போர்வை

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

சந்திரவதனா ,யேர்மனி


சொல்லப் படாது. இந்த மனுசனுக்கு ஒண்டும் சொல்லப்படாது.

அப்பிடித்தான் எப்பவும் நினைக்கிறனான்.

ஆனாலும்….எங்கை…. ? சில நேரத்திலை பொறுமை கெட்டுப் போயிடுது.

எத்தினைக் கெண்டு தான் நானும் பொறுமை காக்கிறுது ?

காலைமை எழும்பினதிலையிருந்து ஆற அமர நேரமில்லை. வேலை.

ம்….கூம் வேலை எண்டு மட்டும் இந்த மனுசன்ரை காது படச் சொல்லக் கூடாது.

உடனை ‘என்னப்பா உனக்கு இஞ்சை வேலை…. ? ‘

‘ஊரிலை மாதிரி என்ன இங்கையும் கல்லிலை அடிச்சு உடுப்புத் தோய்க்கிறியளோ…. ? அல்லது

ஆட்டுக் கல்லிலையும் அம்மியிலையும் அரைக்கிறியளோ…. ? அல்லது அடுப்பைத் தன்னும் பச்சை விறகை வைச்சிட்டு ஊதி ஊதி எரிக்கிறியளோ…. ? ‘ எண்டு பன்மையிலை கேட்கத் தொடங்கீடும்.

எனக்கு வரும் கோவம். ஊரிலை என்ன மிக்சி இல்லையோ ? அல்லது எலெக்றிக் குக்கர்தான் இல்லையோ ? வாய்க்கு வசதியாக ஏதும் சொல்லேலுமெண்டால் எதையும் சொல்லலாமெண்டு நினைக்குது இந்த மனுசன்.

நானும் சொல்லுறதெண்டால் சொல்லுவன்.

‘நீங்கள் மட்டுமென்ன…. ? ஊரிலை எண்டால் சைக்கிளைத்தான் தூக்கிக் கொண்டு வெளிக்கிடுவியள்.

இங்கை எண்டால் கார் இல்லையெண்டால் ஒரு அடி எடுத்து வைக்க மாட்டியள். அது மட்டுமே-விறகு கொத்துறது, தண்ணி அள்ளிக் கொண்டு வாறது…. எண்டு எத்தினை வேலையள் அங்கை உங்களுக்கும். இங்கை அப்பிடியே சாமான்கள் வேண்டுற வேலையையும் பொம்பிளையளின்ரை தலையிலை போட்டிட்டு, நான் என்ரை மனுசிக்கு சுதந்திரம் குடுத்திருக்கிறன் எண்டுவியளே! உங்கடை சுதந்திரக் குடுப்பனவு பற்றி எங்களுக்குத் தெரியாதாக்கும்.

வேலைக்குப் போறதும், சாமான் வேண்டப் போறதும் தான் பெண் விடுதலைக்கான அர்த்தம் எண்டு நீங்களெல்லாருமா ஒரு அகராதியே தயாரிச்சு வைச்சிருக்கிறீங்களே! ‘

ம்….இதையெல்லாம் சொல்லுறதிலை ஏதும் பிரயோசனமிருக்கே! அதாலைதான் நான் எப்பவும் நினைக்கிறதோடை நிப்பாட்டிப் போடுவன். சொல்லுறேல்லை.

சரி அதை விட்டிட்டு இப்ப பிரச்சனைக்கு வருவம்.

நான் காலைமை எழும்பி வரவே போர்வை சோபாவிலை அப்பிடியே குழம்பின படி போட்டுக் கிடக்கு. எனக்கு உடனையே எரிச்சல் வந்திட்டுது. நேற்றிரவு இந்த மனுசன்தான் போர்த்திக் கொண்டு படுத்திருந்து ரிவீ பார்த்துக் கொண்டிருந்தது. எழும்பிப் போகேக்கை போர்வையையும் எடுத்துக் கொண்டு போய் மடிச்சு வைக்கலாம்தானே. அதில்லை அப்பிடியே போர்வையை விட்டிட்டுப் போய்ப் படுத்திட்டுது.

‘ஏனப்பா நீங்கள் இன்னும் சின்னப் பிள்ளையே…. ? உங்களுக்கு எத்தினை தடவை சொல்லிப் போட்டன். இந்தப் போர்வையை எடுத்து வைச்சால் குறைஞ்சு போயிடுவிங்களே ? நாவுற்றுக்குக் கழிச்ச மாதிரி ஏன் எப்பவும் கோலுக்குள்ளை போர்வையை வைக்கிறிங்கள் ? ‘

எண்டு கேட்க வந்த வார்த்தைகளை அப்பிடியே தொண்டையோடை நிப்பாட்டிப் போட்டன்:.

பிறகு மனுசன் சொல்லும் ‘விடியக் காத்தாலை தொடங்கீட்டாய் எண்டு. ‘ சும்மா சொன்னாலும் பரவாயில்லை. தன்ரை பிழையை மறைக்கிறேக்காண்டி நாய்க்கத்தல் கத்தத் தொடங்கீடும்.

எனக்கு அந்தக் கத்தலை கேட்கவே ஏலாது. எனக்கு மட்டும் என்ன விடியக் காத்தாலை இல்லையே ? எனக்கும் விடியக் காத்தாலை இந்த மனுசன் அப்பிடிக் கத்தினால் மூட் அவுட்டாகும்தானே. ஆனால் மனுசன் நினைக்குது தனக்கு மட்டுந்தான் விடியக் காத்தாலை, வேலைக்களைப்பு, பஞ்சி, அலுப்பு எல்லாம் இருக்கெண்டு. எனக்கும் இதெல்லாம் இருக்கெண்டு இந்த மனுசன் நினைச்சுப் பார்த்ததாவே தெரியேல்லை.

போர்வை மட்டுந்தான் பிரச்சினை யெண்டால் தூக்கி மடிச்சு வைச்சிட்டு இருந்திடுவன். எல்லா விசயத்திலையும் அப்பிடித்தான். பேப்பரை விரிச்சு வாசிச்சா மடிச்சு வைக்கிறேல்லை. புத்தகத்தை புத்தக அலுமாரியிலையிருந்து எடுத்தா திருப்பிக் கொண்டே வைக்கிறேல்லை…. உப்பிடியே இந்த மனுசனும், பிறகு மனுசனைப் பார்த்து பிள்ளையளும் வீட்டிலை விதைச்சு விடுற சாமான்களெல்லாத்தையும் எடுத்து அந்தந்த இடத்திலை வைக்கவே எனக்கு ஒரு நாளிலை அரைவாசி போயிடும். அதுக்குள்ளை மனுசன் கேட்கும் ‘உனக்கென்ன வேலை… ? ‘ எண்டு.

காலைமை எழும்பினதிலையிருந்து வேலை எண்டெல்லே சொன்னனான். அதுதான் போர்வையை மடிச்சு வைக்கிறதிலை தொடங்கி ஒண்டொண்டா எல்லாத்தையும் அடுக்கி வைச்சு, சமைச்சு ….மற்ற வேலையளையெல்லாம் முடிச்சு…. நான் வேலைக்கு வெளிக்கிடக்கிளை அப்பிடியே வீடு பளிச்செண்டு இருந்திச்சு. எனக்கு அதைப் பார்க்கவே ஒரு சந்தோஷம்.

அந்த சந்தோஷத்தோடையே வேலைக்குப் போயிட்டன்.

வேலைக்குப் போனால் வேலை செய்யோணும் தானே. ஆனால் என்ரை மனுசன்ரை நினைப்பு, தான் மட்டும்தான் வேலையிடத்திலை வேலை செய்யிறது. நான் எண்டால் சும்மா இருந்திட்டு வாறதெண்டு. சரி ஏதோ நினைச்சிட்டுப் போகட்டும்.

எனக்கு வேலை முடிஞ்சால் நிம்மதி. இனி வீட்டை போகலாமெண்டு.

அப்பிடித்தான் வேலை முடிய நிம்மதியா வீட்டை வந்தன். அதையேன் பேசுவான். பளிச்செண்டு நான் விட்டிட்டுப் போன வீடு என்னைப் பார்த்து இளிக்கிற மாதிரி….எல்லாம் தலை கீழாய். மேசையிலை புத்தகங்கள், பேப்பருகள், கடிதங்கள்…. குசினிக்குள்ளை ஒரு குவியல் கோப்பையள்….

கட்டிலுக்குப் பக்கத்திலை சுருட்டின படி மனுசன்ரை சொக்ஸ்….

மனுசன் சோபாக்குள்ளை சுருண்டபடி அந்தப் போர்வையாலை போர்த்திக்கொண்டு பேசாமல் படுத்திருந்து ரிவீ பார்க்குது…. மனுசனுக்கு வேலைக்களைப்பு அதுதான். எனக்கு வந்துதே கோபமும் எரிச்சலும். கூட்டித் துடைச்சு அடுக்கி வைக்கத்தான் முடியேல்லை. அடுக்கினதுகளையாவது குழப்பாமல் இருக்கலாம்தானே.

ஆனால் நான் ஒண்டுமே சொல்லேல்லை. மனசுக்குள்ளை குமைச்சலாத்தான் இருந்தது. ஆனாலும் பேசாமல் மனுசனுக்கு தேத்தண்ணியை போட்டுக் குடுத்திட்டு -தேத்தண்ணியை உடனை போட்டுக் குடுக்காட்டி மனுசன் பிறகு மூஞ்சையை நீட்டிக் கொண்டு இருக்கும். எனக்கு இருக்கிற குமைச்சலும் எரிச்சலும் போதும். இன்னும் கூட்ட வேண்டாம் எண்டிட்டு அந்த வேலையை உடனை செய்திட்டு…. பிள்ளையள் சாப்பிட்டுதுகளோ குடிச்சுதுகளோ எண்டு பார்த்து…. இண்டைக்கு என்ன படிச்சது…. வெளியிலை என்ன நடந்தது…. எல்லாம் கேட்டு முடிச்சிட்டு…. பழையபடி அடுக்கல் கூட்டல் துடைத்தல்…. எண்டு எல்லாம் முடிய 11 மணியாச்சு. காலும் வேலை விட்ட போலை நோகத் தொடங்கீட்டுது. சரி இனி இண்டைக்கு ஒண்டும் செய்யேலாது படுப்பம் எண்டு நினைச்சுக் கொண்டு போனால் ரிவீ தன்ரை பாட்டிலை போய்க் கொண்டிருக்கு…. அது மட்டுமே!!. பழைய படி போர்வை சோபாவிலை….

மனுசன் நைசா அதை அப்பிடியே விட்டிட்டுப் போய்ப் படுத்திட்டுது போலை….

எனக்கு வந்துதே கோபம். விறுவிறென்று போய் படுக்கையறையைப் பார்த்தன். மனுசன் ஒய்யாரமாப் படுத்திருந்து புத்தகம் வாசிக்குது.

சொல்லப்படாது எண்டுதான் முதல்லை நினைச்சனான். ஆனால் என்னையறியாமல் பொறுமை கெட்டுச் சொல்லிப்போட்டன்.

‘ஏனப்பா அந்தப் போர்வையை எடுத்து வைக்கிறதுக்கென்ன…. ?

எத்தினை தரமெண்டு உங்களுக்குச் சொல்லுறது….! ‘

நான் சொல்லி முடிக்கேல்லை. மனுசன் இரவெண்டும் பாராமல் பொரிஞ்சு தள்ளிச்சே.

‘நீ என்னத்துக்குப் பெண்டாட்டியெண்டு இருக்கிறாய் ? எடுத்து வைக்கிறதுதானே!

மனுசருக்கு இருக்கிற பிரச்சனையள் தெரியாமல்… உனக்கு இப்ப போர்வைதான் பிரச்சனையாக்கும். ‘

எனக்குத்தானே முதலே பொறுமை கெட்டிட்டு. நானும் விடேல்லை.

‘என்னப்பா உங்களுக்கு அப்பிடிப் பிரச்சனை. ‘ எண்டு கேட்டிட்டன்.

என்ன இவள் இப்பிடி பதில் சொல்லேலாத கேள்வியாப் பார்த்துக் கேக்கிறாளே எண்டு நினைச்சுதோ என்னவோ – மனுசனுக்கு வந்துதே ஒரு கோபம். அப்பிடியே முழுசி என்னை ஒரு பார்வை பார்த்திச்சு.

ஏதோ தான் பெரிய கெளசிக முனிவர். அவற்றை பார்வையிலை நான் எரிஞ்சு சாம்பலாயிடுவன் எண்ட நினைப்பு.

‘என்னை என்ன கொக்கெண்டு நினைச்சியோ கொங்கணவா… ? ‘

எண்டு கேக்கத்தான் எனக்கு மனம் வந்திச்சு.

ம்….பிறகேன் பிரச்சினையை வளர்ப்பான் எண்டிட்டு பேசாமல் வெளிலை வந்திட்டன்.

மனுசன் நினைச்சிருக்கும் தன்ரை பார்வேலை நான் பயந்திட்டனெண்டு.

2001

—-

chandra1200@yahoo.de

Series Navigation

சந்திரவதனா ,யேர்மனி

சந்திரவதனா ,யேர்மனி