பெரியபுராணம் – 28 – ( கண்ணப்பநாயனார் புராணம் தொடர்ச்சி )

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

பா.சத்தியமோகன்


711.
காலில் வீரக்கழல் விளங்க
திருப்பாதங்களில் பொருந்துமாறு தொடும்
நீடு செருப்பினை விருப்புடன் அணிந்து –
பாரமான வில்லை வலம் செய்து வணங்கி
திண்ணன் தம்தோள் பொருந்த வைத்து
வளைத்து நாண் ஏற்றி வியந்து தாங்கி —
712.
அங்கு அப்பொழுது உலகத்தின் இடர் வாங்க
ஓங்கி உயர்ந்த பெரிய கரியமேகம்
துண் என்று ஒலிப்பது போன்றும்
கொடிய சினத்துடன் கண் சிவந்த பெரிய விலங்குகள் நீங்கவும்
செங்கைத் தலத்தால் தடவி சிறு நாண் ஒலிக்கச் செய்தார்.
713.
வலிய சிங்கம் போன்ற திண்ணனார்
பலவகை அம்புகளை அம்புக்கூட்டில் தேர்ந்து கொண்டு
வேவுகாரரை தம்முடன் வரச் சொன்னார்
சிறு உடுக்கைகள் ஒலிக்கும் வில்வேடர் கூட்ட முன்றிலுக்கு வந்தார்
விதவித மான சொல்லால்
அவரை வாழ்த்தும் ஒலிகள் திசைதோறும் விம்மின.
714.
பெரும் வில்கொண்ட வேடர்
திண்ணணாரின் பக்கம் நெருங்கிய போதில்
நீலோற்பலப் பூக்களின் தொகுதிபோல ஒளிவீசும் திண்ணணார் முன்
தேனும், தசையும், கள்ளும், சருவும், பொரியும் மற்றுமுள்ள
பொருட்களால் கானப்பலி செய்த தேவராட்டி அங்கு வந்தாள்.
715.
திண்ணணார் அருகில் மொய்ப்பதுபோல் நின்ற சிலை வேடர்கள் ஒதுங்க
அவர் திரு நெற்றியில் அட்சதை சார்த்தி
?உன் தந்தை தந்தைக்கும்கூட இந்த நன்மைகள் உள்ளன அல்ல!
உன் வன்மை மிகவும் பெரிது
நம் அளவில் இது அடங்காது ? என வாழ்த்தினாள்.
(சிலை வேடர் : வில்வேடர்)
716.
அங்ஙணம் வாழ்த்திய அம்முதிய அணங்கை
செப்புதற்கரிய சிறப்புகள் செய்து அனுப்பினார்
வலியவில்லை கையில் பற்றி
கார்மழை மேகம் போல
பொலிவு கொண்ட வேட்டை மேற்கொள்ளப் புறப்பட்டார்.
717.
காலில் செருப்பு அணிந்து
விரிந்த தோல் கட்டிய நீண்ட ஆடை அணிந்து
அம்புகளுடன் வில் ஏந்திய கைகளுடன்
வெம்மையான சிவந்த கண்களுடன்
ஆண்சிங்கம் போல ஏகும் திண்ணனார் முன்
எண்ணற்ற கூட்டம் மிகுதியாய்ப் புறப்பட்டதே.
718.
வன்மையுடைய சங்கிலியால் கட்டிய கயிற்றை
வலிய கைகளில் பள்ளர் கொண்டதால்
வெற்றி மங்கையின் பாதம் முன்னர் சென்று நீள்வது போல
சிவந்த நாக்குகள் தொங்கும் வாயுடைய நாய்கள்
ஒன்றுடன் ஒன்று பொருந்தாமல் ஓடின.
719.
வலைத் தொழிலையும் வில்தொழிலையும் பக்கத்தில் செய்ய
அச்சார்பை தொடக்கம் முதலே அறுக்கின்ற
வல்லமை மிக்க திண்ணணாரின் முன்
மேகவலையினால் படுத்த குன்றுடன் கூடிய காட்டை வளைக்க
நீண்ட வார் வலை சுமந்த வேடர்கள் சென்றனர்.
(அச்சார்பு – அநாதியாகிய பிறவிப் பிணி)
720.
பெருமைமிகு வேதங்கள் ஒன்றுகூடித் தேடும்படி நீள்கின்ற
அக்குளிர் நிலவும் அடம்பப்பூவும் கொன்றை மலரும்
தங்கும் சடை உடையார் தமை
கண்ணில் நீண்ட பார்வையொன்று கொண்டு
காணும் திண்ணனார் முன்
எண்ணிலாப் பார்வை கொண்டு வேடர் எப்புறமும் சென்றனர்.
721.
ஊதுகொம்பு வாத்தியங்கள் முழங்க
குறுகிய முகமுடைய பறைகள் ஒலிக்க
அருகில் பம்பை கொட்ட
தொகையாய் ஒலிக்கும் கைத்தட்டுகள் சிறப்புடைய ஓசை எழுப்ப
பெருந்திரளாய் எழுந்த வேடர்கூட்டம் பலபக்கமும் வளைந்து சென்றதே.
722.
நெருக்கமான பசுமரக்கூட்டங்கள் நீண்ட
காட்டை அடைய நேர்வரும்
பெரும் கரிய வில் சேனையானது
பேரலை கடல் பரப்பின் இடையே புகும்
அலைமிக்க காளிந்தியாறு ஒத்திருந்தது.
723.
தென்திசை மலையுடன் கூடிய காட்டில்
மானினம், பன்றி,கொடியமரை மற்றும் பலவகை விலங்குகள்
கூடி நின்றன என்று அவற்றின் அடிச்சுவட்டினால் கண்ட ஒற்றர் சொல்லவே
வலிய தம்கைகளில் வார்கள் கொண்டு
எல்லாப்பக்கமும் வேடர் ஓடினார்.
724.
காட்டுமரக்கிளை ஒடித்து
வாரை நீளமாகக் கட்டி
யோசனை அளவுள்ள பரப்பு முழுதும்
நெடிய திண்மையான வலையின் கட்டுகளை நீண்ட வெளிகளில் கட்டி
பார்ப்பவர் அஞ்சும்படி பரந்த காட்டை
காவல் செய்து முடித்தபின் சிறிய புதர் போன்ற தலையுடைய வேடர்கள்
திண்ணணார் முன்பு கூடினர்.
725.
வில் ஏந்திய வீரரான திண்ணணாரும் பிற வேடர்களுடன் கூடி
மஞ்சு அலையும் மாமலைச் சரிவில் வந்த விலங்குகளை அஞ்ச வைத்த
அடக்கும் நாய்களைப் பலபக்கம் ஓடவிட்டு
நீண்ட செம்மையான அம்புகளோடு புகுந்தார் காவல் செய்யப்பட்ட காட்டினுள்.
(மஞ்சு : மேகம்)
726.
கானகத்தில் கொடிய விலங்குகளை எழுப்ப
நாய்களை ஏவி
வேடர் கூட்டம் கூடி
எய்யும் அம்புகளை எடுத்துக் கொண்டு
எங்கும் மொய்த்த குரலை உடைய உடுக்கைகளும் பம்பைகளும்
அதனுடன் கைதட்டல்களும் ஒலித்தனர்.
727.
காட்டுப்பன்றிகளுடன் மான்வகைகள்
கரடிகள், வன்மையான கலைமான் கூட்டங்கள்
காட்டெருமைகள், யானைகள், கொடிய புலிக்கூட்டங்கள்
காட்டுமரைகள் எனும் இவ்விலங்குகள் பலவிதமாக அஞ்சி எழுந்து பாய
சேனை வேடர்கள் அவை மீது சீறி வீழ்த்தினர் அம்புகளால்.
728.
கலைமான்களில் பல –
கால் அற்றன
இடை துண்டுபட்டன
தலை துண்டுபட்டன
மரை இனத்துள் சில பாய்ந்த அம்புகளுடன் குடல் சரிந்தன
கூட்டமான காட்டுமாக்கள்
வேடர் அம்பு பாய்ந்து ஊடுருவிச் செல்ல
வருத்தத்துடன் நிமிர்ந்தன
பல உழைமான்கள் உடல் துள்ளிச் செத்தன.
729.
பன்றியின் பிடரி அம்பினால் கிழிந்தது
விசையுடன் பிளந்த புண்ணிலிருந்து ரத்தம் விட்டது
மேலும் அம்புகள் செறிய அவ்வம்புகள்
பாய்ந்தோடி வந்த புலியின் பற்களில் ஊடுருவி
அதனையும் இழுத்து வந்த காட்சி
பன்றியைப் புலி கவர்ந்து செல்வது போலிருந்தது.
730.
பின்புறமிருந்து மறவர்கள் விடும் அம்புகள்
கலைமானின் வயிற்றில் ஊடுருவி
முன்பக்கம் முகத்தின் வழி உருவிட
முடுகிய விசை தீராத அவ்வம்புகள் எதிரோடிய
பிறிதொரு மானின் முகத்திலும் பாய்ந்து ஊடுருவும் காட்சி
இருவகை மான்கள் எதிரெதிர் போர் செய்வன போலக் காட்டிற்று.
731.
கரியமலை வில்லோடு விசையோடு ஓடிவந்தது போன்று
வேட்டையாட நேர் வந்த திண்ணணார் எய்த அம்புகள்
போர் செய்யும் யானையோடும் சினமிகு சிங்கத்தோடும்
உடலில் புகுந்து சென்று
எதிர்படும் விலங்குகளைக் கொலை செய்தன
அவ்விதம் யானைகளும் சிங்கங்களும் இறந்த காட்சி
இரவோடு பகல் கூடியதைப் போல இருந்தது.
732.
நீண்ட வான்வெளியில் வேகமுடன் குதித்து
நெடுமுகில் தொட எழுகின்ற மான்களை
வீரக்கழல் மறவர்கள் விடும் சரம் தொடர்ந்த காட்சியோ
சந்திரனைப் பிரியாமலிருக்க அம்மண்டலத்திலிருந்து
கீழே விழும் மானை
இராகு என்ற பாம்பு தொடர்ந்து பற்றுவது போலிருந்தது.
733.
கூட்டமான கரிய மரைகள் கரடிகள்
கொல்லும் அம்புகள் தைத்து
அடிநிலை இல்லாது சுழன்று
அடர் தழைகள் புதர்கள் நிறைந்த காட்டில்
வரிசையாய்ப் படர்ந்து வீழ்ந்த காட்சி
கடலில் பரந்துள்ள நீரை மொள்ள விழுகின்ற கருமுகில் போல இருந்தது.
734.
பலவழிகளில் கட்டிய வலைகள் அறுமாறு
பயமுடன் நுழையும் விலங்குகள் கல்வழி செல்ல முற்பட
உறுசினமொடு நாய்கள் கவர்ந்தன.
பிறப்பு இறப்பு எனும் இருவினை வலையிடை அகப்பட்டு
நிலை சுழல்பவரின் உள்ளத்தை
தடை செய்யும் ஐம்பொறிகள் போல் அவை இருந்தன.
735.
பறை போன்ற கால்களுடன் மடிந்த காதுகளுடன்
நெருங்கி வரும் யானைக்கன்றுகளையோ
அடி தளர்ந்து நடக்கும் கர்ப்பம் கொண்ட பெண் விலங்குகளையோ
துன்பம் செய்யமாட்டார்கள் –
கொடிய விலங்குகளை மட்டுமே கொலை செய்யும் மறவோர்.
736.
இவ்வகையான —
கொலை மறத்தொழில் வேட்டை நிகழ்ந்தது
யானைகளும் அஞ்சும்படி காடே அதிரும்படி
இடிக்குரலோடு மழை பெய்யும் கரியமுகில் போல் முழங்கி
கண்களில் தீ உமிழ கட்டிய வலைகள் அறுந்து போகும்படி
முடுகிய விசையுடன் அப்போது ஓடியது ஒரு பன்றி.
737.
வலிமையுடன் போர் செய்யும் வேடர்களுக்கு
ஆண்சிங்கம் போன்ற திண்ணணார்
தொடர்ந்து பிடிக்கும் வேகமுடன்
அப்பன்றி செல்லும் அடிச்சுவடு பற்றிச் செல்லும்போது
பிறவேடர் அறியாமல் தனியாகவே போனார்
அப்போது –
அம்பால் வேட்டை முறையில் கொல்கின்ற வில்கையுடன்
இரு வேடர்கள் –
738.
நாடிய வீரக்கழல் தரித்த நாணனும் காடனும்
எனும் இருவரும் மலைக்காவலரான திண்ணணாரோடு
கடிதில் கூடினர். உதவினர்.
எய்கின்ற அம்புகள், கொலை செய்யும் நாய்கள்
யாவுக்கும் தப்பி மலைச்சாரல்
மரநிழல்களில் விரைவுடன் ஓடிற்று பன்றி.
739.
குன்றி மணியை நிகர்த்த
எரிகின்ற இயல்புடைய கொடிய கண்ணும்
இடி போன்ற குரலும் உடைய பெரிய பன்றி
மிக்க வன்மையுடயன் ஓடும் வழியிலே
குன்றின் அடியில் மலையைச் சுற்றிய சூழலிலே
செல்வதற்குரிய வலிமை இழந்து மரக்கூட்டத்திடையில் நின்றது.
740.
கொலை செயல் கொண்ட வேடர் குலத்தலைவர்
அம்மரம் வளர் சூழலில் அதன் நிலை அறிந்து
தம் அம்புகளால் கொல்ல எண்ணவில்லை
எதிர்த்து நேரே போர் செய்து கொல்ல எண்ணி
ஒளி வீசும் வாள் உருவி உடல் துண்டாகக் குத்தினார்.
741.
கரியமேனியும் சிவந்த கண்ணுமுடைய
வேடர் தலைவர் திண்ணணார் விசையுடன் குத்த
பக்கத்தில் இரு துண்டாய் விழுந்த வராகம் கண்டான் நாணன்
?காடனே! இதன்பின் இன்று பல காதங்கள் ஓடிக்கடந்து களைப்பானோம்
வீரரான ஆடவன் கொன்றார், அச்சோ ! ? என்றான் நாணன்.
பின் இருவரும் அவர் அடியில் விழுந்து வணங்கினார்.
742.
பிறகு அவர்கள் மொழிகின்றார் – திண்ணணார்க்கு:
?நீண்ட வழி கடந்து வந்ததால் உற்றது பசி எமக்கு
இப்பன்றியைத் தீயில் காய்ச்சிச் சற்று நீ அருந்தி
யாமும் தின்று தண்ணீர் குடித்து
வெற்றியுடைய வேட்டைக்காட்டை மெல்ல அடைவோம் ?
743.
என்று அவர்கள் கூறவும் அவர்களை நோக்கிய திண்ணணார்
தண்ணீர் எங்கே இவ்வனத்தில் உள்ளது என்றதும்
நாணன் சொன்னான்:
?முன்னால் உள்ள தேக்கின் மறுபுறமும் சென்றால்
குன்றினுக்கு அருகில் ஓடுகிறது
குளிர்ந்த பொன்முகலி ஆறு என்றான்.
744.
பொங்கிய சினமும் வில்லும் கொண்ட
நாணன் எனும் வேடன் சொன்னபின்
?இங்குள்ள இப்பன்றியை
அங்கே கொண்டு போவோம், போதுமின் ? எனக்கூறி
தாமும் சென்றார் திண்ணணார்.
அரைக் காவதத் தொலைவில் கண்டதோ
செங்கண்ணும் காளையூர்தியும் கொண்ட
வைகுந்தத் திருமலை எனும் காளத்தி மலைச் சாரல் சோலை.
745.
?தோன்றும் இக்குன்று செல்வோம் நாணனே ?
என்றதும் நாணன் பகர்ந்தான்:
?காண நீ சென்றாயாயின் நல்ல காட்சியே காணப்படும்
வானத்தில் உயர்ந்து நிற்கும் திருக்காளத்தி மலை மீது எழுந்து
செம்மையுறக் கோணத்தையில்லாது செய்யும்
குடுமித்தேவர் இருப்பார் கும்பிடலாம் ? என்றான்.
746.
?என்ன ஆகிறது எனக்குள் ?
நெருங்கிச் செல்லும் தோறும் என்மேல்
பாரம் ஒன்று போவது போல உள்ளது
ஆசையும் பொங்கி மென்மேலும் பொருந்திய நெஞ்சமும்
வேறொரு விருப்பம் கொண்டு விரைவுடன் செல்கிறது
இறைவர் அங்கிருப்பதெங்கே ? போ !அங்கே ? என்றார் திண்ணணார்.
747.
திண்ணணார் உரை செய்து விரைந்து செல்ல
அவ்விருவரும் உடனே விரைய
இருகரையும் வளரும் மூங்கிலின் முத்தும்
கார் அகில் கட்டையும் சந்தன மரமும்
மலைவிளை மணியும் பொன்னும் வயிரமும்
மணல் குவியல்கள் தோறும்
திரட்டி வைக்கும் திருமுகலி ஆற்றை அடைந்தனர்.
(திருமுகலி – பொன்முகலி)
748.
ஆங்கே ஆற்றின் கரையின் பக்கத்தில்
அமைதியான மரநிழலில் பன்றியை இட்டுவிட்டு
வில்லேந்திய காடன் தன்னை திண்ணனார் :
?நீ தீக்கோலால் தீ பண்ணி ஈங்கு நெருப்பு காண்பாய்
இம்மலை ஏறிக்கண்டு நாங்கள் திரும்புவோம் ? என நாணனுடன் சென்றார்.
749.
வண்டு மொய்க்கும் கரை சூழ் சோலை மலர்கள்
தாங்கியவாறு அணைந்த பொன்முகலி ஆற்றின்
தெளிவான நீரில் இறங்கி சிந்தை தெளிவுறும் திண்ணணாரின்
களிவரும் மகிழ்ச்சி மேலும் பொங்க
திருக்காளத்தி கண்டு கொண்டு
குளிர்வுடன் வரும் ஊடே சென்று உயர்ந்த மலைச் சாரல் சேர்ந்தார்.
750.
கதிரவன் வான் உச்சி அடைய
கடவுள் தன்மை கொண்ட அம்மலை உச்சியில்
தேவதுந்துபி தரும் ஓசை
கடல் ஒலிபோல் முழக்கம் காட்ட
?இது என் கொல் நாணா ? ? என நாணனை வினவ
?இம்மலையைச் சூழ்ந்த பெருந்தேனை
மதுமலர் ஈக்கள் மொய்த்து
பக்கங்களில் எழும் ஒலி போலும் ? என்றான் நாணன்.
751.
முன்பு செய்த தவத்தினால் உண்டான
முடிவிலா அன்பினை எடுத்துக்காட்ட
அளவிலா ஆர்வம் பொங்கி
மிகப்பெருங் காதலாக மலர
வள்ளன்மையுடைய சிவபெருமானின் மலை நோக்கி
எலும்புகள் உருகி உள்ளத்தில் எழுந்த பெரிய வேட்கையோடும் –
752.
நாணனும் அன்பும் முன்னே மலையேறிச் செல்ல
தாம் பேணுகின்ற தத்துவங்களென்னும் படிகள் ஏறி
சக்தி வடிவமான சாரத்தை சார அணைக்கின்றவர் போல
எம்பெருமானின் நீணிலை திண்ணணார் ஏறி நேர்படச் செல்லும்போது –
753.
திங்கள் அணிந்த சடையாரைக் காணும் முன்பே
இறைவரின் கருணை கூர்ந்த அருட்திரு நோக்கம் கிடைத்தது
முந்தைய பிறவிப் பாவங்கள் அவரை விட்டு அகல நீங்கிட
பொங்கிய ஒளியின் நிழலில் அன்பே தமது உருவம் என ஆனார்.
754.
வானத்தை அளாவி நிறைந்து ஓங்கிய திருக்காளத்தி மலையில்
கொழுந்தாய் உள்ள ஏகநாயகர் சிவனைக் கண்டார்
எழுந்தது பேருவகை.
அன்பின் வேகம் மேற்செல்ல மிக்க விரைவுடன்
மோகம் கொண்டு ஓடிச்சென்றார்
தழுவினார் உச்சி மோந்து நின்றார்.
755.
நெடிய நேரம் உடல்மயிர்க்கால் புளகாங்கிதம் பெருகி
மலர் போன்ற கண்ணிலிருந்து நீர் அருவி பாய
?அடியவனுக்கு இவர்தாம் இங்கே அகப்பட்டார், அச்சோ! ? என்று
தமக்குள் கூறி ஒப்பிலா அன்பின் ஒரே வடிவம் ஆனார்.
756.
கொடிய வேடர் குலத்தில் வந்த வேட்டுவச் சாதியார் போல்
யானை, கரடி, வேங்கை, சிங்கம் உலவும் காட்டில்
உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவர் இல்லையே! ஓ! கெட்டேன்
நீவீர் இம்மலையில் தனியே இருக்கிறீரே என மனம் நைந்தார்.
757.
காளை போன்ற திண்ணனார் தம் கைவிட்டு வில் விழுந்ததும் உணராதவர் ஆகி
பச்சிலையோடு பூவும் பறித்து நீரும் வார்த்து
நல்ல இச்செயல் செய்தார் யாரோ என்றதும்
அருகே நின்ற வில் ஏந்திய நாணன்
?நான் இது அறிந்தேன் ? எனச் சொல்ல ஆரம்பித்தான்.
758.
வலிய ஆற்றலுடைய உன் தந்தையுடன்
பெரும் வேட்டை ஆடி பண்டைய நாளில்
குன்றிடை வந்தபோது குளிர்நீரால் இவரை நீராட்டி
ஒன்றிய இலையையும் பூவையும் சூட்டி
உணவும் ஊட்டி
முன்னே சில சொற்களும் சொல்லும் ஓர் பார்ப்பான்
அன்று இதனைச் செய்தான்
இன்றும் அவனே செய்திருக்க வேண்டும் என்றான் நாணன்.
759.
மனதில் நிறைந்து தேன் எழ
இடையீடு இல்லாது அன்பு பெருகி எழ
திண்ணணார்
?திருக்காளத்தி நாயனாரான குடுமித்தேவருக்கு
இனிய செயல்கள் இவைதான் போலும் ? எனக்கருதி
தாமும் அதனை மேற்கொண்டார்
அண்ணலான குடுமித்தேவரைப் பிரிய மனமிலாது அன்பு பெருக –
760.
இவரைக் கண்ட எனக்கு இவர் இங்குத் தனியாய் இருந்தார்
என்னே! இவருக்கு உணவுபடைக்க இறைச்சி இடுவார் இல்லை
இவர் தம்மைப் பிரியவும் இயலாது என் செய்வேன்
இனியான் இவருக்கு வேண்டுமளவு இறைச்சி கொணர்ந்து
சேர்த்திட வேண்டுமென்று எண்ணி –
(திருவருளால்தொடரும் )
cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்