பி.ஏ. கிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு

This entry is part [part not set] of 27 in the series 20050930_Issue

பி.கே. சிவகுமார்


ஒரு வியாழக்கிழமை இரவிலிருந்து திங்கட்கிழமை காலை வரை பி.ஏ. கிருஷ்ணனுடன் இருக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது இல்லாமல், அவர் இந்தியா திரும்புகிற அன்று விமான நிலையத்தில் மறுபடியும் அவருடன் ஐந்து மணி நேரத்துக்கு அதிகமாகச் செலவிடுகிற வாய்ப்பு கிடைத்தபோது, 3 மணி நேர தூரத்தில் இருக்கிற விமான நிலையமும், அதை நோக்கி நீளுகின்ற போக்குவரத்து நெரிசல் மிக்க பாதையும் பெரிய விஷயமாகத் தெரியவில்லை.

‘எந்தப் பொருளைப் பற்றி வேண்டுமானாலும் ஆழமாகவும், அகலமாகவும் பேசுவார் ‘ என்று பி.ஏ. கிருஷ்ணனைப் பற்றி சுந்தர ராமசாமி குறிப்பிட்டார். இதைவிடச் சிறப்பாக பி.ஏ.கே.வைப் பற்றி நான் என்ன சொல்லிவிட முடியும் ? அவர் என் இல்லத்துக்கு வருகை தந்த வியாழன் இரவிலிருந்து விடைபெற்றுக் கொண்ட திங்கள் காலை வரை, நாள் முழுக்க மட்டுமில்லாமல், பின்னிரவுகள் வரை அவரிடம் பேசுகிற, அவர் பேசுகிறவற்றைக் கேட்கிற, அவர் சொல்கிற புதிய விஷயங்களை ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் விழி விரியப் பார்த்து மனதில் குறித்துக் கொள்கிற, என்னுடைய எண்ணங்களும் கருத்துகளும் சரியா என்பதை அவரிடம் உரசிப் பார்த்துக் கொள்கிறவிதமாக நேரம் வெகு சீக்கிரம் ஓடிவிட்டமாதிரியான பிரமை. மார்க்ஸியம், இந்து மதம், இலக்கியம், சினிமா, தமிழ் எழுத்தாளர்கள், ஆங்கில எழுத்தாளர்கள், இட ஒதுக்கீடு, விடுதலைப் புலிகள், தமிழ் தேசியம், இந்திய தேசியம், டெல்லியில் அவர் வாழ்ந்துவரும் 30 ஆண்டுகள், சொந்த வாழ்க்கை, மொழி, ஆன்மீகம், சிறுபத்திரிகைகள், சு.ரா., ஜெயமோகன், இரா.முருகன், தேவநேயப் பாவாணர், வையாபுரிப் பிள்ளை, அரசியல், புத்தகங்கள், மார்க்ஸிஸ்டுகள், பெரியார், காந்தி, நேரு, அ.முத்துலிங்கம், ரெ.கார்த்திகேசு, பி.ஏ.கே.வின் சிங்கப்பூர் பயணம், சத்யஜித் ரே, கம்பன், இணையக் குழுமங்கள், வலைப்பதிவுகள், இந்திரா பார்த்தசாரதி, அறிவியல், இயற்பியல், அவர் எழுதிக் கொண்டிருக்கிற புதிய நாவல் என்று பல விஷயங்களை அவர் பேசக் கேட்கிற வாய்ப்பு கிடைத்தமைக்கு காலத்துக்கும் அவருக்கும் நன்றி சொல்கிற தனிப்பட்ட கடமை எனக்கு இருக்கிறது. அவருடன் கழித்த மூன்றரை நாட்கள், எனக்குத் தனிப்பட்ட அளவில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. I was most benefited by his company.

பி.ஏ. கிருஷ்ணனைப் பாஸ்டனில் சந்தித்தபின் அது பற்றி எழுதிய நண்பர் பாஸ்டன் பாலாஜி ‘அவர் சென்றபின் அவர் கொண்டுவந்ததை எல்லாம் அவரே எடுத்துக் கொண்டு போய்விட்ட மாதிரி இருந்தது ‘ என்று கவித்துவமாக எழுதியிருந்தார். எனக்கென்னவோ, என்னையுமறியாமல் பி.ஏ.கே. என்னுள்ளும் இங்கே அவரைச் சந்தித்தவர்களுள்ளும் விதைத்துவிட்டுப் போயிருக்கிற அறிவு விதைகளை இனம் கண்டு வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இருப்பதாகத் தோன்றுகிறது.

அமெரிக்காவில் இருக்கிற பி.ஏ.கே.வின் மகன் அவரை இங்கேயே வந்து தங்கிவிடும்படி அழைக்கிறார். அப்படி இங்கேயே வந்து தங்கிவிடுகிற முடிவை பி.ஏ.கே. எடுப்பாரேயானால், அவர் இருக்கிற இடத்துக்குப் பக்கத்தில் குடிபோய், அவரிடமிருக்கிற அறிவின் சுடரையெல்லாம் கொண்டு என் மன வீட்டுக்குள் ஒளியேற்றிக் கொள்ளப் பார்க்க வேண்டும். 🙂

அந்த நாட்களில் ஒரு சனிக்கிழமை காலையிலிருந்து இரவு வரை AnyIndian.com ஏற்பாடு செய்திருந்த எழுத்தாளர் சந்திப்பிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பி.ஏ.கே. சிறப்பித்தார். பி.ஏ.கே. என்னுடன் தனியாகப் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் எனக்கு மட்டுமே என்பதால் அவற்றை எழுதாமல், AnyIndian.com-ன் எழுத்தாளர் சந்திப்பில் அவர் பொதுவில் பகிர்ந்து கொண்ட விஷயங்களை நினைவிலிருந்து இங்கே தொகுத்துத் தர முயல்கிறேன்.

பி.ஏ.கே.வைச் சந்திக்க வாஷிங்டன் டி.சி.யிலிருந்து வெள்ளி மாலை நண்பர் ஸ்ரீகாந்த் மீனாட்சி வந்திருந்தார். அவருடன் தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் அறிமுகம் உண்டு என்றாலும், முதன்முறையாக நேரில் பார்க்கிறேன். நேர்ப்பேச்சில் ஸ்ரீகாந்த் இன்னமும் தெளிவாகவும், திறந்த மனதுடன், மற்றவர் என்ன நினைக்கக் கூடும் என்பதைப் பற்றிக் கவலை கொள்ளாத சிந்தனையாளராகவும் (இதை நற்பண்பாகவே சொல்கிறேன்) கருத்துகளை வைக்கிற மாதிரி எனக்குத் தோன்றியது. எழுதும்போது கொஞ்சம் தயக்கமும், பொலிடிகல் கரெக்ட்னசும், மாற்றுக் கருத்துள்ள நண்பர்களின் மனம் கோணக்கூடாது என்ற நல்லெண்ணமும் அவரிடம் வந்து விடுகிறதோ என்று எண்ண வைக்கிற அளவுக்குக் கருத்துகளில் அடித்து ஆடினார் அவர். வெள்ளிக்கிழமை இரவு பின்னிரவு, சனிக்கிழமை இரவு பின்னரவு என்று இரு இரவுகளின் பேச்சுகளில் ஸ்ரீகாந்த்தும் பங்கு பெற்றது நிறைவளித்தது.

எழுத்தாளர் சந்திப்பு காலை 11 மணிவாக்கில் தொடங்கி இரவு வரை நீண்டது. மரத்தடியின் ஸ்தாபகர் குமரேசன், மரத்தடியின் ப்ரியா சிவராமகிருஷ்ணன், வலைப்பதிவரும் குறும்பட இயக்குநருமான அருண் வைத்யநாதன், ஸ்ரீகாந்த் மீனாட்சி, திண்ணை.காம் ஆசிரியர் கோபால் ராஜாராம், துக்காராம், பாரி பூபாலன், ஆனந்த் முருகானந்தம், திருமதி.சாரதா முருகானந்தம், திருமதி. சந்திரா ராஜாராம், சோமசுந்தரம், மீனாட்சி சுந்தரம், சுரேஷ் உள்ளிட்ட சுமார் 20 பேர் (நினைவுக்கு வந்தப் பெயர்களை மட்டும் பட்டியலிட்டிருக்கிறேன்.) இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். சந்திப்பு நாள் முழுக்க நடைபெற்றதால், காலையில் சிலரும், மாலையில் சிலரும் கலந்து கொண்டதும் உண்டு.

காலையில் பி.ஏ.கே.வின் புலிநகக் கொன்றையை அடிப்படையாகக் கொண்டு கலந்துரையாடல் நடைபெற்றது. பிற்பகல் உணவு இடைவேளைக்குப் பிறகு, தனிப்பாடல்களைப் பற்றிப் பி.ஏ.கே. ஓர் உரையாற்றினார். பின்னர் அது குறித்து விவாதம் தொடர்ந்தது.

மரத்தடியின் ப்ரியா புலிநகக் கொன்றையிலிருந்து நிறைய கேள்விகள் கேட்டார். என் நினைவில் இருப்பதை இங்கே கொடுத்துள்ளேன். சில நேரங்களில் கேள்வி நினைவிருக்கும். யார் கேட்டது என்று நினைவிருக்காது. அதனால், எந்தக் கேள்வியை யார் கேட்டது என்பதை எல்லா இடங்களிலும் சொல்ல முடியவில்லை. நான் சொல்லாமல் ஏதும் விட்டிருந்தால், அவற்றை நிரப்பித் தருமாறு ப்ரியாவை வேண்டிக் கொள்கிறேன்.

* வரலாற்றில் ஓரத்தில் இருப்பவர்கள் வரலாற்றின் மையத்தைப் பார்க்கிற கதை புலிநகக் கொன்றை என்றார் பி.ஏ.கே.

* பி.ஏ.கே.வின் தந்தையார் பட்சிராஜன் கம்பனின் தோய்ந்த அறிஞர். ‘கம்பனின் சிறந்த மாணாக்கர் ‘ என்ற பட்டம் பெற்றவர். சுதந்திரப் போராட்ட வீரர். எனவே, தமிழ் ஆர்வம் தம் ரத்தத்தில் ஊறியது என்றார்.

* புலிநகக் கொன்றையில் முதலில் ஆங்கிலத்தில் எழுதினார். அதைப் படித்துப் பார்த்த சுந்தர ராமசாமியும் இந்திரா பார்த்தசாரதியும் அதைத் தமிழில் எழுத ஊக்கமும் தூண்டுதலும் தந்தார்கள். எனவே, அடுத்துத் தமிழில் எழுதினார். தமிழில் அவர் அதை எழுதிய பொழுதுகள் அவர் வாழ்வின் சிறந்த பொழுதுகள்.

* ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதில் என்ன வித்தியாசங்கள் அல்லது பிரச்னைகள் என்று ப்ரியா கேட்டார். அதற்கு வசை, சங்கப் பாடல்கள் ஆகியவற்றை அப்படியே தமிழில் எழுதிவிடலாம். ஆனால், ஆங்கிலத்தில் அவற்றை அப்படியே முழுமையாகக் கொண்டுவந்துவிட முடியாது என்று சொன்னார். அதற்கு உதாரணமாக, ஆங்கிலத்திலிருந்தும் தமிழிலிருந்தும் சில பத்திகளைப் படித்துக் காட்டினார்.

* செவ்வாய் கிரகத்திலிருந்து ஒரு மொழி அறிஞர் வந்தால் – பூமியிலிருப்போர் பேசுகிற மொழிகளுக்கிடையே வட்டார வழக்குகளைத் தவிர்த்து அதிக வித்தியாசம் காண மாட்டார் என்று நோம் சாம்ஸ்கி சொன்ன கருத்து புலிநகக் கொன்றையின் முன்னுரையில் உள்ளது. அந்தக் கருத்து மிகவும் உண்மையானது என்றார் ஒரு நண்பர்.

* உடனே விவாதம் மொழிபற்றிச் சற்றுத் திரும்பியது. மொழியை உணர்வுபூர்வமாக மட்டுமே அணுகி, ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு ‘ என்று கோஷமிடுவது மடத்தனத்தின் உச்சம் என்றார் ஒரு நண்பர். அப்படிக் கோஷமிடுபவர்கள் மொழியை அரசியலாக்குகிறார்களே அல்லாமல், தமிழ் மொழியின் கவித்துவமோ, கலாசாரமோ, மரபோ அவர்களுக்குத் தெரியாது என்றார் அவர் தொடர்ந்து. அப்படி உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற கோஷத்தை முன்வைத்தவர்கள் யாரும் அதை sincere ஆகச் செய்யவில்லை என்றார் பி.ஏ.கே.. மற்றவர்களை அப்படிச் செய்யத் தூண்டிவிட்டதோடு சரி. தமிழில் உண்மையான அக்கறையும் ஆர்வமும் இருந்தால் சன் டி.வி. என்று பெயர் வைப்பார்களா என்றும் பி.ஏ.கே. கேட்டார்.

* கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட வருடங்களுக்குச் சில வருடங்கள் முன்னிலிருந்து தம் நாவல் தொடங்குவதாகப் பி.ஏ.கே. குறிப்பிட்டார். அந்தக் குறிப்பிட்ட வருடத்தில் தொடங்கக் காரணம் ஏதும் உண்டா என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் இது.

* ஆங்கிலம் தமிழ் என்ற இரண்டு மொழிகளில் எழுதியதில் எந்த மொழியில் சொல்ல வந்ததை அதிகமாகவும் நிறைவாகவும் சொன்ன திருப்தியிருக்கிறது என்ற கேள்விக்குத் தமிழில் என்று சொன்னார் பி.ஏ.கே.

* தமிழில் ஒரு இருநூறு ஆண்டுகால வரலாற்றைப் பிற மொழியினருக்குச் சொல்கிற முயற்சியாக முதலில் ஆங்கிலத்தில் இந்நாவலை எழுதினீர்களா என்று ப்ரியா கேட்டார். அது மட்டுமில்லை என்று ஆரம்பித்த பி.ஏ.கே., ‘தமிழைப் பற்றித் தாழ்வாக மதிப்பிடவில்லை. என்னதான் சொன்னாலும் ஆங்கிலத்தின் vocabulary அபரிதமானது. ஆங்கிலத்தில் எழுதுவது சுலபமானது. தமிழில் எழுதுவது மகிழ்ச்சியளிப்பது. ஆனால், சுலபமாகச் ஆங்கிலத்தில் சொல்லிவிடக் கூடிய சில விஷயங்களைத் தமிழில் அப்படியே சொல்வது கடினமான முயற்சியெடுப்பது ‘ என்றார்.

* ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றியும், நடிகர்களைப் பற்றியும் எழுதியதற்கு ஏதும் எதிர்ப்பு வந்ததா என்று கேள்வி கேட்கப்பட்டது. ஒன்றும் வரவில்லை. அவர்களில் எத்தனைபேர் சீரியஸ் எழுத்துகளைப் படிக்கிறார்கள். அவர்கள் இதையெல்லாம் படித்திருக்கவே மாட்டார்கள். படித்தால்தானே பிடிக்காமல் போவதற்கு என்றார் பி.ஏ.கே. சொல்லிவிட்டு, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகிய மூன்று நடிகர்களைப் பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதியிருந்த பத்திகளைப் படித்துக் காட்டினார். இரண்டுக்கும் இடையே இருக்கிற நுட்பமான வித்தியாசம் சொன்னார். தமிழைப் படிப்போர் அதனுடன் ஒட்டிச் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும் ஏனென்றால் தமிழர்களுக்கு இந்த மூன்று பேரையும் நன்றாகத் தெரியும் என்றார். அப்படியே, இப்படிப்பட்ட நடிகர்களின் பிடியிலிருந்து விடுபட்டால்தான் தமிழ்நாடு உருப்படும் என்றர். திரும்பத் திரும்ப ஒரு நடிகர் போய் இன்னொரு நடிகர் தானே வந்து மக்களிடம் எடுபடுகிறார்கள் என்றார்.

* அதேபோல, ராஜாஜி எப்படிப் பேசுவார் என்பதை அறிந்தவர்கள்தான் ராஜாஜி பற்றி வருகிற சித்தரிப்புகளை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்று சொல்லி, அது தொடர்பான பத்திகளைப் படித்துக் காட்டினார்.

* ‘நான் புலிநகக் கொன்றையை எழுதியதன் காரணம், இந்த 200 ஆண்டுகளில் நாம் என்ன சாதித்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளத்தான் ‘ என்றார். நாவலில் வருகிற நம்பியின் கடிதம் இக்கேள்வியைக் கேட்கிறது என்பதைச் சொல்லி, அக்கடிதத்தைப் படித்துக் காட்டிப் பேசினார்.

* மதியம் உணவு இடைவேளைக்குப் பின்னர், தனிப்பாடல்களைப் பற்றி உரையாற்றினார். வறுமையைப் பற்றி ஆங்கிலத்தில் இருக்கிற ஒரு பாடல், தமிழில் வறுமையைக் கூடக் கவித்துவத்துடன் அற்புதமாக வெளிப்படித்தியிருக்கிற பாடல்கள், காளமேகத்தின் சிலேடைகள், நாகை சத்திரத்தில் அரிசி இலையில் இடும்போது ஊரடங்கும் என்று பலரும் அறிந்த பாடல், போட்டாளே உனையொருத்தி என்ற பாடல் உள்ளிட்ட பல பாடல்களில் தெறித்து விழும் அங்கதம், புலமை, கவித்துவம் ஆகியவற்றை எடுத்துக் காட்டிப் பேசினார்.

* இடஒதுக்கீட்டைப் பற்றிப் பேசும்போது, அதைத் தான் ஆதரிப்பதாக பி.ஏ.கே. சொன்னார். ‘என்ன சொன்னாலும், ஒரு பிராமணப் பையனுக்கு, வாழ்க்கையில் முன்னேற, உறவினர், தெரிந்தவர், நண்பர், அவர் இவர் என்று ஏறக்குறைய குறைந்தபட்சம் 50 தொடர்புகள் இருக்கும். அந்தத் தொடர்புகள் எல்லாம் அவரைவிட நல்ல நிலையில் இருப்பவர்களாக இருப்பார்கள். எனவே, யாராவது ஒருவர் அவரைத் தூக்கிவிட்டு விடுவார். ஆனால், மற்றவர்களுக்கு அத்தகைய வாய்ப்புகள் இல்லை. ஒரு கிராமப்புறத்தைச் சேர்ந்த, முதல் தலைமுறையாகவோ, இரண்டாம் தலைமுறையாகவோ கல்லூரிக் கல்விக்குள் அடியெடுத்து வைக்கிற மாணவனுக்கு இத்தகைய சலுகைகள் சமூகத்தில் இல்லை. அக்குறைய இடஒதுக்கீடு தீர்த்து வைக்க உதவும் ‘ என்றார். இட ஒதுக்கீடு குறித்து எனக்குப் பல விமர்சனங்கள் உண்டு. ஆனால், இட ஒதுக்கீடு குறித்து பி.ஏ.கே. சொன்ன இந்தக் கருத்து மிகவும் முக்கியமானதாக எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால், அவர் சொன்ன உதாரணம் போன்ற நிகழ்ச்சிகளை, என் சொந்த வாழ்க்கையிலும், பிறர் வாழ்க்கையிலும் நான் பார்த்துள்ளேன். ஸ்ரீகாந்த் மீனாட்சி இட ஒதுக்கீடு பற்றி அவர் நண்பர் உதயகுமார் எழுதிய கட்டுரை ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டார். அதை இணையத்தில் இடச் சொல்லி வேண்டிக் கொண்டேன். அதன்படி அவர் அதைப் பின்னர் தன் வலைப்பதிவில் இட்டார். அக்கட்டுரை அவர் வலைப்பதிவில் இருக்கிறது.

* பின்னர் திண்ணை ஆசிரியர் கோபால் ராஜாராமின் ராஜ் தொலைகாட்சி நேர்காணல் திரையிடப்பட்டது. அதைப் பார்த்து முடித்தபின்னர், விவாதம் அந்த நேர்காணல் பற்றியும், இணையப் பத்திரிகைகள் என்றும் தொடர்ந்தது.

* புதியவர்களும் இளைஞர்களும் எழுத வருவதே பெரிய விஷயம். எனவே, அவர்கள் எழுதுவதில் எல்லாம் குறை கண்டுபிடிக்கக் கூடாது. அவர்கள் 20 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் வரை சரியாக எழுதினாலும்கூட, அவர்களை உற்சாகப்படுத்த மட்டுமே வேண்டும். காலப்போக்கில் அனுபவமும் அறிவும் வளர வளர அவர்கள் வளர்ந்து சரியாக எழுதக் கூடும். இளைஞரான அரவிந்தன் நீலகண்டன் ஆர்.எஸ்.எஸ். சார்ந்தவராக இருந்தாலும், நிறைய படிக்கிறார். அறிவியல் பற்றி எழுதுகிற சிலரில் ஒருவராக இருக்கிறார். ஒரு மார்க்ஸியவாதியாக அவரிடம் குற்றம் குறை கண்டுபிடிப்பதைவிட, அவரைப் போன்றவர்கள் என்ன எழுதினாலும் இப்போதைக்கு அவர்களை கோட்பாடுகளின் அடிப்படையில் ஒதுக்கி விடாமல், அவர்கள் எழுத்தின் மூலம் வளர்வதற்கும், சரியான கொள்கைகளை அடைவதற்கும் வழி செய்கிற மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்றார். இந்த உதாரணம் அனைவருக்கும் பொருந்தும் என்றார். மார்க்ஸின் சொற்படி, மார்க்ஸியத்தைக் கூட ஒருவர் சந்தேகப்படலாம். அதற்கான வாய்ப்பை அவருக்கு அளிக்க வேண்டும் என்றார்.

* ஒரு மார்க்ஸியவாதியாக மதம் குறித்து பி.ஏ.கே. கொண்டுள்ள கருத்துகளை ஒத்தே நான் உட்படப் பலரின் கருத்துகள் இருக்கின்றன. ஆனால், எங்களையெல்லாம் இடதுசாரிகள் என்றும் மார்க்ஸிஸ்டுகள் அழைத்துக் கொள்பவர்கள் இந்துத்துவா என்றும் மேலாதிக்கவாதிகள் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே, எங்களைவிட நன்கு படித்த பி.ஏ.கே. போன்றவர்கள் மார்க்ஸியப் பார்வையில், இந்துமதம் குறித்தும், மதம் குறித்த மார்க்ஸின் அணுகுமுறை குறித்தும் விரிவாக எழுத வேண்டும் என்று நான் வேண்டிக் கொண்டேன். எதிர்காலத்தில் அப்படி எழுதுகிற ஒரு எண்ணம் ஏற்கனவே இருப்பதாக அவர் சொன்னார்.

* இந்தச் சந்திப்பு பி.ஏ.கே. என்கிற எழுத்தாளரைவிடவும், பி.ஏ.கே. என்கிற மார்க்ஸிஸ்டையும், பி.ஏ.கே. என்கிற மனிதரையும், அவரின் மனிதாபிமானம் நிறைந்த அறிவுஜீவிதப் பார்வையும் அவர் அருகிலிருந்து அறிந்து கொள்கிற வாய்ப்பை எனக்குக் கொடுத்தது. கற்றுத் தந்தவர்கள் எல்லாம் குருக்கள் என்றால், பி.ஏ.கே. தொலைவிலிருந்தும் அருகிலிருந்தும் தன் எழுத்துக்களால், கருத்துக்களால் எனக்குக் கற்றுத் தந்தபடியே இருக்கிறார். என் பார்வையை முன்னகர்த்தி அது விசாலப்படக் காரணமாக இருக்கும் அந்தக் குருவுக்கு நன்றி. என் உலகம் இப்படிப்பட்ட நல்ல குருக்களால் நிறைந்திருப்பது பெருமையளிக்கிறது.

* இந்தச் சந்திப்பு பற்றி எப்போது எழுதப் போகிறீர்கள் என்று என்னைக் கேட்டு ஊக்கமளித்த பிபி (பாலாஜி ஸ்ரீனிவாசன்), முகமூடி, சுரேஷ் கண்ணன் உள்ளிட்ட நண்பர்களுக்கு நன்றிகள்.

—-

pksivakumar@yahoo.com

Series Navigation