பார்வை – கிராமிய அழகியல் மனநிலை

This entry is part [part not set] of 30 in the series 20020610_Issue

வெளி ரெங்கராஜன்


‘குன்னாங் குன்னாங் குர்ர்……. ‘ என்கிற சிறுவர் கதையாடல் மற்றும் நாடக நிகழ்வுக்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொங்கன்குளம் என்ற கிராமத்துக்கு சென்றிருந்த போது நான் முதலில் எதிர்கொண்டது ஆலங்குளத்திலிருந்து கொங்கன்குளம் வரை கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர் வளைந்து வளைந்து செல்லும் மண் சாலைகளைத்தான். அதிக ஆள் நடமாட்டமில்லாமல் மரம் செடி கொடிகள், புதர்களுக்கு நடுவே திறந்த வெளியில் வெயில் தாழ்ந்த மேகங்கள் சூழ்ந்த ஒரு மாலையில் பயணம் செய்வது மிகவும் புத்துணர்வாக இருந்தது. சென்னையில் ஒரு வெப்பமான சூழ்நிலையில் எப்படிப்பட்ட இலக்கிய மற்றும் கலை நிகழ்வானாலும் அதிக நேரம் உணர்வுகளை இருத்திக் கொள்வது என்பது இயலாததாகவே இருக்கிறது. திறந்த வெளிக்கு வந்து சற்று இறுக்கமற்று உரையாடுவதையே மனம் நாடுகிறது. சென்னையில் கருத்தரங்குகளில் எல்லாம் அதிக கூட்டம் வெளியே இருப்பதன் காரணம் இதுவாகத்தான் இருக்கிறது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கூட இன்றைய மாணவர் அமைதியின்மைக்கு ஒரு அழுத்தமான மூடிய சூழலே பெரும் காரணம் என்பதை உறுதியாக கூற முடியும். நிர்ப்பந்தத்தால் குவிக்கப்படும் கவனம் என்பது ஒரு அதிகாரம் தானே. நான் சமீபத்தில் பார்த்த ஆப்பிரிக்க படம் ஒன்றில் சீர்த்திருத்த உணர்வுகளுடன் பள்ளியில் சேரும் இளம் ஆசிரியர் ஒருவர் முதல் பாடமாக மாணவர்களை திறந்தவெளிக்கு அழைத்து காடுகளை திருத்தும் பணியில் ஈடுபடுத்துகிறார். கிராமிய வாழ்க்கை முறையின் வளமை என்பது அது வழங்கும் திறந்த வெளி சுதந்திரம்தானே. பெருநகரமாக்கலுக்கு அடிபணியாமல் திறந்தவெளிக்கு அண்மையில் தன்னை எப்போதும் இருத்திக் கொள்வதால் தானே கேரளம் இந்திய சூழலில் ஒரு தனித்த மாநிலமாக இருக்கிறது.

திறந்த வெளி எப்போதும் ஒரு கவித்துவமான பாலியல் தன்மையின் வாசத்தை சுமந்தபடி இருக்கிறது. நான் கேரளத்தின் அமைதியான தெருக்களிலும் செடிகள் அடர்ந்த ஒற்றையடி பாதைகளிலும் ஒரு பாலியல் வாசத்தின் வீச்சை பலமுறை உணர்ந்திருக்கிறேன். மெளனியின் சிறுகதை ஒன்றில் இலக்கின்றி மனம் அமைதியற்று அலையும் ஒருவன் நீண்ட பாதைகளும் வயல் வெளிகளும் தன்னுடைய பாலியல் மற்றும் பிரிவு மனநிலைக்கு ஒரு அடைக்கலம் தருவதை உணர்வதாக கதை செல்கிறது. வீடுகளின் புழக்கடையிலிருந்து பின்புறமாகச் செல்லும் பாதைகள் முன்புற பதட்டத்திற்கு மாறான வேறொரு நாகரிகத்திற்கும், மனநிலைக்கும், ரகசியங்களுக்கும் அழைத்துச் செல்வதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் சிறுவர்களுக்கென்று வடிவமைக்கப்பட்ட இந்த நிகழ்வு கொஞ்சம் விரிவாக்கப்பட்டு இந்த வருடம் வேறொரு வடிவில் நிகழ்த்தப்பட்டது. செல்வம் என்ற கலாச்சார உணர்வுள்ள ஒரு இளம் விவசாய நண்பர் கிராமப்புற சக்திகளை திரட்டுவதற்கான ஒரு முயற்சியில் மூன்றாம் வருடமாக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். சிறுவர் கதை சொல்லல், அறிவியல் நிகழ்சிகள், விளையாட்டு, தோல்பாவை கூத்து, பாவலர் முத்துமாரியின் தெருக்கூத்து, பேயாட்டம், இயற்கை விவசாய கருத்தரங்கு, நாடகம் என பல நிகழ்ச்சிகள் முதல் நாள் மாலையிலிருந்து மறுநாள் மாலை வரை அவ்வப்போதைய இடைவெளிகளுடன் கிராமத்தின் மையத்தில் திறந்தவெளியில் நிகழ்த்தப்பட்டன. தங்களுடைய வேலை காரணமாக முழு நிகழ்ச்சிகளுக்கும் பலர் வரமுடியாத நிலை இருந்தும், கிராமத்தின் மையத்தில், அது மொத்த கிராமத்திற்குமான ஒரு நிகழ்வாக இருந்தது. டா கடைக்காரர் கூட சீக்கிரம் வியாபாரத்தை முடித்துவிட்டு நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று எங்களை துரிதப்படுத்தினார். சில தாய்மார்கள் தூரத்தில் நின்று கொண்டு தங்கள் பிள்ளைகள் சொல்லும் கதைகளை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஒரு பத்து வயதுப்பெண் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியவர்களை புனைவுப்பாத்திரங்களாக்கி அதீதமான சுதந்திரத்துடன் தன்னுடைய கற்பனைக்கு இணையாக அவர்களை இழுத்துக்கொண்டிருந்தாள். பனிக்கட்டி வீடுகளில் வாழும் அவர்கள் ரகசிய வலைகளுடன் ஒருவர் மற்றொருவரை மறைந்திருந்து பார்த்துக் கொண்டு, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் பற்றி பாடிக்கொண்டும் செல்வதாக கதை நீண்டுக்கொண்டிருந்தது. அந்த சிறுபெண்ணின் பயமற்ற வெகுளித்தனமும், கற்பனையும், சரளமும் எல்லோரையும் குதூகலத்தில் ஆழ்த்தின. கிராமங்களை தங்கள் சட்டைப்பையில் வைத்திருப்பதாக மார்தட்டிக் கொள்ளும் இந்த தலைவர்களுக்கு உண்மையான மரியாதை என்ன என்பதை அந்த தொலைதூர கிராமத்தில் பார்க்க முடிந்தது.

மாலையில் கழனியூரான், பா.செயப்பிரகாசம் ஆகிய கதைசொல்லி எழுத்தாளர்களின் கதையாடலுக்கு கூட்டம் செவிசாய்த்துக் கொண்டிருந்தபோது திடாரென பெய்த ஒரு பெருமழை கூட்டத்தை மேலும் குதூகலத்தில் ஆழ்த்தியது. அந்த பெருவெளிக்கு நடுவே இன்னொரு சிறுவெளியாக கோவிலை ஒட்டிய ஒதுக்குப்புறத்தில் உரையாடல்கள் தொடர்ந்தன. மழை சூழலின் நெகிழ்ச்சியை மேலும் தீவிரப்படுத்தியதையே பார்க்க முடிந்தது. மழை முடிந்து பாவலர் முத்துமாரியின் கூத்து நிகழ்ச்சி தொடங்கிய போது அதை எதிர்கொள்வதற்கான ஒரு பக்குவமான சூழல் நிலவியது. அரசியல், சினிமா, கலாச்சாரம் என்று பல்வித எதிர்வினைகளுடன் சரளமாக பாடியும் உரையாடியும் கூத்து நிகழ்த்திய முத்துமாரியின் சொல்லாடலுக்கு கிராமத்தின் கவனம் குவிந்திருந்தது. அவருடைய அவ்வப்போதைய பாலியல் அசைவுகளைக்கூட கூச்சங்கள் இன்றி இயல்பான குதூகலத்துடன் பெண்களும் ரசித்தபடி இருந்தனர். கூத்து பாடல்களும் நடனமும் ஒரு சமூக வடிகாலுக்கான தளங்கள் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

மறுநாள் காலையில் நடந்த இயற்கை விவசாயம் பற்றிய கருத்தரங்கிலும் பூச்சி மருந்துகள், ரசாயன உரங்கள் மூலம் விவசாய நிலங்களை நாசப்படுத்திக்கொண்டிருக்கும் பசுமை புரட்சி பற்றியும் உலகமயமாக்கலின் கோர விளைவுகள் பற்றியும் இளம் விவசாயிகள் தங்கள் சுய அனுபவங்களின் ஊடாக உரையாடியது மிகவும் நிறைவான ஒரு அனுபவமாக இருந்தது கோஷங்களுக்கு இரையாகாமல் எதார்தத்தை உணர்ந்து அதை மேம்படுத்தும் முயற்சிகளுக்கான சாத்தியங்களும், தற்சார்பும் கிராமிய பின்புலத்திலேயே மண்டிக்கிடப்பதை அந்த உரையாடல்கள் உணர்த்திக்கொண்டிருந்தன. விவசாய மக்களை நம்பாமல் டை கட்டிக்கொண்டு குளிர்சாதன அறைக்குள் விவசாய மேம்பாட்டுத்திட்டங்கள் தீட்டப்படும் அவலம் பற்றி எஸ்.என்.நாகராஜன் முதல் நாள் மாலை உரையாடியது நினைவில் வந்து கொண்டிருந்தது.

கடைசியில் மாலை நிகழ்ச்சியாக மழை மிரட்டிக் கொண்டிருந்த ஒரு சூழலில் மழையுடன் போட்டி போட்டுக் கொண்டு தனசேகரன் திறந்தவெளியில் நிகழ்த்திய பாலிதீன் நகருக்குள் நுழைந்த கிராமச் சிறுவர்களின் அந்நியப்படுதல் குறித்த பாலிதீன் நகரம் நாடகம் திறந்தவெளியில் ஓடியும், ஆடியும், விளையாடியும், கவிதை பாடியும் உடலையும் மனத்தையும் தளர்த்திக் கொள்ளக் கிடைத்த ஒரு அனுபவம்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் புரிசை கிராமத்தில் கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்து மன்றத்தின் சார்பாக நடந்த கடோத்கஜன் வதம் என்கிற புதிதாக தயாரிக்கப்பட்ட கூத்து நிகழ்வின் போதும், இதுபோன்றதொரு மனநிலையையே எதிர்கொள்ள நேர்ந்தது. உண்மையில் புரிசை கூத்து பலவருடங்களுக்கு முன்பாகவே புரிசை கிராமத்திற்கு அப்பாலும் பெயர் பெற்றிருந்தது. புரிசையிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள செய்யாறிலேயே புரிசை கூத்து நிகழ்ச்சி பற்றிய சுவரொட்டிகளை பார்க்க முடிந்தது. நான் புரிசைக்கு முதல் தடவையாக செல்வதால் புரிசை பற்றிய அதீத கற்பனைகளுடன் சென்றேன். ஆனால் இரவு ஒன்பது மணிக்கு நானும் ஒரு நண்பரும் புரிசை கிராமத்திற்கு வந்திறங்கிய போது எங்களை இருட்டுதான் எதிர்கொண்டது கூத்து நிகழ்வுக்கான அறிகுறிகள் அண்மையில் புலப்படவில்லை. டிரான்ஸ்பார்மர் வெடித்திருந்ததால் தெருவிளக்குகள் எரியவில்லை என்று சொன்னார்கள் ஆங்காங்கே வீட்டுக்குள் இருந்து வந்து கொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தின் ஊடாக நடந்து கூத்து நடக்குமிடத்திற்கு வந்த பொழுது மேடையில் சினிமா பாடல்களுக்கு சிறுவர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். கூத்து துவங்க நேரமாகும்போல் தெரிந்ததால் பக்கத்திலிருந்த கோவிலுக்கு நடந்து சென்று படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டோம். கோவில் படிக்கட்டின் முன்னால் திரண்டிருந்த பரந்தவெளியை நோக்கியபோது கிராமம் வேறு விதமான தோற்றம் கொண்டது.

சாதாரணமாக தோற்றமளித்த ஆண்களும் பெண்களும் கூத்தின் பார்வையாளர்களாக பாய் தலையணைகளுடன் நிகழ்வுக்குமுன்னால் வீற்றிருந்த பொழுது வெவ்வேறு விதமான மனநிலைகளில் தோற்றம் கொண்டனர். உறக்கத்திலும் விழிப்பிலும் கூத்து பாத்திரங்களின் வீரியமான இயக்கங்களின் ஊடாக ஒருபெரும் நினைவுப்பயணம் கொண்டனர். அங்கு பூ விற்பவர் பலூன் விற்பவர்வரை எல்லோருக்கும் ஒரு மன செயல்பாடு இருந்தது. சிறியவர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள் என எல்லோரும் அங்கு தங்கள் பெறுவதற்கு ஏதோ இருப்பதான மயக்கம் கொண்டிருந்தனர். தூக்கம் கலைவதற்காக நடுஇரவில் நான் சில நண்பர்களுடன் தெருக்களில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எல்லா இடங்களிலும் கூத்தின் ஓசை நிரம்பி இருந்தது.

கிராமங்களில் அடிப்படை வசதிகள் குறைவான நிலையிலும் ஒரு பேரியக்கத்திற்கான உணர்வு உயிரோட்டமாக இருக்கிறது. தொலைக்காட்சி மற்றும் சினிமாவின் சிறிய வடிவம் கிராமத்து பெருவெளியை தக்கவைத்துக் கொள்ள இயலாது என்கிற எண்ணமே உறுதியானது. கிராமங்கள் இருக்கும் வரை அந்த வெளியின் பிரம்மாண்டத்திற்கு இணையான ஒரு பெரும் உயிரியக்கம் தான் நிலைத்து நிற்கும் சாத்தியங்கள் கொண்டிருப்பதை உணர முடிந்தது.

***

rangarajan_bob@hotmail.com

Series Navigation