பெரிய புராணம் – 59( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )

This entry is part [part not set] of 22 in the series 20051006_Issue

பா.சத்தியமோகன்


1607.

பல பதிகளிலும் நெடிய மலைகளிலும்
படர்ந்த காடுகளும் சென்று அடைவராகி
உயிர் செல்லும் கதியை முன்னமே அளிக்கின்ற
திருக்காரிக்கரை எனும் தலம் வணங்கி
தொன்மையான ஞானங்களின் மன்னரான நாயனார்
தேவர்கூட்டங்கள் பொருந்தியுள்ள
திருக்காளத்தி மாமலை வந்து அடைந்தார்.

1608.

பொன்முகலி என்ற திருநதியில்
புனித நெடும் தீர்த்தத்தில்
முன்பாக முழுகி எழுந்து
திருக்காளத்தி மலையின் தாழ் வரையில்
தலையானது படியுமாறு பணிந்து எழுந்து
சிவந்த கண் உடைய விடையினை ஊர்தியாக உடைய
ஒப்பற்ற பெருமான் நிலையாய் எழுந்தருளிய
அந்த மலை மீது ஏறி வலம் வந்து வணங்குவார்.

1609.

காதில் அணிந்த வெண்மையான சங்குக் குழை உடையவரை
திருக்காளத்தி மலையின் கொழுந்து போன்றவரை
வேதமொழியின் மூலத்தை
கீழே விழுந்து வணங்கி எழுந்து
பெரும் காதலுடன் உள்ளம் களிப்படைய
கண் களிக்கப்
பரவசமாய் இறைவரை வணங்கி
“என் கண் உளான்” என்று முடியும் திருத்தாண்டகம் நவின்றார்.

1610.

மலையுச்சியில் சிகாமணியாய் முளைத்து எழுந்தருளிய
இறைவரின் பக்கத்தில் பொருந்த நிற்கும்
கண்ணப்பநாயனாரின் திருவடிகள் சேர்த்து வணங்கி –
பெருகி வரும் கண்ணீர் அருவிபோல மேனியில் பாய்ந்து இழிய
தலை மீது கூப்பிய கையினராய்
வணங்கி வெளியே வந்து சேர்ந்தார்.

1611.

கலை வாய்மை விரும்பும் காவலரான நாயனார்
மிக உயர்ந்த அந்த மலையில்
திருப்பணி யானவற்றைச் செய்தார்
இறைவரை அம்மலை மேல்தாள்பணிந்த குறிப்பினால்
பேணும் திருக்கயிலைமேல் வீற்றிருந்த
பெரும் கோலத்தைப் பார்க்கும் அதனைக் காதலித்தார்.

1612.

அருள் நோக்கமுடைய அந்த மலை மீது
மருந்தாகிய இறைவரை வணங்கி
அவர் அருளால் பொங்கும் காதலினால்
வடக்குத் திசை நோக்கி போவாராயினார்
பெரிய மலைகள், காட்டாறுகள் –
தொடர்ந்துள்ள நாடுகள் கடந்து சென்றபின்
செங்கண் உடைய சிவபெருமான் வீற்றிருக்கும்
திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம் ) எய்தினார்.

1613.

வன்மை பொருந்திய வித்தியாதரர்கள் , விண்ணுலகத் தேவர்கள்
வானத்தில் இயங்கும் இயக்கர்கள் ,சித்தர்கள் , பாடலில் வல்ல கின்னரர்கள்
நாக உலகத்தவர்கள், விரும்பியவாறு உலவுகின்ற தேவசாதியினர்
சிவஞானியாய் உள்ள ஞானமோனிகள் என
நாள்தோறும் இறைவரை
வந்து இறைஞ்சி நலம் பெறும் இடமான
திருச்சிலம்பு எனப்படும் சைலம் வணங்கி
வளமான தமிழ் மாலை பாடினார்.

1614.

அங்கிருந்து நடந்தார் கடந்தார்
அகன்று போகின்றவர் –
திரிசூலமான கூர்மையான படையை ஏந்திய
ஆத்திமாலை சூடிய இறைவரின்
வெண்மையான திருக்கயிலை மலை நினைந்து
எழுந்ததொரு சிந்தையால்
எவ்விடத்திலும் எந்த சையும் இல்லாமல்
இருபக்கங்களிலும் தம் ஆர்வம் கண்டு
வியப்பெய்தும் அடியார்கள் சேர
தெலுங்கு நாட்டைக் கடந்து
கன்னட நாடு அடைந்தார்.

1615.

கன்னட நாட்டின் எல்லை முடிந்த இடம் சேர்ந்தபின்
கலந்துள்ள காடுகளும் திருநதித் துறைகள் யாவையும் பயின்று
நெடும் தொலைவு நீள்கின்ற மலைவழிகளும்
பெரு நலங்கள் தரும் நாடுகளும் ஆகிய —
எண்ணிலாதவற்றைக் கடந்து
சூரிய நெடும் கதிர்கள் வலமாகச் செல்கின்ற
பூஞ்சோலை உடைய மாளவ நாட்டை அடைந்தார்.

1616.

அந்த இடம் முழுவதும் கடந்து
அரிய காடுகள் கடந்து சென்று
எங்கும் மிக்க அறச்சாலைகள் கொண்ட
இலாடபூமி (வங்க நாட்டின் ஒரு பகுதி) சென்று
மேகங்கள் சுற்றிய மலைகள், வனங்கள், றுகள் கடந்து
தாமரைகள் மலரும் வயல்களையுடைய
மத்திய பைதிரம் (மத்தியப் பிரதேசம்) அடைந்தார்.

1617.

அந்த மத்திய நாட்டையும் கடந்து
கங்கை ஆறு வலமாக அணைந்து செல்லும்
சிவபெருமான் எழுந்தருளும் வாராணாசி எனும் காசியை
விருப்போடு பணிந்து
உடன் வந்த அடியாரை விட்டு விட்டு
கங்கைக்கரை விட்டு மேற்சென்று
பக்தி செய்யும் நாவின் மன்னவர்
மலைக்கானல்களை அடைந்தார்.

1618.

வானத்தை அளாவுமாறு உயர்ந்து வளர்ந்த கானகங்களில்
மனிதர்களால் போக இயலாத பாதைகளில்
இடைவிடாது எழுகின்ற காதல் பொலிந்து எழ
கிழங்குகள் , இலைச் சருகுகள் உண்பதையும் தவிர்த்தார்
பெரும் கயிலாயமான ஒப்பற்ற மலையை அடையும் பொருட்டு
இரவுக்காலத்திலும் தங்காமல் செல்வாராயினார்.

1619.

அத்தகைய செறிந்த இருளில்
சென்று கொண்டிருக்கும் அந்த அன்பரை நெருங்கிக் கொடும் செயல் செய்ய
தீயவிலங்குகளும் அச்சம் கொண்டன
நஞ்சை உமிழும் வாயை உடைய நாகங்கள்
தம் படங்களில் உள்ள மணிகளை ஏந்தி விளக்கெடுத்தன
தேவரேயாயினும் தனியே சேர்வதற்கு அஞ்சுகிற காடுகளை
நாவரசர் அடைந்தவராக –

1620.

அக்காட்டில் கொடிய பகலில்
கதிரவனின் கதிர்கள் பரந்து எங்கும் பரவுவதால்
பிளவுகளின் கீழே உள்ள நாகர்களின் உலகம் வரை செல்கின்றன
பொங்கும் தீயில் வெப்பத்தினால்
அழிவு செய்யும் பாலையினது நிழல் புகுந்த இடத்தில்
பகலின் செவ்விய கதிர்கள் வெம்மையோடு புகுகின்றன
அந்த இடத்தில் மெய்த்தவரான நாவுக்கரசர் சென்றடைந்தார்.

1621.

இவ்வாறு இரவும் பகல்பொழுதும்
பெருஞ்சுரத்தில் செல்பவரான நாவுக்கரசர்
தாமரைமலர் போன்ற தம் திருவடிகள்
பரடு வரை பசைத்தசை தேய்வதினால்
மங்கைபங்கரின் பெரிய வெள்ளி மலைமீது
ஊன்ற வைத்த சிந்தையை மறப்பாரா !
தம் இரண்டு கைகளையும் கொண்டு தாவிச் செல்பவரானார்.

1622.

கைகளும் அசைந்து போகும் மணிக்கட்டுகளும்
தேய்ந்து போய் சிதைந்த பின்
மெய்யுடன் கலந்து எழும் சிந்தையில்
அன்பால் கிய பெரு விருப்பம் மேலும் மேலும் அதிகரிக்க
நெருங்கிய தீ போல
பரற்கல்லின் புகையானது எழும் வழியை அடைந்து
மைகொள் கண்டராகிய சிவபெருமானின் அடியாரான நாவுக்கரசர்
மேலும் மேலும் செல்வதற்காக வருந்தி உந்தினார் மார்பினால்.

1623.

மார்புத்தசைகள் நைந்து சிந்தின
வரிந்து கட்டப்பட்ட மார்பின் எலும்புகள் முரிந்திட
அடைதற்கரிய குறிக்கோள்
நிலை பெற்று நின்ற சிந்தை கொண்ட நேசத்தால்
ஈசனை நேரில் காணும் ஆர்வம்
உயிர் கொண்டு செலுத்துகின்ற உடல் முழுதும் இயக்க
உடம்பு அடங்க அடங்க ஊன் கெடக் கெட
தசைகள் கெடும்படி சேர்வதற்கு அரிய காட்டில்
புரண்டு புரண்டு சென்றார்
செம்மை நெறி நிற்கும் நாவுக்கரசர்.

1624.

அதன்பிறகு புரண்டு செல்கின்ற நீண்ட வழி நடுவே
உடல் அங்கம் எங்கும் தேய்ந்து அரைபட்டதால்
செப்புவதற்கு அரிதான
கயிலாய மலையில் சிந்தை சென்று சேரும் தலால்
திருமேனியின் புறத்து உறுப்புகள் அழிந்தபின்பு
மெல்ல மெல்ல உந்தும் முயற்சியும் நீங்கிவிட்டது
வேறு செய்யும் செயலின்றி தங்கியிருந்தார்
தமிழ் வல்லுநரான நாவுக்கரசர்.

1625.

அத்தன்மையினரான நாவுக்கரசர்
நிலையான இனிய தீந்தமிழ்ப் பதிகங்களை
உலகில் மேலும் துதித்துப் பாடுவதற்காக இறைவர்
கயிலை சென்று அடைவதற்கு அருளவில்லை
நல்ல பெரிய நீர் மிக்க பொய்கை ஏற்படுத்திக் கொண்டு
முனிவரின் திருவுருவத்துடன்
பாம்பைச் சூடிய சிவபெருமான் நடந்து வந்தார்.

1626.

அங்ஙணம் வந்தவர்
நாவுக்கரசரின் பக்கத்தில் நேரே நின்று வருந்தி
அவரைப் பார்த்து
அவரும் தம்மை எதிர் நோக்க
“உம் உடல் உறுப்புகள் எல்லாம் சிந்தி அழியுமாறு
வருந்திய திறத்துடன் இந்த கொடிய பாலையில் வந்தது என்ன திறத்தால் ? “
என வினவினார்.

1627.

அழுக்கில்லாத மரவுரி டையும் திருமார்பில் பூணூலும்
ஒளி பொருந்திய சடை முடியும்
உடம்பில் விளங்கும் வெண் திருநீறும் எனத்திகழும்
குற்றமற்ற மெய்த்தவ முனிவராய் நின்ற இறையை நோக்கி
பேசும் உணர்வு தோன்றவே உரைப்பார் பெரியோர் –

1628.

“வண்டுகள் மொய்க்கும் கூந்தலுடைய மலைமகளான உமையுடன்
வட கயிலாய மலையில் அண்டர்நாயகர் எழுந்தருளியிருக்கும்
அத்தன்மையை-
அவருடைய அடியவனான நான் கண்டு வணங்க வேண்டும்
என்ற விருப்பும் காதலும் அடைந்தேன்
முனியே என் உள்ளம் கொண்ட குறிப்பு இதுவே” எனக்கூற —

1629.

“மிகப் பெரிய கயிலை மலையானது
இவ்வுலக மக்கள் சென்று அடைவதற்கு எளிதோ
கூர்மையான வேல்படை உடைய அமரரும் அணுகுவதற்கு அரிது
வெம்மை மிக்க கொடிய இப்பாலை வனத்திடை வந்து
என்ன செயல் செய்து விட்டார்” என விளம்பி-

1630.

“இங்கிருந்து மீண்டு செல்வீராக
அவ்வளவே இனி உமக்கு கடனாவது” என்று
விளங்கும் தோளிலும் மேனியிலும்
கிடந்து துவள்கின்ற முப்புரி நூலுடைய முனிவரான இறைவர் உரைத்தார்
அவ்வாறு உரைத்ததும் –
“என்னை ளும் நாயகன்
கயிலையில் இருக்கும் கோலத்தை காணாமல்
அழியும் இவ்வுடல் கொண்டு திரும்பிச் செல்லமாட்டேன்” என்று மறுத்தார்.

1631.

ஆங்கு நாவுக்கரசரின் துணிவை
உலகம் அறியவேண்டும் என விழைந்த இறைவர்
நாவுக்கரசர் –
தம்மை இன்னார் என அறிந்து கொள்ளும்படி —
நீங்குகின்ற முனிவரான இறைவர்
வானத்தில் மறைந்து
நீள்கின்ற மொழியால் (அசரீரீ)
“ஓங்கு நாவினுக்கரசனே எழுந்திரு “என்று உரைக்க
தீங்கு நீங்கிய உடலுடனே எழுந்து ஒளியில் விளங்குவார் ஆகி –

1632.

“அண்ணலே
எனை ண்டு கொண்டு அருளிய அமுதே
விண்ணிலே மறைந்து அருள் புரியும் வேதநாயகனே
கண்ணினால் திருக்கயிலை மலையில் இருந்த நின் திருக்கோலம் கண்ணால் நான்
கண்டு தொழ நயந்து புரிவீராக” எனக்கூறி வேண்டி
கீழே விழுந்து பணிந்தார் நாவுக்கரசர்.

1633.

அவ்வாறு தொழுது எழுந்த நற்தொண்டரை நோக்கி
விண்தலத்தில் எழும் (அசரீரீ) திருவாக்கினால்
“இப்பொய்கையில் முழுகி
நம்மை நீ திருக்கயிலையில் வீற்றிருக்கும் அம்முறையை
குற்றமிலா சிறப்புடைய திருவையாற்றில் சென்று காண்பாயாக”
என இறைவர் பணித்தார்.

1634.

ஏற்றினார்
அவர் அருளை தலை மீது கொண்டார்
சிவபெருமான் திருவருளை இறைஞ்சினார்
“வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி”
எனத் தொடங்கும் திருப்பதிகத்தால் விரும்பித் துதித்தார்
திருவருள் ஆற்றல் பெற்ற அந்த அண்ணலார்
அஞ்செழுத்து ஓதி
பான்மை பெற்ற பெரிய நல்ல நீர்ப் பொய்கையில் மூழ்கினார்.

1635.

ஆதிதேவரான சிவபெருமானின் திருவருட்பெருமை எவர் அறிவார் ?
உலகெலாம் வியப்பு அடையுமாறு
ஞானத் தவமுனிவரான நாவுக்கரசு நாயனார்
பனிமலையில் விளங்கிய அந்தப் பொய்கையில் மூழ்கி
மாதொரு பாகனாகிய சிவபெருமான் வீற்றிருக்கும்
திருவையாற்றில் ஒரு பொய்கையின்மேல் வந்து விழுந்தார்.

1636.

மணம்கமழ் பூக்கள் பொருந்திய
பொய்கைக் கரையின் மீது ஏறி
சிவபெருமானின் பெருமையை தன் அனுபவத்தில் உணர்பவராகி
“எம் இறைவர் அருளும் கருணை இதுவோ” என
இருகண்களும் ததும்பிப் பொங்கி
தாரையும் வழியும் கண்ணீரின் பொய்கையுள் மூழ்கி
எழுகின்ற தன்மை உடையவர் கி-

1637.

நெருங்கும் நீண்ட கொடிகள் கட்டிய வீதிகளால் விளங்கும் திருவையாற்றில்
எழுந்தருளும் நாயகரான சிவபெருமானின் சேவடிகளை வணங்கும் பொருட்டாக
வருகின்ற நாவுக்கரசர் அத்தலம் அடைந்ததும்
நிற்பவையும் உலவுபவையும் ஆகிய
சரம் அசரம் ஆகிய யாவும்
அருகில் விளங்கிய தத்தம் பெண்ணுடன் கூடி விளங்கும் தோற்றம் கண்டார்

( திருவருளால் தொடரும் )

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்