பிறந்த மண்ணுக்கு – 5

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

அ முகம்மது இஸ்மாயில்


7.

சாருலதா ஓடி தமிழ்வாணன் அருகே வந்தவள் தமிழ்வாணன் கைகளை பற்றி, “கங்கிராட்ஸ்.. உனக்கு ஒய்ஃபா என் தங்கச்சியை தேர்ந்தெடுத்துகிறேன், யூ போத் லக்கி..” என்றாள்.

தமிழ்வாணனிடம் கருத்தே கேட்க வில்லை. தமிழ்வாணன் ரவிக்குமாரை பார்த்தான். ரவிக்குமார் தூரத்திலிருந்த படியே கட்டை விரலை உயர்த்தி “வெற்றி” என்பது போல் காட்டினான். தமிழ்வாணன் இப்போது மல்லிகாவை பார்த்தான்.

சாருலதா தமிழ்வாணனின் கைகளை விடுவித்துக் கொண்டு மல்லிகாவிடம் சென்று, “ஆண்ட்டி.. அவனுக்கு கல்யாணச் சீரா அடையார்ல பெரிய ஹாஸ்பிடல் கட்டி தரலாம்னு இருக்கோம். எவ்வளவு லட்சம் செலவு பண்றோம்னு எங்களுக்கே தெரியாது. பட்ஜெட்டே கிடையாது ஆண்ட்டி. இட்ஸ் கிரேட். யாருக்கு கிடைக்கும் இந்த கிரெடிட்” என்று வாய் மூடாமல் ஆங்கிலம் பாதி தமிழ் பாதி என்று பேசினாள். அவள் பேசிய ஆங்கிலம் எனக்கே புரிய வில்லை. ஏதோ எனக்கு தெரிந்ததை நான் எழுதியிருக்கிறேன்.

சாருலதா தன் தங்கை நிரோஷாவை காட்டி, “ என் சிஸ்டரை நீங்க அதிகம் பார்த்திருக்க முடியாது. அவ லாஸ்ட் வீக் தான் யூரோப் போய்ட்டு திரும்பி இருக்கிறா. அங்கே ஒரு கோர்ஸ் பண்றதுக்காக போனா..” என்று நிரோஷாவை பார்த்து, “நிரோ, கம் ஹியர்.. வந்து ஆண்ட்டிய மீட் பண்ணு” என்றாள்.

நிரோஷா எழுந்து வந்தாள். தேவிகா வாயடைத்து எல்லா வேடிக்கையையும் மெளனமாக கவனித்தாள்.

நிரோஷா, “ஹாய் ஆண்ட்டி.. நான் தான் நிரோஷா.. எப்படி இருக்கீங்க ?” என்றாள்.

மல்லிகாவுக்கு இதயம் வலித்தது.

மல்லிகா, “ம்.. நல்லா தாம்மா இருக்கேன்” என்றார்.

நிரோஷா தேவிகாவை பார்த்து விட்டு, “இது யாரு ?” என்றாள்.

மல்லிகா தேவிகாவை பார்த்தாள். உடனே தமிழ்வாணன் முகத்தையும் பார்க்கணும் போல் தோன்றியது. உடனே பார்த்தால் விவாகரமாகி விடும் என்பதால் தலையை கட்டுபாடாக திருப்பாமல் தேவிகாவை காட்டி, “இது..” என்று சொல்ல வாயெடுத்தார்..

அதற்குள் தேவிகா குறுக்கிட்டு, “நா இந்த வீட்டுல வேலைக்காரி மாதிரி.. எல்லா வேலையும் நான் தான் பார்ப்பேன்” என்றாள்.

நிரோஷா உடனே, “ அப்ப உடனே எங்க எல்லாருக்கும் டா போட்டு எடுத்துட்டு வர முடியுமா ?” என்றாள்.

தேவிகா, “ஓ.. இப்பவே போட்டு எடுத்துட்டு வர்ரேன்..” என்று வீட்டின் சமையல் கட்டுக்கு செல்ல முற்பட..

நிரோஷா தடுத்து நிறுத்தினாள், “ஒரு நிமிஷம்.. எத்தனை பேருக்கு போட்டு எடுத்துட்டு வருவே.. நீ பாட்டுக்கு போறே.. எத்தனை பேருன்னு எண்ணுனியா ?” என்றாள்.

நடேசன் நிரோஷாவை பார்த்து, “இந்த பாரும்மா.. தேவிகா இந்த வீட்டு பொண்ணு மாதிரி.. அவ வேலைக்காரியா இங்கே இல்லை” என்றார்.

தேவிகா சொன்னாள், “இல்ல அப்பா.. நான் எண்ணிட்டேன்.. மொத்தம் என்னய சேர்க்காம 8 பேர் இருக்கறீங்க.. நான் அப்பவே எண்ணிட்டேன் இப்ப உடனே போட்டு எடுத்துட்டு வர்ரேன்” என்று.

நடேசன், “ஏன்ம்மா நீ.. குடிக்கலயா ?” என்றார்.

தேவிகா, “இல்லப்பா எனக்கு வேணாம்..” என்றாள்.

தமிழ்வாணன் சட்டென்று, “எனக்கும் வேணாம்” என்றான்.

இப்பொழுது எல்லாம் மல்லிகாவின் கையில் உள்ளது என்று தமிழ்வாணன் நினைத்தான். மல்லிகாவோ ‘நான் ஏதாவது சொன்னால், என்னால் தான் தமிழ்வாணனுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாழ்க்கை வசதியான வாழ்க்கை கிடைக்காமல் போய் விட்டது’ என்றாகுமோ என்று பயந்தாள். தேவிகாவுக்கு எதுவும் தோண வில்லை. பாவம் அவள், அவள் தான் எல்லோருக்கும் சமைத்தாள். தமிழ்வாணனுக்கும் மல்லிகாவுக்கும் இதை காண சகிக்க வில்லை.

ரவிக்குமார் தமிழ்வாணனை தனியாக அழைத்தான், “தமிழ்வாணன்.. இங்கே வாயேன்..” என்று.

தமிழ்வாணன், “இதோ வர்ரேன்..” என்று வெளியேறியதை சாருலதா கவனித்தாள்.

ரவிக்குமார் தமிழ்வாணனை அருகில் அமர சொன்னான்.

தமிழ்வாணன் ‘அண்ணனிடம் எப்படியாவது சொல்லிவிட வேண்டியது தான்’ என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டு ரவிக்குமார் அருகில் அமர்ந்தான்.

ரவிக்குமார் அமைதியாக பேசினான், “ ஏன் ஒரு மாதிரியா இருக்கே”.

தமிழ்வாணன் இது தான் நல்ல சமயம் என்று, “அண்ணன்.. ஒரு செய்தி.. அதை எப்படி சொல்றதுன்னு தான்.. யோசிக்கிறேன்” என்றான்.

ரவிக்குமார், “இதில என்ன இருக்கு.. ஸ்பீக் அவுட்.. என்கிட்டே பேசாம யார் கிட்டே பேச போறே” என்றான் ஆர்வமாக.

தமிழ்வாணன், “நான்..” என்று சொல்ல ஆரம்பித்த போது,

சாருலதா அங்கே வந்து, “நானும் கலந்துக்கலாமா ? கேன் ஐ ஜாய்ன்” என்றாள்.

ரவிக்குமார் விபரம் இல்லாமல், “ஒய் நாட்..” என்றான்.

தமிழ்வாணனுக்கு சாருலதா வந்தது பிடிக்க வில்லை, ‘இவங்க என்னய அண்ணணோட தனியா பேச விட்டதே கிடையாது’ என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு அலுத்துக் கொண்டான்.

சாருலதா ரவிக்குமாரின் அருகில் அமர்ந்துக் கொண்டு, “எத பத்தி பேசிக்கிட்டிருக்கீங்க.. ?” என்றாள்.

ரவிக்குமார், “அது.. தமிழ்வாணன் முகத்துல சம்திங் சேஞ்.. சம்திங் மிஸ்ஸிங்.. அத பத்தி தான் டிஸ்கஸ் பண்ணிட்டிருந்தேன்” என்றான்.

சாருலதா, “இத எங்கிட்டே கேட்டிருந்தா நானே சொல்லியிருப்பேனே, அவன் இங்கே வந்து எவ்வளவு நாளாச்சு.. இந்த சர்கம்ஸ்டன்ஸ் அவனுக்கு பிடிக்கலே.. அம் ஐ ரைட் டமில்” என்றாள்.

தமிழ்வாணனுக்கு சாருலதா வந்த சூழ்நிலை தான் பிடிக்கவில்லை, அந்த அர்த்தத்தில், “யெஸ்.. இந்த சர்கம்ஸ்டன்ஸ் எனக்கு பிடிக்கலே” என்று கூறினான்.

சாருலதா, “ஐயம் ஆல்வேஸ் ரைட்.. பட் உங்க அண்ணன் தான் வேஸ்ட்” என்று பள்ளிக்கூட ரைம்ஸ் சொல்லும் கான்வெண்ட் பிள்ளை போல் சொன்னாள்.

ரவிக்குமார் செல்லமாக அவளை அடிக்க வந்தான்.

தமிழ்வாணனுக்கு அதற்கு மேல் அந்த சூழ்நிலையில் இருக்க பிடிக்க வில்லை, “நான் வர்ரேன்” என்று கூறி விட்டு சென்றான்.

சாருலதா ரவிக்குமாரிடம் தமிழ்வாணன் நிரோஷா திருமண செய்திகள் பற்றி பேசினாள். திருமண அழைப்பிதழ் எங்கே அச்சிடுவது ?, வரவேற்பு எங்கே வைப்பது ?, எந்த திரைப்பட இசையமைப்பாளரை கச்சேரிக்கு அழைப்பது உள்ளிட்ட அனைத்து செய்திகளையும் பேசினாள்.

ரவிக்குமார் சொன்னான், “தமிழ்வாணன் ஒரு வேலை இந்த ஊர்ல தான் கல்யாணம் பண்ண வேண்டும்னு பிரியப்பட்டான்னா இங்கே தான் கல்யாணம் வைக்கணும்” என்று கூறினான்.

சாருலதாவுக்கு ரவிக்குமார் அப்படி சொன்னது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை, “இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன், எங்க வீட்டு கல்யாணம்.. லட்சக்கணக்கான பேர் வருவாங்க.. இந்த கிராமத்துக்கு வர்ரதாவது..நோ வே..” என்றாள்.

ரவிக்குமார் கிண்டலடித்தான், “ ஏன் ?.. அதான் நிறைய வே இருக்கே.. பஸ்ல வரலாம்.. வேன்ல வரலாம்.. கார்ல வரலாம்..” என்றான்.

சாருலதா எறிந்து விழுந்தாள், “திஸ் இஸ் டூ மச் ரவி..” என்று.

ரவிக்குமார் கோபமாக, “ எது டூ மச் ?.. என்னமோ உங்க வீட்டு கல்யாணம்னு பிரிச்சு பேசறே.. கல்யாணம் உனக்கு இல்ல அத மொதல்ல தெரிஞ்சுக்கோ” என்றான்.

மல்லிகா அங்கு வந்தவள் ரவிக்குமார் சத்தம் போடுவதை பார்த்து விட்டு, “ரவி.. என்ன அது ? ஏன் சத்தம் போடுறே.. ?” என்றார்.

சாருலதா சட்டென்று, “ இது எங்க ரெண்டு பேருக்குள்ள.. நீங்க உங்க வேலைய பாருங்க..” என்றாள்.

ரவிக்குமாருக்கு கோபம் உச்சந்தலைக்கு ஏறியது, “சாரு மைண்ட் யுவர் வேர்ட்ஸ்.. ஓகே.. அது யார் தெரியும்ல..” என்றான்.

சாருலதா அலட்சியமாக, “ யெஸ்.. ஐ நோ ஹீ ஷி ஈஸ்.. அவங்க உங்க அம்மாவா என்ன ? உங்க அப்பாவோட அண்ணன் ஒய்ஃப்.. தட்ஸ் ஆல்..” என்று முறைக்கின்ற பார்வையில் சொல்லி விட்டு சென்றாள்.

சாருலதா அங்கிருந்து சென்றதும் ரவிக்குமார் மல்லிகாவின் அருகில் வந்தான், “என்ன மன்னிச்சிடுங்க பெரியம்மா” என்று சொன்னதை தவிர வேறு எதுவும் அந்த நேரத்தில் அவனால் சொல்ல முடிய வில்லை.

மல்லிகா சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். தேவிகாவின் அப்பாவுக்கு கொஞ்சம் உடல் நல்மில்லாமல் இருந்ததால் இங்கு வரவில்லை. தமிழ்வாணன் தொழில் தர்மத்தை விட்டு விடாமல் அன்றும் தனது பயிற்சி மருத்துவமனைக்கு சென்றிருந்தான்.

மல்லிகா நடேசனிடம், “நான் போய் தேவிகாவ பார்த்துட்டு வந்துடறேன்” என்று கூறி விட்டு தேவிகாவின் வீட்டிற்கு வந்தார். தேவிகா வரவேற்றாள். கந்தசாமி தூங்கிக் கொண்டிருந்தார்.

தேவிகா மல்லிகாவிடம், “ ஏதாவது டா.. காபி.. போட்டு எடுத்து வரவாம்மா ? என்றாள்.

மல்லிகாவின் கண்களில் கண்ணீர்.

தேவிகா துடித்து போய், “ஏன் அம்மா அழறீங்க.. ?” என்றாள்.

மல்லிகா ரவிக்குமாருக்கும் சாருலதாவுக்கும் நடந்த விவாதங்களை ஒரு குத்து மதிப்பாக கணித்து ‘இப்படி தான் நடந்திருக்கணும்’ என்பது போல் சொன்னார். மல்லிகா அவரை பற்றி சாருலதா சொன்னதை தேவிகாவிடம் எடுத்து கூறவில்லை.

மல்லிகா கடைசியாக, “அவங்க ரெண்டு பேருக்கும் பெரிய சண்டை வந்துடுமோன்னு பயமா இருக்கு” என்றார்.

தேவிகா மல்லிகாவின் கண்ணீரை துடைத்து விட்டாள், “அப்படியெல்லாம் எதுவும் நடக்காது” என்றாள்.

தமிழ்வாணனின் தனி மருத்துவமனைக்கு தேவிகா யாருக்கும் தெரியாமல் சென்றாள். தமிழ்வாணன் உற்சாகம் இழந்து காணப்பட்டான்.

தமிழ்வாணன், “இப்படி திடார்னு ஒரு பிரச்சினை முளைக்கும்னு நான் எதிர்பார்க்கலை.. ஆனா என்ன ஆனாலும் சரி.. இந்த நிரோஷாவ எனக்கு பிடிக்கவே இல்ல.. நான் எப்படியாவது அண்ணண்ட்ட பேசி..” என்ற போது தேவிகா இடைமறித்து, “அப்படி எதுவும் செஞ்சுடாதீங்க..” என்றாள்.

தமிழ்வாணன் ஆச்சர்யப்பட்டு, “என்ன நீ உளர்ரே.. நீ ஏதாவது ஐடியா கொடுக்க போறேன்னு பார்த்தா.. என்னால நம்ப முடியலை.. என்ன நடந்துச்சு..” என்றான்.

தேவிகா ‘ரவிக்குமாருக்கும் சாருலதாவுக்கும் ஏதோ சின்ன வாக்குவாதம் என்றும் மல்லிகா தனது வீட்டிற்கு வந்து ரவிக்குமாருக்கும் சாருலதாவுக்கும் ஏதாவது பிரச்சினை வந்து விடுமோ என்று பயந்ததையும்’ எடுத்து கூறினாள்.

தமிழ்வாணன், “ அந்த அளவுக்கு பெரிய பிரச்சினையெல்லாம் வராது.. எல்லாம் நான் பார்த்துக்கறேன்..” என்றான்.

தேவிகா, “இல்ல.. மல்லிகா அம்மா ரொம்ப கவலைப் பட்டு உடம்பை கெடுத்துக்கறாங்க.. அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அப்புறம் என்னாலயே என்னய மன்னிக்க முடியாது” என்று கதறினாள்.

அதன் பிறகு அவளாகவே அழுகையை நிறுத்தி விட்டு, “நீங்க தயவுசெய்து உங்க அண்ணன் அண்ணி ஆசைப்படற மாதிரி நடந்துக்குங்க.. மல்லிகாம்மா கவலைப்படாம இருந்தாங்கன்னா அதுவே எனக்கு போதும்..” என்றாள்.

ரவிக்குமாரும் சாருலதாவும் ஒரு மாதிரியாக பேசி ஓரளவு சமாதானம் ஆகி இருந்தார்கள். அதாவது, கிராமத்தில் நிச்சயதார்த்தம். நகரத்தில் கல்யாணம் என்று. மல்லிகாவுக்கு அவளைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. தேவிகாவால் தன் அப்பாவை கவனித்துக் கொள்ளவே நேரம் சரியாக இருந்தது. இப்பொழுதெல்லாம் அவளால் வர முடிவதில்லை. மல்லிகாவும் ‘அப்பாவ கவனிச்சுக்க’ என்று சொல்லி விட்டதால் தேவிகா ஒதுங்கியே இருந்தாள். வீட்டு வேலைக்கு வேறு ஒரு பெண்மணி வந்து போய்க் கொண்டிருந்தார். தமிழ்வாணன் மட்டும் போரில் எரிகின்ற வாகனங்கள் போல் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தான்.

தமிழ்வாணன் நிரோஷா இருவரது நிச்சயதார்த்தம் இப்பொழ்து சிறப்பாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது. சாருலதாவின் சொந்தங்கள் பலர் அந்த நிகழ்ச்சிக்கு வேண்டி வந்திருந்தனர். வந்தவர்களில் சில பேர் அந்த கிராம சூழ்நிலையை ரசித்தனர். சிலருக்கு பிடிக்க வில்லை. மல்லிகாவை பார்க்க சகிக்க வில்லை. நடேசனுக்கு உள்ளுக்குள் கவலை. வெளியே அது இல்லை அதாவது காட்டிக் கொள்ளவில்லை. தேவிகா வந்து ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தாள்.

நிச்சயதார்த்தத்தின் நடுவே மல்லிகாவுக்கு திடாரென்று தலை சுற்றியது. கிறுகிறு வென்று வந்தது. மயங்கி சரிந்தார். தமிழ்வாணன் பார்த்து விட்டு ‘பெரியம்மா’ என்று கத்திய கத்தில் பக்கத்தில் இருந்தவர்களுக்கு கொஞ்ச நேரத்துக்கு காது கேட்க வில்லை. வீடே பரபரப்பானது. தேவிகா அதிர்ந்து ஓடி வந்து அவள் தான் மல்லிகாவை முதலில் பிடித்தாள். நடேசன் ‘என்னாச்சு’ என்று வந்தவர் ‘மல்லிகா.. மல்லிகா..’ என்று கூப்பிட்டு பார்த்தார். மல்லிகா அசையவில்லை. ரவிக்குமார் கண் கலங்கி நின்றான். வந்திருந்த சாருலதாவின் சொந்தங்கள், ‘உடனே ஹாஸ்பிடலுக்கு கூட்டிடு போங்க” என்றும், “என் கார எடுத்துக்குங்க” என்றும் ஆங்கிலத்திலும் தமிழிலும் திரும்ப திரும்ப சொன்னார்கள். தமிழ்வாணன் மல்லிகாவுக்கு நாடி பிடித்து பார்த்தான்.

தமிழ்வாணன், “பல்ஸ்.. சரியா இல்ல” என்றான்.

நடேசன், “ஒண்ணும் ஆபத்தில்லை தானே..” தவித்தார்.

அந்த கூட்டத்தில் இருந்த சாருலதாவின் சொந்தக்காரர் ஒருவர், “அவங்க எதையோ மனசுல போட்டு அடைச்சிக்கிட்டு இதயத்துக்கு ரொம்ப பளுவை கொடுத்திருக்காங்க.. முகமே காட்டி கொடுக்குதே” என்று அவருக்கு தெரிந்ததை சொன்னார்.

தமிழ்வாணனும் தேவிகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

மல்லிகாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டி தூக்க முற்பட்ட போது மல்லிகாவுக்கு கொஞ்சம் நினைவு திரும்பியது.

மல்லிகா முனகினார், “ என்ன விடு..ங்க.. ?” பேச முடியவில்லை.

ரவிக்குமார், “ஒண்ணுமில்லை பெரியம்மா கொஞ்ச நேரத்துல ஹாஸ்பிடல் போயிடலாம்” என்று அழுதுக் கொண்டே சொன்னான்.

மல்லிகா மறுத்தார் ‘எதுவும் வேண்டாம்’ என்பது போல் கையை மட்டும் ஆட்டினார்.

நடேசன், “ரொம்ப முடியலையா.. ஆஸ்பத்திரிக்கு போயிடலாமே” தவிப்பு அடங்க வில்லை.

மல்லிகாவுக்கு முகத்தின் நிறம் மாறியது. தமிழ்வாணன் நடுங்கி விட்டான்.

மல்லிகா ரவிக்குமாரை கை நீட்டி அழைத்தார். ரவிக்குமார் அருகில் வந்தான்.

மல்லிகாவுக்கு வார்த்தை குழறியது, நடேசன் பக்கம் கையை நீட்டி, “பார்த்துக்க..” என்றார்.

ரவிக்குமார் திரும்பி மல்லிகா கை காட்டிய இடத்தில் இருந்த நடேசனை பார்த்துவிட்டு மல்லிகா பக்கம் திரும்பி அழுதான், “உங்களுக்கு ஒண்ணுமில்லை பெரியம்மா” என்றான்.

மல்லிகா எல்லோரையும் பார்த்தார். நடேசன், சாருலதா, நிரோஷா, அப்புறம் யார் யாரோ தெரியவில்லை, தமிழ்வாணன், தேவிகா.

இருவரையும் பார்த்ததும் கண்களில் நீர் தாரை தாரையாக வழிந்தது.. தேவிகாவை கை நீட்டி அழைத்தார், “வா..” என்று.

தேவிகா அழுதுக் கொண்டே வந்தாள்.. ரவிக்குமாரை பார்த்து, தேவிகாவை காட்டி, “கல்..யாணம்.. கல்யா..ணம்”. மூச்சு திணறியது.

கடைசியாக நடேசனை பார்த்தார்.

அவரது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

தேவிகா நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினாள். தமிழ்வாணன் பைத்தியம் பிடித்தவன் போல் ஆகி விட்டான். நடேசன் இடிந்து போய், “எல்லாம் முடிஞ்சு போச்சு.. எல்லாம் முடிஞ்சு போச்சு..” என்று சொல்லிக் கொண்டே இருந்தார். ரவிக்குமார் எழுந்து நடேசனை கட்டி பிடித்துக் கொண்டு அழுதான்.

இறுதி காரியங்கள் இதயத்தை உலுக்கியது. தமிழ்வாணன் ஒரு பக்கம், தேவிகா ஒரு பக்கம் வாய் விட்டு அழுதால் ஏதாவது வார்த்தைகள் வந்து விடுமென்று மெளனமாக அழுது கொண்டிருந்தனர். ரவிக்குமார் அழுது அழுது சிவந்த கண்களுடன் பெரியப்பாவுக்கு அருகிலேயே இருந்தான்.

தேவிகாவிற்கு வேதனை அடங்க வில்லை. மல்லிகா ஞாபகமாகவே இருந்தது.

“ நீயே எல்லா வேலையும் செய்றீயமா.. எனக்கு ஒரு வேலை போட்டு தான் கொடேன்” என்று கூறி சிரித்தது.

“தேவிகா.. இங்க பாரு உனக்காக என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு” என்று புடவை வாங்கி கொடுத்தது.

“இல்ல.. நாம எல்லாரோடும் சேர்ந்து எடுத்த போட்டாவ நாம பார்க்கும் போது மொதல்ல நம்ம கண்ணுக்கு நம்மள தான் தெரியும்பாங்க.. ஆனா நீ வாங்கினவொடனே அவள பார்க்குற.. அவ என்னடான்னா உன்ன பார்க்குறா” என்று பள்ளி கூடத்தில் எடுத்த புகைப்படத்தை வைத்து கிண்டலடித்தது.

“பாருங்களேன் எனக்கு தெரியாம இந்த ரெண்டு பேரும் செஞ்சிருக்கிற காரியத்தை.. இவ்வளவு ஆசையை மனசில வைச்சிக்கிட்டு..” என்று மகிழ்ந்தது.

“எங்க வீட்டு மகராசியா பல்லாண்டு காலம் வாழணும்” என்று நகையை கழட்டி போட்டு வாழ்த்தியது.

“அவங்க ரெண்டு பேருக்கும் பெரிய சண்டை வந்துடுமோன்னு பயமா இருக்கு” என்று வருந்தி கண்ணீர் விட்டது.

அதன் பிறகு கடைசியாக தன்னை ரவிக்குமாரிடம் ஒப்படைத்து “கல்..யாணம் கல்..யாணம்” என்றது.. எல்லாமே நினைவுக்கு வந்து பொங்கி பொங்கி அழ ஆரம்பித்தாள். அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

ரவிக்குமார் நடேசனிடம் வந்தான். நடேசன் கவலையுடன் உடல் நலமும் குன்றி காணப்பட்டார்.

ரவிக்குமார், “பெரியப்பா..” என்று அழைத்தான்.

நடேசன் வெடுக்கென்று, “ஏன்.. என்னாச்சு” என்றார். ரவிக்குமார் நடேசன் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்பதை விளங்கிக் கொண்டான்.

ரவிக்குமார், “நீங்களும்..” என்று இழுத்தான்.

நடேசன் சிரித்தார். அவருக்கு தாமோதரன் இதே போல் கேட்க தயங்கியது நினைவுக்கு வந்தது.

நடேசன், “எனக்கு விளங்குது என்ன கேட்குறேன்னு.. உங்க அப்பா இப்படி தான் கேட்டார். அப்ப உங்க பெரியம்மா இருந்தாங்க.. நான் பட்டணத்துக் கெல்லாம் வர மாட்டேன்னு பெருமையா சொன்னேன். இப்ப யாரு இருக்கா ?” என்று அழுதார். ரவிக்குமார் மெளனமாக இருந்து பெரியப்பாவையே கவனித்துக் கொண்டிருந்தான்.

நடேசன் தொடர்ந்தார், “நான் வர்ரேன்.. எனக்கு ஒரு ரூம் மட்டும் கொடுத்துடுங்க.. அவ்வளவு தான்.. நான் யாருக்கும் தொந்தரவா இருக்க மாட்டேன்” என்றார்.

ரவிக்குமார், “அது உங்க வீடு தானே பெரியப்பா” என்று அவன் கூறிய போது கண்களில் கண்ணீர் கசிந்தது.

ஊரே திரண்டு வந்தது. முத்து குடும்பம், கந்தசாமி முடியாதவர்.. ஆனால் பக்கத்து வீடு.. பழக்கவழக்கம்.. பாசம்.. அதனால் எழுந்து வந்து விட்டார். நடேசன் ஊரை விட்டு போவதை சகியாமல் எல்லோரும் ‘எங்க வீட்டில இருந்துக்க நாங்க பார்த்துக்கறோம்’ என்று கூட சொன்னார்கள்.

நடேசன், “உங்க அன்புக்கு நன்றி” என்று மட்டும் சொன்னார். வீடு பூட்டப்பட்டது.

தமிழ்வாணன் தேவிகாவிடம் வந்தான், “நான் போறேன்..” என்றான்.

தமிழ்வாணன் தேவிகா இருவருக்குமே பழைய ஞாபகம்…

தேவிகா, “ஓஹோ.. அப்டான்னா..நான் என்ன சொன்னாலும் நீங்க கேப்பிங்க.. இல்லையா ?” என்று குழந்தை மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.

தமிழ்வாணன், “ம்.. கண்டிப்பா.. இப்ப என்ன கேக்கப் போறே ?” என்றான் ஆர்வமாக.

தேவிகா, “நீங்க மறுபடி இந்த ஊரை விட்டுட்டு, உங்க பெரியம்மா, உங்க பெரியப்பா எல்லாத்தையும் விட்டுட்டு போக கூடாதுன்பேன்.. கேப்பீங்களா ? என்றாள்.

தமிழ்வாணன், “நிச்சயமா போ மாட்டேன்.. இந்த ஊர்.. பெரியம்மா பெரியப்பா அப்புறம் உன்னை..” என்று நிறுத்தினான்.

தேவிகா தமிழ்வாணனையே உற்று பார்த்தாள்.

தமிழ்வாணன் தலையை ஆட்டிக் கொண்டே.. “ ஆமா.. தேவிகா.. உன்னையும் விட்டுட்டு நிச்சயமா நான் போ மாட்டேன்” என்று முடித்தான்.

ஞாபகம் கலைந்த போது தமிழ்வாணன் காரில் இருந்தபடி

தேவிகாவை பார்த்தான். கார் கிளப்பி விட்ட புழுதி நீங்கிய போது கார் மறைந்து சாலை வெறுமையாகி இருந்தது.

—-

Series Navigation

அ முகம்மது இஸ்மாயில்

அ முகம்மது இஸ்மாயில்