பேராசிரியர் சுந்தரசண்முகனார் வாழ்வும் பணியும்(13.07.1922 -30.10.1997)

This entry is part [part not set] of 33 in the series 20080313_Issue

முனைவர் மு.இளங்கோவன்


தமிழுக்குத் தொண்டு செய்த அறிஞர்களைப் போற்றிப் பாதுகாத்த ஊர் புதுச்சேரியாகும். இவ்வூரில் பல காலம் பணிசெய்து தமிழுக்குப் பயன்படத்தக்க அரிய நூல்களை வழங்கிய பெருமகனார் பேராசிரியர் சுந்தரசண்முகனார் ஆவார்.இவர் வரைந்த அகராதிக்கலை,கெடிலக்கரை நாகரிகம்,தமிழ் இலத்தீன் பாலம்,தமிழ்நூல் தொகுப்புக்கலை உள்ளிட்ட நூல்கள் இவர்தம் பெருமையை என்றும் எடுத்துரைக்கும்.இவர் பல காலம் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் தமிழுக்கு என்றும் நூல்மாலை தொடுக்கத் தயங்கியதில்லை. கடுமையான மூளைக்கட்டி நோய் தாக்கிய சூழலிலும் அறிஞர் வ.ஐ.சுப்பிரமணியனாரின் அழைப்பை ஏற்றுத் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் தொகுப்பியல் துறையில் பணியாற்றி(1982-1983) வரலாறு படைத்தவர்.இவர்தம் வாழ்வியலை இக்கட்டுரை நினைவுகூர்கிறது.

இளமைப்பருவம்

கடலூர் மாவட்டம் புதுவண்டிப்பாளையத்தில் வாழ்ந்த சுந்தரம் என்பவரின் மகனாக 13.07.1922 இல் சண்முகம் என்னும் இயற்பெயருடன் தோன்றியவர் நம் பேராசிரியர்.தந்தையாரின் பெயருடன் தன் பெயரை இணைத்துப் பின்னாளில் சுந்தர சண்முகனார் ஆனவர்.இளம் அகவையில் இவருக்குத் தமிழில் நாட்டம் ஏற்படக் காரணமாக இருந்தவர் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் ஆவார்.ஞானியார் மடம் இவருக்கு அறிவுக்கண் திறந்த இடம் எனில் மிகையன்று.ஞானியார் அடிகளின் அறிவுரையின்படி சண்முகனார் தம்முடைய பதினான்காவது அகவையில் திருவையாறு அரசர் கல்லூரியில் வித்துவான் படிப்பில் சேர்ந்தார்.வித்துவான் படிப்பை வெற்றியுடன் முடித்து ஞானியார் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் மயிலம் சிவஞானபாலய அடிகளார் தமிழ்க்கல்லூரியில் 1940 ஆம் ஆண்டுமுதல் அதாவது தம் பதினெட்டாம் அகவையில் விரிவுரையாளராகப் பணியில் இணைந்தார்.ஆறாண்டுகள் பணியாற்றியபிறகு 1946 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக மயிலம் கல்லூரிப் பணியை விட்டுவிட்டு புதுச்சேரியில் இருந்த தம் உறவினர் அவர்களின் அழைப்பில் புதுச்சேரி வந்தார்.
புரவலர் சிங்கார.குமரேசனார்(உறவினர்) என்பவரின்உதவியால் பைந்தமிழ்ப்பதிப்பகம் என்னும் பெயரில் நூல்வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். தம் முதல் நூலான வீடும் விளக்கும்(1947) என்னும் நூலை வெளியிட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய முனைவர் அ.சிதம்பர நாதனார் அவர்கள் நூலுக்கு அணிந்துரை வழங்கியிருந்தார்.

1948 இல் தனித்தமிழ்க்கிளர்ச்சி என்னும் நூலை இயற்றிப் பாவேந்தரின் அணிந்துரைப் பாடல்களுடன் வெளியிட்டார். ‘எழுதுதல்,பேசுதல்,திருமணம்,திருக்கோயில்,வழிபாடு,அரசியல் அலுவல்கள் முதலிய பல துறைகளிலும் தமிழைக் கையாண்டு,தமிழ்க்கே முதன்மையளிக்கவேண்டும்’ என்னும் நோக்கமுடன் இந்நூலைப் பேராசிரியர் வெளியிட்டுள்ளார். பாவேந்தர் தம் சிறப்புக்கவியில்,

‘தனித்தமிழ்க்கிளர்ச்சி’ எனுமொரு நூலைத்
தனிதமிழ்ச் செய்யுளால் உள்ளம்
இனித்திடத் தந்தார் புலவர்சண் முகனார்
இத்தமிழ் நாட்டினர் இதனில்
மனைக்கொரு படிஎன வாங்குக! நாளும்
மணிக்கொரு முறைஅதைப் படிக்க!
திணைத்துணை உழைப்பில் பனைத்துணைப் பயனைச்
சேர்க்கும்இந் நூல்எனல் மெய்யே!

என்று பாராட்டியுள்ளமை இந்நூல் சிறப்பை விளக்கும்.சமயநூல்களிலும்,சிற்றிலக்கியங்களிலும் சிறப்பிடம்பெறும் அம்மானை வடிவைச் சுந்தரசண்முகனார் மிகச் சிறப்பாகத் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்தியுள்ளார்.

அம்மானை என்பது மூன்று பெண்கள் அமர்ந்து விளையாடிப் பாடும் பாட்டு வடிவமாகும். இப்பாடல் ஐந்தடிகளில் ஒருவகைக் கொச்சகப்பாடலால் பாடப்படும்.மூன்று பெண்மணிகள் தொடை,தடை,விடை என்னும் அமைப்பில் பாடுவர்.மூவர் பேச்சின் முடிவிலும் அம்மானை என முடிவது உண்டு.இம்முறையில் மூன்று பெண்மணிகள் பாடித் தமிழ்க்கிளர்ச்சி உண்டாக்குவதாகச் சுந்தரசண்முகனார் பாடியுள்ளார். இனிய ஓசையும், பாடுபொருளும் கருத்தாழமும் கொண்டு பாடல்கள் விளங்குகின்றன.
இனித்திடுநம் தமிழ்மொழிதான் இன்னொன்றன் துணையின்றித்
தனித்தியங்கும் தகுதிபெற்ற தனிமொழிகாண் அம்மானை
தனித்தியங்கும் தகுதிபெற்ற தனிமொழியே யாமாகில்
திணித்துமிக ஆரியச்சொல் சேர்ந்ததேன் அம்மானை
திணித்தனர் ஆரியர்தம் திறமையினால் அம்மானை (2)

என்று சண்முகனார் பாடியுள்ளமை அவர்தம் தமிழ்ப்பற்றையும் பாட்டியற்றும் வல்லமையையும் காட்டும்.

1948முதல் 1958 ஆம் ஆண்டுவரை திருக்குறள் தெளிவு,தெவிட்டாத திருக்குறள் என்னும் மாதம் இருமுறை திருக்குறள் ஆய்வு இதழ்களை வெளியிட்டுத் தமிழக அளவில் புகழ்பெற்றார். இவ்வாறு எழுத்துத்துறையில் இருந்த சண்முகனார்க்குப் பெத்தி செமினார் பள்ளியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணி வாய்ப்பு அமைந்தது (1949-1958).

1958 முதல் 1980 வரை புதுச்சேரி அரசினர் ஆசிரியர் பயிற்சி மையத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்தார். நூற்றுக்கணக்கான ஆசிரியர்களை உருவாக்கும் பெரும்பணியில் ஈடுபட்டு உழைத்தார்.ஆசிரியர் பயிற்சிப் பணியில் இருந்தபொழுது திருவள்ளுவர் தமிழ்ப்பல்கலைக்கழகம் என்னும் அமைப்பினை ஏற்படுத்தி யாப்பதிகாரம்,திருக்குறள் வகுப்புகளை நடத்தி மாணவர்கள் பயன்பெற உழைத்தார். மாணவர்களுக்குப் பாவலர் பட்டம் வழங்கி ஊக்கப்படுத்தினார்.
சுந்தரசண்முகனார் புதுச்சேரிக்கு வந்தபொழுது பலர் இவரை ஆதரித்தனர் அவர்களுள் மக்கள் தலைவர் வ.சுப்பையா, தேசிகம்பிள்ளை(கல்விக்கழகம்),குகா.இராசமாணிக்கம் பிள்ளை,மேட்டுப்பாளையம் இராமலிங்கம் முதலானவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

சுந்தரசண்முகனார் அவர்கள் மிகச்சிறந்த தமிழ்ப்பற்றாளர்.தவறு கண்டவிடத்து உடன் கண்டிக்கும் இயல்புடையவர்.1946 இலிருந்து மூளைக்கட்டி நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டபொழுதும் எழுத்துப்பணியை நிறுத்தினார் இல்லை. புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவமேதை இராமமூர்த்தி அவர்கள் பேராசிரியரைத் தம் நோயாளியாகப் பார்க்காமல் மதிப்பிற்குரிய பேராசிரியராக நினைத்து மருத்துவம் பார்த்தார்.

சுந்தரசண்முகனார் அவர்கள் தம் வாழ்நாளில் 69 நூல்களை எழுதியுள்ளார்.இவற்றுள் கவிதைநூல்கள் எட்டு ஆகும்.காப்பியங்கள் இரண்டாகும்(அம்பிகாபதி காதல் காப்பியம், கௌதம புத்தர் காப்பியம்), உரைநூல்கள் ஏழு வெளிவந்தன.அவை : திருக்குறள் தெளிவு, நாலடியார் நயவுரை,திருமுருகாற்றுப்படை தெளிவுரை, இனியவைநாற்பது இனியவுரை,நன்னெறி நயவுரை,முதுமொழிக்காஞ்சி உரை,நல்வழி உரை ஆகும்.உரைநடை நூல்கள் 52 ஆகும்.

தமிழுக்குப்பல்வேறு நூல்களை வழங்கயிய சுந்தரசண்முகனார்க்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 17.10.1991 இல் தமிழ்ப்பேரவைச்செம்மல் என்னும் தகுதி மிகுந்த பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. காமராசர் பல்கலைக்கழகம் தங்கள் கல்விக்குழுவின் வாழ்நாள் உறுப்பினராகவும் இவரை அமர்த்தியிருந்தது.

சுந்தரசண்முகனார் வாழ்நாள் முழுவதும் எழுத்துப்பணிகளில் ஈடுபட்டு அரியநூல்களை வழங்கியதால் பல்வேறு உயரிய பரிசில்களைப் பெற்றுள்ளார்.அவற்றுள்தமிழக அரசு வழங்கிய திருவள்ளுவர் விருது(1991),எம்.ஏ.சிதம்பரம் விருது(1994),ஞானியார் மடாலயம் வழங்கிய ஆராய்ச்சி அறிஞர் பட்டம், தமிழகப் புலவர்குழுவின் வெள்ளிவிழாவில்(சேலம்) வழங்கப்பெற்ற தமிழ்ச்சான்றோர் பட்டம்,தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பரிசு முதலியன குறிப்படத்தக்கன.

சுந்தரசண்முகனார் தமிழ்ப்பணியை வியந்து தமிழகத்து அறிஞர்கள் பலரும் பலபடப் பாராட்டியுள்ளனர். அவர்களுள் அறிஞர் மு.வ, ம.பெரியசாமித்தூரன், துரை.மோகன் அரங்கசாமி, வ.சுப.மாணிக்கம், நாவலர் பாரதியார்,ச.மெய்யப்பன்,ஒளவை நடராசன், ந.சஞ்சீவி, இரம்போலாமாசுகரனேசு, சோ..ந.கந்தசாமி, தி.வே.கோபாலையர்,தி.முருகரத்தினம்,கி.வேங்கடசுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

தமிழ்வாழ்க்கை வாழ்ந்த பேராசிரியர் சுந்தரசண்முகனார் அவர்கள் மூளைக்கட்டி நோயின் கொடுமையால் 30.10.1997 இல் இயற்கை எய்தினார்.அவர்தம் தமிழ்நூல்கள்அவரின்பெருமையைப்பறைசாற்றிக்கொண்டிருக்கும்.

முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி,இந்தியா

மின்னஞ்சல்: muelangovan@gmail.com
இணையம் : www.muelangovan.blogspot.com

Series Navigation