மடியில் நெருப்பு – 30

This entry is part [part not set] of 32 in the series 20070322_Issue

ஜோதிர்லதா கிரிஜா30.

விபரீதமான ஒரு நிலைக்குத் தங்கள் உறவு போகப் போகிறது என்கிற கசப்பான எதிர்பார்த்தலில் இதயம் கனத்துப் போய் உட்கார்ந்து கொண்டிருந்த சூர்யாவை ராஜாதிராஜனின் அதிர்வேட்டுச் சிரிப்பு அதிர்ச்சியிலும் திகைப்பிலும் ஆழ்த்தியது. ‘அட, முட்டாள் பெண்ணே! எவ்வளவு தப்பான கேள்வியைக் கேட்டுவிட்டாய்!’ என்கிற தொனியில் அந்தச் சிரிப்பு வெளிப்பட்டதாக எண்ணிய சூர்யா கண்ணிமைக்காமல் அவனைப் பார்ததபடி இருந்தாள்.

சிரிப்பதை நிறுத்திய ராஜாதிராஜன், குறும்புத்தனம் நிறைந்த புன்சிரிப்புடன், “எனக்குத் தெரியாமயே எனக்குக் கல்யாணம் ஆயிடிச்சாமா?” என்று கேட்டுவிட்டு மறுபடியும் வாய்விட்டுச் சிரித்தான். அவள் பேசாதிருந்தாள்.

“என்ன பேத்தல்! யாரு அந்த மடப்பொண்ணு? . . . சரி. நான் வெறுமனே, ‘எனக்குக் கல்யாணம் ஆகல்லே’ அப்படின்னு மட்டும் மொட்டையா இந்தக் கேள்விக்குப் பதில் சொல்றது சரியா யிருக்காது. உனக்கு ஆதாரம் வேணும். அவ்வளவுதானே? நாளைக்கு சாயந்தரம் இதே நேரத்துலே நாம சந்திக்கிறப்போ நான் அதுக்கான ஆதாரத்தை எடுத்துக்கிட்டு வர்றேன். சரியா?”

“கல்யாணம் ஆனதுக்கு வேணும்னா ஆதாரம் காட்ட முடியும். ஆகாததுக்கு எப்படி ஆதாரம் காட்டுவீங்க?” என்ற சூர்யா புன்னகையற்ற முகத்துடன் அவனைப் பார்த்தாள். அவளது குரலில் முதலில் ஒலித்த படபடப்பு இப்போது பெருமளவுக்குக் குறைந்திருந்த போதிலும், அவளது முகத்தில் படிந்திருந்த இருள் குறையவில்லை என்பதை அவன் கவனிக்கவே செய்தான்.

“பொறுத்திருந்து பாரேன்! பாத்துட்டு, அதுக்கு அப்புறம் பேசு! அது என்ன ஆதாரம், என்ன, ஏதுன்ற விஷயத்தை யெல்லாம் இப்ப நான் சொல்ல மாட்டேன்! நீ என் மேல இவ்வளவு கேவலமா சந்தேகப் பட்டுக் கேள்வி கேட்டுட்டது என்னை ரொம்பவே வேதனைப் படுத்திடுச்சு. . . ஆனாலும் பரவால்லே. ஒரு பொண்ணுன்ற முறையிலே நீ அப்படித்தான் நடந்துப்பேன்றதுனால என்னை நானே சமாதானப் படுத்திக்கப் பாக்கறேன். . .சூர்யா! என்னை நம்பு. உன்னைக் கண்ட நிமிஷத்துலேர்ந்து நான் தவியாத் தவிச்சிட்டிருக்கேன்! கிட்டத் தட்ட ஒரு பைத்தியக்காரன் மாதிரி ஆயிட்டேன். நீ இல்லாம என்னால உயிர் வாழவே முடியாதுன்ற நிலைமைக்கு வந்துட்டேன். . .என் உயிருக்கு உயிரான உன்னை நான் ஏமாத்தவே மாட்டேன், சூர்யா! இருபத்து நாலு மணி நேரமும் சூர்யா, சூர்யா, சூர்யான்னே புலம்பிட்டிருக்கிற என் மனசிலே உன்னைத் தவிர வேற யாருக்குமே இடம் கிடையாது, சூர்யா! உனக்கு என் மேலே நம்பிக்கை ஏற்பட்ற வரைக்கும் நாம சந்திக்க வேண்டாம். ஏன்னா, மனசிலே அவநம்பிக்கையைச் சுமந்துக்கிட்டு உன்னால என்னோட இயல்பாப் பழக முடியாது. . .அதனால, . . இப்படி ஒரு ஓரமா நான் காரை நிறுத்தறேன். நீ இறங்கிக்க. நாளைக்கு நான் ஆதாரத்தோட வர்றேன். ஆனா நாளைக்குத் தவறாம வா. . .”

ராஜாதிராஜன் காரின் விரைவைக் குறைத்தான்.

“நாளைக்கும் எனக்குப் பெர்மிஷன் குடுக்க மாட்டாங்க. அதனால அஞ்சு மணிக்குத் தான் கிளம்ப முடியும். ஓவர்டைம், அதனால லேட்டாகும்னு வீட்டில சொல்லிட்றேன்.”

“சரி”

காரை அவன் ஓரங்கட்ட, கலங்கிவிட்ட விழிகளைத் தேய்த்தபடி சூர்யா இறங்கினாள்.

“ . . . சூர்யா! ‘ நான் உங்களை நம்பறேன். நீங்க நாளைக்கு ஆதாரம் கொண்டு வர்றதெல்லாம் இருக்கட்டும். நாம இன்னைக்குக் கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாம்’ அப்படின்னு நீ சொல்லியிருந்தா நான் சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனா நீ சொல்லல்லே பரவால்லே! ஆனா நாளைக்குக் கண்டிப்பா வா. . .”

கார்க்கதவை அடித்துச் சாத்திய அவளிடம் இவ்வாறு கூறிப் புன்னகை செய்த பின், அவன் காரைக் கிளப்பிக்கொண்டு போனான். பேருந்து நிறுத்தத்துக்கு அருகே அவன் காரை நிறுத்தியதால் அவள் அதை நோக்கி நடந்தாள். ‘சுகன்யாவின் சிநேகிதி சொன்னது ஒருவேளை தப்பான தகவலோ?’ என்று நினைத்தாள். அப்படி இருந்தால், ராஜாதிராஜனின் மனம் புண்பட்டுப் போயிருக்குமே என்னும் கேள்வியால் அவளுக்கும் வருத்தமாக இருந்தது.

அச்செய்தி பொய்யாக இருப்பின், அவனும் ரோசக்காரனாக இருந்தால், ‘சர்த்தான், போடி!’ என்று தனக்கு ஒரேயடியாய்த் தலை முழுகிவிடுவானோ எனும் கேள்வியும் அவள் மனத்தில் எழுந்த போது கண்டெடுத்த பெரும் புதையல் கைநழுவிப் போவது போன்ற துயரம் அவளைக் கவ்விக்கொண்டது. கண்களின் கலக்கத்தைச் சமாளித்த படி அவள் நடந்தாள்.

. . . ராஜாதிராஜன் தன் காரைப் புகைப்படத் தொழிலகத்தின் முன் நிறுத்தி, இறங்கி உள்ளே போனான். தனது இயல்பான தோற்றத்தில் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்ட அவன் பின்னர் டென்னிஸ் விளையாட்டு உடையில் வலப்புறம் வகிடு எடுத்து வாரிக்கொண்டு கண்களை அளவுக்கு அதிகமாக விரித்துவைத்த நிலையில் மற்றொரு படம் எடுத்துக்கொண்டான். பின்னர் இரண்டு படங்களையும் ஒருங்கிணைத்து இரண்டு பேர் ஒட்டி உரசிக்கொண்டு நிற்பது போல் ஒரே படமாக அதை எடுக்கப் பணித்தான். மறு நாள் பிற்பகல் மூன்று மணிக்கு வருவதாய்ச் சொல்லிவிட்டுக் காரில் ஏறினான்.

அவன் வீட்டை யடைந்த போது ஜகந்நாதன் ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.

“உடம்பு இப்ப எப்படிப்பா இருக்கு? மருந்து சாப்பிட்டீங்களா?”

“சாப்பிட்டேம்ப்பா. . . ராஜா! அதுசரி, உனக்கு லண்டன்லே யாரையாவது தெரியுமா?”

“ஏம்ப்பா? என்ன விஷயம்?”

“நம்ம லில்லியுடைய தங்கச்சிக்கு லண்டன் பையன் ஒருத்தனைப் பாத்திட்டிருக்கிறதா அன்னிக்கு சொல்லிச்சில்லே, லில்லி? லண்டனுக்கு ·போன் பண்ணிக் கேட்டாச்சாம் அவங்க சித்தி. இருந்தாலும் நாமளும் விசாரிச்சா நல்லதேன்னு தோணிச்சு. அதான். மொல்லமாரிப் பசங்க நாட்டிலே ஜாஸ்தியாயிட்டிருக்காங்கல்லே? வேற எவனாச்சும் ‘அந்த சேதுமாதவன் நான் தான்’னு சொல்லி மோசடி பண்ணிட்டா என்ன பண்றதுன்னு அது பயப்படுது. ஏற்கெனவே லண்டன்லேயும் ஒரு பொண்டாட்டி இருக்கலாமில்லே?”

ராஜாதிராஜனின் கண்கள் உடனே தாழ்ந்தன. மறு கணமே சமாளித்து அவற்றை உயர்த்தி, “லண்டனுக்கு ·போன் பண்ணினப்போ அவன் கல்யாணம் ஆனவனா இல்லியான்னும் கேட்டிருக்கலாமே?” என்றான்.

“கேட்டாச்சாம். அவன் கல்யாணத்துக்குப் பொண்ணு தேடுறதுக்குத்தான் இந்தியாவுக்குப் போயிருக்கிறதாச் சொன்னாங்களாம். இருந்தாலும், அதே சேதுமாதவன்தான் இவன்கிறதை ஆதார பூர்வமா எப்படித் தெரிஞ்சுக்கிறது? காலம் அப்படிக் கெட்டுக் கிடக்குப்பா! லில்லிக்குக் கொஞ்சம் சந்தேகமா யிருக்கு. தனக்கு இன்னும் கல்யாணமே ஆகல்லேன்னு சொல்லி அப்பாவிப் பொண்ணுகளை ஏமாத்துற அயோக்கியப் பசங்க ஜாஸ்தி யாயிட்டிருக்காங்க!”

ராஜாதிராஜனின் இமைகள் இரண்டாம் தடவையாகத் தாழ்ந்தன. இம்முறை அவனால் சமாளிக்க முடியவில்லை. அவன் பதில் சொல்லாமல் குனிந்து காலுறைகளைக் கழற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டான்.

“என்ன ராஜா, யோசனை? நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதிலே சொல்லல்லியே?”

“லண்டன்லே யாரையும் எனக்குத் தெரியாதுப்பா.”

“உன்னோட படிச்சவன் ஒருத்தன் லண்டன்ல இருக்கிறதா சொல்லுவியே?”

“அவன் இப்ப ஸ்டேட்ஸ்ல இருக்காம்ப்பா.” – பதில் சொல்லிக்கொண்டே அவன் குளியலறை நோக்கி நடந்தான். ‘தண்டபாணி சிபாரிசு பண்ணின பையன் என்றால், அதில் கண்டிப்பாக ஏதேனும் சூது இருக்கும்’ என்று அவனுக்குத் தோன்றியது. விபசார விடுதி, கள்ளக் கடத்தல், போதை மருந்து வியாபாரம் ஆகிய தொழில்களை அவன் செய்துவருவது தெரிந்த சங்கதிதான். ஆனால் இப்போது புதிதாய்த் திருமணத் தரகர் வேலை வேறு செய்யத் தொடங்கி யிருக்கிறான் என்றால் அதிலும் கட்டாயம் ஏதோ தில்லு முல்லு இருக்கும் என்று அவனுக்குத் தோன்றிற்று. மணமகனுடன் ஒருவேளை மும்பை, கொல்கத்தா என்று புறப்பட்டுப் போய் அங்கே மணப்பெண்ணை விற்று விடுவானோ என்னும் ஊகம் அவன் மனத்தில் எழுந்தது. இருமுறை தொலைபேசியில் பூடகமாய்த் தன்னோடு பேசி வம்பில் மாட்டிவைக்கப் பார்த்த அவனது முயற்சி நினைவுக்கு வர, ‘இரு, இரு!’ என்று தனக்குள் கறுவிக்கொண்டான். ‘நீ என்ன தொழில் செய்தாலும் அதிலே நேரடியாக நான் சம்பந்தப்படுவதே இல்லை! நான் பணம் கொடுப்பதோடு சரி. வழக்கு என்கிற ஒன்றைச் சந்தித்தாலும் நான் எப்படியும் விடுபட்டுவிடுவேன்! மாட்டிக்கொள்ளப் போவது நீ தான்! உன்னை எச்சரித்துக் காப்பாற்றலாம் என்று பார்த்தால் என்னையேவா நீ மாட்டிவிடப் பார்க்கிறாய்? இரு, இரு!’ என்று சொல்லிக்கொண்டான்.

. . . மறு நாள் தண்டபாணி அவனைத் தொலைபேசியில் அழைத்தான்.

“இத பாரு, தண்டபாணி! எதுவானாலும் நேர்ல வா,” என்ற ராஜாதிராஜன்

அவனை ஒரு நிமிடங் கூடப் பேசவிடாமல் ஒலிவாங்கியை வைத்துவிட்டான்.

பதினொரு மணிக்குத் தண்டபாணி அவனது அலுவலகத்துக்கு வந்தான். நிதானமாகப் பேசுவதற்காகவும் தன் அலுவலகத்தினர் செவிகளில் ஓரிரு சொற்கள் கூட விழக்கூடா வென்பதற்காகவும் ராஜாதிராஜன் அவனை எதிர் ஓட்டல் ஒன்றுக்கு அழைத்துப் போனான். இருவரும் ஒதுக்குப் புறந்தேடி உட்கார்ந்து காப்பிக்குப் பணித்த பின் பேசலானார்கள்.

“என்ன, தண்டபாணி! என்ன சமாச்சாரம்? இப்பல்லாம் ·போன்ல ஒரு மாதிரியான வார்த்தைகளை உபயோகப் படுத்துறியே? என்னாச்சு உனக்கு?” என்று ராஜாதிராஜன் எடுத்த எடுப்பிலேயே பட்டென்று போட்டு உடைத்தான்.

தண்டபாணி சிரித்து விட்டு, “நீ ரொம்பவுந்தான் கெட்டிக்காரன்னு நினைச்சுக்காதே! நான் மனசு வெச்சா உன்னையும் மாட்டி வைக்க முடியும், ராஜா!” என்றான்.

இப்போது நேரில் வந்து தன்னோடு பேச்சுக்கொடுக்கும் நேரத்திலும் தண்டபாணி தன் கால் சராய்ப் பையில் ஏதேனும் நுணுக்கமான ஒலிப் பதிவுக் கருவியை வைத்துக்கொண்டிருப்பானோ எனும் ஐயம் மனத்தில் உதிக்க, ராஜாதிராஜன் உஷாரானான்.

“இத பாரு, தண்டபாணி! நீ எங்கிட்ட அடிக்கடி கடன் கேட்டு வாங்கிக்கிறே. நானும் பல நாள் நண்பனாச்சேன்னு குடுத்துக்கிட்டே இருக்கேன். நீயும் அப்பப்ப திருப்பிக் குடுத்துக்கிட்டு இருக்கே. மத்தப்படி நீ என்ன தொழில் செய்யிறியோ, என்ன எழவோ, யாருக்குத் தெரியும்? நேத்துக்கூட என்னென்னவோ ஏடாகூடமால்லாம் பேசினே! ஒருக்கா, உன் தொழில்லே என்னையும் மாட்டிவிட்டா எங்கப்பாவுடைய செல்வாக்கை வெச்சுத் தப்பிக்கலாம்னு நினைக்கிறியோ என்னவோ!. . . அத்த விடு. போலீஸ்ல உன்னைக் கையும் களவுமாப் பிடிக்கிறதுக்கு சமயம் பாத்துக்கிட்டு இருக்காங்களாம். ரொம்ப உயர் மட்டத்து அதிகாரி ஒருத்தரு அப்பா கிட்ட சொல்லியிருக்காரு. உன்னோட சேந்து தப்புத் தண்டாக் காரியமெல்லாம் செய்யாட்டியும் உன்னோட பழகிக்கிட்டு இருக்கிற ஒரே காரணத்துக்காக எந்த வம்பிலேயும் நான் தேவையில்லாம சம்பந்தப்படக் கூடாதுன்றது எங்கப்பாவுடைய கவலை.”

தண்டபாணி குபீரென்று சிரித்தான். பணியாள் வந்து காப்பியை வைத்துவிட்டுப் போனார்.

அவரது தலை மறைந்ததும், “ இப்ப எதுக்குச் சிரிச்சே?” என்று ராஜாதிராஜன் எரிச்சலாய்க் கேட்டான்.

“உனக்கு என் மேல என்னவோ சந்தேகம் வந்திருக்குன்னு நினைக்கிறேன்! இப்ப நாம இங்கே வந்திருக்கிறது மனசு விட்டுப் பேசறதுக்குத்தான். ஒளிச்சு ஒளிச்சுப் பேசுறதுக்காக இல்லேப்பா. நான் ஏதாச்சும் மைக்ரோ ரெகார்டரை ஒளிச்சு வச்சுக்கிட்டு நீ சொல்றதையெல்லாம் டேப் பண்ணிக்கிட்டிருக்கேனோன்னு உனக்கு என் மேல சந்தேகம்! அதான், உன் வாயிலேர்ந்து உருப்படியா ஒரு வார்த்தை கூட உதிர மாட்டேங்குது! ஒண்ணு பண்ணு. நீ வேணும்னா என்னை அக்கு வேற ஆணி வேறயா சோதனை போட்டுடு மொதல்லே. அதுக்கு அப்பால பேசுவோம். என்ன சொல்றே?”

ராஜாதிராஜனுள் வியப்பு எகிறியது. எனினும் அவன் தண்டபாணியை நம்பத் தயாராயில்லை. “சரி, வா. பாத் ரூமுக்குப் போலாம்!” என்றவாறு எழுந்து நின்றான்.

“அடப்பாவி! அப்ப நீ என்னை நம்பலையா? நான் நினைச்சது சரியாத்தான் போச்சு! “ என்ற தண்டபாணியும் எழுந்தான்.

இருவரும் அருகே இருந்த குளியலறை நோக்கி நடந்தார்கள்.

jothigirija@vsnl.net –
தொடரும்

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா