மன்னியுங்கள் தோழர்களே…

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

த. அரவிந்தன்அவமானம் ஏற்படுத்திவிட்டதற்காக மன்னியுங்கள் தோழர்களே… வேறுவித முடிவுகள் எடுக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டேன். இறுதி முடிவாய்தான் எடுத்தேன். தயவுசெய்து அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம் என்று வழக்கமான பார்வை பார்த்து என் முடிவை விமர்சிக்காதீர்கள். இரண்டு ஆண்டுகள் இரவுபகலாய் யோசித்து எடுக்கப்பட்ட முடிவுதான் இது. ஆத்திரம் எட்டுக்கால் பாய்ச்சலில் ஓடின நேரத்தில் மட்டுமல்ல; கள்ளிச்செடிகள் பூத்திருக்கிற அரவமற்ற நிலத்தில்கூட நின்று யோசித்துப் பார்த்துவிட்டேன். முதுகெலும்போரம் ஒருவித சிலிர்ப்பு ஏற்பட்டு, இதைவிட சரியான முடிவு இருக்கமுடியாது என்றே உணர்த்தி இருக்கிறது. இதில் எனக்குள்ள ஒரே வருத்தம். நடுநாயகமாக என்னை மட்டுமே நிறுத்திக்கொண்டு எடுக்கப்பட்ட முடிவாக அமைந்துவிட்டதே என்பதுதான். என்னுடைய முடிவுக்குப் பின் யாராரெல்லாம் அவமானச் சொற்களை வீசி என்னைத் தாக்குவீர்கள்? சொரணையற்ற சொற்களாய் எப்படி அவற்றை மாற்றுவது? ஆத்திரத்தில் அவமானச் சொற்கள் வீசுகிறவர்கள் மீதும் ஒரு முடிவெடுத்து ஏதாவது செய்துவிட்டால் அதனால் வரும் பிரச்சினைகள் என்ன? இவற்றைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்து விட்டேன். ஒட்டுமொத்தமாக நம்முடைய தோழர் சமுதாயத்துக்கே அவமானமா? என்பதை யோசிக்க மறந்துவிட்டேன். என்னுடைய தவறால் உங்கள் சாம்ராஜ்யம் அல்லவா வீழ்ந்துவிட்டது? எத்தனை ஆண்டுகாலம் நீங்கள் ஏந்தி வரும் செங்கோல் இது? மிரட்டல் பார்வையாலும்; கனைப்பின் கடுமையாலும்; தீ வார்த்தையாலும்; தேவைப்படுகிறபோது கழுதையின் கால் வித்தையாலுமே காப்பாற்றி வந்த ஆட்சிக்கு அல்லவா முடிவு கட்டிவிட்டது என் செய்கை.

“சத்தியம் சர்க்கரைப் பொங்கல்’ என்றே நாம் சிறுவயது முதல் சொல்லிவருகிறோம். சத்தியம் என்கிற வார்த்தைக்குத் தனிப்பட்ட சக்தி எதுவும் இல்லை. அதனால் நான் சத்தியம் செய்து சொல்ல விரும்பவில்லை. உங்களுக்காக வேண்டுமானால் உளப்பூர்வமாக, உணர்வுப்பூர்வமாக, உயிர்பூர்வமாக என ஏதாவதொன்றை அடைமொழியாகப் போட்டுச் சொல்கிறேன். “தனிப்பட்ட முறையில் இல்லாமல், உங்கள் எல்லோரையும் அவமானப்பட வைக்கிற செய்கை என்பதை முன்பே யோசித்திருந்தால் இந்த முடிவையே எடுத்திருக்க மாட்டேன். உயிரையே போக்கிவிட்ட வலியானாலும் தாங்கிக்கொண்டு இருந்திருப்பேன். எல்லாம் முடிந்தபிறகு இப்போது என்னால் மன்னிப்பு கேட்கமுடிவதைத் தவிர வேறொன்றும் செய்யமுடியாது. போக்கிவிட்ட எந்த அவமானத்தையும் ஊடகத்தினால் திருப்பிவிட முடியாது. போனதுபோனதுதான். ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன். இனி அவமானத்தைச் சந்திக்கிற துணிவை ஏற்படுத்திக் கொள்வதுதான் அறிவுள்ள செய்கையாக இருக்கும். சிரமமான ஒன்றுதான் இது. துணிவை ஏற்படுத்திக்கொள்ள எனக்கு இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்கிறபோது உங்களுக்கும் அதிகமான நாள்கள் ஆகத்தானே செய்யும்’

“துணிவு என்பதே இதில் சிறிதும் கிடையாது. கோழைத்தனமான செய்கை. சாணியைக் கரைத்து தோழர் சமுதாயத்தின் மீதே அடித்த செய்கை. சேலை கட்டிக்கொள். பொட்டு இட்டுக் கொள்’ என்பதுதானே உங்கள் வசைமழை. ஆத்திரம் வற்றுகிற வரை வசைபாடுங்கள். உங்கள் மீது எனக்குக் கோபமே வராது. உங்கள் இடத்தில் நானும், என் இடத்தில் நீங்களும் இருப்போமானால் இன்னும் கீழ்த்தரமாக நான் வசை பாடியிருப்பேன். ஓரளவேனும் நீங்கள் நாகரீகமாகப் பேசுவது எனக்குச் சந்தோஷமே. அதைப்போல கோழைத்தனமான செய்கை என்று குறிப்பிட்டீர்களே… அதையும் நான் மறுக்கப்போவதில்லை. எத்தனையோ முறை நான் முன்மொழிய நீங்கள் எல்லோரும் வழிமொழிந்த பல்வேறு நிகழ்வுகள் எல்லாம் இருக்கிறபோது எப்படி மறுக்கமுடியும்? விட்டு வைத்தால் எதிரி நம் கதையையே முடித்துவிடுவான் என்று அஞ்சுகிறவனும்; அவனை, அவளைத் தோற்கடிக்கவே முடியாது என்று அஞ்சுகிறவனும்தான் கொலையே செய்கிறான். நாளையைப் பற்றிய அவநம்பிக்கை உள்ளவனும் உழைக்க அஞ்சுகிறவனும்தான் கொள்ளையடிக்கிறான் என்று உங்களோடு சேர்ந்து நான் சித்தாந்தம் ஓதவில்லையா? புதுப்புது சிக்கல்களில் சிக்கி சின்னாபின்னமாகிறபோதுதான் சித்தாந்தங்களின் கடைப்பிடிக்க முடியாத தன்மையே புரிய வருகிறது. விதிவிலக்குகளின் விலாசங்கள் புலப்படுகிறது.

பால் கறப்பதைப் போன்ற வீரச்செயல் எதுவும் இல்லை என்று நான் சொன்னால் என்ன சொல்வீர்கள்? நீங்கள் சிரிப்பதிலிருந்தே தெரிகிறது. உலகில் உள்ளவர்களிலேயே கடைநிலை கோழை நானாகத்தான் இருப்பேன் என்று. உங்கள் பார்வையில் காளையை அடக்குபவன்தானே வீரன். பசு சாது. மடியை முட்டமுட்ட கன்றுக்குட்டியைப் பால் குடிக்கவிட்டு கறந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை என்பதுதானே உங்கள் வாதம். காளையின் குணம் அறிந்தே அடக்க முயலுகிறோம். அதுவும் இப்போதெல்லாம் மறைந்து நின்று நாலைந்து பேராகச் சேர்ந்து திமிலைப் பிடித்து அழுத்தி காளையை அடக்குகிறார்கள். பசுக்கள் மென்மையான குணம் உடையவை என்றே கருதுகிறோம். எல்லாப் பசுக்களும் மென்மையானக் குணத்தோடுதான் இருக்கும் என்பதை எப்படிச் சொல்லமுடியும்? பால் கறக்கையில் அவை எட்டி உதைத்தால்… எதிர்பாராத விதமாக உதை கழுத்திலோ… சந்ததி வளர்க்கும் உறுப்பிலோ பட்டுவிட்டால்?…. “இலட்சத்தில் ஒருவனுக்குத்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்’ என்றுதானே சொல்ல வருகிறீர்கள். அப்படியிருந்தால் அந்த இலட்சத்தில் ஒருவனை வீரன் என்று அங்கீகரிப்பீர்களா? ஏன் தயங்குகிறீர்கள். என் சம்பவத்தோடு சேர்த்து பார்க்கச் சொல்லி காவல் நிலையம் வரை வந்துவிட்ட என் செய்கையையும் ஒரு வீரச்செயலாக அங்கீகரிக்கச் சொல்வேன் என்றா?

தோழர்களே… கோழை என்று நீங்கள் குறிப்பிட்டதில் எனக்கு வருத்தமில்லை என்று முதலில் சொல்லிவிட்டாலும், இப்போது நினைத்து நினைத்துப் பார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. எத்தனையோ முறை என்னுடைய துணிவான செயல்களை அங்கீகரித்து வாழ்த்தியிருக்கிறீர்கள். எல்லாவற்றையும் இப்போது வசதியாய் மறந்துவிட்டு ஏசுகிறீர்களே…

வகுப்பு முடிகிற நேரம். பொருளாதாரப் பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு ஒரு கதை சொன்னார் பேராசிரியர் கிருஷ்ணன். “எனக்குப் பிடித்தது ஓட்ட வடை’ என்று ஆபாச அர்த்தம் வருகிற வகையில் அந்தக் கதையை முடித்தார். அருகாமையில் தோழிகள் எல்லாம் இருக்கையில் இப்படிப் பேசுவது எவ்வளவு பெரிய அநாகரீகம்? பெண்பிள்ளைகளோடு பிறக்கவில்லை… கொதித்து எழுந்தேன். தோழிகளில் சிலர் கதையைக் கேட்டு ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்த நிலையிலும், என் கையிலிருந்த கே.கே.டேவிட், ஜெ.டி.வர்மா சேர்ந்து எழுதிய “எலிமின்டரி எக்னாமிக் தியரி’ புத்தகத்தைத் தூக்கி பேராசிரியர் முகத்தில் அடித்துவிட்டு, கல்லூரியை விட்டே வெளியேறி வந்தவன் என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? எந்தத் தோழிகளுக்காக என்னுடைய படிப்பை அன்றைக்குப் பாழ்படுத்திக் கொண்டேனோ அந்தத் தோழிகளில் ஒருத்தி சமூகம் பழிக்கும் இல்லத்தரசியாய் இப்போதும் பேராசிரியருக்கு இருக்கிறாள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்தானே…

புலர்காலைக்கு வரவேற்பு கொடுத்து முடித்திருந்தது மழை. மொட்டை மாடியை ஒட்டி வளர்ந்திருந்தது முருங்கை மரம். உலுக்கினால் மரமே வானமாகிப் பொழிவதுபோல மழை பெய்யும். அந்த ஈரக்கிளையை வளைத்து கீரை பறித்தாள் ஒரு பெண். மின்கம்பி மரத்தை உரசிப் போவதை அவள் கவனிக்கவில்லை. ஈரக்கிளைகளில் பாய்ந்த மின்சாரம் அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டது. நட்ட நடு சாலையில் ஏதோவொரு விளம்பரத்திற்காக புதிதாய் உயிருள்ள ஒரு பெண் கையை உயர்த்தி நிற்பதுபோல கம்பியில் சிக்கி நிற்கிறாள். கீழே நின்று எல்லோரும் வேடிக்கை பார்க்கிறார்கள். சொட்டுச்சொட்டாய் பெண்ணின் உயிரை உறிஞ்சுகிறது மின்சாரம். என்னசெய்வது ஏது செய்வதென எவருக்கும் புரியவில்லை. மின் ஓட்டத்தை நிறுத்துவதற்கான வழி எவருக்கும் தெரியவில்லை. “அய்யோ…பாவம்’ என்கிற கூச்சல் மட்டும் கேட்கிறது. உருட்டுக் கட்டையை எடுத்துக் கொண்டு ஓடினேன். மின்கம்பியில் பிடிபட்டிருந்த கையை ஓங்கி அடித்தேன். பதற்றத்தில் முதல் அடி தவறிற்று. இரண்டாவது அடியில் விழுந்துவிட்டாள். நான் அடித்ததில் தவறி மொட்டை மாடியிலிருந்து கீழே தரையில் அவள் விழுந்திருந்தால்.. தொடாமலேயே என் வாழ்க்கையை மின்சாரம் உறிஞ்சியிருக்கும். அந்தப் பெண்ணை நான்தான் கொன்றதாக நீங்கள் எல்லோரும் சாட்சி கூறியிருப்பீர்கள். அப்படி எதுவும் நடக்காமல் தப்பித்துக்கொண்டேன். இந்தத் துணிகரச் செயலையும் நீங்கள் மறந்துவிட்டதில் எனக்கு வருத்தமே இல்லை. ஏனென்றால், காப்பாற்றிய பெண்ணே எனக்கு நன்றி தெரிவிக்காமல், பிறகொரு நாள் தண்ணீர் பிடிக்க குழாயடியில் என் அம்மாவோடு சண்டை போட்டிருக்கிறாள். இதைவிட உங்கள் மறதி எப்படி என்னை வருத்தமுடியும்? இவற்றையெல்லாம்…. விட்டுவிடுங்கள்.

ஈராக் அதிபர்… இப்போதும் அப்படியே அழைக்க விரும்புகிறேன். சதாம் உசேன் திறந்த முகத்தோடு தூக்குக் கயிற்றை முத்தமிட்டபோது, “சன்னி முஸ்லீம்களை அவர் கொல்லவில்லையா?’ என்று கேட்ட நண்பன் விஷ்ணுவை நீங்கள் அறிவீர்கள்தானே. அவனை ஓங்கி அறைந்துவிட்டு, ஓர் அநீதிக்கு இன்னோர் அநீதி என்றைக்குமே நீதியாக முடியாது. அப்படிப் பார்த்தால் ஈராக் மீது ஜார்ஜ் புஷ் யுத்தம் மேற்கொண்டபோது இறந்தோரின் எண்ணிக்கைத்தான் அதைவிட அதிகமாக இருக்கும் தெரியுமா? என்றேனே நினைவில்லையா? அதோடு, காய்கறி நறுக்கக்கூடிய கத்திதான் என்னிடம் இப்போது இருக்கிறது. இருப்பினும் துணிவு என்கிற ஆயுதம் அதிகமாகவே இருக்கிறது. வாருங்கள் தோழர்களே எல்லோரும் சேர்ந்து ஜார்ஜ் புஷ்ஷுக்குப் பதிலடி கொடுப்போம் என்றழைத்தபோது நீங்கள் எல்லோரும் ஓடி ஒளிந்துகொள்ளவில்லையா?

உங்கள் முகங்களெல்லாம் ஏன் இப்படி மாறுகிறது? உண்மைநெருப்பில் உங்கள் உடல்கள், முகங்களெல்லாம் தீய்ந்து போகிறதே.. என்னை எப்படிப் புழுவாய்த் துடிக்க வைக்கிறீர்கள்? “கோழை…கோழை’ என்று சொற்களால் செவுட்டில் அறைகிறீர்களே.. எதிர்வாதம் செய்கிறபோது ஏன் மிரண்டு போகிறீர்கள்? வருத்தப்படாதீர்கள்.. இனியும் என் துணிகரச் செயல்களை வரிசைப்படுத்துகிற தன்மையில் உங்கள் கோழைத்தனங்களை வெளிக்கொண்டு வரமாட்டேன். ஏற்கனவே நான் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்ட அவமானத்தால் கூனிக்குறுகி போயிருக்கிறீர்கள். இதற்கு நான்தான் காரணம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். உண்மையை உணர்ந்தால் அப்படிச் சொல்லமாட்டீர்கள். உணர்ந்தாலும் சொல்லாமல் இருப்பதுதான் துணிகரம் என்று இறுதியில் உங்கள் உடும்புப்பிடிக் கொள்கையை நிலைநிறுத்த முயலலாம். அதுபற்றி எனக்குக் கவலையில்லை. காவல்நிலையம் வரை வந்துவிட்டதற்கு அவள்தான் காரணம். குடிக்க மறுக்கிற குழந்தையின் தலையைப் பிடித்து பால் காம்புகளில் அழுத்தியாவது பாலைக் கொடுத்துவிடுகிற தாயைப்போல்தான் அவள். ஆனால் என் சட்டையைக் கிழித்து… என் தலையைக் கலைத்து… என் கைவிரல்களை எதிர்புறமாக வளைத்து… அழகுக்காக வளர்க்கப்பட்ட அவள் நகத்தால் என் முகத்தில் அங்கெங்கே அசிங்கமாகக் கீறி… ஒரு மணிநேரத்திற்கு ஒருதரம் எனக்கு அவள் ஊட்டியது ஆத்திரப்பால்.

“உங்கள் மனைவி நல்லவர் என்று முன்பு ஒரு முறை சொல்லியிருக்கிறீர்களே? ஆணாதிக்க மனப்பான்மையோடு செயல்பட்டிருப்பீர்கள்?’

வேதனை கலந்த சிரிப்புதான் வருகிறது… உங்களுடைய கேள்வியால் எனக்கு. எந்தவகையிலேனும் என் துணிகரச் செயல்களை உங்கள் மனதில் பதிய வைத்துவிடவேண்டும் என்று வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சொல்லியிருக்கிறேன். அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, என் மனைவி நல்லவள் என்று எப்போதோ ஒருமுறை சொன்னதை மட்டும் நினைவில் வைத்திருக்கிறீர்களே… இதுவும் ஒருவகையில் எனக்கு நல்லதுதான். சந்தித்த சங்கடங்களை வெளியில் காட்டிக்கொள்ளாமல் எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறேன் என்பதை இதிலிருந்தாவது புரிந்துகொள்ளுங்கள். பிறகு என்ன சொன்னீர்கள்? ஆணாதிக்க மனப்பான்மையோடு செயல்படுகிறேன் என்றுதானே? “விலாசம் மாற்றிக்கொண்ட பேய்கள்’ என்ற தலைப்பில் பெண்களைப் பேய்களாகச் சித்திரித்த பத்து சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் கொண்ட தொகுப்பை வெளியிடயிருந்த கோபாலைத் தடுத்து நிறுத்தியதில் நான்தானே முக்கிய பங்கு வகித்தேன். “இப்போதுதான் பெண்கள் வெளிச்சத்தைப் பருகத் தொடங்கியிருக்கிறார்கள். உங்கள் இருண்ட எழுத்துகளால் மீண்டும் அவர்களைப் பயமுறுத்தாதீர்’ என்று கோபாலுக்கு நான் அறிவுரைத்தபோது நீங்களும்தானே உடனிருந்தீர்கள். இதையும் மறந்துவிட்டீர்கள். ஒருவேளை நீங்கள் சொல்வதுபோல நான் ஆணாதிக்க மனப்பான்மையோடு நடந்துகொண்டிருந்தால் உங்களுக்கு உள்ளூர சந்தோஷமாகவே இருந்திருக்கும். வெளியில் பேசுகிறபோதுதான் வேதாந்தம். பெண்ணியவாதிபோல் பேசுகிற நீங்கள் உங்கள் மனைவி குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருக்க என்றைக்காவது சமைத்து போட்டதுண்டா? உங்கள் மனைவியின் உள்பாவாடையை அல்ல… குறைந்தபட்சம் உங்கள் உள்ளாடையையாவது மனைவியைத் துவைக்கவிடாமல் நீங்களே துவைத்ததுண்டா? உங்கள் எச்சில் தட்டை நீங்களே எடுத்து கழுவி வைத்ததுண்டா? கால் வலிக்கிறது என்று சொன்ன மனைவிக்குக் கால்பிடித்து விட்டதுண்டா? உள்ளுக்குள்ளாவது உண்மையைச் சொல்லிக் கொள்ளுங்கள். பள்ளிக்கும், கல்லூரிக்கும் அனுப்பி வைப்பது மூலமே பெண்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்துவிட்டதுபோல பாசாங்கு செய்கிறீர்கள். படிப்பு வாசனைக்கு நீங்கள் பக்குவப்பட்டதே (அவசரத்தில் பக்குவப்பட்டிருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டேன். நகரத்து மாடுகளுக்குச் சுவரொட்டிகளின் மீது இருக்கிற அக்கறைதான் உங்களுக்குப் படிப்பின் மீது என்பது எனக்குத் தெரியும்.) சொற்ப ஆண்டுதான் என்பதை நினைக்க மறுக்கிறீர்கள்.”விட்டுவிடுதலையாகு’ எனப் பெண்களுக்காக வெளியில் குரல் கொடுத்துக்கொண்டு அவர்களை எரிகிற விறகு கட்டையில் அல்லவா விட்டில் பூச்சியாய் போட்டு எரிக்கிறீர்கள். இப்படியெல்லாம் சொல்வதால் என் மனைவிக்கு நான் எல்லாப் பணிவிடையும் செய்திருக்கிறேன் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். காலில் தட்டுப்பட்ட பாத்திரத்தைக்கூட தள்ளி வைத்தது இல்லை. அப்படி ஒருவேளை எல்லா வேலைகளையும் நான் செய்திருந்தால்கூட அவளுக்குப் பிடித்திருக்காது. என்னை ஒரு திருநங்கையாக நினைத்து வெறுத்திருக்கக்கூடும். “திருநங்கை’ என்று நாகரீக வார்த்தைகளால் நான் சொல்கிறேன். அவள் வேறு இழிவார்த்தையைப் பயன்படுத்தித்தான் நினைத்திருப்பாள். அழைத்திருப்பாள். ”

“நீங்களாகவே கற்பனை செய்துகொண்டு பேசுகிறீர்கள். உண்மையில் உங்கள் மனைவியினுடைய வேலை என்று ஒதுக்கி வைத்தவற்றை நீங்கள் செய்திருந்தால் அவர் பெரிதும் மகிழ்ந்துதான் போயிருப்பார்…”

குற்றவாளிக் கூண்டில் நிற்கிறவன் சொல்கிற மெய்யைப் பொய்யாகவும்; பொய்யை மெய்யாகவும் எடுத்துக்கொள்வதுதானே உலக நியதி. அவள் நிச்சயமாக மகிழ்ந்திருக்க மாட்டாள். என்னை ஓர் அரவானியாக, அலியாக, ஒம்போதாக (மன்னித்துக்கொள்ளுங்கள் திருநங்கைகளே!)த்தான் நினைத்திருப்பாள். இயல்பான நிலையில் இருவர் பேசி எடுக்கிற முடிவுகளுக்குப் பெரும்பாலும் சாட்சிகள் இல்லை. மனசாட்சியைப்போல புல், செடி, கொடி, மரம், மலை, காற்று, நெருப்பு, மண், விண், பூச்சிகள், புள்ளினங்கள், விலங்குகள் எல்லாமே இதுபோன்ற நேரங்களில் உதவாமல் பயனற்றே இருக்கின்றன. பதிவு செய்து தேவைப்படுகிற நேரத்தில் உதவுகிற இயற்கை சாட்சிகள் ஏதாவது இருந்தால் எப்படி இருக்கும்? உலகில் உள்ள எல்லோரும் அயோக்கியர்களாகவே அறியப்படுவார்களோ?

பூங்காவில் உட்கார்ந்து நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முதல் தீர்மானமே இதுதான். வழிவழியாகக் கிடைத்து வருகிற ஆண்களுக்கான அதிகாரத் தலைகனத்தோடு நான் இருப்பது என்றும், அடிமைப் பணிகளைக் கொண்டவையாக இருந்தாலும் பெண்களுக்கான இலக்கணத்தோடு அவள் இருப்பது என்றும்தான் முடிவு செய்யப்பட்டது. இதற்கு முதலில் நான் என்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்தேன். ஆதிக்கம் எந்தவகையில் இருந்தாலும் அது தவறு என்று எடுத்துச் சொன்னபோது அவள் கேட்கவில்லை. “நீங்கள் சொல்வதெல்லாம் வெளிநாடுகளுக்குப் பொருந்தலாம் அல்லது அடுத்த நூற்றாண்டுகளில் வேண்டுமானால் இங்கு சாத்தியமாகலாம். ஆனால் எனக்கு உண்மையில் இதில் விருப்பமுமில்லை.

தாத்தா இறக்கிறவரை என்னுடைய பாட்டி அவரைத் தலைநிமிர்ந்து பார்த்திருப்பாரா என்பதே எனக்குச் சந்தேகம். வெளியில் வராந்தாவில் எங்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது தாத்தா வருவது தெரிந்தாலோ, அவரது வருவதற்கான இருமல் சத்தம் தூரத்தில் கேட்டாலோ எழுந்து விறுவிறுவென பத்தாயமிருக்கிற இருட்டறைக்குப் போய்விடுவாள் பாட்டி. அதுவும் வராந்தாவுக்கு எப்போதேனும்தான் வருவாள். தூரத்தில் வருகிறபோதே பாட்டிக்கு எச்சரிக்கை விடுகிற எண்ணத்துடன் தாத்தா இருமுவாரோ என்னவோ எனக்கு அதுவும் தெரியாது. கேலியும் கிண்டலோடு குழந்தைகளாகிய நாங்கள் எவ்வளவு முறை கூப்பிட்டாலும் தாத்தா இருக்கையில் பாட்டி வெளியில் வரமாட்டாள். பூப்பெய்திய காலகட்டத்தில் இருட்டறைக்குள் பாட்டி ஓடியதை நினைத்துப் பார்த்தபோது பெண்ணடிமைத்தனம் என்றால் என்னவென்பதைப் புரிந்துகொண்டதாகவும் அதை நேரடியாகவே கண்டதாகவும் எனக்குத் தோன்றி இருக்கிறது. எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்து பேசுகிற இப்போதைய மனநிலையில் என்னுடைய தாத்தா பாட்டி வாழ்முறையே நல்லது என்று நினைக்கிறேன். இந்த முடிவை நான் எடுக்க முக்கியமானவர்கள் என்னுடைய அப்பா, அம்மா. தாத்தாவோடு ஒப்பிடுகிறபோது அப்பா அம்மாவுக்கு அதிகமான சுதந்திரமே கொடுத்திருந்தார். ஆனாலும் அப்பா, அம்மாவுக்கு இடையேதான் அதிகச் சண்டை. என்னுடைய கல்லூரி சேர்க்கைக்குப் பணம் கட்டப் போன இடத்தில்கூட எல்லோர் முன்னிலையிலும் அவர்களுக்குள் விதண்டாவாதச் சண்டை. வெவ்வேறு பேருந்து பிடித்து வீடு திரும்பினர். சண்டைக்கான காரணம் என்ன பெரிதாக இருக்கப் போகிறது. இந்த நூற்றாண்டினுடைய சிறந்த நகைச்சுவை என்று நீங்கள் சொல்கிறளவில்தான் இருக்கும். இதையெல்லாம் யோசித்துதான் தாத்தா பாட்டிபோல் இருப்போம் என்றேன்’ என்றாள். இந்த நேரத்தில்தான் “”வேண்டுமானால் உன் பாட்டிபோல் நானிருக்கிறேன்” என்றேன். எந்த மனநிலையில் இப்படிச் சொன்னேன் என்பதை இப்போது என்னால் தெளிவாகச் சொல்லமுடியவில்லை. அப்போதுதான், “”ஊரென்ன நானே உங்களை “…., …., …..’ என்று அழைப்பேன். அதனால் நீங்கள் தாத்தாவைப் போலவே இருங்கள்” என்று சிரித்து விலகிப் போனவளை இழுத்து அன்றுதான் என் முதல் முத்தத்தைப் பதித்தேன்.

ஆரம்பத்தில் நான் தாத்தாவாகவும் (அவளாகவே பாட்டியாக நடந்துகொண்டதால் நான் தாத்தாவாகவும்) அவள் பாட்டியாகவும்தான் இருந்தோம். அதிக வருத்தத்தைக் கொடுத்த பல நிகழ்வுகளுக்குப் பின்னர்தான் அவள் தாத்தாவாகும் நான் பாட்டியாகவும் மாறிப் போயிருக்கிறோம் என்கிற விழிப்பே தட்டியது….

“பாட்டியாக இருப்பதற்குதான் நீங்கள் விரும்பினீர்களே?”

மறுக்கவில்லை. இரவு பன்னிரண்டு மணிக்கு நட்ஹாம்ஸனின் பசி நாவலைப் படித்துக் கொண்டிருந்தபோது, அதைப் பிடுங்கி கிழித்துப் போட்டபோதும் சரி… கை பனியன் போடச்சொல்லி என்னுடைய முண்டா பனியனைக் கிழித்துப் போட்டபோதும் சரி… அவள் விருப்பத்திற்கேற்ற வகையில் என் சிரைக்கிற கத்தியை வாங்காததற்காக அதைத் தூக்கிப் போட்டு உடைத்தபோதும் சரி நான் பாட்டியாகவே இருக்க விரும்பினேன் தோழர்களே… என்னுடைய அம்மாவிடம் பேசுவதற்குக்கூட அனுமதிப் பெறவேண்டும் என்கிற நிலைக்கு வந்தபிறகுதான் நான் பாட்டியாகவே இருக்கமுடியாத நிலைக்கு வந்தேன்…”

“அம்மாவிடம் பேசுவதற்கா..?”

ஆம். சொந்த அம்மா. அப்பா இல்லாத நிலையில் எங்களை ஆளாக்கிய அம்மா. இத்தனைக்கும் அம்மா என்னோடு கூட இல்லை. என் தம்பியின் வீட்டில்தான் இருக்கிறார். எங்களுடைய வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளிதான் தம்பி வீடு. அலுவலகம் முடிந்து வருகிறபோது தம்பி வீட்டைக் கடந்துதான் என் வீட்டிற்கு வரவேண்டும். வருகிற வழியில் அங்கு சென்று அம்மாவைப் பார்த்து வருவதில் என்ன தவறு இருக்க முடியும்? இதுதொடர்பாக எனக்கு அளிக்கப்பட்ட முதல் கட்டளை அலுவலகம் முடிந்து தம்பி வீட்டிற்குப் போகாமல் நேராக வீட்டிற்கு வரவேண்டும். இரண்டாவது கட்டளை வாரத்தில் ஒரு நாள் போய் பார்க்கலாம். அதுவும் வீட்டிற்கு வந்து சொல்லிவிட்டுத்தான் போகவேண்டும். மூன்றாவது கட்டளை ஐந்து நிமிடங்கள் பத்து நிமிடங்களில் பேசிவிட்டு வந்துவிடவேண்டும். இவை கடைப்பிடிக்கக்கூடிய கட்டளைகளா? அல்லது கடைப்பிடிக்கத்தான் வேண்டிய கட்டளைகளா? திருட்டுத்தனமாய் அம்மாவைப் போய் பார்த்து வந்தேன். காட்டிக் கொடுக்கவே பிறந்த என் நாக்கு சும்மா இருக்குமா? உளறிவிட்டது ஒருநாள். அய்யய்யோ அன்று நான் பட்டிருக்கிறேன் பாருங்கள் பாடு. ஒரு பைத்தியக்காரனின் அரைஞாண்கயிற்றில் சரவெடியைக் கட்டிவிட்டதுபோல். என் அரைஞாண் கயிற்றில் வெறிநாய்வார்த்தைகள். மூளையின் முடிவுவரை கோபம் போய்… மயக்கம்போட்டு விழுந்துவிட்டேன். இதைப்போல என் தங்கைக்குப் பிரசவம் முடிந்த சமயம். முற்றிலும் நான் எதிர்பார்க்கவே பார்க்காத சண்டை. “என்னுடைய பிரசவத்தின் போது ஊமையைப் போல். வெளியில் நின்றிருந்தாய். உன் தங்கையை மட்டும் தைரியமாய் இரு… ஒண்ணுமே ஆகாது.. என்றெல்லாம் சொன்னாய். அதுவும் மருத்துவமனை சன்னல் வழியாய் எட்டிப் பார்த்துச் சொன்னாய்.. உன் தங்கை குழந்தைக்கு மூன்று சட்டை எடுத்துக் கொடுத்தாய். என் குழந்தைக்கு இரண்டு சட்டை எடுத்துக் கொடுத்தாய். இது என் குழந்தை. இதைத் தூக்கக்கூடிய தகுதி உனக்கு இல்லை.’ குழந்தையை அவள் இழுக்க… நான் இழுக்க… குழந்தை சாவு அலறல்…. இதைப்போல இன்னொரு …..”

“ம்… அதிக சவுங்கையாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள்… கொஞ்சம் மிரட்டி… கொஞ்சம் அடித்து மனைவியைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அது உங்களுக்குத் தெரியவில்லை?”

மூளையின் முடிவுவரை கோபம் போய்… என்று முன்பு சொன்னேனே… அப்போதே சொல்ல நினைத்தேன். கொஞ்சம் தயக்கமாக இருந்தது. பெண்கள் உட்பட யாரையும் கைநீட்டி அடிப்பதைப் பெருங்குற்றமாக நாம் கருதுவதால் சொல்லாமல் மறைத்துவிட எண்ணினேன். வார்த்தை வெடிகுண்டுகளை ஒருவன் மீது போட்டு கொல்வதைவிட அடித்தல் என்பது பெருங்குற்றமாக எனக்கு இப்போது தோன்றாததால் சொல்கிறேன். அடித்தல் என்பது என் மனைவியைப் பொறுத்தவரை அடிக்கிறவனுக்கு அவள் கொடுக்கும் தண்டனை. இலைகளின் மீது விழுகிற அடியாய் இருந்த ஒன்று எப்படிப் பாறையின் மீது விழுகிற அடியாய் மாறிப் போனது என்பதைதான் இப்போதும் நான் புரியாமல் தவிக்கிறேன். முன்பெல்லாம் அடித்துவிட்ட பிறகாவது கொஞ்சம் கோபம் தணியும். அடித்த குற்றவுணர்வு குடையும். என்னுடைய நியாயங்கள் ஓரளவேனும் ஏற்றுக்கொள்ளப்படும். இப்போது அடித்தும் எதிர்பார்த்த எதிர்வினை கிடைக்காததால் கோபம் அதிகரிக்கிறதே தவிர குறைவதில்லை. இன்னொன்று அடிக்கிறளவுக்கு என்னைக் கோபப்படுத்துவதில் ஓர் உள்நோக்கத் திட்டமிடல் இருக்கிறதோ என்கிற சந்தேகம் இப்போது அதிகம் வலுத்திருக்கிறது. ஏனென்றால் என்னைக் கோபப்படுத்துகிற செயல்கள் அனைத்தையும் வீட்டிற்கு நாலு பேர் வருகிற நிலையிலும், எல்லோரும் கூடியிருக்கிற விழாக்களிலேயே நடைபெறுவதால்தான் எனக்கு இந்தச் சந்தேகம். இதுபோன்ற நேரங்களில் வழக்கத்துக்கு மாறான மிரட்டல் பார்வை, குடும்ப உறவுமுறைகளைச் சிதைக்கிற வகையில் என் குடும்பத்தார் மீது ஏகடியம், பிய்ந்துபோன செருப்புகளை ஓர் அழுக்குப் பையில் போட்டு வைத்திருந்து கொட்டுவதுபோல நானே மறந்துபோன என்னுடைய இயலாமைகளை மிகப் பொறுப்புணர்வுடன் சேகரித்து வைத்திருந்து ஞாபகப்படுத்தி அதை என் மீது கொட்டுவதையெல்லாம் சந்திக்கக் நேரிடுகிறது. சிரித்த முகத்தை எல்லோருக்கும் காட்டிக்கொண்டு கொலைவெறியை ஏற்படுத்துகிற ஆத்திரப் பேச்சை எவ்வளவு நேரம்தான் கேட்டுக் கொண்டிருக்க முடியும்? வீட்டுக்குள்ளே மனைவியை அடித்தாலும் வெளியில் அடிப்பதற்குக் கொஞ்சம் தயங்வோம் நாம். இங்கேயும் என்னைத் தலைமுடியைப் பிடித்து அடி. உன்னை ஒரு கொடூரனாய்; சித்திரவதை செய்பவனாய் உலகிற்குக் காட்ட விரும்புகிறேன் என்று அழைப்புமடல் விடுப்பது போலிருக்கிறது அவள் செய்கைகள்.

“…. …. உங்கள் மனைவிக்கு வேறு யாருடனாவது…””

இந்தக் கேள்வியை நீங்கள் தயங்கிக் கேட்கத் தேவையில்லை. கணவன் மனைவிக்கு இடையே சண்டை என்றால் முதல் காரணம் இதுவாகத்தானே இருக்கும் என்று நாம் முடிவு செய்து வைத்திருக்கிறோம். அதனால் நீங்கள் கேட்டக் கேள்வியை நான் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டேன். முதலிலேயே நீங்கள் கேட்டிருக்க வேண்டிய கேள்வி இது. அதைப்போல மனைவியைப் பிரிய திட்டமிட்டப் பிறகு அவள் நடத்தையைத் தவறாகவும் சித்திரிக்க விரும்புகிறவர்கள் போல் இல்லை நான். உங்கள் கேள்விக்கு மன ஆழத்திலிருந்து வருகிற ஒரே பதில்-இல்லை.'”

“காதலித்துதானே திருமணம் செய்துகொண்டீர்கள். அப்போதே அவர் குணத்தைத் தெரிந்துகொண்டிருக்கலாமே?”

காதலித்து என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டீர்கள். ஏழு ஆண்டுகளுக்கும் மேலாய் நாங்கள் காதல் இளித்திருக்கிறோம். நீங்கள் சொல்வதுபோல் தெரிந்தும் என்னால் ஒன்றும் விட்டுவிலக முடியவில்லை. மனதைக்கூட கெடுத்து விடுகிற தைரியம் எனக்கு இல்லையே தோழர்களே… இருப்பினும், பிறருக்கு இன்னல்களைக் கொடுப்பதாக இருந்தாலும் பேச்சுவார்த்தையின் மூலமே கொடுக்கவேண்டும் என்கிற நம்முடைய பழைய முறையின்படி பேசி பார்த்தேன். குணம் ஒத்துப்போகாவிட்டால் குடும்பம் நடத்தமுடியாது. பிரிந்துவிடுவோம் என்று ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை சொல்லியிருக்கிறேன். இதற்கு எனக்குக் கிடைத்த பதில்போல் உங்களுடைய வாழ்விலும் கிடைத்திருந்தால் எனக்கு அது வியப்பாகவே இருக்கும். முதல்தடவை சொன்னது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குழுமியிருந்த கடற்கரை. மணலை எல்லாம் அள்ளி என் மேல் போட்டுவிட்டு, கோபநடை போட்டுப் போனவள் என்ன செய்தால் தெரியுமா? உடைந்து கிடந்த ஒரு கட்டடச் சுவற்றில் போய் எருதுபோல் தலையை ஓங்கிஓங்கி ஆவேச அலறலுடன் முட்டுகிறாள். தலை உடைந்து இரத்தம் கொட்டு கிறது. ஒருவர் விடாமல் பார்க்கிறார்கள். முன்பின் சந்தித்த நிகழ்வாக இது. உண்மையைச் சொல்கிறேன் சமாளிக்க முடியாமல் அழுதேவிட்டேன். இரண்டாவது முறை மூத்திரச் சந்தோரமிருந்த ஒரு மின் மரத்தில் ஓடியது இரத்தம். மூன்றாம் முறை பரபரப்பாக வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்த சாலையின் ஓரமாய்க் கிடந்த கல்லை அடித்து அடித்துக்கொண்டாள். இக்கோரத்தைப் பார்த்த ஒருவன் எங்கிருந்தோ ஓடிவந்து என் கன்னத்தில் ஓர் அறைவிட்டான். இச்சம்பவத்திற்கு பிறகு எனக்கு வேறு வழியே தெரியவில்லை.”

“எளிதாக விவாகரத்து வாங்கியிருக்க வேண்டியதுதானே… அதைவிட்டு தோழர் சமுதாயத்தையே அல்லவா அவமானப்படுத்தியிருக்கிறீர்கள்?”

அடுத்தவர் செய்தியைத் தெரிந்துகொள்கிற ஆவலில் சொல்வதைப் புரிந்துகொள்ளாமலே பேசுகிறீர்கள். பிரிந்துவிடுவோம் என்று சொன்னதற்கே நான் பட்டபாட்டைத் தெரிந்துகொண்ட பின்னும் இந்தக் கேள்வியைக் கேட்பது முறையா? ஒருமுறை மண்ணெண்ணெய் எடுத்துவைத்துக் கொண்டு தற்கொலை மிரட்டல். நானும் மண்ணெண்ணெய் எடுத்து ஊற்றிக்கொண்டு நடித்துச் சமாளித்தேன். இன்னொருமுறை குழந்தையைத் தூக்கிக் கொண்டு ரயிலடியில் நடை. மூச்சுவெடிக்க ஓடி திரும்ப அழைத்து வந்தேன். சில நேரங்களில் அதிகம் வெறுத்துப் போய் செத்தால் செத்துத் தொலை என்று சொல்லி விட்டு வந்தோமானால், சிறிது நேரத்தில் கைப்பேசியில் செய்தி வரும். இதுதான் உங்களுக்கு நான் அனுப்பும் கடைசி செய்தி. உண்மையாகவே கடைசி செய்தியாய் இருந்துவிட்டால்…. ஓட்டம்… ஓட்டம்.

“சரி… இறுதியாய் என்ன நடந்தது சொல்லுங்கள்?”

ஏக்கர் நிலம் கிராமத்தில் இருக்கிறது தோழர்களே. அதன் நடவுக்காக அம்மா ஏற்கனவே ஊருக்குப் போய் இருக்கிறார். தேய்ந்துபோன முட்டியோடு அவள் விந்திவிந்தி சென்றுதான் எல்லா வேலைகளையும் கவனித்து வருகிறார். நாற்று நடுகிறபோது மட்டும் நான் அருகில் இருந்தால்தான் சரியாக இருக்கும். இதற்காக இரண்டு நாள் கிராமத்தில் தங்கி பார்த்துவிட்டு போகும்படி அம்மா கூப்பிட்டார். நானும் போக முடிவெடுத்தேன். இதில் வம்பு வருகிறளவு தவறு என்ன இருக்கிறது? இரண்டு நாள் இருக்கக்கூடாது. ஒரே நாளில் எல்லாவற்றையும் முடித்து வருவதாக இருந்தால் மட்டுமே போகலாம் என்று வம்பு வளர்க்கத் தொடங்கிவிட்டாள். வழக்கம்போல் எல்லாக் கணைகளையும் உபயோகித்துப் பார்த்தேன். முடியவில்லை. மாமா என்று அன்பொழுக அழைத்ததிலிருந்து போங்கவாங்க… போடாவாடா என்று ஒவ்வொரு சண்டையின்போது பதவியிறக்கம் கொடுத்து வந்தவள் இந்தச் சண்டையில் “போடா மசுரு’ என்றாள். என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நிலைகுலைந்து போய்விட்டேன். யோசித்துயோசித்து இரண்டு ஆண்டுகளாய் அவமானப்படுவதற்குப் பயந்துகொண்டு தள்ளிப்போட்டு வந்ததை முடித்துவிடுவது என்ற முடிவுடன்தான் காவல்நிலையம் வந்தேன். என் மனைவி என்னைக் கொடுமைப் படுத்துவதாகப் புகார் கொடுத்துவிட்டேன்.

“என்னதான் சொன்னாலும் நீங்கள் அடித்ததெல்லாம் தவறுதானே. உங்கள் பக்கக் கருத்துகளை மட்டும்தானே நாங்கள் கேட்…”

ஒரு நிமிடம் தோழர்களே… என்னுடைய கைப்பேசியில் ஒரு செய்தி வருகிறது. ம்… அது அவளுடைய செய்தியேதான்.

இப்போது நான் என்ன செய்வது தோழர்களே…. தோழிகளே நீங்களாவது சொல்லுங்கள்…

thavaram@gmail.com

Series Navigation

த.அரவிந்தன்

த.அரவிந்தன்