மாதுரி, பிரகாஷை உடனே விடுதலை செய்யவேண்டும்

This entry is part [part not set] of 24 in the series 20020805_Issue

மோகன்


திரைப்பட நடிகை மாதிரியை விபச்சாரம் செய்ததாய்க் குற்றம் சாட்டிக் கைது செய்திருக்கிறார்கள் எல்லாச் செய்தித்தாள்களிலும் பரபரப்பான செய்தியாக இது பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் தினமும் நிச்சயம் விபச்சாரக் குற்றத்திற்காக நூற்றுக் கணக்கில் கைது செய்யப் படுவதும் மாமூலாக விடுதலை செய்யப்படுவதும் எங்கும் பிரசுரமாகாத செய்தி. இந்தத் தொழில் பண்ணுவதற்காக மாமூல் கொடுத்து காவல்துறையினரை சகலவிதத்தில் கவனித்துக் கொள்ளாமல் தொழில் செய்ய முடியாது என்பது நிதர்சனம். சிறிய அளவில் என்றால் சிறிய அளவில் உள்ளூர் ஊழியர்கள், கன்ஸ்டபிள், ஏட்டு, சப் இன்ஸ்பெக்டரைக் கவனிக்க வேண்டும். பெரிய அளவில் என்றால் டி ஐ ஜி வரை எட்ட வேண்டும் என்று விஷயம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். மாதுரி எங்கேயோ ஏதோ தவறு செய்திருக்க வேண்டும், யாரையாவது கொஞ்சம் இசகு பிசகாக நடத்தியிருக்க வேண்டும். அது தான் கைதுக்குக் காரணம் என்று சொல்கிறார்கள்.

பிரகாஷ் கைதும் இவ்வாறே. நீலப் படங்களை இணையத்தில் இடம்பெற வைத்ததாகவும், தமிழ் நாட்டில் இதற்கான படப்பிடிப்பு நடத்தியதகவும் இவர் மீது வழக்கு. நம்முடைய பத்திரிகைகள் காதும் மூக்கும் வைத்து பிரகாஷ் நடத்திய படப்பிடிப்பை விடவும் அப்பட்டமாகவே இது பற்றி செய்திகள் வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன. அழகி பிணம் ஒதுங்குவதற்கே நீலப்பத்திரிகை மாதிரி செய்தி வெளியிடுபவர்கள், இந்த செய்திகளை எப்படி வெளியிடுவார்கள் என்று சொல்லியா தெரியவேண்டும் ?

இவர்கள் இருவரும் செய்த தவறு தான் என்ன ? தம்மிடம் உள்ள திறமை அல்லது மூலதனத்தை இவர்களின் பணி தேவைப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தினார்கள் அவ்வளவுதான். இது தண்டனைக்குரிய குற்றமா ?

ஒழுக்கத்தைச் சட்டம் போட்டு நடைமுறைப்படுத்தமுடியாது. You can not legislate morality. ஒழுக்கம் என்பது தனிமனிதர் தம்முடைய நடைமுறைகளில் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயம். ஒரு குடும்பத்தில், இருவருக்கிடையில், தனிப்பட்ட இருவர் மனமொப்பி நடக்கிற செயல்களில் ஏதும் பாதிப்பு என்றால் அதனால் பாதிக்கப் பட்ட தனிமனிதர்கள் தான் இதைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். இதில் அரசாங்கம் தலையிடுவது அநாகரிகம் மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட.

அப்படி நம் பொதுவாழ்வில் இருப்பவர்கள் என்ன ஒழுக்க சீலர்கள் ? இரண்டு மனைவிகள் சட்டரீதியாய்த் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்பது சட்டம். ஆனால் நம் தமிழ் நாட்டின் முதல்வர்களில் இருவர் எல்லோருக்கும் தெரிந்தே இரு மனைவியருடன் வாழ்ந்தவர்கள். இவர்களில் ஒருவர் திரைப்படத்தில் ஒழுக்கசீலராய் நடித்தவர். இன்னொருவர் தன்னைத் தமிழினத்தலைவராய் பாவிப்பவர். மக்கள் இவர்களை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். முதல் மனைவி வழக்குத் தொடராவிட்டால் அது எப்படிக் குற்றமாகும் ? மூன்றாவது ஆளுக்கு இதில் என்ன வேலை என்று மக்கள் கேட்டார்கள்.

இன்னொரு முதல்வர் திருமணம் செய்துகொள்ளாமலே தன் வாழ்க்கைத் துணையுடன் சிறிது காலம் வாழ்ந்தவர். இதையும் அவர் மறைமுகமாய்ச் செய்யவில்லை. ஆங்கில ஏடு ஒன்றிற்கு பேட்டி அளிக்கும் போது தன் புரட்சியைப் பெருமையுடன் தெரிவித்தவர்.

இது தவறா ? நிச்சயம் இல்லை. ஹிபாக்ரசியும், இப்போதைய போலித்தனமும் தான் தவறு. தனக்காக முடிவு எடுக்கமுடியாத, வயதுக்குவராத யாரையும் மாதுரியோ பிரகாஷோ கட்டாயப் படுத்தவில்லை. யாரையும் சித்திரவதைப் படுத்தியோ பயமுறுத்தியோ, மிரட்டியோ அவர்கள் இந்தத் தொழிலை செய்யாதிருந்தால் அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று அவர்கள் உடனே விடுதலை செய்யப்படவேண்டும். சட்டப்பூர்வமாக மேஜராகாத யாரையும் அவர்கள் கட்டாயப்படுத்தியிருந்தால், நிச்சயமாக அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

விபச்சாரம் சட்டப்பூர்வமான தொழிலாக அங்கீகாரம் அளிப்பது இது போன்ற தேவையில்லாத போலி சட்ட ஒழுங்கு வேலைகளிலிருந்து போலீஸ் அமைப்பை விடுவிக்கும். அவர்கள் உண்மையான குற்றவாளிகளைத் தேடுவதற்கும் உண்மையான சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் அதிக நேரம் கொடுக்கும்.

இன்று நடப்பது மேல் தட்டு மக்கள் செய்தால் நாகரீகம் என மினுக்கிக்கொள்ளவும், கீழ்தட்டு மக்கள் செய்தால் ஒழுக்கக்கேடு என போதிக்கவும் செய்யும் போலித்தனம். மேல்தட்டு மக்களுடன் சகவாசம் வைத்துக்கொண்டிருந்தால் வேண்டுமளவு சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத தொழில்களைச் செய்யலாம், ஆனால், மேல் தட்டு மக்களது கோபத்துக்கு ஆளானால், அதே அங்கீகரிக்கப்படாத தொழில் என்று சொல்லி சிறைக்கும் இவர்கள் அனுப்பப்படலாம் என்பது ஊழலின் உச்சகட்டம். ஒழுக்கக்கேடு என்ற போர்வைக்குள் இவர்களது பாரபட்சத்தை மறைத்துக்கொள்ளும் அநாகரீகம். இந்த மேல்தட்டு என்பது பணம் படைத்தவர்கள், அரசியல்வாதிகள், காவல்துறை என்று ஒரு வட்டம் வைத்துக் கொண்டுள்ளது.

மீண்டும் சொல்கிறேன். விபச்சாரத்தை ஒழிக்க முடியாது. இன்னும் ஒரு 200 வருடங்களானாலும் ஒழிக்க முடியாது. ஆனால், பெண்களுக்கும் ஆண்களுக்கும் வசதி வாய்ப்புக்களும், மிகவும் கீழ்த்தட்டு மக்களும் செளகரியமாக வாழ முடியும் என ஒரு நிலை வரும்போது, இந்த தொழிலுக்கு வரும் ஆட்கள் மிகவும் அருகிப் போவார்கள். இன்றைய தேவை, இது போன்ற விபச்சாரிகளை ஒழிப்பது அல்ல. இன்றைய அரசின் தேவை, தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய விரும்பும் தொழில் முனைவர்களிடம் லஞ்சம் கேட்காமல், அவர்களுக்கு உதவி செய்து, நிறைய வேலைகளை உற்பத்தி செய்வதுதான். அப்படி நிறைய வேலைகள் தமிழ்நாட்டில் துவங்கப்படும்போது, அங்கு வேலை செய்ய ஆட்கள் நிறைய தேவைப்படும்போது இந்த தொழில் செய்யும் மக்கள் தானாக அங்கு செல்வார்கள். தமிழ்நாடு 100 சதவீதம் படிப்பறிவு பெற்ற மானிலமாகவும், தொழில் வளர்ந்த மானிலமாகவும் ஆனால் இந்தப் பிரசினைகள் குறையக் கூடும். தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைகளை உருவாக்கித் தருவதை விட்டு, விளிம்பு நிலை தொழில் செய்யும் மக்களைக் குற்றவாளிகளாக ஆக்குவது, தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் வேலை.

முன்னேறிய நாடுகளில் கூட இந்தத் தொழில் குறையவில்லை.

விபச்சாரம் என்பது ஒரு சட்டப்படியான தொழிலாக இருக்கவேண்டும். அது ஒரு உணவு விடுதி போல. உடல் பசி தீர்க்க வேண்டுமென உடலுக்குத் தோன்றும் கட்டுப்படுத்த முடியாத பசிக்கு உணவு தரும் இடம். அது சட்டப்படியானதாக இருக்கும் போதுதான், அது சுகாதாரத்துடன் நடைபெறும். எவ்வாறு உணவு விடுதிகள் சுகாதாரமானவையாக இருக்கின்றன என்று அரசாங்கம் சுகாதார பரிசோதனையாளர்களை அனுப்பி சான்றிதழ் வழங்குகிறதோ, அது போல, இந்த தொழில்களும் சுகாதாரமானவையாகத்தான் இருக்கின்றன என்று மருத்துவ சான்றிதழ் பெறுவது சட்டரீதியானதாக ஆக்கப்படவேண்டும். அப்போதுதான், வசதியற்ற இந்த தொழில் செய்பவர்கள் எய்ட்ஸ் போன்ற நோய்களை இன்னும் எத்தனை எத்தனையோ மக்களுக்கு பரப்புவது தடுக்கப்படும். அப்படிப்பட்ட நோய் பற்றியவர்கள், தாங்கள் பெற்றிருக்கும் நோயை அறிந்து கொள்ளவும், அதனை குணப்படுத்த மருத்துவரையும் அரசாங்கத்தையும் அணுகவும் வசதியாக இருக்கும்.

***

இந்தப் பிரசினையுடன் தொடர்பு கொண்ட இன்னொரு பிரசினை சினிமாத் தணிக்கை பற்றியது. சினிமாத் தணிக்கைக் குழுவின் தலைவர் விஜய் ஆனந்த் பதவியிலிருந்து விலகியிருக்கிறார். காரணம் அவர் சொன்ன ஒரு கருத்து. நீலத் திரைப்படங்களைத் திரையிடுவதற்காக தனி திரையரங்குகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பது அவர் வேண்டுகோள். இது தான் மலையாளப் படம் பிட் தியேட்டர் என்று இருக்கிறதே என்று சொல்கிறார்கள். ஆனால் விஜய் ஆனந்த் சொன்னது சட்டபூர்வமாய் இது திரையிடவும் தயாரிக்கவும் அனுமதி தரவேண்டும் என்பது தான். இதன் விளைவு, சாதாரண சினிமாவில் செக்ஸை அடக்கிய ஆடல் பாடல் காட்சிகள் குறைந்துவிடும். தரமான படங்கள் தயாராகும் என்பதாகும்.

இந்தக் கருத்து எந்த அளவு சரி ? வெளிநாட்டில் இப்படிப்பட்ட திரையரங்குகள் இருப்பது உண்மைதான் என்றாலும் அவை மக்கள் கும்பல் அலைமோதும் இடங்கள் அல்ல. நம் திரையரங்குகள் அப்படியல்ல. வேண்டுமானால், நீலத் திரைப்படங்களின் விடியோ கேசட்கள் விற்கவென்று, வாடகைக்கு என்று தனியாய் கடைகளைத் தொடங்க அனுமதிக்கலாம் வாங்கிக்கொண்டு வீட்டில் போய்ப்பார்க்கலாம் ஆனால் பொது இடத்தில் தியேட்டரில் திரையிடுவது சட்டபப்டி குற்றம் என்று விதியை உருவாக்கலாம். ஆனால் இப்படிச் சட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டுமே. அதுவல்லவா முக்கியம் ?

***

குறிப்பு:

மோகன் வெகுகாலத்துக்கு முன்பு இது சம்பந்தமாக எழுதிய கட்டுரை http://www.thinnai.com/pl111901.html என்ற முகவரியில் இருக்கிறது.

***

Series Navigation