பூம்புகார்ச் செல்வி கண்ணகி மீது புகார்!

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

சி. ஜெயபாரதன், கனடா


கண்ணகிக்குச் சென்னைக் கடற்கரையில் சிலை வைக்க வேண்டுமா அல்லது கூடாதா என்று 21 ஆம் நூற்றாண்டில் அறிவாளிகளாகிய நாம் வாதாடிக் கொண்டிருக்கிறோம்! முன்பு அழகாக நடப்பட்டிருந்த கண்ணகிச் சிலையின் கை தெருவில் வேறு திசையைக் காட்டிக் கொண்டிருக்கிறது என்று கேலி பண்ணிக் கொண்டிருக்கிறோம்! முதலில் வைத்திருந்த சிலையை யாரும் காணாமல் போக்கிரிகள் களவாடிப் போன தீரச் செயலை நம்மில் சிலர் மெச்சிக் கொண்டிருக்கிறோம்! திருட்டுச் செயலை நம்மில் சிலர் மனதாரத் திட்டிக் கொண்டிருக்கிறோம்! புதிதாக வந்த தமிழக அரசாங்கத்தின் முதல் மந்திரியும், முதலில் சிலை வைத்த முன்னாள் முதல் மந்திரியுமான மாண்புமிகு கருணாநிதி அவர்கள் மீண்டும் கண்ணகிக்குச் சிலை வைக்கத் தீர்மானித்த போது, முட்டாள் கண்ணகிக்கு மறுபடியும் சிலையா என்றும் அது பெண்களின் அவமானச் சின்னம் என்றும் எள்ளி நகையாடி வருகிறோம்! ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே கண்ணகியின் உன்னதப் பண்புகளை வியந்து பாராட்டி அந்த சாதாரணப் பெண்ணுக்கு சேர மாமன்னன் செங்குட்டுவன் இமயத்தில் கல்லெடுத்துத் தன் மலையில் எல்லாருக்கும் முன்பாகச் சிலை வடித்துப் போற்றினான்! சிலப்பதிகார நூலின் கடைசிக் காண்டமான மூன்றாவது வஞ்சிக் காண்டத்தில் வரும் 151 பாக்களில் 128 பாக்கள் கண்ணகிச் சிலைக்குக் கல்லெடுக்க செங்குட்டுவன் இமயம் சென்றது, வடநாட்டு மன்னர் கனக விஜயரை வென்று அவரது தலையில் கல் சுமக்க வைத்தது, மலையில் சிலை வடித்துக் கொண்டாடிய அனைத்து நிகழ்ச்சிகளும் வெகு அழகாக விளக்கப் படுகின்றன! சிலை வைத்துக் தமிழகத்தின் மூவேந்தர் வரலாற்றை நினைவூட்டிய சேர மன்னன் செங்குட்டுவன், சிலரது அளவு கோல்படி ஓர் அறிவிலியா?

“போதிலார் திருவினள் புகழுடை வடிவென்றும்,
தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும்,
மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள்! பெயர்மன்னும் கண்ணகி என்பாள் … !”

(சிலப்பதிகாரம்: புகார்க் காண்டம்)

கண்ணகியின் வாழ்க்கை வரலாற்றைக் கலைத்துவ மணத்துடன் கவிதைக் காவியமாகப் படைத்தவர் சேரன் செங்குட்டுவனின் தமையனார் இலக்கிய மேதை இளங்கோவடிகள். சோழ நாட்டுப் பூம்புகார் நகரில் பிறந்து, வளர்ந்து, திருமணமாகிப் பாண்டிய நாட்டில் கணவனைப் பறிகொடுத்து, முடிவாகச் சேர நாட்டுக்கு நடந்து சென்று மலையிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டவள், கண்ணகி. இளங்கோவடிகள் கண்ணகியின் சோக முடிவைக் கேட்டு மனமுருகி, மூன்று தமிழ் நாடுகளுக்கும் அறிஞர்களை அனுப்பி அவளது வரலாற்றைச் சேகரித்துச் சிலப்பதிகாரக் காவியத்தை அக்காலக் கலாச்சார முறையில் படைத்து வைத்துள்ளார். தன்னை ஒதுக்கி விட்டுச் சில ஆண்டுகள் பரத்தை மாதவியுடன் உடலுறவு கொண்டு, பிறகு தன்னை நாடி மீண்ட கணவனைக் கண்டிக்காமல் ஏற்றுக் கொண்டாளாயினும், கண்ணகியை ஒரு பெரும் காவியத் தலைவியாகக் கருதித் தமிழுலகுக்கு நிரந்ததரக் காவியமாக எழுதிவைத்தார். கண்ணகி ஒளவையாரைப் போல் கல்வி ஞானமற்றவள்! மாதவியைப் போல் நாட்டியம், இசை போன்ற கலை ஞானமற்றவள்! ஆயினும் கணவன் கள்வன் அல்லன் என்று மதுரையில் நீதிக்குப் போராடிய அவளது ஊக்கத்தையும், திறமையையும் வியந்து, இளங்கோவடிகள் அவளை மையமாக வைத்துச் சிலப்பதிகார நூலை வடித்தார். பாண்டிய மன்னனால் அநியாயமாகக் கள்வன் என்று மதுரையில் குற்றம் சாட்டப் பெற்று, கணவன் கொலையுண்டு, பொற்கொல்லர் வீடுகளை எரிப்பதற்கு அவர் காரணமாயினும், இளங்கோவடிகள் கண்ணகியை ஓர் அற்புத மாதாகவே போற்றுகிறார். கண்ணகியைக் கதைத் தலைவியாக வைத்து, ஐம்பெரும் காப்பியங்களிலே தலைசிறந்த சிலப்பதிகாரத்தைப் படைத்த காவியப் புலவர் இளங்கோவடிகள் சிலரது அளவு கோல்படி ஓர் அறிவிலியா?

கணவன் படுகொலை யானதால் வெகுண்டு எழுந்து தீப்பந்தத்தைக் கையில் ஏந்தி, மதுரையில் கண்ணகி வீடு வீடாய்ப் புகுந்து தீவைத்தாள் என்று நினைப்பது அறிவுக்கு ஒவ்வாத வாதம்! அவளது பண்பை ஆழ்ந்து படித்துணர்ந்தவர் எவரும் அப்படி நம்ப முடியாது! அவ்விதம் அவள் வீடுகளில் போய்த் தீவைத்ததைத் தடுக்காமல் மதுரை நகர் மக்கள் வேடிக்கை பார்த்தனர் என்பதையும் என்னால் நம்ப முடியவில்லை! கணவன் படுகொலை செய்யப்பட்டு மதுரையில் தனித்துப் போன கண்ணகி தெருத் தெருவாய்ச் சென்று பாண்டிய மன்னன் தேராமல் செய்த அநீதிக்கு நெஞ்சம் கொதித்து, ஆரவாரமோடு, அழுகையோடு பறைசாற்றியது உண்மையே! “கணவனோ என் கணவன்?”, என்று தெருக்கோயில் தெய்வங்களிடம் கூறி முறையிடுகிறாள். தெருவிலே கோவலனுக்கு நேர்ந்த கோரச் சம்பவத்தைக் கூறக் கேட்டு மனம் விண்டு போன தெரு மக்கள்தான் பொற்கொல்லர் வீட்டுக் கூரைகளில் தீ வைத்திருக்க வேண்டும் என்பது எனது ஆராய்ச்சி யூகம். அவ்விதம் தர்க்க ரீதியாக வாதிடாமல், மதுரை முழுவதும் தீப்பற்றி எரிந்தது என்று காவியத்தில் காட்டப் பட்டிருக்கும் வெறும் கற்பனைச் செய்தியை நம்புவது சரியன்று! அக்காலத்தில் மதுரை நகரில் பெரும்பான்மை யான வீடுகள் சுண்ணங் காரையில் கட்டப் பட்டவை! கூரை வீடுகள் சிறுபான்மை யானவை! மதுரை வீடுகள் அனைத்தும் கண்ணகியால் எரிந்தன என்று நம்பிக் கொண்டு அவளை “மூர்க்க மாது” என்றும் வீணாகப் பழிப்பது வியப்பாக இருக்கிறது! இளகோவடிகள் தனது கலைத்துவக் கற்பனையில் கண்ணகியின் முன் அக்கினி தேவன் தோன்றியதாகவும், அவளுக்காகத் தான் மதுரையை எரிக்கப் போவதாகவும் காவியப் பாணியில் உயர்வு நவிற்சி அணியில் எழுதி யிருக்கிறார்.

கண்முன் தோன்றிய அக்கினிக் கடவுளுக்கு ஆணை யிடுகிறாள் கண்ணகி: மனம் வெந்து சாம்பலானாலும், தீக்கடவுளுக்கு மனிதாபிமானக் கனிவுடன் கட்டளை யிடுகிறாள்!

“நான்மாடக் கூடல் மகளிரும், மைந்தரும்,
வானக் கடவுளரும், மாதவரும் கேட்டீமின்!
யானவர் காதலன் தன்னைத் தவறிழைத்த
கோநகர் சீறினேன்! குற்றமிலேன் யான்!”

“பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்,
மூத்தோர், குழவியெனும் இவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க”, என்று காய்த்திய
பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே
நற்றேரான் கூடல் நகர்.

(சிலப்பதிகாரம்: மதுரைக் காண்டம், வஞ்சின மாலை)

என்று சிலப்பதிகாரம் கூறிச் சோகக் கண்ணகியின் பரிவுப் பண்பைக் காட்டுகிறது!

மதுரையில் அந்தக் காலத்து வீடுகள் பெரும்பான்மை யானவை காரையால் அல்லது களிமண்ணால் கட்டப் பட்டவை. காரைக் கட்டடங்கள் உத்தரங்கள் தாங்கும் செங்கல் பதித்த “தமிழகத் தளம்” [Madras Terrace] கொண்டவை. காரை வீடுகளில் தீவைப்பது எளிதல்ல! மண் வீடுகள் கூரை வேய்ந்தவை. பொற் கொல்லரின் வீட்டுக் கூரைகளில், வெகுண்ட மாந்தர் தீ வைத்திருக்கலாம்! அவை எல்லாம் ஒட்டு மொத்தமாக மதுரையில் தீப்பற்றின என்று இளங்கோவடிகள் சொல்லி யிருந்தாலும், மாபெரும் அந்த தீ நிகழ்ச்சி அறிவுக்கு ஒவ்வாத ஓர் காட்சியாக இருக்கிறது! மரக்குடில்களில் வாழ்ந்த பொற்கொல்லர் வீடுகளில் தெரு மாந்தரே தீவைத்துப் பழிவாங்கினர் என்று கருதுவது பொருந்தி வருகிறது!

மாதவி மடியில் துஞ்சிய கோவலனைக் கண்டிக்காத கண்ணகியின் போக்கு சில ஆண் எழுத்தாளருக்கும், மற்றும் சில பெண் எழுத்தாளருக்கும் பிடிக்காமல் போனாலும், கண்ணகியின் பண்பு இழுக்காகி விடாது! நாடக மேதை ஷேக்ஸ்பியரை, மற்றுமொரு நாடக மேதை பெர்னாட்ஷா எள்ளி நகையாடினார்! அதனால் ஷேக்ஸ்பியரின் புகழ் குறைவு பட்டதா? இல்லை. ஈவேரா பெரியாரைச் சிலருக்குப் பிடிக்காது! நேருவைச் சிலருக்குப் பிடிக்காது! ஏன் தேசப் பிதா மகாத்மா காந்தியைப் பிடிக்காத இந்தியரும் உள்ளார்! முன்னாள் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியைச் சிலருக்குப் பிடிக்காது! பிரதமரான அவரது மருமகள் இத்தாலிய மாது சோனியா காந்தியைப் பலருக்குப் பிடிக்காது! பாரதத்தில் இராமனைச் சிலருக்குப் பிடிப்பதில்லை. ஆனாலும் அவனது மகிமை இந்துக்களிடம் சிறிதும் குன்ற வில்லையே! மாறாகப் பெருகி வளர்கிறது. அவனுக்குப் பிறந்த மண்ணான அயோத்தியா புரியில் எப்படியாவது கோயில் கட்டியே தீர வேண்டும் என்று மத்திய மந்திரி அத்வானி முதல் கோடான கோடிச் சீடர்கள் உயிரைக் கொடுக்கவும், எதிர்ப்போரது உயிரை வாங்கவும் வாளேந்தித் தயாராக உள்ளார்.

அரக்கனிடம் போரிட்டு அசோக வனத்திலிருந்து மீட்டு வந்த மனைவி சீதையை வண்ணான் சொற் கேட்டு மனம் தாங்காமல் மறுபடியும் கானகத்துக்குத் துரத்தினான் இராமன். சீதா அப்போது ஒரு கர்ப்பிணி! வால்மீகி ஆசிரமத்தில் சீதா இரட்டைக் குழந்தைகளைப் பெற்றாள். கடைசியில் வால்மீகியின் வாக்கை ஏற்றுக் கொண்டு, சிறுவர்களை மட்டும் தன் புத்திரராக ஒப்புக் கொண்டு அரண்மனைக்கு அழைத்துச் சென்றான் இராமன். கணவனால் புறக்கணிக்கப்பட்டு, புதல்வரையும் இழந்து தனித்துப் போன சீதா மனமுடைந்து, கடைசியில் கண்ணகியைப் போல மலை மீதிருந்து குதித்துத் தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் கோயில்களில் இந்துக்கள் இராமர், சீதா இருவரது சிலைகளையும் ஒன்றாக வைத்துக் கும்பிட்டு வருகிறார்கள். இராமனும் சீதையும் கணவன், மனைவியாகச் சேர்ந்து தம்பதிகளாய் எத்தனை நாட்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தார் என்பது யாருக்குத் தெரியும்?

சென்னைக் கடலோரத்தில் கண்ணகியின் சிலையைக் காணச் சில ஆடவர், பெண்டிருக்குப் பிடிக்காமல் போனதற்குக் காரணம், அவள் தாலியறுத்த ஒரு விதவை என்பதாகவும் இருக்கலாம். வாழையடி வாழையாக ஆன்மீக நாகரீகத்தில் ஊறிப்போன புண்ணிய பாரதத்தில் ஒரு விதவைப் பெண்ணைக் கண்டால், ஆணாகிலும் சரி அல்லது பெண்ணாகிலும் சரி அவளைத் தீண்டத் தகாத ஒரு பாவப்பட்ட குஷ்ட ரோகியாக நடத்தி வருவது ஓர் அதிர்ச்சி தரும் உலக நிகழ்ச்சி! அந்தப் பாழ்பட்ட நடைமுறைக்கு இருமுறைப் பிரதமராக ஆட்சி செய்த இந்திரா காந்தியும் விதி விலக்கில்லை! முதன்முதல் 1966 இல் இந்திரா காந்தி பிரதமரான போது, உதட்டைப் பிளந்த காறித் துப்பிய ஆண், பெண் எத்தனை பேர்? வெளிப்படையாக தாலி அறுத்தவள் நமக்குப் பிரதமரா என்று தரங்கெட்டுப் பேசி இகழ்ந்தவர் எத்தனை பேர்? அடுத்து அவரது அன்னிய நாட்டு மருமகள் சோனியா காந்தி இந்தியராயினும், பிரதமரான போது அவளும் தாலியறுத்த மாது என்று எத்தனை ஆடவர், பெண்டிர் பாரத நாட்டில் வெறுத்தார் என்று சொல்லவும் வேண்டுமோ?

கண்ணகி திரும்பிய கணவன் மீது ஏன் காறி உமிழவில்லை என்று சில பெண்டிர் கேட்பதில் தவறில்லை! கணவனைக் கவர்ந்து கைக்கொண்ட மாதவியை ஏன் காலணியால் விலாச வில்லை என்று கேட்பதில் தவறில்லை! ஆனாலும் பொதுவிதிக்கு மாறாகக் கண்ணகி, திரும்பி வந்த கணவனைக் கண்ணியமாக ஏற்றுக் கொண்டாள்! அது அவள் பண்பு! கடவுள் அவளுக்கென அளித்த தனித்துவப் பண்பு! அப்படி நடந்து கொண்டதன் காரணம் அவள் வளர்ப்பு! பொதுமகள் வீட்டில் பள்ளி கொண்ட கணவனை ஏன் கண்ணகி அறவே புறக்கணிக்க வில்லை என்று கேட்பது, பால் ஏன் வெள்ளையாக இருக்கிறது, குருதி ஏன் சிவப்பாய் உள்ளது, கடல் ஏன் நீல நிறத்தில் உள்ளது என்று கேட்பது போன்ற வினாக்கள் ஆகும்!


தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுவாளைத்
தெய்வம் தொழுந்தகைமை திண்ணியதால் -தெய்வமாய்
மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி,
விண்ணக மாதர்க்கு விருந்து.

(சிலப்பதிகாரம்: மதுரைக் காண்டம், கட்டுரைக் காதை)

என்று இளங்கோவடிகள் கண்ணகியைத் தெய்வமாய்க் கருதித் திருவள்ளுவரை மனதில் வைத்துக் கொண்டு எழுதுகிறார். இந்தப் பாடல் மூலம் தமிழ் மாதரை எல்லாம் விளித்து, தெய்வங்களை விலக்கி விட்டு உங்கள் கணவன்மாரைத் தினமும் விழித்தெழுந்து வழிபடுவீர் என்று நான் வேண்ட வில்லை! நூற்றுக்கு எண்பது சத ஆண்கள் பெண்களை முன்னேற விடாமல் அமுக்கி வைக்கும் ஆணாதிக்கப் பேர்வழிகள் என்பது முற்றிலும் உண்மை. மனைவியர் ஏன் அவரை வழிபட வேண்டும்? வாய்ப்புக் கிடைத்தால் மனைவியர் அவரைக் காலால் மிதித்துத் தள்ளாமல் விடுவதே ஆச்சரியம்! கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் உள்ளாரக் கனிவுடன் மதித்து வாழ்வதையே யாம் விழைகிறோம். அந்தக் காலத்தில் ஒழுக்க நெறி, ஆணுக்கின்றிப் பெண்ணுக்கு மட்டுமே ஏனோ கூறப் பட்டுள்ளது! வட அமெரிக்காவில் மனைவியை வன்முறையில் தாக்கிய கணவன் ஒருவனின் ஆண்குறியை, மனைவி அவன் தூங்கும் போது கத்தியால் அறுத்து அவனுக்குப் பெருவேதனையைக் கொடுத்தாள்! நல்ல வேளை, உடனடியாகச் செய்த சிகிட்சையில் அது மீண்டும் ஒட்டப் பட்டது! பல பெண்டிருக்கு அதுபோல் தாங்காத ஆத்திரம் இருந்தாலும், ஆண்குறியை அறுக்கும் அளவுக்கு மன அழுத்தமும், ஊக்கமும் இருக்காது! மனைவி யிருக்கையில் பிற பெண்டிரைப் பலாத்காரம் செய்யும் கணவனை மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிக் கொன்ற “மந்திரி குமாரிக்” கதையும் நமக்குத் தெரியும்!

பிற மகளிரை நாடிச் சென்ற கணவரைக் காறித் துப்பி, அறவே வெறுத்து மணமுறிவு செய்யும் பெண்டிரும் உள்ளார். ஆனால் முற்றிலும் மாறுபாடாக மாதவியை விட்டுத் திரும்பி வந்த கோவலனைக் கண்ணகி என்பாள் கண்டிக்காமல், தண்டிக்காமல் ஏற்றுக் கொண்டது வியப்பாக இல்லையா? அது அவள் உடன்பிறந்த பெண்பால் பண்பு. ஆனால் அப்பண்பு சில பெண்களுக்குப் பிடிக்க வில்லை என்பது இயற்கை! அதே சமயம் ஒரு பெண்ணானவள் தன்னைப் போலவே கடிய மனப்பான்மையில் மற்ற பெண்டிரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது சரியாகுமா? மேலே காட்டிய உதாரணப் பெண்டிரை ஏன் அப்படிச் செய்தார் என்று உளவு செய்வது மனநூல் எழுதத்தான் உதவி செய்யும்! பெண் ஒருத்தியைப் புண்படுத்தி நெஞ்சில் நீங்காக் கறை உண்டாக்குவது, கணவன் தன்னை விலக்கி விட்டுப் பிற மாதர் வலையில் வீழ்ந்து புரியும் புறக்கணிப்பு ஒன்றுதான்! ஒவ்வொரு பெண்ணும் அந்த வேதனையைத் தன் வளர்ப்பு, நாகரீகம் மற்றும் கலாச்சாரப் பண்புக்கு ஏற்ப ஒவ்வொரு முறையில் கையாளுகிறாள்! கடவுள் ஒவ்வொரு பெண்டிருக்கும் அளிக்கும் தனித்துவப் பண்பே அங்கு தலை தூக்குகிறது! கண்ணகி மாதவியோடு உடலுறவு கொண்ட தன் கணவனுடன் ஏன் சண்டை யிடவில்லை என்று கேட்கும் கேள்வி எனக்குப் பெரும் வியப்பை அளிக்கிறது!

கண்ணகியை முட்டாள் என்று திட்டுவதற்கு ஒருவருக்குப் பூரண உரிமை உள்ளது! கண்ணகிக்குச் சென்னைக் கடற்கரையில் சிலை வைக்கத் தேவையில்லை என்று எதிர்ப்பதற்கு ஒருவருக்குப் பூரண உரிமை உள்ளது! அவ்விதம் மீறிச் சிலை வைப்பது சில பெண்களுக்கு அவமானமாகத் தெரிவதாகச் சொல்வதிலும் உரிமை யிருக்கிறது! ஆனால் நட்ட சிலையைத் தட்டி வீழ்த்தவோ, உடைக்கவோ அல்லது திருடவோ எவருக்கும் உரிமை யில்லை என்பது என் கருத்து! கடற்கரை வழியாகக் கடந்து செல்லும் போது பிடிக்காத ஆத்மாக்கள் சிலை கண்ணில் பட்டால், தவிர்க்கக் கண்களை மூடிக் கொள்ளட்டும்! ஆனால் கண்ணகியை முட்டாள், முட்டாள் என்று ஒருவர் சுட்டிக் காட்டும் போது, அவளைக் கதாநாயகியாக வைத்து ஐம்பெருங் காப்பியங்களில் சிறந்த காவியமான சிலப்பதிகாரத்தை வடித்த இளங்கோவடிகளைத் தாக்குகிறது! சோழ நாட்டுப் பூம்புகாரில் பிறந்து, வளர்ந்து, திருமணமாகிப் பாண்டிய நாட்டில் கணவனைப் பறிகொடுத்து, நீதியை நிலைநாட்டிச் சேர நாட்டு மலையிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கண்ணகியின் வரலாற்றை வியந்து, அவளுக்காக இமயம் சென்று கல்லெடுத்துச் சிலைவைத்த சேரன் செங்குட்டுவனைத் தாக்குகிறது! அவை போக சென்னைக் கடற்கரையில் முதல்முறை கண்ணகிக்குச் சிலை வைத்து, பிறகு அது காணாமல் போய், மறுமுறையும் ஆர்வமோடு சிலை வைக்கப் போகும் மேன்மைமிகு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களையும் தாக்குகிறது! பரமசிவனை ஒருவன் பிரம்பால் அடித்ததும், அந்த அடி மானிடர் பலர் மீது பட்டதாகப் படித்த கதை எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது!
சிலப்பதிகாரத்தின் முடிவில் இளங்கோவடிகள் சுட்டிக் காட்டும் நெறிமுறைகள் கண்ணகியின் உன்னதப் பண்புக்கு ஒளி ஊட்டுகின்றன:

பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்;
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் நீக்குமின்;
ஊனூண் துறமின்; உயிர்கொலை நீங்குமின்;
தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்;
செய்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்; …..
பிறர்மனை அஞ்சுமின்; பிழையுயிர் ஓம்புமின்;
அறமனை காமின்; அல்லவை கடிமின்;
கள்ளும், களவும், காமமும், பொய்யும்,
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்;
இளமையும், செல்வமும், யாக்கையும் நிலையா!
உளநாள் வரையாது, ஒல்லுவது ஒழியாது,
செல்லும் தேயத்து உறுதுணை தேடுமின்;
மல்லன்மா ஞானத்து வாழ்வீர் ஈங்கென்.

நூலாசிரியர் வேண்டல் (சிலப்பதிகாரம்: வஞ்சிக் காண்டம், வரந்தரு காதை)

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan June 28, 2006]

Series Navigation