புத்தக விமரிசனம்: ஹெச்.ஜி.ரசூலின் ‘இஸ்லாமியப் பெண்ணியம்’

This entry is part [part not set] of 30 in the series 20060707_Issue

இப்னு பஷீர்


ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாமிய கொள்கைகளை விமரிசித்து எழுதி வரும் வேளையில், இஸ்லாமிய எதிர்ப்பு சக்திகள் இவரை ஆதரித்து பாராட்டி, தூபமிட்டு அதில் குளிர் காய்ந்து வரும் சூழ்நிலையில் இவரது நூலாகிய ‘இஸ்லாமியப் பெண்ணியம்’ மிகுந்த கவனத்தை பெறுகிறது. இந்நூல் குறித்த ஒரு சிறு விமரிசனமே இக்கட்டுரை.

இப்புத்தகம் எழுத வேண்டிய அவசியத்தை ஹெச்.ஜி.ரசூல் தனது முன்னுரையில் (பக்.3) இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘இஸ்லாமிய ஆண்கள் தங்கள் ஆதிக்கச் செயல்பாட்டை நிலைநாட்ட இஸ்லாமிய சட்டங்களை திரிப்பதும், திருமறை வசனங்களை ஒருசார்பாக பயன்படுத்துவதும், வாழ்வியல் நிலைபாடுகளில் பாரபட்சம் காட்டுவதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது…. இந்நிலையில் திருக்குர்ஆனிலும் ஹதீசுகளிலும் பெண் சார்ந்த நலன்களை பிரதானப் படுத்தும் ‘பெண்ணிய வாசிப்பு’ மிகத் தேவையாக உள்ளது’.

இது வரவேற்கத்தக்க ஒரு அணுகுமுறை என்பதில் சந்தேகம் இல்லை. காலங்காலமாக இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் ‘இஸ்லாம் பெண்ணியத்திற்கு எதிரான மார்க்கம்’ என நிறுவ முயன்று வருகின்றனர். இஸ்லாத்தின் கொள்கைகளை சரிவர புரிந்து கொள்ளாமல் அவற்றை குருட்டாம்போக்கில் நடைமுறைப் படுத்தும் சில முஸ்லிம்களின் செயல்பாடுகளைத்தான் இவர்கள் ஆதாரங்களாக கொள்கின்றனர். அவ்வாறில்லாமல், ரசூல் மிகச்சரியாக குறிப்பிட்டிருப்பதைப் போல, இஸ்லாமியக் கொள்கைகளை முறையாக விளங்கிக் கொள்வதற்கு திருக்குர்ஆன் மற்றும் ஹதீசுகள்தான் சரியான உரைகற்கள். முஸ்லிம்களின் செயல்பாடுகளை இந்த உரைகற்களைக் கொண்டு மதிப்பிட வேண்டுமே தவிர, இவர்களின் செயல்பாடுகளைக் கொண்டு இஸ்லாத்தின் கொள்கைகளை விளங்க முயற்சிப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது.

*****

இவ்வாறு தெளிவாக வரையறுக்கப்பட்ட நோக்கத்துடன் எழுதப்பட்ட புத்தகத்தில் முதல் ஓரிரண்டு அத்தியாயங்களிலேயே கருத்துக்கள் பிசிறடித்து முரண்பாடுகள் பல்லிளிக்கத் தொடங்கி விடுகின்றன. உதாரணத்திற்கு ஒரு சில:

“ஆண் நினைத்த நேரத்தில் ‘தலாக்’ சொல்லி பெண்ணை விவாகரத்து செய்துவிடலாம்.” (பக்கம் 5)
“இஸ்லாமிய வாழ்க்கை முறையில் தலாக் என்பது மனைவியை நினைத்த நேரத்தில் கணவன் மணவிலக்கு செய்யும் மண முறிவு நிகழ்வாகும்.” (பக்கம் 8 )

என்று கூறும் ரசூல், பக்கம் 9 முழுக்கவே கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்களை தீர்க்க திருக்குர்ஆன் கூறும் தலாக்கின் முன்நிலை நடவடிக்கைகளையும், தலாக் சொல்லுதலில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகளையும் விவரிக்கிறார். மேலும் பக்கம் 10-ல் முத்தலாக் சொன்னபிறகு அதே கணவன் மனைவி சேர்ந்து வாழ விரும்பினால் அதற்கான விதிமுறை வெகு கடுமையாக வகுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிடுகிறார்.

இந்த வழிமுறைகளும் விதிமுறைகளும், தலாக் என்பது குறிப்பிட்ட கால அவகாசங்களை அனுஷ்டித்து, பின்விளைவுகளைப்பற்றி நன்கு யோசித்து, இரு குடும்பத்தாரின் முக்கிய நபர்களை கலந்தாலோசித்து, ‘வேறு வழியே இல்லை’ எனும் பட்சத்தில் தீர்மானிக்க வேண்டிய ஒரு முடிவு என்பதை தெளிவு படுத்துகின்றன. உண்மை இவ்வாறிருக்க, இஸ்லாம் ஏதோ ஆண்களுக்கு நினைத்த மாத்திரத்தில் தலாக் செய்யும் உரிமையை வழங்கியிருக்கிறது என்கிற தொனியில் ரசூல் குறிப்பிட்டிருப்பது மிகத்தவறானது.

ஒரு பெண் எவ்வாறு ‘நினைத்த நேரத்தில்’ பிள்ளை பெற்றுக் கொள்ள இயலாதோ, அதேபோல இஸ்லாமிய சட்டதிட்டங்களை பின்பற்றும் ஒரு ஆண் ‘நினைத்த நேரத்தில்’ தலாக் சொல்லவும் முடியாது என்பதுதான் உண்மை.

*****

‘பலதார மணம்’ என்ற அத்தியாயத்தில், “திருமறை வசனத்தில் தங்களுக்கு தேவையான ஒரு பகுதியை மட்டும் பிரித்தெடுத்து ஆண்கள் தங்கள் ஆதிக்க கருத்தியலுக்கு ஏற்ப இவற்றை வடிவமைத்து நடைமுறைப் படுத்திவிடுகிறார்கள்” என்பது ரசூலின் குற்றச்சாட்டு. (பக்கம் 5)

பல முஸ்லிம்களிடையே இஸ்லாமிய வாழ்வு நெறிமுறைகளைப் பற்றிய போதிய அறிவு இல்லாமையும், அவற்றை உள்ளது உள்ளபடி விளங்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அக்கறையின்மையுமே இதன் காரணங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை உடையவர்கள் அவர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரி நீதமாக நடக்க வேண்டும் என்ற திருமறையின் கடுமையான நிபந்தனையையும் ‘மனைவியருக்கிடையே சமமாக நடந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் முடியாது (4:129) ‘ என்ற எச்சரிக்கையையும் பார்க்கும்போது, அவ்வாறு நடந்து கொள்ள முடிந்தவர்களுக்கு மட்டுமே பலதார மணத்திற்கான அனுமதி என்பது விளங்கும்.

*****
“இவைகள் அனைத்துமே கணவனுக்கு மாறு செய்யும் பெண்ணை தண்டிக்கவே கூறப்பட்டுள்ளன. ஆனால் மனைவிக்கு மாறு செய்யும் கணவனுக்கு என்ன விதமான தண்டனை என்பது குறித்து அதிக பட்சமும் மௌனமே பதிலாக கிடைக்கிறது” என ஐயத்தை கிளப்புகிறார் ரசூல். அதற்கான பதில் அவரது புத்தகத்திலேயே இருப்பதை, பாவம் ரசூல் அறியவில்லை போலும்.

“விபச்சாரம் செய்த பெண், விபச்சாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவருக்கும் நூறு சாட்டையடி கொடுங்கள் (அந்நூர் அத்தியாயயம் 24, வசனம்:2)” – பக்கம் 33

“திருமணத்திற்கு பிறகு முறை தவறிய பாலியல் குற்றம் இழைத்தவர்களுக்கு ரஜ்ம் என்னும் கல்லெறித் தண்டனை விதிக்கப் படுகிறது” – பக்கம் 34

இவை ரசூல் தனது புத்தகத்திலேயே குறிப்பிட்டிருக்கும், மனைவிக்கு மாறுசெய்த கணவர்களுக்கான தண்டனைகள்.

*****

“திருக்குர்ஆனிலும் ஹதீசுகளிலும் பெண் சார்ந்த நலன்களை பிரதானப் படுத்தும் ‘பெண்ணிய வாசிப்பு’ மிகத் தேவையாக உள்ளது” என்று தொடங்கிய ரசூல், ‘தர்கா கலாச்சாரம்’ என்ற அத்தியாயத்தில் தடுமாறி தடம் புரண்டு நிற்கிறார்.

“குடும்பம், வீடு என்கிற நிறுவனத்திற்குள் அன்றாடம் கட்டுண்டு கிடக்கும் இஸ்லாமியப் பெண்ணுக்கு தர்காக்கள் சமூக அளவில் வரையறுக்கப்பட்ட விடுதலையை உருவாக்கும் கேந்திரமாக செயல்படுகின்றன” என தர்காவிற்காக கொடி பிடிக்கிறார் ரசூல். திருக்குர்ஆனிலோ ஹதீசுகளிலோ அனுமதிக்கப்படாத இது, தனது சொந்தச் சரக்கு என்பதை ரசூல் குறிப்பிட மறந்துவிட்டார் போலும்.

தர்கா சியாரத் என்னும் பழக்கம், ‘வணக்கத்திற்குறியவன் இறைவன் ஒருவனே’ என்னும் இஸ்லாத்தின் அடிப்படையையே அசைத்துப் பார்க்கும் ‘இணை வைத்தல்’ என்னும் கொடிய பாவத்தின் பக்கம் இட்டுச் செல்லும் அபாயகரமான பாதை என்பதையும் ரசூல் வசதியாக மறந்து விட்டார், அல்லது மறைத்து விட்டார்.

திருமறை வசனங்களை தங்கள் கருத்தியலுக்கு ஏற்ப மாற்றி பொருள் கொள்வது எவ்வளவு பெரிய தவறோ, அதே அளவிற்கு இஸ்லாத்தில் இல்லாத, அதன் அடிப்படை கொள்கைகளுக்கு மாற்றமான ‘தர்கா சியாரத்’ போன்ற வழக்கங்களுக்கு இஸ்லாமிய முலாம் பூசுவதும் தவறுதான். முன்னதை கடுமையாக தாக்கும் ரசூல் பின்னதை வலியுறுத்துவது விந்தையே!

*****
‘சாட்சி’ என்ற அத்தியாயம் (பக்கம் 14) போன்ற ஒரு சில இடங்களில் ரசூல் சரியான கருத்துக்களை முன்வைத்திருப்பினும், பொதுவாகவே இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான கருத்துக்கள் தெளிவில்லாமலும், பிரச்னைகளுக்கு தீர்வாக முன்வைக்கப்படும் ஆலோசனைகள் மழுப்பலாகவும் தெரிகின்றன. பிறகொரு சந்தர்ப்பத்தில் இந்தக் கருத்துக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய சூழல் ஏற்படுமேயானால், ‘நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லையே!’ என நிலையை மாற்றிக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன.

திருக்குர்ஆன் மற்றும் ஹதீசுகள் சார்ந்த இஸ்லாமியக் கொள்கைகளும் முஸ்லிம்களின் சில தவறான செயல்பாடுகளும் சரியான முறையில் வித்தியாசப்படுத்தி காட்டப்படாமல், இத்தகைய செயல்பாடுகள் இஸ்லாத்தின் அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றன என்பது போன்ற ஒரு தவறான மனப்பிம்பத்தை இப்புத்தகம் ஏற்படுத்த முயல்கிறது.

சுருக்கமாக, ‘இஸ்லாமியப் பெண்ணியம்’ என்பதற்கு சரியான விளக்கத்தை இப்புத்தகம் தரத் தவறிவிட்டது!

ibnubasheer@gmail.com

Series Navigation