மந்திரம்

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

அப்துல் கையூம்மந்திரம் என்ற தலைப்பைக் கண்டதும் நான் ஏதோ காயத்ரி மந்திரம் அல்லது நமசிவாய மந்திரத்தைப் பற்றிய வேத உபன்யாசத்தை கதாகாலட்சேபம் நிகழ்த்தப் போகிறேன் என்று திண்ணையின் ஆன்மீக வாசகர்கள் எண்ணிக் கொண்டால் கண்டிப்பாய் மிஞ்சுவது ஏமாற்றம்தான்.

“ஏவுகணை வேகத்தில் உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கும் இவ்வேளையில் மந்திரம், தந்திரம், மாயாஜாலம் என்று விட்டாலாச்சார்யா பாணியில் கட்டுரை அவசியம்தானா?” என்று வாசக அன்பர்கள் வினவக்கூடும்.

பிரபல நாவலாசிரியர் ஜே. கே. ரெளலிங் மந்திரவுலகம் பற்றி எழுதிய “ஹாரி பாட்டர் அண்ட் த ஆடர் ஆப் பீனிக்ஸ்” எனும் நாவல் 55 மில்லியன் விற்றுத் தீருகையில் என்னுடைய ‘மந்திரம்’ கட்டுரையை குறைந்தது ஐம்பத்தைந்து பேர்களாவது படித்து ரசிக்க மாட்டார்களா என்ற நப்பாசைதான். வேறென்ன?

குட்டி பத்மினியின் ‘மந்திர வாசல்’ தொலைக்காட்சித் தொடரை, பட்டி தொட்டிகளெங்கும் ரசித்த தாய்க்குலங்களில் ஒன்றிரண்டு பேராவது இந்த ‘மந்திரத்தை’ படிக்கலாம் அல்லவா?

மந்திரம் என்றால் இறைவனை பிரார்த்திக்கும் ஜெபம் என்ற அர்த்தம் மட்டும்தானா?

“மதன மாளிகையில், மந்திர மாலைகளாம், உதய காலம்வரை, உன்னத லீலைகளாம்” என்று கவியரசர் கண்ணதாசன், சிவாஜி நடித்த ‘ராஜபார்ட் ரங்கதுரை’ என்ற படத்திற்கு பாடல் எழுதினார். பள்ளியறையில் ஜெபம் என்ன வேண்டிக் கிடக்கிறது? அதற்கு அங்கே எங்கே நேரம்?

கவிஞரின் கற்பனையில் உதித்த மந்திரம் முற்றிலும் மாறுபட்டது. கண்ணதாசனுக்கு இதுபோன்ற மந்திர வார்த்தைகளை தந்திரமாய் கையாளுவது கை வந்த கலை.

மந்திரம் என்பது உள்ளத்தை ஒருமைப்படுத்தும் செயல். ஒரு குறிப்பிட்ட காரியத்தின் மீது நாட்டத்தைச் செலுத்துவது; கவனத்தை செலுத்துவது என்று பொருள் கொள்ளலாம்.

பிறிதொரு இடத்தில் மந்திரம் என்ற வார்த்தைக்கு கவியரசர் அளிக்கும் விளக்கம் முற்றிலும் மாறுபட்டிருக்கும்.

“மந்திரம் உரைத்தாற் போதும் – மலரடி தொழுதால் போதும்
மாந்தருக்கருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும்
இந்திரப் பதவி கூடும் – இகத்திலும் பரங்கொண்டோடும்
இணையறு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில் சேரும்”

என்ற ஆதிசங்கரரின் அமுத வார்த்தைகளை அனுபவக் கவிஞர் அழகாக எடுத்து வைக்கிறார்.

“ஆடவரெலாம் ஆடவரலாம்” என்று அழைக்கும் போதும் “அத்திக்காய் காய் காய்; அத்-திக்காய் காய் காய்” என்று உரைக்கும் போது, “அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்” என்று பிரமிக்கும் போதும், கண்ணதாசனின் மந்திர வரிகளில் நாம் மயங்கிப் போகிறோம்.

கண்ணாதாசன் மாத்திரமா மன்மத மந்திரத்தை உதிர்த்தார்? கோடு போட்டால் ரோடு போடுகிற வாலிபக் கவிஞர் வாலி சும்மா இருப்பாரா? ‘என்னைப் போல் ஒருவன்’ என்ற படத்திற்காக; அதே சிவாஜிக்காக :

“வேலாலே விழிகள், இன்று ஆலோலம் இசைக்கும், சிறு நூலாலே இடையில், மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்” என்று டி.எம்.எஸ்ஸை மந்திரம் ஜெபிக்க வைத்தார்.

எனக்கு அறிமுகமான பிரம்மச்சாரி இளைஞன் ஒருவன். மந்த்ரா பேடியின் அதிதீவிர ரசிகன். அறை முழுதும் மந்த்ராபேடியின் (அம்மா, அப்பாவின் பயம்கூட இல்லாமல்) வால்போஸ்டரை wall முழுதும் ஒட்டி வைத்திருந்தான். “வேண்டாம்டா” என்று அவருடைய அம்மாவும் ‘வாள் வாள்’ என்று கத்திப் பார்த்து விட்டார். வால் பையன் கேட்பதாக இல்லை.

“இவன் உருப்படுற மாதிரி தெரியலே. ‘மந்திரிச்சு’ விட்ட கோழி மாதிரி அலையுறானே?” என்று அவருடைய அப்பாவும் நொந்து நூடுல்ஸாகி விட்டார்.

கோயிலுக்காக நேர்ச்சையாக மந்திரித்து விடப்பட்ட ஆடு, மாடு, கோழி முதலான வாயில்லா ஜீவன்கள் கொழு கொழுவென்று (கொழுப்பெடுத்து?) கோயிலை சுற்றிச் சுற்றி வரும். வால் பையனை ‘மந்திரிச்சு விட்ட கோழி’ என்று அவர் வர்ணித்தது பொருத்தமான பதமாகவே எனக்குப் பட்டது.

நிறைய அம்மாமார்கள் தங்கள் ஆசை புத்திரனுக்கு திருமணம் நடத்தி பார்த்து விட்டு புலம்புகிற வசனம் இது. “வந்தவ என்ன மாய மந்திரம் பண்ணினாளோ தெரியலியே? இப்படி முந்தானையை புடிச்சிக்கிட்டு இவன் அலையிறானே?”

தெரியாமல்தான் கேட்கிறேன்? புகுந்த வீட்டுக்கு வருகின்ற மாட்டுப்பெண் என்ன P.C.சர்க்காரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டா வருகிறாள்?

கூட்டுக் குடும்பத்தில், மனைவி கணவனிடம் மனம் விட்டு பேசக்கூடிய ஒரே இடம் அவர்களது படுக்கையறை. வீட்டு நடப்புகளை அங்குதான் அவர்கள் கருத்து பரிமாறிக் கொள்ள முடியும். (இதற்காக ஆட்டோ எடுத்துக் கொண்டு கண்ணகி சிலைக்கா போக முடியும்?) அந்த பரிபாஷைக்கு வீட்டார் வைக்கும் பெயர் “தலையணை மந்திரம்”. மற்றொரு புனைப்பெயர் “முந்தானை முடிச்சு”.

நிஜமாகவே ‘தலையணை மந்திரம்’ கற்றுத் தேர்ந்த சம்சாரமும் இருக்கத்தான் செய்கிறாள். அவளுக்கு எந்த நேரத்தில் எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற சூட்சம மந்திரம் தெரியும். “என்னங்க..!” என்று அவள் இழுக்கும் தொகையறாவிலேயே இவன் மகுடி ஊதிய பெட்டிப்பாம்பாக அடங்கிப் போவான். (சொந்த அனுபவத்தை வைத்துத்தான் ஒருவன் எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை. கேள்வி ஞானத்தைக் கொண்டும் எழுதலாம் அல்லவா?)

குடும்பச் சொத்துக்காக ஒரு வழக்கை போட்டு விட்டு காலங்காலமாக கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடையாய் நடக்கும் என் நண்பர் ஒருவருக்கு அவருடைய வழக்குறைஞர் எப்போதும் கூறும் ஒரே பதில் “இது ஒண்ணும் மந்திரத்துலே மாங்காய் வரவழைக்கிற சமாச்சாரம் இல்லீங்க. கொஞ்சம் பொறுமையா இருங்க”.

மந்திரம் என்ற வார்த்தை ‘மந்த்ரா’ என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பிறந்தது, ‘மன்’ என்றால் மனது என்றும் “த்ரா” என்றால் வெளிப்பாடு என்றும் அர்த்தம். உள்ளத்திலிருந்து உச்சரிக்கும் வெளிப்பாடே மந்திரம்.

மந்திரம் என்பதற்கு ஆலோசனை என்ற பொருள் உண்டு. ஆலோசனையை வழங்குவதால்தான் அவனுக்கு மந்திரி (மன்+த்ரி) என்ற பெயரே வந்தது. இல்லத்தில் ஆண்ராஜ்ஜியமா அல்லது பெண்ராஜ்ஜியமா என்று தெரிந்துக் கொள்வதற்காக மதுரையா? சிதம்பரமா? என்று வினவுவதுண்டு. பதில் எதுவாக இருந்தாலும் ‘மனைவி சொல்லே மந்திரம்’ என்ற முன்னோர்கள் வாக்கை மெய்ப்பிப்பதாகவே இருக்கும். ஒன்று அவள் பிரதம மந்திரியாக இருப்பாள் அல்லது உள்துறை மந்திரியாக இருப்பாள். பதவி குறைந்தாலும் காரம் குறையாது.

கண்ணதாசன் கூறுகின்ற மந்திரத்திற்கும், புரோகிதர் கூறுகின்ற மந்திரத்திற்கும், வித்தைக்காரன் கூறுகின்ற மந்திரத்திற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.

வித்தைக்காரன் உச்சரிக்கும் மந்திரம் என்ற வார்த்தைக்கு ‘ஏமாற்றுதல்’ என்று அர்த்தம் என்பதை நான் சிறுவனாக இருந்த போதே அறிந்துக் கொண்டேன்.

எங்களூர் அலங்கார வாசலில், மாங்கொட்டையை கூடையால் மூடி வைத்துவிட்டு “இப்போது மாமரம் முளைக்கும்” என்பான் வித்தைக்காரன். “பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடப் போகிறேன்” என்பான். அவன் சொல்வது எதுவுமே நடக்காது. பாதியில் அங்கிருந்து நழுவவும் பயம், ரத்தம் கக்கி செத்து விட்டால் என்ன செய்வது?

பால்ய வயதில் விஜயலட்சுமி டூரிங் டாக்கீஸில் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படம் பார்த்தது நினைவுக்கு வந்தது. “அண்டா கா கஸம் அபூ கா ஹூகும் திறந்து விடு சீசே” என்றதும் குகைக் கதவு தானாகவே திறப்பது பார்க்க பிரமிப்பாக இருக்கும்.

திறப்பதற்கு மட்டும்தானா மந்திரம்? மூடுவதற்கும் மந்திரம் இருக்கிறது போலும். இதில் “மறைப்பதற்கு ஒன்றும் இல்லை” என்ற கருத்தை வெளிப்படுத்துவதற்காக “இதில் மூடு மந்திரம் எதுவும் கிடையாது” என்று கூறுவது உண்டு.

கண்ணதாசனை நிறைய பேருக்கு பிடித்துப் போனதற்கு காரணம் அவரது வெளிப்படைத்தன்மை. ”ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் பல எண்ணத்தில் நீந்துகிறேன்” போன்ற தனிப்பாடல்களை படிக்கும்போதும், அவரது மனவாசம் போன்ற நூலில் மனதை பறிகொடுக்கும்போதும் அவரிடம் ‘மூடு மந்திரம்’ ஏதுமில்லை என்பதை நம்மால் உணர முடியும்.

‘மந்திரம்’ என்ற வார்த்தைக்கு, ஜெபம், ஸ்லோகம், பாசுரம், முணுமுணுப்பு, குறிக்கோள், இலக்கு, எண்ணம், கொள்கை, ஆலோசனை, அறிவுரை, கருத்து, திறம், நுட்பம், சூழ்ச்சி, சூட்சமம், செய்வினை, அதிரடி நிகழ்வு, என்று அர்த்தங்களை அள்ளி வீசிக் கொண்டே போகலாம். அடேங்கப்பா!. மந்திரத்திற்கு இத்தனை பைபாஸ் ரோடுகளா? என்று நம்மை வியக்க வைக்கும்.

மந்திரம் என்கிற வார்த்தையை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். வாழ்நாள் முழுதும், ஆரம்ப முதல் இறுதிவரை, மந்திரம் நம்மை துரத்தோ துரத்து என்று துரத்துகிறது.

குழந்தை பருவத்தில் பெயர் வைக்கும் போதும், வாலிபப் பருவத்தில் திருமணம் நடக்கும் போதும், இறுதிப் பயணத்தின் போதும் மந்திரங்கள் உச்சரிக்கப் படுகிறன.

“சர்வ மாங்கல்ய மாங்கல்யே, சிவே சர்வாத சாதிகே” என்ற வேதமந்திரம் இந்து மதத்தில் ஒரு திருமண பந்தத்தை உருவாக்கி விடுகிறதே?

படுக்கைக்கு போகும் போதும், பயணத்தின்போதும், பயம் வரும்போதும். பயன் அடைய வேண்டியும் மனிதன் மந்திரத்தை உச்சரித்த வண்ணம் இருக்கிறான்.

உயிரோடு இருக்கும்போது மட்டுமா? இறந்து போன பிறகும் மந்திரம் துரத்துகிறது. மந்திரம் ஓதாத திதி, திவசம் இருக்கிறதா என்ன?

தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்து வந்தபோது அறிஞர் அண்ணா அவர்கள் நாத்திகமா? ஆத்திகமா? என்று குழம்பிக் கொண்டிருந்த வேளையில், 63 நாயன்மார்களில் ஒருவரான திருமூலரின் “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்ற வாக்கினை மூலமந்திரமாக ஏற்று தன் அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். “கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற மூன்று வார்த்தை மந்திரம் அவருடைய தாரக மந்திரமாக திகழ்ந்தது.

“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்; அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்” – இது புரட்சித் தலைவருக்கு புகழை ஈட்டித் தந்த பாடல் வரிகள். அந்த மூன்றெழுத்து மந்திரம் “அண்ணா” என்ற மூன்றெழுத்தா? அல்லது அப்போது அவர் சார்ந்திருந்த “தி.மு.க.” என்ற மூன்றெழுத்தா? ‘M.G.R.’ என்ற அவரது ஆங்கில மூன்றெழுத்தா? ‘உயிர்’ என்ற மூன்றெழுத்தா? இதுநாள்வரை சர்ச்சைக்குரிய விவாதமாகவே இது இருந்து வருகிறது.

கழகக் கண்மணிகளில் ஒருவரான நாஞ்சில் மனோகரனின் கையில் எப்போதும் ஒரு கருப்புக்கோல் இருக்கும். எந்த ஒரு ‘லாஜிக் இல்லா மேஜிக்கை’யும் செய்யாமலேயே “மந்திரக்கோல் மைனர்” என்ற பெயரைப் பெற்றார்.

உலகம் முழுவதும் காதல் சாம்ராஜ்யத்தின் மூன்றெழுத்து மந்திரமொன்று இருக்கின்றதென்றால் அது “ஐ லவ் யூ” என்ற மந்திரம்தானே? மோனலிசாவின் அந்த ‘மந்திரப் புன்னகை’தானே லியோனார்டா டா வின்சிக்கு புகழைத் தேடித் தந்தது?

ஒளவைப் பாட்டியின் மிகச் சிறந்த வாக்குகளில் ஒன்று “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை”. தகப்பனின் அறிவுரையை விட தலைச்சிறந்த அறிவுரை தரணியில் கிடையாது என்பதே இதற்குப் பொருள். தமிழில் “பாட்டி சொல்லே மந்திரம்” என்ற பழமொழி உள்ளது. அந்த பாட்டி ஒளவைப் பாட்டியாகவும் இருக்கலாம் அல்லது சீதாப்பாட்டியாகவும் (திருமதி. அப்புச்சாமி) இருக்கலாம்.

ஒளவை ஓதும் மந்திரத்திற்கும், கண்ணதாசன் பாடும் மந்திரத்திற்கும், உபநிசதம் கூறும் மந்திரத்திற்கும் வேறுபாடு இப்போது புரிந்திருக்குமே?

மாயஜாலம் புரிபவர்கள் மேடையில் தோன்றி தங்கள் திறமையை வெளிக்காட்டும் வியாபாரத் தந்திரமாக சில முழக்கங்கள் வைத்து இருப்பார்கள். “சூ! மந்திரக்காளி”யில் ஆரம்பித்து “ஓம் ரீம் ஜீம்” “ஜீ பூம்பா!” “abraka babra” வரை எத்தனையோ மந்திரங்கள் நமக்கு அத்துப்படியோ இல்லையோ நம் குழந்தைகளுக்கு அத்துப்படி. ஒவ்வொரு ‘மேஜிக் ஷோ’ நிகழ்ச்சியின் போதும் “Tell me the Magic Word” என்று குழந்தைகளை பார்த்துத்தானே அந்த மேஜிக் நிபுணர் கேட்கிறார்?

மாந்திரீகம் வேறு. மந்திரம் வேறு. முன்னது மாயம் சம்பந்தப்பட்டது, பின்னது மனது சம்பந்தப்பட்டது. மாய மந்திரத்தின் போலித்தன்மையை உணர்த்தவே “மந்திரம் கால்; மதி முக்கால்” என்ற பழமொழியை நம் முன்னோர்கள் அன்றே எழுதி வைத்தார்கள்.

“மந்திரவாதி மண்ட்ரக்” குறும்புச் சித்திரங்கள் எல்லாம் இன்று வந்ததுதானே? மாயஜாலக் கதைகளுக்கு முன்னோடிகள் என்றால் அராபியர்களைத்தான் சொல்ல வேண்டும். “1001 அராபிய இரவுகளை” மொழிபெயர்த்து இலக்கியமாக்கிய பெருமை மேலைநாட்டினரைச் சேரும்.

மந்திர விளக்கும், மந்திரக் கம்பளமும், மாயக்கண்ணாடியும் அவர்களின் கற்பனையில் உதித்ததுதானே? சாய்பாபாவையும், அசாருத்தீனையும் அறியாதவர்கள் கூட நம்மில் இருக்கக்கூடும். அலிபாபாவையும், அலாவுத்தீனையும் அறியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.

இன்றல்ல நேற்றல்ல, மூஸாநபி காலத்திலிருந்தே (Prophet Moses) மந்திரவாதிகள், மாயஜால வித்தை என்ற பெயரில் மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நெடுநாட்களாக என் மண்டையை குடையும் கேள்வி இது. மாந்திரீகத்திற்கும் எலுமிச்சைப்பழத்திற்கும் என்ன சம்பந்தம்? எத்தனையோ பழங்கள் இருக்கையில் இதை மட்டும் குறிப்பாக ஏன் இவர்கள் Trade Mark-ஆக தேர்ந்தெடுத்தார்கள்? சப்போட்டா பழத்தையோ, அன்னாசி பழத்தையோ வைத்து மந்திரம் செய்வதை கேள்வி பட்டிருக்கிறீர்களா? நம் வீட்டு வாசற்படியில் யாராவது ஒரு எலுமிச்சைப் பழத்தையும் ஒரு சிவப்பு மிளகாயையும் வைத்து விட்டுப் போனால் நமக்கு உதறல் எடுத்து விடுகிறது.

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு தாரக மந்திரம் உண்டு. தொண்டர்களை தன் கட்சியின்பால் ஈர்ப்பதற்கு இந்த முழக்கங்கள்தான் முதலில் சென்று அவர்களை அடைகின்றன.

மந்திரம் இறைப்பற்றாளனை ஆன்மீக உலகுக்கு கொண்டு செல்லும் பயண அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. “The mind expands, deepens and widens and eventually dips into the essence of cosmic existence” என்று கூறுகிறார் ஒரு ஆங்கில அறிஞர்.

மனநிலையை ஒருமைப் படுத்தி சொல்லவொணா ஒரு அதிர்வலையை உண்டாக்கக் கூடிய ஒரு சக்தி மந்திரத்திற்கு உண்டு. மந்திரத்தின் மகிமையை வார்த்தையால் விவரிக்க முடியாது. உணரத்தான் முடியும்.

சூடு என்றால் என்னவென்றே அறியாத ஒரு குழந்தையிடம் “அந்த சட்டியைத் தொடாதே. அது சுடும்” என்று சொன்னால் அதனால் புரிந்துக் கொள்ள இயலுவதில்லை. என்றாவது ஒருநாள் கொதிக்கும் சட்டியைத் தொட்டு கையை உதறிக் கொள்ளும்போதுதான் சூட்டின் தாக்கத்தை அதனால் புரிந்துகொள்ள முடிகிறது. மந்திரமும் அப்படித்தான்.

பைபிளில் வரும் ஒரு வசனம் நம்மை ஈர்க்கிறது. “In the beginning was The word. And The Word was with God and The Word was God” – (The New Testament, Gospel of John)

அந்த வார்த்தை என்னவாக இருக்கக் கூடும்?

“உண்டாகுக” (குல்) என்று இறைவன் ஆணையிட்டதும் அண்ட சராசரங்கள் உருவானதாக திருக்குர்ஆன் சொல்கிறதே? அந்த வார்த்தைதானோ?

பரமபிதா, பரஞ்சோதி, மூலவன், அல்லாஹ் என்று அழைக்கப்படும் ஏக இறைவனின் மூல மந்திரத்தைத்தான் பைபிள் இப்படி குறிப்பிடுகின்றதோ?

இந்து சமயத்தின் நான்கு வேதங்களும் மந்திரத்தின் மகிமையைத்தான் போதிக்கின்றன. பெளத்த மதத்தின் அடிப்படை தத்துவமே மந்திரம்தான்.

சூஃபிகளும், துறவிகளும், இறைநேசர்களும் பரம்பொருளை தேடுதற்கு மந்திரத்தின் துணையைத்தான் நாடினார்கள். அதனை தியானம், ‘திக்ரு’, தவம் என்று வெவ்வேறு பெயரில் அழைத்தாலும் செயல் ஒன்றுதான்.

“உருளைகள்” என்ற தலைப்பில் ‘எழுத்துக்கூடம்’ என்ற யாஹூ குழுமத்தில் நானெழுதிய பின்வரும் கவிதையொன்று எனக்கு பாராட்டைப் பெற்றுத் தந்தது.

“தவசு மணி, ருத்திராட்சம், ஜப மணி, ஜப மாலை, மிஸ்பாஹ், தஸ்பீஹ், ப்ரேயர் பீட்ஸ், ரோசரி. பெயர்கள் வெவ்வேறு; நோக்கம் ஒன்றே! உருளைகள் – கனத்தை இலகுவாக்கி, சுலபமாய் ஓட வைக்கிறதாம். இது நியூட்டன் விதி. இந்த உருளைகள், மனிதனை இறைவன்பால் உருட்டி விடுகிறது. முன்னது நியூட்டன் விதி. பின்னது ஆன்மீகத் துதி.”

தலாய் லாமா எழுதி ஜெஃப்ரி ஹாப்கின்ஸ் மொழிபெயர்த்த ‘காலச்சக்கர தந்திரம்’ (Kalachakra Tantra) என்ற நூலில் “மந்திரத்தின் துணையின்றி பெளத்த துறவி நிலையை அடையவே முடியாது என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்.

ஏக இறைவனை அடைவதற்கு இஸ்லாம் ஒரு தாரக மந்திரத்தை போதித்திருக்கிறது. இஸ்லாத்தின் கோட்பாட்டின்படி ஆதி தீர்க்கதிரிசி முதல் இறுதி தீர்க்கதரிசிவரை ஒரே ஒரு தாரக மந்திரத்தைத்தான் போதித்து வந்திருக்கிறார்கள். அது “There is no God but Allah” என்பதே அது.

அல்லாஹ் என்பது முஸ்லீம்களின் பிரத்யேகக் கடவுள் என்பது பலரது தவறான எண்ணம். அல்லாஹ் என்றால் அரபு மொழியில் ஏக இறைவன் என்று பொருள். அரபுமொழி பேசும் கிருத்துவரும் சரி, யூதரும் சரி “இறைவன் நாடினால்” என்று சொல்வதற்கு “இன்ஷா அல்லாஹ்” என்றுதான் சொல்வார்கள். (தனக்கு பிடித்த வாக்கியம் இது என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் அடிக்கடி கூறுவதுண்டு)
“God” என்று சொல்லுவதை விட அல்லாஹ் என்று சொல்லவே முஸ்லீம்கள் விரும்புவார்கள். காரணம் இஸ்லாத்தின் அடிப்படையில் இறைவனுக்கு ஆண்பால் பெண்பால் குறியீடு இல்லை. “God” என்பதற்கு “Goddess” என்ற பெண்பால் பதம் இருக்கிறது. God Mother, God Father என்ற வார்த்தைகளும் உண்டு. இறைவன் யாரையும் பெறவும் இல்லை, பெறப்படவும் இல்லை என்று கூறுகிறது இஸ்லாம்.

“நா தஸ்ய ப்ரதிமா அஸ்தி” – அவனுக்கு ஈடு இணையில்லை (Yajurveda 32:3) [Yajurveda by Devi Chand M.A. page 377]

“நா கஷ்ய கஸ்ஸிஜ் ஜனித நா கந்திப்பாஹ்” – அவனுக்கு பெற்றொரும் இல்லை, மேலோனும் இல்லை (Svetasvatara Upanishad 6: 9) [The Principal Upanishad by S. Radhakrishnan page 745] [Sacred Books of the East, volume 15, ‘The Upanishads part II’ page 263.]

வேதங்களிலேயே மிகப் பழமையானதாகக் கருதப்படும் ரிக்வேதம் இவ்வாறு கூறுகிறது. “இறைஞானிகள் ஓரிறைவனை பல பெயர்களால் அழைக்கிறார்கள்”. (ரிக்வேதம் 1:164:46)

ரிக்வேதத்தில் (Book II hymn 1 verse 3) இந்துமதம் அந்த இணையிலா ஏகனை ‘பிரம்மா’ என்றழைக்கிறது. பிரம்மா என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு Creator, படைப்பாளி, அரபு மொழியில் காலிக் (Khaaliq) என்று பொருள்.

மற்றொரு இடத்தில் ‘விஷ்ணு’ என்ற அடைமொழியில் இறைவனை வேதம் அழைக்கிறது. விஷ்ணு என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு Sustainer, தாங்குபவன், நிலைநிறுத்துபவன். அரபு மொழியில் ‘ரப்’ என்று பொருள்)

அற்புதத் தன்மைகள், இறைப்பண்பு கொண்ட ஒரு சக்தியை பலப்பல பெயர்களிலே அழைப்பது சிறப்புதானே? இஸ்லாத்திலே 99 அழகிய திருநாமங்களைக் (அஸ்மாவுல் ஹுஸ்னா) கொண்டு அழைக்கின்றார்கள்.

ஒவ்வொரு முஸ்லீமுடைய இறுதி ஆசை என்னவெனில் அவனது உயிர் பிரியும்போது “லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்ற வேத மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பதாகவே இருக்கும்.

வேத மந்திரங்களில் நாம் அறியாத அருஞ்சொற்பொருள்கள் ஆயிரம் உள்ளன. ஆராய்ந்தால் மந்திரத்தின் மகிமைகள் ஒவ்வொன்றாய் நமக்கு புரிய வரும்.

சித்தர்களில் ஒருவரான சிவ வாக்கியாரின் வரிகளை இங்கு குறிப்பிடுதல் அவசியமாகிறது. மந்திரம் பற்றிய அவரது கருத்தினை கவனியுங்கள்

“நட்ட கல்லை தெய்வ மென்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணுமொ ணென்று சொல்லும் மந்திரங்க ளேதடா!
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளி ருக்கையில்?
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?”

ஒருவன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் ஏதேனும் ஒரு மந்திரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு மாணவனுக்கு டாக்டர் ஆக வேண்டுமென்ற பேராவல் இருக்கின்றதென்றால் அதுவே அவனது தாரக மந்திரமாக இருத்தல் வேண்டும்.

பெரியோர்களிடம் ஆசி பெறுகையில் “நீ நல்லா இரு” என்று கூறுவார்களே அந்த மந்திர வார்த்தைக்கு ஈடு இணை ஏது?

அசரீரி வெளியிலிருந்து உள்ளே கேட்கும், மந்திரம் உள்ளிலிருந்து வெளியே கேட்கும். மந்திரம் மனதுக்குள் மின்சாரம் பாய்ச்சவல்லது. மந்திரம் ஆற்றலை பெருக்கக் கூடியது. அது பிரார்த்தனையின் கிரியாவூக்கி. அலைபாயும் மனதை ஒன்றுபடுத்தும் குழியாடி. ஆன்மீக பவனியின் பல்லாக்கு. அதற்கு எடையில்லை. ஆனாலும் அது உச்சரிப்பவனை சுமந்துச் செல்கிறது. இறக்கைகள் இல்லாமலேயே உயரப் பறக்கிறது. உள்ளத்தை உருக்குகிறது, ஒத்தடம் கொடுக்கிறது. உசுப்பியும் விடுகிறது. மந்திரம் உள்ளத்தை கழுவும் சவுக்காரம். அகற்றிடும் அகங்காரம்.

மந்திரங்களை போதிக்காத மதங்களோ மார்க்கங்களோ உலகில் இருக்க முடியாது. மந்திரங்களை பரிகசிக்கும் நாத்திகக் கொள்கை உடையவர்கள் கூட மந்திரங்களை கூறத்தான் செய்கிறார்கள். “என்னய்யா உளறுகிறீர்?” என்கிறீர்கள். அப்படித்தானே?

“கடவுள் இல்லை. இல்லவே இல்லை. கடவுளை நம்புபவன் காட்டு மிராண்டி” என்ற அவர்களது தாரக மந்திரமும் ஒரு மந்திரம்தானே?


vapuchi@hotmail.com

Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்