மனுஷ்ய வித்யா

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

பி.ஏ.கிருஷ்ணன்


உயிர்மையில் வெளிவந்த பிரம்ம வித்யா என்ற கட்டுரையில் கூறப்பட்டிருப்பவையில் சில:

1. வேதாந்தம் என்றால் புல்லரித்துப் போகாத இந்தியச் சிந்தனையாளர்கள் சிலரே.

2. வேதங்கள் என்பது ஒரு வகையில் இனக்குழுக்களின் பாடல் தொகுதிகள்தான். இப்படித் தொகுத்தெடுத்தால் கிராம ஆதிவாசிக்குடி மரபுகளிலிருந்தும் பல பாடல்கள் கிடைக்கும். ஆனால் இவற்றின் மட்டும் என்ன சிறப்பு என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

3. மாறாத விதிகளின் தொகுப்பு, மாபெரும் ஞானத்தின் களஞ்சியம் பிரபஞ்ச உண்மையின் சாரம் என்றெல்லாம் சொல்வதற்கு வேதங்களில் என்ன இருக்கிறது ?

4. உபநிடதங்களும் கீதையும் பெளத்தத்திற்கு பின்னால் உருவானவை. அவற்றின் கருத்துக்கள் பெளத்த மதத்தின் பல கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதமாக அமைந்தவை.

5. சமஸ்கிருதத்திற்கு இலக்கணமே பெளத்தப் பள்ளியில் படித்த அறிஞர்களால்தான் எழுதப் பட்டுள்ளன்ன.

6. விஷ்ணு, சிவன் போன்றவர் வேதங்களில் சிறு தெய்வங்கள். இவர்கள் பெளத்த சமண மதங்களிடம் இருந்து அன்பு, கருணை, சேவை அடைக்கலம் என்பதைக் கற்றுக் கொண்டு மக்களைக் கவர்ந்த நாட்டார் மரபுத் தெய்வங்கள்.

7. ராமனுஜரும் சங்கரரும் வேதாந்தத்திற்கு உரை எழுதியிருக்கிறார்கள். வேதாந்தம் பலவாகத் தோன்றுவதை மாயை என்கிறது.

8. சூத்திரர் பிரம்ம ஞானத்தை அடைய முடியாது என்று சங்கரர் சொல்கிறார்.

இவை அனைத்தும் மகா வாக்கியங்கள். இவற்றிற்கு ஆதாரங்களோ, மேற்கோள்களோ காட்டுவதற்கு அவசியம் இருக்கிறது என்ன்று ஆசிரியர் நினைக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். நான் மெத்தப் படித்த மேதாவி அல்ல. சிறிதே படித்தவன். படித்தவற்றிலிருந்து கூறப் பட்டவைகளுக்கு ஆதாரம் தேட, பதில் கூற முயல்கிறேன்.

புல்லரித்துப் போவது என்பது தனிமனிதனைச் சார்ந்தது.

நான் மார்க்ஸ் சொன்ன்ன De Ominbus Dubitandum (எல்லாமே சந்தேகப் படத் தக்கது) என்ற கூற்றை நம்புபவன். ஆனால் ஒரு கிறித்துவத் தேவாலயத்தின் உள்ளே நுழைந்து சுற்றிப் பார்க்கும் போது என்னை அறியாமல் கண்களில் நீர் வந்து விட்டது. சாரநாத்தில் சாக்யமுனியின் ஒப்பிலா அழகு படைத்த ஒரு சிலை முன்னால் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்த ஜப்பானியர் ஒருவரை நான் பார்த்திருக்கிறேன். ஏன், புத்த பிக்கு ஒருவர் வினய பீடகத்தில் புத்த பிக்குகள், பிக்குணிகள் நடக்கும் வழிமுறைகளை விளக்குவதைப் படித்துக் கூடப் புல்லரித்துப் போகலாம். இந்தியத் தத்துவத்தைப் பற்றி எழுதியவர்களில் பலர் வேதாந்தத்தை படித்துப் புல்லரித்துப் போனதாக எனக்குத் தெரியவில்லை. உதாரணமாக ஹீரியன்னாவின் The Essentials of Indian Philosophy புத்தகத்தில் புல்லரித்து எழுதிய வரிகளைப் படித்ததாக எனக்கு நினைவு இல்லை வேதாந்தக் கொள்கைகளின் சார்பாக பேசும் சங்கரர் ராமானுஜர் இவர்களின் தர்க்கத் திறனையும், குறிப்பாகச் சங்கரர் வடமொழியைக் கையாளும் விதத்தையும் கண்டு வியந்து சிலர் எழுதியிருக்கிறனர். இவை புல்லரிப்பு ஆக முடியாது. இவர்களைப் பற்றி எழுதியவர்கள் கூட புத்தபிரானைப் பற்றியும் மிக உயர்வாகத்தான் எழுதியிருக்கிறார்கள்.

உலகத்தின் எல்லா மத நூல்களும் சிறிய இனக்குழுகளின் சிந்தனைகள், பாடல்களின் தொகுதிகளாகத் தான் பிறந்தன. தால்முத்துகள் (The Talmuds) யூத இனக் குழுவின் தொகுதிகள். பைபிள் யூதர்களில் இருந்து பிரிந்து வந்த குழுக்களின் தொகுதி. புனித குரான் அராபிய இனக்குழுக்கள் முதலில் அறிந்த தொகுதி. வேதங்களும் அவ்வாறே. ஆதிவாசி கிராமப் புற மரபுகளிலும் – தங்கள் மரபுகள் பாதுகாக்கப் படவேண்டியவை என்று அவர்கள் நினைத்து அதற்கேற்ற வழிமுறைகளையும் செய்திருந்தால் – இவ்வாறு பல தொகுப்புகள் கிடைத்திருக்கலாம். ஆனால் கிடைக்காத வரை இருப்பதைத் தான் வைத்துக் கொள்ள முடியும். புத்தருக்கு முன்னால் இருந்த, வேதத்தை எதிர்த்தவர்கள் பலர் சொன்னவை அனைத்தும் நமக்குக் கிடைத்திருந்தால் புத்தரையும் மறு பரிசீலனை செய்ய நமக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும்.

வேதங்களின் சிறப்பு இதுதான்: மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, அவை பத்திரமாகக் காக்கப் படவேண்டியவை என்று நம்பி ஆசிரியர்கள் வாய்மொழியாக, தலைமுறை தலைமுறையாக, மாற்றங்கள் அதிகம் இல்லாமல், தங்கள் வாரிசுகளுக்கும் மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து வந்திருக்கிறார்கள். அது நம் வரை வந்து சேர்ந்தது மனிதகுலத்தின் அதிசயங்களில் ஒன்று.

வேதங்களில் பல பாடல்கள் பல தெய்வங்களை எங்களைக் காப்பாற்று, எங்கள் எதிரிகளை அழி என்று வேண்டும் பாடல்கள்தான். ஆனால் கவித்துவம் நிரம்பிய, தேடல்களைக் கொண்ட, மகத்தான உருவகங்களை அடக்கிய பல பாடல்கள் வேதங்களில் இருக்கின்றன. படைப்பாளிகளான ஆசியர்கள் கண்களுக்கு இவை தென்படாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்தக் கட்டுரையின் இறுதியில் ரிக் வேதத்திலிருந்து இரு பாடல்களை மொழி பெயர்த்துக் கொடுத்திருக்கிறேன். மேலாக, உள்ளடக்கத்தோடு, மொழியின் அழகையும் அதை ஓதும் போது கிடைக்கும் ஓசையின் சிறப்பையும் (வேதத்திலேயே பிராமணர்கள் வேதம் ஓதுவது தவளைகள் கத்துவது போல இருக்கிறது என்று சொல்லப்பட்டிருந்தாலும்) கணக்கில் எடுத்து கொள்ளலாம் என்று நான் கருதுகிறேன். இது புனித பைபிளுக்கும், புனித குரானுக்கும் பொருந்தும்.

நம்மிடம் இன்று இருக்கும் கீதை பல ஆசிரியர்களால் எழுதப் பட்டிருக்கிறது என்பதில் ஐயம் இல்லை. இந்த எழுத்து பல நூற்றாண்டுகளாக நடந்திருக்கலாம். உத்தேசமாக கீதையின் காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்குள் இருக்கலாம். முந்தைய பெளத்தத்தின் கொள்கைகளை கீதையை எழுதியவர்கள் அறிந்திருக்கலாம் என்பதற்கு கீதையிலேயே ஆதாரம் இருக்கின்றன என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆனால் உபநிடதங்கள் ? பிரகதாரண்யக உபநிடதம், சாந்தோக்கிய உபநிடதம் போன்றவை (உரைநடை உபநிடதங்கள்) புத்தர் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப் பட்டவை. உதாரணமாக ஆன்ட்ரூ ஸ்கில்டன் என்ற புத்த மதத்தைத் தழுவிய ஆங்கிலேயர் தன்னுடைய A Concise History of Buddhism என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்: Shortly before the time of Buddha himself, the earliest prose Upanishads were compiled. புத்தர் மூலமே இல்லாமல் முளைத்தெழுந்த முதற் கிழங்கு அல்ல. ரோமிலா தாபர் தன்னுடைய Early India என்ன்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்: The Buddha ‘s teaching was partially a response to the discourse of the early Upanishads, agreeing with some ideas and disagreeing with others.

புத்தரின் கொள்கைகளில் முக்கியமானவை மூன்று லக்ஷணங்கள். அவை புத்தர் உலகைப் பார்த்த விதத்தைக் கூறுபவை. அவை அநித்யம் (நிலையில்லாமை), துக்கம், அனாத்மா என்று அறியப்படுபவை. மணிமேகலை இவ்வாறு கூறுகிறது:

குற்றமும், வினையும், பயனும், துன்பம்;

பெற்ற தோற்றப் பெற்றிகள் நிலையா;

எப்பொருளுக்கும் ஆன்மா இலை – என

இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆகும்

அனாத்மா – ஆத்மா இல்லை – என்று புத்தர் சொன்னது, ஆத்மா இருக்கிறது என்று கூறுபவர்களுக்கு பதிலாகத்தானே இருக்க முடியும் ? ஆத்மாவைப் பற்றி விரிவாகக் கூறுபவை உபநிடதங்கள். அதனால் புத்தர் சொன்னது உபநிடதங்களுக்கு பதிலாகத்தான் இருக்க முடியும்.

புத்த மதத்தைப் பற்றி மாயைகள் பல நிலவி வருகின்ன்றன. சில மாயைகளைப் பற்றி இங்கு விவாதிக்க விரும்புகிறேன். பெளத்தம் எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை மறுக்கிறது என்ன்பதில் ஐயம் இல்லை. ஆனால் பெளத்தம் தேவர்களை நம்புகிறது. தேவர்களை நம்பவில்லை என்றால் ‘தேவர்களுக்குப் பிரியமானவன் ‘ என்று அசோகன் தனது கல்வெட்டுக்களில் ஏன் தன்னைப் பற்றிக் கூறிக் கொள்ள வேண்டும் ? தேவர்களுக்கும் பிறப்பும் இறப்பும் இருக்கின்றன, அவ்வளவுதான். இருத்தலில் முப்பத்து இரண்டு நிலைகள் இருப்பதாக பெளத்தம் கூறுகிறது. நிர்வாணம் அடையும் வரை கர்மத்தின் அடிப்படையில் இந்த நிலைகளின் உள்ளேயே சுழன்று கொண்டிருக்க வேண்டும். திரும்பத் திரும்ப பிறக்கவும் இறக்கவும் வேண்டும். பெளத்தத்தின் மகாஸங்கிகா பிரிவு புத்தரை ‘லோகோத்தரா ‘ – உலகைக் கடந்தவன் – என்று அழைக்கிறது. புத்தரே தான் கடவுள் இல்லை என்கிறார். ஆனால் தான் மனிதனும் இல்லை என்கிறார் (வின்னய பீடகம்).

பெளத்தத்தில் புத்த நிலைக்கு முந்திய நிலை போதிசத்துவர் என்ன்று அறியப் படுகிறது. யார் போதி சத்துவர் ஆக முடியும் ? புத்தருடைய வாழ்க்கையைக் கூறும் லலிதவிஸ்தாரம் என்ற புகழ் பெற்ற நூல் (மிகப் பழமையான நூல் – கி.மு. முதல் நூற்றாண்டில் எழுதப் பட்டது) இவ்வாறு கூறுகிறது: போதிசத்துவர்கள் வெறுக்கப் படும் குலங்களில் பிறப்பதில்லை -தீண்டத்தகாதவர், வாத்தியங்கள் வாசிப்பவர், வண்டிகள் செய்பவர்கள், சாதி கலந்தவர்கள் போன்ற குலங்களில். மேலும் கூறப் படுகிறது: போதி சத்துவர்கள் பிராமண, க்ஷத்திரிய குலங்களிலிருந்தே வர முடியும்.

புத்த மதம் சொர்க்கத்தை நம்புகிறது. போதி சத்துவர் துஷிதா சொர்க்கத்தில் இருந்தவர் என்று லலிதவிஸ்தாரம் சொல்கிறது. புத்த மதம் நரகத்தை நம்புகிறது. புத்தரே பிக்குகளும் பிக்குணிகளும் வழி தவறினால் அவிசி என்ற நரகத்திற்குச் செல்வார்கள் என்று ஆனந்தரிடம் சொல்கிறார்.

புத்தரே இவ்வாறு சொல்வதாக பழமையான ஸுத்த நிபாதா என்ற நூல் கூறுகிறது:

பிறப்பு ஒருவனைத் தீண்டத் தகாதவனாக ஆக்குவதில்லை

பிறப்பு ஒருவனைப் பிராமணன்னாக

ஆக்குவதில்லை

செயலே ஒருவனைத் தீண்டத் தகாதவனாக ஆக்குகிறது

செயலே ஒருவனைப் பிராமணனாக ஆக்குகிறது

(ஸுத்த நிபாதா – 142)

எனவே புத்தர் பிரிவுகளை நம்புகிறார். பிறப்பினால் பிரிவுகள் வருகின்றன என்பதையே அவர் நம்பவில்லை. இந்தக் கருத்தையே உபநிடதங்கள் கூறுகின்றன (உதாரணமாக சாந்தோக்கிய உபநிடதத்தில் வரும் சத்யகாம ஜாபாலனின் கதை – இந்தக் கதைக்கு சங்கரர் வேறு விதமான அர்த்தம் கொடுக்கிறார் என்பது உண்மை).

பிராமணர்களுக்கும் புத்த பிக்குகளுக்கும் உள்ள உறவு புத்தர் காலத்திலும் அசோகர் காலத்திலும் சுமுகமாக இருந்தது என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. புத்தர் தன்னுடைய சங்கத்தில் எல்லோருக்கும் இடம் அளித்தார். ஆனால் அவருடைய சீடர்களில் அநேகமாக எல்லோரும் உயர் வருணங்களைச் சேர்ந்தவர்கள்தான். சங்கத்திலும் பிராமண வருணத்தைச் சேர்ந்தவர் நிறைய இருந்தார்கள். அசோகனுடைய தெளலி பாறைச் சாசனம் இவ்வாறு கூறுகிறது: நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும், பிராமணர்களுக்கும், சிரமணர்களுக்கும் தானம் செய்வதே உயர்ந்தது.”

உண்மையான தர்மம் என்ன என்பதை ஜெளகதா சாசனம் விளக்குகிறது: உயிர்ப் பலியிடாமை, உயிரினங்களைக் காயப் படுத்தாமல் இருப்பது, பிராமணர்களுக்கும், சிரமணர்களுக்கும் மரியாதை கொடுப்பது.

சமஸ்கிருத இலக்கணத்தில் புகழ் பெற்றது அஷ்டத்யாயி என்ற நூல். இந்த நூலை எழுதியவர் பாணினி என்பவர். சமஸ்கிருத மொழியின் தந்தை என அழைக்கப் படுபவர். மொழியியலின் முன்னோடி என்று அறியப்படுபவர். இவர் பிராமணராக இருந்திருக்கலாம். நிச்சயம் இந்து தர்மத்தைச் சேர்ந்தவர். வாசுதேவரை வழிபட்டவர். இந்தியாவின் வட மேற்கு பகுதியில் ( இன்றையப் பாகிஸ்தான்) வாழ்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலிருந்து நான்காம் நூற்றாண்டுக்குள் இருக்கலாம் என்று வரலாற்றாசிரியர் கருதுகின்றனர். எனவே பாணினி புத்தருக்கு முன்னேயோ, அவர் காலத்தை ஒட்டியோ வாழ்ந்தவர். இவர் எந்த புத்தப் பள்ளியில் படித்தார் ? இவர் வாழ்ந்த இடத்திற்கு பெளத்தம் வந்தது அவர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பின்னரே.

விஷ்ணு, சிவன் ஆகியோர் வேதங்களின் பெருந்தெய்வங்கள் இல்லை என்பது உண்மை. ஆனால் பெளத்தம் வளர்ச்சி அடைந்த காலத்தோடு ஒட்டி இந்த தெய்வங்களின் வழிபாடுகள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. விஷ்ணு, வாசுதேவ வழிபாடு பாணினியின் காலத்திலேயே இருந்திருக்கிறது. மெகஸ்தனீஸும் வாசுதேவ வழிபாடு பரவலாக இருந்திருப்பதைக் குறிப்பிடுகிறார். கி.மு. 150 ஆண்டில் எழுந்த பேஸ்நகர் தூண் சாசனத்தில் (இன்றைய பாகிஸ்தான்) ஹீலியோடோரஸ் என்ற தக்ஷசீல அரசன் தான் கருடக் கொடியை தேவதேவ வாசுதேவருக்குப் பெருமை செய்வதற்கு ஏற்றியதாகக் குறிப்பிடுகிறான். தன்னை பாகவதன் என்றும் சொல்லிக் கொள்கிறான். கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோசுண்டி கிணற்றுக் கல்வெட்டில் அக் கிணற்றின் சுற்றுச் சுவர் சங்கர்ஷணருக்கும் வாசுதேவருக்கும் கட்டப் பட்டது என்று கூறப்பட்டிருக்கிறது. சிவனைப் பொருத்த வரையில் அவனுடைய அழிப்புத்தன்மை ரிக் வேதத்திலேயே குறிப்பிடப் பட்டிருக்கிறது. (ருத்ரன் என்றாலே சத்தம் இடுபவன் என்று அர்த்தம். இடியோடு கூடிய புயலின் குறியீடு). அவன் மலை மேல் வசிப்பவன், சடைமுடி உள்ளவன், தோலணிந்தவன் என்பதும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அவன் துறவிகளின் தலைவன் என்றும் அவனைச் சாந்தப் படுத்தி சிவனாக ஆக்கவேண்டும் என்றும் வேதம் கூறுகிறது. அவன் மகாதேவன் என்றும் அழைக்கப் படுகிறான். தென்னாட்டில் இன்று வரை கண்டெடுக்கப் பட்ட சிலை வடிவங்களில் பழமையானது குடிமல்லம் லிங்கம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த லிங்கம் கி.மு. இரண்டாம் அல்லது முதலாம் நூற்றாண்டுக் காலத்தியது என்று கருதப் படுகிறது. அமராவதிச் சிற்பங்களுக்கும் முந்தியது. சமணத்திலிருந்தும் பெளத்தத்திலிருந்தும் கற்றுக் கொள்ள இந்தத் தெய்வங்களுக்கு கட்டாயம் அதிகம் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. அன்பு, கருணை, சேவை, அடைக்கலம் போன்ற மனித குணங்களை முதலில் கண்டுபிடித்தவர் புத்தர் என்று நான் நினைக்கவில்லை. மனித குலம் ஒரு புத்தரை இந்தக் குணங்கள் இல்லாமல் தோற்றுவித்திருக்க முடியாது. (எல்லாவற்றிற்கும் மனித குலம் தேன். மனித குலத்திற்கு எல்லாமே தேன் – பிரகதாரண்யக உபநிடதம் ). புத்தர் சொன்னது இக்குணங்களுக்கு எதிர்மறைக் குணங்களிலிருந்து மனிதன் விடுதலை அடைய வேண்டும் என்பதுதான். மேலும் தெய்வங்களே இல்லை என்பவர்களிடமிருந்து தெய்வங்களுக்குக் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது ? ஆனாலும் ஒன்று சொல்ல வேண்டும். இக் கடவுளர்களின் சிலைகள் வடிப்பதற்கு ஊக்கம் புத்தருக்கு எழுப்பப் பட்ட சிலைகளைப் பார்த்தே பிறந்திருக்க வேண்டும். புத்தருக்கு சிலைகள் வடிப்பதின் ஊக்கம் கிரேக்கச் சிற்பங்களைப் பார்த்துப் பிறந்த மாதிரி.

பிரம்மத்தைப் பற்றி சங்கரர் சொல்வது வேறு. ராமானுஜர் சொல்வது வேறு. சங்கரர் பிரம்மம் குணங்கள் அற்றது (நிர்க்குணம்) என்கிறார். ராமானுஜர் பிரம்மம் எல்லாக் கல்யாண குணங்களையும் கொண்டது என்கிறார். இதையே நம்மாழ்வார் உயர்வற உயர்நலம் உடையவன் என்கிறார். உலகம் மாயை என்று சங்கரர்தான் கூறுகிறார். எல்லாம் உண்மை என்கிறார் ராமானுஜர்.

சூத்திரராகப் பிறந்தவர் பிரம்ம வித்யையை அடைய முடியாது என்று சங்கரர் கூறுவது உண்மைதான். அதற்காக உபநிடத வரிகளுக்கு அவர் வலிந்து பொருள் கொள்கிறார். ராமானுஜரும் அவ்வாறே கூறுகிறார். ஆனால் இறைவன் நாட்டைச் சேர்வதற்கு பிரம்ம வித்யை அறிவது ஒன்றும் அவசியம் இல்லை என்று வைணவம் கூறுகிறது. அவனைச் சரணடைந்தாலே போதும். நம்மாழ்வார் வைணவர்களுக்கு குலபதி என்று அறியப் படுபவர். ஆண்டவனுக்கு அடுத்தபடியாக அறியப் படுபவர். சிலருக்கு ஆண்டவனுக்கும் மேலே. அவர் பிறப்பினால் பிராமணர் இல்லை. வைணவமும் இந்து மரபில் ஒரு பாகம்தான் என்று நான் நினைக்கிறேன். புத்த மத நூற்களின் படி புத்தருக்கு முந்திய போதி சத்துவ நிலையை அடைவதற்கே ஒருவர் பிராமணராகவோ, க்ஷத்திரியராகவோ பிறந்திருக்க வேண்டியது அவசியம் என்பதையும் நாம் இங்கு நினைவு கூற வேண்டும்.

இந்து மதத்தில் தூக்கி வெளியே எறியப் பட வேண்டிய குப்பைகள் பல இருக்கின்றன என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் குப்பைகளின் மொத்தக் குத்தகையையே இந்து மதம் எடுத்துக் கொண்டிருக்கிறது என்று நான் சொல்ல மாட்டேன். சங்கரர் சொன்னாலும் ராமானுஜர் சொன்னாலும் நமக்குப் பிடிக்கவில்லை என்றால் தூக்கி எறிய வேண்டியதுதான். அதே போன்று பெளத்தத்திலும் என்னைப் பொருத்த வரை தூக்கி எறியப் பட வேண்டியவை பல இருக்கின்றன. உதாரணமாக வஜ்ரயான பெளத்தம் பல பெண்களோடு புணர்வது, (கீழ்ச்சாதிப் பெண்களோடு என்பது அழுத்திச் சொல்லப் பட்டிருக்கிறது ) நாய் மாமிசம் தின்பது, பிணம் தின்பது, மயானத்தில் வசிப்பது போன்றவைகளை உயர்த்திப் பிடிக்கிறது. இந்த வழிமுறைகளை கலகத்தின் சின்னங்களாகக் கொண்டு ஏற்றுக் கொள்வதும் அல்லது தூக்கி எறிவதும் பெளத்தத்தைச் சார்ந்தவர் விருப்பம்.

பெளத்தமும் இந்து மதமும் ஒன்றை ஒன்று எதிர்த்தும் சார்ந்திருந்தும் வளர்ச்சி அடைந்திருக்கின்ன்றன்ன. புத்த மதத்தைச் சார்ந்து கடைசியாக எழுதப் பட்ட தாந்திரீகப் புத்தகம் காலசக்ர தந்திரம் என்பது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் எழுதப் பட்டது. இது இந்து -புத்த கடவுளர்கள் சேர்ந்த ஒரு கூட்டு வழிபாட்டு முறையைச் சொல்கிறது. இந்த முறை சித்தர் ஒருவரால் நிறுவப் பட்டதாம். முஸ்லிம் படையெடுப்பைத் தடுப்பதற்கு இந்த முறை ஒரு சக்தியாக பயன் படும் என்று காலசக்ர தந்திரம் கூறுகிறது!

எல்லா மத நூல்களும் மனிதர்களால் எழுதப் பட்டன என்று நான் நம்புகிறேன். எழுதியவர்கள் மகா மனிதர்கள். புத்தர் ஒரு மகா மனிதர். மகாவீரர் ஒரு மகா மனிதர். வேத கால முனிவர்கள் மகா மனிதர்கள். இந்திய மரபின் அழியாச் சின்னங்கள் அவர்கள். அவர்கள் விட்டுச் சென்றது மனித குலத்தின் பொதுச் சொத்துக்கள். அவற்றில் வேண்டியதை எடுத்துக் கொண்டு வேண்டாதவற்றை விட்டு விடுவது அவரவர் விருப்பம்.

படைப்புப் பாடல்

இருத்தல் இல்லை

அப்போது.

இருத்தலிலாமையும் இல்லை,

அண்டப் பெருவெளி இல்லை,

ஆகாயம் இல்லை, அதன் பின்னால் ஒன்றும் இல்லை.

எதை அது சூழ்ந்திருந்தது ? எங்கே ? யாரைக் காக்க ?

நீர் இருந்ததா ? அடிகாணமுடியா ஆழ்நீர் ?

மரணம் அப்போது இல்லை, அமரத்துவமும் இல்லை.

இரவு பகலின் தடமும் இல்லை.

அவன் மட்டும்தான் உயிர்த்திருந்தான். தன் வலிவால், காற்றே இல்லாமல். அவனைத் தவிர எதுவும் இல்லை.

முதலில் இருளை இருள் சூழ்ந்திருந்தது.

எங்கும் தண்ணீர், பிரிக்கமுடியாத் தண்ணீர்.

உயிர் விசையை வெறுமை மூடியிருந்தது.

அவன் தான் முதலில் எழுந்தான், தன் தனித்தவத்தின் வெம்மையால்.

அவன்தான் முதலில் வளர்ந்தான். ஆசைதான் அவன் மனதின் முதல் வித்து.

தவம் செய்வோர் (பின்னால்) தங்கள் இதயங்களுக்குள் தேடி, இருத்தல்- இருத்தலில்லாமைப் பிணைப்பை அறிந்தனர்.

இப்பிணைக் கயிறு இடையறாது நீண்டது.

எது கீழ் ? எது மேல் ?

விதைப்பவர் இருந்தனர். ஆற்றல் இருந்தது.

உந்துதல் கீழே, உந்துசக்தி மேலே.

யாருக்கு – உண்மையிலேயே – தெரியும் ?

யாரால் இங்கு சொல்ல முடியும் ?

எப்போது படைக்கப்பட்டது ? எப்போது இந்த உருப் பெற்றது ?

கடவுளர் தன்னுருப் பெற்றது பெருவெளி வந்த பின்னரே.

யாருக்கு, அதனால், எப்போது எழுந்ததென்று தெரியும் ?

படைப்பு பிறந்தது எப்படி ?

தானாகப் பிறந்ததா ? தானாக இல்லையா ?

சொர்க்கத்திலிருந்து மேற்பார்வை செய்கிறானே, அவனுக்கு மட்டும் தெரியும்.

ஒரு வேளை அவனுக்கும் தெரியாதோ என்னவோ.

முதல் மனிதன் பலியிடப் பட்டபோது…

(புருஷ சூக்தம்)

ஆயிரம் தலைகள் அவனுக்கு. ஆயிரம் கண்கள், ஆயிரம் கால்கள்.

உலகையே சூழ்ந்தவன், அவன் உலகினும் அகலம்.

கணிதத்தைக் கடந்தவன் -விரல் பத்து கொண்டெண்ணி விளக்க முயலும் கணிதம்.

அவனே எல்லாம்.

அவனே நேற்று, அவனே நாளை.

அமரத்துவத்தின் அதிபதி அவனே

உலகே உணவு அதுவும் அவனே.

படைப்பெலாம் அவன் பெருமை,

படைப்பையும் அவன் கடந்தான்.

படைப்பு அவனில் நான்கில் ஒரு பாகம்

மீதி மூன்றும் என்றும் அழியா.

அழியா மூன்றுடன் அவன் உயந்திருந்தான்

இங்கிருந்த பாகத்தால் எங்கும் பரந்தான்

உண்பதுள்ளும், உண்ணாதுள்ளும்.

கடவுளர் வேள்விக்கு இவனே அவிசு

நெய்யாய் ஆனது வசந்த காலம்

வேனிற் காலம் விறகாய் ஆனது

இலையுதிர் காலம் மற்றொரு அவிசு

(அவிசு = தீயில் இடப்படுவது)

பலியானவனைப் பகுத்ததெப்படி ?

பகுக்கப்பட்டது எத்தனை பாகம் ?

அவனுடைய வாய் ஆனது என்ன ?

கைகளும் தொடைகளும் ஆனவை என்ன ?

கால்களுக்கு நேர்ந்தவை என்ன ?

வாயிலிருந்து பார்ப்பனர் வந்தார்

வீரர் பிறந்தது கைகளில் இருந்து

தொடைகளில் இருந்து வைசியர் வந்தார்

சூத்திரர் பிறந்தது கால்களில் இருந்து.

மனதில் இருந்து சந்திரன் பிறந்தான்

சூரியன் பிறந்தது கண்களில் இருந்து

இந்திரன், அக்கினி பிறந்தது வாயில்

மூச்சிலிருந்து பிறந்தது காற்று.

காற்று மண்டலம் தொப்புளில் பிறந்தது

வானம் வந்தது தலையில் இருந்து

கால்களில் இருந்து பூமி பிறந்தது

திசைகள் பிறந்தன காதில் இருந்து

கடவுளர் சமைத்த உலகங்க ளனைத்தும்

பிறந்த பெற்றி இவ்வாறாகும்.

(இந்தப் பாடல் பதினாறு சுலோகங்களைக் கொண்டது. நான் முக்கியம் என்று கருதிய ஒன்பது சுலோகங்களை மட்டும் மொழிபெயர்த்து இருக்கிறேன்ன். சூத்திரர் புருஷனின் பலியிடப் பட்ட பாகங்களான கால்களிலிருந்து பிறந்தவர் என்ன்று கூறும் பாடல். இந்த பூமியும் அவன் கால்களிலிருந்து பிறந்தது என்று சொல்வதைக் கவனியுங்கள்.)

இக்கட்டுரையை எழுத எனக்கு உதவிய நூல்கள், கட்டுரைகள்:

1. Hindu Scriptures- R.C. Zaehner

2. A Concise History of Buddhism – Andrew Skilton

3. The essentials of Indian Philosophy – M. Hiriyanna

4. Early India – Romila Thapar

5. The Art and architecture of Indian sub-continent – J.C. Harle

6. Rig Veda – An Anthology Wendy O ‘ Flaherty

7. Brahma Sutra Bhashaya – commentaries of Sankara and Ramanuja.

8. Britannica Concise Encyclopedia

Essays from the Internet

9. Buddha – His Life and Teachings – Venerable Piyadassi Tera

10. Modern ideology and historical reality of ancient Buddha Dharma – Edmund Weber

11. The Buddhist Attitude to God – Dr. Gunasekara

12. Lalitavistara 127- 129 translated by Rajendralala Mitra

தமிழ் நூல்கள்

13. மணிமேகலை

14. நம்மாழ்வாரின் பாசுரங்கள்

பி.ஏ.கிருஷ்ணன்

tigerclaw@gmail.com

Series Navigation