பூச்சிகளின் காதல்

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான்


நம்மைப் பொறுத்தவரை, காதல் எனப்படுவது இரண்டு இதயங்களின் சங்கமம். ஆனால் சற்றே உற்று நோக்குங்கால் ஓர் உண்மை புலப்படும். அதாவது காதல் எனப்படுவது, இல்லறத்தில் இணைந்து, அடுத்த சந்ததியை உருவாக்கும் ஓர் ஆரம்பத் திறவுகோல் ! இது அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். என்ன, நாமெல் லாம் திருமணமாகி, குடும்பம், குழந்தை என ஒரு கட்டுக்கோப்புடன் வாழ்வோம். மற்ற உயிரினங்களுக்கு இந்த கட்டுக்கோப்பு இல் லை. ஆனாலும் காதல் லீலைகள் எல் லாம் மற்ற உயிரினங்களுக்கும் உண்டு. அதிலும் இந்த பூச்சிகளின் காதல் விளையாட்டுக்கள் மிக மிக சுவாரசியமானது மட்டுமல்ல – சுவையானதும் கூட.

நாமெல் லாம் திருமணமான முதல் மாதம் சம்பளம் வாங்கியதும் என்ன செய்வோம் ? காதல் மனைவிக்குப் பிடித்தவற்றை வாங்கி வந்து ( ? ?!!) கலக்குவோமில் லையா ? ( ‘ ‘அப்படியா ‘ ‘ என கேட்பது புரிகிறது ; ஒரு பொதுவான கருத்தை சொன்னேன்…. அவ்வளவே!!!) ஒரு சில பூச்சிகளுக்கும் இந்த பழக்கம் உண்டு. கருமுனை தொங்கும்ஈ (Black tipped hanging fly) என்று ஒன்று உண்டு. ஒன்றுமில் லை, இவர் எப்பவுமே இலைகளின் அடியில்தான் தொங்கிக் கொண்டிருப்பார். அதனால்தான் இந்த பெயர். கலவிக்கு விழையும் பெண்பூச்சி, ஆண்பூச்சியைக் கலவிக்கு அழைக்கும். இதற்காக, பெண்பூச்சி ஒருவிித பிரத்யேக தூதுவேதியை (Messenger chemical) காற்றில் கலந்துவிடும். இந்த Signal கிடைத்தவுடன், ஆண்பூச்சி பெண்பூச்சிக்குப் பரிசு தேடி, வேட்டைக்குச் செல்லும். இந்த பரிசு ‘ ‘காதல்பரிசு ‘ ‘ (Nuptial Gift) எனப்படும். பெண்பூச்சிக்குப் பிடித்தமான, சுவையான உணவை ஆண்பூச்சிகள் வேட்டையாடிக் கொண்டுவரும். இந்த போட்டியில் பல ஆண்பூச்சிகள் இருக்கும். இருப்பினும், யாரொருவர் மிகப்பெரிய காதல்பரிசைக் கொண்டுவருகிறாரோ, அவரே பெண்பூச்சியுடன் கலவிக்கு அனுமதிக்கப்படுவார். மற்றவரெல் லாம், ‘ ‘வாங்க மச்சான் வாங்க – வந்த வழியைப் பார்த்து போங்க ‘ ‘ என்று வந்த வழியே திருப்பி விரட்டப்படுவர். கலவியில் இருக்கும்போதே, பெண்பூச்சி ஆண்பூச்சி அளித்த காதல்பரிசைச் சுவைத்துக் கொண்டிருக்கும். ஒருவேளை, ஆண்பூச்சி கலவியை முடிக்கும் முன்பே, பெண்பூச்சி சுவைத்துக் கொண்டிருக்கும் காதல்பரிசு முடிந்துவிடுமானால், உடனடியாக பெண்பூச்சி தன்னைக் கலவியிலிருந்து விடுவித்துக் கொள்ளும். மேலும், அந்த ஆண்பூச்சியும் அடித்து விரட்டப்படும். எனவே, கொஞ்சம் விவரமான ஆண்பூச்சி, கலவி முடியும்வரை தீராத அளவிற்கு, மிகப்பெரிய்ய்ய்ய்ய காதல் பரிசைக் கொண்டுவந்து விடும்.

அடுத்ததாக தட்டான் பூச்சிகள் (Dragonfly). நாமெல் லாம் வண்ண வண்ணமாய், சிறிதும் பெரிதுமாய் தட்டான் பூச்சிகளைப் பார்த்திருப்போம். அவற்றின் வாழ்க்கையிலும் காதல் உண்டு.

இந்த தட்டான் பூச்சிகளில், ஆண்பூச்சி தனக்கென ஒரு அதிகார பரப்பை (Male territory) வைத்திருக்கும். இந்த அதிகார வரம்பிற்குள், மற்ற ஆண்தட்டான்கள் நுழைய முடியாது. மீறி நுழைபவர்கள், சந்தேகமின்றி விரட்டி அடிக்கப்படுவர். ஆனால், மற்ற தட்டான்களின் கண் மற்றும் கைப்படாத பெண்தட்டான்கள் வந்துவிட்டால், இராஜ உபசாரம்தான் !!! ஒரே ஆட்டம் பாட்டம்

கொண்டாட்டம்தான் !!!! காதலில் மூழ்கி, கலவியில் திளைத்து எழும். ஆனால் ஆண்தட்டான், தன் காதலி இதற்குப் பின்னர், வேறு எந்த ஆண்தட்டானுடனும் பள்ளி கொள்வதை விரும்பாது. ஏனெனில் தன் காதலி மூலம் பிறக்கும் குழந்தைகள் தன்னுடையதுதான் என்பதை நிலைநாட்டவே விரும்பும். எனவே, கலவியை முடித்தபின் ஆண்தட்டான், பெண்தட்டானின் இன உறுப்பை ஒருவிித சுரப்பினைக் கொண்டு அடைத்துவிடும். மேலும், இந்த ஆண்தட்டான்களில் இன்னொரு ஆச்சரியமும் உண்டு. பொதுவாக பூச்சிகளைப் பொறுத்தவரை, ஆண்பூச்சிகளில் இனஉறுப்பு அடிவயிற்றின் 9 வது கண்டத்திலும், பெண்பூச்சிகளில் இனஉறுப்பு அடிவயிற்றின் 7, 8 வது கண்டத்திலும் இருக்கும். ஆனால் ஆண்தட்டான்களில் இனஉறுப்பு அடிவயிற்றின் 2 வது கண்டத்திலேயே இருக்கும்.

அடுத்து வருவது கரப்பான் பூச்சிகள் (Cockroach). இவர்கள் எப்பவுமே பிறன்மனை நோக்கா பேராண் மக்கள்தாம் ! ஆண்கரப்பான் பூச்சி, கன்னித்தன்மை மாறாத பெண்கரப்பான் பூச்சிகளையே, தன்னுடைய காதலியாகத் தொிவு செய்யும். இது எப்படி சாத்தியம் ? ஏதோ கட்டுக்கதை போல் இருக்கிறதா ? இதற்கென்றே ஆண்கரப்பான் பூச்சி ஒரு பிரத்யேக ‘டெஸ்ட் ‘ வைத்திருக்கின்றது. ஆண்கரப்பான் பூச்சி இதற்காக ரொம் ப மெனக் கெடாது. ஏதாவது வேலையாக போய்க்கொண்டு இருக்கும்போது, பெண்கரப்பான் பூச்சியைச் சந்திக்குமானால், இரண்டும் பரஸ்பரம் அருகருகே வந்து, (நாம் நெருங்கிய நண்பர்களைச் சந்திக்கும்போது அணைத்துக் கொள்வதை போல) ஒன்று மற்றொன்றை தங்கள் தலையிலுள்ள உணர்கொம்புகளால் தடவிக்கொள்ளும். இரண்டுமே கன்னித்தன்மை மாறாமல் இருக்குமானால், இருவரின் உடலிலும் ஒருவித மின்சாரம் பாயும். அவ்வளவுதான் !!! அடுத்த விநாடியே, ‘ ‘நீ பாதி…. நான் பாதி…. கண்ணே ‘ ‘ என்று ஜோடி சேர்ந்து விடும்.

இறுதியாக வருவது பழப்பூச்சிகள் (Fruit Flies). நாமெல் லாம் ஏதேனும் பழம் வாங்கி, கொஞ்ச நாள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால், ஓர் அழையா விருந்தாளி வருவாரே, அவர்தான் இந்த பழப்பூச்சி. இங்கும் கலவிக்கு விழையும் பெண்பூச்சி, தூதுவேதியைக் காற்றில் கலந்துவிட்டு ஆண்பூச்சியைக் கலவிக்கு அழைக்கும். உடனே ஆண்பூச்சிகள், பெண்பூச்சியைத் தேடிப் படையெடுக்கும். பெண்பூச்சியைக் கண்டுபிடித்தவுடன், எல் லா ஆண்பூச்சியும் அதைச் சுற்றி சுற்றி வந்து, சலங்கை ஒலி கமலஹாசன் கணக்காய் நடனம் ஆடும். பெண்பூச்சி, ஏதோ தன்னை உலக அழகிப்போட்டி நடுவர் கணக்காய் நினைத்துக்கொண்டு, ஆண்பூச்சிகளின் நடனத்தை மதிப்பீடு செய்யும். அதன் மதிப்பீட்டில் யார் முதலாவதாக வருகின்றாரோ, அவரே அந்த பெண்பழப்பூச்சியின் காதலர் !!!!

ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல்…. ஆனால் பூச்சிகள் மறைக்குமே !! அதைப்பற்றிி…. அடுத்த வாரம்!!

Series Navigation

இரா. சீனிவாசன்

இரா. சீனிவாசன்