மகாத்மா காந்தி செய்யாதது !

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

சி. ஜெயபாரதன், கனடா


ஒரு குலத்துக் கொருநீதி சொல்லும்
மனுநீதி !
அவரவர் மலத்தை
அவரவர் அள்ள வேண்டு மென
தவறாது செய்தவர் காந்தி !
அதற்கோர் இனத்தை அமைத்து
வளர்த்தவர் யார் ?
அடிமை நாட்டுக்குச்
சுதந்திர
ஆத்மாவை அளித்தார்
தேசப் பிதா !
சுதந்திரத்தை ஆயுதமாய்த் தீட்டி
கயவர் கூட்டம்
காயப் படுத்தினால்,
எவரது கடமை
எளியோரைக் காப்பது ?
சுட்டுக் கொலை யான
சுதந்திரப் பிதாவா ?
மதாதி பதிகள் போல
மடிப்புக் கலையா
உடுப் பணிய வில்லை காந்தி !
கிரீடம் அணிந்து
மெர்ஸிடஸ் பென்ஸ் வாகனத்தில்
புல்லட் நுழையா அரணில்
ஊருலாச்
செல்ல வில்லை !
அரை வேட்டிக் கந்தனாய் அலைந்து
மதப் போர்களை நிறுத்திய
ஏசு நாதர் அவர் !

ஐயாயிரம் ஆண்டுகளாய்
இன வகுப்புகள்
மனுநீதி மண்ணில்
புற்று நோயாய்ப் பெருகின!
இனப் போர்களைத் தடுக்க
மாண்டு போன மகாத்மா
தூண்ட வில்லையாம் !
செவியில் விழுந்தாலும்
சேற்றிலே போயின, காந்தியின்
அகிம்சா மொழிகள் !
வெறுப்பு விஷக் கிளைகள்
விழுதுகளாய்
வேர் விடும் பாரதத்தில் !
சட்டமும், சமூகமும் பிடித்துத்
தண்டிக்க வேண்டும்,
குண்டர்களை !
தென்னாப் பிரிக்காவில்
காந்தி ஆரம்பித்து
நெல்சன் மாண்டலா எதிர்த்த
நிற வெறிக்கு நிகரில்லை !
வெள்ளை அமெரிக்கா அதுபோல்
கருப்பு மக்களை
அடிமைப் படுத்திய
நரக வாழ்வை
நாவால் சொல்ல முடியாது !
காந்தியார்
கீழிருந் தோரை
மேல் தூக்கி வந்தார்!
கருப்புத் துண்டுகள்
மேலிருந் தோரை இழுத்துக்
கீழே தள்ளின !

காந்தியின் பணி தேச விடுதலை !
தனிநாடு பிரிப்பதாய்
மனிதரை ஏமாற்ற வில்லை !
விடுதலை நாட்டுக்குள் விடுதலை
தேடவில்லை !
வணிகம் பண்ண வந்த
வெள்ளையரை
வெளியேறு என்றார் !
வீட்டுக்குள் ளிருந்த
வெள்ளையரை விரட்ட வில்லை !
இரண்டாம் உலகப் போரில்
துரத்தி விடப் பட்ட
யூதர்கள் போல்
உன்னத வல்லுநர்கள்
கிருஷ்ணனும்,
இராமனும், இராம னுஜனும்
சந்திர சேகரனும்
அந்தோ
வெளியேறி ஓடி விட்டார்
அமெரிக்கா வுக்கு !

************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (Feb 7, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா