பெளத்த மீட்டுருவாக்கத்தில் பெரும்பங்காற்றியவர் (க.அயோத்திதாசர் ஆய்வுகள் -கட்டுரைத் தொகுப்பு அறிமுகம் )

This entry is part [part not set] of 23 in the series 20051111_Issue

பாவண்ணன்


ஸ்ரீலஸ்ரீ அயோத்திதாஸ பண்டிதர் என்று பெளத்த தலித்துகளால் மிகுந்த மரியாதையாக விளிக்கப்பட்ட க.அயோத்தி தாசர் மிகச்சிறந்த சிந்தனையாளர் . கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெளியுலகம் அறியவராத அவரது எழுத்துகள் அனைத்தும் ஞான.அலாய்சியஸ் என்பவரால் பதிப்பிக்கப்பட்டு சமீபத்தில் தொகைநூல்களாக வெளிவந்தன. தாசரின் சிந்தனைகளும் இலட்சியங்களும் சாதிமதமற்ற அற வாழ்க்கையையும் கருணையும் அன்பும் மிக்க மேம்பட்ட மனித உறவுகளையும் பற்றியவை. அவரது ஆய்வுகளை முன்வைத்து, தாசரின் அணுகுமுறைகள், இலட்சியங்கள், ஈடுபாடுகள், கொள்கை உறுதி எனப் பலவிதமான உண்மைகளைக் கண்டறிந்து தொகுத்தளிக்கும் முயற்சியை மேற்கொண்ட ராஜ்.கெளதமன் தமிழுலகின் பாராட்டுக்குரியவர். ஏற்கனவே அ.மாதவையாவின் படைப்புகள், புதுமைப்பித்தன் சிறுகதைகளை முன்வைத்து அவர் நிகழ்த்திக்காட்டிய ஆய்வுகளில் வெளிப்பட்ட கூர்மையும் வாதநுட்பமும் வாசகர்களை ஈர்க்கும் விதத்தில் அவற்றை முன்வைக்கும் திறமும் இந்நுாலிலும் காணப்படுகின்றன.

அயோத்தி தாசரின் ஆய்வுகளைப்பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் முன்பாக இந்திய தமிழக பெளத்த வரலாற்றையும் 19,20ஆம் நுாற்றாண்டுகளில் நிகழ்ந்த அதன் மறுமலர்ச்சியையும் சின்னச்சின்ன சித்திரங்களாகத் தீட்டிக்காட்டுகிறார் கெளதமன். ஒரு புனைவு நுாலைப்போல ஆர்வத்துடன் படிக்கும்வயைில் இப்பகுதிகள் தீட்டிக்காட்டப்பட்டுள்ளன. சரித்திரத்தில் அங்கங்கே நிகழ்ந்த பிசகுகளையும் குற்றங்களையும் தடுமாற்றங்களையம் சுட்டிக்காட்டவும் அவர் தயங்கவில்லை. எடுத்துக்காட்டாக மணிமேகலையைப் பதிப்பித்த உ.வே.சா. வின் குறிப்புகளை அவர் சுட்டிக்காட்டும் விதம் அவரது ஆய்வுநுட்பத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இப்பகுதிகளுக்குப்பிறகு அயோத்திதாசரின் கால தலித்துகள் வாழ்க்கை நிலையை விவரிக்கிறார். தமிழ் இலக்கியப்பகுதிகளில் பொதிந்துள்ள உண்மைப் பொருளை தாசர் கண்டடைந்த விதங்களைப்பற்றியும் சொல்லாராய்ச்சியைப்பற்றியும் சுருக்கமாக முன்வைத்துள்ள கட்டுரை தாசரின் கூர்மையான அறிவுத்திறமை வெளிப்படும்வகையில் எழுதப்பட்டுள்ளது. இறுதியாக தாசரின் ‘ஆதிவேதம் ‘ சீரான முறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

முதல் இயலில் இந்திய தமிழக பெளத்த வரலாறு பற்றிய குறிப்புகள் செறிவாகவும் சுருக்கமாகவும் முன்வைக்கப்பட்டுள்ளன. சாக்ரடாசுக்கு நுாறு ஆண்டுகளுக்கு முன்பும் லவோசியஸ், மகாவீரர், சொராஸ்டர் ஆகியோருக்குச் சில ஆண்டுகளுக்குப் பின்னரும் கன்பூசியஸ் பிதாகரஸ் முதலியோருக்கு சமகாலத்திலும் வாழ்ந்த புத்தரின் போதனைகள் நான்கு வகைகளாக இந்நுாலில் பிரிக்கப்படுகின்றன. ஒழுக்கம், புண்ணியம், பொதுநலம், செயல்பாடு ஆகிய அறங்கள் நாடெங்கும் பரவும் வகைகளில் பலராலும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. சோ.ந.கந்தசாமி, மயிலை.சீனி.வேங்கடசாமி, சம்பகலட்சுமி, சரோஜா ஆகியோர் எழுதிய குறிப்புகளையும் பத்தொன்பதாம் நுாற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழக, பிராமி கல்வெட்டுகளையும் ஆதாரமாகக் கொண்டு மேலும் பல விஷயங்கள் பெளத்தத் தத்துவ வளர்ச்சியைப்பற்றிய கருத்துகள் மொழியப்படுகின்றன. கி.மு.மூன்றாம் நுாற்றாண்டைச் சேர்ந்த சக்ரவர்த்தியான அசோகரின் ஆதரவில் பாடலிபுத்திரத்தில் மொக்கலபுத்த திஸ்ஸ என்ற தேரவாத பெளத்த பிக்குகளின் தலைவரின் தலைமையில் ஒன்பது மாதகாலம் நடைபெற்ற மூன்றாவது பெளத்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவையொட்டி பல நாடுகளுக்கும் தேரவாத பெளத்தவர்களை அனுப்பி சமயக்கருத்துகளைப் பரப்ப, ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அசோகரின் மகன் மகேந்திரர் இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் திரமிளம் எனப்படும் தமிழகத்தில் தங்கி காஞ்சி, மதுரை, பூம்பூ கார் போன்ற நகரங்களில் தங்கி பெளத்தம் நிலைபெற அடித்தளமிட்டனர். தமிழர்களின் மனத்தை எளிதில் கவர்ந்த பெளத்த அறம் நன்கு செழித்து வளர்ந்ததற்கு சிலப்பதிகாரம், மணிமேலை ஆகிய நுால்களே சான்று.

தமிழின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரான க.அயோத்திதாசர் 1845ல் பிறந்தார். 1914ல் இந்த மண்ணுலகைவிட்டு மறைந்தார். இவர் வாழ்ந்த காலம் இந்திய வரலாற்றில் மிகமுக்கியமான தருணமாகும். இது இந்திய விடுதலைப்போர் உச்சத்தைநோக்கி எழுச்சியுற்ற காலம். ஒருபுறம் விடுதலைக்கான வேகம். இன்னொரு புறம் கல்வியறிவினாலும் சீர்திருத்தத்தாலும் விழிப்புற்ற மக்களின் மேன்மைக்கான விழைவு. இடையில் சாதிய இழிவுகளை அகற்றாத அரசியல் விடுதலையால் எப்பயனும் இல்லை என்கிற கருத்தையொட்டி நின்றார் தாசர். 1890ல் பெளத்தத்தின் உண்மைகளை முழுமையாக ஏற்று 1898ல் ஆல்காட், கிருஷ்ணசாமியார் இருவருடனும் சிலோன் சென்று மலிகண்ட விகாரையில் சுமங்கல மஹாநாயகாவிடம் பஞ்சசீலம் பெற்று பெளத்தர்களானார்கள். அங்கிருந்து திரும்பி வந்த தாசர் இராயப்பேட்டையில் தென்னிந்திய சாக்கைய புத்த சங்கத்தை நிறுவினார். இதன் தலைவராக இருந்தவர் பால்கரஸ் ( ‘புத்தரின் புனித வரலாறு ‘ என் னும் நுாலின் ஆசிரியர். பப்ளிகேஷன் டிவிஷன்ஸ் வழியாக இது தமிழில் வெளிவந்துள்ளது. தமிழில் மொழிபெயர்த்தவர் சந்தானம்) 1898-1908 காலப்பகுதியில் தலித்துகளிடையே பெளத்த சமய நடவடிக்கைகளுக்கு இச்சங்கமே காரணமாயிற்று. பொளத்தக் கருத்துகளை விரிவான அளவில் பரப்புவதற்காக 1907ல் தமிழன் என்னும் பெயரில் வாரப் பத்திரிகையொன்றைத் தொடங்கி நடத்தினார். நவயான பெளத்தத்தின் முன்னோடி என அழைக்கப்படுவதற்கான எல்லாத் தகுதிகளும் தாசருக்கு உண்டு.

பத்தொன்பதாம் நுாற்றாண்டின் மகத்தான மாற்றுச் சிந்தனை வீரர்களாக லட்சுமி நரசு, அயோத்தி தாசர், சிங்காரவேலர் ஆகிய மூவரும் விளங்கினர். இவர்கள் மூவருமே பெளத்தப் பகுத்தறிவாளர்கள். இம்மூவரும் ஏனைய பெளத்தர்களோடு சேர்ந்து காலனிய ஆட்சியின் ஆதரவில் ஆதிக்கச்சக்தியாக வந்துகொண்டிருந்த ஒடுக்கும் பிராமணியத்துக்கு மாற்றாக நவபெளத்ததத்தை முன்வைத்து இயங்கினார்கள். ஆனாலும் மூவருக்கும் மூவித நோக்கங்கள் இருந்தன. பொதுவுடைமைக் கருத்தில் ஈடுபாடு கொண்ட சிங்காரவேலர் பெளத்தத்தை நாத்திகம்-பகுத்தறிவு சார்ந்த ஒன்றாக மட்டுமே பார்த்தார். அறிவியல் பட்டதாரியான நரசு மேற்கத்திய மரபின் பின்னணியில் பகுத்தறிவு-மனிதாபிமானம் – அறிவியல் சார்ந்த ஒன்றாக பெளத்தத்தைக் கண்டார். தென்னிந்திய பெளத்த சங்கத்தின்கிளை 1917ல் பெரம்பூரில் தொடங்கப்படுவதற்கும் பெங்களூர், திருப்பத்தூர், கோலார் தங்கவயல் ஆகிய இடங்களில் கிளைகளைத் தொடங்குவதற்கும் காரணமாக இருந்தவர். சாதிபேதமற்ற மதமாகவும் வைதிக பிராமணியத்தால் வீழ்த்தப்பட்ட உயர்நெறியாகவும் பெளத்தத்தைக் கண்டார் தாசர். ஆனாலும் இவர்கள் ஒவ்வொருவருமே வெவ்வேறு திசையில் இயங்கவேண்டியிருந்தது. அலாய்சியஸின் குறிப்புகளைச் சான்றாக இதற்குச் சான்றாக காட்டுகிறார் கெளதமன்.

‘தாசர் காலத்தில் வடதமிழ்நாட்டைச் சேர்ந்த தலித்துகள் பெளத்த மதத்தைத் தழுவி முன்னேறினாலும் கன்னியாகுமரி தலித்துகள் கிறிஸ்துவ சபையைக் கைப்பற்றி கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றைப் பெறமுடிந்த அளவுக்கு மேற்கத்திய ஜப்பானிய பெளத்த சபைகளின் முழு ஆதரவைப் பெறமுடியவில்லை ‘ என்று குறிப்பிடும் கெளதமன் தொடர்ந்து ‘பெளத்தத்துக்கு மாறாத பெரும்பான்மை வடதமிழக தலித்துகள் தாசர் காலத்திலேயே பார்ப்பனர் அல்லாத கட்சி, திராவிடர் இயக்கம், காங்கிரஸ் ஆகியவற்றில் இணைந்து சிலர் சில அரசியல் ஆதாயங்களை அடைந்ததோடு கரைந்து போனார்கள் ‘ என்று குறிப்பிடுகிறார். பார்ப்பனரல்லாதாருக்கு ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை எழுப்பிய மெட்ராஸ் பிரசிடென்சி அசோசியேஷன் 1917ல்தான் தொடங்கப்பட்டது. சுயமரியாதைக் கட்சியான ஜஸ்டிஸ் பார்ட்டி ஆட்சிக்கு வந்தது 1921ல். அது எழுச்சியோடு இயங்கிய காலகட்டம் என்பது 1921-39 வரையிலான ஆண்டுகள். திராவிடர் கழகம் பிறப்பது 1944ல். இந்த நிலையில் பார்ப்பனர் அல்லாத கட்சியாலும் திராவிடர் இயக்கத்தாலும் தாசர் காலத்து தலித்துகள் ஆதாயத்தை அடைந்திருக்க எவ்விதத்திலும் வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. காங்கிரஸ் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த இயக்கம். ஒவ்வொரு தொண்டனையும் தியாகத்துக்காக அழைத்துக்கொண்டிருந்த இயக்கம். எவ்விதமான ஆதாயத்தையும் தன் தொண்டர்களுக்கு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ தரமுடியாத இயக்கமாகவே காங்கிரஸ் இருந்திருக்கவேண்டும். பொருளியல் பின்னணியில் வாழ்க்கைநிலையை உயர்த்திக்கொள்ள எந்த இயக்கமும் யாருக்கும் உதவியிருக்க வழியில்லை என்பதே உண்மையாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

அயோத்திய தாசர் காலத்து தலித்துகள் என்னும் பகுதியில் தலித்துகளுக்கு நிகழ்ந்த கொடுமைகள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. ‘தமிழன் ‘ பத்திரிகையில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் இக்குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சொந்த நிலம் வாங்கிய தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவரின் குடிசை எரிக்கப்பட்டு விளைநிலங்களில் மாடுகளைவிட்டு மேயவைக்கப்பட்ட சம்பவம் மனம்பதறவைக்கிறது. மதுராந்தகம் வட்டத்தைச் சேர்ந்த ஒரத்துார் கிராமத்துப் பிராமணர்கள் விதித்த சாதித்தடைகளின் பட்டியல் படிப்பவர்களின் நெஞ்சை உலுக்கவைக்கக்கூடியதாக உள்ளது. தீண்டாத சாதியில் பிறந்த ஒரு குழந்தை உரசியதால் தீட்டுப்பட்டுவிட்ட மேல்சாதிப்பெண் வெகுண்டெழுந்து அக்குழந்தையின் தலையிலேயே குடத்துநீரைக் கொட்ட மூச்சுத் திணறி அக்குழந்தை இறந்துபோகும் சம்பவம் கொடுக்கும் அதிர்ச்சி கொஞ்சநஞ்சமல்ல. இப்படி ஏராளமான சம்பவங்கள் உள்ளன. சாதி என்னும் எண்ணத்தின் ஆதிக்கம் மனத்தை எந்த அளவுக்கு ராட்சசத்தன்மை நிறைந்ததாகவும் ரத்தவெறி மிகுந்ததாகவும் மாற்றிவைத்துள்ளது என்பதை அறிய அருவருப்பாக உள்ளது.

‘பார்ப்பானுக்கு மூப்பான் பறையன், கேட்பாரில்லாமல் கீழ்ச்சாதி ஆனான் ‘ என்னும் பழமொழியின் வழியாக இத்தேசத்தின் பூர்வ குடிகளாக வாழ்ந்தவர்கள் பறையர்கள் என்றும் பார்ப்பனர்களால் அவர்கள் கீழ்ச்சாதிகளாக வீழ்த்தப்பட்டார்கள் என்றும் கருத்தைக் கட்டமைக்கிறார் தாசர். பூர்வ திராவிடர்களின் மதமாக பெளத்தத்தை அடையாளம் காண்கிறார். பிராமணியத்தின் சாதியப் பார்வையாலும் அப்பார்வை உள்ள அரசுகளே தொடர்ந்து தேசம்முழுக்க வீற்றிருந்ததாலும் பெளத்தம் வீழ்ந்துபட்டதெனக் குறிப்பிடுகிறார் தாசர். பூர்விக திராவிடர்களின் பெளத்தம், பிராமணியம் ஆகிய எதிர்வுகளின் போராட்டமாக இந்திய வரலாற்றை அடையாளம் காண்கிறார் தாசர். பெளத்த மீட்டுருவாக்கமே இவர் பார்வையில் இந்திய தேச வரலாறாக உருப்பெறுகிறது. இம்முயற்சியின் நீட்சியாக வைதிகம் உரிமைகொண்டாடும் சொல்லாடல்கள், சமயக்கொள்கைகள், இலக்கியவரலாறுகள் அனைத்தையும் நுட்பத்துடன் ஆராய்ந்து அவை அனைத்தும் பெளத்தமூலத்திலிருந்து திரிக்கப்பட்டவை என்பதையும் பெளத்தத்தை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டவை என்றும் திட்டவட்டமாக நிறுவுகிறார். வழக்கமான பெளத்தமத வரலாற்றிலிருந்து விலகி தாசர் பழந்தமிழ் இலக்கியங்கள், நிகண்டுகள், பெளத்த சமய நுால்கள், செவிவழிக்கதைகள், பழமொழிகள் ஆகியவற்றை மறுவாசிப்பு செய்து பெளத்தத்தை வாழ்ந்து வீழ்ந்த பறையர்களின் பூர்வமதமாக, பாதிக்கப்பட்டோரின் மதமாக கட்டி எழுப்பமுயன்றார். இது இவரது தனித்தன்மை. ‘இந்திர தேசர் சரித்திரம் ‘, ‘ஆதிவேதம் ‘ இரண்டு நுால்களும் அத்தனித்தன்மையின் வெளிப்பாடுகளாகும்.

தலித்துகளிடையே தாசர் இரண்டு பிரிவுகளை வகுக்கிறார். ஒரு பிரிவு தாழ்ந்த சாதி. இன்னொரு பிரிவு தாழ்த்தப்பட்ட சாதி. குறவர், தோட்டி, வில்லியர், சக்கிலியர் ஆகியோர் தாமாகவே தாழ்ந்த சாதி என்றும் பறையர் முதலானோர் கனம், தனம் ஆகியவற்றால் பிறரால் வஞ்சகமாக தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு பிரிவினரை முதல் பிரிவினரோடு சேர்த்து ‘பஞ்சமர் ‘ என்று பெயரிட்டதை தாசர் ஆட்சேபித்தார். இன்னும் ஒரு படி சென்று பறையருக்கே உரிய பாடசாலையை சாதி ஆசாரக்காரர்களின் பேச்சைக்கேட்டு ஆட்சியாளர்கள் ‘பஞ்சமர் ஸ்கூல் ‘ என்று பெயரிடுவதையும் ஆட்சேபிக்கிறார். தாழ்த்தப்பட்ட சாதிகளைத் தனக்குச் சமமாகப் பார்க்கவியலாத தாசரின் இப்பார்வைதான் அவர் கட்டியெழுப்பிய மாற்றுமதம் முழுவெற்றியடையாமைக்குக் காரணம் என்று தோன்றுகிறது.

‘தாசரே பள்ளராக பிறந்திருக்கும் பட்சத்தில் தேவேந்திர குல வேளாளர்கள், இந்திரன் என்ற நாம்பெற்ற புத்தரை வழிபட்ட குலத்தைச் சேர்ந்த வேளாளர் தொழில் புரிந்த பள்ளர்கள் என்றும் இவர்களே புத்த பள்ளிகளில் இருந்து அறம்போதித்தார்கள் என்றும் புனைந்திருக்க வாய்ப்புகள் உண்டு ‘ (பக்கம்-87) என்று உட்குறிப்பெழுதும் கெளதமன் மற்றொரு இடத்தில் ‘இன்றைய தலித் விடுதலை அணுகுமுறைகளை அக்காலத்துக்கு விரித்து யாரும் விசனப்படத் தேவையில்லை. குறிப்பாக தலித் அல்லாத அன்பர்கள் ‘ என்று அரணெழுப்பி தாசரின் பார்வைக்குத் துணைநிற்கிறார். இதே கெளதமன் இன்றைய நவீன பார்வைகளின் அடிப்படையில் எவ்விதத் தயக்கமுமின்றி பாரதியை பிற்போக்குவதி(பக்கம்-110) என்று குறிப்பிடுவது ஆச்சரியமாக உள்ளது.

இத்தகவலின் வெளிச்சத்தில் ‘பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கக் கிளம்பிய பிராமணரல்லாதார் சங்கத்தைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி அவர்கள் சாதிமத ஆசாரங்களை ஒழித்துவிட்டார்களா ? அல்லது அவற்றைத் தழுவிக்கொண்டார்களா ? பிராமணர் வகுத்த சாதிமத ஆசாரங்களை அப்படியே வைத்துக்கொண்டு பிராமணர் அல்லாதார் எனக்கூறுவது வீண் என்றார் ‘ (பக்கம்-114) என்னும் குறிப்பையும் ‘தாசர் புத்தரிடமிருந்து பெற்றுக்கொண்ட அறத்தில் வன்முறையில்லை, ஆதிக்கமில்லை, சமத்துவம் உண்டு. கருணை உண்டு. ஒழுக்கம் உண்டு. புரோகிதம் உண்டு. கடவுள் இல்லை. ஒவ்வொருவருக்கும் தன்னை உயர்த்திக்கொள்ளும் வழிமுறை உண்டு . பகுத்தறிவு உண்டு. சகமனிதனைச் சமமாக மதிக்கும் நேர்மை உண்டு. சாதிமதம் நிறம் பால் இனம் நாடு பொருள் ஆகிய அளவுகோல்கள் இன்றி சகமனிதனை அவனது செயல்களாலும் மொழியாலும் சிந்தனையாலும் பண்பாலும் ஒழுக்கத்தாலும் மதிப்பிடும் அணுகுமுறைகளே உண்டு ‘ என்ற முன்னுரைக் குறிப்பையும் படிக்கும்போது எழும் பெருமூச்சைத் தவிர்க்க முடியவில்லை.

தாசரின் வாத நுட்பமும் அறிவு நுட்பமும் வியக்கத்தக்க விதமாக செயல்பட்டுள்ளதை கெளதமன் பல இடங்களில் குறிப்பிடும் சம்பவங்களிலிருந்தும் கருத்துகளிலிருந்தும் உணரலாம். பெளத்தத் தொன்மையை எல்லாத் தருணங்களிலும் எழுதிவரும் தாசரின் கருத்தை அவமதிக்கும் வகையில் ‘லோகோபகாரி ‘ இதழில் ஒரு வைதிகர் ‘ராமருக்குப் பின்பே புத்தர் தோன்றினார் ‘ என்று எழுதிய வரிகளுக்கு விடையாக வால்மீகி ராமாயணத்தில் இடம்பெறும் காட்சியை எடுத்துக்காட்டாக சொல்கிறார் தாசர். சீதையைத் தேடி இலங்கைக்குச் செல்லும் அனுமார் ஒரு கோபுர உச்சியிலிருந்து ‘இது பெளத்தர்களது விகாரையோ ? ‘ என்று பேசும் பகுதியைச் சுட்டிக்காட்டுகிறார். மேலும் வசிட்டர் ராமனுக்கு ஞானசாதனையைப் போதிக்கும்பொழுது அவரது பாட்டன் உத்தாலகன் புத்தரைப்போல பத்மாசனம் இட்டு அமர்ந்து ஞானசாதனம் செய்ததைப்போன்று செயல்படவேண்டும் என்று போதித்ததையும் எடுத்துக் காட்டுகிறார். அருணாசலக் கவிராயர் ராமநாம கீர்த்தனையில் இலங்கையை ‘பறையர் ஊர் ‘ என்று சீதை பேசுவதாக இடம்பெறும் பகுதியையும் சுட்டிக்காட்டி பெளத்தத்தின் தொன்மையை நிறுவிக்காட்டுகிறார்.

‘பத்திரிகைத் தளத்தில் தாசரின் தமிழன் சுதேசமித்திரனோடு தொடர்ந்து விவாதப்போர் புரிந்தது ‘ என்று குறிப்பிடுகிறார் கெளதமன். ( பக்கம்-75) ஆனால் இவர் சுட்டிக்காட்டும் சான்றுகள் சுதேசமித்திரன் இதழில் வெளியான வாசகர் கடிதங்களுக்கான எதிர்வினைகளாகும். அவ்வாசகர் கடிதங்களின் கருத்துகள் கண்டிக்கத்தக்கன என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. ஆனால் ஒரு பத்திரிகையில் வெளிவரும் தலையங்கக் கட்டுரையை மட்டுமே பத்திரிகையின் பார்வையாக கருதமுடியும் என்றும் வாசகர் கடிதங்கள் பத்திரிகையின் பார்வையைப் பிரதிபலிக்கவேண்டிய அவசியமில்லை என்றும் தோன்றுகிறது.

ஒரு முக்கியமான சம்பவம். ஆலோசனைக் கூட்டத்தில் ‘பறையர் ப்ராப்ளம் ‘ பற்றிப் பேச தாசர் அழைக்கப்பட்டபோது பறையர் சிறுவர்களுக்கு இலவசக்கல்வியும் பறைக்கிராமவாசிகளுக்குத் தரிசு நிலங்களும் தரச்சொல்லி கோரிக்கை விடுத்தார். இன்னொரு முக்கியமான சம்பவம். ஆலயப் பிரவேசத்தடைக்கான காரணத்தை தாசர் தமக்கே உரிய முறையில் விளக்குகிறார். இந்துக் கோயில்களுக்குரிய அரசமரம், தாமரைத் தடாகம், வேப்பமரம் சூழ்ந்த கட்டடங்கள் யோகாசன சிலைவடிவ அறப்பள்ளிகள் ஆகியவை இருந்தன. இவை அனைத்தும் பூர்வபெளத்த சங்கத்தாரின் மடங்களே. பூர்வபெளத்த குடிகளான பறையர்களை உள்ளே நுழைய விட்டால் இவற்றைக் கண்டுபிடித்து தங்களின் மடங்களைக் கைப்பற்றுவார்களோ என்னும் பீதியாலேயே தடை விதிக்கபட்டிருக்கவேண்டும் என்று கருத்துரைக்கிறார். இப்படி ஏராளமான சம்பவங்கள் நூலில் இடம்பெற்றுள்ளன. இவர் பயன்படுத்தியிருக்கும் நூல்களைத் தேடிப் படிக்கும்போது இப்படிப்பட்ட பல சம்பவங்களை நம்மால் தெரிந்துகொள்ள முடியும் என்றே தோன்றுகிறது.

நரசு எழுதிய இரு நூல்களைப்பற்றிய குறிப்பு புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. Essense of Buddihism (1907) என்ற நூல் நரசுவின் வாழ்நாளிலேயே வெளிவந்துள்ளது. 1930 வாக்கில் எழுதப்பட்டாலும் அவர் வாழ்நாளுக்குள் வராமல்போன மற்றொரு நூல் Religion of Modern Buddhist. அதை வெளியிடுவதற்காக அவரிடமிருந்து வாங்கிச் சென்றவர் அம்பேத்கர். எந்தக் காரணத்தாலோ அது வெளியிடப்படாமல்போக கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் கழித்து 2000ல் அலாய்ஸியஸால் அந்த நூல் முதன்முறையாக பதிப்பிக்கப்பட்டது. அந்நூலின் சாரத்தை மிகச்சுருக்கமாகவும் நுட்பமாகவும் கெளதமன் அடுக்கியுள்ள விதம் மனத்தை ஈர்க்கும்படி உள்ளது. எல்லாராலும் உண்மையை, மீட்சியை தன்முயற்சியால் அடையமுடியும் என்ற கருத்திலிருந்து தொடங்கி, பத்துவிதமான புண்ணியங்கள், சுயம் மற்றும் சுயமின் மை பற்றிய கருத்தாக்கங்கள், அட்டாங்கமார்க்கம், அம்மரர்க்கங்களில் ஏற்படக்கூடிய பத்துவிதமான தடைகள், யோகத்துக்கும் தியாகத்துக்கும் இடையிலான வேறுபாடு, ஆன்மா, நிலையாமை, கர்மக்கோட்பாடு என ஒவ்வொன்றைப்பற்றியும் அழுத்தமான குறிப்புகளைத் தொகுத்து முன்வைத்துள்ள விதம் வாசகர்களை ஈர்க்கும்படியும் உடனடியாக மூலநூலைத் தேடிப் படிக்கத் தூண்டும்படியும் உள்ளது.

(க.அயோத்திதாசர் ஆய்வுகள் -கட்டுரைத் தொகுப்பு. ராஜ்.கெளதமன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோயில்-629001. விலை ரூ.100)

—-

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்