புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

யாழன் ஆதி


1.
மெலிய அரும்பாய் அவிழ்ந்த
காமத்தின் முகில்களை
தன் திசைகளில் நகர்த்துகிறது
உனக்கான காற்று.
2.
கொஞ்சம் கலைந்த கேசத்தின்
இழைகளை
கோதிவிடுகையில்
கலைந்துப் போனது இரவு.
3.
தகிக்கும் உடல்களில்
நனையும் நிலவை
ருசித்து சுகிக்கிறது இருளின் காமம்.
4.
வனத்தில் கீச்சிடும் பூச்சியின்
நெடுமூச்சில் கலைகிறது
கிளையில் தத்தும்
கிளிகளின் ஊடல்.
5.
இமைகளின் ஓரத்தில் கசியும்
நட்சத்திரங்களைக் கொண்டு
மாலை தொடுக்கிறேன்
உன் வாசனையோடு.
6.
செந்நிற வண்ணத்தில்
பூப்பூத்திருந்தது
தோட்டத்தில் கள்ளி
அன்றுதான் நீயே தொடங்கினாய்
முத்தங்களிலிருந்து.
7.
காலைச் சூரியனின்
ஒளிக்கீற்றுகளில் கமழ்ந்த்தது
ராத்திரியின் கலவி வாசனை.
8.
பிரிந்த போதுகளில்
ஞாபகமூட்டுகின்றது
ஓங்கிப் படர்ந்த
நம் ஊரின் அரசமரம்.
9.
அழுந்திய பற்கடிகளில்
புரிகிறது
மென்மைக் காதல்.
10.
கருமைப் பதிந்த வானின்
வெளியெங்கும் புரண்டுக் களித்து
கதவுகளைத் திறந்து
உள் வருகிறது காற்று
உன்னாடையில் நான் பூப்பித்த
முத்தப் பூக்களுக்காய்.

யாழன் ஆதி
yazhanaathi@gmail.com

Series Navigation

யாழன் ஆதி

யாழன் ஆதி