தமிழில் : நாகூர் ரூமி
ஒரு நாள் இரவு, அரபி ஒருவனின் மனைவி தன் கணவனிடம் எல்லை மீறி உரையாடினாள்.
‘இந்த உலகம் முழுவதும் சந்தோஷமாக உள்ளது. நாம்தான் சந்தோஷமாக இல்லை. நமக்கு உண்பதற்கு உணவில்லை. வேதனையும் பொறாமையும்தான் நாம் தொட்டுக்கொள்ள கறி. நாம் குடிக்க கண்ணீரே உள்ளது. பகலில் வெயிலை உடுத்திக்கொள்கிறோம். இரவில் நமது படுக்கையும் போர்வையும் நிலவொளிதான். ‘
‘வட்ட வடிவமான ரொட்டித் துண்டைப் போல நிலவு உள்ளதால், அதை நோக்கி நாம் கைகளை ஏந்துகிறோம். பரம ஏழைகள்கூட நம்மைப் பார்க்க நேரிடுவதை எண்ணி அவமானப்படுகிறார்கள். உணவு பற்றிய நமது கவலை, பகலை இரவாக்குகிறது. உற்றாரும் அன்னியரும் நம்மைக் கண்டு ஓடுகிறார்கள். யாரிடமாவது ரொட்டித் துண்டை நான் யாசித்தால், போ சனியனே என்று விரட்டுகிறார்கள். ‘
‘கொடுப்பதிலும் கொள்வதிலும், தாராளம் காட்டுவதிலும் தகராறு செய்வதிலும் அரபியர்களுக்கு தனிப்பெருமை உண்டு. ஆனால் நீங்களோ, அரபிகள் மத்தியில் ஒரு எழுத்துப்பிழை போல இருக்கிறீர்கள். ‘
‘நாம் என்ன சண்டை போட முடியும் ? போர் எதுவும் செய்யாமலே நாம் செத்துக்கொண்டிருக்கிறோம். ‘
‘தேவைகளின் வாள் நம்மை மயங்கி விழ வைக்கிறது. காற்றில் பறக்கும் பூச்சிகளையெல்லாம் கொன்று தின்றுகொண்டிருக்கும் நாம், என்ன கொடுக்க முடியும் ? ‘
கணவன் சொன்னான், ‘எவ்வளவு காலத்துக்கு பணத்தையும் உணவையும் தேடிக்கொண்டிருப்பாய் ? நம் வாழ்வில் எஞ்சியிருப்பது கொஞ்ச காலமே. ‘
‘அறிவுள்ள மனிதன், கூடுவதையும் குறைவதையும் பற்றி கவலைப்படுவதில்லை. ஏனெனில் இரண்டுமே வெள்ளம்போல வந்து போய்விடும். வாழ்க்கை சுத்தமான நீரோடைபோல தெளிந்து ஓடினாலும் சரி, காற்றாட்டு வெள்ளம் போல கலக்கினாலும் சரி, அதைப்பற்றி பேசாதே. ஏனெனில் இரண்டுமே நிரந்தரமானதல்ல. ஒரு கணம்தான். ‘
‘எத்தனையோ மிருகங்கள் கவலைகளற்று மகிழ்ச்சியுடன் வாழ்கின்றன. தன் இரவுக்கான உணவு இன்னும் தயாராகாவிட்டாலும், மரத்தின் கிளையில் அமர்ந்துள்ள புறா, இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டுள்ளது. ‘
‘(நம் வாழ்முறையின்) காற்றும் தூசியும்தான் நம் மனதில் எழும் ஆயிரமாயிரம் சோகங்களுக்கெல்லாம் காரணம். இது இதனால்தான், அது அதனால்தான் என்ற நினைப்பெல்லாம் ஷைத்தானின் வேலைதான். ‘
‘ஒவ்வொரு வேதனையும் மரணத்தின் துண்டாகும். அந்த துண்டை உன்னிடமிருந்து தூக்கிப்போட முடியவில்லையெனில், மரணம் உன்னைத் தழுவும். மரணத்தின் அந்தப் பகுதியை நீ இனிமையானதாக ஆக்கிக்கொண்டால், இறப்பும் இனிமையாகும். வேதனைகள் என்பவர்கள், மரணத்திடமிருந்து செய்தி கொண்டுவருபவர்கள். அவர்களிடமிருந்து உன் முகத்தை மறைக்க விரும்பி ஓடாதே. ‘
‘இனிப்பாக வாழ விரும்புவோரின் முடிவெல்லாம் கசப்பாகவே இருக்கும். உடலுக்கு சேவை செய்பவர்களால் ஆத்மாவைக் காப்பாற்ற முடியாது. நன்றாக கொழுத்த ஆடுதான் முதலில் வெட்டப்படும். ‘
‘ஒரு காலத்தில் பொன்னாக மின்னிய நீ, இப்போது பொன்னையும் பொருளையும் பற்றிப் பேசுகிறாய். ஒரு காலத்தில் நல்ல பழமாக இருந்த நீ இப்போது ஏன் கெட்டுப்போனாய் ? பழம் பழுக்க பழுக்க இனிமை கூடவேண்டுமே தவிர, அழுகிப் போகக்கூடாது. ‘
‘நீ என் மனைவி. நீயும் நானும் ஒரே (மனத்)தரத்தில் இருக்க வேண்டும். ஒரு ஜோடி காலணிகளைப் பார். ஒன்றைவிட ஒன்று பெரிதாகவோ, சிறிதாகவோ இருந்தால் அணிய முடியுமா ? ஓநாய் சிங்கத்தோடு இணைய முடியுமா ? ‘
மனைவி சொன்னாள், ‘மார்க்கத்தை உங்கள் புகழாக துணையாக மாற்றுகிறவரை, உங்கள் வார்த்தைகளில் நான் ஏமாற மாட்டேன். பெருமையும் திமிரும் நமக்குத் தேவை இல்லை. பெருமை அசிங்கமானது. அதிலும் (நம்மைப் போன்ற) பிச்சைக்காரர்களிடத்தில் அது மகா அசிங்கமானது. பனி கொட்டும் குளிர் காலத்தில், நன்கு நனைந்த ஆடையை அணிவது போலாகும் அது. ‘
‘உங்கள் வீடு சிலந்தி வலையைப் போல பலகீனமானது. எப்போது உங்கள் ஆத்மா திருப்தி கண்டது ? திருப்தி என்ற பெயர் மட்டும்தான் உங்களுக்குத் தெரியும். திருப்தி என்பது ஒரு பொக்கிஷம் என்று பெருமானார் (ஸல்) கூறினார்கள். நஷ்டத்திலிருந்து நற்பேறுகளை பிரித்தறியும் அறிவு உங்களுக்கு இல்லை. ‘
‘உள்ளத்தின் திருப்தி என்பது ஆத்மாவின் பொக்கிஷம். அதைப் பெற்றிருப்பதாக வீண் பெருமை அடிக்கவேண்டாம். என் உயிரின் வேதனையே நீங்கள்தான். ‘
‘என்னை உங்கள் மனைவி என்று கூறவேண்டாம். நான் நீதியின் துணைவி. அநீதியின் துணைவியல்ல. காற்றில் பறக்கும் பூச்சிகளை உணவுக்காக கொல்லும் நீங்கள் எப்படி ராஜாக்களுடன் ராஜ நடை போடமுடியும் ? நாய்களோடு எலும்புத் துண்டுகளுக்காக சண்டை போட்டுக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள். ஓநாயைப் போல என்மீது பாயவேண்டாம். நீங்கள் மறைக்கும் உங்கள் தவறுகளையெல்லாம் சொல்ல நேரிடும். ‘
‘உங்கள் அறிவு, மனித குலத்துக்கு சங்கிலி. அது அறிவல்ல, பாம்பும் தேளுமாகும். உங்கள் அநீதிக்கு இறைவனின் ஆதரவு கிடையாது. நீங்களே பாம்பாகவும் பாம்பாட்டியாகவும் இருக்கிறீர்கள். அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி என்னை ஏமாற்றுகிறீர்கள். அல்லாஹ்வின் பெயர்தான் என்னை பரவசமூட்டுகிறது. உங்கள் ஏமாற்று வேலையல்ல. ‘
‘என் பொருட்டு இறைவனின் பெயர் உங்களை பழிவாங்கும். நீங்கள் நாசமாகப் போக. ‘
‘நீ பெண்ணா அல்லது வேதனைகளின் தாயா ? ஏழ்மைதான் எனது பெருமை. செல்வமும் பொன்னும் தொப்பியைப் போன்றது. வழுக்கைத் தலையன்தான் தலையைத் தொப்பிக்குள் மறைப்பதில் மகிழ்வான். சுருள் முடிக்காரனின் சந்தோஷம் தொப்பி தொலையும்போதுதான். ‘
‘(ஆன்மீக) வறுமை உன் அறிவுக்கு அப்பாற்பட்டது. அதனை வெறுப்போடு அணுகாதே. சூஃபிகள் எல்லாம் வறுமை, செல்வம் இரண்டிற்கும் அப்பால் சென்றவர்கள். அல்லாஹ்விடமிருந்து அவர்கள் அபரிமிதமாகப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். ‘
‘இறைவன் நியாயவான். பலகீனமான ஏழைகளிடம் எப்படி அவன் அராஜகமாக நடந்துகொள்வான் ? ஒருவருக்கு செழிப்பையும் இன்னொருவருக்கு நெருப்பையும் எப்படிக் கொடுப்பான் ? ‘
‘இரண்டு உலகங்களையும் படைத்த நாயனை நாம் தவறாகப் புரிந்துகொள்ளும்போதுதான் நெருப்பில் வேகிறோம். வறுமையில் பல்லாயிரம் பொக்கிஷங்கள் மறைந்துள்ளன. நீ என்னப் பாம்பாட்டி என்றாய். நான் பாம்பைப் பிடித்தால் அதன் விஷப் பற்களைப் பிடுங்கிவிடுகிறேன். அதன் பொருட்டு அது அடிபட்டு சாகாதிருக்கும். பாம்பின் விஷப்பற்கள்தான் அதன் பகைவன். நான் பகைவனை என் திறமையினால் நண்பனாக்குகிறேன். ‘
‘அல்லாஹ் காப்பற்றட்டும். படைக்கப்பட்ட பொருட்களின்மீது எனக்கு எந்த ஆசையும் இல்லை. திருப்தியின் பொருட்டு, என் மனதினுள் ஒரு உலகமே உள்ளது. நீ மயக்கத்தில் இருக்கிறாய். வீடு சுற்றுவதில்லை. உனது மயக்க நிலையில் வீடு சுற்றுவதுபோல் தெரிகிறது. உண்மையில் சுற்றுவது நீதான். ‘
அபூஜஹில் பெருமானாரைப் பார்த்து சொன்னான்.
‘ஹாஷிம் குலத்தில் இவ்வளவு அசிங்கமான ஒருவரை நான் கண்டதில்லை. ‘
‘நீர் உண்மையைத்தான் சொன்னீர் ‘ என்றார்கள் பெருமானார்.
‘கிழக்கிலும் மேற்கிலும் இல்லாத சூரியனே, ஒளிவிட்டு இன்னும் அழகுடன் பிரகாசியுங்கள் ‘ என்று சொன்னார்கள் அபூபக்கர் சித்தீக்.
‘இனிய நண்பரே, நீங்கள் உண்மையைத்தான் சொன்னீர்கள் ‘ என்றார்கள் பெருமானார்.
இருவருமே உண்மை பேசியதாக சொன்னது எப்படி ? முரண்பாடாக உள்ளதே என்று கேட்டதற்கு,
‘அல்லாஹ்வின் கையால் மெருகூட்டப்பட்ட கண்ணாடி நான். என்னைப் பார்ப்பவர்கள், என்னில் தங்களையே பார்த்துக்கொள்கிறார்கள் ‘ என்றார்கள் பெருமானார்.
‘மனைவியே, வறுமையில் பொறுமையாக இரு, வெறுப்பை விடு. வறுமையில்தான் இறைவனின் ஒளி உள்ளது. ஓரிரு நாட்களுக்கேனும் வறுமையைப் பழகு. அப்போதுதான் அதில் உள்ள செல்வங்கள் என்ன என்பது புரியும். ‘
‘நான் பேசுவது ஆத்மாவின் காம்புகளில் சுரக்கும் பால் போன்றது. சப்பிக் குடிப்பவர்கள் இருந்தால்தான் பால் சுரக்கும். கேட்பவர் தாகம் உடையவராக இருந்தால்தான், சொல்பவரிடமிருந்து சுவை மிகுந்த பேச்சு பீறிடும். ஊமைக்கும் ஆயிரம் நாக்குகள் முளைக்கும். ‘
‘அன்னிய ஆண்கள் வீட்டுக்கு வந்தால், பெண்கள் தங்களை திரையிட்டு மறைத்துக்கொள்வார்கள். ஆனால் முறையுள்ளவர்கள் வரும்போது முகத்திரைகளை அகற்றுவார்கள். ‘
‘பார்க்கும் தகுதியுள்ள கண்களுக்காகத்தான் இந்த உலகில் உள்ள எல்லா அழகான விஷயங்களும் உருவாக்கப் பட்டுள்ளன. செவிடனால் எப்படி இசையை ரசிக்க முடியும் ? நோய் பிடித்த நாசி கொண்டவனுக்காக இறைவன் கஸ்தூரியை வாசனைப் பொருளாக படைக்கவில்லை. ‘
‘தாழ்ந்தவனாகிய மனிதன் எல்லா உயர்ந்த விஷயங்களுக்கும் எதிரியாகிறான். பெண்ணே, என்றாவது குருடனுக்காக உன்னை நீ அலங்கரித்துக்கொள்வாயா ? உன் சண்டை போடுதலுக்கு விடைகொடு. அமைதியாக இரு. இல்லாவிட்டால், நான் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிவரும். ‘
கணவனின் கோபம் கண்டு மனைவி அழுதாள். உண்மையில் கண்ணீர்தான் பெண்கள் வீசும் வலையாக உள்ளது. அவள் சொன்னாள், ‘எனது வேதனைகளுக்கு நீங்கள் மருந்தாக இருந்தீர்கள். நீங்கள் பிச்சைக்காரனாக இருப்பதை நான் விரும்பவில்லை. என்னை மன்னியுங்கள். நான் சிலை போல அழகாக இருந்த காலம் நினைவுக்கு வருகிறதா ? ஒரு சிலை வணங்கியைப்போல, நீங்களும் என் மீது அன்பு வைத்திருந்தீர்கள். என் உயிரும் உங்கள் உயிரும் ஒன்றே. ‘
‘உங்கள் முன் வாளையும் கஃபன் துணியையும் வைத்துவிட்டேன். என் கழுத்தையும் நீட்டிவிட்டேன். தயவு செய்து என்னைப் பிரிந்து செல்வதைப் பற்றிமட்டும் பேசவேண்டாம். ‘
இவ்வாறாக சமாதானம் சொன்னாள்.
பெண்ணும் அவைளையொத்த சந்தோஷங்களும் இறைவனால் ஆணுக்காக ஏற்படுத்தப் பட்டது. அவனுடைய ஏற்பாட்டிலிருந்து எப்படித் தப்பிக்க முடியும் ?
ஆதமுக்காக ஹவ்வாவை ஏற்படுத்திய பின், அவர்கள் பிரிவது எங்ஙனம் ? ஹம்சாவைவிட வீரத்தில் சிறந்தவராக கணவன் இருந்தாலும், மனைவிக்கு அடங்கித்தானே போக வேண்டும் ?
நெருப்புக்கும் நீருக்கும் இடையில் பாத்திரம் வரும்போது நீரை நெருப்பு ஆவியாக்குக்கிறது. (இதைப்போல) வெளிப்பார்வைக்கு நீங்கள் உங்கள் மனவிமார்களை அடக்கியாண்டாலும், உள்ளுக்குள் அவளது அன்புக்காக நீங்கள் ஏங்கித் தவிக்கிறீர்கள். அன்பைத் தேடுவதும் கொடுப்பதும் மனித குணம்.
அறிவான, நாகரீகமான ஆண்களைப் பெண்கள் அடக்கியாள்கிறார்கள், நாகரீகமற்ற ஆண்கள் பெண்களை அடக்கியாள்கிறார்கள் என்பது ஹதீது. காரணம், நாகரீகமற்ற ஆணிடத்தில் மிருகத்தன்மை மேலோங்கியிருக்கும். அன்பும் மென்மையும் மனித குணங்கள். கோபமும் காமமும் மிருக குணங்கள். பெண் என்பவள் ஆண்டவனின் ஓர் ஒளிக்கதிராவாள். அவள் படைக்கின்றவள். ஆண்டவனைப் போல. படைக்கப்பட்டவைகளில் சேராதவள் என்றுகூட பெண்ணைச் சொல்லலாம்.
மனைவியே மன்னித்துவிடு. இதுவரை நான் அவநம்பிக்கையாளனாக இருந்தேன். இப்போது நான் முஸ்லிமாகிவிட்டேன். மன்னிப்புக் கோரும்போது, நம்பிக்கையில்லாதவனும் நம்பிக்கை கொண்டவனாகிவிடுகிறான்.
இருப்பதும் இல்லாததும், அவநம்பிக்கையும், நம்பிக்கையும் எல்லாமே இறைவனை நேசித்த வண்ணம் உள்ளன. சண்டையும் சமாதானமும் வெறும் தோற்றமே. இறைவனின் விதிப்படியே எல்லாம் நடந்தேறுகின்றன.
மூஸாவும் சரி, ஃபிர்அவ்னும் சரி, உண்மையின் அடிமைகளாகவே இருந்தனர். மூஸா பகிரங்கமாக பிரார்த்தனை செய்தார். ஃபிர்அவ்னோ, வல்ல இறைவனை அந்தரங்கத்தில் வணங்கினான். கோடரியை எதிர்க்கும் சக்தி எந்த கிளைக்காவது உண்டா ?
இறைவன் நாடும்போது ஒன்றை உறுதியாக பூமியில் விதைக்கிறான். இன்னொன்றை சிதைக்கிறான். நிறங்களற்ற உண்மையை நீங்கள் அடையும்போது, மூஸாவும் ஃபிர்அவ்னும் முரண்பாடுகளற்ற அமைதியில் நட்புறவுடன் இருப்பதைக் காணலாம்.
நீரிலிருந்து எண்ணெயையும், முள்ளில் இருந்து ரோஜாவையும், ரோஜாவிலிருந்து முள்ளையும் படைத்தது இறைவன். அவைகள் ஒன்றுக்கு ஒன்று எதிர்போலத் தோன்றினாலும் அவைகளுக்கிடையில் உண்மையில் யாதொரு பகையும் இல்லை.
அரபியாகிய அறிவுக்கும், மனைவியாகிய ஆசைக்கும் இந்த உலக வீட்டில் எப்போதுமே தகராறுதான். அடங்குவதும் ஆள்வதுமாக மனைவி இருப்பாள். ஏன் அடங்குகிறாள், ஏன் அடக்குகிறாள் என்ற உண்மையை அறியாதவனாக கணவன் இருப்பான். நம் வெளிச்செயல்பாடுகள் யாவும் உள்ளத்தில் உள்ளதை உணர்த்த அல்லது மறைக்கத்தானே ?
‘இனி நான் உன்னை வெறுக்க மாட்டேன். என்னால் இயன்றதைச் செய்கிறேன் ‘ என்றான் அரபி.
ஜாடி என்பது நமது உடலே. நமது ஐம்புலன்கள்தான் அதில் உள்ள தண்ணீர். இறைவா இந்த ஜாடியை ஏற்றுக்கொள்வாயாக. அதில் உள்ள நீரை மாசு படாமல் தூய்மைப் படுத்தி காத்தருள்வாயாக. இந்த ஜாடியிலிருந்து கடலுக்கு ஒரு வழி ஏற்படட்டும். கடலின் தன்மை ஜாடிக்கும் உண்டாகட்டும். எனவே நீ இந்த ஜாடியை, அரசர்களின் அரசனிடம் கொண்டு செல்லும்போது, அது சுத்தமானதாக இருக்கட்டும். அப்போதுதான் அரசன் அதை வாங்கிக் கொள்வான்.
பாக்தாது முழுவதும் இனிப்பான குடி நீர், தங்கு தடையின்றி கிடைத்துக் கொண்டிருப்பதை அறியாத அரபி, தான் கொண்டு செல்ல இருக்கும் பரிசை எண்ணி மிகவும் பெருமைப் பட்டான்.
‘ஜாடியின் மூடியை கவனமாக மூடித் தைத்துவிடு. இந்த அரிய பரிசைக் கொண்டு கலீஃபா நோன்பு திறக்கட்டும். அகில உலகிலும் இதைப் போன்ற தூய்மையான நீர் கிடையாது. ‘
பயபக்தியுடன் ஜாடி நீரை பாக்தாதுக்கு கொண்டு சென்றான். தொழுகைப்பாயை விரித்து அதில் இறைவனை வேண்டினாள் மனைவி. இறைவா, எங்கள் நீரை பகைவர்களிடம் இருந்து காப்பாற்றுவாயாக! பாதுகாப்பாக அந்த முத்து, கடலைச் சென்று சேரட்டும். இந்த மைழைத் துளியில் இருந்துதானே முத்து உண்டாகிறது ? இது சாதாரண நீரல்ல. (சொர்க்கத்து ஓடையான) கவ்தரின் நீர்.
— தொடரும்
ruminagore@hotmail.com
ruminagore@yahoo.com
ruminagore@gmail.com
- வாரபலன் – ஜூன் 17,2004 – டில்லிக்குப் போன கவுன்சிலரு , ஆயிரம் இதழ் கண்ட கலா கெளமுதி , வாத்துக்களின் வட்டார வழக்கு , அஞ்சலி : காச
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 24
- சாயம்
- தென்னையும் பனையும்
- வெற்றுக் காகிதங்கள்
- மஸ்னவி கதை — 10 :அறிவான அரபியும் ஆசை மனைவியும்
- தனக்கென்று வரும் போது..!
- மலை (நாடகம்)
- பாசமா ? பாசிசமா ?
- விகிதாச்சார முறை பற்றிய விமர்சனங்களும் பதில்களும்
- சித்திரவதை
- டயரி
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 7)
- அஞ்சலைப் பாட்டி
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 9
- மிராண்டாவைப் பார்த்து மிரண்டவர்கள்
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 4
- நிழல் யுத்தம் பற்றி
- தமிழுக்குப் பெருமை
- என் பொழுதுகளில் இதுவும்..
- வெங்கட் சாமிநாதனுக்கு டொராண்டோ பல்கலைக்கழத்தின் இயல் விருது விழா
- கடிதம் ஜூன் 17,2004
- தெற்காசியத் திரைப்பட விழா – படங்களை அனுப்ப வேண்டுகோள்
- பஞ்சத்தின் உண்மை பேசும் புல்லர்களை பொசுக்கிட பொங்கி எழு தோழா, புறப்படு
- சேதி கேட்டோ..
- ஆட்டோகிராஃப் ‘தலை சாய்ந்து போனால் என்ன செய்யலாம் ‘
- தன்னம்பிக்கை
- அன்புடன் இதயம் – 21 – பிரிகின்றேன் கண்மணி
- கடலைக்கொல்லை
- கவிக்கட்டு – 11 : எங்கே மனிதம் ?
- உறங்கட்டும் காதல்
- நிகழ்வெளியின் காட்சிகள்
- நிழல் பாரங்கள்
- வீடு திரும்புதல்
- ஆயுட் காவலன்
- கவிதைகள்
- தூரம்
- அவர்கள்
- அப்பாவுக்கு…!!!
- இல்லம்
- தீர்மானம்
- தமிழவன் கவிதைகள்-பத்து
- உடன் பிறப்பு…
- குழந்தை மனது
- நம்பிக்கை
- கவிதைகள்
- செல்பேசிகளைத் தெரிந்து கொள்வோம்!
- மின்மினி பூச்சிகள்
- திரைகடல் நாடியும் தேடு மின்சக்தி! [Energy from The Ocean Waves, Tides & Thermal Power]
- நெய்தல் நிலத்துக்காாி!
- பிறந்த மண்ணுக்கு.. – 6 (கடைசிப் பகுதி)