பெண்மனம்

This entry is part [part not set] of 34 in the series 20100206_Issue

முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை


விடிந்து நிறைய நேரமாகிவிட்டது. பால்காரர் மணியடித்துக் கொண்டே செல்வது, மாடு மேய்ப்பவர்கள் த்தா! தே! என்று மாட்டை விரட்டிக்கொண்டு செல்வது நாற்று நடச் செல்லும் பெண்கள் சலசலவென்று பேசிக்கொண்டே சென்றது என அனைத்தையும் கேட்டவாறே குடிசைக்குள் படுத்திருந்தாள் முத்தம்மா.

அவளது கண்கள் மூலையில் இருந்த தண்ணீர்க் குடத்தையே நோக்கின. குடத்தில் ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை. நேற்று குழாயடியிலிருந்து வெறும் குடமாகக் கொண்டு வந்து கவிழ்த்தது அப்படியே இருந்தது. குடத்தைப் பார்த்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாக் கொட்டியது.

நேற்று குழாயடியில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. அன்று தண்ணீர் பிடிப்பதற்காக சுமார் எட்டு மணியளவில் குழாயடிக்குச் சென்றாள் முத்தம்மா. ஐந்து மணியிலிருந்தே தெருக்குழாயில் தண்ணீர் வரும். இத்தனை நாளும் முத்தம்மாளும் ஊரார் எழுந்திருப்பதற்கு முன்பே எழுந்திருந்து வாசல் தெளித்துத் தண்ணீர் பிடித்து விடுவாள். முந்தாநாள் கலெக்டர் ஆபீஸ் சென்று வந்ததிலிருந்து இரவு முழுக்க அழுதுகொண்டே இருந்ததில் விடியற்காலை கண் அயந்துவிட்டாள். அதனால்தான் விடிந்ததன் பின் தண்ணீர் பிடிக்கப் போனாள்.

எட்டு மணிக்கு மேல் சென்றதைக் காரணமாக வைத்துக் குழாயில் பெண்கள் பேசிய பேச்சு இருக்கிறதே! அப்பப்பா! ஒவ்வொரு சொல்லும் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல இவள் குடத்தைக் கொண்டு தெருவில் நடந்தபொழுதே இவளை பார்த்த பெண்கள்
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிக் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற”
என்ற பரணர் பாடல்போல ஒருவருக்கொருவர் ஜாடை காட்டியதைக் கவனித்தாள். குழாயை நெருங்கியவுடன் இராமாயி ஆரம்பித்தாள்.

என்னக்கா நல்ல தூக்கமா! ஆமா, இனிமே உனக்கென்ன கவலை. பன்னிரண்டு மணி வரையில்கூடத் தூங்கலாம் என்றாள் நக்கலாக.

காமுத்தாயோ, இனிமே அக்கா நம்மளோட கூலி வேலைக்கெல்லாம் வரமாட்டாங்க. அக்கா என்ன முன்னமாதிரி கூலிக்காரியா? என்றாள்.

நம்ம மாதிரி காடு, கரைன்னு அலையாம சொகுசா வீட்டில் இருப்பாக! இப்ப மதினி இலட்சாதிபதி இல்லே என்றாள் மற்றொருத்தி.

அத்தை மாதிரி அதிஷ்டம் யாருக்கு அடிக்கும் என்று ஏக்கப் பெருமூச்சு விட்டாள் ஒருத்தி. இப்படி பொறாமை, கிண்டல் என அனைத்தும் குழாயடியிலிருந்த பெண்களின் பேச்சில் வெளிப்பட்டது.

நேற்றுவரை தாயாய், பிள்ளையாய் பழகியவர்கள் இன்று இப்படிப் பேசியதைக் கேட்டவுடன் முத்தம்மாவால் தாங்க முடியவில்லை. அழுதுகொண்டே வெறுங்குடத்தைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்கு ஓடிவந்து விட்டாள். பெண்கள் அனைவரும் இப்படிப் பேசுவதற்குக் காரணம் தனக்குக் கிடைத்த ஒரு இலட்சம் ரூபாய் பணம் என்பது நன்றாகப் புரிந்தது.

இந்தப் பணம் எதற்காகக் கிடைத்தது என்று நினைத்தபோது அவள் இதயம் இரத்தக்கண்ணீர் வடித்தது. நடந்தவை அனைத்தும் அவள் கண்ணில் ஒரு திரைப்படம் போல ஓடியது.

ஓராண்டுக்கு முன்பு அன்று வெள்ளிக்கிழமை, வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்த முத்தம்மா வீடு முழுவதையும் பசுஞ்சாணமிட்டு வழு, வழு என்று மொழுகினாள். அடுப்பிற்கு, நடைக்கு, தண்ணிச்சால் என அனைத்திற்கும் கோலமிட்டு அழகுபடுத்தினாள். ரேசன் கடையில் வாங்கிப் புடைத்து வைத்திருந்த அரிசியை உலையிலிட்டுச் சோறு வடித்தாள். பூசாரி தோட்டத்தில் இருந்து பறித்து வந்திருந்த அவரைக்காய் வைத்துக் குழம்பு வைத்தாள். கிணறு வெட்டச் சென்ற கணவன், மகனுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்.

மகன் முருகனை நினைத்தவுடன் முத்தம்மாளின் மனதில் மகிழ்ச்சி பொங்கியது. எப்பேர்பட்ட பையன். ஊரில் அவனையொத்த இளந்தாரிகள் குடி, சீட்டு, பெண் சகவாசம் என்று அலைந்து கொண்டிருக்க எவ்விதக் கெட்ட பழக்கமும் இல்லாமல் இருப்பவன். அவள் கணவன் கூட இவன் நமக்குப் பிறக்க வேண்டிய பிள்ளையே இல்லை. இவன் அறிவும், ஒழுக்கமும் இங்க யாருக்கு இருக்கு. ஏதோ நமக்குப் பொறந்து இப்படி கிணற்றிலும், மேட்டிலும் கிடந்து அல்லாடுது என்பான்.

எட்டாவது வரை உள்@ர் பள்ளிக்கூடத்தில் படித்தான். அதற்குமேல் படிக்க வைக்க இயலாததால் வீட்டின் க~;டத்தை உணர்ந்து தானும் தந்தையுடன் கிணறு வெட்டும் வேலைக்குச் செல்லத் தொடங்கினான். அவனும் வேலைக்குப் போன பின்புதான் மூன்றுவேளைச் சாப்பாடு வீட்டில் நடைமுறைக்கு வந்தது.

அன்றும் காலையில் கிணறுவெட்டச் செல்லும்பொழுது, அம்மா பண்ணையார் வீட்டில் எல்லாம் அழகழகா போட்டாபுடுச்சுப் போட்டுக்காங்க நாமளும் ஒரு போட்டா எடுப்போம். சாயந்திரம் சம்பளம் வாங்கிட்டு சீக்கிரமா வந்துருவோம். நாம மூணுபேரும் போடிக்குப் போய் போட்டா எடுத்துட்டு வருவோம் என்று கூறிச்சென்றான்.

வேலைக்குச் சென்றவர்கள் வருவதற்காகக் காத்திருந்த முத்தம்மாவை நோக்கி ஓடிவந்த மூக்கையா, அத்தே! அத்தே! முருகன் நம்ம முருகன் என்றான் அதற்குமேல் பேச்சு வராமல்
என்னடா முருகனுக்கு என்ன! என்று அவனைப் பிடித்து உலுப்பினாள் முத்தம்மா.
வேகமாக ஓடிவந்தது மூச்சிரைக்க முருகன் கிணற்றுக்குள் விழுந்து செத்துப் போனானாம் என்றான். அவன் சொல்லி முடிக்குமுன் அப்படியே மயங்கி விழுந்த முத்தம்மாளைக் கண்டு ஊரே குடிசையின் முன் திரண்டுவிட்டது.

முருகனின் பிணத்தை கயிற்றுக் கட்டிலில் போட்டு வீட்டுவாயிலில் கொண்டு வந்து வைத்தனர். மகனைப் பிணமாகக் கண்ட முத்தம்மாள் அழுத அழுகை கணவனை இழந்த கண்ணகி அடைந்த துயரத்தையும் மிஞ்சியது.

முத்தையனும், முத்தம்மாளும் குடிசையில் ஆளுக்கு ஒரு பக்கம் சுருண்டு கிடந்தனர். அழுது அழுது கண்ணீரும் வற்றிவிட்டது. என்னைக் காப்பாத்துறேன்னு வந்து நீ இப்படிப் போயிட்டியே! நான் எதற்கு இனி உயிரோடு இருக்கனும் என்று முத்தையன் தலையிலடித்துக் கதறியபோது தான் தெரிந்தது முருகன் எப்படி இறந்தான் என்று.

கிணற்றுக்குள்ளிருந்து வெட்டியெடுக்கப்பட்ட பாறைகள் கமலை மூலமாக மேலே செல்லும்பொழுது கயிறு அறுந்து அப்படியே கிணற்றுக்குள் விழுந்தது. பாறைகள் தந்தையின் தலையில் விழுந்துவிடுமே என்று தந்தையை இழுத்துத் தள்ளிவிட்டு அதைத் தன் தலையில் ஏற்றுக்கொண்டான் மகன். தலையில் அடிபட்டதால் அங்கேயே உயிர்போய்விட்டது என்பதை முத்தையன் அழுகையின் வழித் தெரிந்துகொண்டாள் முத்தம்மா.

தந்தையைக் காத்த தனயனாக பிள்ளைன்னா, ‘இப்படில்ல இருக்கனும்’ என்ற ஊராரின் பாராட்டோடு ஜாம், ஜாம் என்று சுடுகாடு போய்ச் சேர்ந்து விட்டான் முருகன். பட்ட காலிலே படும்| கெட்ட குடியே கெடும் என்பதை நிரூபிப்பதுபோல வாழ வேண்டிய வயதில் தன் மகன் இறந்ததை நினைத்து வருந்திய முத்தையனும் ஒரு வாரக் காய்ச்சலில் மகனுக்குத் துணையாகச் சென்று சேர்ந்தான்.

இப்பொழுது முத்தம்மாள் தனிமரம். கட்டிய கணவனும் இல்லை. கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த மகனும் இல்லை. தற்கொலை செய்வது பாவம் என்பதால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடைப்பிணமாய் வாழ்ந்து வந்தாள்.

இச்சூழலில்தான் கலெக்டர் ஆபிசிலிருந்து வந்த கடிதத்தில் முத்தம்மாவிற்கு மகன் இறந்தததற்கு கருணைத் தொகையாக ரூபாய் ஒரு இலட்சம் வழங்க இருப்பதாகவும் அதைப் பெற்றக் கொள்ளும்படியும் குறிப்பிடப் பெற்றிருந்தது.

இதை வைத்துதான் குழாயடியில் பெண்கள் சாடை பேசினர். பாவம் அன்றாடங்காய்ச்சிகளான அம்மக்களால் வேறு எப்படிப் பேசமுடியும்? இன்று தேனிக்குச் செல்ல வேண்டிய நாள். எதையெல்லாம் இழந்ததற்காக இக்காசு கிடைக்கிறது என்பதை இவர்கள் உணரவில்லையே என்பதுதான் முத்தம்மாவின் வருத்தமாக இருந்தது.

பழசையெல்லாம் நினைத்த முத்தம்மா ஒரு முடிவிற்கு வந்தவளாக எழுந்தாள். இன்று தனக்குக் கொடுக்கப்படும் பணத்தை அப்படியே தேனியில் உள்ள அனாதை ஆசிரமத்திற்குக் கொடுக்கும்படி கூறப்போவதை நினைத்தவாறு அவிழ்ந்துகிடந்த கூந்தலை அள்ளி முடிந்தாள். நாளைக்கு இந்தப் பெண்கள் எல்லாம் என்ன பேசுவார்கள் என்று நினைத்தவாறு பேருந்து நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

Series Navigation

author

முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை

முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை

Similar Posts