பூக்களின் சரம், ஒரு கல், தொட்டுக் கொள்ள நாகூர்!

This entry is part [part not set] of 32 in the series 20090512_Issue

வஹ்ஹாபி


நாகூர் ஹனீஃபா என்ற பாட்டுக்காரரைப் பற்றிக் கவிஞர் அப்துல் கையூம், ‘நாகூர் ஹனிபா – அவர் ஒரு சரித்திரம்’ என்ற தலைப்பில் திண்ணையில் எழுதியிருந்தார் [சுட்டி-1].

பெரியார், இஸ்மாயீல் ஸாஹிப், பன்னீர் செல்வம், பட்டுக்கோட்டை அழகிரி, கருணாநிதி, அன்பழகன் போன்ற பிரபலங்களோடு நாகூர் ஹனீஃபாவின் நெருக்கம் அதில் பேசப்பட்டாலும் அண்ணாவைப் பற்றி பேசியது மலர் மன்னனுக்கு அவரது பழைய நினைவுகளை மலர வைத்தது. நாகூர் ஹனீஃபாவோடு அவருக்கு இருந்த நெருக்கத்தையும் திண்ணை வாசகர்களோடு மலர் மன்னன் பகிர்ந்து கொண்டார் [சுட்டி-2].

கவிஞர் அப்துல் கையூம் தனது திண்ணைக் கட்டுரையில், தாயிஃப் நகரில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கல்லடி பட்ட நிகழ்வுப் பூக்களைக் வெகு இயல்பாகச் சரம் தொடுத்திருந்தார்:
பூ-1 : “கல்லடிகள் பட்டபோதும் எங்கள் பெருமானே, கயவர்களைச் சபிக்கவில்லை எங்கள் பெருமானே”
பூ-2 : “தாயிப் நகரத்தின் வீதிகளில் – ஒரு தங்க நிலவைத் துரத்துகிறார். அருமை நபியை ஆருயிரை, அணையா விளக்கை வருத்துகிறார்”
பூ-3 : “கல்லின் மீது பூவை எறிபவர்கள், இப்போது பூவின் மீது கல்லை எறிகிறார்கள்”
பூ-4 : “சொன்மாரி பொழிந்ததற்காய்க் கன்மாரி பெய்துவிட்ட வன்மனத்தார் திருந்துதற்கு வழிவகுத்த நாயகமே”
பூ-5 : “கல்லடி ஏற்று, கடுமொழி கேட்டு, உள்ளம் துடித்து, உதிரத்தை வடித்து”
பூ-6 : “தாயிப் நகரில் கல்லடிகள் தந்த தழும்பிலே – இமைகள் தழுவதற்கும் அழுவதற்கும் கண்ணீர் பொங்குதே”
பூ-7 : “தாயிப் நகரத்து வீதியிலே – எங்கள் தாஹா இரசூல் நபி நடக்கையிலே – பாவிகள் செய்த கொடுமையினை – எண்ணிப் பார்த்தால் நெஞ்சம் பதைக்குதம்மா!”

இவற்றுள் மூன்றாவது பூவான, “கல்லின் மீது பூவை எறிபவர்கள், இப்போது பூவின் மீது கல்லை எறிகிறார்கள்” என்ற கவிக்கோ அப்துர் ரஹ்மானின் வரிகளைப் பற்றிச் சொல்லும்போதே, “வித்தியாசமான உவமைப் படிமம்” எனக் குறிப்பிடக் கவிஞர் மறக்கவில்லை. மலர் மன்னன் உட்பட எல்லாருக்கும் இயல்பாகத் தோன்றும் ‘உவமைப் படிமம்’ இயல்புக்கு மாற்றமான மனநிலையில் உள்ள ஒருவருக்கு மட்டும் விகாரமாகத் தோன்றுகிறது [சுட்டி-3].

திண்ணையில் உள்ள சொம்பை எடுத்து உள்ளே வைத்துக் கொள்வோம்; யோக்கியர் வரப் போகிறார்.

//தனக்கு கீழ்ப்படிந்து தன்னிடம் ஆளும் உரிமையையும், நீதி வழங்கும் உரிமையையும், நிதி வசூல் செய்யும் உரிமையையும் ஒப்படைக்குமாறு கோர// நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தாயிஃப் நகருக்குப் போனதாகத் திண்ணையில் எழுதும் நேசகுமார் என்பவரது மனநிலையை/வரலாற்று அறிவை எதில் சேர்ப்பது?

//இந்துக்களை விவரிக்கும் வரிகளாக (கல்லின் மீது பூவை எறிபவர்கள்) புரட்டிய புண்ணியம் அப்துல் ரகுமானுக்கு சேரும் என்றால், அந்த மதக்காழ்ப்பை இங்கே அப்துல் கையும் சம்பந்தமில்லாத வகையில் இழுத்து வரத்தான் வேண்டுமா?//

‘கல்லின் மீது பூவை எறிபவர்கள்’ என்ற உவமை புரிபடாத மாதிரி, அரபு நாட்டுப் பாகன்களான தாயிஃப்வாசிகளை அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டதைத் திசை திருப்பி, ‘கல்லின் மீது பூவை எறிபவர்களை’ இந்திய இந்துகளாகத் திருகுதாளம் செய்ய முயலும் நேசகுமாருக்கு சுருக்கமான ஒரேயொரு கேள்வி:
காந்திஜி பிறந்தநாள் முதல் தியாகிகள் நினைவுநாள்வரை அந்தந்தக் கற்சிலைகளுக்கு/நினைவுச் சின்னங்களுக்குச் சென்று பூ அள்ளிப் போடும்/எறியும் நமது பிரதமர் மன்மோகன் சிங் இந்துவா?

உவமை/உண்மை விளங்காமல், “கல்லின் மீது பூவை அள்ளிப் போடுபவர்/வீசுபவர் எல்லாரையும் இந்துக்கள்” என்ற அபத்தக் கருத்தை இங்கு வலிந்து புகுத்தினால், கி. வீரமணியை இந்து என்று சொல்ல வேண்டிய அபாயம் ஏற்படும். அதைவிடவும் அவர் வீசும் பூக்கள் போய் விழும் கல்லான பெரியாரை, “கடவுள்” என்று சொல்ல வேண்டிய பேரபாயம் ஏற்படும்.

இத்தனைக்கும் கவிக்கோவின் இருவரிக் கவிதை, விளங்க முடியாத அளவு கடினமாக இல்லையே! “சிலை வணங்கிகளான தாயிஃப் நகர பாகன்கள் மென்மையான குணம் கொண்ட நபிகளாரைக் கல்லால் அடித்து ஊரை விட்டுத் துரத்தினார்கள்” இதுதானே அந்த இருவரிக் கவிதை சொல்லும் செய்தி!

//இது அநாகரிகமான கூற்று என்பது கூட இவர்களுக்கு புலப்படாமல் போனதுதான் தமிழ் சமுதாயத்தின் துரதிர்ஷ்டம், உலகின் துரதிர்ஷ்டம் என்று தோன்றுகிறது// என்று உலகளாவிய அளவில் மாய்ந்து போகிறார் நேசகுமார்.

எந்த நேசகுமார்?

ஸைபர் ப்ரம்மாவோடு சேர்ந்து அசிங்கமான ‘கிச்சு-கிச்சு தாம்பாளம்; கிய்யா-கிய்யா தாம்பாளம்’ விளையாட்டு [சுட்டி-4] விளையாடிய நேசகுமார். கிச்சு மானஸ்தன் போலும்; ‘நேசகுமாருடன் ஒரு நேர்காணல்’ என்ற தனது 25.05.2005 தேதியிட்ட பதிவைத் தூக்கி விட்டார் [சுட்டி-5]. நேசகுமார் நாகூருக்குப் போய் நன்னாரி சர்பத் குடித்ததாக வெட்கமின்றிக் கதை சொல்லும் அப்பதிவு இன்றுவரை வேறோர் இடத்தில் பாதுகாப்பாகப் படிக்கக் கிடைக்கிறது [சுட்டி-6].

தனி மனிதத் தாக்குதலை அனுமதிக்காத திண்ணையின் விதிகள் புரிந்து கொள்ளத் தக்கவைதாம். ஆனால், 100 கோடி இந்தியர்களுள் 20 கோடி முஸ்லிம்கள் – அதாவது ஐந்தில் ஓர் இந்தியர் – உயிரினும் மேலாக மதிக்கும் உலகளாவிய தலைவர் ஒருவரை அவமதித்து எழுதுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவரது காழ்ப்புக் கழிவுகளைத் திண்ணை ஏற்றுக் கொள்வதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தனது இருப்பைக் ‘காட்டி’க் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் நேசகுமாருக்கு இருக்கலாம்; திண்ணைக்கு அப்படி இல்லையே!

சென்ற வாரம் திண்ணையில் அவர் கக்கியதைப் போல் நூறு மடங்கு காழ்ப்புகளுக்கு ஏற்கனவே பலரால் விளக்கங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன [சுட்டி-7]. குறிப்பாக நல்லடியார் என்பவர் நான்காண்டுகளுக்கு முன்னர் தமிழோவியத்தில் அசைக்க முடியாத சான்றுகளுடன் 9 வாரங்கள் தொடர் விளக்கம் எழுதியிருக்கிறார் [சுட்டி-8].

என்றாலும் பழைய குருடி கதவைத் திறடி கதையாய் மீண்டும், //மத்திய காலத்தில், மத்திய கிழக்கில் பரப்பப்பட்ட கருத்துக்களை புரிந்தும் புரியாத நிலையில் வன்முறை மூலம் பெரும் கூட்டத்தின் மீது திணித்து, அவர்களுக்கு பணம், பதவி, பெண்கள் என்று ஆசை காட்டி அந்தக் கருத்துக்களைப் பற்றிய விமர்சனங்கள், கேள்விகள் எதுவும் எழுப்பாதவாறு அவர்களிடம் ஆசை, வெறுப்பு ஆகியவற்றை தூண்டிவிட்டு அந்தகூட்டங்களின் சக்தியை மற்றவர்கள் மீது திருப்பிவிட்டு கட்டப்பட்ட இந்த இறைக்கோட்பாடு// என்று இஸ்லாத்தின் மீது சேறுவாரி இறைப்பதன் மூலம் – அதிலும் நாகூர் என்ற பெயர் கேட்டாலே நடுக்கம் கூடிப் போய்விடுவதைக் காட்டி விடுவதன் மூலம் – தனக்கு மிரட்சி முற்றிப் போய்விட்டதை மறுபடியும் நிரூபிக்கும் நேசகுமார், “இந்தியாவில் இஸ்லாத்துக்கு எதிர்காலமில்லை” என்ற கிழடு தட்டிய கிளிசோதிட நம்பிக்கையிலேயே இன்னமும் மூழ்கிக் கிடக்கிறார்; கிடந்து விட்டுப் போகட்டும்!

“எல்லாப் புகழும் இறைவனுக்கு” என்பது நாகூர் ஹனீஃபா பாடிய பாடல்களுள் ஒன்று. அதே வரிகளை, ஹாலிவுட்டில் உள்ள கோடாக் அரங்கில் உலகமெங்கும் கேட்கும்படி உரத்துச் சொன்னவரது – அதாவது ஐந்து இந்தியரில் ஒருவரது – முன்னாள் பெயர் திலீப் குமார் என்று ‘ஐ லவ் இண்டியா’ தளத்தில் செய்தி போட்டிருக்கிறார்கள் [சுட்டி-9].

ஜெய்ஹோ!

ஃஃஃ

to.wahhabi@gmail.com

சுட்டிகள்:
1 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=20904235&edition_id=20090423&format=html
2 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=20904303&edition_id=20090430&format=html
3 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=20905071&format=html
4 – http://wahhabipage.blogspot.com/2008/03/2.html
5 – http://kichu.cyberbrahma.com/?p=61
6 – http://copymannan.blogspot.com/2007/04/blog-post_19.html
7 – http://wahhabipage.blogspot.com/2006/09/blog-post.html
8 – http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nalladiyar1&taid=1
9 – http://www.iloveindia.com/indian-heroes/ar-rahman.html

Series Navigation

வஹ்ஹாபி

வஹ்ஹாபி