பைக்காரா

This entry is part [part not set] of 30 in the series 20091218_Issue

அப்துல் கையூம்


உலகத்திலேயே மிகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு எதுவென்று என்னைக் கேட்டால் ‘டிராலி’ என்று தயங்காமல் சொல்லி விடுவேன். ஆமாம். சூப்பர் மார்க்கெட்டில் ஆண்குலம் விதியோ என்று தள்ளிக்கொண்டு போவார்களே அந்த தள்ளுவண்டிதான்.

அனுபவம் ஒருவனை சாக்ரடீஸ் ஆக்கி விடுகிறது என்பது எவ்வளவு உண்மை பாருங்கள். இல்லாவிட்டால் என் சிந்தனையிலிருந்து இது மாதிரி ஒரு தத்துவம் பிறந்திருக்குமா என்ன?

இந்த டிராலி தத்துவத்தை விளக்குவதற்கு ஒரு பிளாஷ்‘பேக்’ தேவைப் படுகிறது. என் வலைப்பதிவில், சிம்லாவில் என் மகன் ஒரு மலைப்பாம்பைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பிரசுரித்து “இதுவும் நல்ல பாம்புதான். ஏனென்றல் இது கடிக்கவில்லையே!” என்று குசும்பு செய்திருந்தேன். நான் எழுதியது சரிதானே? கெட்ட பாம்புதானே கடிக்கும்?

பின்னூட்டம் எழுதிய நண்பர் ஒருவர் “அது நல்ல பாம்பு கிடையாது. பைதான் (Python). அது கடிக்காது.” என்று நான் ஏதோ கொலைக் குற்றம் செய்ததைப்போல் சீரியஸா என்னைத் தாக்கியிருந்தார்.

இதைப் படித்த என் மனைவி “அட! நம்ம மகன் தூக்கி வைத்திருப்பது பைதானா? பைதான் நானும் தூக்கியிருக்கிறேனே?” என்று ஒரு போடு போட்டாள்.

எனக்கு ஒரே ஆச்சரியம்!! நறுக்கும்போது கத்திரிக்காவில் புழு வந்தாலே நாலு வீட்டுக்கு கேட்கும்படி அலறுபவள், நமக்கே தெரியாமல் எப்போது பைதான் தூக்கினாள் என்று அதிர்ந்து போனேன்.

அவள் ‘பைதான்’ என்று சொன்னது அவளது டம்பப்பையைதான் என்று ட்யூப்லைட்டான நான் பிறகுதான் புரிந்து கொண்டேன். ‘பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்’ என்பது போல, என்னோடு இணைந்து அவளும் ரம்பம் போட கற்றுக்கொண்டாளே என்று உள்ளுர மகிழ்ச்சி எனக்கு.

‘இந்த கைப்பையையே கருவாக வைத்து ஒரு கட்டுரை எழுதினால் என்ன?’ என்ற நினைப்‘பை’ வரவழைக்க அதுவே எனக்குள் குபீர் சிரிப்‘பை’ வரவழைத்தது.

சூப்பர் மார்க்கெட்டில் சில கணவன்மார்கள் (என்னையும் சேர்த்துதான்) கைநிறைய பைகள் தூக்கிக் கொண்டு பலராமன்களாக போவதைப் பார்க்கையில் பாவமாக இருக்கும். பாரம் தோள்பட்டையை அழுத்தும். அய்யனார் சாமி போன்று பல கைகள் இருந்தால் தேவலாம் போலிருக்கும்.

ஒரு சமயம் என் நண்பர் பாண்டியன் தன் மனைவிக்குப் பின்னால் ஏராளமான சிவப்பு நிற கேரி பேக்குகளை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு போக “என்ன செம்பை வைத்தியநாதன் போல் போய்க் கொண்டிருக்கிறீர்கள்?” என்று நான் அவரை கலாய்க்க, “என்னைப் பார்த்தால் பெரிய இசை மேதை போல் உங்களுக்குத் தோன்றுதாக்கும்? என்று அவர் பெருமையோடு கூற, “இல்லை. சிகப்பு பையைத்தான் நான் “செம் பை” என்று கூறினேன் என்று அவருக்கு நான் விளக்கம் கூற, ஊஹும்.. அவர் முகத்தில் ஈயாடவில்லை.

இந்த சூப்பர் மார்க்கெட் டிராலி, நம்முடைய சுமையை ஓரளவு குறைத்து விட்டது என்பதென்னவோ உண்மைதான். கல்யாணமான ஆண்கள் இதுபோன்று பை தூக்கியே அலைக்கழிக்கப் படுவார்கள் என்பதை உணர்த்தவே நம்மைச் சிறுவயதில் எல்லோரும் “பையா!… ஏ.. பையா!” என்று விளிக்கிறார்கள் போலும். அப்போது எனக்கு இந்த உண்மை விளங்கவில்லை. இப்போது ‘பைக்காரா’ ஆன பின்பு நன்றாகவே விளங்குகிறது.

இங்கு அரபிகளும், இந்திக்காரர்களும் “பையா! (Bhaiya), கைஸா ஹே?” என்று என்னை நலம் விசாரிக்கும்போதும், நாம் பை தூக்குகிற விஷயம் இவர்களுக்கும் எட்டி விட்டதே என்று நொந்துப் போய் விடுவேன்.

அன்று ஹைப்பர் மார்க்கெட்டிலிருந்து இரண்டு கைகளிலும் பையை ஏந்தி வந்த என்னை, எப்போதும் இங்கிலீசுலேயே உரையாடலைத் தொடங்கும் என் இனிய தமிழ் நண்பரொருவர் “பை தி பை, வேர் ஆர் யூ கோயிங்?” என்று வினவியபோது, கையிலிருந்த பைகளைக் கொண்டே அவர் மண்டையில் ஓங்கி அடிக்கலாம் போலிருந்தது.

முட்டாள்தனமான காரியம் எதையாவது செய்து விட்டால் நம்மை ‘பேக்கு’ என்று ஏன் சொல்லுகிறார்கள் என்று புரிய மாட்டேன்கிறது. கல்யணமானவர்கள் என்றில்லை. இப்பொழுதெல்லாம் ஏராளமான புள்ளையாண்டான்கள் பேக்குகளாக அலையுதுகள். ஆமாம் எல்லோருடைய தோள்பட்டையிலும் லேப்டாப் பேக்குகள் தொங்குகின்றன.

“ரோட்டி கப்படா மக்கான்” (உணவு, உடை, உறைவிடம்) என்ற மனோஜ்குமாரின் இந்திப் படத்தில் சர்தார்ஜி வேடத்தில் நடிக்கும் பிரேம்நாத் பாடும் பாடலில் ஒரு பத்தி வரும். “அன்று கை நிறைய காசு கொண்டுச் சென்று பை நிறைய சாமான்கள் வாங்கி வந்தோம். இன்று பை நிறைய காசு கொண்டுச் சென்று கை நிறைய சாமான்கள் வாங்கி வருகிறோம்” என்று.

ஒருபுறம் விலைவாசி கிடுகிடுவென்று ஏறிக் கொண்டுதான் இருக்கிறது. இருந்தும் தந்தைக்குலம் பைகள் தூக்கும் இம்சைகள் இன்னும் குறைந்தபாடில்லை. யாரோ ஒரு அறிவில்லா ஜீவி “கிரெடிட் கார்ட்” என்ற ஒன்றை கண்டுபிடிக்கப்போய் சூப்பர் மார்க்கெட்டில் நாம் எவ்வளவு வாங்குகிறோம், எத்தனைப் பைகள் தூக்கப் போகிறோம் என்ற கணக்கு வழக்கே தெரிய மாட்டேன்கிறது.

பெரியவர் ஒருவர் கருமியிடம் சென்று காசு கேட்டிருக்கிறார். அவர் காசு கொடுப்பதற்கு மனமில்லாமல் “காசா லேசா?” என்று பதில் கூறியிருக்கிறார். அதாவது “காசு என்றால் உனக்கு லேசா? அவ்வளவு எளிதில் உனக்கு தூக்கி கொடுத்துவிடுவேனா?” என்ற அர்த்தத்தில். அதற்கு அந்த பெரியவர் கருமியின் வாயிலிருந்து வந்த அதே வார்த்தைகளை வைத்தே “காசாலே சா” என்று சாபம் விட்டு விட்டார். அதாவது காசாலே(யே) சா – நீ சொத்து ஒழி; என்ற அர்த்தத்தில்.

இந்த வெள்ளைக்காரன் செய்து விட்டுப் போன குசும்பு அதை விட மோசம். பணத்திற்கு ரூபாய் என்று பெயர் வைத்துவிட்டு சில்லறைக் காசுக்கு ‘பைசா’ என்று பெயர் வைத்துவிட்டுப் போய் விட்டான். பை தூக்கியே சா(வு) என்று சாபம் விட்டுப் போய்விட்டானோ என்னவோ தெரியாது.

அந்தக் காலத்தில் ஒரு பெரிய கோபுரத்தை சாய்வாக கட்டி விட்டு அதற்கு “பைசா” கோபுரம் என்று பெயரையும் வைத்து விட்டுப் போனவர்ளின் செயலை ஊமைக்குசும்பு என்று ஏன் சொல்லக் கூடாது.

சிட்டிசன் படத்தில் வசுந்தராதாஸ் மழலைத் தமிழில் “பூக்காரா..! பூக்காரா.. !” என்று பாடும் பாட்டை வானொலி பண்பலையில் கேட்கும் போதெல்லாம் “பைக்காரா..! பைக்காரா..!” என்று அந்த அம்மா நம்மை கேலி செய்கிறதோ என்று சந்தேகப்படுவேன்.

கல்யாணமான புதிதில் ஊட்டிக்கு தேனிலவு சென்றபோது நான் முதலில் சென்று சுற்றிப்பார்த்த இடம்கூட “பைக்காரா அருவி”தான். இப்போது சூப்பர் மார்க்கெட்டில் என் மனைவிக்குப் பின்னால் பைகளைத் தூக்கிக் கொண்டு ‘பைக்காரா’வாக போகும் போதெல்லாம் ஏன்தான் அந்த பைக்காரா அருவிக்குப் போனோமோ என்று வருந்துவதுண்டு.

நம் தாய்மார்களைப் பார்த்தோமானால் குழந்தைகள் விருந்தாளிகளை வாய் நிறைய வரவேற்க ஏதுவான வார்த்தைகளை கற்றுக் கொடுக்க மாட்டார்கள். விருந்தாளிகள் வீட்டில் இருக்கும்வரை குழந்தைகள் வாயையே திறக்காது. பேசவே பேசாது. அவர்கள் புறப்படத் தயாராகிவிட்டால் போதும் “உடனே “பை பை அங்கிள்” “டா டா அங்கிள்” என்று விழுந்தடித்துக் கொண்டு வழியனுப்ப ஆரம்பித்துவிடும்.

மனைவிக்கு பின்னால் பை தூக்கியே பழக்கப்பட்ட கணவன்மார்கள் “பை பை அங்கிள்” என்று நண்டு சுண்டுகள் கூறுவதைக் கேட்டு ‘நம்மைதான் கேலி பண்ணுகிறார்களோ?’ என்று டென்ஷன் ஆகி பையைத் தூக்கிக்கொண்டு பைய நழுவி விடுவதும் உண்டு.

தாய்க்குலம் கையில் தூக்கிக்கொண்டு போனால் அதற்குப் பெயர் கைப்பையாம். நாம் தூக்கிக் கொண்டு போனால் அதற்குப் பெயர் லக்கேஜாம். என்ன அநியாயங்க இது?

இன்று நேற்றல்ல, 16-ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்த அம்மாமார்கள் டம்பப்பையைத் தூக்க ஆரம்பித்துவிட்டார்கள். டம்பம் அடிப்பதற்காகவே தூக்கிக்கொண்டு போகும் இந்த பைக்கு ‘டம்பப்பை’ என்று பெயர் வைத்த அந்த முகந் தெரியாத புண்ணியாவனை பாராட்ட வேண்டும். பள்ளியில் நான் படித்தபோது “Who invented Pi?” என்று கணக்கு வாத்தியார் என்னை கேள்விக் கேட்டிருக்கிறார். பதிலும் சொன்னார். நான்தான் மறந்து தொலைந்து விட்டேன்.

நம் தாய்மார்கள் கைக்குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு போக மறந்தாலும் மறப்பார்கள். ஆனால் இந்த டம்பப்பையை கையில் மாட்டிக் கொண்டு போக மறக்கவே மாட்டார்கள்.

அப்படி என்னதான் அவர்களின் கைப்பையில் இருக்கிறது என்று ஒருநாள் சோதனை போட்டும் பார்த்து விட்டேன். ஆண்களின் டயரியையும், பெண்களின் கைப்பையையும் அவர்களின் அனுமதியின்றி திறந்து பார்க்கக் கூடாதுதான். என்னச் செய்வது? என் கட்டுரைக்கு இந்த விவரங்கள் தேவைப்படுகிறதே? இறைவன் என்னை மன்னிப்பானாக.

கைப்பையை துப்புத் துலக்கி துழவிப் பார்த்துவிட்டு வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டேன். ‘இத்துனூண்டு’ சாமான்களுக்காக ‘இம்மாம்’ பெரிய டம்பப்பை தேவைதானா என்று நொந்துப் போய் விட்டேன்.

பெரிய சுண்ணாம்பு டப்பி போல் ஒன்று. அதற்குப் பெயர் Face பவுடராம். குட்டியாய் ஒரு செண்ட் குப்பி. நாலைந்து கசங்கிய Tissue Paper. அதில் நல்ல வேளை மூக்குச் சளி இல்லை. லிப்ஸ்டிக் துடைத்த சிவப்புக் கறை மட்டும் இருந்தது. மினியேச்சர் பேட்ரியாட் ஏவுகணை போன்று ஒரு லிப்ஸ்டிக். ஜோஸ்யம் பார்ப்பவர்களின் கையில் இருக்கும் பூதக் கண்ணாடியைப் போன்று கைப்பிடி கொண்ட ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி. பெரிய பெரிய பற்களைக் கொண்ட ஒரு சீப்பு. இரண்டு ஹேர் கிளிப். ஒரு ஊக்கு. காது குடையும் cotton buds. ஒரு சிறிய தலைவலி தைலம் பாட்டில். ஒரு Eye Brow பென்சில். ஒரு லேடீஸ் சமாச்சாரம். அவ்வளவுதான்.

இந்த உருப்படாத சாமான்களை வைப்பதற்காக ஆயிரக் கணக்கில் ஏன் லட்சக் கணக்கில் கூட காசு போட்டு டம்பப்பை வாங்கி வைத்திருக்கும் அம்மாமார்கள் உண்டு.

சேனல், லூயிஸ் உயிட்டன், ஹெர்மிஸ், குச்சி, கிறிஸ்டியன் டியோர், Fendi, ப்ராடா, கேட் ஸ்பேட், லாக் ஹார்ட் என்று Branded டம்பப்பை மனைவிமார்களுக்கு வாங்கிக் கொடுத்து போண்டியான ஆண்டிகள் பலபேர்கள் உண்டு.

ஆண்களின் கதையே வேறு. ஆண்கள் வைத்திருக்கும் கைப்பையைப் பார்த்த மாத்திரத்தில் அவர்கள் செய்யும் தொழிலை எளிதாக கண்டு பிடித்து விடலாம். பஸ் கண்டக்டருடைய கைப்பை இடுப்புக்கு கீழே பரிதாபமாக தொங்கிக் கொண்டிருக்கும். கேமரா தளவாடச் சுமைகளைத் தூக்கித் தூக்கியே தோள்பட்டை ஒருபக்கம் சாய்ந்திருக்கும் போட்டோகிராபரை பார்த்திருக்கலாம். சீட்டுக் கம்பேனிக்காரர் பாஸ்போர்ட் பேக் போன்ற ஒன்றை அக்குளில் இடுக்கி வைத்திருப்பார்.

சிலபேர் வங்கியில் பெரிய தொகை எடுப்பதாக இருந்தால் ஒரு மஞ்சள் பையை கொண்டு போவார்கள். அப்போதுதான் யாரும் சந்தேகப்பட மாட்டார்களாம். பயங்கர பாதுகாப்பாம். இது போன்று எல்லோரும் நினைக்கப் போய் இப்பொழுதெல்லாம் மஞ்சள்பை சகிதம் யாரையாவது பார்த்தாலே அதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று சுலபமாக புரிந்துக் கொள்ளலாம்.

இந்தி கஜினி படத்திற்காக ஆமீர் கான் ‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு தயார் படுத்தினார் என்ற செய்தியை பத்திரிக்கையில் படித்து விட்டு, “சிக்ஸ் பேக்” என்றால் என்ன?” என்ற என் சந்தேகத்தை நண்பர் சலீமிடம் கேட்டபோது,

“இது கூடத் தெரியாதா? 1) ஸ்கூல் பேக், 2) டிராவல் பேக், 3) ஹேண்ட் பேக் 4) ஷோல்டர் பேக், 5) லெதர் பேக், 6) கேரி பேக்” என்று எனக்கே நாகூர் அல்வா கொடுக்கிறார்.

2012-ஆம் ஆண்டு உலகம் அழியப் போவதாக சமீபத்தில் நான் பார்த்த ஒரு படத்தில் காண்பிக்கிறார்கள். அப்பாடா.. ! நாம் (ஆண் வாசகர்களாகிய உங்களையும் சேர்த்துதான்) பைக்காராவாக அலையும் இம்சை இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குத்தான் என்றுச் சொல்லுங்கள்.

Vapuchi@gmail.com

Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்