மாத்தா-ஹரி அத்தியாயம் 12

This entry is part [part not set] of 32 in the series 20070531_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


அத்தியாயம் 12

– பவானி உனக்குப் புதிதாக எதைச் சொல்லப்போகிறேன். எனது தொடக்கம், முடிவு, அவைதொடர்பான உண்மைகள், பொய்கள், அனைத்துமே கருத்தியல்களாகவும், அனுபவங்களாகவும் ஏற்கனவே நீ உள்வாங்கியவள், வேறு யாருக்காக பிறகு பதிவுசெய்யப்படவேண்டும் என்று நினைக்கிறாய்.

– எனக்காக, எனக்காக அல்ல, இரண்டுமே சரி. அதாவது என்னைப்பற்றிப்பேச, கிருஷ்ணா உன்னை முகப்புரையாக பயன்படுத்த நினைக்கிறான். அதுதான் உண்மை, ஆக இம்முறை நீ சொல்வது எனக்காக அல்ல. இந்த உலகத்தின் வாயை அடைக்க. வேறொரு வகையில், அதன்மூலம் எனக்கும் நீ உதவிசெய்தாக ஆகிறது. முடிவில் இதுபற்றி பேசுவோம். குறிப்பாக உனது இந்தோனேசியா வாழ்க்கையைப்பற்றிப் பேசு. உனது எல்லா அவலங்களும் அங்குதானே ஆரம்பம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்ததென்று ஞாபகம், குறிப்பாக எந்த ஆண்டென்று நினைவில் இல்லை.

– அது நடந்தது 1897ம் ஆண்டு, தம்பதிகளாக நானும் எனது கணவரும் இந்தோனேசியாவில் வந்திறங்கினோம். 1900ம் வரை அங்கே நரக வாழ்க்கையென்றுதான் சொல்லவேண்டும்.

அதிசயித்த ஆகாயமும், ஆர்ப்பரித்த பூமியும் சுவாசித்த காற்றும், அறிந்த நெருப்பும், பருகிய நீரும், உலகமெங்கும் ஒன்றுபோல இருப்பினும், நெருங்கிப் பார்க்கிறபோது, அவற்றுக்கான குணங்கள் வேறென்று புரிகிறது. அங்கிருக்கிற மனிதர்களும், விலங்குகளும், செடிகொடிகளும், பிற உயிர்களும் அதற்கான சாட்சிகள். நெற்பயிரை குளிர்பிரதேசத்திலும், கோதுமையை வெப்ப நாடுகளிலும் விவசாயம் செய்து, விளைச்சல் காணலாம், அவைகள் நகல்களாக இருக்குமேயன்றி ஒரு போதும் அசல்களாகமாட்டாது. அமெரிக்காவில் பிறந்துவளரும் நீக்ரோக்களும், அமெரிக்க கறுப்பர்களாக-நகலாக- அடையாளபடுத்த உதவுமே அன்றி அவர்கள் அசலானவர்கள் அல்ல. நமது பிறப்பும், தொடக்கமும் ஒரு மண்ணுக்குச் சொந்தமாகி இருக்க, மற்றொரு மண்ணுக்கு நிறைய எதிர்பார்ப்புகளுடன் புலம் பெயர்கிறோம். அங்கே தெளிவற்ற வாழ்க்கை – ஆணும் பெண்ணுமற்ற பிறவிபோல, வாழ்க்கைத் தேடல்கள். சொந்த மண் குறித்த நினைப்பு, போதைப்பொருள்போல அடிமையான மாத்திரத்தில், நம்மை விடுவதில்லை. அதன் உடும்புப்பிடியில் நமது நெஞ்சம். நமக்கோ உடல் மீது அக்கறை, அதற்கான பராமரிப்பு, அதற்கான உடை, அதற்கான வாசனை திரவியம் என்று அலைந்து திரும்ப, ஒரு நாள், ஒருகணம் ஏதோ உடைபடும் சத்தம், சிதிலம் அடைந்து இருப்போம். நமக்குள் நடந்து முடிந்த இந்த விபத்தை அறிய தளத்திற்கு வருகிறபோது, காலம் கடந்திருக்கும். நமக்கென்று ஒரு சிறையை ஏற்படுத்திக்கொண்டு, அடைந்து கிடப்போம். இடையில் நம்மைச் சந்திக்க வருபவர்களுக்கென்று இருக்கவே இருக்கின்றன புனைகதைகள். காலம் கடந்து சொந்த மண்ணுக்குத் திரும்புவது பயணிக்கு ஒருபோதும் உதவாது, பயணப்பட்ட வாகனத்திற்கு வேண்டுமானால் வருமானத்தைத் தரலாம். நீ பிரான்சுக்கு வந்தபோது உனக்கு என்னென்ன பிரச்சினைகளோ, அப்பிரச்சினைகளையே இந்தோனேசியாவில் வந்திறங்கியபோது எனது அனுபவங்களாக இருந்தன. இருவருமே தவிர்த்திருக்கலாம். விதி வேறாக நமது வாழ்வைத் தீர்மானித்திருக்கிறபோது, நாம் செய்வதற்கு என்ன இருக்கிறது..

1895ம் ஆண்டு ஐரோப்பியர்களிடையே காலனி நாடுகள் கனவுகள் ஏராளம், பரபரப்பான ஐரோப்பிய நகரவாழ்க்கையும், ஆலைகளின் சங்கொலிகளும் அலுப்பினைத் தந்திருந்தன. வழக்கம்போல காலனிநாடுகளில் குடி அமர்ந்த ஐரோப்பியர்களின் ராஜபோக வாழ்க்கையில் பங்களாக்கள், வேலைக்காரர்கள், வேட்டையாடுதல் மாதிரியான வசீகரச் சொற்கள் நிறைய இருந்தன. டச்சு கிழக்கிந்திய கம்பெனிகளில் பணிபுரிந்த, குறிப்பாக ராணுவ அதிகாரிகள் ஏதோ மேல் உலகத்திலிருந்து வந்தவர்களைப்போல நடந்துகொள்ள, அவர்களைக் கண்டு பிரம்மித்தது இன்றைக்குக்கூட என் கண்முன்னே நிற்கிறது.

ஆசிரியப் பயிற்சிப் பள்ளியிலிருந்து வெளியேறியிருந்த நேரம், எனது உறவினர் ஒருவர் வீட்டில் தங்கிஇருந்தேன். ஒரு நாள் காலை அன்றைய தினசரியைப் புரட்டிக்கொண்டிருக்கிறேன்.

‘டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் ராணுவ அதிகாரி ஒருவருக்குத் தகுந்த மணமகள் தேவை, உரியவர்கள் விண்ணப்பிக்கவும்’ என்ற விளம்பரம் கண்ணிற்பட்டது. விண்ணில் மிதப்பதுபோல உணர்ந்தேன். எனது கனவுகள் நனவாகும் நேரமென்று மனம் குதூகலப்பட்டது. அந்த நிமிடமே எனது நிழற்படம் ஒன்றுடன், ராணுவ அதிகாரியான ருடோல்ப் மக் லெயோட் (1) என்ற அந்த நபருக்குக் கடிதம் எழுதினேன். கடிதத்துடன் இணைத்திருந்த எனது நிழற்படம் எப்படியும் ராணுவ அதிகாரியின் மனதை மாற்றிவிடுமென்று எனக்குத் தெரியும். ஒரு நாள் இருவரும் சந்திக்கிறோம், அடுத்தடுத்து கடிதப்பரிமாற்றங்கள், எங்கள் திருமணம் உறுதிபடுத்தப்படுகிறது. 1895ம் ஆண்டு ஜூலைமாதம் பதினோராம் தேதி நகர மேயர் முன்னிலையில் மோதிரம் மாற்றிக்கொண்டோம். இரண்டாண்டுகள் பிரச்சினைகள் ஏதுமில்லை உலகில் பிற தம்பதிகளைப்போலத்தான் நாங்கள் வாழ்ந்தோம் அதற்கு அடையாளமாக எங்கள் முதல் ஆண்குழந்தையும் பிறந்தான். நோர்மன்(Norman) என்று அவனுக்குப் பெயரும் சூட்டினோம். தீர்மானித்ததுபோல அதற்கு அடுத்த சிலமாதங்களில் இந்தனேசியாவுக்கு கப்பல் ஏறினோம். அவருக்கு ‘அம்பாரவா'(Ambarawa) என்ற ஒரு சிறுகிராமத்து இராணுவ முகாமில் பணி என்று சொல்லப்பட்டது, சுற்றிலும் காடு. திரும்புகிற இடங்களிலெல்லாம் சீந்தில் மரங்கள், போதாதற்கு கொசுத்தொல்லை வேறு. என் வாழ்நாளில் பார்த்தறியாதப் பறவைகளும் விலங்குகளும் விதவிதமாய்க் குரலெழுப்ப, முதுகுத் தண்டு சிலிர்க்கிறது. உறக்கமின்றித் தவிக்கிறேன். குழந்தை நோர்மன் அழுகிறான், முதன் முதாலாக, மனதில் தெளிவின்றி ஒரு பயம் மெல்ல எட்டிப்பார்க்கிறது. ஏமாற்றத்திற்குண்டான குழந்தையைப்போல, எனக்குள்ளேயே சிறைபடுத்திக்கொண்டு அழத்தொடங்குகிறேன், விடிய விடிய அழுகிறேன். பொழுது விடிகிறது, என்னைச் சுற்றிலும் சீனர்கள், இந்தியர்கள் அவர்கள் இந்துக்கள், இஸ்லாமியர்கள், பௌத்தர்களாக வேறுபட்டிருக்கிறார்கள். அடுத்துவரும் நாட்களை எப்படி கழிக்கப்போகிறேன் என்று வேதனையில் ஆழ்ந்தபோது, நல்ல செய்தியொன்று கிடைத்தது. ருடோல்ப்க்கு மற்றொரு சிறிய நகரத்தில் பணியேற்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்கள். இப்புதிய பணியினால், வசதிகள் நிறைந்த மாளிகைபோன்ற வீடு, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவதற்குப் பணியாட்கள், பொழுதுபோக்குவதற்கு வசதிகள் என ஓரளவு ஆரம்பத்தில் நிம்மதியாகவே இருந்தேன். ஒரு சில மாதங்களில் தலைகீழ் மாற்றம், ருடோல்ப் மோசமான மதுப்பழக்கத்துக்கு அடிமையானார், எனது அழகினைப் பிறர் பாராட்டுகிறபோதெல்லாம் மன உளைச்சல் அடைந்தார். ஒருநாள் மாலை ருடோல்பும், நானும் வெளியிற் சென்றுவிட்டுத் திரும்புகிறோம். எங்கள் காதுபட இரண்டு பெண்கள் பேசுகிறார்கள்:

– அந்தத் தம்பதிகளைப் பார்த்தா என்ன தோணுது. அவளைப் பார்க்க அழகாகவும், சின்னப் பெண்போலவும் இருக்கிறா? அந்த ஆளை விரும்பி மணம் செய்துகொண்டிருப்பாள் என்று நினைக்கிற?

– ம். இருக்காது. உன்னைப் போலத்தான் நானும் நினைக்கிறேன். அந்த ஆள் தூங்காமல் விழித்திருந்தால் ஒருவேளை, பத்திரமாக வைத்திருக்கலாம். இல்லையென்றால் ஆபத்து.

ருடோல்ப் அமைதியாக இருந்தார், ‘பரவாயில்லையே’ என்று நினைத்தேன். வீட்டிற்குள் நுழைந்தோமோ இல்லையோ, கதவை அறைந்து சாத்துகிறார். நான் வியப்புடன் திரும்பிப் பார்க்கிறேன். அவரது இருகைகளும் எனது மார்பில் விழுகின்றன. விரிந்த கைகளில் தனது பலம் அனைத்தையும் திரட்டிக்கொண்டு தள்ளியதில், என்ன நடந்ததென்று தெரியவில்லை, கண் விழித்தபோது, வரவேற்பறையில் குடித்துக்கொண்டிருக்கிறார், ஏற்கனவே குடித்து முடித்த போத்தல்கள் இரண்டு அருகிலேயே இருக்கின்றன. மெல்ல எழுந்து அமர்ந்தவள், அமைதியாக அவரைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

– என்னடி என்ன பார்க்கிற?

– ‘…’

– எங்கிருந்து இத்தனை பாட்டில்கள் வெளியே வந்தன?

– ஏன் உனக்குக் கணக்குச் சொல்லவேண்டுமா? உனக்குத் தெரியாமல் வாங்கிவைத்திருந்தேன்.

– குடிக்கவேண்டும் என்று தீர்மானித்த பிறகு, யாருக்குப் பயந்து ஒளித்து வைத்திருக்கிறீர்கள்?

– உனக்குப் பயந்து, உன் அழகுக்குப் பயந்து? கேட்டாயா என்ன சொல்கிறார்கள் என்று? உனது காதிலும் விழுந்ததே

– அதற்கு நான் என்ன பண்ணட்டும்? அழகா இருப்பது என் குற்றமா?

– ஆமாம், அந்த அழகை வச்சு வேண்டாம்.. நான் என் வாயாலச் சொல்லக்கூடாது.

– ஏன் சொல்லவந்ததை முழுசாசொல்லிடுங்க.

– பச்சையாத் சொல்லணுமென்றால் நீ தேவடியா போதுமா? பக்கத்துலே போயிட்டுவரணுமென்றால் கூட அலங்காரம் பண்ணிக்க ஒரு மணிநேரமாகுது. ரஸம்போன கண்னாடி முன்னால நிண்ணு ஸ்டிக்கர் பொட்டை ஒட்டிக்கொண்டு புறப்பட்டதையெல்லாம் மறந்தாச்சு இல்லையா?

– இல்லை எதையும் மறக்கலை, அப்பாவின் நினைவுகளோடு ஓட்டிய மழை, பாட்டியின் பெருமூச்சுகள், புதுச்சேரி கடற்கரை, மணக்குளவிநாயகர்கோவில் மூலவர் மீது ஓடிவிளையாடும் சுண்டெலிகள், மார்கழிமாத காலைகள், மாக்கோலங்கள், மொட்டைமாடி, நுங்கு, சைக்கிள் மணியைத் தொடர்ந்து, கேட்கிற பால்காரரின் குரல், கறுப்பு கவுன், எழுதிய கவிதைகள் எதையும் மறக்கலை, எனக்குள்ள சிக்கலே அதுதான். இங்கே இரவில் ஒளிர்கிற சூரியனும், பகலில் காய்கிற சூரியனுங்கூட வேறாக இருக்கிறது. மொழிக்கான பேதங்கள் இருக்கட்டும், அடிக்கடி ஒலிக்கும் தேவாலயத்து மணியின் நாதமுங்கூட எனக்குள் ஒட்டமாட்டேன்கிறது தேவா…

– இப்போ புரியுதா நான் எதற்காக குடிக்கிறேன் என்று… நீயும் விஸ்கி எடுத்துகிட்டா எல்லாம் மறந்திடும். பிறகு நான் நினைக்கிறது போல நீ மாத்தா ஹரிதான்- சித்தே முன்னே பேசினதுபோல நமக்குப் பின்னே ஒருத்தரும் பேசமாட்டாங்க. மொத்தக் கூட்டமும் உன் காலில் விழும். மாத்தா ஹரிக்கும் அதுதான் நடந்தது.

– தேவா பலமுறை சொல்லிட்டேன், நான் மாத்தா ஹரி இல்லை. பவானி.. பவானி..பவானி..

– உனக்கு பவானி, எனக்கு மாத்தாஹரி.

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.

காலில் விழுகிறான். நான் விலகிக்கொள்கிறேன். மீண்டும் மீண்டும் பித்து பிடித்தவன்போல என் கால்களில் விழுகிறான். இப்படியே தொடர்ந்தால் பிரான்சு தெருக்களில் ஒருநாள் பைத்தியக்காரியாய் வீதிகளில் அலைவேனோ என்ற அச்சம். எவர் தோள் கிடைத்தாலும் போதும், உடைந்து அழுதுவிடுவேன் போலிருந்தது.

– தேவா, என்ன இது பைத்தியக்காரத்தனமா? எழுந்திருங்க.

எழுந்து கொண்டான். எழுந்தவன் அமைதியாக என்னை சிறிது நேரம் உற்றுப் பார்க்கிறான். மீண்டும் ஏதோ விபரீதம் நடக்கவிருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. சட்டென்று என் தலைமயிரைக் கொத்தாகப் பிடித்தான்.

– இதற்கெல்லாம் யார் காரணமென்று நினைக்கிற? நீ நீதான்.

– அப்படி என்ன செய்தேன்?

– அன்றைக்கு விழாவிலே என்ன நடந்தது. நாம இரண்டுபேரும் ஒன்றாக இருக்கிறோம், குளிர்பானம் கொண்டுவந்த பையன்கள் முதலில் உனக்குக் கொடுக்கிறார்கள்?.

– நானா அவர்களைக் கேட்டேன்.?

– நீ வேண்டாமென்று சொல்லி இருக்கணும், முதலில் எனக்குக் கொடுக்கவேண்டுமென்று சொல்லி இருக்கவேண்டும். நீயும் பல்லை இளித்துக்கொண்டு எடுத்துக்கொள்கிறாய். உன்னுடைய அந்த இளிப்பு தப்பு, பார்வை தப்பு.

– ம்.. தப்புத்தான்? வேறு எதாவது?

– கடைத்தெருவில் நாம் போன கடைகளுக்கெல்லாம், ஒருவன் தொடர்ந்து வந்ததைப் பார்த்தேன்.

– நாம் எத்தனை கடைகளுக்குப்போனோம், அவன் எத்தனை கடைகளுக்கு, நம் பின்னாடி மன்னிக்கவும் அதாவது என் பின்னாடி வந்தான்.

– இரண்டு கடைகளுக்கும் வந்திருந்தான், ராஸ்கல்- இத்தனைக்கும் பொண்டாட்டி பக்கத்துல நிக்கிறா, வெள்ளைக்கார நாய்க்கு அறிவு வேணாம். அங்கேயே செருப்பைக் கழட்டியிருப்பேன்.

– உங்களுக்குத்தான் அசிங்கம். நீங்க நினைக்கிற மாதிரி அவனும் நினைச்சா என்ன ஆகும்? யோசிச்சுப்பாருங்க

– என்ன உளர்ற..

– உளறல உண்மையைத்தான் சொல்றேன். அவன் பொண்டாட்டிக்காக அந்த இரண்டு கடைக்கும் நீங்க வந்ததா அவன் சொன்னா, முகத்தை எங்கே வச்சுக்குவீங்க. எதையும் உண்மை என்னவா இருக்குமென்று யோசித்துப்பார்க்கணும், அது சுயமா சிந்திச்சுப் பார்க்கிறவங்க செய்யறவேலை.

– என்ன சொன்னே? வீசி எறியப்பட்ட வேகத்தில் ‘ணங்’ கென்று நெற்றிப் பொட்டில் பட்டுத் உடைந்து விஸ்கி பாட்டில் சிதறுகிறது. அவனது கண்களில் உக்கிரம், மீசையை வருடியபடி என்னைப் பார்த்துக்கொண்டிருந்தவன், மீண்டும் சிரிக்கிறான். மெல்ல தள்ளாடியபடி என்னிடம் வருகிறான். வலது கையை விரித்து முகத்தைப் பற்றியவன், அப்படியே தூக்கிநிறுத்த முயல்கிறான், மெல்ல எழுந்து கொள்கிறேன். சிரிப்பு… தொடர்ந்து சிரிப்பு.. கட்டிடமெங்கும் எதிரொலிக்கிறது. நான் நிற்க இயலாமற் தடுமாறுகிறேன்.

– நீ என்னவெல்லாம் இனி செய்யவேண்டும் என்று தீர்மானிச்சு வச்சிருக்கேன். என்னைக் கேட்காமல் இனி வெளியில் செல்லக்கூடாது. இத்தனை நீளத்திற்கு தலைமயிர் வேண்டாம், மொட்டை அடித்துவிடுவது நல்லது, ஏற்பாடு செய்கிறேன். யார்வீட்டுக்குப் போனாலும், ஆண்கள் கிட்ட நின்று பேசறதை நான் பார்க்கக்கூடாது-

தொடர்ந்து அழைப்புமணியின் சத்தம்…ஒற்றைவிரலைக்காட்டி என்னை அமைதியாய் இருக்கும்படி பணித்துவிட்டு, மெல்லச் சென்று கதவைத் திறக்கிறான். இந்தேனெசிய கெம்பன் உடையில் இளம் வயதுப் பெண் நின்று கொண்டிருக்கிறாள்

– கேப்டன் ருடோல்ப்.

– ம்…

– பேரு தசிமா, பக்கத்து கிராமத்துல இருந்து வறேன், வேலைக்கார சிறுமி வேண்டுமென்று கேட்டிருந்தீர்ககளாமே

– ஆமாம் நல்ல நேரத்திற்கு வந்திருக்கிறாய், என்றவர் அவளை அழைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக்கொண்டார். குழந்தை நோர்மன் ஞாபகம் வந்தது. நல்லவேளை, இத்தனை அமளியிலும் அவன் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தான், எனக்கு உறக்கமில்லை. நடு நிசியில் வேலைக்காரியை அழைத்துக்கொண்டு வெளியில் போனவர் விடியும்வரை திரும்பவில்லை.. அன்றைய இரவும் என்னால் முடிந்தது அழுவது அழுதேன்.

(தொடரும்)
————————————————————————————————————————————–
1. Rudolf Mac Leod

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா