மஸ்னவி கதை – 08-கீரை வியாபாரியும் கிளியும்

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

தமிழில் : நாகூர் ரூமி


====

இனிமை கொஞ்சப் பேசும் பச்சைக்கிளியொன்றை வளர்த்து வந்தான் ஒரு கீரை வியாபாரி. எஜமான் இல்லாத நேரத்தில் மேஜையில் அமர்ந்து அது கடையைக் கவனித்துக்கொள்ளும். கடைக்கு வருபவர்களிடம் கனிவாகப் பேசும். வாடிக்கையாளர்களிடம் வாய் இனிக்கப் பேசும். மனிதர்களிடம் அவர்களுக்கு ஏற்றவாறு பேசிய அந்தக்கிளி, பறவைகளின் பாடல்களிலும் பரிச்சயம் கொண்டிருந்தது.

ஒரு நாள் அது மேஜையிலிருந்து பறந்தது. பறந்த வேகத்தில் மேஜையிலிருந்த ரோஜா எண்ணெய் பாட்டில்களைக் கவிழ்த்துவிட்டது.

வீட்டிலிருந்து வந்த எஜமான் வழக்கம்போல மேஜையில் அமர்ந்தான். மேஜை பூரா பரவியிருந்த எண்ணெயால் அவனுடைய ஆடை முழுவதும் அசிங்கப்பட்டுப் போனது.

தலைதூக்கியது கோபம். கிளியில் தலையில் ஓங்கி அடித்தான். அடியின் உக்கிரத்தில் வழுக்கையாகிப் போனது வாஞ்சைக்கிளியின் வழுவழு தலை.

சில நாட்களில் கிளியை விட்டு எங்கோ பறந்து போனது அதன் பேச்சு. கிளியின் மெளனத்தைத் தாங்க முடியாத கீரை வியாபாரியோ வருத்தப் பெருமூச்சுக்கள் விட்டுக்கொண்டிருந்தான்.

தாடியைப் பிய்த்துக் கொள்வான். ‘ஐயகோ, என் செல்வங்களின் சூரியன் மேகங்களுக்கு அடியில் புதையுண்டு போனதே ‘ என்று புலம்புவான்.

கிளிக்கு மறுபடியும் பேச்சு வரவேண்டும் என்பதற்காக, கண்ணில் பட்ட தர்வேஷ் (துறவி) களுக்கெல்லாம் தாராளம் செய்துகொண்டிருந்தான். அன்பளிப்புகள், காணிக்கைகள் வழங்கினான்.

மூன்று பகல்களும் மூன்று இரவுகளும் இவ்விதம் கழிந்தபின், கனக்கும் மனதுடன் ஒரு நாள் மேஜையின்மீது அமர்ந்தான் கீரை வியாபாரி. மறுபடியும் பேசிவிடும் என்ற நம்பிக்கையில் கிளிக்கு ஏதேதோ தின்பதற்குக் கொடுத்துப் பார்த்தான்.

அப்போது அந்தப்பக்கமாக ஒரு சூஃபி வந்தார். அவருடைய தலை பிச்சைப் பாத்திரத்தின் வெளிப்பக்கத்தைப்போல வழுக்கையாக இருந்தது.

அவரைப் பார்த்தவுடன் துள்ளிக் குதித்து கிளி பேசத்தொடங்கியது.

‘அட, தர்வேஷே! எப்படி உம் தலை இப்படி வழுக்கையானது ?! என்னைப் போல நீரும் பாட்டிலில் இருந்த எண்ணெயைக் கொட்டிவிட்டாரா ? ‘

கிளியின் அனுமானத்தை எண்ணி, நின்று கொண்டிருந்தவர்கள் நகைத்தார்கள்.

(இதுதான் கதை. இதைவைத்து மெளலானா அவர்கள் தருகின்ற விளக்கம் அற்புதமானது. குறிப்பாக, தாங்கள் சொல்வதுதான் சரி என்று பிடிவாதமாக மேம்புல் மேய்கிற முஸ்லிம் ‘அறிஞர்க ‘ளுக்கு பாடம் புகட்டக் கூடியது. கேளுங்கள்.)

மனிதப் புனிதர்களான இறைநேசர்களின் செயல்பாடுகளை உங்களுடையதை வைத்து எடை போட்டுவிடாதீர்கள். ஷேர் (சிங்கம்) என்பதும் ஷீர் (பால்) என்பதும் எழுதும்போது ஒன்றுபோலத்தான் தெரியும் !

இந்த விஷயத்தில் இந்த உலகம் முழுவதும் தவறாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. ஆண்டவனுடைய அடியார்களை சரியாகப் புரிந்துகொள்பவர்கள் அரிது. இறைநேசர்களும், இறைத்தூதர்களும் தங்களைப் போன்றவர்கள்தான் என்று (புரியாத) மக்கள் கூறுகிறார்கள்.

‘பாருங்கள், நாங்களும் மனிதர்கள், அவர்களும் மனிதர்கள்! தூக்கத்திற்கும் உணவுக்கும் எங்களைப் போலவே அவர்களும் அடிமைகள்தான் ‘ என்கிறார்கள்.

அவர்களுக்கும் இறைநேசர்களுக்கும் இடையில் பாரதூரமான வித்தியாசமிருப்பதை தங்களுடைய குருட்டுத்தனத்தினால் அவர்களால் பார்க்க முடியவில்லை.

இரண்டு வகையான ‘ஜன்பூர் ‘ பூச்சிகளும் ஒரே இடத்திலிருந்து சாப்பிட்டாலும், குடித்தாலும் — ஒன்றிலிருந்து வருவது கொட்டும் குளவி. மற்றொன்றிலிருந்தோ தேன்சொட்டும் தேனீ!

இரண்டு வகையான மான் இனங்களும் புல்லைத் தின்று நீரைக்குடித்து வாழ்ந்தாலும், ஒன்றிலிருந்து கிடைப்பது சாணம். மற்றொன்றிலிருந்தோ தூய கஸ்தூரி !

(இரண்டும்) பார்வைக்கு ஒன்றாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனில் உப்பு நீரும் குடிநீரும் பார்ப்பதற்கு தெளிவாகத்தான் தெரியும். (ஆன்மீகச்) சுவை அறிந்தவர்களைத் தவிர வேறு எவரால் இதைப் பிரித்து அறியமுடியும் ?

இறைத்தூதர்கள் செய்த அற்புதங்கள், மந்திரவாதிகள் செய்து காட்டிய தந்திரங்கள் இரண்டுமே ஏமாற்று வேலை என அறியாதவர்கள் எண்ணினார்கள்.

இறைத்தூதர் மூஸாவிடம் இருந்ததைப் போலவே, அக்கால மந்திரவாதிகளும் கையில் ஒரு கோல் வைத்திருந்தார்கள். ஆனால் மூஸாவின் கோல் ஆண்டவனின் அருளைக் கொண்டு உயர்த்தப்பட்டது. மந்திரவாதிகளின் கோல்களோ சர்வவல்லமை படைத்தவனின் சாபத்தைக் கொண்டு தூக்கப்பட்டது.

இறைநேசர்களும் இறைத்தூதர்களும் தங்களைப் போன்றவர்கள்தான் என்று நினைக்கிற நம்பிக்கையற்றவர்கள் மனிதக் குரங்கைப் போன்றவர்கள். மனிதன் செய்வது மாதிரியெல்லாம் ‘காப்பி ‘யடித்து செய்துவிட்டு, நானும் மனிதனும் ஒன்றுதான் என்று நினைத்துக்கொள்கிறது அது.

தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் (போன்ற) கடமைகளை நிறைவேற்றும்போது, உண்மையான நம்பிக்கையாளர்களும் நயவஞ்சகர்களான முனாஃபிக்குகளும் ஒன்றுபோலத்தான் தோன்றுவார்கள். ஆனால் ஒருவருக்கு அதனால் வெற்றியும் மற்றவருக்கு அதனால் தோல்வியும் உண்டாகிறது!

உரைகல் இல்லாமல் சுத்தமான தங்கத்தை எப்படிப் பிரித்தறிவாய் ? அந்த உரைகல் உனது அறிவல்ல. யாருடைய இதயத்தில் அல்லாஹ் அந்த உரைகல்லை வைக்கிறானோ, அவர்களுக்குத்தான் நிச்சயமற்றதையும், சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதையும் பிரித்தறியக்கூடிய தகுதி வரும்.

உலக அறிவென்பது உலகில் முன்னேற ஏணி. மார்க்க ஞானமென்பது சொர்க்கத்தின் ஏணி!

உடல் ஆரோக்கியத்தை மருத்துவனிடம் தேடு. உள்ள ஆரோக்கியத்திற்கு அல்லாஹ்.

ஆன்மீக வழி, உடல் ஆரோக்கியத்தை முதலில் அழிக்கும். பின்பு முன்னதைவிட ஆரோக்கியமானதாக அமைக்கும். கீழே உள்ள தங்கப் புதையலுக்காக வீட்டை இடித்துவிட்டு, பின்பு அந்தப் புதையலைக் கொண்டே வீட்டை மறுபடியும் முன்னைவிட அழகாக, உறுதியாகக் கட்டுவது மாதிரி.

ஆற்று நீரைக் காலி செய்துவிட்டு, மறுபடி அதில் குடிநீரை மட்டும் ஓடவிடுவது மாதிரி.

தோலைக்கிழித்து, உள்ளே தைத்த துருப்பிடித்த அம்பின் முனையை வெளியே எடுத்த பிறகு, மறுபடியும் புதியதோல் காயத்தின் மீது வளர்வது மாதிரி.

இறைவனில் மூழ்கிய இறைநேசர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் உன்னுடய உண்மையான முகத்தைக் கண்டுகொள்.

ஆதமுடைய முகத்தோடு எத்தனையோ பேய்கள் உலாவுகின்றன. ஜாக்கிரதை!

இறைநேசர்களுடைய மொழியில் பேசி, பாமரர்களை அயோக்கியர்கள் ஏமாற்றுவார்கள் ஜாக்கிரதை!

—-

ruminagore@hotmail.com

Series Navigation