பெட்ரோலியம்: நிலமகளின் குருதி!

This entry is part [part not set] of 34 in the series 20070517_Issue

நரேந்திரன்“எப்புகழ்ச்சி செய்வார்க்கும் ஓய்வுண்டாம் ஓய்வில்லை
தற்புகழ்ச்சி செய்வார் தமக்கு”

– அசோகமித்திரன், அ.மி. கட்டுரைகள், பாகம் 1, பக்கம் 297

முதலில், உலக எண்ணெய் வயல்கள் திடீரென வற்றிப் போய்விடுவதாக ஒரு கற்பனை செய்து கொள்வோம். விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. உற்பத்திப் பொருள்களின் பரிவர்த்தனை இல்லாமல் உலக நாடுகளின் பொருளாதாரம் நசிந்து போய்விடக்கூடும். ஆகாய விமானங்களுக்கும், கப்பல்களுக்கும், கார்களுக்குமான தேவை எதுவுமில்லாமல், ஜனங்கள் மீண்டும் சைக்கிள்களையும், மாட்டு வண்டிகளையும், ஜட்கா வண்டிகளையும் உபயோகிக்க ஆரம்பிக்க வேண்டியதிருக்கலாம். வழமை போல அரசியல்வாதிகள் இளிச்சவாயர்களின் தோள்களின் மீதமர்ந்து (வேறு யார்? நீங்களும் நானும்தான்!) சவாரி செய்ய……முடிவே இல்லாமல், கற்பனைக்கு எட்டும் வரை எழுதிக் கொண்டே போகலாம்.

“உலகின் எண்ணெய் வயல்களில் இருக்கும் பெட்ரோலிய வளம் இன்னும் இருபது வருடங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது; அதற்குப் பின் பெட்ரோலிய உற்பத்தி மிகவும் குறைந்து போகும்” என்பது பொதுவாக “பெட்ரோலிய” வல்லுனர்களின் கருத்து. இதில் வேடிக்கை என்னவென்றால், இதே செய்தி கடந்து நூறு ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வருகிறது என்பதுதான். இதில் மிக முக்கியமானது, அமெரிக்காவைச் சேர்ந்த ஜியாலஜிஸ்ட் கிங் ஹப்பர்ட் (Kind Hubbert) என்பவர் எழுதிய ஒரு கட்டுரை.

அமெரிக்காவின் இராக்கிய ஆக்கிரமிப்பிற்கு அடிப்படையானது என்று கூறப்படும் மேற்படிக் கட்டுரை எழுதப்பட்டது 1956 ஆம் வருடம். அதில் 2006-ஆம் வருடம் உலக பெட்ரோலிய எண்ணெய்க் கிணறுகள் அனைத்தும் வறண்டு போகும் என்று அடித்துச் சொல்லியிருக்கிறார் ஹப்பர்ட். அவரது கட்டுரையின்படி சென்ற வருடமே நாமெல்லோரும் மாட்டு வண்டிகளை உபயோகிக்க ஆரம்பித்திருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லையே ஏன்? அதற்கு ஹப்பர்ட் குறித்தும், அந்த கட்டுரை எழுதப்பட்டதற்கான பின்னனி குறித்தும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஹப்பர் தியரி ஒரு ஹம்பக் தியரி என்று சொல்பவர்களும் உண்டு. அதுபற்றி பின்னர் பார்க்கலாம்.

ஹப்பர்ட், உலகில் மொத்தம் 1250 பில்லியன் பேரல் பெட்ரோலிய வளம் மட்டுமே இருக்கிறது என்று கணக்கிட்டுச் சொன்னார். 1956 இல். அதற்கு மாறாக, இன்றைக்கு வளைகுடா நாடுகளில் மட்டுமே 734 பில்லியன் பேரல் எண்ணெய் இருக்கிறது. அவை, அறியப்பட்ட மற்றும் அளவிடப்பட்ட (Proven reserves) எண்ணெய் வயல்கள் மட்டுமே. இதில், இராக்கிய எண்ணெய் வளம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. சவூதி அரேபியாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய பெட்ரோலிய ரிசர்வ் இருப்பது இராக்கில் அதனையும் சேர்த்தால் வளைகுடாவில் இருக்கும் எண்ணெய் வளத்தின் அளவு பலமடங்கு அதிகம் இருக்கும். வளைகுடாவைத் தவிர்த்து, உலகின் மற்ற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு, எடுக்கத் தயாராக இருக்கும் எண்ணெயின் அளவு 1.189 டிரில்லியன் பேரல்கள். இன்னும் கண்டுபிடிக்கப்படாத எண்ணெய் வயல்கள் ஏராளம்.

இராக்கிலிருக்கும் 74 எண்ணெய் வயல்களில் வெறும் 15 மட்டுமே இயங்குகின்றன. கண்டுபிடிக்கப்பட்டு தயாராக இருக்கும் இராக்கிய எண்ணெய் வயல்களின் எண்ணிக்கை 526. எனவே, இன்னும் இருபது வருடங்களில் எண்ணெய் வயல்கள் வரண்டு போகும் என்பது ஒரு பொய்யான தகவலே. அ·ப்கோர்ஸ் என்றைக்காவது ஒருநாள் எண்ணெய் வயல்கள் வறண்டு போகத்தான் போகின்றன. அது என்ன அட்சய பாத்திரமா அள்ள அள்ளக் குறையாமலிருக்க?

எனவே, இன்றைய எண்ணெய் விலையேற்றம் செயற்கையான ஒன்று. முழு அளவுடன் உலக பெட்ரோலிய உற்பத்தி துவங்கப்படுமாயின், ஒரு பேரல் பெட்ரோலின் விலை ஒரு பேரல் $12 மேல் விற்கக் காரணமே இல்லை. அங்குதான் இராக்கிய ஆக்கிரமிப்பின் சூட்சுமம் இருக்கிறது.

அமெரிக்க ஆக்கிரமிப்பின் முக்கியக் குறிக்கோள், இராக்கிய எண்ணெய் வயல்களைக் கைப்பற்றுவது என்பது போல வெளித் தெரிந்தாலும், அதன் முக்கிய நோக்கம் இராக்கிய எண்ணைய் உற்பத்தியை முடக்கிப் போடுவது என்பதுவே. அமெரிக்க அரசு இயந்திரத்தின் அடி முதல் முடி வரை பரவலாக வியாபித்து, மிக வலிமையுடன் செயல்படும் நியோ-கான்கள் (neo-cons) என்றைழைக்கப்படும் கன்சர்வேடிவ்களும், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களும் சேர்ந்து அமெரிக்க ராணுவ உதவியுடன் மிகச் சிறப்பாக அதனைச் செய்து முடித்திருகிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், இராக்கிய ஆக்கிரமிப்பின் முதலாம் ஆண்டுக் கொண்டாட்டங்களின் போது பேசிய ‘குறிக்கோள் நிறைவேறியது (Mission Accomplished)” பேச்சு குறிப்பிடுவது இதனைத்தான். இராக்கிய எண்ணெய் வயல்களை ஆக்கிரமிப்பது என்பது அவர்களைப் பொருத்தவரை இரண்டாம் பட்சமே.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது வேறுவகை விளையாட்டு. இருபத்தி ஓராம் நூற்றாண்டின் புதுவகை விளையாட்டு. இதில், யார் எண்ணெய் வயல்களைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதல்ல முக்கியம்; யார் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதுதான் முக்கியம்.

சதாம் ஹ¤செய்ன் சீன, இந்திய கம்பெனிகளுக்கு எண்ணெய் எடுக்கும் உரிமை வழங்கத் தயாரானதும், அதன் மூலம் உற்பத்தி பெருகி விலை குறைய வாய்ப்புகள் இருப்பதும் இராக்கிய ஆக்கிரமிப்பின் மறைமுக காரணிகளே.

இதனைப் பற்றி விரிவாக பின்னால் பார்க்கலாம். முதலில் கொஞ்சம் பின்னனிச் செய்திகள்.

*

இராக் யுத்தம் துவங்கி சரியாக ஒருவருடம் கழித்து (மே 1, 2003), அமெரிக்க போர்க் கப்பலான USS ஆபிரகாம் லிங்கனின் மீது போர் விமானத்தில் வந்திறங்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் W. புஷ், உடலில் சுற்றி இறுகிய பாராசூட் பட்டைகளுடன், பீ…கள் பிதுங்க நடந்து சென்று அறிவித்த “குறிக்கோள் நிறைவேறியது” பேச்சினை உலக நடப்பில் ஆர்வமுள்ளவர்கள் பெரும்பாலோர் மறந்திருக்க மாட்டார்கள்.

வெகு விமரிசையாக, கப்பலின் மேல்தளத்தில் நடந்து கொண்டிருந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில், தொலைக்காட்சி மற்றும் செய்திப் பத்திரிகையாளர்களால் கண்டுகொள்ளப் படாமல் விடப்பட்ட இன்னொரு சேதியும் அதி முக்கியமானது. மேற்படி நிகழ்வுக்கு ஒருநாள் முன்பாக, அப்போதைய அமெரிக்க பாதுகாப்புத்துறை செகரட்டரியான டொனால்ட் ரம்ஸ்·பீல்ட், சவூதி அரேபியாவில் இருக்கும் அமெரிக்கப் படைகளை வாபஸ் வாங்குதாகச் சத்தமில்லாமல் அறிவித்தார். சவூதியின் முக்கிய கேந்திரங்களில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்க ராணுவத்தளங்களும் மூடப்பட்டு விட்டன என்கிற செய்தி சராசரி அமெரிக்கர்களைச் சென்றடையவில்லை. அல்லது சென்றடையாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.

இங்கே நிறைவேறிய குறிக்கோள் யாருடையது? ஜார்ஜ் புஷ்ஷினுடையதா அல்லது அமெரிக்காவின் முக்கிய எதிரியான ஒசாமா-பின்-லேடனுடையதா? அமெரிக்க ஜனாதிபதியின் ‘குறிக்கோள் நிறைவேறியது” பேச்சைக் கேட்டு ஒசாமா புன்னகைத்திருக்கக் கூடும். அதற்கான காரணங்கள் இல்லாமலில்லை.

பின்-லேடனின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று, உலக இஸ்லாமியர்களின் இரு புனித மசூதிகள் அமைந்திருக்கும் சவூதி அரேபியாவிலிருந்து கா·பிர்களின் ஆக்கிரமிப்புப் படைகளை விரட்டியடிப்பது. அல்-காய்தாவின் இணையதளத்திற்கு விசிட் அடிப்பவர்கள், அங்கே ஒசாமாவினால், ஆங்கிலத்தில் கொட்டை எழுத்தில் முகத்திலடித்தாற் போல, அமெரிக்காவிற்கு எதிராக எழுதப்பட்டிருக்கும் அறிக்கையினை படிக்கத் தவறியிருக்க மாட்டார்கள்.

அந்த அறிக்கையை பின்-லாடன் வெளியிட்டது ஆகஸ்ட் 23, 1996-இல். ஏழே வருடங்களுக்குள், அதாவது 2003 ஏப்ரல் 29-ஆம் தேதியன்று அமெரிக்கா, சவூதியிலிருந்து தனது படைகளை திரும்ப அழைத்துக் கொண்டது. ஆக, இங்கு நிறைவேறியது யாருடைய குறிக்கோள் என்பதை உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் இன்னும் ஒன்று உண்டு. அமெரிக்காவின் இருநூறு ப்ளஸ் வருடச் சரித்திரத்தில் ஒருமுறை கூட, கவனிக்க, ஒரே ஒரு முறை கூட, அமெரிக்கா தனது ராணுவத் தளங்களை உலகில் எங்கும் மூடியதில்லை. ஏதேனும் ஒரு நாட்டில் அமெரிக்க ராணுவத்தளம் ஒருமுறை அமைக்கப்பட்டால், அது அமைக்கப் பட்டதுதான். எவ்வளவு உள்நாட்டு எதிர்ப்புகள், சச்சரவுகள், தொல்லைகள் இருந்தாலும் தனது ராணுவத்தளங்களை அமெரிக்கா ஒருபோதும் மூடச் சம்மதித்ததில்லை. அளவிட முடியாத எதிர்ப்புகளுக்கு மத்தியில், இன்றளவும் ஜப்பானின் ஓகினாவாவில் (Okinawa) செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க ராணுவதளத்தினை இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகக் கூறலாம். இரண்டாம் உலகப் போர் முடிந்து ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் முடிந்த பின்பும், இன்று வரை அமெரிக்கா தனது ஒகினாவா ராணுவதளத்தினை மூடவில்லை.

தன்னை ஒரு “போர்க்கால ஜனாதிபதி” என அறிவித்துள்ள, தேசாபிமானிகளான குடியரசுக்கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் புஷ் காலத்தில் இது நடந்ததுள்ளது, அமெரிக்கர்களைப் பொறுத்தவரை ஒரு வரலாற்றுப் பின்னடைவே.

ஒருவகையில் பின்-லேடன் மற்றும் ஜார்ஜ் புஷ்ஷின் குறிக்கோள்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை. இருவருக்கும் OIL ஒன்றுதான் குறி.

ஒசாமாவினுடையது, ‘ஆபரேஷன் இஸ்லாமிக் லிபரேசன்’ (O.I.L). ஜார்ஜ் W. வினுடையது, ‘ஆபரேஷன் இராக்கி லிபரேஷன்’ (O.I.L). அவ்வளவுதான் வித்தியாசம். இராக் யுத்தம் ஆரம்பித்த காலங்களில் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர்கள் ஆபரேஷன் இராக்கி லிபரேஷன் என்றே மீண்டும், மீண்டும் அழைத்துக் கொண்டிருந்தார்கள். அரசல்புரசலாக எதிர்ப்பு கிளம்பியதும் ‘ஆபரேஷன் இராக்கி ·ப்ரீடம்’ என்று மாற்றியழைக்க ஆரம்பித்தார்கள்.

மார்ச் 2003-ஆம் வருடம், இராக்கிய யுத்தம் துவங்குவதற்கு முஸ்தீபுகள் நடந்து கொண்டிருக்கையில், சதாம் ஹ¤செய்ன் மற்றும் அவரது இரு மகன்களும் அவர்களின் சொந்த நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல 48 மணி நேர அவகாசம் கொடுத்து, அமெரிக்கத் தொலைகாட்சியில் ஜார்ஜ் புஷ் உரையாற்றினார். அந்த உரையின் மிக முக்கிய சாராம்சமாக அவர் இராக்கிய மக்களைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள், ‘எண்ணெய் கிணறுகளை எரிக்காதீர்கள்’ என்பதுதான்.

“அமெரிக்கப்படைகள், உங்களைத் துன்புறுத்திய ஒரு சர்வாதிகாரியிடமிருந்து மீட்பதற்காக இராக்கிற்கு வருகிறார்கள்; எனவே, அவர்களுடன் போர் புரிய வேண்டாம்” என்றெல்லாம் அவர் சொல்லவுமில்லை. கேட்டுக் கொள்ளவுமில்லை. அவர் சொன்னதெல்லாம், ‘எண்ணெய்க் கிணறுகள் பத்திரம்’ என்பதுதான். அவரவர் கவலை அவரவர்களுக்கு!

ஒசாமா பின்-லேடனும் இதற்குச் சிறிதும் சளைத்தவரில்லை. அவரது 1996-ஆம் வருட அறிக்கையில், சகோதர முஸ்லிம்களிடம் எண்ணெய்க் கிணறுகளையும், அது சார்பான தொழிற்சாலைகளையும் புனிதப்போரின் போது அழித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டுகோள் விடுக்கிறார். கொஞ்ச காலம் சூடானில் எண்ணெய் கிணறுகள் தோண்ட முயற்சிகள் செய்து தோல்வியடைந்த வரலாறு ஒசாமாவினுடையது. எண்ணெயின் வலிமை அவருக்குத் தெரியும்.

இஸ்லாமிய உலகில் நிலவும் ஏழ்மையையோ, அதன் பின்தங்கிய நிலைமையையோ அல்லது அவர்களை அடக்கி, ஒடுக்கும் சர்வாதிகாரிகளிடம் சிக்கி அவர்கள் படும் துன்பத்தை நீக்குவதற்கான வழிவகைகள் பற்றியோ அந்த அறிக்கையில் ஒருவரிச் செய்தி கூட இல்லை. குறைந்த பட்சம் பாலஸ்தீன விடுதலை குறித்துக் கூட ஒசாமாவின் மிக நீண்ட அறிக்கை பேசவில்லை. மாறாக, பல வருடங்களாக அவரது கட்டிட கம்பெனிக்குச் சேரவேண்டிய பணத்தை அவருக்குத் தராமல் இழுத்தடிக்கும் சவூதி அரசாங்கம் குறித்துக் குமுறுகிறார். ஒசாமின் குடும்பம், மெக்கா மற்றும் மதீனாவில் பல கட்டுமானப் பணிகளைச் செய்தவர்கள். மிகப்பெரிய கான்ட்ராக்டர்கள். சவூதி அரச குடும்பத்தினருக்கு மிக நெருங்கியவர்கள்.

அது ஒருபுறம் இருக்கட்டும். ஒசாமா பின்-லேடனைப் பிடித்தே தீருவேன் என்று அமெரிக்கா போட்ட சபதம் என்னவாயிற்று என்று நீங்கள் கேட்கலாம். காலம் மாறிப் போனது; எனவே காட்சிகளும் மாறிப்போயின என்பதுதான் அதற்கான பதிலாக இருக்கக் கூடும். பின்-லேடனைப் பற்றி இனி ஜார்ஜ் புஷ்ஷிற்கு அதிக கவலை இருக்கக் காரணம் அதிகமில்லை. ஒசாமாவின் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்றை நிறைவேற்றியாயிற்று. எனவே அவரால் அமெரிக்காவிற்கு தொல்லை எதுவும் இனி இருக்காது என்று புஷ் நினைக்கக் கூடும்.

சவூதி அரச குடும்பத்தை மிரட்டுவதன் மூலம், பெட்ரோல் விலை ஏறாமல் அமெரிக்கா பார்த்துக் கொள்கிறது என்ற குற்றச்சாட்டிற்கும் இனி வலு எதுவும் இல்லை. இந்தக் குற்றச்சாட்டை ஒசாமா முன்வைத்த போது பெட்ரோல் ஒரு பேரல் $10 டாலர்களுக்கு விற்றுக் கொண்டிருந்தது. இன்றைய தேதிக்கு ஒரு பேரல் $70-களுக்கும் மேலாக விற்றுக் கொண்டிருக்கிறது. உலக அளவில் இஸ்லாமியர்களில் பெரும்பாலோர் புனிதப் போரில் கலந்து கொள்ளத் தயாராக இல்லை என்பதுவும், உலக நாடுகளின் கடுமையான கட்டுப்பாடுகளும் ஒசாமா பின்-லேடன் போன்றவர்களின் செல்வாக்கைக் குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதே இன்றைய நிதர்சனம்.

இராக்கை ஆக்கிரமிக்கும் திட்டம் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் பதவியேற்ற சிறிது நாட்களிலேயே (பிப்ரவர், 2001) தீட்டப்பட்டது. அதாவது செப்டம்பர் 11 (911) நடப்பதற்கு ஏழு மாதங்களுக்கு முன்பே இத்திட்டம் அவரின் ஒப்புதலைப் பெற்றுத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 11 அத்திட்டத்தை துரிதப்படுத்தியது எனலாம்.

அதுபற்றிய விபரங்களை பின்னர் பார்க்கலாம்.

*

இந்தக் கட்டுரைக்குச் சம்பந்தமில்லாதது என்றாலும், சில எச்சரிக்கைகள் தருவதில் பாதகம் ஒன்றுமில்லை.

சிற்றரசர்களுக்குள் வாரிசுரிமைப் போர் துவங்கி இருக்கிறது. அப்பாவிகள் மூன்று பேர் அநியாயமாக பலியாகி இருக்கிறார்கள். வழக்கம் போல தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் அது குறித்தான செய்திகளை இருட்டடிப்பு செய்திருக்கின்றன. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. அரச குடும்பத்துப் பத்திரிகைக்கே இந்த கதி என்றால், மற்ற பத்திரிகைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. துவம்சம் செய்து விடுவார்கள்!

அச்சம் தவிர்; ஆண்மை தவறேல் என்பதெல்லாம் ஜனநாயக நாடுகளுக்கு மட்டுமே பொருத்தமானது; முடியாட்சியில் அது சாத்தியமில்லை.

நடந்து முடிந்தது முதலாம் வாரிசுரிமைப் போர் என்றாலும் அதுவே முடிவானதும் அல்ல; எதிர்வரும் காலத்திற்கான வெள்ளோட்டமே என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

இவற்றையெல்லாம் விட நினைக்கவே மிகவும் அச்சமூட்டும் ஒரு விஷயம், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் மரணமும், அதனைத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பாங்கும். எம்.ஜி.ஆர், இந்திரா காந்தி போன்றவர்களின் மரணத்திற்குப்பின் தமிழ்நாட்டில் அரங்கேறிய வன்முறைகளை மறந்தவர் மக்கட் பண்பில்லாதவர்!

தமிழ்நாட்டு ஜனங்களுக்காக பிரார்த்தனை செய்வவோமாக!


Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்