”

– “பத்மா.. நான் தேவகி பேசறேன், இங்கே பவானியோட பாட்டி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாங்க. நிறைய ரத்தம் போயிருக்கு. விபத்தைப் பார்த்த அதிர்ச்சியிலே பவானி மூர்ச்சை ஆயிட்டா. நான் தனியா இருக்கேன் என்ன பண்றதுண்ணு தெரியலை.”

– “பயப்படாதே.. முடிந்த அளவு சீக்கிரமா வரப்பார்க்கிறேன்.

அடுத்த இருபது நிமிடத்தில், தேவகி காருடன் வந்திருந்தாள். காரோட்டிக்கு அருகில் முன் இருக்கையில் தேவா அமர்ந்திருந்தான். பாவனி மூச்சை தெளிந்திருந்தபோதும், சோர்வுடன் இருந்தாள். டிரைவரும், தேவாவுமாக, பின் சீட்டில் ஒரு பெட்ஷீட்டை விரித்து அதில் பாட்டியைத் தூக்கிவந்து கிடத்தினார்கள். பவானி பின் இருக்கையில் பாட்டியுடன் அமர்த்தப்பட்டாள்.

– தேவகி எங்களுக்குத் தெரிஞ்ச கிளினிக் பக்கத்துலே இருக்கு அங்கே போவோம். தேவாகிட்டே பேசிட்டேன். அவன் காரில் கூடபோகட்டும். நாம வேண்டுமானா ஆட்டோபிடிச்சுக்குவோம்.

முன் இருக்கையில் அமர்ந்த தேவப்பிரகாசம் பவானியைத் திரும்பிப் பார்த்தான். அவள் உதடுகள் “நன்றி தேவா” என உச்சரித்தது, காதில் கேட்டது.

(தொடரும்)


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா