புதுவகை நோய்: இமி-முற்றியது

This entry is part [part not set] of 31 in the series 20100128_Issue

வஹ்ஹாபி


அகழிப் போரைப் பற்றிய அனைத்து விபரங்களும் வரலாற்றுப் பதிவுகளாகும். அவை அகழாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய தேவையிற்றி பல மொழிகளிலும் இணையத்தில் விரவிக் கிடக்கின்றன.

அகழிப் போரை ஏற்பாடு செய்தவர்கள் யூதர்கள் ஆவர்! அவர்களது துரோகத்தாலும் சூழ்ச்சியாலும் உருவானதே அகழிப் போர்.

இணைகற்பிப்பவர்களான மக்காவாசிகளுக்கும் இஸ்லாமியப் படை வீரர்களான மதீனத்து முஸ்லிம்களுக்கும் மதீனாவை அடுத்துள்ள மலைப் பகுதியான உஹதில் ஒரு போர் நடைபெற்றது. காலம் ஹிஜ்ரீ மூன்றாம் ஆண்டு ஷவ்வால் (பத்தாவது) மாதம். அப்போரின் இறுதியில், “அடுத்த ஆண்டு பத்ருக் களத்தில் ஷஅபான் (எட்டாவது) மாதம் நாம் உங்களைச் சந்திப்போம்” என்று முஸ்லிம்களுக்கு மக்காவின் தலைவர் அபூஸுஃப்யான் சவால் விட்டிருந்தார்; முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டிருந்தனர் [சுட்டி-42].

ஆனால் ஒப்புக் கொண்டபடி மக்காவிலிருந்து அடுத்த ஆண்டில் எவரும் படை திரட்டி வரவில்லை.

யூதத் தலைவர்களுள் 20 பேர் மக்கத்துக் குறைஷிகளிடம் வந்து, அவர்களை நபியவர்களுக்கு எதிராகப் போர் புரியத் தூண்டினர். குறைஷிகள் மதீனாவின் மீது படையெடுத்தால் அதற்கு உதவியும் செய்வதாக வாக்களித்தனர். “பத்ருக் களத்தில் அடுத்த ஆண்டு சந்திப்போம்” என்று உஹதுப் போர்க்களத்தில் சவால் விடுத்து, அதை நிறைவேற்றாமல் வாக்கை மீறிவிட்ட குறைஷிகள் தற்போது தங்களது பெருமையைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பி யூதர்களின் தூண்டுகோலுக்கு இரையானார்கள்.

இத்துணைக்கும் யூதர்களும் முஸ்லிம்களும் ஒப்புக் கொண்ட, கீழ்க்காணும் 12 அம்ச உடன்படிக்கை ஒன்று ஏற்கனவே உருவாக்கப் பட்டிருந்தது:

(01) அவ்ஃப் கிளையினரைச் சேர்ந்த யூதர்கள், முஸ்லிம்களுடன் இணைந்த ஒரே சமுதாயத்தினராகக் கருதப்படுவர். இந்த யூதர்களுக்கு அவர்களது மார்க்கத்தில் முழு உரிமை உண்டு. முஸ்லிம்களுக்கும் அவர்களுடன் நட்பு கொண்டவர்களுக்கும் அவர்களின் மார்க்கத்தில் முழுச் சுதந்திரம் உண்டு. இவ்வாறே அவ்ஃப் கிளையினரைச் சாராத மற்ற யூதர்களுக்கும் அவர்களது மார்க்கத்தில் முழுச் சுதந்திரம் உண்டு.

(02) யூதர்கள் தங்களின் செலவுகளுக்குத் தாங்களே பொறுப்பாளிகளாவர். அவ்வாறே முஸ்லிம்களும் தங்களின் செலவுகளுக்குத் தாங்களே பொறுப்பாளிகளாவர்.

(03) இந்த உடன்படிக்கை உடையவர்களிடம் யார் போர் தொடுத்தாலும் அவருக்கு எதிராக முஸ்லிம்களும் யூதர்களும் தங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்துகொள்ள வேண்டும்.

(04) யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு – நலம் நாடுதல், ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்தல், உபகாரம் புரிதல் – என்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்; குற்றம் புரிவதில் துணை போவது கூடாது.

(05) ஒருவரின் நண்பன் செய்த குற்றத்திற்காக அவர் குற்றவாளியாக மாட்டார்.

(06) அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

(07) பிறருக்கு எதிரானப் போரில் முஸ்லிம்களுடன் யூதர்கள் கலந்துகொள்ளும்போது யூதர்களும் போர்ச் செலவுகளில் பங்கெடுக்க வேண்டும்.

(08) இவ்வுடன்படிக்கையில் கலந்து கொள்பவர்கள் மதீனாவில் குழப்பம் விளைவிப்பதோ, விஷமத்தனம் செய்வதோ, இரத்தம் சிந்தச் செய்வதோ முற்றிலும் தடுக்கப்பட்டதாகும்.

(9) இந்த உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்களுக்கு மத்தியில் ஆபத்தான சண்டை, சச்சரவுகள் அல்லது ஏதும் பிரச்னைகள் நிகழ்ந்தால் அதற்குரிய தீர்வு, அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) மூலம் பெறப் படும்.

(10) குறைஷிகளுக்கும், குறைஷிகளுக்கு உதவி செய்பவர்களுக்கும் பாதுகாப்புக் கொடுக்கக் கூடாது.

(11) யாராவது மதீனாவின் மீது முற்றுகையிட்டால் அவர்களுக்கெதிராக அனைவரும் போர் புரிய வேண்டும். தங்களுக்குள் உதவி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் பகுதியைப் பாதுகாக்க வேண்டும்.

(12) இந்த உடன்படிக்கை, அநியாயக்காரனையும், குற்றவாளியையும் தண்டனையிலிருந்து பாதுகாக்காது [சுட்டி-43].

மேற்காணும் உடன்படிக்கையை யூதர்கள் முறித்தனர்.

மக்காவின் குறைஷியர், திஹாமாவின் கினானாவினர், ளஹ்ரானின் ஸுலைமியர், கீழ்த்திசையின் கத்ஃபானியர், ஃபஜாராவினர், முர்ராவினர், அஷ்ஜவினர், அஸதியர், ஆகிய பல குலத்தவரை முஸ்லிம்களுக்கு எதிராக ஒருங்கிணைப்பதில் அயராது ஈடுபட்ட 20 யூதக் தலைவர்கள் அடங்கிய குழு, ஏறத்தாழ பத்தாயிரம் பேர் கொண்ட படையைத் திரட்டி மதீனாவை முற்றுகையிட அனுப்பி வைப்பதில் வெற்றி பெற்றனர்.

மதீனத்து முஸ்லிம்களுள் போரில் ஈடுபடத் தகுதியுடையோர் அப்போது ஏறத்தாழ மூவாயிரம் பேர் மட்டுமே. மதீனாவை எதிரிகளிடமிருந்து எவ்வாறு காப்பது?

அது புலப்பெயர்வின் (ஹிஜ்ரீ) ஐந்தாம் ஆண்டின் இறுதிக் கட்டம். அக்கால கட்டத்தில் புதுமையான போர்த் தந்திரம் ஒன்று (இதைப் புனித மோசடியார் ‘சூழ்ச்சி’ என்று சொல்வார்) நபித்தோழர் ஸல்மான் அல் ஃபார்ஸீ (ரலி) அவர்களால் முன்மொழியப் பட்டது. மக்காவிலிருந்து மதீனாவுக்கு வரும் வழியைச் சுற்றிலும் அகழ் தோண்டி, எதிரிகளைத் தடுப்பது என்பது திட்டம்.

இன்றைக்கு நபியின் பள்ளிவாயில் இருக்குமிடத்திலிருந்து ஏறத்தாழ மூன்று மைல் தூரத்தில், மதீனாவின் அன்றைய நகர் எல்லையின் இறுதியில் நெடிய அகழி ஒன்று தோண்டப் பட்டது. எதிரிகள் மதீனாவில் எல்லையில் வந்து சேர்ந்து அகழைப் பார்த்துத் திகைத்து நின்றனர்.

இஸ்லாமிய எதிரிகள் மிகக் கோபத்துடன் அகழைச் சுற்றி வந்தார்கள். எங்காவது ஒரு சிறு வழி கிடைத்தால் அதன் மூலம் சென்று விடலாம் என்று முயன்றனர். ஆனால், முஸ்லிம்கள் அகழின் பக்கம் எதிரிகளை நெருங்கவிடாமல் அம்பால் தாக்கினர். அகழை நெருங்குவதோ அகழில் இறங்குவதோ அகழை மண்ணால் மூடி பாதை அமைப்பதோ எதிரிகளால் முடியாமலாகி விட்டது. முற்றுகையின்போது எதிரிகள் பலமுறை அகழியில் இறங்குவதற்கும் அதன் மீது பாதை அமைப்பதற்கும் மிகத் தீவிரமாக முயன்றனர். ஆனால், முஸ்லிம்களின் அம்பு மழைக்கு எதிராக அவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.

இவ்வாறாக எதிரிகளின் ‘அகழ் முற்றுகை’ ஏறத்தாழ ஒருமாத காலம் நீடித்தது.

இதற்கிடையில், சாகசம் செய்வதாக எண்ணிக் கொண்டு அகழைக் கடக்க முனைந்த அம்ரு இப்னு அப்து உத், இக்ரிமா இப்னு அபூஜஹ்ல், ழரார் இப்னு கத்தாப் போன்றோர் அகழின் ஒரு குறுகிய இடத்தைத் தேடிப் பிடித்துத் தம் குதிரைகளுடன் இறங்கினர். அகழிக்கும் ‘ஸல்உ’ மலைக்கும் இடையிலுள்ள சதுப்பான இடத்தில் அவர்களது குதிரைகள் சிக்கித் தடுமாறின. இதைப் பார்த்த அலீ இப்னு அபூதாலிப் (ரலி), முஸ்லிம்கள் சிலரை அழைத்துச் சென்று எதிரிகள் திரும்ப ஓட முடியாதவாறு அவர்கள் வந்த வழியை அடைத்து விட்டார். இப்போது எதிரிகளும் முஸ்லிம்களும் நேருக்கு நேர் சந்தித்தனர். அம்ரு, “என்னிடம் நேருக்கு நேர் யார் மோதுவது?” என்று கேட்க, அலீ (ரலி) “நான்” என்றார்கள். அம்ருக்கு முன் நின்ற அலீ (ரலி), அவன் கோபமடையும்படி சில சொற்களைக் கூறவே அவன் கொதித்தெழுந்தான். தனது குதிரையின் காலை வெட்டி அதன் முகத்தில் வாளால் அறைந்து விட்டு அலீயை நோக்கிச் சீறினான். இருவரும் தங்களின் வாளைச் சுழற்ற, சில நொடிகளில் அலீ (ரலி) அவர்களின் வாள் அம்ரின் தலையைச் சீவியது. ஆயிரம் வீரர்களுக்குச் சமமானவன் என்று பெயர் பெற்ற அம்ரைப் பிண்டமாகப் பார்த்த மற்றவர்கள் பயந்து அகழைத் தாண்டி ஓட்டம் பிடித்தனர். குறைஷியருள் மாபெரும் வீரராக விளங்கிய இக்ரிமாகூட பயத்தால் தனது ஈட்டியையும் போட்டுவிட்டு ஓடினார்.

அந்நிகழ்வுதான் அகழிப் போர் வெற்றியின் திறவுகோல்.

இரண்டாவது தந்திரம் செய்தவர் இஸ்லாத்தில் அண்மையில் இணைந்திருந்த நுஐம் என்பார். இவரைத்தான் புனித மோசடியார் தனது மோசடிப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். எனவே, நுஐம் இப்னு மஸ்ஊத் இப்னு ஆமிர் என்பவரைப் பற்றி விளக்கமாகவே பார்த்து விடுவோம்.

உண்மையில் நுஐம், முஸ்லிம்களின் எதிரிப் படைகளுக்குத்தான் நன்மை செய்தார்; எவ்வாறு என்பதை இறுதியில் பார்ப்போம்.

பல்குலக் கலவையான எதிரிப் படைகளில் கத்ஃபான் எனும் ஒரு குலம் இடம் பெற்றிருந்ததை முன்னர் கண்டோம். அந்தக் குலத்தைச் சேர்ந்த நுஐம் இப்னு மஸ்ஊத் இப்னு ஆமிர் என்பவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் முஸ்லிமாகி விட்டேன். ஆனால், நான் முஸ்லிமானது எனது கூட்டத்தினருக்குத் தெரியாது. எனவே, நீங்கள் முஸ்லிம்களுக்குச் சாதகமாக ஏதாவது செய்யச் சொன்னால், நான் அதன்படி செய்வேன்” என்றார். அதற்கு நபியவர்கள், “நீ தனியாக என்ன செய்துவிட முடியும்? உன்னால் முடிந்தால் எதிரிகளைத் திசை திருப்பும் தந்திரம் எதையாவது செய். ஏனெனில், போர் என்பதே ஒரு சூழ்ச்சிதான்” என்று கூறினார்கள்.

முதன் முதலாக நுஐம் சென்று சந்தித்தவர்கள், மதீனாவின் எல்லையோரத்தில் வசித்துக் கொண்டு இஸ்லாமிய எதிரிப் படையினருக்கு உணவுக்கான ஏற்பாடுகள் செய்து கொடுத்துக் கொண்டிருந்த மதீனத்து எட்டப்பர்களான குரைளா எனும் யூதக் குலத்தினர். நுஐம் குரைளா குலத்தாரிடம், “நான் உங்களை எந்தளவு விரும்புகிறேன் என்பதையும் எனக்கும் உங்களுக்குமிடையிலுள்ள வலுவான தொடர்பையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்தானே?” எனக் கேட்டார். அதற்கவர்கள், “ஆம்!” என்றனர். “இந்த மதீனா உங்களுடைய ஊராகும். இதில்தான் உங்களுடைய சொத்துகளும் பிள்ளைகளும் பெண்களும் இருக்கின்றனர். நீங்கள் இந்த ஊரைவிட்டு வேறு எங்கும் தப்பித்துச் செல்ல முடியாது. ஆனால், குறைஷிகளின் நிலை வேறு. அவர்களும் கத்ஃபான்களும் முஹம்மதிடம் போர் செய்வதற்காக இங்கு வந்திருக்கின்றனர். நீங்களும் முஹம்மதுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்கிறீர்கள். ஆனால், அவர்களது ஊர் இதுவல்ல. அவர்களது செல்வங்களும் பிள்ளைகளும் இங்கு இல்லை. அவர்களுக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்படி வாய்ப்புக் கிட்டவில்லை என்றாலோ போரில் தோல்வியுற்றாலோ அவர்கள் தங்களது ஊர்களுக்குத் திரும்பச் சென்று உயிர் பிழைத்துக் கொள்வார்கள். நீங்கள் முஹம்மதிடம் வசமாக மாட்டிக் கொள்வீர்கள். முஹம்மது உங்களிடம் பழிதீர்த்துக் கொள்வார். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். அதற்கு யூதர்கள், “நுஐமே! நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீ கூறுகிறாய்?” எனக் கேட்டனர். அதற்கவர், “நீங்கள் குறைஷியரிடம் அவர்களுள் சிலரை உங்களிடம் அடைமானமாக வைத்துக் கொள்ளக் கேளுங்கள். அவர்கள் சிலரை ஒப்படைக்காதவரை நீங்கள் அவர்களுக்கு ஆதரவாகப் போர் புரியாதீர்கள்” என்று அறிவுறுத்தினார். அதற்கு யூதர்கள், “நீ எங்களுக்குச் சரியான ஆலோசனை கூறிவிட்டாய்” என்று கூறினர்.

இதற்குப் பின் நேரடியாக நுஐம் குறைஷிகளைச் சந்தித்தார். அவர்களிடம், “உங்களை நான் நேசிப்பதையும் உங்களுக்கு நான் நல்லதையே செய்வேன் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள் தானே?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆம்! அப்படித்தான்” என்றனர். அப்போது குறைஷிகளிடம் நுஐம், “யூதர்கள் முஸ்லிம்களோடு செய்திருந்த உடன்படிக்கையை முறித்தது பற்றி இப்போது மிகவும் வருந்துகின்றனர். அதனால் உங்களிடமிருந்து உங்களின் சிலரை அடைமானமாக உங்களிடமிருந்து வாங்கி, அவர்களை முஹம்மதிடம் கொடுத்துத் தாங்கள் செய்த குற்றத்திற்குப் பரிகாரம் தேடிக்கொள்ள எண்ணுகின்றனர். ஆகையால், அவர்கள் உங்களிடம் உங்களின் ஆட்களை அடைமானமாகக் கேட்டால் நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள்” என்று கூறினார். அவ்வாறே கத்ஃபானியரைச் சந்தித்து குறைஷிகளிடம் கூறியது போன்று கூறினார்.

ஹிஜ் 5, ஷவ்வால் மாதம் குறைஷிகள் யூதர்களிடம் ஒரு செய்தி அனுப்பினர். அதாவது, “நாங்கள் இப்போது அந்நிய ஊருக்கு வந்திருக்கிறோம். எங்களின் குதிரைகளும் ஒட்டகங்களும் அழிந்துவிட்டன. நீங்களும் எங்களுடன் புறப்படுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து முஹம்மதிடம் போர் புரிவோம்” என்பதுதான் அந்தச் செய்தியின் சுருக்கம்.

அந்தச் செய்தி அனுப்பப் பட்ட நாள் சனிக்கிழமை!

குறைஷிகளின் அக்கோரிக்கையை யூதர்கள் நிராகரித்ததுடன், “இன்று சனிக்கிழமை. இந்நாளில் நாங்கள் செய்த குற்றத்திற்காக எங்களுக்கு இறைவனிடமிருந்து கிடைத்த தண்டனை என்னவென்று உங்களுக்குத் தெரியும். எனவே, நீங்கள் உங்களின் ஆட்களை அடைமானமாக எங்களிடம் தரும்வரை நாங்கள் உங்களுக்கு ஆதரவாகச் சண்டையிட மாட்டோம்” என்று பதில் கூறினர். இச்செய்தியைத் தூதுக்குழு குறைஷிகளிடம் சேர்த்தபோது, “நுஐம் நமக்கு உண்மைதான் கூறியிருக்கிறார்” என்று குறைஷிகளும் கத்ஃபான்களும் கூறினர்.

அதற்குப்பின் இவர்கள் மீண்டும் யூதர்களிடம் தங்களின் குழுவை அனுப்பி, “நாங்கள் உங்களிடம் எங்கள் ஆட்களில் எவரையும் அனுப்ப மாட்டோம். நீங்கள் எங்களிடம் வாருங்கள். நாம் சேர்ந்து முஹம்மதிடம் போர் புரிவோம்” என்றனர். இதைக் கேட்ட யூதர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நுஐம் நம்மிடம் உண்மையைத்தான் கூறினார்” என்று தங்களுக்குள் கூறிவிட்டு, வந்த குறைஷித் தூதர்களைத் திருப்பி அனுப்பி விட்டனர். இதன்மூலம் இரு தரப்பினருக்குமிடையில் பிரிவினை ஏற்பட்டது. மதீனத்து யூதர்கள் குறைஷிகளுக்கு உதவுவதைக் கைவிட்டனர். இதனால் குறைஷிகளின் உறுதி குலைந்தது [சுட்டி-44].

ஏறக்குறைய முற்றுகை முடிவுக்கு வந்தது. முற்றுகையின் மொத்த நாட்களிலும் – அதாவது அகழிப் போரின்போது – பத்தாயிரம் எதிரிகளுள் பத்துப் பேர் மட்டுமே கொல்லப் பட்டனர். இறுதியில், எல்லாரும் ‘வெற்றிகரமாகப் பின்வாங்கி’ உயிர் பிழைத்து, அவரவர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தனர்.

முற்றுகையின்போது மேட்டுப் பகுதியில் முஸ்லிம் வில்லாளிகள். தாழ்வான பகுதியில் எதிரிகள். இடையில் அகழி. போர் நடந்திருந்தால் எதிரிகள் முக்கால்வாசிப் பேர் உயிரிழந்திருப்பர்.

நுஐம் செய்த சூழ்ச்சியினால் அதிக இலாபம் அடைந்தவர்கள் இஸ்லாத்தின் எதிரிப் படையினர்தாம்.

ஒருமை-பன்மை வேறுபாடுகூட விளங்காத புனித மோசடியாருக்கு இந்த வேறுபாடு விளங்கும் என்று எதிர் பார்க்க முடியாதுதான்.

– புதுவகை நோய்: இமி முற்றியது –

நன்றி!

ஃஃஃ

to.wahhabi@gmail.com
http://wahhabipage.blogspot.com

சுட்டிகள்:
42 – http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#110
43 – http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#7
44 – http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#116

Series Navigation