பி எஸ் நரேந்திரன் கட்டுரையைப் படித்தபோது – மூக்கணாங்கயிறு கட்டிய டிராகன்தான் அமெரிக்கா

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

மலர் மன்னன்


நான் மிகுந்த கவனத்துடன் வாசிக்கும் கட்டுரைகளை எழுதுபவர்களுள் பி எஸ் நரேந்திரன் முக்கியமானவர். செப்டம்பர் 20, 2007 இதழ் திண்ணையில் ஒரு சுனாமியின் பின்னே என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரையைப் படித்தபோது எழுந்த எண்ணங்களை திண்ணை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

முகமதிய பயங்கரவாதம் தலையெடுப்பதற்குக் காரணமாக இருந்ததே அமெரிக்காதான் என்பதையும், சோவியத் யூனியனின் அதிகார எல்லை விரிவாக்கத்தைத் தடுக்க பாகிஸ்தானின் உதவியுடன் ஆப்கானிஸ்தானில் மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு சோவியத் யூனியனையும் அதன் ஆதரவு ஆப்கன் ஆட்சியையும் எதிர்க்க நவீன ரக ஆயுதங்களைக் கொடுத்து ஊக்குவித்ததும் அமெரிக்காதான் என்பதையும் அறிந்திருக்கிறேன்.

மட்டுமல்ல, சுற்றுப்புறச் சூழல் உள்ளிட்ட உலகம் தழுவிய பிரச்சினைகள் பலவற்றுக்கும் அமெரிக்காதான் பொறுப்பு என்பதும், அதன் எஜமான தோரணையும் தெரிந்த விவரங்கள்தாம். ஆனாலும் இன்றைய நிலையில் அமெரிக்க எதிர்ப்பு உணர்வைத் தோற்றுவிப்பது யாருக்கு நன்மையாக அமையும் என்று யோசிக்க வேண்டும்.

இன்று சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் மிகப் பெரிய அறைகூவலாக அமைந்திருப்பது முகமதிய பயங்கர வாதமே அல்லவா? முகமதிய தேசங்களிலேயே கூட வன்முறைத் தாக்குதல்கள் இயல்பாகி, பொது அமைதி குலையத் தொடங்கிவிட்டது அல்லவா? இராக்கிலும் பாகிஸ்தானிலும் பயங்கரவாதிகளின் திடீர்த் தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்படுவது யார்? ஹிந்துஸ்தானத்தில் அவ்வப்போது முகமதிய பயங்கரவாதிகள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் குண்டுவெடிப்புகளுக்கு முகமதியரும் இரையாக நேர்வதில்லையா? குரங்கின் கைக் கொள்ளிபோல இன்று முகமதிய பயங்கரவாதிகள் வசம் சிக்கிய நவீன ஆயுத வசதிகள் உலகம் முழுமைக்குமே அச்சுறுத்தலாகிவிடவில்லையா?

இந்த அச்சுறுத்தலுக்கு முடிவுகட்டுவதில் சிறிதும் தயை தாட்சண்யமில்லாமல் உறுதியாக இருப்பது அமெரிக்காவே அல்லவா? பிரான்ஸ் ஜெர்மனி போன்ற பிற மேற்கத்திய நாடுகள் கூட இதில் போதுமான அளவுக்குத் துணிவு பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. லண்டனில் இரண்டு குண்டுகள் வெடித்ததுமே இங்கிலாந்துக்கு உள்ளூர நடுக்கம் எடுத்துவிட்டது. அடடா, முகமதிய பயங்கர வாதிகளின் பகைமையைச் சம்பாத்திதுக் கொண்டு விட்டோமே என்கிற கவலை அங்கு தோன்றியிருக்கிறது.

இன்று உலகின் நீடிதிருத்தலுக்கே சவாலாக மூர்க்கத்தனமான வலிமையுடன் மூலை முடுக்குகளில் எல்லாம் விஷக் கிருமிகளாகப் பரவியிருக்கும் முகமதிய பயங்கரவாதத்திற்கு நிச்சயமான எதிர் சக்தியாக எழுந்து நிற்பது அமெரிக்காதான். உன்னை ஒழிக்காமல் ஓய்வதில்லை என்று சூளுரைத்து அது களத்தில் நிற்கிறது.

சிறியதும் பெரியதுமாக நெருங்கிக் கிடக்கும் ஐரோப்பிய நாடுகளில் அவற்றின் ஜனநாயகப் பண்பு, புகலிடம் அளிக்கும் கொள்கை, துப்புரவுப் பணி போன்ற அடிமட்ட வேலைகளுக்கு ஏற்பட்டிருக்கிற ஆள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் முகமதியரின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில் சில தொகுதிகளில் தேர்தலின்போது வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கிற அளவுக்கு முகமதியரின் எண்ணிக்கை கூடுதலாகிப் போனது. இவையெல்லாம் ஐரோப்பிய நாடுகளில் முகமதிய பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் ஒரு தொய்வை ஏற்படுத்தியிருக்கின்றன. முகமதிய பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் அமெரிக்காவுக்கு இருக்கிற ராஜீய திட சங்கற்பம் வேறெங்கும் இருந்திடக் காணேன்.

முகமதிய பயங்கர வாதத்தை எதிர்கொள்வதில் ஹிந்துஸ்தானத்தின் இன்றைய ஆட்சியார்களுக்கு இருக்கிற தயக்கத்தைப்பற்றி விவரிக்கவே தேவையில்லை. ஹிந்து ஆதரவுக் கட்சி என்று முத்திரை குத்தப்படுகிற பாரதிய ஜனதா கட்சிகூட வாக்குகளை இழந்துவிடுவோமோ என்கிற கவலையில் முகமதிய பயங்கர வாதத்தைச் சரியாக அடையாளங்காட்டி கடுமையான எதிர்ப்பைக் காட்டுவதற்கு மாறாகப் பூசி மெழுகிக் கொண்டிருக்கிறது அல்லவா?

முகமதியர் வாக்குகளை இழந்துவிடலாகாது என்கிற கவலையினால் இன்று தேர்தலில் போட்டியிட விரும்பும் ஹிந்துஸ்தானத்து அரசியல் கட்சிகள் எல்லாமே முகமதிய பயங்கரவாதத்தை உறுதியுடன் எதிர்க்கும் துணிவின்றிக் காணப்படுகின்றன. முகமதிய பயங்கரவாதத்தை உறுதியாக எதிர்த்தால் முகமதியர் வாக்குகளை இழக்க நேரிடும் என நினைப்பதே ஹிந்துஸ்தானத்து முகமதியரை அவமதிப்பதாகும் என்பதை அவை உணரவில்லை.

முகமதியரின் அதிருப்தியைச் சம்பாதித்துகொள்ளலாகாது என்பதற்காகவே கையில் சிக்கும் முகமதிய பயங்கரவாதிகளையும் சொகுசாக வைத்துப் பராமரிக்கிற விசித்திரமும் இங்கேதான் காணப்படுகிறது. இதற்காகவே தாவூத் இப்ராஹிம் போன்ற பயங்கரவாத நபர்கள் ஹிந்துஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படுவதைவிட அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதே மேல் என்று எண்ண வேண்டியுள்ளது. அமெரிக்கா கேட்டால் எந்த முகமதிய பயங்கர வாதியையும் மறுபேச்சு இல்லாமல் வாலைச் சுருட்டிக் கொண்டு, ஒப்படைத்துவிட்டுப் பதிலுக்கு எலும்புத் துண்டைக் கவ்விக்கொண்டு வாலாட்டுகிற பாகிஸ்தான், ஹிந்துஸ்தானத்தின் அதே மாதிரியான கோரிக்கைக்கு எத்தகைய மதிப்பளிக்கிறது?

முகமதிய பயங்கர வாதத்தின் எதிர்த்தரப்பில் வலுக்க்கட்டாயமாகவேனும் பல முகமதிய தேசங்களை நிறுத்திவைக்க அமெரிக்காவுக்குச் சாத்தியமாகிறது. மிகவும் மறைமுகமாகத் தான் அந்த முகமதிய தேசங்கள் முகமதிய பயங்கர வாதத்தை ஊக்குவிக்க முடிகிறது. இதனை அமெரிக்காவும் அறிந்திருப்பினும் அவசியம் கருதி அறியாததுபோலக் காட்டிக்கொள்கிறது.

பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெளிவாகத்தெரிகிற பாகிஸ்தானின் இரட்டை வேட பச்சைத் துரோகம் அமெரிக்காவுக்குத் தெரியாமலா இருக்கும்? தெரிந்தேதான் தெரியாததுபோலக் காட்டிக் கொள்கிறது. காரணம், அதற்கு ஸ்திரமாகக் காலூன்றிக்கொள்ள பாகிஸ்தானில் பிடிமானம் தேவை. ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானின் வட மேற்கு எல்லையிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், ஏன், பாகிஸ்தானுக்குள்ளேயே கூட அடக்குவாரின்றித் துள்ளித் திரியும் முகமதிய பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தக்க தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

முகமதிய பயங்கர வாதத்திற்கு அடுத்தபடியாக இன்று பெரிதும் கவலை தரும் சர்வ தேசத் தலைவலி சுய ஆதாயத்திற்காக எவ்வித முறைகேட்டிற்கும் சளைக்காத சீனாதான் என்பதும் சாமானிய அறிவுக்குக்கூடப் புலப்படும் உண்மைதானே? இதற்குச் சரியான தடைக் கல்லும் அமெரிக்காதான்.

இவ்விரு அம்சங்களையும் யோசிக்கிறபோது, அமெரிக்கா தனது நலன் கருதி உலகின் எந்த இடத்தில் காலூன்றிக் கொள்ள முனைந்தாலும் அது உலகம் முழுமைக்கும் உறுதியான பாதுகாப்பு அரணாகவே இருக்கும் என்றும், இன்றைய சர்வ தேசப் பொதுப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு அமெரிக்க எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவது புத்திசாலித்தனம் அல்ல எனவும் முடிவுசெய்யவேண்டியுள்ளது. குறிப்பாகத் தென் பாரதம், வட கிழக்கு இலங்கை ஆகிய இடங்களில் அமெரிக்காவின் நடமாட்டம் இருப்பது சீனா, முகமதிய பயங்கரவாதம் ஆகிய இரு அச்சுறுத்தல்களுக்கும் அரணாகவே இருக்கும்.

ஒரு டிராகனை எதிர்த்துப் போராடி வெல்ல எதிராளியும் டிராகன் ஆகவேண்டுமென்பதும் அதன் பின் விளைவாக டிராகனாகிப் போன அந்த எதிராளியும் ஓர் அச்சுறுத்தலாக உருவெடுத்துவிடும் என்பதும் சரிதான். ஆனால் என்னதான் அமெரிக்கா ஒரு டிராகனாகவே ஆகிவிட்டாலும் அது வலுவான ஜனநாயகக் கட்டமைப்பும், தனி மனித சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் சமூகப் பொறுப்பும் உள்ள மூக்கணாங் கயிறு கட்டிய டிராகனாகத்தான் இருக்கும் என நம்பலாம்.


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்