‘பாருவின் சமையல் ‘ (என் தாயார் அவர்களின் நினைவாக)

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

செங்காளி


‘அத்தே..அத்தே.. ‘ என்று அழைத்துக்கொண்டே யாரோ லேசாக முன்கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அம்மா சென்று கதவைத் திறந்தவுடனே அங்கே பார்வதி நிற்பதைக்கண்டாார். ‘அடடே பாருவா, வாம்மா வா ‘ என்று அழைக்க பார்வதியும் உள்ளே வந்தாள்.

பார்வதியும் அவள் கணவரும் எங்கள் தெருவுக்கு ஒரு நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் குடிவந்தார்கள். எங்கள் வீட்டுக்கு எதிர் வரிசையில் வலது பக்கத்தில் ஏழெட்டு வீடுகள் தாண்டிஅவர்கள் வீடு. அவள் கணவர் சேகர் ஏதோ ஒரு வங்கியில் வேலை செய்வதாகச் சொல்லியிருக்கிறாள். எங்கள் தெருக்கோடியிலுள்ள பிள்ளையார் கோயிலில் எதிர்பாராமல் இருவரும் சந்தித்த அன்றிலிருந்து அத்தை அத்தையென அம்மாவிடம் அவள் நன்றாக ஒட்டிக்கொண்டுவிட்டாள். எந்த ஒரு காரியமென்றாலும் அம்மாவின் அபிப்பிராயத்தைக் கேட்க ஓடிவந்துவிடுவாள்.

இன்றைக்கென்னவோ அவள் முகம் சிறிது வாடிப்போயிருந்தது. இருவரும் சோபாவில் ஒன்றாக உட்கார்ந்தவுடனே, அம்மா அவளுடைய முகத்தைத் தன்பக்கம் திருப்பி, ‘என்ன பாரு, என்னமோமாதிரி இருக்கிற ‘ என்று பரிவோடு கேட்டார். அதுவரை பொறுத்துக்கொண்டிருந்தவள் அத்தே.. என்று கூறிக்கொண்டு அம்மாவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கண்ணீர்விட ஆரம்பித்துவிட்டாள். ‘அட என்ன சின்னக் கொழந்தமாதிரி.. ‘ என்று சொல்லிக்கொண்டே அவளுடைய தலையை அம்மா மெதுவாக வருடிக்கொடுத்தார்.

சிறிது நேரத்தில் தன்னை சுதாரித்துக்கொண்ட பார்வதி, ‘பாருங்க அத்தே, நான் எவ்வளவு நல்லா சமையல் பண்ணினாலும் அவருக்குப் பிடிக்கலே.. ‘ என்று சிறிய விம்மலுக்கிடையே சொன்னாள். ‘அடப் பயித்தியமே இதுக்குத்தானா இந்த அழுவாச்சு. நா என்னமோ எதோன்னு பயந்துட்டேன்.. ‘ என்றார் அம்மா. ‘பின்ன என்னங்க அத்தே.. நான் விதவிதமா செஞ்சுவச்சாக்கூட ஓண்ணுமே சொல்றதில்லே. அப்படியே வாரிக்கொட்டிக்கிட்டு ஓடிப்போயிடறது ‘ என்றாள். கொஞ்சநேரம் பேசாமலிருந்துவிட்டு மறுபடியும் இப்படிப் பொருமினாள், ‘என் சமையலைப்பத்தி எதுவும் சொல்லறதில்ல, ஆனா மத்தவிங்க செஞ்சாமாத்திரம் பிரமாதம்கிறது…பாருங்க அத்தை, நேத்து என் சிநேகிதி ஒருத்தி கூப்பிட்டிருந்தான்னு அவ வீட்டுக்குச் சாப்பாட்டுக்குப் போயிருந்தோம். அவ பொங்கல் பண்ணியிருந்தா…. இவரு சாப்பிட்டுக்கிட்டு இருக்கையிலே எப்படி இருக்குதுன்னு இவருக்கிட்ட அவ கேட்டா… இவருன்னா….ரொம்ப ரொம்ப பிரமாதம்னு சொன்னார். பொங்கலா அது.. உப்பு இல்ல..காரம் இல்ல..ஆனா அது இவருக்கு பிரமாதமாயிருந்தது, நான் செய்யறதுக்கு மாத்திரம் ஒண்ணும் சொல்றதில்லை ‘.

‘சரியான அசடுதான் போ. அவரு சாப்பாட்டைப்பத்தி ஒண்ணும் சொல்லலீங்கறத்துக்காக உன் சாப்பாடு பிடிக்கலைன்னு நினைக்கிறார்னு ஏன் எடுத்திகிடணும். எந்தம்பி ஒருத்தன் இருக்கானே அவன் மாதிரி இருந்தா நீ என்ன பண்ணுவையோ…ஓண்ணுல உப்பு காரம் கொறையக்கூடாது..எல்லாம் அவ்வளவு சரியா இருக்கனும்.. (பாவம் மாமா ! அம்மா பார்வதியைத் தேற்றுவதற்காக இப்படி ஒரு பொய்யைத் தூக்கிப் போடுகின்றார். மாமா வீட்டுக்கு வரும்போதெல்லாம் அம்மா எப்படி சமையல் பண்ணியிருந்தாலும் ‘இன்னக்கி சாப்பாடு ரொம்ப நல்லா இருக்குதுங்கக்கா ‘ என்று மிகவும் பாராட்டிக்கொண்டே சாப்பிடுவார். அம்மா சமயலைப்பற்றியும் நாம் ஓன்றும் குறை சொல்லக்கூடாது; அவ்வளவு அருமையாகச் செய்வார். அவருடைய கைப்பட்டாலே சாப்பாட்டில் ஒரு தனிச்சுவையேறிவிடும். சரிசரி.. இப்பொ நாம் பார்வதி விவகாரத்திற்கு திரும்ப வருவோம்).

அம்மா மேலும் தொடர்ந்து சொன்னார், ‘நான் உன்கிட்ட ஒண்ணு கேக்கறேன்.. உன் சிநேகிதி அன்னக்கி உங்கிட்டையே பொங்கல் எப்படியிருந்ததுன்னு கேட்டிருந்தா நீ என்ன சொல்லியிருப்பே ? ‘.

கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு ‘நானும் நல்லாயிருக்குதுன்னுதான் சொல்லியிருப்பேன் ‘ என்றாள் பார்வதி.

‘ஏன்அப்படி ? ‘

‘ஒரு மரியாதைக்குத்தான்.. ‘

‘நீயே அப்படி நினைக்கும்போது சேகர் மாத்தரம் வேற எப்படிச் சொல்லுவாரு… நீ ரொம்ப கொடுதுவச்சவ பாரு. சேகர் ரொம்ப தண்மையானவர்.. கொஞ்சமும் கவலைப்படாம இரு. அவரை நல்லாப் பாத்துக்க ‘

அம்மா சொன்னதின் அர்த்தம் பார்வதிக்குப் புரிந்திருந்தாலும் அவள் இன்னும் முழுமையாகத் திருப்தியடைந்ததாகத் தெரியவில்லை. அம்மாவும் மேலும் அதைப்பற்றிப் பேசாமல், போகப்போக எல்லாம் சரியாகிவிடுமென்று அத்தோடு விட்டுவிட்டார். சிறிது நேரம் கழித்து பார்வதி புறப்பட்டுச் சென்றுவிட்டாள்.

இது நடந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் பார்வதி எங்கள் வீட்டுப்பக்கம் வரவில்லை. தானாவது அவளைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாமென்று அம்மா நினைத்துக்கொண்டிருக்கையில் அவளே வந்துவிட்டாள். சிறிது இளைத்துவிட்டாற்போலத் தோன்றியது; ஆனால் முகம் மிகுந்த களையுடன் இருந்தது. ‘அத்தை ‘ என்று வந்ததும் வராததுமாக அம்மாவைக் கட்டியணைத்துக்கொண்டாள்.

‘என்ன பாரு, கொஞ்சநாளா இந்தப்பக்கமே காணோம்.. ‘

‘கொஞ்சம் ஒடம்பு சரியில்லாமப் போயிடுச்சு ‘

‘அடடே எனக்குச் சொல்லியனுப்பியிருக்கக்கூடாது.. ‘

‘செஞ்சிறுக்கலாம் அத்தே… ஆனா அவரே என்னை ரொம்ப நல்லாப் பாத்துக்கிட்டாரு. வேலைக்குக்கூட போகாம கிட்ட இருந்தே எல்லா உதவியும் செஞ்சாரு. என்னைக் கேட்டுக்கேட்டுச் சமையல்கூடப் பண்ணினாரு ‘. இதைச் சொல்லும்பொழுது அவள் முகத்தில் ஒரு பெருமையும் மகிழ்ச்சியும் தோன்றியது. ‘இன்னொன்னு அத்தை.. நீங்க சொன்னமாதிரிதான் எல்லாம் நடந்திருக்குது. நான் ஒடம்பு சரியில்லாம படுத்திருக்கையிலே அவரு கூட வேலை செய்யிற ரவீங்கறவர் அவருடைய மனைவியோட என்னைப்பார்க்க வந்திருந்தார். வந்தவர் என்ன சொன்னார் தெரியுங்களா.. ‘என்ன நீங்க இப்படிப் படுத்திட்டாங்க. சேகர் என்னமோ உங்க சமையல் அவ்வளவு அருமையா இருக்கும்னு சொன்னான்.. சாப்பிட்டுப் பாக்கலாமேன்னு வந்தா.. இப்படிப் படுத்திட்டாங்களே ‘ன்னார். அவர் இன்னொன்னையும் சொன்னார். ‘ஏங்க கொஞ்ச நாளைக்கு முன்னாலெ சேகரை உங்க சிநேகிதி வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப்போயி தடுமாற வச்சிட்டாங்களாமே… பொங்கல்னு எதையோ இவன் தட்டுலெ போட்டுட்டு, இவன்கிட்ட எப்படியிருக்குதுன்னு உங்க சிநேகிதி கேட்க, இவனும் தெரியாத்தனமா நல்லாயிருக்குதுன்ன சொல்ல, அவிங்க மறுபடுயும் போட, இவன் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள முழிபிதுங்கிப் போச்சாமே, அப்படியா…என்றார் ‘ என்று சொல்லிவிட்டு கலகலவென்று மனம் விட்டுச் சிரித்தாள். மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் புறப்பட்டாள்.

அவள் எந்தவிதமான கவலையுமில்லாமல் மன மகிழ்ச்சியோடு போவதைப்பார்க்க அம்மாவிற்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.

———————————

natesasabapathy@yahoo.com

Series Navigation

செங்காளி

செங்காளி